நற்றிணை-2/208
208. பிரிந்தாரைத் தரும் மழைக்குரல்!
- பாடியவர் : நொச்சி நியமங் கிழார்.
- திணை : பாலை.
- துறை : செலவுற்றாரது குறிப்பறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்பத், தோழி சொல்லியது.
[(து – வி.) 'தலைமகன் பொருள் தேடி வருதலைக் கருதினான். அதனால் தன்னைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லவும் முடிவு கொண்டான்' எனக் குறிப்பாலே அறிந்தாள் தலைமகள். அதனால், அவள் பெரிதும் வருந்தி நலிய, அவளுக்குத் தோழி தேறுதல் உரைப்பதாக அமைந்தது இச்செய்யுள்.]
விறல்சாய் விளங்கிழை நெகிழ விம்மி
அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப
விளிவில கலுழும் கண்ணொடு பெரிதழிந்து
எவன்நினைபு வாடுதி, சுடர்நுதற் குறுமகள்?
செல்வர் அல்லர்நங் காதலர்; செலினும்
5
நோன்மார் அல்லர் நோயே; மற்றவர்
கொன்னு நம்பும் குரையர் தாமே
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள்
முடியா தாயினும் வருவர்; அதன்தலை
10
இன்துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலுமிப் பெருமழைக் குரலே!
தெளிவுரை : ஒளி சுடருகின்ற நெற்றியை உடையாளான இளமகளே! வலி குறைந்தவாய் விளங்கும் இழைகள் நெகிழ்வுற்று நீங்கும்படியாக விம்முகின்றனை! முத்துப்போலும் கண்ணீர்த் துளிகள் மார்பகங்களின் இடையே விழுந்து நனைந்தபடியும் உள்ளனை! விடாதே அழுகின்ற கண்களோடும் பெரிதும் நலனழிந்து எதனை நினைந்தோ நீயும் வாடுகின்றனை! நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரே அல்லர்! அவ்வாறே சென்றாரானாலும், தமக்கு உண்டாகும் காமநோயைப் பொறுத்திருப்பாரும் அல்லர்! அவர் நின்னிடத்தே பெரிதான விருப்பத்தையும் உடையவர். நின்பாற் சிறந்த அன்பினையும் கொண்டவர். மிக்க மென்மைத் தன்மையினையும் உடையவர். அவரைப் பிரிந்து வாழும் நம்மினுங் காட்டில் இரக்கமுற்றவராய், தேடிச் சென்ற அரும் பொருள் முடியாத நிலையே யானாலும், காலத்தை நீட்டியாது, உடனே நம்பால் வந்துவிடுவர். அதன் மேலும், இப்பெரிதான மேகத்து முழக்கமானது, இனிய துணையாயினாரைப் பிரிந்திருப்போரையும் நாடித்தருவதே போலுமாய் இராநின்றது காண்! ஆதலினாலே நீயும் இனி வருந்தாதிருப்பாயாக!
சொற்பொருள் : விறல் சாய் விளங்கு இழை – பிறர் அணிபவான ஒளிவிளங்கும் இழைகளினுங்காட்டில், தன் ஒளியுடைமையும் செய்வினைச் சிறப்பும் மிகுத்துக் காட்டி, அவற்றை வெற்றிகொள்ளும் வல்லமை சிறந்த இழைகள் என்றனர். அவை நெகிழ்தல், அவன் பிரிவை நினைந்தேங்கி உடல் மெலிவுற்றதனால். அறல் – கருமணல். தெள் மணி – தெள்ளிய மணிபோலும் கண்ணீர்த்துளிகள். இடைமுலை – முலைகளின் இடைப்பட்ட பகுதி. விளிவில் – விடுதலில்லாதபடி. கலுழல் – கலங்கி அழுதல். அழிந்து – நலன் கெட்டு. நினைபு – நினைத்து. நோன்மார் – பொறுப்பவர். நம்பு – விருப்பம். சாயல் – மென்மை. குரல் – இடிக்குரல்.
விளக்கம் : மழைக் குரலைக் குறித்துக் கூறியது, அங்ஙனமே அவர்தாம் செல்லற்கு நினைத்தாலும், அதற்குரிய காலமும் கார்காலமாகிய இதுவன்று; இதுதான் பிரிந்தோரை நாடித் தருவதன்றி, உடனுறைவோரைப் பிரிப்பதன்று என்கின்றனள். 'செல்வர் அல்லர்' என்றவள், படிப்படியாகச் 'சென்றாலும்' என, இப்படியே ஒவ்வொன்றாகச் சொல்வதை எண்ணி மகிழ்க. தோழி கூற்றாக அமையும் சொல்லாட்சிச் சிறப்பையும் உய்த்து உணர்ந்து இன்புறுக.
இதனால், தலைவன் பொருள் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்து போவதற்குத் துணிந்தான் என்பதனை, அவனது குறிப்புக்களாலே அறிந்து, தலைவி அவன் பிரிந்தாற்போலவே உடல் மெலிந்து கலங்குவள் என்பதும், அதனைக் காணும் தலைவன், தன் செலவைத் தள்ளிப்போடுவான் என்பதும் உணரப்படும். உணரவே, இல்லற வாழ்விலே தலைவன் தலைவியரிடையே விளங்கிய நெருக்கமான மனவீடுபாட்டுச் செறிவும் விளங்கும்.