நற்றிணை 1/056
56. நெஞ்சம் எங்கே!
- பாடியவர் : பெருவழுதி.
- திணை : பாலை.
- துறை : வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.
[(து–வி.) தலைவன், குறித்தபடி வரைந்து வராதானாக, தலைவி பெரிதும் மெலிவடைகின்றாள். அவளை ஆற்றுவிக்கும் வகையால், 'அவன் வருவான்' எனத் தோழி வலியுறுத்த, தலைவி தோழிக்குச் சொல்லுவது இது]
குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக்
கண்களி பெறூஉம் கவின்பெறு காலை
எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா
5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து,
தொல்நலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி,
"ஏதிலாட்டி இவள்' எனப்
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே
10
தோழி! குறியதாக நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறுமலர்களிலே வண்டுகள் மொய்த்துக் கிளைத்தலாலே எழுந்த நறுமணத்தைக், காற்றுப் புகுந்தடுத்துக் கொணர்ந்து வீசுதலாலே, கண்கள் களிப்பினைப் பெறுகின்ற அழகினைப் பெற்றிருந்த போதிலே, என் ஒள்ளிய வளைகளை நெகிழ்வித்துச் சென்றவரான தலைவரைக்கருதித் துன்பங்கொண்டதாய் என் நெஞ்சம் சென்றது. அப்படிச் சென்ற நெஞ்சமானது, அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு, அவரோடு ஒருங்கே திரும்பி வருதலான விருப்பத்தோடு, அவ்விடத்திருந்தே வருந்தியிருக்கின்றதோ! அன்றி, அவர்தாம் அருளாதார் ஆதலினாலே கலங்கியழிந்து இவ்விடத்துக்குத் திரும்பிவந்து, நோய் மிகக் கொண்டு அதனாலே பழைய அழகினை இழந்துவிட்ட எனது பொன்னிறமான பசலை நிறத்தைப்பார்த்து, 'இவள் நமக்கு அயலாள் ஆவள்' என, முன் தான் கண்டறிந்த என்னைத் தேடியபடியே யாண்டுப் போயிருக்கின்றதோ?
கருத்து : பிரிந்த அன்றைக்கே என் நெஞ்சமும் அவருடன் சென்றுவிட்டது; யான் என் செய்வேன்?' எனத் தன் ஆராத் துயரத்தைத் தலைவி உணர்த்துகின்றாள் என்பதாம்.சொற்பொருள் : குறுநிலை – குறுகிய நிலை: மரத்தின் குறுமையைக் கூறியது. இரவு – குராமரம். அசாவா – தளரா, பொன்நிறம் – துத்தி படர்ந்ததாலே வந்துற்ற நிறம்.
விளக்கம் : குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ, வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக் கண் களி பெறூஉம் கவின்பெறு காலை' என்றது, முன்பு தலைவன் வரைவிடை வைத்துத் தன்னைத் தெளிவித்தகன்ற குறியிடத்தின் செவ்வியை நினைத்து கூறியதாம். 'கண் களிபெறூஉம் கவின் பெற்றது' காட்டிடம் எங்கணும் என்க. 'அவரைப் பிரிய மாட்டாது' அவருடனே சென்ற நெஞ்சம், என்னை முற்றவும் மறந்ததாய், அவரோடு தானும் வருதலைக் கருதினதாய், அங்கேயே இருக்கின்றதோ; அன்றி என்பால் வந்தும் என் மேனி வேறுபாட்டால் என்னை யாளென அறியாதே போய் என்னைத் தேடித் திரிகின்றதோ?' இப்படி நோகின்றாள் தலைவி.
மேற்கோள் : 'பிரிந்த வழிக் கலங்கினும்' என்னும் துறைக்கு இச் செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளனர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 111 உரை).