உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/206

விக்கிமூலம் இலிருந்து

206. கேண்மை அறிந்தாளோ?

பாடியவர் : ஐயூர் முடவனார்.
திணை : ......
துறை தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[(து. வி.) தலைவன் தலைவியரின் நீடித்த களவு ஒழுக்கத்தை நிறுத்தித் தலைவனை அவளை வரைந்து கொள்ளும் முயற்சிக்குத் தூண்டவேண்டும் எனக் கருதுகின்றாள் தோழி. தலைவனுக்காகத் தலைவி குறியிடத்தே காத்திருக்கும் சமயம், அவன் வந்து, தான் அகலுதலை நோக்கி ஒருசார் மறைந்து நிற்றலை அறிந்தவள், அறியாதாளாகக் காட்டித் தலைவிக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது. கேட்கும் தலைவன் வரைந்து மணத்தொடு கொள்ளற்கு முற்படுவான் என்பது இதன் பயன்.]


'துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்கொள்பு இறைஞ்சித் தோடுதலைப் பிரிந்தன எனல்' என்றும்,
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச்
செவ்வாய்ப் பாசினம் கவருமென் நவ்வாய்த்
தட்டையும் புடைக்கக் கவணும் தொடுக்கென 5
எந்தைவந் துரைத்தன னாக, அன்னையும்
நன்னாள் வேங்கையும் அலர்கமா இனியென
என்முகம் நோக்கினள் எவன்கொல் தோழி?
சென்ற கென்னுங்கொல் செறிப்பல் என்னுங்கொல்?
கல்கெழு நாடன் கேண்மை 10
அறிந்தனள் கொல்லஃ தறிக்லென் யானே!

தெளிவுரை : தோழீ! துய்யினைத் தலையிலே கொண்ட மிக்க இளமையான தினைக் கதிர்க் குலைகள் பால் கொண்டு தலைசாய்த்து, மூடியிருந்த தோடுகள் பிரிந்துபோயின வாயின என்றும்; துறுகற் பாறைகளின் மேலாகத் தினைக்கதிர்களைக் கொய்துபோகும் பொருட்டாகக் கூடியிருந்த சிவந்த வாயையுடைய பசிய கிளியினங்கள் தினைக்கதிர்களைக் கவர்ந்து போதலும் நேருமென்றும்; அவற்றை ஓட்டும் பொருட்டாகப் புனத்திடைச் சென்று தட்டையையும் புடைப்பீராக, கவண் கற்களையும் தொடுத்து எறிவீராக என்றும்; எம் தந்தை வந்து தாயிடத்தே உரைத்தனன். அதனைக் கேட்டாளான எம் அன்னையும், திருமண நன்னாளைக் காட்டுகின்ற வேங்கையும் இனி மலர்வதாகுக என்று சொல்லியவளாக, என் முகத்தையும் கூர்ந்து நோக்கினள். அதுதான் எதனாலோ, தோழி? புனங்காவலுக்குச் சென்று வருக என்றனளோ?" இனி மனைக்கண்ணேயே செறித்துவைப்பேன் என்றனளோ? மலைநாடனது நட்பினை அன்னையும் அறிந்தனளோ? யான் யாதும் அறிந்திருக்கின்றேனே தோழி!

சொற்பொருள் : புனிற்றுக் குரல்–இளைதான தினைக்கதிர்கள். பால் கொள்ளல்–பாலேற்றுக் காய்ப்பருவங் கொள்ளுதல். இறைஞ்சி–தலைசாய்த்து. தோடு–மூடியுள்ள மேலிலைகள். துறுகல்–வட்டக் கற்பாறை. மீமிசை–மேற் புறத்தே. பாசினம்–பசிய கிளியினம். தட்டை–கிளிகடி கருவிகளுள் ஒன்று. நன்னாள்–திருமணத்திற்கான நல்ல நாள். அலர்க–மலர்க.

விளக்கம் : தினைக் கதிர்கள் பாலேற்றுக் காய்ப்பருவம் எய்தின; ஆதலின் கவர்ந்துபோகக் கிளியினம் வருதல் கூடும்; அவற்றை வெருட்டக் கிளிகடி கருவிகளை எடுத்துக் கொண்டு புனங்காவலுக்குச் செல்லுதல் வேண்டும் என்று நினைத்திருந்த அன்னை அது கேட்டு, நன்னாள் வேங்கையும் அலர்க என்று கூறியவளாகத் தோழியை நோக்குகின்றாள். மலைநாடனோடு தலைவிக்கு நேர்ந்துள்ள நட்பை அறிந்த தோழி திகைக்கின்றாள். அன்னைக்கு உண்மை தெரிந்து தான் அப்படிச் சொன்னாளோ எனக் கலங்குகின்றாள். இவ்வாறு அமைந்துள்ளது செய்யுளின் பொருள். இதனைச் சிறைப்புறமாக நின்று கேட்கும் தலைவன், தலைவியை விரைய மணம்வேட்டுக் கொள்ளுதலிலேயே மனஞ்செலுத்துவான்; அப்படிச் செலுத்தவேண்டும் என்பதுதான் தோழியின் கருத்துமாகும்.

கதிர் முற்றித் தலைசாய்ந்த தினையைக் கவர்ந்து போகக் கிளியினம் வந்து குழுமுவதுபோலப் பருவ மலர்ச்சியுற்ற தலைவியைக் மணந்துகொள்ளக் கருதிப் பலரும் வருதல் கூடும். அவரிடமிருந்து அவளைக் காத்தல் வேண்டும் எனவும் உட்பொருள் அமைத்துக் கூறியதாகவும், அதனைக் கேட்டு உணர்ந்தே தாய் வேங்கை மலர்க என்றாளாகவும் கொள்ளுதலும் பொருந்தும்.

'திருமணம் செய்யப் பெற்றோர் கருதினர். அவள் இனி இற்செறிக்கப் படுவாள்; களவுக்குறி வாய்த்தல் அரிது; விரைய மணத்தற்குமுயல்க' என்பதும் உணர்த்தப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/206&oldid=1698366" இலிருந்து மீள்விக்கப்பட்டது