உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/260

விக்கிமூலம் இலிருந்து

260 மறந்து அமைகலன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.

[(து.வி.) பரத்தை உறவுகொண்டு தலைவியைப் பிரிந்து சென்றவன், மீண்டுவந்து அவளை விருப்போடு தழுவுகின்றான். அவள் சினம் தணிந்திலள் எனினும், அவனைத் தடுக்கவும் செய்யாதவளாக, அவன் குற்றத்தைச் சுட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது]


கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்
தண்டுசேர் மள்ளரின் இயலி அயலது
குன்றுசேர் வெண்மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி முனையெழத் 5
தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலிபுனல் வாயில் இருப்பை அன்னவென்
ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த
முகையவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன்யான் மறந்தமை கலனே! 10

தெளிவுரை : தலைவனே! கருந்தாளுடைய எருமையானது கழுநீர் மலரை மேய்ந்து உண்ணும்; பழனங்களிலே மலர்ந்துள்ள தாமரையின் குளிர்ச்சியான பூக்களையும் தின்னும்; பின் அதனையும் வெறுத்ததாகி, படையணியிலே சேர்ந்த மறவரைப்போலச் செருக்கோடு நடந்துசென்று, பழனங்கட்கு அயலதாகக் குன்றுபோலச் சேர்ந்துள்ள வெண்மனற் குன்றிடத்தே கிடந்து உறங்கும். இத்தகைய தன்மைகொண்ட ஊருக்கு உரியவனே !

நீதான், இதுபோது என்பால் மிகவும் விருப்பமுடையவனே போல என்னைப் பலகாலும் தழுவுகின்றனை! பகைவர் முனைத்து எழுதலாலே உண்டாகிய போரிடத்தே, அப்பகைவரை அழித்து வெற்றி கொண்ட செவ்வேலை ஏந்திய மாவீரன் 'விரா அன்' என்பவன். மிக்க நீர் நிலை பொருந்தியதும், அவ்விராஅனுக்கு உரியதுமான இருப்பையூரைப் போன்றது என் எழில் நலம். தழைத்த பலவாகிய எனது கூந்தலிடத்தே அழகு உண்டாகுமாறு சூடிப் புனைந்த அரும்பு மலர்ந்த புதுப்பூவிலே தொடுக்கப்பெற்ற மாலையானது வாடும்படியாகப் பிரிந்து போன, பகைவன் அல்லையோ, நீ! அந்த நினது கொடுமையை மறந்து யானும் நினக்கு இசைந்திருப்பவள் அல்லேன். ஆதலின் என்னைவிட்டு அகன்று போவாயாக!

சொற்பொருள் : கழுநீர்–செங்கழுநீர். பழனம்–வயல். பனிமலர்–குளிர்ச்சியான புதுமலர். தண்டு–படையணி. மள்ளர்–வீரர். இயலி–நடையிட்டுச் சென்று. வெய்யை–விருப்பமுடையை. முனை–பகைவர் பகைத்தெழுந்த போர் முனை. தெவ்வர்–பகைவர். வயவன்–வீரன். இவன் இருப்பையூருக்கு உரியவனாகிய 'விரா அன்; இருப்பை–இருப்பையூர். முகையவிழ் கோதை–அரும்பாலே தொடுக்கப்பெற்று, மொட்டு மலர்ந்தபடியிருக்கும் தலைமாலை.

விளக்கம் : 'உண்மையாகவே நீதான் என்னை விரும்பி வந்தவன் அல்லன்' என்பாள், 'வெய்யை போல' என்றனள். 'கோதை வாட்டிய பகைவன்' என்றது, அதனைச் சூடியதன் பயனாகிய அவனது தழுவலைப் பெறாதே வாடச் செய்த வருத்தம் தோன்றக் கூறியதாம். 'மறந்து அமைகலன்' என்றாள், அதனை யான் மறவேன் ஆதலின், நின் பொய்யானதாகிய இவ்வன்புத் தழுவலைக் கைவிடுக என்றனள். அவன், தன் குற்றத்தை உணர்ந்து பணிந்து வேண்ட, அவளும் தன் ஊடல் தீர்வாள் என்பது இயல்பாகும்.

உள்ளுறை : செங்கழுநீரை யுண்ட எருமையானது, பின் தாமரை மலரை உண்டு, அதனையும் வெறுத்துச் செருக்கு நடை நடந்து சென்று, வெண்மணற் குன்றிலே சென்று கிடந்து துயிலும் என்றனள். இவ்வாறு தலைவியை நுகர்ந்தவன், காதற் பரத்தையை நாடிச் சென்று நுகர்ந்த பின், அவளையும் வெறுத்து, செருக்கோடு சென்று சேரிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்தனன் என்று கூறியது இது

வெகுளி தோன்றக் கூறினாளாயினும், அவன் வேண்டத்தன் ஊடல் தீர்பவள் ஆவள் என்பதே இதன் பயனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/260&oldid=1698434" இலிருந்து மீள்விக்கப்பட்டது