உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/இரண்டாம் பத்து

விக்கிமூலம் இலிருந்து

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடியது

இரண்டாம் பத்து
பதிகம்


மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்–
அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் 5

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10

பெருவிரல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு;

அவைதாம்,

(1) புண்ணுமிழ் குருதி, (2) மறம்விங்கு பல்புகழ், (3) பூத்த நெய்தல், (4) சான்றோர் மெய்ம்மறை, (5) நிரைய வெள்ளம், (6) துயிலின் பாயல், (7) வலம்படு வியன்பணை, (8) கூந்தல் விறலியர், (9) வளனறு பைதிறம், (10) அட்டுமலர் மார்பன்; இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில் : உம்பற் காட்டு ஐந்நூறூர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்தெட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.

தெளிவுரை : நிலையான பெரும்புகழையும், அறநெறிகளுக்குக் குற்றமில்லாதே செம்மையோடு செல்லுகின்ற அரசாணையினையும் உடையவன், இனிதாக இசைக்கின்ற வெற்றிமுரசத்தையும் கொண்டவன் உதியஞ் சேரலாதன். அவனுக்கு, வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து, அவனை மணந்து, கோப்பெருந்தேவியாகவும் விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவியாவாள். அவள், அவனுக்குப் பெற்றுத்தந்த மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன், என்றும் இடையீடுபடாதே வருதலையுடைய அருவிகளைக் கொண்டதான இமையப் பெருமலையினிடத்தே, தன் வில்லாகிய இலச்சினையைச் சென்று பொறித்தவன். முழங்கும் கடல்களையே வேலியாகவுடைய இத் தமிழகத்தின் புகழ்ச்செவ்வியானது உலகமெங்கணும் விளக்கம் அடையுமாறு, தன்னுடைய செங்கோன்மையான அரசாட்சியை, இந் நாட்டிலே எப்புறத்தும் நிலைபெறச் செய்தவன். தன் சேரர் குடிக்கே உரித்தான தகைமைமிகுந்த போர் வினைச் சிறப்போடுஞ் சென்று, பெரும்புகழுடைய அரச மரபினரான ஆரியமன்னரைக் களத்திலே வெற்றிகொண்டு, அவரைத் தனக்குப் பணிந்து வாழச்செய்தவன். நயப்பாடு என்பதே இல்லாதவான வன்சொற்களையே கூறித் தன்னை எதிர்த்தோரான யவனத்தவரை வென்று, அவரைச் சிறைப் பிடித்தவன். அவர்தம் தலையிலே நெய்யைப் பெய்தும், அவர் கைகளைப் பின்புறமாக வைத்துக் கட்டியும்,தன் நாட்டிற்குக் கொணர்ந்தவன். அவர்க்குரியவும், மதிப்பிடற்கரிய விலையினை உடையவுமான நல்லபல அணிகலன்களை வயிரக் கற்களோடும் கைப்பற்றிக் கொணர்ந்தவன். பெரிதான வெற்றிப்புகழுடைய மூதூரான தன் வஞ்சிநகரிடத்தே, தன் படை மறவர்க்கும் அலுவலர்க்கும் குடிகட்கும் அவற்றைத் தந்தவன். அவர் அன்றியும், தன்னை வந்து இரந்து நின்றவரான வேற்றுநாட்டார் பலருக்கும் அவற்றைத் தந்தும் உதவியவன். இவன், தன்னோடும் பொருந்தாது, தன்னைப் பகைத்த அரசரை எல்லாம் கொன்று அழித்த, பகைவர்க்கு நினைப்பினும் அச்சத்தைத் தருதலையுடைய, வலிமையான தாளினைக் கொண்டவன். இத் தகையோனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பத்துப் பாட்டுக்களாலே புகழ்ந்து பாடினர்.

அவை, ‘புண்ணுமிழ் குருதி’ முதலாக, ‘அட்டுமலர் மார்பன்’ ஈறாக விளங்குவனவாகும்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்தான் அக் கோமான். அவற்றைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற்காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களை இறையிலி நிலமாக வழங்கினான். அத்துடன், தென்னாட்டுள். தனக்கு வருகின்ற அரசிறையினும் ஒரு பங்கினை முப்பத்தெட்டு ஆண்டுகள் கொடுத்தான். இவன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

சொற்பொருள் : பெரும்புகழ் - பெருமைக்குரிய புகழ். வாய்மொழி - சொன்னபடியே செல்லும் அரசாணை; சொல்லுஞ்சொல் தவறாத வாய்மையும் ஆம். வெளியன் - வெளியத்து வேளிர்குலத் தலைவன். வேண்மாள் - வேளிர்குடிப் பிறந்தவள். விற்பொறித்து - வில்லாகிய அடையாளத்தைப் பொறித்து; இது, அந்த எல்லைவரைக்கும் தன் மேல்ஆணைக்கு உட்பட்டது என்று உறுதிப்படுத்தும் வெற்றியின் அடையாளம். தமிழகம் - தமிழ் மொழி வழங்கிய அக் காலத்து நிலப்பகுதி; இது, செந்தமிழும் சொடுந்தமிழும் வழங்கிய பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சொல். ‘தகை சால் சிறப்பு’ சேரர்தம் குடித்தகுதியாலே மிகுந்த சிறப்பான போர்வினைத் திறம். ‘பேரிசை மரபின் ஆரியர் என்றது, ஆரிய வரசருள்ளும் பெரும் புகழுடைய அரச மரபினரான பேரரசர்களையும் வென்றான் என்பதற்கு. இதனால் பிறவரசர் தாமே பணிந்து திறை செலுத்தினராதலும் பெறப்படும். ‘நயனில் வன்சொல் யவனர்’ என்றது, வடமேற்கு எல்லைப் பகுதியினை அந் நாளிலே வலிந்து கைப்பற்றிக் கொண்டிருந்த கிரேக்கராகிய யவனரை. இது, இவர் சேரமானுக்குப் பணிந்து போகாது, கொடிய சபதங்களைக் கூறி எதிர்த்து, முடிவில் போரிலே தோற்ற நிலையைக் காட்டுவது ஆகும். ‘பிறர்’ என்றது. தனக்கு உட்படாதவரான பிறநாட்டு அரசரை; இவர் பாரதப் பரப்பிற்குப் புறத்திருந்தவராகலாம். அணங்கு - அச்சம். நோன்மை - வலிமை. ‘நோன்தாள்’ எனச் சேரனின் வெற்றிப் பெருமிதம், அவன் தாள்மேலாக ஏற்றிக் கூறப் பெற்றது.

விளக்கம் : உதியஞ் சேரலின் சிறப்புக்கள் மூன்று. அவை, ‘மன்னிய பெரும்புகழ், மறுவில் வாய்மொழி, இன்னிசை முரசு’ என்பன: மூவேந்தரும் வேளிர்குடியிற் பெண் கொள்ளல் பண்டைய மரபு. இது, வேண்மாள் நல்லினியை இவன் தேவியாகக் கொண்டதாலும் விளங்கும். ‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ என இவ் இமையவரம்பனின் வடபுல வெற்றியைப் பரணர் பெருமானும் வியந்து போற்றுவர் - (அகம், 396). ‘தமிழகம்’ எனத் தமிழ் வழங்கிய பெருநாடு பொதுப் பெயராற் குறிக்கப்படுவதனை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்பதும் காட்டும், ‘வையக வரைப்பின் தமிழகம்’ எனக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரும் புறப்பாட்டிற் கூறுவர்.

‘பேரிசை மரபின் ஆரியர்’ எனவே, அதுகாலை வட புலத்தே ஆரிய மன்னருட் சிலர் பேரரசர்களாகவும் புகழுடன் விளங்கினர் எனலாம். இவனால் வெற்றிகொள்ளப் பெற்றவர் வடபுலப் பேரரசர்களான நந்தர்கள் எனக் கருதுதலும் பொருந்தும். யவனரையும் இவன் வெற்றி கொண்டான் என்பதனால், இவனுடைய வடபுலப் போர்ச் செலவு வடமேற்கு எல்லைப்புறம் வரையிலும் சென்றது என்பதும் அறியப்படும்.

‘ஆரியர் வணக்கி’ என்றது, அவர் தோற்றுத் திறை செலுத்திப் பணிய, அவரைத் தன் மேலாட்சியை ஏற்று மீள்வும் தம் நாட்டை ஆளச் செய்தனன் என்பதாம். ‘யவனரைச் சிறையிட்டுக் கொணர்ந்தான்’ என்பது, அவர் இங்கே உரிமைநாடு ஏதுமற்ற வேற்று நாட்டாராயினதாலும், நயனில் வன்சொல் பல தன்பாற் கூறியதாலும் என்று கொள்க.

குமட்டூர்க் கண்ணனார் அந்தணராதலை அவர்க்குப் பிரமதாயமாக நிலம் வழங்கின. இச் செய்தியால் அறியலாம். அந் நாளைய அந்தணருள்ளும் சிலர் சிறந்த தமிழ்ப் பற்றினராயும், தமிழ்ப் புலவர்களாயும் விளங்கினர் என்பதும் இதனால் அறியப்படும். ஆரியரை வென்று வணக்கியதும், யவனரைப் போரிற் பணியச் செய்ததும் செயற்கருஞ் செயல்கள் என்பதும் இதனாலே விளங்கும். முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டில் வருவதனுள் பாகங்கொடுத்தான் என்றதால், இவனது இருபதாவது ஆட்சியாண்டில் இப்பாட்டுக்கள் பாடப்பெற்றன எனக் கொள்ளலாம்.

11. புண்ணுமிழ் குருதி

துறை செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் செல்வச் சிறப்பு.

[போரிடையே பகைவரது மார்புகளைப் பிளந்தான். பிளக்கப்பெற்ற அம் மார்புப் புண்களினின்றும் செங்குருதி வெள்ளமாக வழிந்து பெருகி ஓடலாயிற்று. அதனால், கழியின் கருமையான நீரும் தன் நிறத்தில் மாறுபட்டதாய்க் குங்குமக் கலவையைப் போலக் கருஞ்சிவப்பாய் ஆயிற்று. இவ்வாறு போர்க்களத்தை வியந்து கூறிய உவமை நயத்தால் இப்பாட்டிற்குப் ‘புண்ணுமிழ் குருதி’ என்பது பெயராயிற்று.

விகார வகையானே அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தைப் போலாது. உலகினுள்ளே இயற்கைவகையானே இயன்ற மக்களைப் பாடுதலால், இதனைச் ‘செந்துறைப் பாடாண் பாட்டு’ என்றனர். ஒழுகிய ஒசையாற் செல்வதனால் ‘ஒழுகு வண்ணம்’ என்றனர். ஆசிரியப்பா ஆதலின் ‘செந்தூக்கு’ என்றனர்.]

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
வளிபாய்க் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர்.ஏமம் புணர்க்கும்
குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் 5

கடுஞ்சின விறல்வேள் களிறூர்க் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறங் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல வரண்கொன்று 10

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஒக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பிற் 15


போரடு தானைச் சேரலாத!
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே 20

கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை
மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே. 25


தெளிவுரை : மலைகளைப்போல அலைகள் உயரமாகக் கிளம்பி மேலே எழுகின்றன. அவ் அலைகளின் வெண்மையான திவலைகள் உடைந்து சிதறுமாறு, காற்றும் அவற்றின் ஊடாகப் புகுந்து மோதிச் சிதைக்கின்றது. விளக்கங் கொண்ட கரிய பெரிய நிறை. சூலைக் கொண்டாற்போலக் கடலும் விளங்குகின்றது. அத்தகு, செறிந்த பெரும் பரப்பைக் கொண்ட கருங்கடலின் நடுவே சென்று, முருகவேளுக்கு அஞ்சியோனாகிய சூரபதுமனும் அக் காலத்தே தன்னுருக் கரந்தானாகி ஒளிந்து கொண்டான். பிறருக்கு அச்சம் தருவோரான அவுண வீரர்கள் பலர். தன்னைக் காவலாகச் சேர்ந்திருக்கச், சூரனைத் தன்னிடத்தே கொண்டதாக விளங்கியது ஒரு மாமரம். அம் மாமரத்தினை, அதுதான் தன் வேரோடும் முற்றவும் அழிந்து வீழ்ந்துபடுமாறு வெட்டி யழித்தனன் விறலோனான முருகப்பெருமான். கடுஞ்சினமும், வெற்றிச் செருக்கும் கொண்டோனாக, அப் பெரும் புகழ்ச் செயலைச் செய்து முடித்தான் முருகவேள். அதன் பின்னர், தனக்குரிய ‘பிணிமுகம்’ என்னும் போர்க்களிற்றின் மேலாக ஏறி அமர்ந்தோனாக, அம் முருகப் பிரான் வெற்றியுலாச் சென்றான். அவனைப் போலவே, நீயும் நின் கடலிடத்துப் பகைவரை வென்றனை; நின் மூதூரிடத்தே களிறேறி வீரம் விளங்க வெற்றியுலாவும் வருகின்றனை!

பகைவரது குருதிக் கறையாலே சிவந்த முனையைக் கொண்டது நின் வாள். அந்த நின் வாளானது, நின்பால் மென்மேலும் வந்துவந்து மோதியவரான பகையரசரின் உடலங்களை எல்லாம் ஊடறுத்துச் சென்று, அவரையெல்லாம் வெட்டி வீழ்த்திற்று. வெல்லுவதற்கு அரியவரான அப் பகையரசரது மார்பகங்கள் நின் வாளாலே பிளக்கப் பட்டுப் புண்களாயின. அப் புண்களினின்றும் ஒழுகிய குருதிப் பெருக்கினாலே, நீலமணியினது கிருநிறத்தைக் கொண்டதாய் இருந்த கழியின் நீரானது, தன் நிறத்தால் மாறுபட்டுக் குங்குமக் கலவைபோலக் கருமைகலந்த செந்நிறம் பெற்றும் தோன்றியது!

இங்ஙனமாக, நின்னைப் பகைத்தோரை எல்லாம் அடியோடும் வென்று அழித்தனை; அவர்தம் காவல் அரண்களையும் சிதைத்தனை; அவரை எல்லாம் வெற்றியும் கொண்டனை! வல்லமையாலே மேம்பட்டு விளங்கும் சிறப்போடே கூடிய, அத்தகைய உயரிய போர்ச்செயல் முயற்சியைக் கொண்டோனே! போர்மறவர்கள் மிகப்பலராக மொய்த்துக் காத்ததும், திரண்ட பூக்கள் கொண்டதுமாகிய கடம்பினது, காவலையுடைய அடியினை முற்றவும் வெட்டிவிடுமாறு, நீயும் நின் படைமறவரை அந்நாளிலே ஏவினை! அவரும், அவ்வாறே சென்று அதனை வெட்டிக் கொணர்ந்தனர். பிற வெற்றி முரசங்களை எல்லாம் தன் முழக்கொலியாலே வெற்றி கொண்டு முழங்குவதான நினக்குரிய வெற்றிமுரசினையும் அக்கடம்பின் அடிப்பகுதியாலே நீதான் செய்துகொண்டனை. பன்னாடையாலே வடிகட்டும் கள்ளினது மணம் கமழுகின்ற, பனம்பூவினால் ஆகிய மாலையை அணிந்தோனே! போர்க் களத்திலே பகைவரைக் கொன்றொழிக்கும் தானைவீரர்களின் பெருக்கினையும் உடையோனே! நெடுஞ்சேரலாதனே!

கடலினிடத்தே உள்ளவரான அப் பகைவரை வெற்றி கொண்டு, நீ நின் மார்பிடத்தே சூடிக்கொண்ட அந்த வெற்றி மாலையானது, நீ ஊர்கின்ற நின் போர்க்களிற்றது நெற்றிவரைக்கும் நீண்டு தொங்கும்! அப்படித் தொங்குதலாலே, அதன் நெற்றிப்பட்டத்தோடும் அதுதானும் கலந்தாற்போலவும் விளங்குகின்றதே! வெற்றிப் புகழாலே உயர்ச்சியுற்ற கொம்புகளைக் கொண்டதும், போரிற் பின்னடைதல் என்னும் பழியினின்று முற்றவும் நீங்கியது மான, அக் களிற்றது கழுத்திலே பொன்னரிமாலையும் அத்துடன் சேர்ந்து விளங்குகின்றதே! அதன் பிடர்மேல் அமர்ந்தோனாக நீயும் அழகுடனே வெற்றியுலா வருகின்றன! பொலிவோடு அப்படி உலாவரும் நின்னைப் ‘பலரும் புகழத் தக்க செல்வத்தைக் கண்டானொரு வறியவனைப் போலப்’ பெருமகிழ்ச்சியோடே யானும் இன்று இனிதாகக் கண்டு மகிழ்ந்தேனே!

முள்ளு முருக்கின் மரங்கள் அடர்ந்த பக்கமலைச்சாரலிலே படுத்து உறங்கும் கவரி மானானது, பகற்காலத்தே தான் காட்டிடையே சென்று மேய்ந்த நரந்தம் புல்லையும், பருகிய பரந்து விளங்கும் அருவி நீரையும், தன் கனவிடத்தேயும் கண்டு இன்புற்றபடியே இனிதாக உறங்கியபடியிருக்கும் சிறப்பைக் கொண்டது, மேலோர் நிறைந்த பெரும்புகழ் இமையம்!

வடக்கின் கண்ணே அத்தகைய சிறப்பினதான இமையமும், தெற்கின் கண்ணே தென்குமரியும் ஆகிய இவ்விரண்டனுக்கும் இடைப்பட்டதாகிப் பரந்துகிடக்கின்றதான இந்த நாவலந்தீவிலுள்ள மன்னர்கள் பலருள்ளும், தம்மைத்தாமே செருக்கோடும் உயர்த்துச் சொன்னாரது மறவுரைகள் எல்லாம் கெட்டழியுமாறு, அவர்களை எல்லாம் களத்திலே தோல்வியுறச் செய்து சிறைப்படுத்துக் கொணர்ந்த வெற்றியாகிய, பலரும் புகழும் வெற்றிச் செல்வத்தைக் கொண்டோனே!

நீதான் களிற்றின் மேலோனாகி வெற்றி உலாவந்த அந்த அழகிதான காட்சியை யானும் இனிதாகக் கண்டு, என் உள்ளமும் மகிழ்ச்சியடைதலை உற்றேனே.

சொற்பொருள் : வரை மருள் புணரி - மலையோ என மயக்கந் தருமாறு உயர்ந்தெழுந்த பேர் அலைகள். துளக்கம் - விளக்கம். கமஞ்சூல் - நிறைவுற்ற சூல்; முதிர்ந்த சூல்; உயர்ந்த அலைகளாலே விளங்கும் கடலை இப்படி உவமிக்கின்றனர். நளி - செறிவு. மாக்கடல் - பெருங்கடல்: கருங்கடலும் ஆம். ஏமம் - பாதுகாவல். ‘சூருடை முழு முதல்’ என்றது, சூரனைத் தானாகக்கொண்டமாவினது அடிமரத்தை. விறல் - வெற்றியுடைமை. எஃகம் . வாள். ‘அருநிறம்’ என்றது. எளிதாக வெல்லற்கரிய வலிய மார்பகம் என, அவரது போர் வலிமையைக் குறித்ததாகும். மணி - நீலமணி. மலைக் கலவை - குங்குமக் கலவை. முரண் - மாறுபாடு. மொசிதல் - மொய்த்தல். திரள் . உருட்சியமைந்த. கடி - காவல். துமிதல், தடிதல் - வெட்டுதல்; துணித்தல். ‘வென்று’ என்றது. வஞ்சனையால் அன்றிப் போர்க்களத்தே எதிரிட்டுச் சென்று கொண்ட நேரிடை வெற்றியைக் குறிப்பதாகும்.

ஆரம் - முத்தாரம் - சந்தனத தேய்வையும் ஆம். கவிர் முள்ளு முருங்கை. கவரி - மானினத்துள் ஒரு வகை. மீக்கூறுநர் - உயர்த்துக் கூறப்படுவோர். துவன்றிய - தோன்றிய; நிறைந்த நரந்தம் - ஒருவகை நெடியுடைய புல்வகை. மறம் - மறத்தகைமை.

விளக்கம் : முருகப்பெருமான் கடலிடைச் சென்று சூரனை அழித்த சிறப்போடு, சேரலாதன் கடலிடைச் சென்று பகைவரை வெற்றிகொண்ட சிறப்பையும் ஒப்பிட்டுக்கூறி மகிழ்கின்றார் புலவர். ‘பலர் மொசிந்து ஓம்பிய கடம்பு’ என்றது, பகைமறவர் மிகப்பலராகச் சூழ்ந்து நின்று கருத்தோடுங் காத்த கடுங்காவலையுடைய கடம்பு என்றதாம்; அதனை அழித்த சிறப்பு, சேரமானின் வெற்றியில் குறிப்பிட்டுப் பேசுதற்குரிய புகழுடைய பெரு வெற்றியாயிற்று.

‘கடம்பின் பெருவாயில் நன்னன்’ என்பான் வேறு, இக் கடம்பினைக் காவன்மரமாகக் கொண்டிருந்தார் வேறு. ‘கடம்பின் பெருவாயில்’ என்பது ஓர் ஊர். சேரலாதனது கடலிடைப் பெற்ற இவ் வெற்றிச் செய்தியால், அந்நாளைத் தமிழரசர்கள் வலிமைமிக்க கடற்படையினையும் அமைத்துத் தமிழ்நாட்டைக் கடற் கொள்ளையரிடமிருந்து காத்து வந்தனர் என்பது விளங்கும்.

‘பழிதீர் யானை’ - களத்திற் பின்னடைந்தது என்னும் பழிச்சொற்கு உட்படாமல், முன்னேறிச் சென்றே வெற்றி ஈட்டிய வலிய போர்க்களிறு, ‘போரடுதானை’ எனச் சேரப் படைமறவரின் போர்மறச் செவ்வியும் கூறப்பெற்றுள்ளது.

‘பலர் புகழ் செல்வம்’ ஆவது, அறநெறி பிழையாதே முயன்று ஈட்டிக் கொணர்ந்த செல்வம்; இங்கே அது பகை வரை முறையாக வெற்றிகொண்ட புகழையும், அவர்பால் திறையாகப் பெற்றவும், அவரிடமிருந்து கைப்பற்றிக் கொணர்ந்தவுமான பெரும்பொருளையும் குறிக்கும்.

“வடவிமயம் முதலாகத் தென்குமரி ஈறாக இடைப்பட்டுக் கிடக்கும் இப் பாரதப் பெருநிலப்பரப்பு முழுமையுமே சேரலாதனின் பெரும்புகழ் பரவிநின்றது” என்பது, அந் நாளைத் தமிழ் அரசரின் போராண்மை மேம்பாட்டை எடுத்துக் கூறுவதுடன், அக் காலத் தமிழர் இந்நாவலந் தீவைத் தமக்குரிய தொன்றாகவே கண்டுவந்த மனப்பண்பையும் காட்டுவதாகும்.

இவனது கடம்பறுத்து வெற்றிகொண்ட புகழ்ச் செயலினை அகநானூற்று 347ஆம் செய்யுளுள், ‘மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய பண்ணமை முரசின்’ எனவும், ‘சால்பெருந் தானைச் சேரலாதன்’ எனவும் போற்றுவர் மாமூலனார். சிலப்பதிகாரத்து, இளங்கோவடிகளாரும் இதனை வியந்து கூறியுள்ளனர் (சிலம்பு 25 : 1).

‘ஆரியர் அலறத் தாக்கிப், பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்’ எனப் பரணரும் (அகம் 396), ‘முந்நீர் ஒட்டிக் கடம்பெறிந்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து’ என மாமூலனாரும் (அகம் 127) குறிப்பிடுவன, இவனது இவ் வெற்றிப் புகழ்ச் செயல்கள் மெய்யாதலையே சான்று கூறி மேலும் உறுதிப்படுத்துவனவாகும்; இவன் புகழ், இதனால் எங்கணும் பரவிய பெரும் புகழ் ஆதலையும் இவை காட்டும்.

12. மறம் வீங்கு பல்புகழ்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. இதனாற் சொல்லியது; சேரலாதனின் வென்றிச் சிறப்பும்; திருவோலக்கத்தின் சிறப்பும்.

[மன்னர்க்குப் பிறபிற வழிகளானே வந்தடையும் புகழினுங் காட்டில், மறமேம்பாட்டாலே வந்தடையும் புகழே மிகமிகச் சிறப்புடையதாகும். இதனை வலியுறுத்தி உரைப்பதே போன்று அமைந்த சொற்றொடர் நயத்தாலே, இப் பாட்டிற்கு ‘மறம் வீங்கு பல்புகழ்’ என்பதைப் பெயராக அமைத்தனர்.]

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே!
நாரணி எருத்தின் வாரல் வள்ளுகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான் 5

தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்க் தாங்கு
முரசமுழங்கு நெடுநகர் அர்சுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிது நின் செல்வங் கேட்டொறும்
காணடல் விருப்பொடு கமழுங் குளவி 10

வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளிறு அரிஞிமிறு ஒப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி

வந்தவண் இறுத்த இரும்பேர் ஓக்கல்

தொல்பசி யுழந்த பழங்கண் வீழ 15
எஃகுபோழ்ந் தறுத்த வால்நிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன
நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை 20
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை அணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே. 25

நின்னோடும் மாறுபட்டோரான வலிமையாளர்கள் பலரும் போர்க்களத்திலே வீழ்ந்துபடுமாறு, நின் வாள் மறவரினாலே அவரை எல்லாம் அழித்து, நீயும் வெற்றி கொண்டனை. நினக்கே உரித்தாகிய இடத்தைத் தாம் கவர்ந்துகொள்வதற்கு நினைத்தாரும், அரசச் சுற்றத்தைக் கொண்டாருமாகிய கடம்பரின் தலைவனே அஞ்சி நடு நடுங்குமாறு, அவர்க்கு உரித்தான கடலிடைத் தீவிடத்தேயும் படையோடுஞ் சென்றனை, அவரை முற்றவும் அழித்து, அவர்தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டிக் கொணர்ந்த வஞ்சின வேந்தனே!

பிடரி மயிராலே அழகுபெற்று விளங்கும் கழுத்துப் புறத்தையும், நெடியதும் கூரியதுமான நகங்களையும் கொண்டதான சிங்கவேறானது இறைதேடித் திரியும் மலைச் சாரலிடத்தே, தொகுதியாக வாழ்கின்ற பிற விலங்கினங்களின் கூட்டம் எல்லாம் நெஞ்சம் துணுக்குற்றவாய் நடுங்கி அலமரும். அதனைப்போலவே, முரசுமுழங்கும் நெடிய அரணிடத்தே உள்ளாரான நின்னைப் பகைத்த வேற்று அரசர்கள் பலரும் கண்ணுறக்கம் அற்றாராய், நினக்கு அஞ்சினராய்ப் பெரிதும் நடுங்கிக் கொண்டிருக்க, மறமேம்பாட்டினாலே மிக்கு விளங்கித் திசையனைத்தும் நடுக்கமுறச் செய்யும் நின்னது மறப்புகழும் கேட்பதற்கு இனிதாயுள்ளது. அத்தகையதாகிய நினது வெற்றிச் செல்வத்தைப்பற்றிப் பிறர் எடுத்துச் சொல்லக் கேட்டபோதெல்லாம், நின்னை நேரிலே காணுதல் வேண்டும் என்னும் விருப்பத்தையே யாமும் அடைந்தோம்.

உதிராத பசிய மயிரையும், இளமைப் பருவத்தையும், அசைந்தசைந்து. செல்லுகின்ற தளர்ந்த நடையினையும், தலைமைப் பாட்டினையும் கொண்டதான தன்னுடைய இளங்களிறு, ஒழுகும் மதநீரோடே நிற்பதனைக் கண்ட கன்றோடும் சேர்ந்தபடியே நின்ற அதன் பிடியானது, குன்றிடத்தேயுள்ள மணங்கமழும் காட்டு மல்லிகைக் கொடியைப் பிடுங்கி, அம் மதநீரிலே மொய்த்த வண்டினங்களை ஒட்டிய படியே இருக்கும். அத்தகைய குன்றுகள் பலவற்றையும் கடந்து, இவ்விடத்தே நின்னைக் காணக் கருதினமாக யாமும் விரும்பி வந்தடைந்தோம்.

நின் வஞ்சிநகரின் ஒரு பக்கத்தேயுள்ள அவ்விடத்தே யாம் வந்து தங்கியதும், எம் மிகப்பெரிய சுற்றத்தினது, தொல்பசியாலே வருந்திய வருத்தமெல்லாம் அடியோடே வீழ்ந்துபட்டது. வாள் புகுந்து அறுத்த, வெள்ளிய நிணமான கொழுத்த ஆட்டிறைச்சியின் தசைத்துண்டங்களை இட்டுச் சமைத்த, வெண்ணெல் அரிசியினாலே ஆகிய வெண்சோற்றையும், அரும்பினாலே அமைத்த கள்ளின் தெளிவையும், யாங்கள் எல்லாம் நிரம்ப உண்ணுமாறு நீயும் செய்தனை.

பருந்தினது நனைந்த பெருஞ்சிறகைப் போல்க் காணப் பெற்றதும், மண்ணாலே தின்னப் பெற்றுச் சிதைந்ததும் ஆகிய, கந்தல்பட்ட எம் உடைகளைக் களைந்துவிட்டு, நூலாக் கலிங்கமாகிய பட்டாடைகளைத் தம் வெள்ளிய அரையினிடத்தே, எம் சுற்றத்தார் கொளுவிக் கொள்ளுமாறும் செய்தனை!

இருண்ட கடைசுருண்டு விளங்கும் கூந்தலையும், வளைந்த மூங்கிலைப்போல விளங்கும் மென்மையான தோள்களையும் கொண்டோரான, குற்றமற்ற பாண்மகளிர் எல்லாரும் ஒளி விளங்கும் அணிகலன்களையும் அணிந்திருப்பார் ஆயினர்!

உடலோடே சேர்த்துக் கட்டி வைத்தாற்போலே, என்பால் விருப்போடு என்னைப் பிரியாதேயே உடன்வரும் பாண் சுற்றத்தோடுங்கூடி நின்றவனாகப், பேராரவாரத்தை உடையதாகிய நினது ‘திருவோலக்க இருக்கை’ என்னும் மகிழ்ச்சியான காட்சிதானும், இப்போது கண்ணாரக் கண்டு நுகருதற்கும் எமக்கு மிகமிக இனிதாயிருக்கின்றது, பெருமானே!

நின் மறம் வீங்கு பல்புகழ் முன்னர்க் கேட்டற்கு இனிதாயிருந்தது; நின் பெருங்கலி மகிழ்வாகிய இதுதான் இன்று கண்ணாற் காணற்கும் இனிதாயுள்ளது என்பதாம்.

சொற்பொருள்: வயவர் - வலிமையாளர். சேரலாதனை எதிர்த்துக் களத்திற்கு வருவதற்கும் பேரளவு வலிமை வேண்டும் என்பதனாலே, அவ்வாறு வலிமையோடும் துணிந்து வந்தாரை ‘வயவர்’ என்றனர். அவர் பட்டு அழியவே, பிறர் அஞ்சித் தாமே பணிந்துபோவாராயினர் என்று கொள்க. வாளர் - வாள் மறவர். மயக்கி - சிதைத்து. கடும்பு - சுற்றம்; படைஞர், அமைச்சர், ஒற்றர் ஆகியோர். ‘தலை’ என்றது, தலைவனை.

தார் - பிடரி மயிர்; மாலைபோலக் கழுத்துப் புறத்தே தூங்குதலால் ‘தார்’ என்றனர். வார் - நெடிய; ‘அல்’: அசை வழங்கல் - திரிதல். - தோடு - தொகுதி. துயில் ஈயாது - துயில் பெறாது. மாதிரம் - திசைகள் பல் புகழ் - பலவான புகழ்; பல களத்தும் கொண்ட வெற்றிப் புகழும் ஆம். குளவி - காட்டு மல்லிகை. வாடா - உதிராத; பிறந்த போதுள்ள மயிர் உதிர்ந்து வேறுமயிர் புதுவதாக முளையாத. பைம் - பசுமையான; பசுமை என்றது மென்மையையும் அடர்த்தியையும் குறித்தது. ஆடுநடை அசைந்தசைந்து நடக்கும் தளர் நடை. அண்ணல் - தலைமை.

ஞிமிறு - வண்டு, பிடிய - பிடியைக் கொண்ட நீந்தி - முயற்சியோடும் மெல்லமெல்லக் கடந்து சென்று. தொல் பசி - பழம் பசி, தொடர்ந்து வருத்திய பசித்துன்பம். பழங்கண் - வருத்தம். எஃகு - வாள். வால் - வெண்மையான. மையூன் - ஆட்டுத் தசை. வெண்ணெல் - ஒருவகை நெல்; வெள்ளைச் சம்பா நெல் ஆகலாம்; தென்னாட்டுப் பகுதியிலே ‘வெள்ளை’ என வழங்கப்படும் நெல்வகையும் ஆகலால். நனை - பூவரும்பு. தேறல் - கள்ளின் தெளிவு. இருஞ்சிறகு - பெரிய சிறகு. சிதாஅர் - கந்தல்பட்ட துணி. நூலாக் கலிங்கம் - பட்டு; நூலாலாகிய கலிங்கமும் ஆம். வாங்கு - வளைந்த. வணர் - சுருண்ட. வகையின் - குற்றமற்ற; குற்றமாவது, பிறர் பழிக்கத்தக்க குறைபாடு உடைமை. மெய்யமர்பு யாத்த - உடலோடு விரும்பிக் கட்டிய. கலி - ஆரவாரம்; பெருங்கலி - அரசனது ஆரவாரமிக்க திருவோலக்கக் காட்சி.

விளக்கம் : கேள்வியானே மட்டுமே நின்னைப்பற்றி அறிந்து கற்பனையாலே இன்புற்ற யாங்கள், நின்னாலே பெரிதும் உபசரிக்கப்பட்டு, எம் துயர் முற்றத் தீர்ந்தேமாய், நின் திருவோலக்கக் காட்சியைக் கண்டும் பெரிதும் இன்புற்றனம் என்பதாம். சிங்கவேறு வேட்டங்கருதிக் காட்டிலே வெளிப்படின், பிற விலங்கினம் மந்தைமந்தையாகச் சேர்ந்து இருப்பினும், அதற்கு அஞ்சி நடுநடுங்குமாறு போலச், சேரலாதன் படையொடு, புறப்படின், பகையரசர் பலராயினும் அவர் நெஞ்சம் நடுங்குவர் என அவன் மறமேம் பாட்டைக் கற்பித்துக் கூறினர். களிற்றது மதநீரிலே மொய்த்த ஞமிறுகளைக் காட்டு மல்லிகையைப் பிடுங்கி ஒட்டும் பிடியையுடைய குன்று என்றது, அவையும் பிறர்க்கு ஊறு செய்யாவாய் இன்புற்றிருக்கும் என்பதாம். கொலைவல் கொடியரான ஆறலை கள்வர் எவரும் இலர் எனச் சேரலாதனின் காவற்சிறப்பைக் கூறியதுமாம். அன்பாலே செறிவுற்ற அவன் தேவி அவ்வாறு காதற்பேரன்பினைக் கொண்டவள் என உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.

தொல் பசியுழந்த பாண்சுற்றத்தினர் பெற்ற புது வளமை, நெடுஞ்சேரலாதனின் கொடைமனச் செவ்வியைச் காட்டுவதாகும்.

சிதைந்து மண்தின்னப் பெற்று விளங்கும் அழுக்காடைக்கு நனைந்த பருந்தின் சிறகை உவமித்தனர். ‘கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன்’ எனப் பிறசான்றோரும் இந்த உவமையைப் பயன்படுத்துவர் (புறம் 150 - வன்பரணர்).

‘இரும்பேர் ஒக்கல்’ என்பதற்கு வறுமையாலே மேனி நிறம் கருமைப்பட்டுப்போன பெரிய பாண் சுற்றம் எனவும் பொருள் கொள்ளலாம்.

இப் பாட்டு இப் புலவர் பெருமானும் பாணச் சுற்றத் தோடே கூடியவராகச் சென்றனர் என்பதனையும், இவரால் அவர்களும் உபசரிக்கப் பெற்றனர் என்பதனையும் காட்டும். ஊனுணவு அந்தணரும் அந்நாளிற் கொண்டது என்பதும் அறியப்படும்.

13. பூத்த நெய்தல்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கும். வஞ்சித்தூக்கும். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் சாவற் சிறப்பும்.

[தம்மை உண்ணுவதற்கு வந்துள்ள எருமைகளைத் தம் இனிமையாலும் மிகுதியாலும் தம்பாற் கவர்ந்து, வேற்றிடம் போகாதபடி தடுக்கும் நெய்தல் பூக்கள் என்று உரைத்த நயமான உவமையினாலே இப் பாட்டு இப் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. சேரலாதனும் அவ்வாறே தன்னை அடைந்தவர் பிறரை எண்ணாதவாறு வரையின்றி வழங்கும் தன்மையன் என, அவன் கொடைச்சிறப்பையும் உய்த்து உணரவைத்தனர். இதன்கண் வஞ்சியடிகள் விரவி வந்தமையால் வஞ்சித் தூக்கும் இதற்குச் சொல்லப்பட்டது.]

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவினழிய நாமந் தோற்றிக் 10
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்க் தியங்க 15
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர் பனிக்கும பாழா யினவே
காடே கடவுள் மேன, புறவே 20
ஓள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத் தன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது 25


மழை வேண்டு புலத்து மாரநிற்ப
நோயொடு பசியிகந் தொரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே!

தெளிவுரை : கோடைக் காலத்தே ஆடுகளைக் கூட்டிக் கிடைமறித்த நீரற்ற வறண்ட வயல்களுள் மழைக்காலத்தே நீர் மிகுதிப்பட்டு ஆரல்மீன்கள் கலித்துப் பல்கிப் பிறழத் தொடங்கும். ஆனேறுகள் தம்முட் பொருதலினாலே சேறுபட்ட வயல்கள். மீண்டும் உழுது பண்படுத்தாமலேயே விதைப்பதற்கான பக்குவத்தையும் அடைந்திருக்கும். கரும்புப் பாத்திகளிலே பூத்துள்ள நெய்தல் மலர்கள், பெருங்கண்களை உடையவான எருமைக் கூட்டத்தை, வேற்றிடம் நோக்கி உணவுகருதிப் போகாதபடி தடுப்பனபோல நிறைந்திருக்கும். ஆரவாரம் பொருந்த இளமகளிர் துணங்கையாடி மகிழ்ந்த வீட்டின் புறங்களிலே, வளைந்த தலையினவான கிழட்டுப் பசுக்கள், ஆடும் அம் மகளிரது தழையுடைகளினின்றும் சோர்ந்து வீழ்கின்ற ஆம்பல்மலர்களை உண்டபடியே தம் பசியாறிக்கொண்டிருக்கும்.

தழைத்து வளர்ந்துள்ள தென்னைகளையும், பல்வேறு பறவையினங்களும் தங்குதலினாலே ஒலியெழுந்தபடி இருக்கும் மருதமரங்களையும், வயல்களுக்கு நீர்பாய்ச்சு தற்பொருட்டாக அமைந்த வாய்க்கால் தலைப்புக்களையும், பூக்கள் மலிந்துள்ள பொய்கைகளையும் கொண்டனவாக, வளத்துடன் நின் பகைவரது ஊர்கள் பலவும் விளங்கும்.

பகையரசரது வளமான அத்தகைய ஊர்கள் பலவும் வளம் சிதைந்து போகுமாறு, நீதான் அச்சத்தைத் தோற்று வித்தாயாய், அவ் அரசரது ஊர்கள்மேற் படையெடுத்தனை! சிவப்புற்ற கண்களோடுஞ் சென்றனை! நீ தாக்கி அழித்த அப் பகையரசரது அரண்களைக் கொண்ட ஊர்கள் எல்லாம், தம்பழைய தன்மை கெட்டனவாய், அழிவையும் அடைந்தனவே!

கூற்றத்தால் தாக்குண்டு உயிரைப் பறிகொடுத்த பின்னர் எஞ்சிக்கிடக்கும் வெற்றுடலானது, கணத்துக்குக் கணம் தானாகவே சிதைந்துகொண்டே போகும். அதுபோல தத்தம் தலைவர்களை இழந்துவிட்ட பகைவர் நாட்டு அரண்களும் தமக்குத் தாமாகவே சிதைவுற்று அழியலாயினவே!

மலர்ந்த பூக்களோடும் கூடியவான கரும்பு வயல்கள் தம் பொலிவிழந்தனவாய்ப் பாழ்பட்டுப் போயினவே! அவ் விடங்களிலே, முறுக்கிய காய்களோடுங் கூடிய விடத்தேரை மரங்களோடு, கரிய உடைமரங்களும் நீண்டு வளரத் தொடங்கி விட்டனவே! மேலும், முனை பிளவுபட்ட தலை மயிரைக் கொண்ட பேய்ம்மகள், ‘கழுது’ என்னும் பேயின் மேல் ஏறிக்கொண்டு, அவ்விடங்களிலே சுற்றித் திரிபவளும் ஆயினளே! விளைநிலங்கள் எல்லாமும் நெருஞ்சிச்செடி பரந்து செறிந்துகிடக்கும் பாழ்பட்ட இடங்களாகவும், புழுதி பட்ட பாழிடங்களாகவும் முற்றவும் மாறிப் போயினவே!

பூந்தாதாகிய எருவை இழந்தனவும், மக்கள் வந்து சேர்ந்து ஒன்றுகூடுவதாலே எழும் ஆரவாரத்தை இழந்தனவும் ஆயின, அவ் ஊர் மன்றங்கள்! வேறு புகலிடம் அற்றோரான சிலர், தம் உள்ளத்து எழுச்சி அழிந்த நிலையினராக, அம் மன்றங்களுக்கேனும் செல்லக் கருதுவர். அப்படிச் செல்லக் கருதும் அச் சிலரது எஞ்சியுள்ள மனவலிமையையும் கெடச்செய்து, மற்றும் செல்லலாம் எனக் கருதுவாரது மனத்தையும் நடுக்கமுறச் செய்யும் கொடிய பாழிடங்களாக அவை எல்லாமும் உருமாறிப் போயினவே!

நின் நாட்டகத்தேயோ -

பெரும் காட்டிடம் எல்லாம் கடவுள்களுக்குரிய கோயில்கள் விளங்கும் புண்ணியத் தலங்கள் ஆயின! சிறுகாட்டிடம் எல்லாம், ஒளிகொண்ட அணிகலன்களை அணிந்தாரான தத்தம் இளமகளிரோடுங் கூடியவராக, நின் படைமறவர்கள் ஆடிக்களித்து இன்புறுகின்ற படைநிலைகள் ஆயின! காடும் புறவும் அல்லாத பெருவழிகளும், ஆறலைக்கும் கள்வரும் பிற இடையூறுகளும் அற்றவாய், வழிநடப்பார் அச்சமின்றிச் செல்லுவதற்கு ஏற்றவையாக உள்ளன!

அஃதன்றியும் -

தானியங்களைக் கொண்டு விற்கும் வாணிகரது தொழில்கள் முட்டுப்பாடு இல்லாதே நடைபெறுமாறு, அவர்தம் குடும்பங்களையும் நீதான் காத்து வருகின்றன! தமக்கு உட்பட்ட வரிசையாளரைக் காக்கும் காணியாட்சியாளராகிய வேளாளரது சுற்றங்களையும் நன்கு பேணிக் காத்து வருகின்றன!

நின் ஆட்சியது நலத்தினாலே, செவ்வாய் சென்றதன் பக்கத்திலே சுக்கிரன் செல்லாதபடியாகவும் செய்து வளப்படுத்தி வருகின்றன. அதனாலே, மழையும் விரும்பும் பகுதி

ப.-3 களிலே எல்லாம் தவறாமற் பெய்து நின் நாட்டைஎப்போதும் வளப்படுத்தி வருகின்றது.

இவ்வாறாக, நின்னாற் காக்கப் பெறுகின்ற நாடுதான், நோயோடு பசியும் நீங்கியதாக, வளர்த்தால் பொலிவுபெற்றதாக விளங்குகின்றதே!

(பகை நாட்டின் அழிவையும், சேரலாதன் நாட்டின் சிறப்பையும் கூறி, அவனது மறமாண்பையும் நாடுகாவல் சிறப்பையும் வியந்து போற்றுகின்றனர்.)

சொற்பொருள் : தொறுத்த ஆடுகளைக் கிடைகட்டிய ஆரல் - ஆரல் மீன்; கார்த்திகை நட்சத்திரம். நெய்தல் - நெய்தற்பூக்கள்; ஒருவகை நீர்ப்பூக்கள். இருங்கண் - கருமையான கண்; பெரிய கண்ணுமாம். கலி - ஆரவாரம். ஆம்பல் - ஆம்பற் பூக்கள்; இவை துணங்கை மகளிரது தழையுடைகளில் இட்டுக் கட்டியிருப்பன; அவர் ஆடியபோது உதிர்ந்தன. ஒலித்தல் - தழைத்தல். இமிழ் மருது - பறவையினத்து ஆரவாரத்தோடே விளங்கும் மருது.

வைப்பு - ஊர்கள். புனல் வாயில் - வயிலிடை விளங்கும் பாய்சால்களின் தலைப்பகுதி; வாய்த்தலை எனவும் கூறப்பெறும். மூதா - முதிய பசு; முதுமையால் தொலைதூரஞ் சென்று மேய்தற்கு இயலாத கிழட்டுப்பசு. துணங்கை - மகளிரது கூத்துவகையுள் ஒன்று; இரு கைகளையும் மடக்கியவாறு விரல்களாலே அடித்தடித்துக் குதித்தாடும் ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து.

கவின் - அழகு. நீரழி பாக்கம் - நீர்வளத்து மிகுதியாலே அழிவெய்தக்கூடிய பாக்கம்; பகைவரால் எளிதாக அழித்தற்கு முடியாதது என்பதாம். ‘பாக்கம்’ என்பது நெய்தல் நிலத்து ஊர்ப் பெயர்; அது மருதநிலத்து ஊருக்கு மருவி வந்தது . நெய்தலடுத்த மருதமும் ஆம். கூற்றம் - கூறுபடுத்துவது. திரிகாய் - முறுக்கிய காய். விடத்தேர் - விடத்தேரை என்பதொரு முள்மரம். கார் உடை - கரிய உடைமரம்; முள் மரத்துள் ஒருவகை. சுவை - பிளவுபட்ட. ஊரிய- பரந்த. நெருஞ்சி - நெருஞ்சி முள்ளின் செடி. பறந்தலை . பாழிடம். மறுத்த-விலக்கிய. உள்ளம் - ஊக்கம். பனிக்கும் - நடுக்குறச் செய்யும்.

மேன - மேயின; விரும்புதற்கேற்ற தன்மை பெற்றன. புறவு - சிறுகாடு, ‘மகளிரொடு மள்ளர் மேன’ என்றது அவர் தாம் போரொழிந்தாராய் இன்பக் களியாட்டுக்களில் திளைத்படியே இருந்தனர் என்றதாம். ஆறு - வழி. பகர்நர் - விலை கூறி விற்போர். குடிபுறந்தருநர் - காணியாளர். வரிசையாளர் - அவரிடம் வாரத்துக்கு நிலத்தைப் பெற்றுப் பயிரிடும் உழவர் குடியினர். புலத்து - இடத்து. பாரம் - குடும்பம்; ‘பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி’ எனப் புறப்பாட்டினும் வரும் (புறம். 35). அழல் - செவ்வாய். மழைக் கோளான சுக்கிரனோடு செவ்வாய் ஒன்று சேரின் நாட்டிலே மழைவளம் திரிந்து வறட்சியுண்டாகும் என்பர்.

விளக்கம் : ‘மூதா ஆம்பல் ஆர்கவும்’ என்றது, பெருக ஆம்பல்சூடிக் களித்தாடும் இளமகளிரைக் கொண்ட ஊர்கள் என, அவற்றின் இன்பச்செழுமை கூறியதாம். ‘கூற்று அடூஉ நின்ற யாக்கை’ யானது கணத்துக்குக்கணம் தானே கெட்டு அழியுமாறுபோலச் சேரலாதனாலே தலைவர்களை இழந்துவிட்ட பகைப்புலங்களும் நாளுக்குநாள் தாமே தம் தன்மையிற் கெட்டுத் தம் அழகழியும் என்றனர்.

‘நீரழி பாக்கம்’ என்றது, ‘தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக வாழி வளவ என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது (புறம். 42)’ என விளங்கும் நாட்டு வளமை. அரசனிருக்கும் ஊருக்கும் ‘பாக்கம்’ பெயராதலைக் ‘கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை’ (மதுரைக் காஞ்சி 137-8) என்பதனால் அறியலாம்.

கூலம் பகர்நர் குடிபுறந்தருதலை ஆற்றின் செவ்வியாலே நிகழ்வதாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழை வளத்தாலே நிகழ்வதாகவும் கூட்டி உரைப்பர். 1-10 அடிகளால் பகைவரது நாட்டின் பழைய வளமான நிலையினையும், 11-19 அடிகளால் அந் நாடுகள் தாம் அழிந்துபோயின தன்மையினையும், 20-28 அடிகளால் சேரலாதனால் காக்கப் பெறுகின்ற நாட்டினது வளத்தையும் முறையே உரைத்தனர்.

‘நோயொடு பசியிகந்து’ என்பதே ஒரு நல்லாட்சியின் குறிக்கோளாக அமைதல் சிறப்புடைத்து என்பதும், இதனால் பெறப்படும். இது என்றைக்கும் பொருந்தும் நீதியுமாம்.

‘தாதெரு மறுத்த கலியழி மன்றத்து, உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து, உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே’ என்னும் அடிகள், போரழிவின் கொடுமையை மிகவும் தெளிவாக எடுத்து விளக்கிக் கூறுவதாகும்.

‘நீறாடு பறந்தலை’ - புழுதிபட்டுபோன பாழிடம்; வயல்கள் பண்படுத்திப் பயிரிடுவாரை இழந்ததனாலே, நெருஞ்சி படர்ந்து, புழுதிபட்டுப்பாழிடங்கள் ஆயின என்பதாம்.

14. சான்றோர் மெய்ம்மறை!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்; ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு; செந்தூக்கு. இதனாற் சொல்லியது: சேரலாதலின் பலவான குணநல மேம் பாடும், போராற்றற் சிறப்பும்.

[தன் படைமறவரை. ‘மெய்புகு கவசத்தைப் போலத்’ தான் பேணிக்காக்கும் தன்மையாளன் சேரலாதன் என வியந்து கூறிய ‘சான்றோர் மெய்ம்மறை’ என்னும் சிறப்பு நோக்கி, இப்பாட்டு இப் பெயரால் அழைக்கப்படுவதாயிற்று. ‘சொற்சீர் அடி’ என்பது, அளவடியிற் குறைந்தும், வஞ்சி ஒசையின்றி அகவ்ல் ஒசை பெற்றும் வருவதனை. இங்கு ‘அளப்பரியையே’ என்னும் இரண்டாவது அடி இவ்வாறு வருதலால் சொற்சீர் வண்ணமும் கூறப்பட்டது. இதனைப் ‘பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு’ எனவும் உரைப்பர். இதனை ‘வாழ்த்தியல்’ என உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவர்.)

நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின்
அளப்பரி யையே!
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை!
போர்தலை மிகுந்த ஈரைம் பதின்மரொடு 5

துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே!
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்ரீ டழித்த செருப்புகன் முன்ப!
கூற்றுவெகுண்டு வரினும் ஆற்றும்ஆற் றலையே! 10

எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை!
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ! 15

பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையேர் உழவ! பாடினி வேந்தே!
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிற் பொழின்முழு தாண்டநின்
முன்றிணை முதல்வர் போல நின்றுநீ 20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே.

நிலமும் நீரும் காற்றும் வானமும் எனச் சொல்லப்படுகின்ற நாற்பெரும் பூதங்களையும்போல, நீதானும் பிறரானே அளவிட்டு அறிந்து உரைப்பதற்கும் அரியவனாக உள்ளனை! நாளும் கோளும் திங்களும் ஞாயிறும் மிக்க பெருந்தீயுமாகிய ஐந்தும் ஒருங்கே தம்முட் கலந்தாற் போன்றதொரு விளக்கத் தினையும் உடையை! ‘போரிடுதலே இனித் தலையாயது’ எனப் போரை மேற்கொண்டாரான நூற்றுவர்க்குத் துணையாக அமைந்து, இறுதிவரைக்கும் போராடிய துணிவுடையோனும், ஆண்மையாளனுமாகிய அக்குரனைப் போலக் கை வண்மையினையும் பெரிதும் உடையை!

வஞ்சனையால் அல்லாதே, களங்களில் எதிர்சென்று போரிட்டு வென்ற தன்மையாலே தும்பை சூடியவராக, நின்னோடும் பகைத்துப் போரிடற்கு மேல்வந்த பகைவர்களது போர்த்திறனையும் பெருமிதத்தையும் அழியச்செய்த, செருவேட்டலையே இயல்பாகக் கொண்ட வலிமையாளனே! கூற்றமே வெகுண்டு எதிர்த்து வந்தபோதும், அதன் ஆற்றலையும் அழித்து, அதனையும் வெற்றிகொள்ளுகின்ற போராற்றலைக் கொண்டவனே!

எழுவரான முடியுடைய மன்னர்களை எல்லாம் வென்று, அவர்களது முடிப்பொன்னாலே செய்துகொண்ட ஆரம் பொருந்தியதும், வெற்றித்திருமகள் விரும்பி வாழ்வதுமான மார்பினையும், வலியமைந்த பெருத்த கைகளையும் கொண்டோனே! போராடும் நின் படைமறவர்க்கு மெய்க்கவசம் போல விளங்கி, களங்களிலே அவரைத் தாங்கிக் காத்து, வரும் பகைப்படையை எல்லாம் எதிர்நின்று தாங்கிக் களத்தையே நினதாக்கிக் கொள்ளும் சிறப்புடையோனே!

வானத்து உறைவோரான தேவமகளிரும், ‘அழகாலே அவளை ஒப்பானவள் யானே யானே’ என்று கூறித் தங்க ளுக்குள்ளே பூசலிட்டு மாறுபாடு கொள்ளுகின்ற பேரழகினையும், ஒளிவிளக்கம் பொருந்திய அணிகலன்களையும், தம் ஒளியாலே மறையச்செய்தப்டி வண்டினம் மொய்க்கின்றதும் கடைசுருண்டு தாழ்ந்து தொங்குகின்றதுமான கூந்தலையும், வளைவான குண்டலங்களையும் உடையோளான அரசமா தேவியின் கணவனே!

பலவாகிய போர்க் களிறுகளின் தொகுதியோடு, வெற்றிக்கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் படையாகிய ஏரைக்கொண்டு, பகைப்படையினரை எல்லாம் உழுதழித்து வெற்றிகொள்ளும் படையேர் உழவனே! பாடுதற்கு இனிதானவனாகிய வேந்தனே!

ஒளிவிளங்கும் மணிகள் நெருக்கமாகப் பதிக்கப்பெற்ற பொற்கலன்களை அணிந்தோராகத், தம் ஆணைச் சக்கரத்தைச் செலுத்திக், கடலாற் சூழப்பெற்ற பூமியாகிய இந்த நாவலந் தண்பொழில் முழுதையும் ஆட்சிசெய்தவரான நின் சேரர்குலத்து முன்னோர்களைப் போலவே, நீயும் நிலையான புகழாலே மேம்பட்டோனாக, இவ்வுலகிலே என்றும் நிலை பெற்று நிற்பாயாக!

கெடாத நல்ல புகழோடும் நிலைபெற்று, இவ்வுலகத்தோடுங்கூட, நீயும் கெடாத் நல்ல புகழை நிலைபெறச்செய்து, இன்னும் நெடுங்காலம் வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருள் : நிலம் நீர் வளி விசும்பு என்பன நாற் பெரும் பூதங்கள்; இவை இவ்வளவின என்று அளவிட்டு அறிதற்கு அரியன; இவற்றின் உறவாலேயே உலகப் பொருள்கள் பலவும் உண்டாயின. ‘இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞானத்து அகலமும், வளிவழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவையளந்து அறியினும் அளத்தற்கு அரியை’ எனப் புறநானூற்றினும், அளவிறந்த பேராற்றலுக்கு இவற்றை உவமையாககி உரைப்பர் (புறம். 20 - குறுங்கோழியூர் கிழார் பாட்டு). நிலம் நீரினும், நீர் வளியினும், வளி விசும்பினும் சென்று ஒடுங்கும். ‘தீ’ ஒளியுடைத்தாதலின் அதனைக் கோளோடு சேர்த்துக் கூறினர்.

‘நாள்’ என்பது அசுவனி முதலாகக் கூறப்படும் 27 நட்சத்திரக் கூட்டங்களையும், ‘கோள்’ என்பது ஞாயிற்றையும் திங்களையும் நீக்கி நின்ற செவ்வாயும் புதனும் வியாழனும் வெள்ளியும் சனியும் ஆகியவற்றையும் குறிப்பன. பஞ்ச பூதங்களுள் தீயினைக் ‘கனையழல்’ என இதனோடுங் கூட்டிக் கூறினர். இவையனைத்தும் ஒருங்கே சேரின் உண்டாகும் மிகப் பேரொளியினைக் கற்பித்து, அதற்குச் சேரலாதனின் பெரும் போர்ப் புகழினை உவமித்தனர்.

தலைமிகுத்தல் - மேற்கொள்ளல். துப்பு - துணைவலி. துறை போதல் - இறுதிவரையும் பிரியாதே துணையாக நிற்றல், ‘அக்குரன்’ என்பான் பாரதப் போரில் நூற்றுவர்க்குத் துணையாக விளங்கிய ஒரு மாவீரன்; வள்ளன்மை மிக்கவன். அக்ரூரன் என்பார் வேறு இவன் வேறு. துணிவு - மனவூக்கம்; மனவூக்கம் இல்லாதபோது ஆண்மையானது சிறத்தல் இல்லையாதலின், ‘துணிவுடை ஆண்மை’ எனக் கூறினர்.

தும்பைப் பகைவர் - புகழ் குறித்துக் கடும்போரைச் செல்யும் மிகுவலி கொண்டாரான பகைவர்; அவர் வலிமிகுதியைக் குறிப்பவர், ‘அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்’ என்றனர்; அதற்கு முன்பேயும் பலப்பல வெற்றிப்போர்களைச் செய்து சிறப்புற்ற மாவலிமையும் செருக்கும் கொண்டவர் என்பதாம். கூற்று - உயிரை உடலினின்றும் கூறிட்டுப் பிரிப்பது; அது வெகுண்டு வரினும் தோற்றோடச் செய்யும் ஆற்றலுடையான் என்றது, சேரலாதனின் போராண்மையை வியந்து கூறியதாகும். ‘பகையெனிற் கூற்றம் வரினும் தொலையான்’ எனக் கபிலரும் இவ்வாறே உவமிப்பர் என்ப.(குறிஞ்சிக் கலி 43)

எழுமுடி - ஏழரசர் திருமுடிகள். திரு - வெற்றித்திருமகள். நோன்மை - வலிமை. சான்றோர் - படைமறவர்; புகழோடு சாதலே நிலையான செவ்வியுடைத்து ஆதலின் படைஞரைச் சான்றோர் என்றனர். அவர்க்கு மெய்ம்மறை எனவே, அவரை அழியவிட்டுத் தான் வெற்றிதேடலைக் கருதாது, அவர்க்குக் காவலாகித் தானே முனைமுகத்து நிற்கும் மாவீரன் இவன் என்பதாம்.

‘வானுறை மகளிர்’ என்றது அரம்பையரை. நலன் - நல்லழகு, பூச்சாலும் புனைவாலும் அல்லாதே இயல்பாகவே அமைந்துள்ள அழகு. வயங்கல் - விளங்கல். ‘கொடுங்குழை’ என்றது சேரமாதேவியை. இது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; கொடுங்குழையை உடையாள் என விரியும்.

தொகுதி - கூட்டம். பாடினி வேந்தே - பாடற்கு இனிதாகிய பல சிறப்புக்களும் கொண்ட வேந்தனே. பாடினி மகிழ்வுற்றாளாகப் போற்றிப் பாடுதலைச் செய்ய, அதனைக் கேட்டு உவக்கும் வேந்தனே எனினும் பொருந்தும். மிடைதல் - நெருங்கப் பதித்தல். வரைப்பு - உலகம். தவலல் - தாழ்தல். உலகொடு - உலகிடத்து; வேற்றுமை மயக்கம்.

விளக்கம் : ‘நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்றே’ எனப் பெரும் பூதங்களின் அளவற்ற தன்மையைப் பிறரும் கூறுவர் (குறுந்தொகை 3 - தேவகுலத்தார் பாட்டு). பொறுத்தலில் நிலத்தைப் போன்றும், அருளும் தன்மையில் நீரைப் போன்றும், வலிமையிற் காற்றைப் போன்றும், ஆராய்வில் வானைப் போன்றும் அளவிறந்த ஆற்றலுடையான் எனப் பொருத்திக் காண்க.

‘கடலக வரைப்பின் இப் பொழின் முழுதும் ஆண்ட நின்முன் திணை முதல்வர்’ என்றது, சேரலாதனுக்கு முற்பட்ட பலகாலத்தும், சேர மன்னருட் பலர் இந்த நாவலந் தீவினை முற்றவும் கைக்கொண்டு ஆண்டுவந்தனர் எனக் கூறியதாம். தவாஅலியர் - கெடாமல் என்றும் புகழோடே விளங்கு வாயாக! குடிச்சிறப்பைக் கூறி, அதனை மேலும் ஒளிபெறச் செய்த இவன் தனிச்சிறப்பையும் வியந்து பாராட்டினர்.

15. நிரைய வெள்ளம்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம்; ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நிரைய வெள்ளம். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் நாடுகாவற் சிறப்பும்.

[சேரலாதனின் படைப்பெருக்கத்தின் வலிமையைக் கூறுவார், பகையரசர்க்கு நிரைய பாலரைப்போலத் தோன்றி அழிவை விளைவிப்பவர் எனச் சிறப்பித்த நயம்பற்றி இப் பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.]

யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மரம் முருக்கி
நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் 5

கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கின் உருவறக் கெடுத்துத்
தொல்கவின் அழித்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் 10

சிவந்த காந்தள் முதல்சிதை மூதிற்
புலவுவில் உழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தகின்
பகைவர் நாடும் கண்டுவந் திசினே! 15

கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின் 20

வயவர் வேந்தே! பரிசிலர் வெறுக்கை!
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத!
நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென
உண்டுரை மாறிய மழலை நாவின் 25

மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவல் அமர்ந்த சுற்றமொடு
ஒன்றுமொழிக் தடங்கிய கொள்கை யென்றும்
பதிபிழைப் பறியாது துய்த்தல் எய்தி 30

நிரையம் வொரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறக் தருதலின் நோயிகந் தொரீஇய
யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென்
மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சாது 30

ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பின்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஒடியா மைந்த! நின் பண்புபல நயந்தே! 40

தெளிவுரை : சேரலாதனே! மேகங்கள் தவழ்ந்து வந்து தங்கும் உயரமான மதிற்கவர்களையும், அவற்றை அடுத்ததாக விளங்கும் காவற்காடுகளையும் அழித்தவராய், வரிசை வரிசையாகச் செல்லும் போர்க்களிறுகளோடு, பகைத்தார்க்கு நிரயத் துயரையே தருகின்ற நின் படை வெள்ளமானது, நாற்றிசையும் பரந்தபடியாகப் போர்மேற் கொண்டு செல்லும். சென்று, தாம் ஆடிக் குறிகண்ட கழங்கினது செய்தியாலே உள்ளம் உரம் அழிந்தாராய்த், தத்தம் அகநகரிடத்தே செயலற்றபடி தங்கியிருக்கும் மன்னர்களின் சுற்றமாகிய படையணிகளை அழிக்கும். அங்ஙனம் அழித்து, நீதான் கைக்கொள்ளக் கருதிய பகைநாட்டினிடத்தே, ஓர் யாண்டுக் காலம் கழியும் வரையிலும் நின் படை தங்கியிருக்கும். அக்காலத்தே, போர் முனைப்பட்ட பகைவரின் ஊர்களைத் தீப்பரவக் கொளுத்தி அழித்தலையும் அது செய்யும். அணுகுதற்கரிய சீற்றத்தோடும் அவ்வாறு தீயிட்டுக் கொளுத்துதலாலே உயர்ந்து எழுந்த நெருப்புச் சுடர்கள், காற்று மோதலினாலே கொடிவிட்டு மேலெழும் நிறம் அமைந்த புகையானது பிசிராக உடைந்து கெட, இடங்கள் எல்லாம் தீவாய்ப்பட்டு வெந்து அழிவெய்தும். அங்ஙனமாக, வெந்தழிந்த ஊர்களைப் போலவே, தீக்கொளுவாத இடங்களையும் உருக்குலையுமாறு நின் படை அழியச் செய்யும். இவ்வாறு, தம் பழைய அழகான தன்மை எல்லாமே அழிந்துபட்ட இடமகன்ற ஊர்களையும்-

வெண்ணிறப் பூக்களோடும் காணப்படுகின்ற வேளைச் செடிகள் விளங்கவும், பசுமையான சுரைக் கொடிகள் தழைத்துப் படர்ந்திருக்கவும், பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்திருக்கவும், வேரோடுங் காய்ந்து அழிந்துபோன செங்காந்தட் செடிகள் நீர்ச்சால்களிடத்தே நிறைந்திருக்கவும் விளங்கும், புலவு நாற்றமுடைய வில்லாலே உயிர்க் கொலை செய்யும் புல்லிய கள்வர்கள் தங்கியிருக்கும், புல்லே இலையாக வேயப்பெற்ற பாழ்வீடுகளே உள்ள ஊர்களையும், அவை எல்லாம் உடையவாயின

பகைத்தாரது புலங்களை இவ்வாறாக அழிக்கின்ற நினது மறமாண்பினைத் தம்முடைய அறியாமையினாலே மறந்து, நின் பகைமையினை ஏறட்டுக் கொண்ட அப் பகையரசரது நாடுகளைப் பார்த்தவாறே, இங்கே நின் நாட்டிடத்தேயும் வந்தேன்.

கடல்படு பொருள்களும், மலைபடு பொருள்களும், ஆறு பாயும் முல்லை மருதமாகிய நிலங்களிலே விளைகின்ற பொருள்களும், இவையல்லாத பிறநாட்டுப் பொருள்களும் ஆகிய பல்வகை வளங்களும் முட்டாதே பெறப்படுகின்ற, நின் அகன்ற நல்ல நாட்டிலுள்ள, விழாக்கள் ஓய்தலை அறியாத, முழவுகள் சதா முழங்கியபடியே யிருக்கும் மூதூர்களையும் கண்டேன்.

பலவகைப்பட்ட இனங்குறிக்கும் கொடிகளின் நீழலிலே பலவகைப் பொருள்கள் குவிந்து கிடப்பதும், பொன்னை மிகவுடையதுமான கடை வீதிகளிலே, வெற்றியும் கொடையும் பற்றிய செய்திகளை அறிவிக்க முழங்கும் முரசின் ஒலிகளையும் கேட்டேன். வலிமை மிகுந்த மறவர்களுக்குத் தலைவனே! பரிசிலரின் செல்வமாக விளங்குபவனே! தொடி சிதைவுற்றும், மாலையணிந்தும், உயர்ந்தும் விளங்கும் கொம்புகளையுடைய, போரிலே வல்லவான யானைகளைக் கொண்ட படையினை உடையவனாகிய சேரலாதனே!

பகைமை முதலானவற்றாலே மனத்துயரம் ஏதுமின்றிப் பலவகையான நலமும் பெருகியுள்ள இனிதான வாழ்க்கையினையும், வாய்மையே என்றும் பேசுதலையும், புலன்கள் ஐந்தும் அடங்கிய ஒழுக்கத்தையும், நிரயம் எய்தா வகையிலே தீதுகளை முற்றவும் நீக்கிய அறவேட்கையினையும் கொண்டோர் உயர்ந்தோர்! அவர், தாம் விரும்பி மேற்கொண்ட நல்லறங்களையே, தாமும் விரும்பி மேற்கொண்ட தம் சுற்றத்தாருடனே, தாம் வாழும் பதியைவிட்டு நீங்கிச் செல்லும் குற்றத்தை, அறியாதவர். அவர், தாம் விரும்பியவற்றை எல்லாம் இனிதாக நுகர்ந்தவராக, நினக்குரிய தம் ஊர்களிலேயே விரும்பி வாழ்ந்திருக்கின்றனர்.

பலரும் புகழும் பண்பினை உடையோனாகிய நீதான் காத்து ஓம்பி வருதலினாலே, நோயேதுமின்றி விளங்கும் புதுவருவாயினையுடைய நின் நல்ல நாட்டையும் கண்டேன்.

அளவிறந்து உண்டதனாலே மயங்கிப் பேச்சுத் தடுமாறியதனாலே, குழறும் மழலை நிரம்பிய நாவினாலே மென் சொற்களை வழங்குபவர், இசைக் கருவிகள் கொண்ட பையினைக் கையிற்கொண்டோரான பாணர்கள். அவர்கள். திருத்தமான தம் யாழினை இசைத்து மீட்டியபடியே, ‘இவ்வுலகத்தோரின் நல்வாழ்வின் பொருட்டாக நீ நெடிது வாழ்வாயாக’ என்று பாடிநிற்க, நீதான் எழிலோடும் வீற்றிருக்கும், நின் திருவோலக்க நிலையினையும் கண்டேன், பெருமானே!

இம் மண்ணுலகிலே வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக் கொடுத்துக் கொடுத்துக் சைஓய்தல் என்பதே இல்லாத பெருங் கொடையினையும், மிகுதியான வன்மையினையும் உடைமையினாலே, அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த குடிகட்குப் பெருமையுடைய பொருள்களைத் தந்து இன்பத்தைச் செய்கின்ற திருமாலைப்போல, நல்ல புகழிலே சற்றும் குறைவுபடாத வலிமையினை உடையவனே!

நின் பண்புகள் பலவற்றையும் காணுதற்கு விரும்பிய விருப்பத்தாலேயே, யாமும் மேலே சொல்லப்பட்டவரான நின் பகைவரது, நின்னைப் பகைத்தலாலே அழிவெய்திய நாட்டுப் பகுதிகளையும், நின்னைப் போற்றுதலாலே செழித்து விளங்கும் நாட்டுப் பகுதிகளையும் கண்டோம். அவற்றைச் செய்தருளிய நின்னையும் கண்டு, அந்த இன்பத்தாலே மதி மயங்கியும் போயினோம், பெருமானே! (மதிமயக்கம் பகைவர்க்குச் செய்த கொடுமையையும், நாட்டவர்க்குச் செய்த அருளையும் கருதியதாம்.)

சொற்பொருள் : தலைப்பெயர்தல் - கழிதல். இறுத்தல் - தங்குதல். துன்னல் - நெருங்கிச் சேரல். மரம் - காவற் காட்டிலுள்ள மரங்கள்; கணைய மரமும் ஆம்; கணைய மரமாயின் கோட்டைக் கதவுகளுக்கு வலுவூட்டக் குறுக்காகப் பின்பக்கமாக இடப்பெற்றுள்ள வலிய மரம் எனக் கொள்ளுக. முறுக்கி - அழித்து. ஒழுகல் - ஒன்றன்பின் மற்றொன்றாக இடையீடின்றித் தொடர்ந்து நிரைபடப் போதல். நிரைய வெள்ளம் - நிரையக் காவலர் போன்ற படைப் பெருக்கம்; நிரையக் காவலர் கொள்ளக் கருதிய உயிரைக்கொண்டே மீள்வதுபோலத் தாம் கொள்ளக் கருதிய பகைநாட்டைக் கொண்டே மீளும் படைப் பெருக்கம் என்க. நிரைய வெள்ளம் - நிரை நிரையாக, அணியணியாக, வரிசைப்படச் செல்லும் தானைப் பெருக்கமும் ஆம்.

கழங்கு - கழற்சிக்காய்; இதனை ஆடி, ஒற்றையாக வரின் வெற்றி கிட்டும் எனவும், இரட்டையாக வரின் தோல்வி நேரும் எனவும் நிமித்தம் காணல் பண்டைய மரபு. மன்மருங்கு - அரசச் சுற்றம். கொடிவிடுதல் - தீ கொழுந்து விட்டு எரிதல். குரூஉப் புகை - செந்நிறத்தோடு கூடியெழும் புகை. உருவற - பழைய தன்மை அழிந்துபட கண்ணகன் - இடமகன்ற.

வேளை - நல்வேளை என்னும் குறுஞ்செடி. கலித்து - தழைத்துப் பெருகி. இவர்பு - பற்றிப் படர்ந்து. முதல் - வேர்ப்புறம். மூதில் - பழையதாகிய வீடு. புலவுவில் - புலவு நாற்றங்கொண்ட வில்; வில்லால் அடித்துங் கொல்லுதல் உண்டாதலின் அதுவும் புலவுநாற்றம் கொண்டதாயிற்று. புல்லாள் - புன்தொழிலால் வாழும் ஆறலை கள்வர். புல்விலை - பனை தென்னை முதலியவற்றின் ஓலை; ‘புல்லே ஓலையாகக் கொண்டு வேய்ந்த’ என்றும் கூறுவர்.

பகைப்படை மறவருள் ஓடி உயிர் பிழைத்தார், வாழ்தற்கு வகையற்றோராய்க் காட்டுப்புறத்துப் பாழ்ப்ட்ட ஊர்களிலே மறைந்து வாழ்ந்து, ஆறலைத்து உண்ணும் கள்வரும் ஆயினர் என்க. அரம்பு - குறுங்காட்டரண். துப்பு எதிர்தல் - வலியவரே போலச் செருக்கிப் போருக்கு எழுதல். ‘யாற்றவும்’ என்றது. மருதத்தும் முல்லைப்பகுதியிலும் கிடைக்கின்றவான பொருள்களைக் குறித்தன. பிறவும் - பிற நாட்டுப் பொருள்களும்; சேர நாட்டிலே கிடைக்காத சிறப்புப் பொருள்களும். நல்நாடு - நாடா வளமுடைய நாடு. நியமம் - கடைத்தெரு.

வெறுக்கை - செல்வம், தார் - மாலை. ‘நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு’ என்றது, ‘இவ்வுலத்தோர் நல்வாழ்வு அடைதலின் பொருட்டாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக’ என்றதாம். மென்சொல் - மென்மையான சொற்கள். கலப்பை - இசைக் கருவிகள் இட்டுள்ள பை. தொண்ட - தொடுத்திசைக்கும் இசை. வெய்துறவு - துயரம். மேவல் அமர்ந்த - விரும்பியபடியே அமைந்த ஒன்று மொழிதல் - ஒரே பேச்சாகவே பேசுதல்; வாய்மை தவறாமை. அடங்கல் - புலன், உணர்வுகளை அடக்கி இருத்தல். கொள்கை - கோட்பாடு.

பதி பிழைத்தல் - வாழ்கின்ற பதியிலே வாழவியலாது வேறு பதி நோக்கிப் போதல். நிரையம் ஒரீஇய - தம்முடைய ஒழுக்கச் செவ்வியாலே நிரையஞ் செல்லாதவாறு தடுத்துக் கொண்ட புரையோர் - உயர்ந்தோர். நோய் - நோயும் பசியும். யாணர் - புது வருவாய். மதிமருளல் - மதி மயங்குதல்; ஆனந்த மிகுதியாலே மயங்கி நிற்றல். மண்ணுடை ஞாலம் - மண்ணணுச் செறிவாலே அமைந்த நிலவுலகம். எஞ்சாது - எதையும் தனக்கென மறைத்து வைத்துப் பேணியிராது. ஏமம் - இன்பம். நெடியோன் - திருமால். மைந்து - வலிமை.

விளக்கம் : சேரலாதனின் பேராண்மையினை அவனைப் பகைத்ததனாலே அழிபாட்டை அடைந்த நாட்டின் நிலையைக் கூறுவதனாலும், அவனது செங்கோன்மையினை அவன் நாட்டது பெருவளத்தை உரைப்பதனாலும் எடுத்துக் கூறினர்.

பழைமையான வீட்டது அழிவடைந்த காட்சி சிறந்த சொல்லோவியம் ஆகும். ‘உண்டு உறை மாறிய மழலை’ என்றது, கள்ளுண்டலினாலெ பேச்சு மாறுபட்ட பொருளற்ற சொற்கள் என்றதாம்.

வென்றி வேந்தன் தன் நாட்டிற்கு மீண்டதும், தன் படைமறவர்க்கும் பிறர்க்கும் தான் திறைகொண்ட பெரும் பொருளையும் வழங்கிவருதல் பழந்தமிழர் அரசர் மரபு. அதனைப் பெறுகின்ற மறவர்கள் கடைத்தெருக்களிலே கூடித் தாந்தாம் விரும்பியவற்றை விலைக்குக் கொள்ளுவர் என்று அறிதல் வேண்டும்.

‘நெடியோன் அன்ன நல்லிசை ஒடியா மைந்த’ எனச் சேரலாதனைத் திருமாலுக்கு ஒப்பிட்டனர். காவல் தொழிலினனான திருமாலையொட்டிக் காவற் பணிபூண்ட மன்னர் மரபினரை எல்லாம் திருமாலின் அம்சமாகக் கொள்வது பண்டைய மரபு.

‘சீர்கெழு விழவின் நெடியோன்’ என்பது கடலிடைச் சூரனை வென்று, சீர்கெழு செந்திற்பதியிலே வீற்றிருக்கும் குமரவேளையும் குறிப்பதாகலாம்.

16. துயிலின் பாயல்!

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : துயிலின் பாயல். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும், அவன் தன் தேவியோடு கூடியிருப்பதான இன்பநிலைச் சிறப்பும்!

[‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப் புரையோர் உண்கண் துயிலின் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்’ எனச், சேரலாதனின் இல்வாழ்வின் இன்பநிலைச் செவ்வியைக் கூறிய நயத்தால், இப்பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.)

கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாம் தவன்றிப் புனிற்றுமகள்
பூணு ஐயவி தூக்கிய மதில
நல்லெழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு 5

ஏமம் ஆகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மதகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலின் காண்குவந் திசினே!
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 10

ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல்? தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் 15

வயங்குகதிர் வயிரமோ டுழந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையேர் உண்கண் துயிலின் பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனியலைத் தன்றே. 20

தெளிவுரை : மலைகளின் முடிகளோடும் மாறுபாடு கொள்ளுவதுபோல மிகவும் உயரமாகவும், வளைந்த இடங்களை உடையவாகவும் அமைந்தன பகைநாட்டுப் புறமதில்கள். ஒரு நாட்டையே கண்டாற்போலப் பரந்து விளங்கும், அம்புக் கட்டுகளைக் கொண்டவான அகன்ற இடை மதில்கள். கோட்டைக் கதவுகளிலே தொங்கலாக அமைக்கப்பெற்ற கணையமரங்கள் பலவாகச் செறிக்கப் பெற்றிருக்கும். ஈன்றதன் அணிமையை உடையவளான பெண், தனக்கும் தன் சேய்க்கும் பேய்க்குற்றம் வராதபடிக்குப் பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத, ‘ஐயவித் துலாம்’ என்னும் படைக் கருவிகளும் அவ்விடத்தே இருந்தன.

நீதான். நின் களிற்றுப் பெரும்படையோடும் அவ் அரண்களைக் கொள்ளக் கருதினையாகச் சென்றனை. நின் களிறுகள் அக் கோட்டை மதில்களிலுள்ள அழகான நல்ல நெடுங்கதவுகளை எல்லாம் மோதிச் சிதைத்தன. அதனாலே தம் கொம்புகளின் முனைப்பகுதி முறிபட்டுப்போன சில களிறுகள், குறுங்கோட்டினவாய்ப் பன்றி ஏறுகளேபோலத் தோன்றின. எனினும், மதநீரைச் சொரிவனவாகிக், கடுஞ் சினத்தை மிகுத்தனவுமாகி, அக் கோட்டைக் கதவுகளுக்கு இட்டிருந்த கணையமரமும் துலாமரமுமாகிய காவல்களை எல்லாம் மோதி அழித்தன. அவ்வாறு அழித்த அக்களிறுகள் தம் சினம் தணியாவாய், மேலும் பிளிறிக்கொண்டே இருக்கின்ற பாசறையினிடத்தே, நீயும் நெடிதுகாலமாகவே தங்கியிருப்போனாக உள்ளனை. அதனாலே, யானும் நின்னைக் காணுதற் பொருட்டாக இவ்விடத்திற்கே ளந்துள்ளேன், பெருமானே!

அறக் கற்பை உடையவள், அடக்கத்தோடுங் கூடிய பெண்மையைக் கொண்டவள், நின்னுடைய அரசமாதேவி, நின்னோடும் ஊடிச்சினந்த காலத்தும் இனிய சொற்களே பேசுகின்ற இயல்பினள் அவள். இனிதான இளமுறுவலையும், வாயூறலாகிய அமுதத்தையும் கொண்ட சிவந்த வாயினள் அவள். அமர்த்த கண்களையும், ஒளி சுடரிடுகின்ற நெற்றியையும் பெற்றவள் அவள். நின் தேவியான அவள்தான் நின்னைப் பிரிந்து உறைதலாலே ஏற்பட்ட தன் துயரத்தைப் பொறுக்க மாட்டாதாளாயினள். நின்னையே நினைந்து நினைந்து வருந்தும் வருத்தத்தினளும் ஆயினள்!

தோன்றலே அழகிய மணிகள் இழைக்கப் பெற்றதும், ஒட்டற்ற பசும்பொன்னாலே செய்யப்பெற்றதுமான பூண் ஆரமானது, விளங்கும் கதிர்களைக் கொண்ட வயிரமணிகளோடும் மாறுபட்டுச் சுடரிட்டுக் கொண்டிருக்கத் திகழ்வது நின் தேவியது அழகிய மார்பகம். கற்பிற் சிறந்தாளான அவள்தான்—

ஏழு அரசர்தம் முடிப்பொன்னலே செய்யப்பெற்ற வெற்றியாரம் விளங்குவதும், வீரத்திருமகள் நிலையாக வீற்றிருப்பதுமாகிய சிறப்பைக் கொண்ட நின் மார்பினிடத்தே, தன் மையுண்ட கண்கள் துயிலுவதற்கான இனிய பாயலைப் பெறுவாளோ? செய்வினை கருதிச் சென்ற காலத்திலே அவளைப் பிரிந்து தங்குதலும், மீட்டும் மனைக்கண்ணே வந்து வாழ்கின்ற காலத்திலே அவளைத் தழுவிக் கொள்ளலுமாகிய இருவகையிலுமே வல்லமை யாளனே! நின் ஆண்மைபொருந்திய மார்பின் நினைவுதான் இதுகாலை நின் தேவியைப் பெரிதும் வருத்துகின்றது!

ஆதலினாலே, அவள்தான் தான் கொண்ட பாயலினிடத்தே கிடந்தும் இனிப் பிழைத்து எழுவாளோ? அதுதான் அரிதாகலின், நீதான் விரையச்சென்று அவளைக் காத்தருள் வாயாக, பெருமானே!

சொற்பொருள் : கோடு - மலைச்சிகரம். உறழ்தல் - மாறு படல். கொடுங்கண் - வளைந்த இடம். இஞ்சி - புறமதில். ஐயவி - மகப்பேறு பெற்றாள் பூசுவது பேய்ப்பகையாகிய ஐயவி: இங்கே குறிப்பிடப்பெறுவது ஐயவித்துலாம் என்னும் படைக்கருவிகளுள் ஒன்று. 'கோடுபுரந்து எடுத்த' எனக் கொண்டு, மதிலற்ற இடங்களை மலைச்சிகரங்கள் மதில்போற் காத்துப் பேணிக்கொள்ள எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

கணைதுஞ்சல் - கணை ஓய்ந்திருத்தல். புதவு - புதை கதவம். ஏனம் - பன்றியின் ஏறு. மழகளிறு - இளங்களிறு. பொத்தி - மூண்டு வந்திசின் என்னும் வினையோடு சென்று முடிந்தது.

ஆறிய கற்பு - அறக் கற்பு: துயரைச் சகித்துக்கொள்ளலும், சகிக்கவியலாத எல்லைக்கண் உயிரைத் துறத்தலும் இது. அடங்கிய சாயல் - அடக்கமான பெண்மை நலம்; பரத்தையரைப் போலப் பூசி மினுக்காது அளவாக ஒப்பனை கொண்டு ஒழுகும் கற்புடைய மகளிரது தன்மை. ஊடற் காலத்தும் இனிய கூறும் செவ்வியுடையாள் என்றது, எதனாலும் தன் கணவனைப் பழித்துரைக்க மனம் ஒவ்வாத சிறப்புடையாள் என்றற்கு. அவள் பாயலே துணையாயினாள் என்றது, அத்துணைக்குப் பிரிவின் மெலிவால் தளர்ந்தாள் என்றதாம்.

‘புறத்துறையிற் பெறுகின்ற வெற்றியே கருதினை: அகத்துறையிற் பெறுகின்ற இன்பத்தை மறந்தனை; அதனால், நின் தேவியையும் இழந்துவிடப் போகின்றனை' என்கின்றன்ர். தோன்றல் - பெருமையிற் சிறந்தோன்: அண்மை விளி.

நின் மார்பிடத்தே கண் துயிலும் இனிய பாயலின் நினைவினள்; ஆதலின் பிற பாயலிற் படுத்தும் கண் உறங்காத நிலையினள் ஆயினள் என்றதாம். 'புரையோர்' என்னும் பன்மை, காதற் பரத்தையரைக் குறித்தது என்பர்; அவன் தேவியை குறித்தது என்பதே பொருத்தமாகும்.

விளக்கம் : "நாடு கண்டன்ன" என்றது, இடத்தின் அகற்சி நோக்கிக் கூறியதாகும்; நெடுநாட்பட அடைமதிற் பட நேரிட்ட காலத்தும், விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்துள்ள தன்மை. துஞ்சு மரம் - கணையமரம்.

'பால்' என்றது, இல்லுறை காலத்து மார்பைத் தழுவக் கொடுத்தலையும், 'கொளா அல்’ என்றது, பிரிவுக் காலத்து அதனைத் தன்பாற் கொண்டுபோதலும் ஆம்.

17. வலம்படு வியன் பணை!

துரை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வலம்படு வியன்பணை. இதனாற் சொல்லியது: சேரலாதனின் அருளுதற்செவ்வியும் வென்றிமேம்பாடும்.

["போரினைச் செய்து வருத்தமேதும் அடையாதே. பகைவர் தாமே ஒலியைக் கேட்டவளவிலே வெருவியோடு மாறு முழங்குவதாய், அரசனுக்குத் தன் முழக்கத்தாலேயே வெற்றியினை வாய்க்கப்பண்ணும் முரசம்' என்று முரசத்தை நயமுறச் சிறப்பித்துக் கூறியதனால், இப் பாடலுக்கு இது பெயராயிற்று.]

புரைவது நினைப்பிற் புரைவதோ இன்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுனை யாதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்டணை 5

ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉம் தொடித்தோள் இயவர்
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிக் நிழலென
ஞாயிறு புகன்ற தீதுசீர் சிறப்பின் 10

கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப! பாடினி வேந்தே!

அலைகின்ற அலைகளானவை கரையிடத்தே வந்து மோதிச் சின்னஞ்சிறு திவலைகளாக உடைந்து போகும்படியாகப் பெருங்கடலினைக் கலமேறிக் கடந்தும் சென்றனை. அவ் விடத்துப் பகைவரது காவன் மரமாகியிருந்த கடம்பினை அறுத்துக் கொணர்ந்து, அதனால் நினக்குரிய வெற்றி முரசத்தையும் செய்துகொண்டனை. "வெற்றியுண்டாக" என ஒலிக்கின்ற அப் பெரிய முரசுக்குப், பகைவரை வெல்வோரான நின்படை மறவர், களத்தினின்றும் மீண்டும் வந்ததும், அரிய பலியினை ஊட்டிப் போற்றிப் பரைசுவர். அங்ஙணம் வந்து அவர்கள் பரைசுமாறு, முரசின்கண்ணிடத்தே குறுந்தடி கொண்டு அறைந்து முழக்குவோரான, தொடியணிந்த தோள்களையுடைய இயவர்கள் முழக்கியபடியே இருப்பார்கள்.

ஞாயிறு தன் பகையாகிய இருளினைக் கெடுப்பதனை விரும்பியதாகச் செல்லுகின்ற குற்றமற்ற சிறப்பினையும், நீரைக்கொண்ட மேகக்கூட்டங்கள் திரண்டு எழுந்து பரவுகின்ற பரப்பினையும் உடையது வானம். அதனைத் தோய்ந் தாற்போலே உயர்ந்து விளங்குவது நின் வெண்கொற்றக் குடை. அதனைச் சுட்டிக்காட்டி, "தமக்கு அரண் யாதினையும் காணாதே திக்கனைத்தும் தேடியலைகின்றவரான விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்தே வாழ்கின்ற மக்கள் எல்லாரும் இந் நிழலின்கண்ணே வத்தடைவீராக’ எனச் சொல்லுவதுபோல, அம் முரசின் முழக்கமும் ஒலித்தபடியேயிருக்கும்!

பசிய பொற்பூணினை அணிந்த மார்பினை உடையோனே! பாடினிக்கு வரிசை அறிந்து சிறப்புச் செய்யும் வேந்தனே! நின் பகைவர், பெரும் பிழையினையே செய்தனராயினும், அதனை உணர்ந்தாராய் வந்து நின்னைப் பணிந்துநின்று திறை செலுத்தினராயின் அவரையும் பொறுத்து, அவர் தரும் அப் பொருளையும் ஏற்றுக் கொள்ளுகின்றன. ஆதலினாலே, நின்னது அருளுக்கு ஒப்பாவது ஒன்றனை நினைப்போமானால் அதுதான் யாதொன்றும் இல்லை, பெருமானே!

சொற்பொருள் : புரைவது - ஒப்பாவது. பகர - இன்னது தருவோம் எனக் கூறிச் செலுத்த. துளங்கல் - அசைதல். பிசிர் - சிறு திவலை. மாக்கடல் - பெருங்கடல்; கருங்கடலும் ஆம். கடம்பு - கடப்ப மரம்; பகைவரது காவன் மரம். வியன் பணை - பெரிய முரசம். ஆடுநர் - போராடும் மறவர். பலி - பலியிட்டுப் படைப்பன. கடிப்பு - குறுந்தடி. இயவர் - முரசு முழக்குவோர். அரணம் - காவலிடம். மாதிரம் . திசை. துழைஇய - தேடியாராய்ந்த கருவுதல் - திரளுதல். கணம் - கூட்டம். மழை - மேகம். கால் - காற்று. கொட்கும் - நிலவும். நுவலும் - எடுத்துரைக்கும். பசும்பூண் - பசும் பொன்னாலே செய்யப்பெற்ற பூண். பாடினி - பாடும் பாண் மகள்.

விளக்கம் : கடலிடையுள்ள பகைவரை வெற்றிகொண்டான் என்பது தோன்ற, 'மாக்கடல் நீக்கி’ என்றனர். பெரிய தப்புநர் - பெரிதான தப்புச் செய்தவர். அவரை முற்றவும் அழித்தலே செய்தற்கு உரியதாயினும், அவரும் பணிந்து திறை பகர, அவரையும் பொறுத்தருளிய பெருந்தன்மை கொண்டோன் சேரலாதன் என்பதுதோன்றக் 'கொள்ளுநை' என்றனர்.

வலம்படு வியன்பணை - வெற்றியை ஒலிக்கின்ற பெரிய முரசம். 'வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்' எனப் புறப்பாட்டுக் கூறுவதும் காண்க (புறம் 60), போர்க்களத்திலே நாற்றிசையும் சுற்றிச் சுழன்று போரிடுவர் மறவர்; ஆதலின் அவரை 'ஆடுநர்' எனச் சிறப்பித்தனர். அவர் கால் பெயர்த்துவைத்துப் போரிடும் வரிசை முறைமையினை ஆடுதல் எனக் கூறியதும் ஆகும்.

'பொன்புனை உழிஞை சூடி மறியருந்தும் திண் பிணி முரசம்' (பு. வெ. மாலை 98) எனப் பலியிடலைப் பிறர் தெளிவு படக் கூறுதலுங் காண்க.

'அமிழ்து' - மழைநீர். 'பாடினி வேந்தே' என்றது, பாடினியின் பாட்டைக் கேட்டு உவந்து வரிசையளித்துச் சிறப்பித்த வேந்தனே என்றதாம்.

18. கூந்தல் விறலியர்

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : கூந்தல் விறலியர். இதனாற் சொல்லியது: சேரலாதனின் கொடைச் சிறப்பு.

['சமையல் தொழிலுக்கு வருகவென்று, கூத்திற்குத் தம்மை ஒப்பனை செய்தபடியே இருக்கும் ஆடல் விறலியரையும் அழைத்த, சிறந்த விருந்தோம்பும் பண்பு நயத்தாலே இப் பாட்டிற்குக் 'கூந்தல் விறலியர்' என்பது பெயராயிற்று.]

உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலரந் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால்
ஏந்துகோட் டல்குல் முகிழ்நகை மடவரல் 5

கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்ற துதவுமின் தப்பின்று பின்னும்
மன்னுயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
தண்ணியல் எழிலி தலையாது மாறி 10

மாரி பொய்க்குவ தாயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே!

கள்ளினை உண்பீராக. சோற்றினைச் சமைப்பீராக. தின்னப் பெறுவதற்கு உரிய ஊனின் துண்டங்களை அறுப்பீராக. புழுக்குதற்குரிய பருப்புவகைகளை உலையிடத்தே ஏற்றுவீராக. இருண்டதும், கடை சுருண்டதும், தழைத்து முடியவிழ்ந்து ஐவகைப் பகுப்பாக முடிக்கப் பெறுவதுமாகிய கூந்தலைக் கொண்டோரே! ஏந்திய பக்கத்தைக் கொண்ட அல்குல் தடத்தைக் கொண்டோரே! முகிழ்த்த இளநகையினையும் இளமைப் பருவத்தினையும் உடையவராய்க் கூந்தலழகால் மிக்கவராக விளங்கும் விறலியரே! இன்னும் வருவாருக்கும் வரையாது உணவு அளித்தலின் பொருட்டாக, நீவிர் அணிந்திருக்கும் பொற்றொடிகள் ஒலிசெய்ய, நீவிரும் சென்று அடுப்படியிலிருந்தபடி சமைத்தலைச் செய்வீராக!

நம்மை நாடி வருகின்ற புதியவருக்கு உணவளித்தலே அல்லாமல், நாம் சேரலாதனிடமிருந்து பெற்ற செல்வங்களிலும் அவர்க்குச் சிறிது தருவீர்களாக. பின்னும், அது தவறாகாது. மண்ணணுச் செறிந்த இந்த உலகைக் காத்தலை மேற்கொண்ட தண்மையான இயல்பைக்கொண்ட மேகங்கள், தாம் பெய்தலைச் செய்யாவாய் மாறுபடலாம். அதனால் நிலைபெற்ற உயிர்கள் பலவும் அழிவை அடையலாம். பலவாண்டுகளாக, இவ்வாறு மழை பொய்த்தலாலே உலகுயிர்கள் வருத்தமுற்ற போதிலும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பின்னும் பின்னும் நம் விருப்பம் பொய்ப் படுமாறு நமக்கு ஏதேனும் தாராதிருப்பான் அல்லன். மீள மீளச் சென்றாலும் நிரம்பத் தருவான். ஆதலினாலே, பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் உவந்தளித்து அனைவரையும் மகிழ்விப்பீராக!

சொற்பொருள் : கள் - மது. திற்றி - தின்னற்கு உரியவான ஊன் துண்டங்கள். ஒலிவரல் - தழைத்தல். அடுப்பு வழங்குக - அடுப்படித் தொழிலிலே ஈடுபடுக. சேரலாதனிடம் பரிசில் பெற்றுவரும் பர்ணர் தலைவனது களிப்பின் வெளிப்பாடு இது. நாடு வறங்கூர்ந்த காலத்தும் சேரலாதன் நமக்கு உதவிக் காப்பான் என்று உரைக்கும் உறுதிச்சொல் சேரலாதனின் தண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தண்ணியல் - தண்ணிதாம் இயல்புடைய. இரவலனே புரவலனாகிப் பிறரை உபசரிக்கின்ற் செவ்வி இதன்கண் காணற்கு உரியது. இது சேரலாதனின் வண்மைமிகுதியைப் போற்றுவது ஆகும்.

19. வளனறு பைதிரம் !

துறை : பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு: செந்தூக்கு. பெயர்: வளனறு பைதிரம். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் அவன் குலமகளோடு நிகழ்த்தும் இல்வாழ்வின் இன்பச் செவ்வியும்.

[பாசறைக்கண் உள்ளான் தலைவன். அவன்பாற் சென்று, பாணன் தலைவியின் பிரிவுத்துயரத்தைப் போக்கி உதவுமாறு இரக்கின்றான். இத் துறையமைதியினாலே இப் பாட்டு 'பரிசில் துறைப் பாடாண் பாட்டு' ஆயிற்று: 'அவ்வினை மேவலையாகலின்' எனவும், யார் சொல் அளியை' எனவும் சொற்சீர் வந்தமையால், 'சொற்சீர் வண்ண'மும் கூறப்பட்டது. 'வாழ்தல் ஈயா' என்னும் அடையின் சிறப்பால் வளனறு பைதிரம்' என்னும் பெயர் அமைந்தது.]

கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
நல்லுடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழற்கான் மாறா வயவர்
திண்பிணி எஃகம் புலியுறை கழிப்பச்
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5

உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஒச்ச
வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதெரிந்
தவ்வினை மேவலை யாகலின் 10

எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய
நாணுமலி யாக்கை, வாணுதல் அரிவைக்
கியார்கொல் அளியை 15

இனந்தோ டகல வூருடன் எழுந்து
நிலங்கண் வாட காஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து 20

நெல்லின் செறுவின் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க வறைநர்
தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த
இன்றோவன்றோ தொன்றோர் காலை
நல்லம னளிய தாமெனச் சொல்லிக் 25

காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.

பகைப்புலத்தைக் கொள்ளை யிடலாலே கிடைத்த உணவையும், வினைநோக்கி மேற்செல்லலையே விரும்பும் கால்களையும் கொண்டவர் நின் கூளிப் படையினர். அவர்தாம் கற்களைக் கொண்டதான நெடிய மலைப்பகுதிகளைப் பிளந்து, சுரத்திடத்தே படைசெல்வதற்கான வழியினை அமைப்பர். ஒள்ளிய பொறிகளைக் கொண்ட கழல்களைக் கால்களிலே இட்டுச் செல்பவரான, முன்னிட்ட அடியைப் பின்னிடலையே அறியாதவரான நின் போர் மறவர்கள், அவ் வழியாகச் சென்று பகைவரை வெற்றிகொள்ளக் கருதுவர். காம்போடு திண்ணிதாகக் செறிக்கப்பெற்ற வாட்படையைப் புலித்தோல் உறையினின்றும் கழித்துச் செம்மை செய்வர். பகைவரது குருதியாற் சிவப்பெய்தும் போர்க்களத்தை நாடிச் செல்லுகின்ற விருப்பத்தோடு, கூலங்களுள் ஒன்றாக நிரம்பிய நிறமுள்ள செந்தினையைக் குருதியோடும் கலந்து தூவிப் போர்முரசுக்கு இயவர் நாட்பலி இடுவர். அதன் பின்னர், நீராட்டப்பெற்று வந்ததும், வார்க்கட்டு அமைந்ததுமான முரசத்தின் கண்ணிடத்தை மீளவும் ஒழுங்குசெய்வர். அதன் பின் தம் வலக்கையிலே குறுந்தடியை ஏந்தியவரான முரசு முழக்குவோர், தொடியணிந்த தம் தோள்களை ஓச்சியவராக அம் முரசினை அடித்தும் முழக்குவர். அம் முழக்கினைக் கேட்டதும், தம் கைச்சரடுகளைக் களைதலறியாத படைத் தலைவர் முதலியோருடன், அம்புகளை ஆராய்ந்தவாறு, நீயும் அப் போர்ச் செயலையே மேலும் விரும்பியவனாக இருக்கின்றனை!

நீதான் அவ்வாறு போர்வினையையே விரும்பிய உள்ளத் தினன் ஆதலினாலே, பகலில் நின் பிரிவைப் பெரிதும் ஆற்றி யிருந்தும், இரவின்கண் அரிதாகப்பெறுகின்ற துயிலிடத்துக் கனவினுள், தான் நின்னைக் காணப்பெற்றதான அந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சியினால் மட்டுமே உயிரைத் தாங்கியபடி மனைக்கண்ணே தங்கியிருப்பாள் நின் அரசமாதேவி. பெரிதான சால்பினையும், உடல் மெலிவாலே எழுகின்ற ஊரலரால் நாணம் நிரம்பி ஒடுங்கிய உடம்பினையும், ஒளி பொருந்திய நுதலினையும் உடையவள் அவள்! அவள்பால், நீதான், நின் நினைவைச் செலுத்தினா யல்லை! ஆதலின், அவளுக்கு நீதான் யாரோகாண்! நீதான் அளிக்கத்தக்கவனாவாய்!

நின்னைப் பகைத்தோர் நாட்டிலுள்ள மக்கள் அனைவருமே, அவர்தாம் பேணிக்காத்த ஆடும் மாடும் ஆகியவை எல்லாம் தொகுதி தொகுதியாகத் தம்மைக் காப்பாரின்றி நாற்புறமும் பரந்தோடிப் போகத், தாமும் ஊரூராகத் திரண்டெழுந்து, தத்தம் ஊர்களைவிட்டு அகன்று போவாராயினர். உழவுத்தொழிலைக் கைவிட்டவராக, அவரெல்லாம் "தத்தம் உயிர்பிழைக்கும் பொருட்டாசுத் தத்தம் ஊர்களை விட்டு நீங்கியமையால், அவ்வவ்வூர்களிலிருந்த விளைநிலங்கள் எல்லாமே வாட்டமுற்றன. அவருள் எவருமே உயிர்வாழ்ந்திருத்தல் என்கின்ற ஒரு தன்மையை நீயும் அவர்க்குத் தாராமையினாலே, நின்னைப் பகைத்தோரது நாடுகள் எல்லாமே வலிமைகெட்டு அழிந்துபோன தன்மையாயின.

வயல்களைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுள் முன்காலத்தே அழலைப்போலச் செந்நிறத்தோடே விளங்கும் செந்தாமரை மலர்கள், ஆம்பல் மலர்களோடும் சேர்ந்து மலர்ந்திருந்தன. நெல்விளையும் வயல்களிலே நெய்தல்மலர்கள் பூத்திருந்தன. விளைந்த நெற்கதிரை அரிவாரது கொய்யும் வாள் இவற்றாலே தம் வாய் மடங்கிப் போயின. கரும்பு வெட்டுவோர் சாற்றைப் பிழிகின்ற எந்திரத்திலுள்ள சாறுபாயும் பத்தல் சிதைந்து போயிற்று. இந்நிலை இன்றைக்கோ அன்றைக்கோ அன்று: தொன்றுதொட்டே இத்தகைய வளங்களாலே அந்நாடுகள் மிக நல்லவையாகவே இருந்தன. இப்போது நின்னைப் பகைத்தலினாலே அழிவுற்ற அவற்றின் அழிவைக் கண்டோரெல்லாம், தத்தம். வாயாரச் சொல்லிச் சொல்லித் தம் கைகளை மார்புக்கண்ணே அறைந்து இரக்கங்கொள்வர்! பலவகை வளன்களாலும் மாட்சியுற்றிருந்த அவர்தம் வள நாடுகள், இப்போது, கெட்டு அழிந்த தன்மையை உடையவாயின, பெருமானே! இனியேனும், நின்போர்வினையை மேற் கொள்ளுதலை மறந்தாயாய், நின் தேவியுடன் இனிதே கூடி இருப்பாயாக!

சொற்பொருள் முதலியன : கொள்ளை வல்சி - கொள்ளை யிட்டுப் பெறலாலே கிடைக்கும் பொருள்களாற் கொள்ளும் உணவு. கூளியர் - கூளிப்படையினர். இவர் படையணிகட்கு முற்படச்சென்று அவை செல்லுவதற்கேற்ற வழியமைத்துத் தருபவர். 'கவர்காற் கூளியர்' என்றது, அவர் மென்மேற் சென்றுகொண்டே இருப்பவராதலினால். 'கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர், கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்' என இவரைப் பற்றிக் கல்லாடனாரும் (புறம், 23) கூறுவர். கவர்கால் - செலவையே விரும்பின கால்; 'கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம் (சொல் 362). கல்லுடை நெடுநெறி - கற்களையுடைய நெடிய வழி: இது மலைப்பாங்கில் அமைந்த வழி. 'நெடுநெறி போழ்ந்து' என்றது, குறுக்கிட்ட பாறை முதலான தடைகளை உடைத்து வழிசெய்து என்றதாம். 'சுரன் அறுப்ப’ என்றது அமைத்த வழியானது சுரனை ஊடறுத்துச் செல்வதுபோல அமைந்து விளங்க என்றதாம். பொறி - அரும்பு வேலைப்பாடுகள்; கழல் - வீரக்கழல். 'ஒண்பொறிக் கழல்’ என்பது ஒள்ளியவான மறச்செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலும் ஆம். திண்பிணி -திண்ணிதாகப் பிடியோடு பொருத்தப்பெற்றுள்ள தன்மை. புலியுறை - புலித்தோலாற் செய்யப்பெற்ற வாளுறை. செங்களம் - குருதியாற் சிவப்புற்ற களம். எஃகம் - வாள்; 'வேல்' எனின் உறைகழித்தல் என்றது பொருந்தாது. கண்பெயர்த்தல் - கண்ணிலிடும் மருந்தைப் பெயர்த்திடுதல். மண்ணுறல் - நீராட்டப் பெறுதல். வம்பு - கைச்சரடு. சுற்றம் - படைத்தலைவர் முதலாயினோர். அவ்வினை - அழகிய தான போர்வினை.

எல் - பகற்பொழுது. 'நனி இகந்து' என்றது, பெரிதும் துயரை மறந்து ஆற்றியிருந்து என்றதாம். எல்லி - இரவுப் பொழுது. 'சிறு மகிழ்' என்றது, அவனோடு கொண்ட உறவு கனவாக மட்டுமே அமைதலால்; அதுதான் உயிர்தரித்திருக்க உதவுவதாயிற்று! அதுவுமின்றெனில் அவள் என்றோ மாய்ந் திருப்பாள் என்றதாம். ஒடுங்கிய நாணுமலி யாக்கை' என்றது, பிறர் தன் கணவனைப் பழிக்க, அது கேட்கப் பொறாதும், அதனைத் தடுக்கவியலாதும் தன் நிலைக்கு நாணிய வளாக ஒடுங்கியிருக்கும் உடல்நிலை. 'வாணுதல்’ என்றது அவளுடைய பழைய அழகினை; இதுபோது அதுதான் பசலையால் உண்ணப்பட்டுப் பொலிவழிந்திருக்கின்றது என்பதாம். அவளை இன்புறுத்தி உயிரைக் காவாது நீதான் இவ்வாறு பாசறையே இருப்பிடமாக வாழ்வதுதான் அரசமுறையோ என்பார், 'யார் கொல் அளியை?’ என்றனர்.

இனம் - ஆனினம்; அவை "தோடு அகல" என்றது, காப்பாரற்றமையால் தொகுதிதொகுதியாகத் தாமே ஊரை விட்டு அகன்றவாய் நாற்புறமும் பரந்துசெல்ல என்றதாம். ஊருடன் - ஊரவர் அனைவரும்; இஃது போர்மறவரல்லாத பிறரும் மேல்வரும் சேரலாதனின் படைவரவுக்கு அஞ்சியவராகத் தம் ஊரைவிட்டு அகன்றதான அச்சத்தன்மை கூறியதாம். நிலம் கண் வாட - விளைநிலங்கள் தம்மைப் பேணும் உழவரற்றமையாற் காய்ந்துபோக. நாஞ்சில் - கலப்பை. பைதிரம் காடுகள். பழனம் - வயலும், வயலடுத்த நீர்நிலையும். அரிநர் - கதிரரிவோர். கொய்வாள் - கதிரரி வாள்; இது வளைவானது. அறைநர் - கரும்பு வெட்டுவார். பத்தல் - எந்திரத்திலிருந்து சாலுக்குக் கருப்பஞ் சாற்றைக் கொண்டு செல்லும் தூம்புடைய தோற்கருவி. தொன்றோர் காலை தொன்றுதொட்டே. நல்ல - நல்வளம் உடையவா யிருந்தன. 'கைபுடைத்து இரங்கலாவது' அழிபாட்டின் கொடுமையைக்கண்டு மனம்தாளாமல் கையால் மார்பில் அடித்தவாறு வருந்துதல். 'மாண்டன பல' முன்பு: ஆயின் இனி, அவையெல்லாம் 'மாணா மாட்சிய' ஆயின வென்று முடிக்க.

நின்னைப் பகைத்தோர் அரசர்; எனினும், நீதான் அவர் நாட்டையே முற்றவும் அழித்து, மக்களை அலைக்கழியவிடுதல் பொருந்துமோ என்பார்போலச் சேரலாதனைப் பகைத்தவர் நாட்டின் பேரழிவைக் கூறுவதன் மூலம், அவன் போர் மறத்தை உணர்த்துகின்றார். 'இதனைச் செய்யும் நீதான் நின் தேவியின் அழிவை நினைப்பாயோ?' என்று வருந்தி உரைப்பதுமாகலாம்.

'மாணா மாட்சியாகிய' என்றது, மேலும் அவர்தாம் தம் நாட்டை வளப்படுத்தும் வன்மையைப் பெறாதவாறு, நீதான் வலியவரான ஆடவரை முற்றவும் அழித்ததனாலும், எவரையும் சென்று தொழில் செய்வதற்கு இசைவளிக்காத தனாலும், அவை வளனறு பைதிரமாகவே இனி என்றும் விளங்கும் போலும் என்பதாம்.

இதனுற் சேரலாதனின் பாசறை இருக்கையும், பகை யொழிக்கும் மறமாண்பும் உரைத்து, தேவியின் நலிவையும் சொல்லி, இப் போர்மறச்செயலை நிறுத்திவிட்டுத் தேவியைக் காத்தருளச் செல்லுமாறும் குறிப்பாக உரைக்கின்றனர்.

20. அட்டுமலர் மார்பன் !

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : அட்டுமலர் மார்பன். இதனாற் சொல்லியது : சேரலாதனின் போர் மறமும் கொடை மறமும்.

[சேரலாதனின் இயல்புகளைக் கூறி வாழ்த்தியமையால் இது 'இயன்மொழி வாழ்த்து' ஆயிற்று. "இரு முந்நீர்", 'முரணியோர்', 'கடிமிளை', 'நெடுமதில்' எனவெழுந்த வஞ்சி யடிகளான் வஞ்சித் தூக்கும் ஆயிற்று. செருக்கினாற் கொண்ட மகிழ்வினை, 'அடாஅ அடுபுகை அட்டுமலர் மார்பன்' என்று நயம்படக் கூறிய சிறப்பால், இப் பாட்டுக்கு இது பெயராயிற்று. சேரலாதனிடம் பரிசில் பெற்றுச் செல்வானாகிய பாணன் ஒருவன், இடைவழியிலே எதிர்ப்பட்டான் ஒரு பாணனுக்குச் சேரலாதனின் கொடைத் திறத்தை எடுத்துச்சொல்லி, அவனிடம் செல்லுமாறு வழிப் படுத்துவதாக அமைந்த பாட்டு இது.]

நுங்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன்; வாழ்கவவன் கண்ணி! 5

வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
கனவினும் ஒன்னார்தேய வோங்கி நடந்து 10

படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவர் ஏத்த வோங்குபுகழ் நிறீஇ
விரியுளை மாவுங் களிறுந் தேரும் 15

வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்புடை யாரெயில் உள்ளழித் துண்ட
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் 20

எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கடல் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித்
தண்ணியல் எழிலி தலையா தாயினும் 25

வயிறுபசி கூர வீயலன்
வயிறுமா சிலீயரவ னீன்ற தாயே!

"நும் கோமான்றான் யாரோ?” என்று என்னைக் கேட்பாயாயின், எம் கோமான், பெருங்கடல் நடுவேயிருக்கும் தீவிடத்திலிருந்தபடியே, தன்னைப் பகைத்தோரை,அவரிருந்த அவ்விடத்திற்கே சென்று வெற்றிகொண்டு, அவர் தம் காவன் மரமாகிய கடம்பினையும் அடியோடு வெட்டியழித்த கடுஞ்சினத்தையும் வலிமையையும் உடையவனாகிய நெடுஞ் சேரலாதன் ஆவான். அவன் தலையிற் சூடியிருக்கும் தலைமாலை என்றும் வாழ்வதாக! *

தனக்கு மாறுபட்டார். அவர்தம் நாட்டிடத்தே தனக்கு மாறுபாடாகச் செய்யும் பகைச்செயல்களுள், வெயிலிடத்துக் காணப்பெறும் சிறு துகளினளவுக்குச் சிறிய செயல்களையுங்கூட, அவை அவர்கட்குப் பயன்படுமாறு விட்டுவைத்தலை அறியாதவன் அவன்! தன் கண்ணெதிரே தனக்கு அன்பரைப் போல. உவப்புக் காட்டித், தம் நெஞ்சகத்தே மலர்ந்த உவப்போடு அன்பு செய்தறியாத உட்பகை கொண்டாரது நாட்டிடத்தும், கனவிற்கூடத் தன் பகை முடித்தலாகிய செயலினைச் செய்து முடித்தலன்றி, அதனைப் பொய்த்தல் என்பதனையே அறியாதவன் அவன்!

தன்னைப் பகைத்தோர் அழிவெய்துமாறு, வெற்றிப் பெருமிதத்துடன் அவர் நாட்டினுள் தன் படையைத் தானே முன்னின்று நடத்திச் சென்று அப் பகைவரை அழித்தான். வடித்தமைத்த மணிகள் ஒலிமுழங்கும் மதயானைத் திரளாகிய, பகைவரது யானைப்படைகள் எல்லாம் சேரலாதனுக்கு எதிர்நிற்க இயலாவாய் அலறிக்கொண்டே சிதறியோடின. அகன்ற பெரிய நிலப்பரப்பினையுடைய பகைவேந்தரது பெருநாடுகளை எல்லாம் வென்று அவனே கைக் கொண்டான். புலவர்கள் அவன் வெற்றிச் செவ்வியைப் போற்றிப் பாடத் தன் ஓங்கிய புகழையும் அவன் நிலைபெறச் செய்தான்.

வயிரியர் கண்ணுளர் என்னும் இருதிறக் கூத்தர்க்கும், விரிந்த தலையாட்டமணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும், தனக்கென அவற்றை வைத்துக்கொள்ளானாய் வழங்கினான். காவற்காடும், ஆழ்ந்த கிடங்கும், நெடிய மதிலும், நிலைபெற்ற ஞாயிலும், அம்புக்கட்டு உடைமை யாலே எளிதிற் கடத்தற்கரிய இடைமதிலும் கொண்டு அமைந்த பகையரசரின் அரண்களைக் கடந்து உட்புகுந்து, அவற்றை எல்லாம் அழித்தான். அவ்விடங்களை எரியிட்டும் கொளுத்தினான். அதன்பின்னரே தான் உணவு கொள்ளலையும் செய்தான். சோறு சமைத்தலால் அல்லாமல், ஊரைச் சுடுதலாலே எழுந்த புகையானது படிந்த, பகைவரை அழித்த வெற்றிச் செருக்கினாலே விரிந்து மலர்ந்த மார்பினை உடைய வனாகவும் அவ்விடங்களிலே அவன் திகழ்ந்தான்!

என்னைச் சார்ந்தவர்களுக்கும், என்னைப்போலவே அவனை நாடியவராக வந்திருந்த பிற பாணர்களுக்கும், மற்றும் அவனை நாடியவராக வந்திருந்த பிறபிற கலைஞர் யாவர்க்கும், அவர்தாம் எத்தன்மையராயினும், அப்பரிசில் மாக்கள். தாம் பரிசில் பெறக் கருதிய கலைதுறையிலே வல்லமை அற்றவராயினும், அவற்றையெல்லாம் ஆராயானாய்த், தன்பால் வந்து இரந்தோர்க்கெல்லாம் வாரிவாரிக் கொடுத் தலையே தனக்குரிய கடமையாக விரும்பியவன், செம்மை நிறம்பாத நெஞ்சினனான சேரலாதன் ஆவான்!

நிலைபெற்ற உயிரினம் அனைத்துமே அழிந்து போமாறு பலவான ஆண்டுகளாகக் குளிப்பைத் தருதலையடைய மேகங்கள் மழையினைப் பெய்யாவாய் மாறுபட்டுப் போயினும், தான், தன்னை வந்திரந்த வறியவர்க்கு, அவர்தம் வயிற்றிடத்தே எழுகின்ற பசித்தீயானது மிக்கெழுமாறு குறைவாகக் கொடுத்தல் என்பதனையும் அறியாதவன் அவன்!

இத் தன்மையனாகிய சேரலாதனைப் பெற்றெடுத்த அவன் தாயாகிய வேண்மாள் நல்லினி தேவியார், தன் வயிறு என்றும் குற்றமில்லாதவளாக, என்றும் நிலைபெற்றுப் புகழுடன் விளங்குவாளாக!

சொற்பொருளும் விளக்கமும் : 'வினவின்' என்றது, வினவியவனின் கூற்றை எடுத்து மொழிந்ததாம். இருமுந்நீர் - பெருங்கடல். துருத்தி - தீவு. தலைச்சென்று - மேற்சென்று செயலை முடித்து. தடிதல் - வெட்டுதல். முன்பு - வலிமை. கண்ணி - தலைமாலை; அதனை வாழ்த்தியது, அது வெற்றி பெற்ற பின்னர்ச் சூட்டிய அடையாள மாலை என்பதனால்.

மாறிய வினை - மாறுபட்ட செயல்; பகைவினை. வாய்ப்பு - மெய்யாகப் பயன்படல். தன்னை நேராகப் பகைத் தோரையும், நேரில் அன்புகாட்டி உள்ளத்தே பகைகொண்டு மறைவாகப் பகைச்செயல்களில் ஈடுபட்டோரையும் ஒருங்கே அழித்தலில் தவறாதவன் சேரலாதன் என்பதாம். இதனாற் சேரலாதனிடம் திறன்மிக்க ஒற்றர்படையினரும் இருந்தனராதல் விளங்கும்.

'ஒன்னார் தேய ஓங்கி நடந்து' என்றது, வெற்றியின் உறுதியோடே படைநடத்திச் சென்ற அவனுடைய செம் மாந்த நடையழகை வியந்ததாம். அந் நடையைக் காணும் பகைவர் தம் மனவலிகெடத் தாமே எதிர்நிற்க அஞ்சியவராக அழிந்துபடுவர் என்பதுமாம். 'ஏறுபோற் பீடுநடை' என்றதும் இது. படியோர் - பகையரசர்; பிரதியோர் என்னும் வட சொல் திரிபு. வடிமணி - வடித்துச் செய்த மணி; வடித்தல் - வார்த்தல். 'வியலரும் பரப்பின் மாநிலம் கடந்து' என்றது, அரணிடங்களையன்றிப் பிற நாட்டுப் பகுதிகளையும் கைக் கொண்டு என்றதாம். 'விரியுளை மாவும், களிறும், தேரும் ஒம்பாது வீசி' என்றது, பகைவரிடமிருந்து கைப்பற்றிய அவற்றைத் தன் படைக்குப் பயன்படுமெனப் பேணுதலின்றி, இரவலர்க்குத் தானங்கொடுத்து என்றதாம். 'வீசி' என்றது, அவற்றை மதித்துக் கொள்ளாது தாராளமாகக் கொடுத்ததைக் குறிப்பதாம். அவற்றைப் பொருட்டாக்காத வளவுக்குச் சேரலாதனிடம் அவை மிகுதியாக முன்பே இருந்தன வென்பதாம். 'புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ' என்றது, பொய்யா நாவிற் புலவர் போற்றிப் பாடப்பாட ஓங்கும் புகழை, அது என்றும் சிதையாவாறு தன் செயலால் நிலைபெறுத்தி என்றதாம்.

'வயிரியர் கண்ணுளர் என்பார் இருவகைப்பட்ட கூத்து இயற்றுவோர் ஆவர். இவர் அவனைக் களத்திடத்தே கண்டு இன்புறுத்த மகிழ்ந்த சேரலாதனும், அவ்விடத்தே கிடைத்த குதிரையும், யானையும், தேருமாகியவற்றை அவர்க்கு வழங்கினான் என்க. "கடிமிளை" முதலியன செப்பமாகப் பொருந்தியிருந்தும் அவ்வரண்கள் அவரைத் காத்தில என்னும் குறிப்புத் தோன்ற, அவற்றை எளிதிற் கடந்த சேரலாதனின் செயலை உரைத்தனர்.

'உள் அழித்து உண்ட' என்றது, அதுகாறும் உண்டிலன் என, அவனது கடுஞ்சினத்தின் தன்மையைப் புலப்படுத்தியதாம். 'அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்' என்றது, அதனைத் தானே முன்னின்று நிகழ்த்தி, அந்த அழிவினைக் கண்டு பூரித்து மகிழ்ந்த நிலையை உரைத்ததாம்.

'எமர்' என்றது, தன்னையும் தன்னைச் சாந்தோரையும். 'பிறர்' என்றது. பிற பாணர் கூட்டத்தினரை. 'யாவரையும் என்றதும் மற்றும் வந்து பரிசில் வேட்டு நின்ற பிறதுறைக் கலைஞரை. வல்லாராயினும் - வன்மை அல்லாதாராயினும். 'வயிறு பசிகூர ஈயலன்' என்றது, என்றும் வயிறு பசிகூராத படி, பேரளவு செல்வத்தை நல்குவான் என்றற்காம். 'ஏனோர் பசிபோக்கும் அவனைப் பெற்ற தாயின் வயிறு என்றும் குற்றமிலது ஆகுக என்று வாழ்த்துகின்றனர். சான்றோனைப் பெற்ற தாயின் வயிற்றை வாழ்த்தல் பழைய மரபு. ஈன்ற வயிறே இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' எனத் தாயர் கூறும் மரபு காண்க- (புறம் 84).

பிள்ளைகள் பலவற்றைப் பெறினும், அவற்றால் எல்லாம் சிறப்பு அடையாது, சான்றோன் ஒருவனைப் பெற்றபோதே சிறப்பு அடையும் தாய்வயிறு என்பது கருத்தாகும். 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்னும் குறளையும் நினைவு கொள்க. சான்றோன் - களத்தே வீழ்ந்த மறவன்; நாட்டு நலங்கருதித் தன்னுயிர் தருதலின் சான்றாண்மை உடைமை உணரப்படும்.

புலவர்கள் பாட்டுடைத் தலைவனையும், அவன் மனைவியையும் வாழ்த்தல் இயல்பு. ஆயின், இங்கே அவனைப் பெற்ற தாயின் வயிற்றையும் மனம் உவந்து வாழ்த்துகின்றனர்! அந்தத் தாயின் வயிறும் இத்தகைய சான்றாளனைப் பெற்றதனாலே புகழ்பெற்றது என்பது கருத்து.

வீரச் செறிவினேர் பலரது வரலாறுகளை நாம் நோக்கினால், அவரைப் பெற்ற தாயரது சிறப்பே அவரை அவ்வாறு உருவாக்கியது என்று அறியலாம். சின்னஞ்சிறு வயதிலே அவர் அவர்களது ஒழுக்கத்தை உருவாக்கும் திறனும், உள்ளத்தே பெய்கின்ற மறமாண்புமே நிலைபெற்று வளர்ந்து செழித்து அவர்களே உயர்த்துகின்றன.

இதுபற்றியே பதிற்றுப்பத்துப் பதிகங்கள் எல்லாம் தந்தையின் பெயரையும் தாயின் பெயரையும் குறிப்பிடு கின்றன. இது மிக நல்ல மரபு: பிற்காலத்தே நழுவவிட்ட மரபு.

பழந்தமிழ்ப் பெண்களின் மறமாண்புச் செய்திகளைப் புறப்பாடல்கள் பலவும் உணர்த்தும்.