உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து/ஐந்தாம் பத்து

விக்கிமூலம் இலிருந்து

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக்
கரணம் அமைந்த காசறு செய்யுட்
பரணர் பாடியது


ஐந்தாம் பத்து
பதிகம்


வடவர் உட்கும் வாள்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கானவில் கானம் கணையின் போகி 5

ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி
இனந்தெரி பல்லான் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பில் புறத்திறுத்து
உறுபுலி யன்ன வயவர் வீழச் 10

சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் 15

பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் சோழர்குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் 20


கெடலருந் தானையொடு
கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக்
கரணம் அமைந்த காசறு செய்யுள்
பரணர் பாடினார் பத்துப் பாட்டு.

செங்குட்டுவன் அரசு வீற்றிருந்த காலம் : ஐம்பத்தைந்து ஆண்டுகள். பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு. வாரியையும் செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலையும். பாட்டின் பெயர்கள்: சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏற ஏணி, நோய்தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனற்றார் என்பன.

தெளிவுரை: வடபுலவரசரும் அச்சமுற விளங்கிய வானளாவிய வெற்றிக்கொடியினைக் கொண்டவன், குடநாட்டாரின் கோமானாக விளங்கியவன், சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவனுக்குச் சோழன் மணக்கிள்ளி பெற்றெடுத்த மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன் ஆவான். இவன் கடவுள் தன்மைபெற்ற பத்தினித் தெய்வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும்பியவனாகக், கானலைக் கொண்டிருந்த காட்டுவழியே கணையைப்போல விரைந்து சென்றான். ஆரியரின் தலைவனைப் போரிலே வீழ்த்தினான். பெரும்புகழுடைய இனிய பல அருவிகளைக்கொண்ட கங்கையின் தலைப்பகுதிக்குச் சென்றான். நல்லினத்தைச் சார்ந்தவை எனத் தெரிந்த பல ஆனினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாறாது அம்புகளைச் செலுத்தி வெல்லுகின்ற வலிமையான வில்லாளர்களுடனே இடும்பாவனத்தின் ஒரு புறத்தே பாசறையிட்டுத் தங்கினான். வலிய புலிபோன்ற வல்லமையாளர்கள் இறந்தொழியுமாறு, சிறிய பூங்கொத்துக்களைக் கொண்ட நெய்தல் பூக்களையுடைய வியலூரை அழித்தான். பின்னர்க் கரையின் எதிர்ப்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான். 'பழையன்' என்பவன் காத்துவந்த, கருங்கிளைகளைக் கொண்ட வேம்பினது முழவுபோன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான். தூய மங்கலவணிகளை அதனாலே இழந்துபோனவரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து, அவற்றால் திரிக்கப்பெற்ற கயிற்றினாலே யானைகளை வண்டியிற் பூட்டி, அக் காவல்மரத்தைத் தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான். வெம்மையான வலிமையினையும், இடையறாது செய்யும் போரினையும் கொண்டவரான சோழர் குடியினரின் அரசுரிமைக்கு உரியவர்களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு வீழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்து நிகழ்ந்த போரிலே வென்று, நேரிவாயில் என்னுமிடத்தே தங்கினான். அச்சோழர் குடியினரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து, அவர்கள் தலைவனையும் கொன்றான். இப்போர்களினாலும் கெடுதல் இல்லாதே விளங்கிய அரிய படைப்பெருக்கத்தோடும், கடலும் பின்னிடுமாறு சென்று, அவ்விடத்துப் பகைவரையும் தோற்றோடச் செய்தான். அச்சிறப்புடைய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த காசறு செய்யுட்களைச் செய்வோரான பரணர் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.

சொற்பொருளும் விளக்கமும்: வான்தோய் வெல்கொடி மிகவுயர்ந்த வெல்லுங் கொடியையுடைய; வான்றோய்: இலக்கணை வழக்கு. ’கடவுள் பத்தினி' என்றது கண்ணகியை. கணையின் போகி - அம்பைப் போல விரைந்து சென்று. 'ஆரிய அண்ணல்' - என்றது ஆரிய மன்னருள் தலைவனாக நின்று போரிட்டவனை. 'மண்ணி' என்றது, கொண்ட கல்லை நீர்ப்படை செய்து என்றதும் ஆம். வல்வில் - வலிய விற்றொழில்; இது பல இலக்குகளை ஊடுருவிச் செல்லுமாறு கணையைப் போக்கும் திறன். உறுபுலி - வலிமிக்க புலி. வயவர் - வீரர். வியலூர் - இது நன்னன் வேண்மானுக்கு உரியது. 'நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர்' என்று, இதனை (அகம் 67) மாமூலனார் உரைப்பர். ‘கொடுகூர்' வியலூர்க்கு மறுகரையிலிருந்தவூர்: இவையிரண்டும் ஆற்றங்கரையூர்கள். 'பழையன்’ ஒரு குறு நில மன்னன்: பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவனாக விளங்கியவன். இவனுக்குரிய காவன் மரம் வேம்பு. முரற்சி - திரித்த கயிறு. பெண்டிர், கணவரை யிழந்தபின் வாலிழை கழிப்பர் என்றனர் (15). இதனை, ’மெல்லியன் மகளிரும் இழை கழித்தனரே' எனவரும் புறப்பாட்டடியும் விளக்கும். 'வாலிழை' முத்தாரம் என்றும் உரைப்பர்; மங்கல அணியாதலே பொருத்தம். முழாரை - முழவைப் போன்ற பருத்த அடிமரத்தையுடைய. 'குஞ்சரவொழுகை பூட்டி’ என்றது, பழையனின் களிறுகளை, வண்டிகளை இழுக்கும் எருமைக் கடாக்களைப் போலப் பூட்டி என்பதாம். ஆராச்செரு - செய்து செய்து அமையாத செரு. சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை, 'சூடா வாகைப் பறந் தலை யாடுபெற ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த பீடில் மன்னர்' எனப் பரணர் அகநானூற்றுள்ளும் குறிப்பிடுவர். ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச் செரு வென்று, நெடுந்தேர்த் தானையோடு இடும்பிற் புறத்திறுத் துக், கொடும்போர் கடந்து' என இதனைச் சிலப்பதிகாரம் குறிக்கும். நேரிவாயில் உறையூர்க்குத் தெற்கிலிருந்த ஒரூர் என்பர் சிலப்பதிகார அரும்பத உரைகாரர். நிலைச்செரு என்பது நாடோறும் தொடர்ந்து செய்யும் போர்.


41. சுடர்வீ வேங்கை !

துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: சுடர்வீ வேங்கை. இதனாற் சொல்லியது: செங்குட்டுவனின் போர்முறச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: 'வயக்களிறு வரை சேர்பு எழுந்த’ என்னும் அடையின் சிறப்பாலே, ’சுடர்வீ வேங்கை' என்பது இப்பாட்டின் பெயராயிற்று. சுடர்வீ வேங்கையைப் புலி யெனவே மயங்கி அதனை அழித்தற்பொருட்டாகச் சினந்து வந்தது வயக்களிறு என்று கொள்க. பகைபோலும் தோற்றத்தைக் கண்டே சினஞ்செருக்கி அதனை அழித்த வயக்களிறு ஆதலின், பகைச் செருவில் எதிர்ப்படும் பகைவரையும் தவறாதே அழித்து வெற்றி கொள்ளும் என்பதாம்.

இதன்கண் கூறப்பெற்றது : செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பு, 'நின் கடலுழந்த தாள் தாவல் உய்யுமோ?' என்று கூறியதனாலே காட்சி வாழ்த்து எனப்பெற்றது.]


புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய
வணரமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5

கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு


வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10

சேஎ ருற்ற செல்படை மறவர்
தண்டுடை வலத்தர் போரெதிர்ந் தாங்கு
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
 ஒன்றிரண்டு அலபல கழிந்து திண்தேர் 15

வசையில் நெடுந்தகை! காண்குவந் திசினே
தாவ லுய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து
வெவ்வர் ஒச்சம் பெருகத் தெவ்வர் 20

மிளகெறி உலக்கையின் இருந்தலை இடித்து
வைகார்ப் பெழுந்த மைபடு பரப்பின்
கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே!

தெளிவுரை: இசை புணர்தற்குரிய முறுக்கமைந்த நரம்பினைக் கொண்ட, இன்னிசையைச் செய்யும் நல்ல யாழ்களை ஏவலிளையர் சுமந்தபடியிருந்தனர். பண்ணுதலமைந்த முழாவும். ஒருகண் மாக்கிணையும், பிறவான இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடையிட்டறுத்துச் செய்த பெருவங்கியம் என்னும் கருவியோடு ஒருங்கே சேர்த்துக் காவடித்தண்டின் ஒருபக்கத்தே கட்டினர். காவடித்தண்டின் மறுபக்கத்தே ஆடற்றுறைக்கு வேண்டிய கருவிகள் எல்லாம் கூடின மூட்டையைக் கட்டிச் சுமந்தனர். இவ்வாறாக வரும் இசைத்துறை வல்ல இளைஞர்கள் தாம் செல்லும் வழியில் தமக்கேதும் தீங்கு நேராமற் படிக்குக் கடவுளையும் வேண்டிப் பரவினர்.

வலிமிகுந்த களிறானது பக்கமலையைச் சார்ந்தபடி வளர்ந்ததும், ஒளிசுடரிடும் பூக்களை உடையதுமான வேங்கை மரத்தை, மறம் பொருந்திய புலியின் குழுமிய மயிர்த் தோற்றமென நினைத்தது. அதனாற் சினங்கொண்டதாகிப் பூக்களையுடைய அவ்வேங்கையின் பொலிவுடைய பெரிய கிளையை வளைத்துப் பிளந்து ஒடித்துத் தன் பெரிய கருந்தலையிலேயும் அழகுறச் சூடிக்கொண்டது. அணிகளாகச் சேர்தலையுற்ற பகைவர்மேற் செல்லுதலை இயல்பாக உடையவரான படைமறவரோடு போரை ஏற்றுக்கொண்டு ஆர வாரித்தாற்போலச், சுரபுன்னைகள் நிறைந்த பெரிய காட்டகம் எல்லாம் எதிரொலிக்குமாறு, அக்களிறு பிளிறலையும் செய்தது.

தாம் சொல்லிய வஞ்சினம் சிறிதும் தப்பாதவாறு, அதனைச் செய்துமுடித்த சிறப்பினை உடையவரான, ஒரே பேச்சாகவே எதனையும் பேசும் இயல்பினரான நின் மறவர்கள், போர்முரசம் முழங்குதலையுடைய பெரிதான போர்க்களத்திடத்தே, எதிர்த்துநின்ற பகையரசர் பட்டழியுமாறு அவரை வெற்றிகொள்வர். வெம்மையினது மிகுதியானது பெருகுமாறு அப்பகையரசரின் பெருந்தலைகளை, உலக்கையால் மிளகை இடிப்பதுபோல இடித்துச் சிதைப்பார்கள். அதனாலே இடையறாத ஆரவாரவொலி எழுகின்ற கருநிறங் கொண்ட கடற்பரப்பைப்போல, எடுத்தெறியும் குறுந்தடியாலே முழக்கப்படுகின்ற அகன்ற கண்ணையுடைய முரசமானது, வெற்றியாலுண்டான புகழொலியோடும் கூடியதாக ஒருங்கே முழக்கத்தைப் பொருந்த, அக்களத்திடமெல்லாம் விளங்கும். ஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ச்சி வாய்ந்த கடலானது காற்றால் மோதுண்டு, ஒலித்தலையுடைய சிறுசிறு பிசிர்களாகச் சென்று உடையுமாறுபோல, வெள்ளிய தலையாட்டமணிந்த, விரையச் செல்லுங் குதிரையை ஊர்ந்து சென்று போருட்டற்றிப் பகைப்படையைச் சிதறடித்து நின் தாள்கள் வருந்துதலினின்றும் உய்யுமோ? அதனைச் சொல்வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: புணர்புரி நரம்பு - இசை புணர்தற்குரிய முறுக்குடைய நரம்பு. தீந்தொடை - இனிதாகத் தொடுக்கும் இசை; இதனைச் செவ்வழிப்பாலை என்பர். வணர் - வளைவு: இது கோட்டின் வளைவு: 'வணர் கோட்டுச் சீறியாள், (புறம்.15) பண் - பண்ணுதல். கண்ணறுத் தியற்றிய தூம்பு - பெருவங்கியம். கலப்பை - கலங்கள் பெய்த பை. துறை - ஆடற்றுறை; இசைத்துறையும் ஆம். கடவுளைப் பழிச்ச - கடவுளைப் பராவிப் பாட; இங்குக் கடவுள் என்றது காடுறை கடவுளை. இது வழியிடை ஏதம் உறாமற்படிக்குக் காத்தலை வேண்டியாம். வயம் - வலிமை. வரை - பக்கமலை. வீ - பூ. சுடர்வீ - நெருப்புச் சுடர் போலத் தோன்றும் பூ. குழுஉக்குரல் - குழுமிய மயிர்க்கற்றை. பூவுடை - பூக்களையுடைய மிலைச்சல் - அணிந்து கொள்ளல். சேருற்ற - திரண்ட. செல் - பகைமேற் செல்லும். தண்டு - ஓர் படைக் சுருவி; படையணியும் ஆம். வலம் - வெற்றி. வழை - கரபுன்னை. அமல் - செறிந்துள்ள சிலம்பல் - எதிரொலி செய்தல்.

பூத்த வேங்கை பகையாதபோதும், வேங்கையென்னும் தோற்றம் பற்றி அதனைச் சிதைத்த களிற்றின் பகை முடிக்கும் வன்மைபோலத் தன்னைப் பகைத்தாரையும் தான் சிறிது ஐயுற்ற காலத்து முற்ற அழிப்பவன் செங்குட்டுவன் என்க.

அத்தன்மையான, மழை பெயலற்றதனாலே தம் தன்மை கெட்டுப்போன மூங்கில்கள், பசையற்று வளர்ந்துபோய்க் கிடக்கும் காட்டு வழிகள். அவற்றுள் ஒன்றோடு இரண்டோ அன்று; பலவற்றையும் கடந்து, திண்ணிய தேர்களையுடைய குற்றமற்ற நெடுந்தகையாகிய நின்னைக் காணற்பொருட்டாக, யானும் என் சுற்றத்தாருடன் வந்தேன்.

கழை திரங்கல் - மூங்கில்கள் பசையற்று வாடிப்போதல். அத்தம் - காட்டுவழி. வசை - குற்றம்; பழிச்சொல். தாவல் - வருந்துதல் தாவாது - தப்பாதபடி. வஞ்சினம் - நெடு மொழி: ‘இன்னது செய்யேனாயின் இன்ன குற்றமுடையவனாகுவேன்’ என்பதுபோலக் கூறுதல். ஒன்று மொழிதல் - சொல்லுதலைச் செய்யும்படி மட்டுமே சொல்லுதல். அரசுபட - அரசர்கள் பட்டுவீழ. வெவ்வர் - வெம்மையாளர். ஓச்சம் . ஆக்கம். தெவ்வர் - பகைவர். வைகார்ப்பு - ஒருகாலும் இடையுறாதே தங்கின ஆர்ப்பொலி. காலுளை - காற்றாலே வளை தலையுடைய வலம்படுகீர்த்தி - வெற்றியாலுண்டான புகழொலி. கடும்பரிப் புரவி - விரையச் செல்லலையுடைய குதிரை.

‘மறப்புலி குழுஉக் குரல் செத்து’ (7) என்பதற்கு மறத்தையுடைய புலிக்கூட்டத்தினது குரலாகக் கருதி எனவும் உரைக்கலாம். அப்போது, பாணர் கடவுளைப் பாடவும், அக்குரலைக் கேட்டுப் புலிக்குரலெனச் சினந்து வந்த களிறு, பூத்த வேங்கையின் கிளையை முறித்துத் தன் தலையிற் சூடியபடி, சுரபுன்னை செறிந்த காட்டிடத்தே பிளிறலைச் செய்திருக்கும் காட்டுவழிகள் என்க. வேங்கைமரத்தின் கிளையை ஏந்திய களிற்றுக்குத் தண்டுடை வலத்தரை உவமை கூறினார். ஒன்று மொழி மறவர் - தம் தலைவர் கூறியவாறே தாமும் கூறும் மறவர் என்பர். ‘கடும்பரிப் புரவி’ என்றதனை ‘விரையச் செல்லும் பரியாகிய புரவி’ என்று கொண்டு, ‘‘பரி’ ஒடம் எனவும் பொருளுரைக்கலாம்; இது அவன் கடலிடைப் பகைவரை வென்ற்தனைக் குறிப்பதுமாகும். தாள். பாதங்கள்; முயற்சியும் ஆம்.

42. தசும்பு துளங்கு இருக்கை !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்; தசும்பு துளங்கு இருக்கை. இதனாற் சொல்லியது; செங்குட்டுவளின் கொடையும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.

[பெயர் விளக்கம் : வெற்றிவிழாவின் மகிழ்வினைக் குட்டுவனும் அவன் மறவருமாகக் கொண்டாடுகின்றனர். அது காலைக் கள்ளின் வெறியாலே அவர்கள் கூத்தாட, அவர் கைகளில் இருந்த குடங்களிலுள்ள கள்ளும் கூத்தாடிற்று. அத்தகைய இருக்கை என்ற நயத்தால் இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.]

இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்களம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5

தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ
இஞ்சிவீ விராய பைங்தார் பூட்டிச் 10

சாந்துபுறத்து எறிந்த தசும்புதுளங் கிருக்கைத்
தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல்
உளையவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15

மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுகிலை உயர்மருப்பு ஏந்திய களிறுர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகுடன் மூய 20

மாயிருந் தெண்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியிற் பலவே.

தெளிவுரை : கரிய பனந்தோட்டாலாகிய மாலையையும்: பொன்னாற் செய்த பெரிய வீரக்கழலையும்; மீனைப்பிடிக்கின்ற சூழ்ச்சியோடு சிறற்பறவையானது குளிர்ந்த களத்து நீருட் பாய்ந்து மூழ்கி மேலெழுந்த காலத்துத் தோன்றும் அதன் வாயலகைப்போல, வெள்ளூசியானது மூழ்கி மூழ்கி எழுந்து செயற்படுதலாலே தைக்கப்பெற்ற நெடிய தழும்பு பரந்த போர்ப்புண்ணின் வடுவானது பொருந்திய மார்பினையும்; அம்புகளாற் புண்பட்ட உடம்பினையும் உடையவர்களாகப், போர்மேற்கொண்டு வந்தோரல்லாத பிறருடன் தும்பை சூடிப் பொருதலை மேற்கொள்ளாது, போர் குறித்தாருடனேயே போர்செய்த மாட்சியும் உடையவராகிய, அத்தகையவரான மறக்குடிச் சிறந்தோர்க்குத் தலைவனே! நல்ல நெற்றியுடையாளான வேண்மாளின் கணவனே! தலைமை சான்ற யானைகளையும் எதிர்நின்று அழிக்கும் போராற்றல் மிக்க குட்டுவனே!

பகைவருடன் செய்த வலிமையுடைய நல்ல போரிலே, அப்பகைவரை எதிர்நின்று பொருது வெற்றிகொண்டு, நின் வீரர்களுக்கு வெற்றிப்புகழைத் தந்தனை! இஞ்சியும் பூவும் விரவிய பசிய தாரினைப் பூட்டிச், சந்தனம் புறத்தே பூசப் பெற்ற கட்குடம் அசையும் இடத்திலுள்ள, இனிய சேறாக விளைந்து முதிர்ந்த, நீலமணியின் நிறத்தைக் கொண்ட கள்ளினைத் தனக்கென மட்டுமே பேணி வைத்துக்கொள்ளாது, அதனைப் பிறர்க்கும் கொடுத்தலாலே, அவர் எல்லாரும் வளவிய களிப்புச் சுரந்து நிறைபவராயினர். கூத்தரது பெரிய சுற்றமானது வாழ்வினைப் பெறும்படியாக, அசையும் இயல்பினையுடைய தலையாட்டமணிந்து விளங்கும் செருக்குடைய குதிரைகளை நீ வழங்கினாய். அந்த நின் கொடைச் செயலை நினைந்தால்—

கண்டும் கேட்டும் அறிந்த மக்கள் வியப்படையும்படியாகப் பகையரசு அழிவெய்துமாறு போரினை வென்றனை. முற்பட்ட போர்வினையானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டாக, நின் தேர்மறவரோடு கூடிய ஏனை மறவர் சுற்றமெல்லாம் உலகமெங்கணும் மொய்த்தபடி நிற்பாராயினர். ஒளிறுகின்ற நிலையையுடைய உயர்ந்த மருப்புக்களை ஏந்திய களிற்றுயானைகளின் மேலாக ஊர்ந்தபடி செல்லும், மானத்தையுடைய வலிமிக்க வீரரோடு, பிற மன்னர்களும் நின் வெற்றியைப் போற்றிப் பாராட்டினர். கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில், நுரையாகிய வெள்ளிய தலையினையுடைய நிறமுள்ள பிசிர்களாகச் சென்று கரைக்கண் மோதி உடையும்படியாகத், தண்ணிய பலவாக வரூஉம் அலைகளைக் காட்டினும், நீ அன்று வழங்கிய குதிரைகள் பலவாகும், பெருமானே!

சொற்பொருள் விளக்கம் : இரும் பனம் புடையல் - கரிய பனந்தோட்டாலான மாலை. ஈகை - பொன். வான்கழல் - சிறந்த கழல்; பெரிய கழலுமாம். கொட்பு - சுழற்சி. கயம் - குளம். சிரல் - சிரற்பறவை. நெடுலசி - நீண்ட கூர்மை பரவிய தழும்பு. அம்புசேர் உடம்பினர் - அம்பு தைத்த வடுவிளங்கும் உடலினர். ‘தும்பை’ வெற்றி குறித்துச் செல்லும் போருக்குரிய அடையாள மாலை. ‘நன்னுதல்’ என்றது, வேண்மாளை.

மைந்து - வலிமை, வஞ்சனையாற் பகைவரை வெற்றி கொள்ளாது, அவர் படையோடு எதிரிட்டு மோதிப் போரிட்டதனால், ‘நல்லமர்’ என்றனர். வலந்தரல் - வெற்றியைத்தரல்; படைமறவர் திறனை உடையவரேனும், வெற்றிக்குக் குட்டுவனின் தலைமையே சிறந்த காரணமாதலால், அவன் வெற்றியைத் தந்ததாகக் கூறினார். திறனுடைத் தலைமை பெறாதவிடத்துச் சிறந்த படைப் பெருக்கமும் சிதைவுறும் என்பது தெளிவு. கட்குடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டியிருப்பர் என்பது இதனால் அறியப்படுகின்றது. மது நுகர்தற் காலத்து இடையிடைக் கறித்து இன்புறுதற்கு இஞ்சியும், மோந்து இன்புறுதற்குப் பூவும் பயன்பட்டன. சாந்து - சந்தனச் சேறு; இதனைப் புறத்தே பூசுதல் நறுமணத்திற்கும் பானைத் கசிவைத் தடுத்தற்கும் ஆம். தசும்பு - கட்குடம். துளங்கல் - அசைதல். இருக்கை - களித்தற்குரிய இருப்பிடப் பகுதி. கட்குடம் அசைந்தாடலாவது, கள்ளுண்பார் களிவெறியால் ஆட அவரோடு அவர் கைக்குடங்களும் ஆடும் என்பதாம். தீஞ்சேறு - இனிதான வண்டற்சேறு; சுவையுமாம். விளைந்த - முதிர்ந்த. மட்டம் - கள். ஓம்பா ஈகை. தனக்கென வையாது பிறர்க்குத் தந்து மகிழும் கொடை. வண்மகிழ் - வளவிய மகிழ்ச்சி. கோடியர் - கூத்தர். கிளை - சுற்றம். ஆடியல் உளை - அசையும் இயல்புடைய தலையாட்டம். கலி - மனச்செருக்கு. பொழிந்தவை - கணக்கின்றி வழங்கியவை. பாசறைக்கண் அவன் வெற்றியைப் பாடியவர்க்கும், கூத்து நிகழ்த்தி இன்புறுத்தியவர்க்கும், தான் பகைவரிடமிருந்து கைப்பற்றிய குதிரைகளைச் சேரமான் அளவின்றி வழங்கினான் என்பதாம்; தனக்குப் பயன்படும் அவை அக் கூத்தர்க்குப் பயன்படாவென அறிந்தும் அவன் வழங்கியதனாலே, இதனைக் கள்ளுண்ட மகிழ்விலே செய்த செயலென்று கூறுகின்றார் போலும்!

மன்பதை - மக்கள்; இவர் பகையரசர் நாட்டு மக்களும்; அடுத்திருந்த பிறநாட்டு மக்களும். மருளல் - வியப்பால் மயங்கல். கடந்து - வென்று. முந்துவினை - முற்படும் வினை; அது பகைவரை அழித்தல். எதிர்வரப் பெறுதல் .- மீளவும் வந்தெய்தப் பெறுதல்; வந்த போர்வினை முடிந்ததாதலின், இனி அடுத்துவரும் போரினை எதிர்நோக்கிப் படைஞர் திரண்டனர் என்பதாம். ஒளிறு நிலை உயர் மருப்பு - ஒளி நிலைபெற்று உயர்ந்த கொம்பு. ‘இதனை ஏந்திய களிறூர்ந்து வந்த மானமைந்தர்’ எனவே, அவர் குட்டுவனுக்குப் பணிந்து திறை செலுத்தும் மன்னரின் படைத்தலைவர்கள் எனலாம்; இவர் போரில் நேரிற் கலவாது வெற்றியைப் பாராட்ட வந்தவர். மன்னர் - அத் தலைவர்களின் மன்னர்கள். ‘தேரொடு சுற்றம்’ என்றது, தேர்ப்படை முதலான பிற படைகளையும். மூய - மொய்த்து நிறைய. மாயிருந் தெண்கடல் - கரிய பெரிய தெளிந்த கடல். மலிதிரைப் பெளவம் - திரை மிகுந்த பரப்பு. குரூஉ - நிறம். பிசிர் . சிறுதுளி. புணரி - அலை. இனி, இது தான் சேரமான் கடலிடைப் பகைவரை அழித்துத் திரும்பிய காலத்து. கரைப்பகுதியின்கண் நின்று அவனையும், அவனுடன் சென்ற படைமறவரையும் பிறர் வரவேற்ற சிறப்பைக் குறிப்பதாகவும் கொள்வர். தெளிந்த கடலின் பரப்பின் மேலாகப் பொங்கியெழும் அலைகள் கரையிற் சென்று மோதிப் பிசிராக உடைதலைப் போலக், கடலிடைத் தீவிலிருந்த வலிய பகைவரும் சேரனோடு பகைகொள்ள அழிந்து சிதறினர் என்பதுமாம். ‘தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்’ என்றது, அக் கடற்பகைவரிடமிருந்து கைப்பற்றிய திராட்சை மதுவுமாகலாம். அவர்கள் படையெடுப்பிற்காகக் கொணர்ந்து சேமித்த குதிரைகளையெல்லாம் கொணர்ந்து பாணர்க்கும் கூத்தர்க்கும் வழங்கினான் என்பதனால், அவன் படைமறவர் அவற்றைத் தமக்கு வேண்டாத அளவுக்குப் பெரிதாகவே பெற்றிருந்தனர் என்பதுமாம்.

43. ஏறா ஏணி!

துறை : இயன் மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்தூக்கு. பெயர் : ஏறா ஏணி. இதனாற் சொல்லியது : செங்குட்டுவனின் செல்வக் களிப்பு.

[பெயர் விளக்கம் : கள்ளுப் பானையை வைக்கின்ற கோக்காலியை ஏழு ஏணி என்று கூறிய உவமச் சிறப்பால், இப் பாட்டு இப் பெயரைப் பெற்றது. செங்குட்டுவனின் இயல்புகளை விதந்து எடுத்துக் கூறி அவனை வாழ்த்துதலால், துறை இயன்மொழி வாழ்த்து ஆயிற்று.]

கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேயிழை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெருங்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக் 5

கடவுள் நிலைய கல்லோங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!
இரும்பணை திரங்கப் பெரும்பெயல் ஒளிப்பக்
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
அருவி அற்ற பெருவறற் காலையும்
அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்துக் 15

கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து

ஆர்கலி வானம் தளிசொரிங் தாஅங்கு
உறுவர் ஆர ஒம்பாது உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி 20

ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக,
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக 25

மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும் இகல்வினை
மேவலை யாகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் 30

தொலையாக் கற்ப நின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினம் தவிராது
நிரம்பகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிதிராத் தசும்பின் வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் 35

வண்கை வேந்தே! நின் கலிமகி ழானே.

தெளிவுரை : கவரிமானது கொண்டை முடிபோல முடித்த உச்சிக் கொண்டையையும், கார்மேகம் போல விரிந்த கூந்தலையும் கொண்டவரான, ஊசலாட்டை விரும்புவோரான, செவ்விய இழைகளையணிந்த இளமகளிர், உரலைப் போற் பெருத்த கால்களையும், விளங்கும் கொம்புகளையும், பெரிய கைகளையும் உடையவான மதயானைகள் தாமிருக்கும் காட்டுப்பக்கத்தே புகுந்தனவானால், அவற்றுள் புதியவாய் வந்து இளங்களிறுகளாலே விரும்பப்படுகின்ற பிடியானைகளை மட்டுமே எண்ணிக் காண முயல்வர். அவற்றையே எண்ண முயன்றும், எண்ணிக் காண வியலாமையால், தாம் எண்ணிக் காணும் அந்த ஆர்வத்தையே சைவிடுவர். இத்தன்மையுடையதும், கடவுளர் தங்கும் நிலைகளையுடையதும் கற்களாலே உயர்ந்த நெடுவரைகளைக் கொண்டதுமான் இமயமலையே வடதிசை எல்லையாகத், தெற்கின்கண் குமரித் துறை தென்னெல்லையாக, இவற்றுக்கு இடைப்பட்ட நாடுகளிலுள்ள அரசர்களது போர்முரசம் முழங்குதலையுடைய பெரும் போர்கள் பலவும் கெட்டழியவும், அவர்களை நீ வென்றதனாலே உண்டாகிய ஆர்ப்பொலி எழவும், சொல்லப்படுதற் கேற்ற புகழுடைய அப் பலவரசரின் நாடுகளது தொன்மையான அழகனைத்தையும் அழித்த, போராடு தலையே தொழிலாகவுடைய படைஞரையும், பொன் மாலையினையும் உடையவனை குட்டுவனே!

காட்டிடத்தேயுள்ள பெரிய மூங்கில்களும் வாடி உலர்ந்து போமாறு, பெரும் பெயலானது பெய்யாமற் பொய்த்தது; அதனாலே அன்றிடமெல்லாம் பசுமையற்று வெம்மை அடைந்தன; ஞாயிற்றது சினத்தீ எப்புறமும் விளங்கியது; அருவிகள் நீரற்றவையாய் இல்லையாயின; இத்தகைய பெரிய வற்கடக் காலத்தும், கடத்தற்கரிய நீர்ச்செலவை உடையதாயிருப்பது நினக்குரிய பேரியாறு. அதுதான் தன் இருபாலுமுள்ள பெரிய கரைகளை உடைத்துக் கொண்டு செல்லுமாறும், புதிய ஏரைப் பூட்டும் நின் நாட்டு உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடிக் கொள்ளுமாறும், நிறைந்த முழக்கையுடைய மேகங்கள், எல்லையற்றபடி மின்னியதிர்கின்ற இடிமுழக்கைச் செய்து, பெய்தலை மிகுதியாகத் தொடங்கி, மழைநீரைப் பொழியும். அதனைப் போல—

நின்னையடையும் இரவலர்கள் ஒம்பாது நிரம்ப உண்டு மகிழுமாறு பெருஞ்சோறு வழங்கியும்; இன்பச்சுவை தரும் பாணரும் கூத்தரும் முதலாயினோர்ச்கு நல்ல அணிகலன்களைப் பரிசிலாக வழங்கியும்; ஆடுகின்ற சிறையையுடைய கின்னரிப் பறவையின் இசையையும் வென்ற நரம்பின் இசையோடு பொருந்த இனிய குரலாற் பாடும் விறலியர் பல பிடி யானைகளைப் பரிசிலாகப் பெறுக என்று வழங்கியும்; மேலே துய்யினைக் கொண்ட பூக்களையுடைய வான்கப்பூவும், நுண் கொடியாகிய உழிஞையின் பூவும் கலந்து சூடுகின்ற, வெற்றி பெறுதலிலே கொண்ட விருப்பும், பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற வலிமைச் சிறப்பும், பகைப்புலத்தே சென்று கொள்ளையிடலையு முடைய வீரர்கள், கொல்லும் களிறுகளைப் பெறுவாராக என்று வழங்கியும்; கணுக்களையுடைய நுண்கோலைக் கைக்கொண்டு, ஊர் மன்றத்தேயிருந்து, பாடற்குரிய தலைவனின் புகழ்களைத் தெரிந்து, தெருக்களின் இரு மருங்கும் அவற்றைப் பாடிச்சென்றபடி களம் வாழ்த்தும் அகவலன் குதிரைகளைப் பெறுக என்று வழங்கியும், நீதான் இதுகாலை மகிழ்வோடிருக்கின்றன. போரிடுதலாகிய செயலை விரும்புதலை உடையை நீ! ஆதலினாலே-

நின்னைப் பகைத்தோரும், தம் உளத்தெழுந்த வியப்பைத் தாங்காமாட்டராய் வாய்விட்டு புகழ்ந்த தூங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையுடைய, கெடாத கல்வியினையும் உடையோனே! நிணத்தைச் சுடுகின்ற புகையின் நாற்றத்தோடு, சனலானது தன் சினத்தைத் தவிராதாக மேலெழுகின்ற, நிரம்புதலும் அகலுதலும் அறியாத ஏறா ஏணியாகிய கோக்காலியின்மேல் வைக்கப் பெற்றுள்ள நிறைந்த கள்ளால் நிறைந்தும் நெடிதுநேரம் அவ்வாறே நிறைந்தபடி இராத கட்குடங்களிலிருக்கும், பாணர் முதலானோர் உண்டதன் பின்னரும் குறையாத கள்வளத்தையுடைய நின் திருவோலக்கத்தின் கண்ணே, நின் செல்வநிலை எல்லாம் கண்டேம். வளவிய கொடையுடைய வேந்தே, நீதான் வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும் : கவரி - கவரிமானின் மயிர். முச்சி - கொண்டை முடி. கவரி முச்சி - கவரிமானின் கொண்டை முடிபோலும் கொண்டை முடியும் ஆம். ஊசல் மேவல் - ஊசலாட்டை விரும்புதல், சேயிழை - செவ்வணிகள். இலங்கு வாள் மருப்பு - விளங்கும் ஒளிபொருந்திய கொம்பு. விருந்தின் வீழ்பிடி - எண்ணும் மகளிர்க்கு விருந்தாகி அவர் எண்ணிக்கான விரும்பிய இளம்பிடிகளும் ஆம். அவற்றை மட்டும் எண்ணியது தங்களைப் போலும் நடக்கும் நடையினது ஒப்புமை கண்ட மகிழ்வால் என்க. எண்ணு முறை - சங்கு, பற்பம் உள்ளிட்ட தொகை. பெறாஅ - பெறாராக; எண்ணிக்கை மேலும் மிகுதலால். கடவுள் . கடவுளர்கள்: முனிவர்களும் ஆம். சொல் பல நாடு - சொல்லப்படும் பல நாடுகளும் ஆம்; இவற்றை ஐம்பத்தாறு தேயங்கள் எனப் புராணங்கள் கூறும். ‘இமயத்திற்கும் குமரிக்கும் இடைப்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் வென்றனன்’ என்றது, எதிர்த்தோரைப் போராலும், அஞ்சியடங்கியோரைத் தன் அருளாலும் வென்றனன் என்பதாம். ‘பொலந்தார்’ பொன் மாலை.

பணை - மூங்கில். திரங்கல் - பசுமையற்றுக் காய்தல். பெயல் ஒளித்தல் - மழை பொய்த்தல். வறங் கூரல் - வறட்சியடைதல். சுடர் சினம் திகழ - ஞாயிறு சினத்தோடு கடுமை மையாக விளங்க. வறங்காலை - வறட்சிக்காலம். அருஞ் செலற் பேரியாறு - கடத்தற்கரிய நீர்ச் செலவையுடைய பேராறு. கடியேர் - புதிய ஏர்: ‘நாளேர்’ என்பர். கடுக்கை - கொன்றை. வரைவில் அதிர் சிலை முழங்கி - எல்லையற்று அதிர்வின்றி இடிமுழக்கை மேற்கொண்டு. தளி - மழைத் துளி. பிறநாடெல்லாம் வறங்கூர்ந்த காலத்தும் நின் நாடு மழைவளத்தாற் குன்றாதிருப்பது என்பதாம்.

உறுவோர் - வந்தடையும் இரவலர். நகைவர் - நகையாடற்குரியவான கூத்து நிகழ்த்துவோர்; நகை வேழம்பரும் ஆம். ‘ஆடு சிறை யறுத்த நரம்பு’ என்றது, ‘கின்னரப் புள் தன் சிறைகளை ஆட்டியிசைக்கும் இன்னிசையினையும் வெற்றி கொண்ட நரம்பினின்றெழும் இசை’ என்றதாகும். ‘இன் குரல் பாடும் விறலியர்’ - இனிய குரலால் தலைவனின் புகழை எடுத்துப் பாடும் பாடினியர். உழிஞை - உழிஞைக் கொடி; கொற்றான் கொடி; இதன் கொடி நுண்மையாகக் கம்பி போல விளங்கும்; பூக்கள் வெண்ணிறத்தோடு அழகாக இருக்கும். உருகெழு சிறப்பு . பகைவருக்கு அச்சந்தரும் போர் மறச் சிறப்பு, கொண்டி - கொள்ளைப் பொருள். கண்டி நுண்கோல் - கணுக்களையுடைய நுண்கோல்; இதனைப் பிறப் புணர்த்துங்கோல் என்பர். சிறை - பக்கல். மறுகு - தெரு. அகவலன் - பாடும் பாணன்; அகவுதலையுடையோன். பகைவர் மதிலை வளைத்தற்குச் செல்வார் உழிஞைப் பூச் சூடுவர்; வென்றார் வாகை சூடுவர்; இவர் இரண்டும் சூடியது தம்முடைய வெற்றியிலே கொண்ட உறுதிப்பாட்டினால் என்று கொள்க. ‘மறுகு சிறை’ என்பது இசைத்துறையுள் ஒன்று எனவும் கூறுவர். ‘நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் (அகம்.154)’ எனப் பிறரும் இவரைப் பற்றி உரைப்பது காண்க.

‘பகைவரும் தாங்காது புகழ்ந்த தொலையாக் கற்ப’ என்றது, இவனுடைய கல்வியும், போர்த்துறைப் பயிற்சியும் முதலாயின கண்ட பகைவரும், தம்மை மறந்து அளவின்றிப் புகழ்தலைச் செய்யுமாறு சிறந்த அறிவினன் என்பதாம். கற்ப - கல்வியுடையாய். தூங்கு கொளை முழவு - தூங்கலோசைத் தாகிய முழவு. இது, கள்ளுண்டு மகிழ்பவரது ஆடலுக்கு ஏற்பு முழங்கும். ‘நிணஞ்சுடு புகை’ - நிணத்தைச் சுடும் புகை; நிணஞ்சுடுதல் ‘கள்ளுண்பார் இடையிடையே கடித்துக் கொள்ளற்கு.’ கட்குடம் வைக்கும் கோக்காலிக்கும் ஏணி யென்பது பெயராதலின், அதனை ஏறா ஏணி என்றனர். இவ் வேணி இருபக்க முடையதாய்க் குறிப்பிட்ட அகற்சி மிகாதும், இருபக்கமும் ஒன்று சேராதும், இடையிற் கம்பிடப் பெற்று விளங்கும்; ஆதலின் ‘நிரம்பகல்பு அறியா ஏணி’ என்றனர். ‘தசும்பு நெடிது நிறைந்தபடியே இராது’ என்றது, வருவார் அடிக்கடி எடுத்துக் குடித்தலால்; நிரப்ப நிரப்பக் குடிப்பாரும் எடுப்பராதலின், அது நிறைந்தபடியே நெடிது இராது என்பதாயிற்று. உண்ண வுண்ணப் பானை நிரப்பப்படுதலைத், ‘தவாஅக் கள்ளின்’ என்று சிறப்பித்தனர்.

44. நோய்தபு நோன்தொடை !

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நோய்தபு நோன் தொடை. இதனாற் சொல்லியது : செங்குட்டுவனை நெடிது வாழ்வாயாக என வாழ்த்தியது.

[பெயர் விளக்கம் : நின்னைப் புகழுதற்குக் காரணமாக விளங்கும் நோயில்லாத யாக்கையாகிய பெரிய உடம்பு என்று சொல்லிய நயத்தால், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]

நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசிக்
கலம்செலச் சுரத்தல் அல்லது கவினும் 5

களைகென அறியாக் கசடில் நெஞ்சத்து
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் நாணியர்
காணி லியரோகிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10

சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு
அரண்கள் தாவுறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணிந்தவன் வேம்புமுதல் தடிந்து 15

முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை உய்த்த கொழுவில் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடைத் தாயத்து அரசுபல ஒட்டித் 20

துளிங்குநீர் வியலகம் ஆண்டினிது கழிந்து
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

தெளிவுரை : நிலத்தை இடிப்பதைப் போன்றதான பெரிதான முழக்கத்தோடே முரசங்கள் முழக்கமிடுகின்றன. வானத்தைத் துடைப்பதுபோல எடுத்த வெற்றிக்கொடிகள் வானளாவ உயர்ந்து பறக்கின்றவை போலத், தேரின் மேலாகப் பறந்தபடி அசைந்து கொண்டிருக்கின்றன. ஈடுபட்டது பெரும் போரேயாயினும், அதனையும் எதிரேற்றுச் சென்று வெற்றிகொண்டனை. அதனாலே கிடைத்த பொருள்களை அரும்பொருள்கள் எனப் பேணிக்காவாது அனைவருக்கும் வழங்கின. அக் கலங்கள் பலரிடமும் பரவிச் செல்லுமாறு பகுத்து அளித்தன. இஃதன்றிக் கனவினும் எனக்குற்ற இத்துயரைக் களைகவெனப் பிறரைக் கேட்டறியாத குற்றமில்லாத நெஞ்சினையும், வெற்றியாடலாற் பிறந்த பெருமிதங்கொண்ட் நடையினையும் கொண்ட தலைவனே!

நுண்ணிய கொடியாக விளங்கும் உழிஞையின் பூவைச் சூடியவனான, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பான் தொலைவிடத்தே இருந்தானாயினும், அவனை நின் நண்பன் எனப் பலரிடமும் சொன்னாய். அவன், மோகூர்ப் பழையனுக்கு அஞ்சியவனாகத் தன் நாட்டைவிட்டு அகன்று ஒளித்துக் கொண்டான். அதனால், உண்டான நீக்கவியலாப் பழிச் சொல்லின் பொருட்டாக, அம் மோகூர் மன்னனுக்குரிய அரண்களைத், தெய்வத்தால் உற்ற கேடென்னுமாறுபோலச் சென்று அழித்தன. காவலையுடைய அவன் முரசினைக் கைக் கொண்டனை! அவன் உரைத்த வஞ்சினத்தை ஒழித்து அடிமை கொண்டனை! அவனுக்குரிய காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்து, முரசு செய்தற்கேற்ற சிறுசிறு துண்டங்களாகவும் தறித்துக் கொண்டனை. அவற்றை, அம் மோகூரானின் களிறுகள் பலவற்றைக் கடாக்களாகப் பூட்டிய வண்டியிலிட்டு, வஞ்சி நகரத்திற்கும் கொணர்ந்தவனே!

கொழுப்பு இல்லாத பசிய இறைச்சித் துண்டங்களை வைத்த இடத்தை மறந்துபோன, துய்போன்ற உச்சிக் கொண்டையமைந்த தலையுடைய கூகைச் சேவலைக், கவலையடையச் செய்தபடி வருத்துகின்ற பெண் கோட்டானையுடைய இடுகாட்டிடத்திலே, முரசினையுடையவரும், வழி வழித் தொடர்ந்து உரிமைபெற்று அரசுசெலுத்தி வருவோமான அரசர் பலரை வென்று, அசைவற்ற அலைகளையுடைய கடலாற் சூழப்பெற்ற பரந்த இந் நிலமண்டலத்தை ஆட்சி புரிந்து, இனிதாகத் தம் வாணாளைக் கழித்து இறந்த மன்னரை இட்டுப் புதைக்கும் வன்னிமன்றத்து இடுகாட்டிடத்தே, தாழியானது, நின் யாக்கையாகிய நோயில்லாத பெரிய உடம்பைக் காணாதொழிவதாக!

ஆயின், நின்னைப் புகழ்ந்த, நின்னைப் பாடும் பாடினியே, மிக்க வலிமை பொருந்தியதும், நோயில்லாததுமான யாக்கையாகிய நின் பெரிய உடம்பினைக காண்பாளாக! எனவே நீயும் நீடுழி வாழ்க!

சொற்பொருளும் விளக்கமும் : புடைத்தல் - இடித்துத் தகர்த்தல். ஆர்ப்பு - முழக்கொலி. துடையூ - துடைத்து. நுடங்க - அசைந்தாட அமர்கடந்து - போரை வெற்றி கொண்டு. கலம்செல - கலம் பிறரிடத்தே கெல்ல. ஆடுநடை - வெற்றியின் பெருதமித நடை.

‘உழிஞை சூடிய அறுகை’ என்றது, மோகூரான வெல்லக் சருதிச் சென்ற அறுகை என்றதாம். சென்ற போர்களுள் எல்லாம் வெற்றியே பெற்ற இவன், மோகூரானோடு போரிட்டபோது தோற்று ஒடி ஒளியவும் நேர்ந்தது என்க. இதனால், அவனை நண்பனாகக் கொண்ட தனக்கும் பழியெனக் காண்ட குட்டுவன், தான் படையோடு சென்று மோகூர் மன்னனின் அரண்களை அழித்து, அவனை வெற்றி கொண்டான், என்பதாம். ‘அணங்கு நிகழ்ந்தன்ன’ என்றது. எவ்வாற்றானும் தடுக்கவியலாதபடி நிகழ்ந்த செயல் என்னுமாறு என்பதாம்.

கொழுவில் - கொழுப்பற்ற. துணி - இறைச்சித்துண்டு. தலை - இடம். துய்த்தலைக் கூகை - துய்போன்று கொண்டையைத் தலையிலுடைய கூகைச் சேவல். கவலை கவற்றல் - கவலைப்படவைத்து வருத்தல். தாயம் - வழிவழி வரும் உரிமை. துளங்கல் - அசைதல். பறந்தலை - இடுகாடு. தாழி - வாய் அகன்ற மட்பானை. வன்னி மன்றம் - வன்னிமரம் நிற்கும் மன்றம்; ‘சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு, மடைதீ யுறுக்கும் வன்னி மன்றம்’ என இதனை மணிமேகலை கூறும்.

45. ஊன்துவை அடிசில் !

[துறை : செந்துறைப்பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : ஊன்றுவை அடிசில். இதனாற் சொல்லியது: செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பு.

பெயர் விளக்கம் : அரசனுக்குச் சோறுவேறு படைமறவருக்குச் சோறு வேறு என்று உணவைப் பிரித்துக் கொள்ளாது அனைவருக்கும் ஒரே சோறாக அடப்படும் ஊன்றுவை அடிசில் என்னும் சிறப்பைச் சொல்வதால் இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்றடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவுடை வில்லின் நொசியா நெஞ்சின்
களிறெறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின் 5

எழுமுடி மார்பின் எய்திய சேரல்!
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்ளழித்து உண்ட
நாடுகெழு தாயத்து நனந்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணையெழு அன்ன 10

நிலம்பெறு திணிதோள் உயர ஒச்சிப்
பிணம்பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறுவேறு என்னா ஊன்துவை யடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்ளிடுபு அறியா ஏணித் தெவ்வர் 15

சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோ? நின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் 20

வயங்குமணி இமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறித்திசி னோரே.

தெளிவுரை : பொன்னாற் செய்யப்பெற்ற அழகான தும்பைப் பூவையும், பொறிகளோடு கூடிய அம்பறாத் தூணியிடத்தே, புற்றுள் அடங்கியிருக்கும் பாம்புகளைப்போல ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளைந்த வில்லையும், அஞ்சி ஒடுங்காத மனஎழுச்சியையும், களிறுகளை எறிதலாலே முனை முறிந்த வடுப்பட்ட வேலையும் உடையவர் நின் சிறந்தமறவர்கள். அவர்கள் நெருங்கிச் செய்கின்ற அகன்ற போர்க்களத்தை நினக்கே உரியதாகக் கொண்டு வெற்றி பெற்றன. பகையரசர் எழுவரது முடிப்பொன்னாற் செய்யப்பெற்ற ஆரத்தை மார்பிடத்தே அணிந்துள்ள சேரமானாகிய செங்குட்டுவனே!

ஆழமான அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றி வென்று, அவற்றின் உட்புகுந்து, அங்குள்ளவற்றை அழித்த, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த அகன்ற உள்ளிடத்தையுடைய அவ்வரண்களின் கதவுகளைக் காக்கும் கணையமரத்தைப்போல உறுதியுடன் விளங்கும். பகைவர் நாடுகளைக் கைப்பற்றும் திண்மையான தோள்களை உயரத் தூக்கி வீசிப் பிணங்கள் குவிந்து கிடக்கின்ற போர்க்களத்திலே, முன்னம் பல காலங்களிலும் துணங்கைக் கூத்தினை ஆடியும்-

அரசனுக்குரிய சோறு வேறென்னாது அனைவருக்கும் ஒன்றாகவே சமைத்த, ஊன்குழையச் சமைத்துள்ள ஊன் சோற்றைப் பகைவர்க்கு அஞ்சிப் புறமுதுகிடாத வீரர்க்கு அவருள்ளம் விரும்புமாறு பெருவிருந்தாக அளித்தும்-

பகைவரது படைவரவைத் தடுக்கும் பொருட்டாக முள் வேலி இடுதலை அறியாத எல்லைப்புறத்தையும், பகைவரது விற்களிலே தொடுத்தெய்யப்படும் விசையமைந்த அம்புகளைத் தடுக்கும் வலிய வெண்மையான கேடகத்தையும், அவற்றுக்கேற்ப அமைந்த மறப்பண்பால் மிகுந்த தானையையும் உடையவரான மன்னருள்ளே.

மேகங்கள் முகந்து கொள்ளலாற் குறையாமலும், ஆற்றுநீர் மிகுதியாகப் பாய்தலாலே கரைகடவாமலும், குறுக்கிடும் காற்றுத் திரட்டும் அலைகளாலே எழுதலையுடைய கருமையும் நிறைசூலுமுடைய மேகங்களைப்போல முழக்கமிடும் அலைகளோடும் கூடிய குளிர்ச்சியமைந்த கடலிடத்தே, விளக்கமுடைய செம்மணிபோலும் ஒளியினைக் கொண்ட வேற்படையைச் செலுத்தி, அக்கடலிடத்திருந்த பகைவரை எதிர்த்தழித்தோர், நின் முன்னோருள்ளும் யாருமில்லை இப்பொழுதும் நினக்கு ஒப்பாவார் யாருமில்லை!

சொற்பொருளும் விளக்கமும் : பொலம் - பொன். தும்பை - தும்மைப்பூ. பொறி - பூத்தொழில் வேலைப்பாடு; அரும்பு வேலைப்பாடும் ஆம் தூணி - அம்பறாத் தூணி. செயலற்றுக் கிடக்கும் அம்புகளைப் ‘புற்றடங்கு அரவின் ஒடுங்கிய’ என்றனர்; அவை வெளிப்படின் புற்றினின்றும் சீறிப் பாய்ந்து செல்லும் பாம்புகளைப்போல எதிரிகளைத் தேத்துக் கொல்வன என்பதனால். அம்புமுனைகள் நஞ்சிற்றோய்க்கப் பெறுவனவாதலால், இவ்வுவமை மிக்க பொருத்தமுடையதுமாகும். நொசிவு - வளைவு; போர்க்குத் தயாராக இருக்கும் நிலை. நொசியா நெஞ்சு - பகைவரின் போர்த்திறன் முதலியவற்றைக் கேட்டதனாலே சோர்வுற்று மடியாத நெஞ்சுறுதி. கதுவாய் எஃகம் - முனைமுரிந்த வேல்; அதுதான் களிறெறிந்து பெற்ற சிறப்பினை உடையது என்றனர், அதனைத் தாங்கிய மறவரின் போர்த்திறனைக் காட்டுதற்கு. விழுமியோர் - சிறந்தோர்; முறை பிறழாதே போரிடுவோர். அகன்கண் - அகன்ற இடத்தையுடைய நாட்பு - போர்க்களம். எழுமுடி மார்பின் எய்திய சேரல் - பகையரசர் எழுவரது முடிப்பொன்னால் அமைந்த வெற்றியாரம் பொருந்திய மார்பினையுடைய சேரமான். ‘ஞாட்பு’ என்பது நாட்பென்று வந்தது; அகன்கண் ஞாட்பின்கண் எழுமுடியரசரைவென்று பெற்ற அவர் முடிப்பொன் எனினும் ஆம்.

குண்டுகண் அகழி - ஆழமான இடத்தைக் கொண்ட அகழி - அகழப்பெற்ற பள்ளம். கடந்து - வென்று கைப்பற்றி. உள் உண்டு அழித்த - உள் மதிலிடத்துச் சென்று, அங்குள்ள பொருள்களைக் கொண்டும் அழித்தும் கைப்பற்றிய. தாயம் - வழிவழி வரும் உரிமை. கணையெழு - திரட்சிமிக்க கணையமரம்; கதவுக்கு வலுவாகப் பின்புறத்துக் குறுக்காக இடப் பெறுவது. ஊன் துவை அடிசில் - ஊனும் அரிசியும் குழையச் சமைத்த புலவு. பீடர் - பீட்டை உடையவர்; துணங்கை - ஒருவகைக் கூத்து. இது சேரமான் தன் வீரர்களுகுப் பெருவிருந்து அளித்த சிறப்பைக் கூறுவது; அனுவம் அவ்விடமிருந்து உண்ணல் மேலும் சிறப்பாகும்.

முள் - முள்வேலி. இடுபறியா - இடுதலை அறியா. ஏணி - எல்லைப்புறம்; நனியிரு முந்நீர் ஏணியாக (புறம் 35) என வருதலும் காண்க. தெவ்வர் - பகைவர். சிலை. வில். விசை - விசைத்து எய்யப் பெறும் அம்புகள். மூரி வெண்தோல் - மூரிப்பமைந்த எருத்தின் வெண்தோலால் அமைந்த கிடுகு; கிடுகு - கேடகம். விலங்குதல் -குறுக்கிடல். வளி கடவும் - காற்று மோதிச் செலுத்தும். துளக்கம் - அசைவு. வயங்குமணி இமைப்பின் வேல் - விளங்கும் செம்மணி போல ஒளிசிதறுகின்ற வேல்; இது பகைவரைக் குத்தியழித்துக் குருதிக்கறை நிலவிய வேலென உணர்த்தும். கமஞ்சூல் - நிறைசூல். வேலிடுபு - வேலை ஏற்றி நடப்பித்து என்பதாம். முன்னும் இல்லை - முற்காலத்தும் யாரும் இல்லை.

46. கரைவாய்ப் பருதி !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு: பெயர் : கரைவாய்ப் பருதி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் கொடைச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ‘பலவாய போர்களிலும் வெற்றி கொண்ட கொல்களிற்றினைக் கண்டதும் அஞ்சிச் சிதறியோடிய பகைமறவர் பலரையும், குட்டுவனின் தேர்ச் சக்கரம் விரையச் செல்லுங்காலத்தே தன் அடிப்படுத்துத் தலை துணித்தது’ என, அதற்கும் களத்தே வெற்றி கூறிய நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறிந்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் மாலை பண்ணிப் 5

பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறக் தந்துஅவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி
ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப்
பல்செருக் கடந்த கொல்களிற் றியானைத் 10

கோடுநரல் பெளவம் கலங்க வேலிட்டு
உடைதிரைப் பரப்பின் படுகடல் ஒட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே|

தெளிவுரை : வண்டினம் மொய்க்கும் கூந்தலான முடியைப் புனைந்தோரான பாண்மகளிர், இழைகளையும், குழைகளையும், நறுமணங்கொண்ட குளிர்ந்த மாலைகளையும் அணிந்தோராகவும், ஒளிமிக்கதாய் விளங்கும் வளையல்களைச் செறித்த முன்னங் கையினராகவும், ஒளிக்கதிர்களை மிகவும் உமிழ்கின்ற அழகிய மணிகள் பதித்து விளங்கும் மாலை புனைந்த மார்பினராகவும் வந்து, நரம்புத்தொடையினையுடைய பேரியாழினிடத்தே பாலைப்பண்ணை அமைத்தவராகப் பகைவர்க்குப் பணியாத மரபினையுடைய உழிஞைத்திறனைப் போற்றிப் பாடுவர். அவர்கள் பாடலைக்கேட்டு, இன்முகத் தோடு அவர்ளுக்குப் பரிசிலளித்துப் பேணியவாறு, இனிய கள்ளையும் அவர்களுக்கு வழங்கி மகிழ்பவன்;

சுரநெறிகள் பலவற்றினும் செலுத்தப் பெறும், முன்னர்க் களங்களிற் சென்ற காலத்துக் குருதிக்கறை சோய்ந்த விளிம்பைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள், தாம் செல்லுங்காலத்தே எண்ணிலடங்காப்பகைமறவர் தலைகளைக் கீழ்ப்பட்டு நசுங்குமாறு செல்லப், பல போர்களை நிகழ்த்தி வென்ற, பகைவரைக் கொல்லும் இயல்பு உடைய களிற்று யானைகளை உடையவன்;

சங்கினம் முழங்குகின்ற கடலானது கலங்குமாறு வேற் படையைச் செலுத்தி, உடைந்தலையும் அலைப்பரப்பையுடைய ஒலிகடலிடத்தேயிருந்து பகைத்தோரைத் தோற்ரறொடச் செய்த வெற்றியால் உளதாகிய பெரும்புகழுடையவன் செங்குட்டுவன். அவனைப் பாடிச் சென்று கண்டோர், மீண்டும் மற்றெவர்பாலும் செல்லோம் என்பதையே எண்ண மாட்டார்கள். (அவர்கள் நிரந்தரமாக வாழுமளவுக்கு அவன் பெரும் பரிசில்களை நல்குவான் என்பதாம்.)

சொற்பொருளும் விளக்கமும் : இழை - அணிகலன்கள். குழை - காதணிகள். நறுந்தண்மாலை . நறுமணமும் தண்மையும் கொண்ட பூமாலை. சுடர் நிமிர் அவிர் - ஒளிமிக்குப் பரவும். திறல் - நிறமான ஒளி; மணி - செம்மணி. மகளிர் - பாடினியராகிய பாண்மகளிர். பணியா மரபு - பகைவர்க்குப் பணிந்து போகாத இயல்பு. தொடைபடு - தொடுத்தல் பொருந்திய. பேரியாழ் - நால்வகை யாழுள் ஒன்று; பிற செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என்பன. பாலை பண்ணி - பாலைப்பண்ணை அமைத்து. இன்மகிழ் - இனிய கள்: இனிய மகிழ்வு சுரக்க வீற்றிருத்தலும் ஆம். கரைவாய்ப் பருதி - கரைதலோடு செல்லும் இடத்தையுடைய சக்கரமும் ஆம்; பருதி செல்லும்கால் ஒலியெழும் என்பது உண்மை; தேய்ந்த முனைகொண்ட சச்கரமும் ஆம். ஊர்பாட்டு - ஊர்ந்து செல்லுங்காலத்து. துமிய - அற்று வீழ; நசுங்க. கோடு - சங்கு. நரல்தல் - ஒலித்தல். படுகடல் - ஒலிக்கும் கடல். வெல்புகழ் - வெற்றிப்புகழ்; பிற புகழ்களை வெல்லும் புகழும் ஆம். செல்குவம் எனனார் - இனிப் பிறிதோரிடம் செல்வேம் என்னமாட்டார்; அவ்வள்வு பெருஞ்செல்வத்தைக் குட்டுவன் அளிப்பான் என்பதாம்.

47. நன்னுதல் விறலியர் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நன்னுதல் விறலியர். இதனாற் சொல்லியது : செங்குட்டுவனின் கொடையும் வருவாயும் பற்றிய சிறப்பு.

[பெயர் விளக்கம்: விறலியரது அழகினை அவரது துதலின் மேலிட்டு வியந்து கூறிய சிறப்பால் இப்பாட்டு அப்பெயரைப் பெற்றது.]

அட்டானானே குட்டுவன் அடுதொறும்
பெற்றனாரே பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு நெருவின்
சொரிசுரை கவரும் நெய்வழிபு உராலின் 5

பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல
நன்னுதல் விறலியர் ஆடும்
தொன்னகர் வரைப்பின்அவன் உரையா னாவே!

தெளிவுரை : வந்த பகைவரைக் கொன்றும், அதுதான் போதுமென்று அமைந்திருப்பான் அல்லன் செங்குட்டுவன். மீளவும் அவன் எஞ்சிய பகைவரைப் பொருது அழித்தலிலேயே ஈடுபடுவான். அங்ஙனம் அவன் தான் பொருதுந்தோறும், அவன் களத்தைப் பாடிச் சென்றவரான பரிசிலர் களிறுகளையே பரிசிலாகப் பெற்றனர்.

மலையின் மேற்பகுதியினின்று வீழ்ந்தொழுகும் அருவியைப் போல, மாடங்களின் மேற்பகுதிகளிலிருந்து காற்றால் அசைந்தாடும் கொடிகள் தூங்கும் தெருவினிடத்தே, சொரிதற்குரிய சுரையைக் கொண்டிருக்கும் திரிக்குழாய், நெய்யானது கரையிடத்தே நிரம்பி மேற்புறமாக வழிந்து பரவுதலாலே, காலையுடைய விளக்கைப்போலப் பருத்துள்ள நெருப்புச் சுடரினை எரிய விடுவதாயிருக்கும். அழகிய நெற்றியுடையவரான விறலியர், அவ்வொளியிலே ஆடுகின்ற ஆடரங்கத்தையுடைய பழைதான மாளிகையிடத்தே எங்கணும், அவனைப் பற்றிய புகழுரைகளே மிகுதியா யுள்ளனவே!

சொற்பொருள் விளக்கம் : செங்குட்டுவன் போர் வினையிலே ஈடுபாடும், தன் பகைவரை முற்றவும் ஒழித்தலிலே கருத்தும் கொண்ட மறமேம்பாட்டினன் என்றது இது. இதனையே,

ஐயைந்து இரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள் வேள்வி செய்யாது யாங்கனும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயின!

எனச் சிலம்பும் கூறுகின்றது (கா. 28. 130-32). மாடங்களின் மேலாக அசைந்தாடும் கொடிக்கு வரைமிசை வீழும் அருவியை உவமித்தலை, ‘வேறு பல் துகிலின் நுடங்கி, இழுமென இழிதரும் அருவி’ எனத் திருமுகாற்றுப்படையினும் காணலாம்.

கரை - உட்டுளை. ‘பரூஉச்சுடர் அழல’ என்றது, இடப் பெற்ற திரியின் அளவைக் கடந்து, சுரை கடந்து மேலே வரவிய நெய்யினும் பற்றிப் பெருஞ்சுடராக எரிதல்.

தொன்னகர் - பழைதான மாளிகைகள். ‘விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பு’ என்றது, அவன் வென்று கொண்ட பகைமன்னர் அரண்மனையிலே, அவனைப் போற்றிக் கொண்டாடும் வெற்றிவிழாச் சிறப்பைக் கூறியதாகும்.

48. பேரெழில் வாழ்க்கை!

துறை; இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு,. பெயர் : பேரெழில் வாழ்க்கை. இதனாற் சொல்லியது: செங்குட்டுவளின் இயல்புகளை விதந்து கூறி வாழ்த்தியது.

[பெயர் விளக்கம் : வேனிலில் பொழிலிடத்தே சென்று வதிதலான வாழ்கையின் செவ்வியைப் பேரெழில் வாழ்க்கை என நயமாக உரைத்ததனாலே இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]

பைம்பொன் தாமரை பாணர்ச் குட்டி
ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்
கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ!
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்டிவர் 5

கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
கல்லா வாய்மையன் இவனெனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனையெரி எரித்தலின் பெரிதும் 10

இதழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்ப! நின் பெயர்வா மியரோ;
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை 15

மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும்
தீம்புனல் ஆய மாடும்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே.

தெளிவுரை : பசும் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் பாணர்களுக்குச் சூட்டியும், ஒள்ளிய நுதலினரான விறலியருக்குப் பொன்னாரங்களைப் பூட்டியும், கெடாத பலவான புகழ்களை நிலைபெறுத்தி, கடல்நீர்ப் பரப்பின் வழிக் கடலுள்ளும் சென்று, கடலிடத்திருந்து தொல்லை தந்தாரான பகைவரோடு அரிய போரைச் செய்த, குளிர்ந்த கடற்றுறையினை உடையவனாகிய, பரதவனே!

அக் கடலிடத்தே, கொள்ளையிட்டு அவர் சேர்த்து வைத்திருந்த பொருள்களை எல்லாம் இவ்விடத்தே கொணர்ந்தனை. கொணர்ந்து இவ் விரவலர்களின், நின்புகழ் முழுதையும் தம்முள் அடக்கிக் கொள்ளாத பாட்டிற்குரிய பரிசிற்பொருளாக அவற்றை மிக எளிதாகக் கொடுத்தனை. ‘அங்ஙனமாகக் கொடுக்கும் இச் செங்குட்டுவன், வரும் பரிசிலரது தகுதிகளை ஆராய்ந்து அவற்றுக்கேற்பப் பரிசில் அளிப்பதென்பதனைக் கல்லாத வாய்மையாளன்’ எனத் தம் இசைத்தொழிலிலே வல்லாரான இசையாளர்கள் பாராட்டியவராகத் தங்கள் கைகளை வரிசையாக நீட்டுவர்.

ஆன்றோர்க்கு வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்கியறியாத ஆண்மையினையும், பகைப்புலத்துப் போர் முனைப்படும் ஊர்களை எரித்தலாலே எழும் மிக்க தீயழல் எரித்ததாலே, இதழது அழகனைத்தும் பெரிதும் கெட்டழிந்த மாலையோடு சாந்தமும் காய்ந்துபோய்ப் பல பொறிகளாக விளங்கும் மார்பினையும் உடையவனே!

நினக்கு உரியதான மலையிடத்தே தோன்றி, நின் கடலிடத்தேயே சென்று கலக்கும் ஆற்றின்கண், மிக்கபுனல் வருங்காலத்தே நிகழ்த்தப்பெறுகின்ற இனிய புனலாட்டு விழவினிடத்தே, பொழிலிடத்தே தங்கியிருந்து வேனில் விழாக்கொண்டடும் பேரழகினையுடைய இல்வாழ்க்கையினை நீ உடையை! அவ் வாழ்க்கைக்கண்ணே விரும்பிச் சூழ்கின்ற சுற்றத்தாரோடும் கூடியிருந்து உண்டு, இனிதாக நுகரும் இயல்பும் உடையை! இனிதான புனலிடத்தே ஆய மகளிர் விளையாடியபடியிருக்கும் காஞ்சியென்னும் ஆற்றின் பெருந்துறைக்கண் பரந்து கிடக்கும் மணலினும் பல்லாண்டுகள் நீயும் வாழ்வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : பைம்பொன் - பசும்பொன். பைம்பொன் தாமரை - பசும் பொன்னாலாகிய தாமரைப் பூக்கள். பாணர்ச் சூட்டி - பாணர்க்குப் பரிசிலாக அணிவித்து: இஃது இக்காலத்து ‘மெடல்’ அணிவிப்பதுபோன்று அணிவிக்கும் சிறப்பாகலாம். ஒண்ணுதல் விறலியர் - ஒளியுடைய நெற்றியினரான விறலியர்; நெற்றி ஒளியுடைய தென்றது அவர்தாம் நல்லழகினையுடையவர் என்பதற்காம். ஆரம் - பொன்னரி மாலை; இதுவும் பரிசிலாகத் தருவது. கெடலரும் பல்புகழ் - கெடுதலில்லாத பலவான புகழ்கள்; அஃதாவது பொய்மையான புகழ் அன்று என்பதாம். நிலைஇ நிலைபெறுத்தி. நீர் புக்கு - கடலுள் சென்று. ‘கடலோடு உழந்த’ என்றது, கடற்கண் தொல்லை தந்த பகைவரோடு போரிட்டு வென்ற என்றதாம். பனித்துறை - குளிர்ச்சியான கடற்றுறை, தாரம் - செல்வம்; இது அப் பகைவரிடமிருந்து அவரை வென்று கைப்பற்றிய பல பொருள்கள். கொள்ளாப் பாடல் - புகழை முற்றவும் கொண்டிராத பாடல்; பொருட் செறிவு இல்லாப் பாடலும் ஆம்; இசையோடு பொருந்தாத பாடல் எனினும் பொருந்தும். கல்லா - தரமறிந்து பிரித்துப் பரிசில் தருதலை அறியாத நிலை; தனக்கெனப் பேணி வைத்துக் கொள்ளாத நிலையும் ஆம். வாய்மை - உள்ளத்தை மறைக்காத தன்மை. ‘கை நேர் நிரைப்ப - கைகளை வரிசை வரிசையாக நீட்ட; பரிசில்ர் அத்துணைப் பெருந்தொகையினர் என்பதாம்.

வணங்கிய சாயல் - பணிந்த மென்மை; பணிதல் ஆன்றோர் மாட்டும், சிறந்த நட்பினர் மாட்டும் என்க. முனை - போர்முனை. கனையெரி - கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு. இதழ் - பூவிதழ்; குட்டுவனின் மார்பினிடத்து மாலையிலுள்ள பூதவிழ்கள். சாந்து - சந்தனம். பொறி - பொறிந்த சாந்தம். ஊரழலின் வெப்பத்தாலே மார்பின் சாந்தம் காய்ந்து பொறிப்பட்டு உதிரலாயிற்று என்க. நின் மலை - நினக்குரிய மலை; நின் கடல் - நினக்குரிய கடல்; எனவே, இடைப்பட்ட நிலமும் நினக்கு உரியதென்றனர். தீநீர் விழா - இனிதான் புதுப்புனல் விழா. ‘சுற்றம்’ என்றது, அரசியற் கருமத் தலைவரும் அகவாழ்வுத் துணைவியும், பிறருமாகிய சுற்றத்தினரை. ‘இனிது நுகரும்’ என்றது, பொருள் தான் செலவழிதலைப் பற்றிக் கருதாது, அவ்வாறு செலவாதலிலே இனிமைகண்டு நுகரும் என்றதாம்; இஃது அளவற்ற வளனுடைமையைக் குறிப்பதாகும். காஞ்சியம் பெருந்துறை - காஞ்சியாற்றின் பெரிய நீர்த்துறை; இவ்வாறு இந்நாளையக் கொங்கு நாட்டுப் பேரூர்க்கருகில் செல்கிறது; ‘நொய்யல்’ என்னும் பெயரையும் கொண்டுள்ளது.

ஆசிரியர் பரணர் செங்குட்டுவன வாழ்த்தும்போது, ‘நிவந்து கரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றை’க் குறிப்பிடாமல், காஞ்சியாற்றைக் குறிப்பதற்குக் காரணம் ஏதேனும் இருத்தல் வேண்டும்; இது சிந்தித்தற்குரியது.

49. செங்கை மறவர் !

துறை : விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : செங்கை ம்றவர். இதனாற் சொல்லியது : குட்டுவனது வரையாத ஈகைச் சிறப்பு.

[பெயர் விளக்கம் : ‘நெய்த் தோர் தொட்ட செங்கை மறவர்’ என்று, அவர் பகைவர்பால் தாம் செலுத்திய வேல் முதலாயினவற்றால் அப் பகைவரை வீழ்த்தி, மீளவும் அவற்றைத் தாம் பறித்துக்கொள்ளுங் காலத்தே, அவற்றிற் படிந்தும், குத்து வாயினின்றும் ஒழுகியும் பெருகிய பகைவரது குருதியாற் சிவந்த கையினரான மறவர் என, அவரது மறமாண்பைப் புனைந்து கூறிய சிறப்பால், இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.]

யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்
துயலும் கோதைத் துளங்கியல் விறலியர்!
கொளைவல் வாழ்க்கைதும் கிளையினிது உணீ இயர்;
களிறுபரந்து இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப 5

எஃகுதுரந்து எழுதரும் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூ உநிலை அதிர மணடி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் 10

நிறம்படு குருதி நிலம்படர்ந்து ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்து ஒழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15

கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த
பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே.

தெளிவுரை : களிற்றுப் படையிலுள்ள களிறுகள் பரந்து செல்லும்; விரைந்த செலவைக் கொண்ட குதிரைகள் தம்மைச் செலுத்தும் மறவரைச் சுமந்தபடி கடிதாகச் செல்லும்; விளங்குங் கொடிகள் அசையச் செல்லும் தேர்கள் வழியின் தன்மைக்கேற்ப விலகிச் சுழன்றபடியே செல்லும்; வேற்படை செலுத்தியபடி போர் எழுச்சி மேற்கொண்டு வருகின்ற பகையரசரது முன்னணிப் படையினது, இருபக்கமாகவும் வரும் பக்கப்படைகளைப் பொருது அழித்து வெற்றி கொள்ளும், கடுமையான தூசிப்படையினைக் கொண்டவர்; இத் தகையரான, போர்க்களங்களிலே வெற்றி யொன்றனையே பெறுகின்றவரான மறஞ்சிறந்த இருபெரு வேந்தரும், வேளிர்குலத் தலைவர்களும், தம்முள்ளே அறுகையை வெற்றி கொள்ளுதலாகிய ஒன்றையே கூறியபடி, தம் படை யணிகளுடனே ஒன்றுபட்டு வந்தனர். மிகுதியான அப்படைப் பெருக்கின் வலிமையினாலே செருக்குடையவனாக, அவரோடு தானும் கூடியவனாக வந்தனன் மோகூர் மன்னனாகிய பழையன்; அப் பழையனின், வெற்றியைத் தரும் படைமறவர் கூட்டமெல்லாம் கலந்து சிதையுமாறு, நெருங்கித் தாக்கி அழித்தவன் செங்குட்டுவன்.

பகைவரை எறிந்து மீளப்பறித்த வேற்படைகளை ஏந்தி வருதலாலே, குருதியளைந்த சிவந்த கையினராக வரும் படை மறவருடைய, மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழியும் குருதியானது. அப் போர்க்களத்தின் நிலத்திற் பரவி ஓடியது; மழைநாளிற் செல்லும் புனலொழுக்கைப்போலப் பள்ளங் களிற் பரந்து அக் குருதிவெள்ளம் செல்லலாயிற்று; பட்டு வீழும்மறவர் பிணங்கள் எப்புறமும் குவிந்தன; பலவற்றையும் அவ்வாறு பாழ் செய்தான் குட்டுவன்; ஒலிக்கின்ற கண்ணையுடைய அவனுடைய வெற்றிமுரசமானது போர்க்களத்தின் நடுவிடத்தேயிருந்து, வெற்றியை அறிவித்தபடி முழங்கத் தொடங்கியது; பகைத்துவந்த அப்பழையனது படைவளம் முற்றவும் அழிந்தது; இருந்து வாழ்தற்குரியவரான இளமை கொண்ட மறவர் பலரும் அக்களத்திற் பட்டு வீழ்ந்தனர்; மேலும், அப் பழையன்மேற்சென்று, அவன் நாட்டுட்புகுந்து அவனுக்குரிய காவல் மரமான கரிய கிளைகளையும் வன்மை யினையுமுடைய வேம்பினையும் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினான்; அத்தகைய பெருஞ்சினத்தைக் கொண்டவன் செங்குட்டுவன். அவனைக் கண்டு வருவதற்காக

அசைந்தபடி தொங்கும் கூந்தலையும், அஞ்சுகின்ற இயல் பையுமுடைய விறலியரே! யாமும் அவன்பாற் செல்கின்றேம்; நீவிரும் அவனிடத்தே வருக. பாடலின் வன்மையாலே வாழும் வாழ்க்கை நெறியினையுடைய நும் கூட்டத்தவர். இனிதாக உண்டு களிப்பாராக!

சொற்பொருளும் விளக்கமும்: களிறுகள் அசைந்தசைந்து செல்லும் இயல்பினவாதலின் அவை செல்லுதலைப் பரந்து இயல என்றனர்; போர்த் தொழிலுக்கேற்ற பயிற்சிகளால் மிகுதியும் தேர்ந்தவைபற்றிக் குதிரைகளைக் கடுமாஎன்றனர். அவற்றைச் செலுத்தும் வீரரன்றியும், அவையும் தம்செலவு வேகத்தால் மிதித்தும் கடித்தும் பகை மறவரை அழித்தலைச் செய்வன என்பதாம். ‘தேர் திரிந்து கொட்ப’ என்றது, தேர்தான் நெறியின் சால்புக் கேற்பச் சுழன்று விலகிவிலகிச் செல்வதைக் கூறியதாம்; இது நெறிதான் செம்மையற்ற நெறியென்பதையும் உணர்த்தும். பக்கப்படையைத் தாக்கியழித்தலின் போது துணைப்படை தானே ஒழிதலும், உட்படை நெருககுண்டு சிதைதலும் நேர்தலின், ‘கைகவர் கடுந்தார்’ என்றனர்; கைகலந்த போரைச் செய்யும் கடுமையுடைய முன்னணிப் படையும் ஆம். தாரையும் போரையும் உடையவரான வேந்தரென்று பகைவரைச் சிறப்பித்து, அவரை வென்ற குட்டுவனின் மேலான வலிமையை விளக்க முற்படுகின்றார் பரணர்.

இனிக் ‘கைகவர் நெடுந்தார்’ என்பதற்கு, ‘மாற்றார் படையிலே வகுத்து நிறுத்தின கைகளைச் சென்று கவருகின்ற கடிய தூசிப் படை’ என்னும் பழையவுரையும் பொருத்தும். இவர் அனைவரும், கொங்கு நாட்டை வெற்றி கொள்ளக் கருதிப் படையொடு வந்தவர் என்று கொள்க. முடிவேந்தரது படைத்திரளும் வேளிரது படைத்திரளும் துணைவருதலால் மொய்வளஞ் செருக்கி மொசிந்துவந்த மோகூர்ப் பழையன் என்றும் கொள்க. இவன் வெற்றிபெறக் கருதியவன் அறுகையாவான்; இவ் அறுகை குட்டுவனின் நண்பன். ‘மொய்’ - வலிமை. மொய்வளம் . படை வலிமையாகிய வளமை. இந்தச் செருக்கினாலே ஏற்பட்ட களிப்பே பழையன் சேரனைப் பற்றி ஆராயாதும், உரிய படை வகுப்புக்களைச் செய்து தற்காவாதும், அழிவினைத் தானே தேடுதற்குக் காரணமாயின என்பதுமாம்.

நெய்த்தோர் - குருதி. செங்கை - குருதியாற் சிவந்த கை. நிறம் படு குருதி - மார்பிற்பட்ட புண்களிலிருந்து வழியும் குருதி இதனால், அவருடைய மறமாண்பும் கூறினார். அவல் - பள்ளம். படுபிணம் - பட்டு வீழ்தலாற் பிணமான மறவரின் உடல்கள். படுகண் முரசம் - ஒலிக்கும் கண்ணைப் பெற்றுள்ள முரசம். நடுவண் - களத்தின் நடுவிடத்தே. ‘பாழ் பல செய்து’ என்றது பட்டு வீழும் மறவரோடு, களிறும் மரவும் தேருமாகிய பலவும் உடன் சிதைந்து வீழ்தலின். ‘வளன் அற’ என்றது மோகூரானது படைவலி மட்டுமன்றிக் குட்டுவனின் படைமறவர் அவன் கோநகருட் புகுந்து அவ்ன் செல்வங்களையும் கொள்ளை கொண்டனர் என்றதாம். இதனை நயமாக மேலும் கூறுவார். வேம்பு அறுத்ததனைக் கூறினார். ‘வேம்பு’ பழையனின் காவல்மரம். இவ்வாறு அழிபாடைதலில் வீரரன்றி நாட்டு மக்களும் பலராக இருத்தலைக்கூறுவார், ‘பெருஞ்சினக் குட்டுவன்’ என, அவன் நிலையைக் கூறினர். மோகூரானையும், அவன் நாட்டையும், மறவரையும் அழித்தல் என்னும் பெருஞ்சினமன்றிப் பிறவற்றை எண்ணாதவன் என்றதாம்.

‘துயலும் கோதை’ என்றது, பின்னித் தாழவிடப்பெற்ற தலைமயிர் என்றதாம். துளக்கம் - அச்சம்; அது பெண்மைப் பண்புகளுள் ஒன்று. கொளை பாட்டு. பழையனை வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறியது. அவனிடமிருந்து கவர்ந்த பெருஞ்செல்வம் செங்குட்டுவனிடம் மிகுதியாக உளதாதலால், அவன் நிறைய வழங்குவான் என்பதற்காம்.

50. வெருவரு புனற்றார்!

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வெருவரு புனற்றார். இதனாற் சொல்லியது: செங்குட்டுவன் போர் வேட்கையே மிகுந்தானாயிருந்த தன்மையினை.

[பெயர் விளக்கம் : பகை துறந்து பணிந்து தன்னை அடைந்து ஒழுகுவாரும், பகைவர்க்கு நேர்ந்த அழிவைக் கண்டு, அவன் வெற்றி மாலையைக் காணுந்தோறும், தம் பகையை எண்ணி அச்சங்கொண்டவராய் மேலும் பணிந்து போதலைக் கைக்கொள்வர் என உரைத்த நயத்தால், இப் பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கான்மயங்கு கதழுறை ஆலியொடு சிதறிக்
கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய
வளங்கெழு சிறப்பின் உலகம் புரை இச்
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறைக் 5

காவிரி யன்றியும் பூவிரி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை;

கொல்களிற்று, உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பின் எஃகுமீன் அவிர்வர
விரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க்கு 10

அாண மாகிய வெருவரு புனற்றார்
கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர்கடந்து உருத்த
ஆள்மலி மருங்கின் நாடகப் படுத்து
நல்லிசை நனந்தலை இரிய ஒன்னார் 15

உருப்பற நிரப்பினை யாதலின் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப்பு உற்ற
வரிஞிமிறு இமிரும் மார்புபிணி மகளிர்
விரிமென் கூந்தல் மெல்லணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் 20

பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
எவன்பல கழியுமோ பெரும; பன்னாள்
பகைவெம் மையின் பாசறை மரீஇப்
பாடரிது இயைந்த சிறுதுயில் இயலாது
கோடுமுழங் கிமிழிசை எடுப்பும் 25
பீடுகெழு செல்வம் மரீஇய கண்ணே.

தெளிவுரை : தன் முழக்கத்தினாலே, பெரிய மலையிடத்தேயுள்ள விலங்கினத் தொகுதியெல்லாம் நடுங்குமாறும், காற்றுக் கலந்து மோதுதலாலே விரைவுடன் பெய்யும் துளிகளை உடையதாகவும், ஆலங்கட்டியோடுங் கூடியதாகவும், மேகமானது மழையைப் பொழிந்தது; அதனாலே, கரும்புகள் நெருங்கிய கழனிகளையுடைய மருதநிலப் பகுதிகள் வளத்தைப் பெருகச் சுரந்தன; மேலும் பலவகை வளங்களும் பொருந்திய சிறப்பினையுடையதாக இவ்வுலகம் விளங்குமாறு மழைதான் இவ்வுலகத்தைக் காத்து வரும்; நேர்கிழக்காக ஒடிச்செல்லும் கலங்கிய நீர் நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியாற்றை யன்றியும், ஆன்பொருநையும், குடவனாறும் பூக்கள் நிறைந்த புனலுடையவாய்க் கலக்க, ஒப்பற்ற அம் மூன்றாறுகளும் ஒன்றாகக்கூடிய முக்கூடலின் தன்மையை நாடு புரத்தலின் நீதான் ஒப்பவனாவாய்.

போரிற் பகைவரைக் கொல்லும் இயல்புடையவான களிறுகள் பரந்த கடலலைகளைப்போல அசைந்துவரும்; வலிய வில்லாகிய படையினைக் கொண்டோர், அவ்அலைகள் உடைந்து சிதறும் துளிகளைப்போல நாற்புறமும் பரவுவர்; உயர்ந்த தோற்கிடுகின் விளிம்பின் மேலாக வேற்படையாகிய மீன்கள் ஒளி செய்தபடி விளங்கும்; இவற்றின் ஆரவாரத்தோடு கலந்தெழும் நின் போர்முரசத்தின் ஒலியைக்கேட்டுப் பகையரசர் அஞ்சுவர். அஞ்சிய அவர்கள் நின்னைப் புகலாக வந்தடைவர். அவர்கட்கு நீயும் அரணாக விளங்கி, அவர்களைக் காப்பாய். பகைவர்க்கு அச்சந்தரும் நின் தூசிப்படையாகிய வெள்ளமானது, மலையிடத்தும் கடலிடத்தும், பிற விடத்தும் உள்ளவான அரண்களிடத்தே பொருந்திய போர்களை வெற்றி கொள்ளும். உட்குப் பொருந்திய மறவர்களை யுடைத்தாயிருந்த அந்நாடுகளைக் கைப்பற்றும். இவ்வாறாக நின்னைப் பகைத்தோரது நல்ல புகழனைத்தும் கெட்டழியுமாறு, நீதான் அவரையழித்து, அவரது சினத்தை முற்ற அவியுமாறும் செய்தனை.

ஆதலினாலே, மார்பில் பூசிய சந்தனம் புலருமாறும், நெற்றித் திலகமும் கண் மையுமாகிய வண்ணங்கள் துடைக்கப்படவும், பலவகையான அழகுபொருந்திய கோடுகளைக் கொண்ட வண்டினம் ஒலிக்கும் நின் மார்பினாற் பிணிக்கப் பெற்ற மகளிரது, விரிந்த மெல்லிய கூந்தலாகிய மெல்லணையிலே தங்கி வருந்துகின்ற காமமாகிய நோயை நீக்கும் பொருட்டாக, அவரது மார்பைச் சேர்ந்திருக்கும் கூட்டத்தாலே இராப்பொழுதைப் பயன்கொள்ளும் முறைமையினாலே உண்டான மெல்லிய சிறு துயிலானது, நீங்குவதற்கு நாள் எவ்வளவு பலமாகக் கழியுமோ, பெருமானே!

பலவான நாட்களும் பாசறையிடத்தேயாகத் தங்கியிருத்தலாலே, சங்கு முழங்கும் முழக்கமும், பிற கருவிகள் எழுப்பும் இசை முழக்கமும் எழுப்பும், பெருமைபொருந்திய படையாகிய செல்வத்தின்பால் பழகிய நின் கண்கள், பகைவரிடத்தே உண்டாகிய சினமிகுதியினாலே, உறங்குதல் அரிதாகிப் பொருந்திய சிறுதுயிலை மேற்கொள்ளலும் இயலாது.

சொற்பொருள விளக்கம் : மாமலை - பெருமலை; கருமலையும் ஆம். முழக்கம் - இடிமுழக்கம். பனிப்ப - நடுங்க; இடியோசையாலும், மழை நீரால் உண்டான குளிராலும் நடுங்க. கால் - காற்று. ‘கான் மயங்கு’ ‘காட்டிடமெல்லாம் இடம் தெரியாவாறு மயக்கத்தைச் செய்ய’ எனலும் ஆம்; பெரு மழை பொழிதலால் காட்டின் பகுதிகளை அறிந்துணர இயலாவாயின என்க. ‘வளங்கெழு சிறப்பு’ என்றது பிறவாகிய வளங்களை; இவை மலைபடுபொருளும், காடுபடுபொருளும், கடல்படு பொருளும் ஆகியன; நாடுபடு பொருளைக் ‘கரும்பமல் கழனிய நாடு வளம் பொழிய’ எனத் தனித்துக் கூறியது, அதுவே சிறப்பானது என்பதனால். செங்குணக்கு - நேர் கிழக்கு. கலுழி - கலங்கல். பூவிரி புனல் - பூக்களால் வேயப்பெற்றாற்போல வரும் புதுப்புனல். கூடல் - காவிரியும், குடவனாரும், ஆன்பொருநையும் கூடுமிடம்; இதனை முக்கூடல் என்பர்; இங்கே பழைதாகிய சிவாலயம் ஒன்று உளதென்பர் டாக்டர். உ. வே. சா. காவிரியல்லாமலும், மூன்றுடன் கூடிய கடலை ஒப்பாவாய் என்பதாம்.

உரவு - வலிமை. பிசிர் - சிறுதுளி, பண்ணை - முரசம். தார் - தூசிப்படை. கல் - மலை. உருத்தல் - உட்குப் பொருந்தல்; செங்குட்டுவனின் படைப் பெருக்கத்தை இவ்வாறு வெள்ளத்திற்கு ஒப்பிடுகின்றார் பரணர். மலையையும் கடலையும் பிறவற்றையும் அரண்களாகக் கொண்டு செருக்கியிருந்த பகைவரையும் வென்றான் என்றனர். ஆள் - போர் வீரர். நல்லிசை - நல்ல புகழ் பண்டு பெற்ற வெற்றிப் புகழ்; அது தான் செங்குட்டுவனைப் பகைத்தாலலே அழிந்ததென்பர். ‘நல்லிசை இரிய’ என்றனர். உருப்பு - வெப்பம்; இவ்விடத்து வெகுளிக்கு ஆயிற்று.

சாந்தம் புலர்தலும், வண்ணம் கலைதலும், வனப்பு அழிதலும் புணர்ச்சிக்கண் இயல்பாம்; ஆதலின் அவற்றைக் கூறினார். கூந்தல் மெல்லணை - கூந்தலாகிய மெல்லணை. சிறு துயில் - மெல்லிய உறக்கம். ‘மென்பிணி’ என்றது, புணர்ச்சி யெல்லைக்கண், அப் புணர்ச்சி கலையலானே வந்த சிறு துயிலை. கண்ணைப் பூவென்னும் நினைவினனாய்ப் பிணிய விழவெனப் பூத்தொழிலாற் கூறினான் என்றும் கூறுவர்.

பன்னாள் - பலவான நாட்கள். மரீஇ - தங்கியிருந்து. கோடு - சங்கம். பீடு - பெருமை. சிறுதுயில் - மென் துயில். வெம்மை - சினத்தீ. ‘பாடரிது இயைந்த சிறு துயில்’ என்றது, இராப் பொழுதெல்லாம் பகைவரை வெல்வதன் பொருட்டாக உள்ளத்திற் சென்ற சூழ்ச்சியின் முடிவிலே அரிதாகப்படுதல் பொருந்திய சிறுதுயில்’ என்றதாம். ‘தார்ப் புனலை ஒன்னார் உருப்பற நிரப்பினை’ என எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று.