பதிற்றுப்பத்து/நான்காம் பத்து
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
நான்காம் பத்து
பதிகம்
ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்; முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் நிரீஇ வளர்த்து
ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பின்
5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்து அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்
10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேறலைக்
காப்பியாற்றுக் காப்பியனார்
பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்,
(1) | கமழ்குரற்றுழாய், | (2) | கழையமல் கழனி, |
(3) | வரம்பில் வெள்ளம், | (4) | ஒண்பொறிக்கழற்கால், |
(5) | மெய்யாடு பறந்தலை, | (6) | வாள்மயங்கு கடுந்தார், |
(7) | வலம்படு வென்றி, | (8) | பரிசிலர் வெறுக்கை, |
(9) | ஏவல் வியன்பணை, | (10) | நாடுகாண் அவிர்சுடர் |
பாடிப்பெற்ற பரிசில் : நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத், தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
அளவற்ற புகழ்ச் செல்வத்தைக் கொண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்கு வேளாவிக் கோமான் பதுமனின் மகளான ‘பதுமன் தேவி’ பெற்றுத் தந்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். அவன்—
போர்முனையிடத்தே பகைத்து வந்தாரான வேற்றரசர் படைகள் எல்லாம், தன் தோற்றத்தாலேயே அஞ்சி நடு நடுங்குமாறு வீரப்பொலிவுடன் பிறந்தவன். தன் போராண்மையாலும், நாடுகாவல் திறனாலும் தன் குடியின் பலவான புகழையும் வளர்த்தவனாக விளங்கியவன். முறைமையினலே உண்டானதாகிய பூழிநாட்டைப் படையெடுத்துச் சென்று வென்று தன் நாட்டோடுஞ் சேர்த்துக் கொண்டவன். உருட்சியான பூக்களையுடைய கடம்பினைக் கொண்ட கடம்பின் பெருவாயில் என்னுமிடத்திலே இருந்தோனாகிய நன்னனை, அவனுடைய நிலையான போர் ஆற்றலையே முற்றவும் அறுத்து வெற்றி கொண்டவன். பொன்னைப்போல விளங்கும் பூக்களைக் கொண்ட அவனது காவன்மரமான வாகைமரத்தை வேரொடும் வெட்டியழித்தவன். போர்க் களங்களிலே பாய்ந்தோடிய குருதியாகிய சிவந்த வெள்ளம் யானைகளையும் இழுத்துச் செல்லுமாறு, பல பெரும் போர்களையும் செய்து பகைவரை அழித்து வெற்றி கொண்டவன். குருதியாற் சிவந்த அக் களங்களிலே கள வேள்விகளைச் செய்தும் புகழடைந்தவன். தளர்ந்த குடிகளைத் திருத்தி வாழச் செய்தவனும், வெற்றியே அடைபவனும் ஆகிய வெற்றியாளன் அவன். அத் தகையானாகிய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனர் பத்துப் பாட்டுக்களால் போற்றிப் பாடினர்.சொற்பொருள் முதலியன : சேரலாதன் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ‘முனை பனிப்பப் பிறந்து’ என்றது. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றபடி தோற்றப் பொலிவோடு பிறந்ததாம். பனித்தல் - நடு நடுங்கல். ஊழ் - முறைமை. ஆராத்திரு - நுகரநுகர விருப்பந்தீராத இனிய செல்வம். இவனது நன்னனை அழித்த வெற்றியை ‘இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொன்பூண் நன்னன் பொருது களத்தொழிய, வலம்படு கொற்றந்தந்த வாய்வாள், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ எனக் கல்லாடனாரும் குறிப்பர் (அகம் 199).
31. கமழ்குரல் துழாஅய் !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : கமழ்குரல் துழாய். இதனுற் சொல்லியது: சேரமானின் மாட்சிமை யெல்லாம் உடன் எடுத்துப் புகழ்ந்தவாறு.
[பெயர் விளக்கம் : துழாயின் தழைக்கொத்துக்களாலே கட்டிய மாலையினை அணிபவன் திருமால். துழாயின் தழைக்கும் நறுமணம் உண்டு. இதனைக் ‘கமழ்குரல் துழாய் அலங்கற் செல்வன்’ என்று சொல்லிய சொல்லாட்சி நயத்தாலே இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. ‘நக்கலர் துழாய் நாறுஇணர்க் கண்ணியை’ எனப் பரிபாடலும் இதனைக் கூறும் (பாடல் 4.). பிற பூக்களாலே நறுமணத்தை உடையன; துழாயோ தன் தழையையே நறுமணமாகக் கொண்டது என்னும் சிறப்புத் தகைமையையும் அறிந்து போற்றல் வேண்டும். கபத்தை அறுக்கும் தன்மையுடைய இதனை அலைகடல் துயில்வோனான மாயோனுக்கு உவப்புடைய தாக்கியதும் சிறப்பாகும். இதனைப் பற்றிய கதையினைத் திருமாலைப் பற்றிய பழங்கதைகள் சுவைபடக் கூறுவதும் கண்டு மகிழ்க.]
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத்
தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய்
அலங்கம் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர
10
மணிநிற மையிருள் அகல நிலாவிரிபு
கோடுகூடு மதியம் இயலுற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் இறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய
15
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய
பனிவார் விண்டு விறல்வரை யற்றே;
கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந் தன்ன பரேரெறுழ் முழவுத்தோள்
20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே! வண்டுபட
ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின்
குழைக்குவிளக் காகிய ஒண்ணுதல் பொன்னின்
25
இழைக்குவிளக் காகிய அவ்வாங்கு உந்தி
விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி!
நிலனதிர்பு இரங்கல வாகி வலனேர்பு
வியன்பணை முழங்கும் வேன்மூசு அழுவத்து
30
அடங்கிய புடையல் பொலங்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்!
நகைவர்க்கு அரண மாகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை!
35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
நீலமணியைப் போன்ற நிறத்தைக் கொண்ட காரிருளானது அகலும்படியாகத், தன் நிலவுக் கதிர்களைப் பரப்பிய வண்ணம், தன் இருமுனைகளும் ஒன்றுகூடி விளங்கும் முழுமதியானது வானகத்தே தவழ்ந்து, செல்லலுற்றாற்போல் வறுமையால் வாடிய குடிமக்களின் சிறந்த ஒழுக்கத்தினைத் திருத்தமுறச் செய்தவனாக, முரசத்து முழக்கினைக்கொண்டு, நின் ஆண்மைக்குரிய கடமையைச் சீருறச் செய்து முடித்தனை! பூண்கள் விளங்கும் நின் அகன்ற மார்பகமானது, தொகுதிகொண்ட மேகங்கள் குளிர்ந்த மழையினை பெய்யத் தலைப்பட்டதும், வடக்குத் தெற்காகக் குறுக்கிட்டுக் கிடப்பதும், மேகங்களைத் தடுக்கும் உச்சியையுடையதும், அழகினை யுடையதுமான, பனி நிறைந்த திருமாலின் சிறந்த மலையான வேங்கடமலையைப் போன்றதாகும், பெருமானே!
கடவுளரின் தாக்குதலுக்கு அஞ்சிய அசுரர்கள் வானத்திடத்தே அமைத்த, தொங்கும் கோட்டைகளின் கதவங்கட்குக் காவலாகக் கொண்ட கணைய மரங்களைப் போல, நேராக நிமிர்ந்து விளங்கும் பருத்த அழகிய வலிமிக்க முழவைப்போன்று விளங்கும் தோள்களை உடையவனும், வெண்மையான அலைகள் விளங்கும் கடலாலே சூழப்பெற்ற இவ்வுலகத்துத் தன் வளவிய புகழை நிலைபெறச் செய்தவனும், வகைமையாற் சிறந்த செல்வத்தை உடைவனுமான 'வண்டன்' என்பானை நீயும் ஒத்தவனா யிருக்கின்றனை! வண்டினம் மொய்க்குமாறு நறுமணத்தைக் கொண்டதும், தழைத்து நீண்டதுமான கூந்தலையும், அறம் நிரம்பிய கற்பினையும், காதுகளின் குழைகட்கு விளக்கம் தருவதாக விளங்கும் ஒளியுடைய நெற்றியையும், பொன்னின் அணிகலனுக்கு விளக்கந் தருவதாகிய அழகிய வளைந்த கொப்பூழினையும் கொண்டவள், வானகத்தே உலவும் கற்புடைய மகளிர் எழுவருள்ளும் சிறந்தவளான செம்மீனாகிய அருந்தியைப் போன்றவள், நின்னுடைய தொன்மைவாய்ந்த அரண்மனைக்குச் செல்வியாக விளங்கும் நின் தேவியாவாள்.
நின் போர்முரசு நிலத்து மக்கள் அதிர்ச்சிகொள்ளுமாறு என்றும் ஒலித்தலைச் செய்யாது. வெற்றிக் களத்தேயே எழுச்சி பெற்று அகன்ற நின் முரசம் வெற்றியை மேற்கொண்டு முழங்குவதாகும். வேற்படைகள் தம்முள் நெருங்கிய போர்க்களத்தே, ஒடுங்கிய பனம்பூ மாலையினையும், பொற்கழலினையும், வலிய கால்களையும் உடையவரான நின் படைமறவர், அடங்காத பகைவரது ஊக்கம் எல்லாம் அறவே அழியுமாறு, அவர்களைக் களத்தினின்றும் தோற்று ஓடச் செய்வர். அவ்வாறு அவர்கள் புறங்கொடுத்து ஓடும்பொழுது, அவர்களின் முதுகின்புறத்தே, தம் கைவேலை நின் மறவர் படைத்தலைவர்கள் ஒருபோதுமே எறிந்து அறிய மாட்டார்கள்!
நின்பால் அன்பு உடையவர்களுக்குத் தாம் காவலரணைப் போல அமைந்து அவரைக் காத்தும், நின் பகைவருக்குச் சூர்த்தெய்வத்தைப்போல அச்சந்தரக் கடுமைகாட்டியும் விளங்குவது, நின் தானை! இவ்வாறாகப் போர்த்தொழிலிலேயும் ஆட்சி நலத்திலேயும் மேம்பட்டு விளங்குவோனாகிய தலைவனே! நீதான் பலவகையினும் மாட்சிமைப்பட்டாய். நீ வாழ்க!
சொற்பொருளும் விளக்கமும்: தலைமணத்தல் - பொருந்தியிருத்தல். தலை - இடம். மணத்தல் - கூடியிருத்தல். குழூஉ திரண்டுள்ள. மண்கெழு ஞாலம் - மண்ணணுச் செறிந்த உலகம். ஓராங்கு - ஒரு சேர. மாதிரம்-திசை. நால்வேறு நனந்தலை - நால் வேறாகப் பரந்துபட்ட அகன்ற இடம். தெள் - தெளிவு; ஒலியிற் குற்றமற்ற தன்மை. உயர்வு - சிறப்பு. வடித்தல் - வார்த்தல். எறியுநர் - அடிப்போர். கல்லென - கல்லென்னும் ஒலியெழ மணியை முழக்க. உண்ணா - உண்ணாத. பைஞ்ஞிலம் - பசிய இடம்; இடத்துள்ள மாந்தர்; இவர் நோன்பு ஏற்றோர். ஞெமர்தல் - அமர்தல். திகிரி - சக்கரம். கண்பொரல் - ஒளி மிகுதியாற் காண்பார் கண்களைக் கூசச்செய்தல். குரல் - கொத்து; இது கொத்தான தழையுமாம்; துளசி மாலை கட்டுவோர் இன்றும் தழையைக் கொத்தாக வைத்தே கட்டுதலைக் காணலாம்; பூங்கொத்துமாம். அலங்கல் - பெரிய மாலை; அசைந்தாடும் மாலை. செல்வன் - திருமால்; செல்வியின் கணவன். துஞ்சுபதி - வாழும் ஊர்.
மணி - நீலமணி. மணிநிறம் - கருநீலநிறம். மையிருள் -காரிருள். நிலாவிரிபு - நிலாக் கதிர்கள் பரவி. கோடு-முனை. கூடுதல் - ஒன்று சேரல்; மூன்றாம் பிறைக் காலத்தே இரு முனை கொண்ட பிறையாக விளங்கிய தன்மைகெட்டு முழு மதியமான நிலைமை. இயலுறல் - தவழ்ந்து செல்லல். துளங்குதல் - அலைதல்; வறுமையால் வாடியலைந்த நிலை. விழுத்திணை - சிறந்த ஒழுக்கம். திருத்தி - திருத்தமுற அமைத்து; அவர் நிலை உயர்வதற்கு வேண்டியன உதவி. முரசு கொண்டு - முரசத்தின் முழக்கினை மேற்கொண்டு; பகைவர் முரசங்களைக் கைக்கொண்டு எனலும் பொருந்தும். கிளர்தல் ஒளி செய்தல். பூண் - பூணப்படும் பேரணி. வியன் மார்பு - அகன்ற மார்பு. கருவி - தொகுதி. வடதெற்கு விலகி - தென் வடலாகக் குறுக்கே அமைந்து. விலகு தலைத்து - மேகங்களைத் தடுக்கும் தலைப்பக்கத்தை உடையது. எழிலிய - அழகிய; மேகங்களைக் கொண்ட எனலும் ஆம். விண்டு வரை - விட்டுணுவுக்குரிய மலை; இது வேங்கடமலையினை; அன்றித் திருமால் குடிகொண்டிருக்கும் நம்பிமலை யெனினும் பொருந்தும். 'ஆண்கடன் இறுத்தல்' என்றது, போரில் உதவிய தன் மறவர்க்கு வரிசையும் பரிசும் அளித்து என்றதாம்.
கடவுள் - கடவுளர்: தேவர்: அனைத்தும் கடந்தவர். இழைத்த - அமைத்த: கட்டிய. தூங்கல் - தொங்கல். கதவம் - கதவு. எழூஉ - கணைய மரம். நிவத்தல் - நேரிதாக உயர்தல். பரேர் எறுழ் - பருத்த அழகிய வலிமை கொண்ட முந்நீர் - கடல். வண்புகழ் - வளவிய புகழ்; வண்மையான புகழும் ஆம். வகை சால் செல்வம் - எல்லா வகையானும் நிறைந்த சிறப்பமைந்த செல்வம். வண்டன் - ஒரு சிறந்த மாவீரன்.
ஒலித்த - தழைத்த; செழுமையான. அறஞ்சால் கற்பு அறநெறி நிரம்பிய கற்பு: அறநெறியாவது, இல்லற வொழுக்கம். குழை - காதணி. அவ்வாங்கு - அழகிய வளைந்த. உந்தி – கொப்பூழ். விசும்பு வழங்கு மகளிர் - சப்த கன்னியர் எழுவர்; செம்மீன் - சிவந்த விண்மீன். தொன்னகர்- பழைமைச் சிறப்பு வாய்ந்த அரண்மனை. செல்வி - செல்வமாக விளங்குபவள்; கோப்பெருந்தேவி. 'தொன்னகர்ச் செல்வி' என்றதனால், இவள் வஞ்சி நகரத்தாள் என்றும் கருதலாம்.
நிலன் - நிலத்து மக்கள்: இவர் நார்முடிச் சேரலின் நாட்டவர்; 'அவர் அதிர்பு இரங்கல' என்றது, அவரை வருத்திக் கொடியனெம் இறையெனும் பெயரை என்றும் பெற்றிலன் என்பதாம். வலன் - வெற்றி. ஏர்பு - எழுந்து. வியன்பணை - அகன்ற முழவு. வேல் - வேற்படைஞர். மூசுதல் - நெருங்குதல். புடையல் - மாலை. பொலம்- பொன். நோன்மை - வலிமை. ஒடுங்காத் தெவ்வர் - அடங்காது எதிர்த்து நின்ற பகை மறவர். ஊக்கற - ஊக்கம் அற்றுப் போக. கடைஇ - செலுத்தி; ஓட்டி. புறக்கொடை எறியார்- புறத்தே படுமாறு வேலினை எறியமாட்டார். மறப்படை கொள்ளுநர் - மறவர் படையின் தலைமை கொண்டவர்.
நகைவர் -நண்பர். அரணம் - காவல். சூர் - சூர்த் தெய்வம். குருசில் - தலைவனே. பலவே மாண்டனை - பலவானும் மாட்சிமைப்பட்டனை; மாட்சியாவது போர்க் களத்தும் ஆட்சியிடத்தும் பெற்ற தகைமை சிறந்த புகழ்.
அவன் போர் மறவரின் மறமாண்பை வியந்து கூறிப் பாராட்டியும், அவன் தேவியின் கற்பு மேம்பாட்டைப் போற்றிக் கூறியும், அவன் காவற்சிறப்பைப் புகழ்ந்தும் அவனது செவ்வியைப் போற்றுகின்றார். அவனையும் வாழ்த்துகின்றார்.
32. கழையமல் கழனி !
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம்: தூக்கு: செந்தூக்கு. பெயர்: கழையமல் கழனி. இதனாற் சொல்லியது:சேரலின் பலவான குணநலன் களையும் உடனெண்ணிப் புகழ்ந்து, அவற்றுள் அவனது பொறையுடைமையைச் சிறப்பாகப் புகழ்ந்தது.
[பெயர் விளக்கம்: வளமையைக் குறிப்பார். வயல்களிலேயுள்ள நெற்றாள்கள், தம் பருமையாலும் உயர்ந்து வளர்ந்துள்ள தம் நெடுமையாலும் மூங்கிலைப் போலத் தோற்றுவன என்பாராய்க், 'கழை யமல் கழனி' எனச் சிறப்பித்துக் கூறியுள்ளனர். இந்நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. இதனால், சேரநாட்டு வளமைப் பெருக்கமும் அறியப்படும்.]
மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப
5
ஈத்தான்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்னொன்று மருண்டனென் அடுப்போர்க் கொற்றவ!
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
10
பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத்
தடந்தாள் நாரை படிந்திரை கவரும்
முடந்தை நெல்லின் கழையமல் கழனிப்
பிழையா விளையுள் நாடகப் படுத்து
வையா மாலையர் வசையுநகர்க் கறுத்த
15
பகைவர் தேஎத் தாயினும்
சினவா யாகுதல் இறும்பூதால் பெரிதே!
தெளிவுரை: போர்க்களத்திலே எதிரிட்டு வந்தாரான பகைவரினும் மேம்பட்டு விளங்கும் போர்த்தலைவனே! நீதான் முன் சொன்னாற்போலப் பலவகையானும் மாட்சியுற்றனை! திசையனைத்தும் விளங்கச் செய்யும் நற்குண நிறைவும், நடுவு நிலைமையும் கொண்டவன் நீ. முத்துக்களையுடைய கொம்புகளைக் கொண்ட இளங்களிறுகள் பிளிற்றொலியைச் செய்யப், போர்விருப்பம் மிக்கெழுந்தாராகச் செல்லும் நின் தூசிப் படை மறவர்கள், பகைவர் நாட்டின் முடிவிடம் வரைக்கும் செல்வர். தம் வலிமையின் கண் முற்றவும் உயர்ந்து நிற்கவும், தம் பெரிய பாணரும் கூத்தரும் முதலான சுற்றத்தார் உவப்படையவும், இவர் நாட்டுச் செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டுவந்து கொடுத்தும்: மகிழ்வர். அவ்வாறாகக் கொடுத்தும் குறைவு படாத செல்வத்தை யுடைய வளமையும், தளர்ந்த குடிகளைத் திருத்தி வளமையாக்கிய சிறந்த வெற்றியுமாகிய இவற்றை எல்லாம் எண்ணிக் காணப் புகுந்தால், இட்டு எண்ணிக் காண்பதற்கு இடப்படும் கழற்சிக் காய்களும் போதாவாகுமே! பகைவரைக் கொல்லும் போர்த்தொழிலிலே வல்லவனாகிய கொற்றவனே! நின் பண்புகளுள் ஒன்றைமட்டும் எண்ணி யானும் வியந்தேன், பெருமானே!
'நெடுமிடல் அஞ்சி' என்பான் நின்னொடும் போர்மேற் கொண்டான். அவன் அழியுமாறும், அவனுடைய கொடிய வலிமை கெடுமாறும், பெரிய மலைபோல விளங்கும் நின் யானைப்படையோடும் சென்று, நீதான் நாட்டுப்பகுதிகளின் வளமை கெடுமாறு பாசறையிட்டுத் தங்கினாய். பெரிய கால்களையுடைய நாரையானது தங்கித் தனக்குரிய மீனாகிய இரையைக் கவர்ந்து செல்லுகின்ற நீர்வளத்தைப் பெற்ற, வளைந்த கதிர்களைக் கொண்ட நெற்பயிரின், மூங்கிலைப்போல விளங்கும் தாள்கள் நெருங்கியிருப்பதான வயல்களையுடைய, விளைச்சல் தவறாத அவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டாய். ஒன்றானும் வகையோடு பொருந்தி நடவாத மயக்கத்தை உடையவரான பகைவர்கள், நின்னோடு செற்றம் கொண்டாடாது ஒழிந்திருக்க வேண்டும் கால அளவு வரையினும் அதனை மேற்கொள்ளாராய்த், தம் சினத்தைக் காட்டுதலே தொழிலாகக் கொண்டிருந்ததனாலே, நின்னால் அழிவெய்தினர். நீயும் அவர்களை வென்று கைக்கொண்ட தன்றி, அவர்கள் நாட்டிடத்து மக்களிடத்தே யாதும் சினங் கொண்டு, அவரைத் துன்புறுத்தாதவனாகவும் விளங்கினாய். இதுதான் பெரிதும் வியத்தற்கு உரியது, பெருமானே!
சொற்பொருள் விளக்கம்: போர்மிகு குருசில் - போர்த் தொழிலில் மிக்கு விளங்கும் தலைவனே! மாதிரம் திசை. சால்பு - நற்குணங்கள். செம்மை - நடுநிலை பிறழாத தன்மை; சால்பும் நடுநிலையுள் அடங்கும். எனினும், அரசர்க்குச் செங்கோன்மை பிற நற்குணங்களினும் சிறப்புற அமைய வேண்டுவதாகலின் தனித்துக் கூறினார். மழகளிறு - இளங் களிறு. பிளிறல் - குரல் எழுப்பல். மிக்கெழு கடுந்தார் - மிகுதியாக எழுந்த கடிய விரைவையுடைய தூசிப்படை. துய்த்தலை - முடிவிடம்; எல்லை. ‘துப்பு துவர் போக' - வலியின்கண் முற்றவும் உயர்ந்து நிற்க. கிளை - பாணரும் கூத்தரும் போன்ற இரவன் மாக்களை. வளன்-செல்வம். கழங்கு - கழற்சிக்காய். தபுதல் - கெடுதல். வலம்படு வென்றி - போர்வெற்றிச் செயலொடு பொருந்திய குடிகாத்தலாகிய வெற்றி. மருட்சி - மயக்கம்; வியப்பு.
'நெடுமிடல்' என்றது அஞ்சியின் பெயரடை; நெடிய வலியுடையவன் என்பதாம்; இயற்பெயராகவும் கொள்வர். இவ்வாறே கொடுமிடல் என்றதும், கொடிய போர்வலிமை எனவும், அஞ்சியின் உடன்பிறந்தான் எனவும் கருதப்படும். இவர்கள் அஞ்சியின் மரபினர். சேர நாட்டார்க்கு உட்பட்ட குறுநில மன்னர்; சேரவரசர் குடியினைச் சார்ந்தவர். இவர்களுட் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான். இனி, இந்நெடுமிடல் என்பான் அரிமண வாயில் உறத்தூரிடத்தே, பசும்பூட் பொருந்தலரை வென்றான் என்பதனைப் பரணர் பாட்டால் அறியலாம் (அகம் 261). புலம் கெட்டது இவன் அழிக்கக் கருதியதனா லன்று; பெருமலை யானையொடு வந்து பாசறையிட்டுத் தங்கியதனால் அது அழிவுற்றது என்றதன் நயத்தைக் காண்க. வசையுநர் - பகைவர். முடந்தை - வளைந்த; இது கதிரின் பாரம் தாங்காது தலை சாய்ந்த நிலை. நெல்லின் கழை - நெற்றாள்; அதுதான் மூங்கிலைப்போல விளங்கிற்றென்பார் ’கழை' என்றனர். இச்சிறப்பாலே இப்பாட்டு ’கழையமல் கழனி' எனப் பெற்றது. 'பிழையா விளையுள் நாடு - தப்பாத விளைச்சலையுடைய நாடு. வசையுநர்க் கறுத்த - பகைவரைக் கோபித்த. 'சினவாயாகுதல்' என்றது, அவர்தாம் அத் தன்மையர் எனினும், நீதான் அவரைச் சினந்து கொள்வா யல்லை என்றதாம். இது, அவரும் பணிந்து திறை செலுத்தின ராயின், அவரையும் பொறுத்து ஆட்கொள்ளும் தன்மையன் என்ற தாம். இனி, அந்நாட்டு மக்கள்பாற் சினவாய் என்பதும் பொருந்தும். இதனால் அவன் பலவகைக் குணங் களுள்ளும் பொறையே சிறந்த குணமாதலைக் கூறினார். அரசனுக்குப் பொறை சிறப்பாதலைப் ’போற்றார்ப் பொறுத்தலும்' என முரஞ்சியூர் முடிநாகராயரின் புறப்பாட்டு வாக்காலும் (புறம்.2), ’பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்' என்னும் கலிப்பாட்டு விளக்கத்தானும் (நல்லந்துவனார் - நெய்தற்கலி 16) அறிக.
33. வரம்பில் வெள்ளம் !
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம்: தூக்கு: செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர்: வரம்பில் வெள்ளம். இதனாற் சொல்லியது:நார்முடிச் சேரலின் போர்வெற்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: கடல் நீரின் மிகுதியை 'வரம்புடைய வெள்ளம்' என்று ஆக்கி, சேரலின் தானை வீரர் பெருக்கத்தை 'வரம்பில் வெள்ளம்’ என அதனினும் மிகுதியுடையதாக வியந்து கூறிய உவமைநயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.
இயங்குகின்ற இரு படைகளது எழுச்சியின் ஆரவார ஒலியென இதனைக் கொண்டு, இஃது 'இயங்குபடை அரவம்' என எடுத்துக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.8.உரை.)
'கடிமரத்தான்' என்பது முதலாக வரும் மூன்றடிகள் வஞ்சியடிகளாதலின் 'வஞ்சித் தூக்கும்' கூறப்பெற்றது.
'வரம்பில் வெள்ளம் கருதினென்’ என எடுத்துச் செலவை மேலிட்டுக் கூறியதனாலே வஞ்சித் துறைப் பாடாண் பாட்டு' என்றனர்.]
இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அணைத்த பணைமருள் நோன்தாள்
கடிமரத்தால் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்திறுத்த வியன்தானையொடு
5
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாள்மதி லாக வேல்மிளை உயர்த்து
வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழிற்
காரிடி உருமின் உரறு முரசின்
10
கால்வழங்கு ஆரெயில் கருதின்
போரெதிர் வேந்தர் ஒருஉப நின்னே!
தெளிவுரை: கொடிகள் விளங்கும் தேர்ப்படைகளை உடையவனாகிய தலைமையாளனே! நின் போர்ச்செயல்தான் வியப்பினால் பெரிதே யாகும். திருந்திய மணிகளைப் பக்கத்திலே கொண்ட, துடியையொத்த வலிய தாளையுடைய களிற்றினைப் பகைவரது காவன்மரத்திலே கொண்டுபோய்க் கட்டினை. ஆழமாகிய நிரையுடைய நீர்த்துறைகள் எல்லாம் கலங்குமாறு மொய்த்துச்சென்று, முற்பட்டுத் தங்குவது நின் தூசிப்படை. அதனோடு பகைவர் நாடு கெடும்படியாக, எல்லையற்ற வெள்ளம்போன்ற நின் பெரும் படையானது வளைந்து வளைந்து அணிவகுத்துச் செல்லும். அப்படை மறவர்தம் வாட்படையே நினது கோட்டை மதிலாகவும் உயர்ந்த வேற்படையே நினது காவற்காடாகவும், விற்கள் விசையோடு வெளிப்படுத்தும் கூர்மையான முள்போன்ற அம்புகளும், சிவந்த முனையுடைய பிற படைக்கருவிகளும் நின்னைச் சூழ்ந்திருக்கும் அகழியாகவும் கொண்டவனாக, நீ பாசறையிட்டுத் தங்குவாய். கார்காலத்தே இடிக்கும் இடியினைப்போல ஒலிக்கின்ற முரசினையுடையதும், காலால் நடக்கின்ற சிறப்பையுடையதுமான, நின் பகைவரால் கடத்தற்கரிய அரணைப்பற்றிக் கருதினால், நின்னோடு போர்செய்யக் கருதிய வேந்தர்கள், நின் வலிமைக்கு முன் எதிர்நிற்க மாட்டாராய்த் தம் மனவலி அழிந்தாராக ஓடி ஒளிவர். இதுதான் பெரிதும் வியக்கத்தக்கது பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும்: அண்ணல் - தலைமைப்பாடு கொண்டவன். வடிமணி - திருந்திய ஒலியைச் செய்யும் மணி; வார்த்துச் செய்த மணியும் ஆம். அணைத்த- இருபக்கமும் தொங்கக் கட்டியிருக்க விளங்கும். பணை - அடி; உடுக்கை. நோன்மை - வலிமை. கடிமரம் - காவல்மரம். பகைவரது காவன்மரத்தில் களிற்றைக் கட்டுதல் அவரைத் தான் வெற்றி கொண்டதனைக் காட்டும் அடையாளமாம்; அவர் அதனைத் தடுக்க முற்பட்டுப் போரியற்ற வேண்டும்; அல்லது பணிந்துபோக வேண்டும். இரண்டுமன்றி ஓடி மறைபவர் மறப்பண்பினர் ஆகார். 'நெடுநீர துறை கலங்க’ என்றது, பகைவர் நாட்டிலுள்ள நீர்நிலைகளை அழித்தலைக் கூறியது; இவ்வாறு அழித்தலைச் செய்வர் என்பதனைக் 'கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய் திறந்த பின்னும் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். மூழ்த்தல் - மொய்த்தல். வகைவகை யூழூழ் கதழ்ம்பு மூழ்த்து ஏறி' என வரும் பரிபாடல் அடியும் நோக்குக. (பரி. 10 : 18). வியன் தானை - பரந்த தானை; இது பகைவர் நாட்டு எல்லையுள் முற்படச் சென்றுவிட்ட தூசிப் படையை. 'புலங் கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்' என்றது, தொடர்ந்து வரும் பெரும் படையினை. கரையினையுடைய கடலினும் பெரிதாகப் பரவிச்சென்ற பெரும் படை என்பவர், 'வரம்பில் வெள்ளம்' என்றனர். 'கால் வழங்கு ஆரெயில்' - கால்களால் திரிதரும் கடத்தற்கரிய அரண்: படை மறவரே அரணாகச் சூழ்ந்திருந்தனர் என்பதாம். போரினைச் செய்ய வேண்டாதே, படை சென்றதும் பகைவர் ஓடி மறைந்தது வியப்புத்தருவது என்றனர்.
34. நுண்பொறிக் கழற்கால் !
துறை : தும்பை யரவம். வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : ஒண்பொறிக் கழற்கால். இதனாற் சொல்லியது : நார்முடிச் சேரலின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் : 'தும்பை' என்பது, மைந்து பொருளாக வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று. 'அரசுபடக் கடக்கும்' என, வென்றி கோடலே கூறினமை யான் 'தும்பைத் துறை' ஆயிற்று: 'ஒரூஉப' எனப் படை எழுச்சி மாத்திரமே கூறினமையின், அதனுள் "அரவம்" ஆயிற்று.
"செல்வுளைய" முதலாக வரும் அடிகள் இரண்டும் வஞ்சியடிகள்; ஆதலின் வஞ்சித்தூக்கும் ஆயிற்று. தாங்கள் ஆற்றிய சிறந்த போர்த்தொழிலைப் பொறித்தலையுடைய ஒள்ளிய வீரக்கழல் அணிந்த கால் என விசேடித்து உரைத்தலின், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]
ஒரூஉப நின்னே ஒருபெரு வேந்தே!
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்தும்
நெடுங்கொடிய தேர்மிசையும்
5
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன்னணி யானை முரண்சேர் எருத்தினும்
மன்னிலத் தமைந்த.................
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழ
10
அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்த நீ யோம்பன் மாறே!
தெளிவுரை : ஒப்பற்றோனாகிய பெருவேந்தனே! போர்க் களத்திலே பகைவர்க்குப் புறங்கொடுத்து ஓடாத மேற்கோளினையும், தாம் முன்னர்ப் போர்த்தொழில்களைச் செய்து சிறப்புற்ற ஒள்ளிய செயல்கள் பொறிக்கப்பெற்ற கழலணிந்த கால்களையும், பெரிய நிலத்திலெ தோயுமாறு தொங்கக் கட்டிய விரிந்த நூலாடையினையும் உடையவர் நின் பகைவர் . அவர்கள் சிவந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளை ஊர்ந்த படியும், நெடிய கொடி பரக்கும் தேர்களைச் செலுத்தியபடியும், முகபடாம் விளங்கும் அச்சம் பொருந்திய புள்ளிகளைக் கொண்ட நெற்றியினையுடைய, பொன்மாலை அணியப்பெற்ற யானைகளின் வலிமை பொருந்திய பிடரின்கண் அமர்ந்து அவற்றைச் செலுத்தியபடியுமாக, நின்னை எதிர்த்துப் போரிடு தற்கும் முற்பட்டனர். பொருந்திய நிலத்தின்கண் அமைந்த மாறுபடாத வல்லமையுடையவரான அவர்களின், நினக்கு மாறுபட்டெழுந்த போர் நிலையானது கெடவும், முரசங்களின் ஒலி முழக்கையுடைய பெரும் போரானது அவர்கள ளவில் சிதைந்து போகவுமாக, களத்தின்கண் ஆரவாரவொலி எழும்படியாக, அவர்களின் அரசர்கள் பட்டு வீழுமாறு கொன்று, நீதான் அப் போர்களிலே வெற்றி பெற்றனை! அத்தகைய போராற்றலால் உயர்வடைந்த வல்லாளனே! நீ, நின் படைமறவரைக் காக்கும் சிறந்த முறையினாலேதான் அவர்கள் நினக்குத் தோற்றோராக நினக்கஞ்சி நின்னைவிட்டு அகன்றனர் என்பதாம்.
சொற்பொருளும் விளக்கமும் : ஓடா - போரிற் புறங் கொடுத்து ஓடாத. பூட்கை - மேற்கோள். ஓடாப் பூட்கை தளர்வற்ற மேற்கோளும் ஆம். ஒண் பொறிக் கழல் - ஒள்ளியவான செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல்; இவ் விரண்டுங் கூறியது, அப் பகைவரும் மறமாண்பிற் சிறந்தவர் என்பதற்காம், ஓடை - நெற்றிப் பட்டம். உரு - அச்சம். எருத்து - பிடர். மாறா மைந்து - மாறுபடாத வலிமை; மாறுபடல் வலிமை குன்றல். மாறுநிலை - மாறுபட்ட பகைமைத் தன்மை. தேய - கெட பகைமைத் தன்மை கெடல், அவர் தோற்று அழிந்ததனால். பெரும்சமம் - பெரும்போர். ஆர்ப்பு - ஆரவாரம்; இது நார்முடிச் சேரலின் களவரவைக் கண்டதும், அவன் படைமறவரின் ஊக்க எழுச்சியாலும், பகைமறவரின் அச்ச எழுச்சியாலும் அவர்களால் எழுப்பப்படுவது. அரைசு - அரசர். புரைசால் - மிகவுயர்வு அமைந்த. மைந்து - வலிமை. மைந்த - வலிமை உடையோனே ஒம்பல் - காத்தல்; படைமறவரைப் பேணிக் காத்தல். பகையரசரின் பண்டைச் சிறப்பும், நாற்படை நலமும் கூறியது, அவை அவரால் நின்னோடு பகைத்தலாலே ஒழிந்தன என்பதற்காம். நினக்கு அஞ்சி ஒடியதனால், அவர்களின் ஓடாப் பூட்கை கெட்டது; ஒண்பொறிக் கழல் சிறப்பிழந்தது. அவற்றால் அவர்கட்கு உண்டாயிருந்த பெருமை நின்னைப் பகைத்தலால் அழிந்தது என்றதுமாம்.
35. மெய்யாடு பறந்தலை!
துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு. பெயர் : மெய்யாடு பறந்தலை. இதனாற் சொல்லியது : சேரலின் வென்றிச் சிறப்பு.
[பெயர் விளக்கம் : 'உரைசான்ற நின் வென்றி' என்று கூறியதனாலே வாகைத்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று.
'தலை துமிந்து எஞ்சிய மெய்யும் எழுந்து ஆடியபடியிருக்கும் கொடுமையுடைய போர்க்களம்' என விசேடித்துக் கூறிய நயத்தாலே இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.
"குறையுடல் எழுந்தாடுவது ஒரு பெயர் உடையார் பலர் பட்டமை வழியன்றே: அவ்வாற்றாற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பானே. இதற்கு 'மெய்யாடு பறந்தலை' எனப் பெயராயிற்று" எனக் கூறுவர் பழைய உரைகாரர்.)புரைசால் மைந்தநீ ஓம்பன் மாறே
உரைசான் றனவால் பெருமநின் வென்றி
இருங்களிற் றியானை இலங்குவான் மருப்பொடு
நெடுந்தேர்த் திகிரி தாய வியன்களத்து
அலகுடைச் சேவற் கிளைபுகா வாரத்
5
.
தலைதுமிந்து எஞ்சிய மெய்யாடு பறந்தலை
அந்திமாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயி னானே!
10
தெளிவுரை : உயர்ச்சி மிக்க வல்லாளனே! நீதான் நின் படை மறவரை முறையாகப் பேணிக் காத்தலினாலே நின் வெற்றியின் பெருமையானது, புகழ்நிறைந்த தன்மை யுடையது ஆகியது. பெரிய களிற்றியானைகளின், விளங்கும் வெண்கொம்புகளோடு, நெடுந்தேர்களின் சக்கரங்களும் பரந்தோடினவாகிய பெரிய போர்க்களத்திலே, தம் பெண் பருந்துகளோடும் கூடியவையாய்ச், சேவல்களின் இனம் புகுந்து, வீழ்ந்து பட்டோரின் உடலங்களை நிறையத் தின்றபடியிருக்கும். அவ் வேளையிலே, தலை வெட்டப்பெற்று எஞ்சியிருந்த ஒர் உடலமானது, போர்க்களத்தின் உட்பகுதியாகிய பக்கத்தே எழுந்து நின்று ஆடத் தொடங்கிற்று. அந்தி மாலைப் பொழுதிலே, செவ்வானத்திற் கண்டாற்போன்று செவ்வொளி கொண்டதான குருதி பரவியிருக்கும் சிவந்த மன்றத்திடத்தே, அவ்வுடலின் ஆட்டத்திற்கேற்பப் பேய்களும் ஆடத்தொடங்கின. இதனால், வெற்றிப் போரால் வந்தடையும் குறையாத புதுவருவாய் எல்லாம் நின்னிடத்தே வந்தடைந்தன. பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : புரைமை - உயர்ச்சி. புரைசால் - உயர்ச்சி மிக்க; உயர்ச்சியாவது பகைவரையும் அவர் பணிந்த காலத்து அவர் உயிரைக் காத்து, அவர் தீங்கைப் பொறுத்தல். உரை சான்றன - புகழ் நிறைந்தவாயின; புகழால் சிறப்புற்றன. வென்றி - வெற்றி. வான் மருப்புவெண் மருப்பு: களிறுகள் சினத்தோடு நிலத்தைச்சேரப் பகைவரைக் குத்துதலாலும், தேர்களின் சக்கரங்களாலும் எங்கணும் அவ் வடையாளங்கள் பரந்து கிடந்த பெருங்களம் என்க: இதனாற் போரது கடுமை பெறப்படும். "தலை துமிந்து எஞ்சிய மெய்ஆடு பறந்தலை' என்பதன் பொருள் முன்னர்க் கூறப்பெற்றது இனித் தம் தலை துணிபட்டவர் போக எஞ்சிய படைமறவர் தம் ஆற்றலழிந்தாராக, அவர் உடலங்கள் மட்டும் தம்மைக் காத்தற்குப் போராடிக் கொண்டிருக்கும் பாழிடம் என்பதும் ஆம். தோல்வியால் நெஞ்சழிந்த அவர், தம் உடலைக் காக்கப் போராடுதல் இழிவாகும்; இஃது அவர்தம் பண்டைச் சிறப்பை யெல்லாம் கெடுக்கும். களத்தின் நடுவிடம் மன்று போலத் திகழ்ந்து நாற்புறத்தாரும் கூடுதற் கிடமாதலின் “மன்று" என்றனர். 'செஞ்சுடர் கொண்ட குருதி மன்றம்' என்றது, மாலைக்காலத்தே செஞ்சுடரைத் தானும் கொண்டு விளங்கிய குருதி வெள்ளம் நிரம்பிய மன்றம் என்பதால். அம் மன்றத்துப் பேய் ஆடுதல், நிணமும் குருதியும் நிறையக் கிடைத்து, அற்றை உண்ட களிவெறியால் என்க. பேய்கள் கூத்தாடும் வெற்றிப் போர் இடையறாத, புதுவருவாயை உடையவன் சேரல் என, அவனது போர்மறமாண்பு உரைக்கப்பெற்றது. 'நின்வயினானே' என்றது, இவ் வெற்றி நலம் அனைத்தும் சேரலது சொந்த ஆண்மையால் பெற்றதே யன்றிப், பிறர் உதவியாலன்று என்பதற்காம். யாணர் - புதுவருவாய்; அது இங்கே போர் வெற்றியாகிய சிறப்பைக் குறித்தது: ஈடுபடும் பெரும்போர்களுள் எல்லாம் வெற்றியே பெறுதலின், அதன் உறுதிபற்றி, 'வீயா யாணர் என்றனர்.
36. வாள்மயங்கு கடுந்தார் !
துறை : களவழி. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : வாள்மயங்கு கடுந்தார். இதனாற் சொல்லியது : சேரலின் வென்றிச் சிறப்பு.
[களவழியாவது போர்க்கள நிகழ்ச்சிகளை வியந்து கூறி வாழ்த்துதல். அவ்வாறு இப்பாட்டு அமைந்துள்ளது. ஆதலின் 'மிகுதி வகையால் தன் போர்க்களச் சிறப்புக் கூறினமையின் துறை களவழி யாயிற்று' என்பது பழையவுரை.
இருதிறப் படைஞரும் தம்முள்ளே கலந்து போர் செய்யும் போது, இருசாராரின் வாட்களும் தம்முள்ளே, கலந்து, இஃது இச் சாராரது என இனந்தெரிந்து கொள்ளாதபடி மயங்குதல் இயல்பு. அதனை வியந்து, 'வாள்மயங்கு கடுந்தார்’ என்றமையால் இப் பாட்டிற்கு இதுவே பெயராயிற்று.வீயா யாணர் நின்வயி னானே
தாவா தாகும் மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்பமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனைதடி புலத்தின் கைதடிபு பலவுடன்
5
யானை பட்ட வாண்மயங்கு கடுந்தார்
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்திற்
புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்
குடுமி எழாஅலொடு கொண்டுகிழக்கு இழிய
10
நிலமிழி நிவப்பின் நீள்நிரை பலசு மந்து
உருவெழு கூளியர் உண்டுமகிழ்ந் தாடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே!
தெளிவுரை : இடையீடுபடாத போர்வெற்றியாகிய வருவா யினையுடைய நின்னிடத்து, மிகுதி பெற்ற வலிமை என்பதும் என்றும் கெடாதே நிலவும். வளமான நெஞ்சுரத்தோடு பகைவரின் புதிதுபுதிதான போர்முறைகளை எல்லாம் எதிர்த் தழித்து, அவரை வென்று, போரில் மேம்பட்ட வலியினையுடைய நின் மறவரோடும், அப் பகைவரின் நாட்டிற்கே சென்று அவரை அழிப்பவன் நீயாவாய். பனைமரங்கள் வெட்டப் பெற்றுக் கிடக்கும் ஒரு கொல்லைப் புறத்தைப் போலப் பலவான யானைகளின் துதிக்கைகள் வெட்டப் பெற்றுக் கிடக்கின்ற, வாட்கள் ஒன்றோடு ஒன்று கலந்த முன்னணிப் படைப்போரிலேயே, வீரர்களும் குதிரைகளும் யானைகளுமாகிய பட்டு வீழ்ந்த பிணங்களை உண்ணும்பொருட்டாகப், பொறித்து வைத்தாற்போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும், புல்லிய மேற்புறத்தினையுமுடைய கழுகினது பெட்டையோடு சேர்ந்த சேவல்கள், உச்சிக்கொண்டையினையுடைய எழாஅல் என்னும் பறவைகளோடு, வானத்திலிருந்து கீழாக இறங்கி வரும். பாரமிகுதியாலே நிலம் சரிவதற்குக் காரணமான பிணக்குவியல்களின் நெடிய வரிசைகள் பலவற்றைச் சுமந்துகொண்டு, அச்சம் பொருந்திய கூளிப்பேய்கள் அவற்றை உண்டவையாய் மகிழ்ச்சியோடு ஆடும். குருதியாகிய செம்புனல் ஆற்றொழுக்கைப் போலப் பாய்ந்துகொண்டிருக்கும். இத் தன்மைவாய்ந்த கொடும் போர்கள் பலவற்றை நீயும் செய்குவை! இவற்றால் வந்தடையும் நின் வளமை நிலைத்து வாழ்வதாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கம் : வீயா யாணர் - கெடாத புதுவருவாய். வயின் - இடம். தாவாது - கெடாது. வயவு - வலிமை. மலிபெறு வயவு - நாளுக்குநாள் மிகுதிபெறுதலைக் கொண்ட வலிமை. மல்லல் - வளம். உள்ளம் - உள்ளத்தின் உரம், மணவூக்கம். வம்பமர் - புதிதான போர்; பழம் பகை வரேயன்றிப் புதியராக வந்து பகைத்தவர் செய்யும் போர்: இவர் வடபுலத்திலிருந்து வந்தாராகலாம். கடந்து - எதிர் நின்று பொருது வெற்றிகொண்டு. முன்பு - வலிமை. தலைச்சென்று - பகைவரது நாட்டெல்லைக்குட் சென்று. தடிதல் - வெட்டல். தடிபு வெட்டப்பட்டு. வாள் மயங்கல் - இருதிற படையினரின் வாட்களும் தம்முட் கலத்தல். கடுந்தார் - கடுமையான தூசிப்படையினர். மாக்கள் - போர் மறவர். படுபிணம் - களத்திலே பட்டு வீழும் பிணம். பிணம் - உயிரற்ற உடல்கள். உணீயர் - உண்ணும் பொருட்டு. எருவை - கழுகு, இதனைத் தலை வெழுத்து உடல் செந்நிறமாயிருக்கும் பருந்தென்பர் (புறம். 64). 'பொறித்த போலும் வானிற எருத்தின் அணிந்த போலும் அஞ்செவி எருவை' என்று அக நானூறு கூறும் (அகம். 193). எழாஅல் - இராசாளி' இது பருந்து வகையுள் ஒன்று. குடுமி - உச்சிக் கொண்டை. நிவப்பு - உயர்ச்சி. நிரை - வரிசை. பிணக் குவியல்களின் பாரத்தால் நிலம் சரிந்தது என்றது, களத்தின் கொடுமையைக் காட்டுதற்கு உரு எழு - அச்சம் எழுதற்கு ஏற்ப உருவம் அமைந்த தன்மை, கூளியர் - குட்டைப் பேய்கள். குருதிச் செம்புனல் - குருதியாகிய செம்புனல். வளன் - வெற்றி, பிற வளங்களும் ஆம்.
'பருந்தும், எழாலும், பேய்களும் உண்டுகளிக்கப் பெரும் போரிடைப் பலர் பட்டு வீழ்ந்தனர்; அவ்வுடலங்கள் வரிசை வரிசையாகக் குவிந்துகிடக்க நிலமும் சரிந்தது' என்பது, கொடிய போரினது நிகழ்வைக் காட்டும்.
களிறுகள் பலவற்றின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு வீழ்ந்ததனைப் 'பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் யானைபட்ட' எனக் கூறும் உவமை நயத்தை அறிந்து இன்புறுக.
37. வலம்படு வென்றி !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு, பெயர் : வலம்படு வென்றி. இதனாற் சொல்லியது: சேரலாதன் குணங்களைப் புகழ்ந்து அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்தியது.
[பெயர் விளக்கம் : மென்மேலும் பலவான போர்களிலும் வெற்றி அடைவதற்குரிய அடிப்படை வலியாவது, 'துளங்கு குடி திருத்தல்' ஆகும். ஆகவே, அதனைச் செய்தலின் மூலம் வலம்படு வென்றியினன் ஆயினான் எனச் சிறப்பித்த நயம்பற்றி, இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]
வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை!
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்றவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்!
5
வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
மாயிரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன்னெயில் எறிந்து மறவர்த் தரீஇத்
தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்நர்க்குக்
10
கோடற வைத்த கோடாக் கொள்கையும்
நன்று பெரிது உடையையால் நீயே
வெந்திறல் வேந்தே! இவ் வுலகத் தோர்க்கே.
தெளிவுரை : பெருமானே! வாய்மையே பேசும்வாயினரான புலவர்கள் நின் புகழைப் போற்றிப் பாடுவர். நின் பகைவர்களுக்கு நிறைந்த துன்பத்தை நீ அளிப்பாய். நின்பால் அன்புடையார்க்கு நல்ல அணிகலன்களைத் தருவாய்! நற்குணங்கள் பலவும் அமையப்பெற்றுச் சான்றோர்க்குப் பணியும் பணிவுடன், ஐம்புல இச்சைகளும் அடங்கிய குற்றம் தீர்ந்த தலைமையாளனே! வானளாவும நற்புகழானது உலகம் உள்ளளவும் கெடாது நிற்குமாறு, வறுமை போன்றவற்றால் தளர்வுற்ற குடிகளைத் திருத்தி முன்போற் செழுமையுறச் செய்தனை. நீதான் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமான சிறந்த ஒரு வெற்றியினையும் அதன்மூலம் பெற்றாய். கரிய பெரிய பனந் தோட்டு மாலையினையும், சிறந்த கழலினையும் புனைந்து சென்று, பகைவரது நிலைபெற்ற அரணினை அழித்து வென்றாய். அப் பகைவரது வீரர்களைச் சிறைப்பற்றிக் கொணர்ந்தாய். தொன்மையான நிலையைக் கொண்ட சிறப்பினோடு, நின் நிழலிலே வாழ்பவருக்கு ஒப்ப, அவருக்கும் கொடுமை இல்லாதபடி அவரையும் திருத்தி வைத்த மாறுபடாத கொள்கையினையும், மற்றும் நற்பண்புகளையும் நீ மிகப் பெரிதும் உடையை! இவற்றால் வெவ்விய திறனமைந்த வேந்தனே! இவ்வுலகத்தோரின் பொருட்டாக நின் வளனும், நின் வாழ்நாளும் என்றென்றும் நிலைத்து வாழ்வனவாகுக!
சொற்பொருளும் விளக்கமும் : வாழ்க்கை - வாழ்நாள். வாய்மொழி - வாய்மை பிறழாத சொல். 'வாயர்' - வாய்மை பேசுவோர்; புலவர்: இவர் பொய்யா நாவினர். பழங்கண் - துன்பம். ஆர - நிரம்பப் பெற. நகைவர் - அன்புடையார்: இவர் பாணரும் கூத்தருமான பரிசிலர். கலம் - அணிகலம். சிதறி - எடுத்து வீசி; இது அவன் அளித்த மிகுதியைப் புலப் படுத்துவது. நல்லிசை - நற்புகழ். ஆன்று - அமைந்து. அலிந்து - பெரியோரைப் பணிந்து. அடங்கல் - புலனடக்கம் கொள்ளல். இதனை, 'ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் எனவரும் புறப்பாட்டாலும் அறிக (புறம் 191). உலகமோடு உயிர்த்தல் - உலகம் உள்ளளவும் நிலைபெறுதல். துளங்கு குடி - வீழ்ந்த குடி, கெட்டகுடி. திருத்தல் - உயரப் பண்ணல். புடையல் - மாலை; இருபுடையும் தூங்கவமைந்த நெடிய மாலை. மாக்கழல் - சிறந்த வீரக்கழல். 'மறவர்' என்றது பகைநாட்டு மறவரை. தரீஇ கைப்பற்றிக் கொணர்ந்து. கோடற வைத்தல் - அறவே கொடுமையில்லாதபடி பேணி வைத்தல். கொள்கை - கோட்பாடு. 'வெந்திறல்' வெம்மையான பேராற்றல், பகைவரையழிக்கக் கருதிய போதும்; "சீர்சால் செம்மல்" வேண்டியவர்க்கு அருளும்போதும் எனக் கொள்க நன்று - நற்பண்புகள். உலகத்தோர்க்கு - உலகத்தோர்க்காக; அவர் வாழுமாறு.
38. பரிசிலர் வெறுக்கை !
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : பரிசிலர் வெறுக்கை. இதனாற் சொல்லியது : சேரலின் கொடைப் பெருமிதம்.
[பெயர் விளக்கம் : பரிசில் நாடி வருவாருடைய, சேமித்து வைத்த செல்வத்தைப்போல் விளங்கினான் எனக் குறிப்பார், 'பரிசிலர் வெறுக்கை' என்றனர். அவனையே செல்வமாகக் கூறிய நயத்தால் இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]
உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்லிசை மிகுமே
வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்!
எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின்
5
தோட்டி தந்த தொடிமருப் பியானைச்
செவ்வுளைக் கலிமா ஈகை வான்கழல்
செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை!
வாள்துதல் கணவ மள்ளர் ஏறே!
10
மையற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ! வான வரம்ப!
இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்
தருகென விழையாத் தாவில் நெஞ்சத்துப்
பகுத்தூண் தொகுத்த ஆண்மைப்
15
பிறர்க்கென வாழ்தல் யாகன் மாறே!
தெளிவுரை : பலவகைப்பட்ட வளங்களும் தம்மில் கலந்து விளங்குகின்ற நாட்டை, அவை நாளும் முறையே கிடைக்குமாறு திருத்திச் செம்மை செய்த, களங்காயால் தொடுக்கப்பெற்ற கண்ணியினையும், நாரால் செய்யப் பெற்ற முடியினையுமுடைய சேரமானே! பகையரசருடைய மதில் இடங்கள் சிதைந்து அழியுமாறு, நீதான் நின் யானைப் படைகளைச் செலுத்தும் மறவரை ஏவினை. நின் ஏவலின் படிக்குச் சென்ற அவரும், அவ்வாறே அவற்றை வென்று, அந் நாடுகளின் காவலையும் நினக்குத் தந்தனர். அத்தகைய தொடியணிந்த மருப்பினையுடைய யானைப்படையும், சிவந்த பிடரிமயிரைக் கொண்ட செருக்குடைய குதிரைப்படையும் உடையோனே! பொன்னாற் செய்த உயர்ந்த கழலையும், செயற்பாடமைந்த கண்ணியையும் அணிந்த சேரநாட்டு மறவர்க்கு வேந்தனே! பரிசின் மாக்கள் வாழ்வதற்கு வேண்டும் செல்வமாக விளங்குவோனே! பாணர்கள் பாடிப் போற்றும் நாளோலக்கத்தை உடையவனே! ஒளிபொருந்திய நுதலை உடையாட்குக் கணவனே! போர்வீரர்க்குள் சிங்க வேறு போன்றவனே! குற்றமற விளங்கிய போர்ப்புண்ணின் வடுவானது நிலைத்திருக்கும் மார்பினைக் கொண்டோனே! குற்றமற்ற செல்வத்தை உடையோனே! 'வானவரம்பன்' என்னும் பெயரைக் கொண்டோனே! இனியவையான பல பொருள்களைப் பெற்றனமாயின், அவற்றைத் தனித்தனியாக யாமே நுகர்வோம்; எம்பால் அவற்றைத் தருக" என்று தானே கொள்ளுதற்கு விரும்பாத, கெடாத நெஞ்சத்தைக் கொண்டோனே! பிறருக்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்து. அனைவருக்கும் பகுத்துத் தந்த ஆண்மையாளனே! நீதான் பிறர்க்கெனவே வாழ்கின்றன. ஆதலினாலே, உலகத்தே வாழ்வோருட் செல்வம் உடையோர் பலராயினும், அவர் எல்லாரும் பெற்றுள்ள புகழ்களுள் நின் நல்ல புகழே மேம்பட்டு நிற்கும்; இதனை அறிவாயாக, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : நல்லிசை - நல்ல செயல்களாலே வந்தடையும் புகழ். தலைமயங்கல் - ஒன்று கலத்தல். எயின் முகம் - மதிலிடம். தோட்டி - அங்குசம்: அதைக் கொண்டு களிற்றைச் செலுத்தும் மறவர்க்கு ஆயிற்று. தோட்டி - காவல். தொடி - பூண். . உளே - பிடரி மயிர். கலி - மனச் செருக்கு. வான் கழல் - சிறந்த கழல்; சிறப்பு போர் வெற்றியால் வந்தது. ஈகை - பொன். செயல் - செயற்பாடு. சேரலர் . சேரநாட்டார்: சேர நாட்டு மறவரும் ஆம். வாள் - ஒளி. மள்ளர் - போர் மறவர். மை - குற்றம்; குற்றமாவது புறப்புண்படல். வடு - புண் காய்ந்த தழும்பு. வாழ் மார்பு - நிலைத்திருக்கும் மார்பு, வசை - வசைச் சொல்; குற்றம். 'வானவரம்பன்' பெயர். இனியவை - இனியவான பல பொருள்கள். விழைதல் - விரும்பல். தாவு - கெடுதல். பகுத்தூண் தொகுத்தல் - பகுத்துண்ணும் உணவை அரசிறையாகப் பெற்றுத் தொகுத்து, மீண்டும் அவற்றைத் தன் மறவர் முதலியோருக்குப் பகுத்து அளித்தல். பரிசிலர் -புலவரும் பாணரும் கூத்தரும் முதலியவரான கலைஞர்; இவர் தம் தொழிலைக் காட்டிப் பரிசிலாகவே பொருளைப் பெற வருபவர் ஆதலின் 'பரிசிலர்' என்றனர். 'இரவலர்' என்பார் வேறு.
’களங்காய்க் கண்ணியும் நார்முடியும் பூண்டது' ஒரு காரியம் பற்றி வஞ்சினம் உரைத்து, அது முடிக்கும்வரை என்க; அதனை முடித்தபின் பனம்பூக் கண்ணியும் பொன் முடியும் புனைந்தனன் இவன். இவனுடைய இச்செயல் நன்னனை வென்றதாகலாம் என்பர். இந் நன்னன் ஆனைமலைப் பகுதியிலிருந்தவன்; சேரலால் அழிக்கப் பெற்றவன் என்பர். 'பிறர்க்கெனவே நீ வாழ்தியாதலால், எல்லாருள்ளும் நின் நல்லிசை மிகும்' என்று உவப்புடன் வாழ்த்துகின்றார் புலவர்.
39. ஏவல் வியன்பணை !
துறை: வாகை. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: ஏவல் வியன்பணை. இதனாற் சொல்லியது: சேரலின் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.
[பெயர் விளக்கம்: அவன் கொடைக்கு அவன் போரில் பெற்ற வெற்றிகளே அடிப்படையாக அமைதலின் வாகைத்துறை ஆயிற்று. சேரலனன்றியும் அவன் படைமறவரும் கொடையாளர்களாக விளங்கின சிறப்பும் கூறுகின்றனர். 'எடுத்து எறிந்து இரங்கும்' என்னும் அடையின் சிறப்பால், இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.]
பிறர்க்கென வாழ்திநீ யாகன் மாறே
எமக்கிலென் னார்நின் மறங்கூறு குழாத்தர்
துப்புத்துறை போபிய வெப்புடைத் தும்பைக்
கறுத்த நெவ்வர் கடிமுனை அலற
எடுத்தெறிந்து இரங்கும் ஏவல் வியன்பணை
5
உருமென அதிர்பட்டு முழங்கிச் செருமிக்கு
அடங்கார் ஆரரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடுஞ்சின முன்ப!
வாலிநின், நூலின் இழையா நுண்மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
10
புன்புறப் புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்து உலவை யஞ்சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து
அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச்
15
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர்நிழல் புகன்றே.
தெளிவுரை: வெப்பையுடைய தும்பைமாலையைச் சூடியவராக, நின்பால் வெகுண்டெழுந்த பகைவர், அச்சம் பொருந்திய போர்முனையிடத்தே கெட்டு அலறியோடும்படியாகக் கடிப்பினை ஓச்சியடித்தலாலே முழங்கும், நின் போர் மறவரை ஏவுகின்ற அகன்ற முரசமானது. இடிக்குரலைப் போல அதிர்ந்து முழங்கப், போர்வெறி மிகுந்து நினக்கு அடங்காராக நின்னை எதிர்த்த பகைவரின், பிறரால் கடத்தற்கரிய அரணிடம் அழியுமாறு அவர்மேற் படைகொண்டு போரிடச் செல்லும். காலனையொத்த, போர்த்தொழில் துறையெல்லாம் முற்றவும் பயின்று தேறிய, கடுஞ்சினமும் வலிமையும் கொண்டோனே!
நின் மறமாண்பே கூறுதலன்றிப் பிறர் மறத்தைக் கூறுதலற்ற நின் படைமறவரும், நின்னுடைய போர்ச்செயலாகிய நிழலையே விரும்பி வாழ்பவர். ஆயினும், நீ பிறர்க்கு உரியவனாக வாழ்கின்றனை யாதலினாலே, அவரும், எமக்கு இல்லையென்று சொல்லாராக ஈவார்கள்!
சொற்பொருளும் விளக்கமும்: எமக்கு இல் என்னார் - எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார்கள்; வெற்றிப்போர்களின் முடிவிற்பெற்ற பெருவளத்தை உடையவராதலாலும், தம் தலைவனைப் போன்றே தாமும் பிறர்க்கென வாழ்தலை விரும்புபவராதலாலும் அவரும் இரப்பார்க்கு இல்லை என்று கூறமாட்டார் என்று கொள்க. குழாத்தர் - குழுக்குழுவாக விளங்கும் படைமறவர். துப்பு - வலிமை. போகிய - தேர்ந்த. வெப்பு - வெம்மை; என்றது போரின் கடுமையை. தும்பையணிந்து போர்மேற் செல்லல் புகழ் கருதிச் செல்லும் போரிடத்து என்று கொள்க. கறுத்தல் - சினமுறல். தெவ்வர் - பகைவர். கடிமுனை - அச்சந்தரும் போர்முனை. 'ஏவல் வியன் பணை' - ஏவலை எடுத்துரைக்கும் பெரும் பணை; 'பணை' போர் முரசம். உரும் - இடி. அதிர்பட்டு - அதிர்ந்து. செருமிகல் - போர் விருப்பம் மிகல். முன்பு - வலிமை. காலன் - கூற்றுவன். வாலிதின் - வெண்மையாக. புறவு - புறா. அலந்த தலை - சிதைந்த தலைப்புறம். உலவை - உலர்ந்திருக்கும் நிலை. போர்வை - வலை. புறவின் கணநிரை அலறியதற்குக் காரணம், சிலந்தி வலையைத் தமக்கிட்ட வலையெனக் கருதிய மயக்கத்தால் ஆகலாம். முத்தம் - முத்துக்கள். படலம் - தகடு. தைஇய - சூழவமைத்த. போரை 'நிழல்' என்றது, அதுதான் சேரலின் மறவர்க்கு ஆக்கந்தருதலால். சேரல் அணிந்த நார் முடிக்கு இங்கே விளக்கந் தருகின்றனர். 'சிலம்பி கோலிய என்பது முதல் முத்தந் 'தைஇய' என்பது முடிய அம்முடியின் அமைதியைக் கூறுகின்றனர்.
'கொலைவல் வேட்டுவன் வலை பிரிந்து போகிய. கானப் புறவின் சேவல், வாய்நூற் சிலம்பி அஞ்சினை வெரூஉம்’ என்பது நற்றிணை (189). வெப்புடைத் தும்பை - வெப்புக் குணமுடைய தும்பையும் ஆம். வலையைப் ’போர்வை’ என்றது, அதுதான் மேலே போர்த்தபடி அமைந்திருத்தலால்.
40. நாடு காண் அவிர்சுடர் !
துறை: விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர்: நாடுகாண் அவிர் சுடர். இதனாற் சொல்லியது: சேரலின் கொடைச் சிறப்பு.
[பெயர் விளக்கம்: விறலியை ஆற்றுப்படுத்துவது போலக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று. யானைகள் சினத் தீ எழச் செல்லுங்காலத்தே எழுகின்ற சிவந்த புழுதிப்படல் மானது, நாடனைத்தும் காணக்கூடிய தன்மைத்தாகக் காட்டிற் பற்றிய தீப்படலம் போன்றது என்று கூறினர். இவ்வுவமை நயத்தால் இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]
போர்நிழல் புகன்ற சுற்றமொடு ஊர் முகத்து
இறாஅ லியரோ பெரும! நின் தானை
இன்னிசை இமிழ்முரசு இயம்பக் கடிப்பிகூஉப்
புண்தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக்
காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
5
வந்திறை கொண்டன்று தானை; அந்தில்
களைநர் யாரினிப் பிறரெனப் பேணி
மன்னெயில் மறவர் ஒலியவிந்து அடங்க
ஒன்னார் தேயப் பூமலைந்து உரைஇ
வெண்தோடு நிறைஇய வேந்துடை அருஞ்சமம்
10
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடிதோள் மீகை
எழுமடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த
15
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாயத் தெண்கண்
வறிதுகூட்டு அரியல் இரவலர்த் தடுப்பத்
தான்நா உண்ட நனைநறவு மகிழ்ந்து
நீர்இமிழ் சிலம்பின் நேரி யோனே!
20
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்லியல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து
25
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
அழல்விடுபு மரீ இய மைந்தின்
30
தொழில்புகல் யானை நல்குவன் பலவே.
தெளிவுரை: பெருமானே! இனிதாக இசை இமிழ்தலையுடைய போர்முரசங்கள் முழக்கமிட, அவற்றைக் குறுந்தடியாலே ஓச்சி அடித்துக்கொண்டு, தோளில் புண்பட்டோரான முரசுமுழக்கும் தொழிலோர்கள், போர்க்களத்தின் முன்னணியிலே நிற்க, நின் தூசிப்படையானது காய்த்த கரந்தையும் மாக்கொடியும் படர்ந்த விளைவயலிடத்தே வந்து தங்கிற்று. ஆதலானே, நின்னுடைய தானை மறவர்கள், போரிடத்தே உண்டாகும் ஆக்கத்தை விரும்பியவராக விளங்கும் சுற்றத்தாருடனே சேர்ந்து, போர் நிகழ்த்தற்குரிய பகைவர்களின் ஊர்முனையிடத்தே சென்று, தங்காது ஒழிவாராக. இனி, எமக்கு அரணாக நின்று எம்மைக் காப்பாற்றுவார் பிறர் யாருமிலர் என்றெண்ணித் தம் உயிரைப் பேணிக் கொள்ளலை விரும்பியவராக, வெளிப்புறத்துப் பகைமறவர் எல்லாரும் தம்காவலைவிட்டு நீக்கினர். மறமாண்புடையோரால் காக்கப் பெறும் நிலைபெற்ற பகைவரது மதிலிடங்களும் போராரவார மில்லாது ஒலியவிந்து அடங்கிக் கிடக்கின்றது.
போருக்குரிய தும்பைப் பூவைக் சூடியவராகச் சென்று, வெள்ளிய பனந்தோட்டால் நிரல்படத் தொடுத்த மாலை யணிந்தவராகச் சேரவரசுக்குத் தாமே உரியவரெனக் கூறியவராக எதிர்த்த வேந்தருடைய, பிறரால் எளிதாக வெல்லுதற்கரிய போரைக் கொன்று, அவரைப் புறமிட்டு ஓடச் செய்து, அவராற் போக்கப் பெற்ற சேரநாட்டுக் காவன் மக்களை மீளவும் அப்பகுதிகளிலே குடிபுகச் செய்து நிரப்பி வெற்றிக் குரவையாடிய, தொடிவிளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும் உடையோனே! பகையரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்த வெற்றிப் பதக்கமணிந்த, வீரத்திருமகள் விரும்பித் தங்கியிருக்கும் மார்பினையும், பொன்னாற் செய்த அழகிய தலைக்கண்ணியையும் உடையோனே! பொன்னாலாகிய தேரினையுடையவனாகிய நன்னன் என்பானின், ஒளிசுடரும் பூக்களையுடைய வாகையென்னும் காவன்மரத்தை அடியோடு வெட்டியவனே! முன்னணிப் படையினர் மிகுதியாகவுடைய வலிமைமிகுந்த நார்முடிச் சேரலே!
தெளிந்த கள்ளிலே களிப்பானது மிகுதியாகாதவாறு அதற்கேற்ற பொருள்களைக் கூட்டிய 'அரியல்' என்னும் கள்ளானது, தன்னையுண்டு மகிழும் இரவலர்களை வேற்றிடம் நோக்கிச் செல்லவிடாதே தடுத்து நிறுத்தும். அவரோடிருந்து தான் தனக்கெனக் கொணர்ந்த பூவரும்புகளாலே சமைக்கப்பெற்ற நறவினையுண்டு களிப்புற்றவனாக விளங்கும், பகைவர் நிமித்தம் காணும்வழி புல்லிய காலையுடைய உன்னமரமானது அவர் தோற்பது உறுதியென்பது போலச் சாய்ந்தே காட்ட, அருவிநீர் வீழ்தலாலே ஒலியுடைத்தா யிருக்கின்ற மலையாகிய நேரிமலைக்கு உரியோன் அவன்.
சிலவாகிய வளைகளை அணிந்துள்ள விறலியே! மலர்ந்த வேங்கையைப்போல விளங்கும் மென்மையான இயல்பினை யுடைய ஏனைய விறலியர் விளங்குகின்ற இழைகளை அணிந்தவராகத் தம் அழகுநலமாகச் சிறப்பெய்த, பாணர்கள் பசும்பொன் பூமாலையைச் சூட, ஏவலிளையர் இனிய களிப்பாற் குறையாத மென்சொற்களை விரும்பிச் சொல்லி, நெஞ்சு நிறைந்த உவகையினை உடையவராகப் பெரிய போர்க்களத்தின் சிறப்பை வாழ்த்துவர். பாகர் தோட்டியாற் குறிப்பிடுகின்ற குறிப்புக்கட்குத் தவறாமல், தொடியாகிய பூண்செறித்த படியே நின்று, தம்மால் எழுப்பப்படும் ஒள்ளிய புழுதித் துகள்கள் தீப்பொறிகளைப் போல நாற்புறமும் சிதறக், காட்டிடத்தே எழுந்த நாடனைத்தும் காணுமாறு விளங்கும் காட்டுத் தீயைப்போலும் கொடியதான சினத்தீயைக் கைவிட்டு, அப்பாகரது ஏவலைப் பொருந்தியமைந்த வலிமையினையும், போர்த் தொழிலை விரும்பும் இயல்பினையுமுடைய யானைகள் பலவற்றை அவன் நல்குவான். அவனிடத்தேயே செல்வாயாக! சொற்பொருளும் விளக்கமும்: 'போர் முரசம் இன்னிசை இமிழ்தல் ஆவது, போர் விருப்புடையவரான மறவர்க்கு அது இனிதான இசையாகி விளங்குதலால். கடிப்பு - குறுந்தடி; குணில். இகூஉ - புடைத்துக் கொண்டு. புண்தோள் ஆடவர் - முரசைச் சுமந்து சுமந்து தோளிற் புண்பட்ட முரசு முழக்கும் தொழிலோர். போர்முகத்து - போரின் முன்னணிப்புறத்து. இறுப்ப - நிற்க. கரந்தை - கரந்தைச் செடி. மாக்கொடி - கரிய கொடி. விளைவயல் - நெல் விளையும் வயல். இறை கொள்ளல் - தங்கல். களைநர் - துன்பங் களைவோர். பிறர் - தம் மன்னரல்லாத பிறர்; தம் மன்னராற் காக்கவியலாது என்று முடிவு செய்ததனால், 'களைநர் பிறர் யார்?’ என்று கருதலாயினர். பேணி - தம் உயிரைப் பேணியவராக. ஒன்னார் - பகைவர். ஒலி அவிந்து அடங்க - ஒலியவிந்து ஒடுங்கிக் கிடக்க; இஃது அவரும் அஞ்சியவராகத் தளர்ந்தமை கூறியதாம். எயிற் புறத்துப் போர், அதற்குரிய பகைவர் அஞ்சியகலுதலால் நிகழாதேயே சேரலுக்கு வெற்றியாக முடிந்தது என்பதாம்.
பூ - தும்பைப்பூ. மலைந்து - சூடி. உரைஇ - வஞ்சினங் கூறி. தோடு - பனந்தோடு. நிரைஇய - வரிசையாக வைத்துக் கட்டிய. அருஞ்சமம் - வெல்லுதற்கரிய போர். கொன்று - அழித்து. போர் கொல்லல் - போரிடற்கு வந்த படைமறவரை அழித்தல்; போரூக்கத்தைக் கெடுத்தலும் ஆம். புறம் பெறல் - பகைவர் புறமிட்டு ஓடுதலை மேற்கொள்ளுமாறு போரிடல். மன்பதை - மறவர் கூட்டம்; இவர் சேரநாட்டுக் காவன்மறவர்; பகைவரால் அவ்விடத்தை விட்டு ஓட்டப் பெற்றவர். வென்றியாடல் - வெற்றிகொண்டு, அக்களிப்பாலே தோளோச்சி யாடல். திரு - வெற்றித் திருமகள். பொலந்தேர் - அழகிய தேர். கடிவாகை - காவல்மரமான வாகை. முதல் - அடிமரம். தார் - தூசிப்படை.
உன்னம் - உன்னமரம். சாய - சாய்ந்துகாட்ட. வறிது - சிறிது. அரியல் - அரித்துக் கூட்டிய; தெண்கள் - தெளிவாகிய கள். நீர் - அருவிநீர். சிலம்பு - மலை. நேரியோன் - நேரிமலைக்கு உரியவன். 'வயங்கிழையணிந்து, மலர்ந்த வேங்கையின் எழில் நலஞ் சிறப்ப' என்று கொள்ளுதலும் பொருந்தும். களி - களிப்பு. வியன் களம் - பரந்த போர்க்களம். தொழில் - போர்த்தொழில். புகல் - விரும்பும் விருப்பம். சினங்கொண்ட யானைகள் காலாற் கிளைத்துச் சிதறலால் எழுந்த புழுதிப் படலமானது. காட்டுத் தீயை நாடனைத்தும் காணுமாறுபோல, நாடனைத்தும் காணக்கூடிய தன்மைத் தாயிருந்தது என்பதாம். இச்சிறந்த உவமையால் இப்பாட்டு நாடு காண் அவிர் சுடர் எனப் பெற்றது.
இப்பாட்டின் 17ஆவது அடியில் 'உன்னம் சாய' என்று வருவதனை 'உன்னநிலை' என்னும் துறைக்கு உரியதாகவும் கொள்வார்கள். 'உன்ன நிலை' என்பது போரிலே வெற்றி பெறுவோமா என்று படை மறவர்கள் நிமித்தம் பார்த்தல் ஆகும். இது வேந்தன் ஏவலாற் செய்வதன்று.
'எம் வேந்தனுக்கு நீ வெற்றி கொடுப்பாயாக; கொடுத்தால் யாம் நினக்கு இன்னது செய்வோம்' என்று வேண்டிக்கொண்டு பணிதலும் இதில் ஒரு வகையாகும். வேந்தன் வெற்றி பெற்றதும், மறவர் தாம் சொன்னவாறே வந்து பலிக்காணிக்கையைச் செலுத்திப் பலிக்கடன் கழிப்பார்கள்.
'எம் வேந்தனுக்கு ஆக்கம் உண்டாயின் அக்கோடு பொதுளுக; பகைவனுக்கு ஆக்கம் உண்டெனின் அக் கோடு படுவதாக' என்று சூளுரைத்து நிமித்தம் காண்பர் சிலர். கோடு பொதுளின் உற்சாகமாகப் போருக்குச் செல்வார்கள்.
கோடு பட்டுப் போமாயின் மனத்தே ஊக்கம் இழந்தவராய்ப் போர்முகம் சென்று, வீரப் போரியற்றி வீழ்ந்து படுவர்.
இப்படி நிமித்தம் காணலும் வேண்டலுமாகிய மரபினுக்கு, 'உன்னநிலை' என்று இலக்கணம் வகுத்திருக் கிறார்கள்.
தொல்காப்பியப் புறத்திணை இயலும். புறப்பொருள் வெண்பாமாலையும் இதன் தகைமையை விளக்கி உரைக்கின்றன.
போர் மறவர்கள் களம்புகுமுன் இவ்வாறு தெய்வ நம்பிக்கையுடன் நிமித்தம் காணும் மரபு, பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மரபே ஆகும்.
இந்நன்னனோடு இவன் செய்து முடித்த போர் வெற்றியையே இதன் பதிகமும் எடுத்துக் கூறுகின்றது.