நற்றிணை-2/239
239. இவ்வூர் என்னாகுமோ?
- பாடியவர் : குன்றியனார்.
- திணை : நெய்தல்.
- துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.
[(து.வி) களவொழுக்கத்துத் தலைமகன் ஓர்புறத்தே வந்து மறைந்திருப்பதை அறிந்த தோழி, தலைவியை விரைய வரைந்து வருதற்கு அவனைத் தூண்டக் கருதியவளாய்த், தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் 5 ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தல் புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி 10 முயங்கெனக் கவிழ்ந்த இவ்வூர் எற்றா வதுகொல், யாம் மற்றொன்று செயினே?
தெளிவுரை : மேலைத்திசையிலே சாய்ந்து வீழ்கின்ற ஞாயிறானது, மேலை மலைக்குப் பின்னாகச் சென்று மறையவும், இருள்மயங்கிய மாலைப்பொழுதிலே, கள்ளைக் குடித்ததனாலே மயக்கங் கொண்டவரான பரதவர்கள், பகற் போதிலே வருத்தமின்றிப் பெற்ற பெரிய மீன்களை எளிய விலைகட்கே விற்று விடுவர். ஞெண்டுகள் விளையாடியபடி யிருக்கும் புலவு நாற்றத்தையுடைய மணல்பரந்த முன்றில்களைக் கொண்டதும், காண்பார்க்கு விருப்பந்தருவதுமான சிறு குடியின் கண்ணே, செல்வதற்குரிய ஒழுங்குபட்ட வழியினிடத்தே, அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பி வைத்தாற்போலே நெய்தல் மலர்களின் புறவிதழ்களால மூடப்பெற்ற பூக்கள் கெடும்படி மிதித்தபடியே, தத்தம் இல்லங்களை நோக்கியும் அவர் செல்வர். வளப்பத்தையுடைய கரிய கழிபொருந்திய நீர்மலிந்த அத்தகைய நெய்தல் நிலத்தலைவனுக்கு, யாமும் மனமொத்தவராய் இருந்தேமாய், அவனிட்ட தொழில்களைக் கேட்டுச் செய்து வந்தேமும் இல்லை. அங்ஙனமாகவும், 'முன்னங் கையிடத்தேயுள்ள நெடிய கோற்றொழில் அமைந்த ஒளிகொண்ட வளைகள் உடையும்படியாக, அவனை வளைத்து அணைத்தனையாய்த் தழுவுவாயாக' என்று கூறிக் கலங்கியழுகின்ற இவ்வூரவர் தாம், யாம் அவனுக்கு அமைய நடக்கவல்லதான போக்கு உடன்படுதலாகிய ஒன்றையும் செய்தனமாயின், என்ன பாடுபடுவரோ? அதனை யானும் அறியேனே! என்பதாம்.
சொற்பொருள் : ஞான்ற ஞாயிறு – சாய்ந்து போகின்ற ஞாயிறானது. குடமலை – மேலைத் திசைக்கண் உள்ள மலை. மான்ற மாலை – மயக்கந்தருகின்ற மாலை. மாறி – விலைமாறி. முன்றில் – முற்றம். காமர் சிறுகுடி – காண்பவர் விரும்பும் அழகிய சிறிய குடியிருப்பு. பூத்தப – பூக்கள் அழிய. வார்கோல் எல்வளை – நெடிய கோற்றொழிலையுடைய ஒளியுள்ள வளையல்கள். வாங்கி – வளைத்து. முயங்கு – தழுவு வாயாக. கலுழ்ந்த – கலங்கிப் புலம்பிய.
விளக்கம் : இனிது பெறு பெருமீனைப் பரதவர் தம் கள்ளுண்ட மயக்கத்தாலே எளிய விலைக்கு மாறிவிட்டனர் என்று அறிக. வலிதே பெற்ற மீனாயின் அவ்வாறு விற்பாரல்லர் என்பதும் விளங்கும்.
'இல்லறம் கொண்டு தலைவற்குத் தொண்டு செய்யும் பயனைப் பெற்றேமில்லையே' என்று வருந்துவாள், 'தொழில் கேட்டன்றோ இலமே' என்றனள். அவனோடு கூட்டம் உண்மையை ஊரவர் அறிந்தனர் என்பாள், 'வாங்கி முயங்கு என இவ்வூர் கலுழ்ந்தது' என்றனள். இதனால், 'இனி இறந்து படுதலேயன்றி வேறு வழியாதும் காணோம்' என்று புலம்புவாள், அதனால் அவனுக்குப் 'பழி எய்தும்' எனவும் கவலையுறுகின்றனள்..
உள்ளுறை : 'இனிதிற் பெற்ற பெருமீனை எளிதில் மாறிக் குடித்து மயங்கினரான பரதவர், நெறியிலுள்ள நீலமலரை மிதித்தவாறு வீடு நோக்கிச் செல்வர்' என்றனள். இவ்வாறே காம மயக்கங் கொண்டானாகிய காதலனும் அரிய பொருளைத் தமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து, ஊரார் எடுத்துரைத்த அலரினைத் தாழ மிதித்து அடக்கித் தன்னூர்க்கு அவளைக் கொண்டு செல்வானாகுக என்றதாம்.
இதனைக் கேட்டலுறும் தலைவனும், விரைவில் வரைந்து வருதலையே கருதுவானாவன் என்பதாம்.