உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/062

விக்கிமூலம் இலிருந்து

62. எம் திங்கள்!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்துவந்த தலைவன்,

பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச், சொல்லிச் செலவழுங்குவித்தது.

[(து–வி.) பொருள்பாற் சென்ற தன் நெஞ்சிற்கு, முன்பு பிரிந்துசென்ற காலத்துத் தானுற்ற துயரத்தைக் கூறியவனாக, அந்த நினைவைக் கைவிடச் சொல்லுகின்றான், தலைவன் ஒருவன்]

வேய்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை அயாஉயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி, நின்றுநினைந்து
உள்ளினென் அல்லெனோ, யானே—முள்ளெயிற்றுத் 5
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
எமதும் உண்டுஓர் மதிநாட் டிங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப; நிழல்தப
உலவை ஆகிய மரத்த
கல்பிறங்கு உயர்மலை உம்பரஃது எனவே? 10

வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புத்த மூங்கிற் புதரிடத்தே காற்று மோதிச் செல்லும். காற்றுச் செல்லுதவாலே தறியிடத்தே கட்டப்பெற்றிருக்கும் யானையொன்று அயாவுயிர்த்தாற் போன்ற இனிய ஓசையும் அதனின்றும் எழுந்துகொண்டிருக்கும். கோடை நீடியதும், மூங்கில்கள் நிரம்பியதுமான அத்தகைய காட்டகத்து வழியிலே, மலையிடத்து மறையப்போகின்றதான பௌர்ணமித் திங்களை யானும் நோக்கினேன். நோக்கியதும், மேலும் நடைதொடர மாட்டாதே நின்று தலைவியை நினைந்தேன். முட்போல கூரியலான பற்களையும், திலகமிட்டிருக்கப்பெற்ற இனிமை கமழும் அழகிய நெற்றியையும் கொண்ட நாள் நிரம்பிய திங்களொன்று, எம்முடைய உரிமைப் பொருளாகவும் உண்டென்று கருதினேன். முழங்குகின்ற குரவையுடைய வெங்காற்று இலைகளை எடுத்துச்செல்லுதலால் நிழவிடும் தன்மையிழந்து, உலர்ந்த கொம்புகளாகவே நிற்கின்ற மரங்களையுடையதும், கற்கள் விளங்குவதுமான உயர்ந்த மலைக்கு அப்பாலுள்ள ஊரிலிருப்பது அத் திங்கள் என்றும், அவ்விடத்து யான் எண்ணினேன் அல்லெனோ!

கருத்து : காட்டு வழியில் நடக்கும்பொழுதும், இரவு முற்றவும். இவள் நினைவாலேயே வருந்தினேன் என்பதாம்.

சொற்பொருள் : பிணி – பின்னிக்கிடத்தல். வெதிரம். மூங்கில். நரல் இசை – ஒலிக்கும் இசை. கந்து – கட்டுத் தறி. என்றூழ் – கோடை. தேம் – இனிமை.

விளக்கம் : 'குன்றூர் மதியம் நோக்கி, நின்று நினைந்து' என்றதனால், முழுநிலாத் திங்களையுடைய இரவு முற்றவும் வழிநடந்து கொண்டிருந்தவன், அதிகாலை வேளையினோ திங்களை மலைவாயிடத்துக் கண்டு, இப்படி நினைந்தான் என்று கொள்க. 'நின்று' என்றது, உடன் நடப்பாருடன் சேரச்செல்லாமல் தனியாக 'நின்று' என்றதாம். 'எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள்' என்றது. தலைவியின் திருமுகத்தை வியந்து கூறிக்கொண்டதாம். 'உயர்மலை உம்பரஃது' என்பதற்கு, 'உயர்மலையின் அப்பாலுள்ள ஊரிடத்தேயுள்ளது' என்று கொள்ளல் வேண்டும். 'அழுவத்து, கல்பிறங்கு உயர்மலை உம்பரத்து, குன்றூர் மதியம்' எனக் கூட்டிப் பொருள் காணினும் பொருத்தும்.

மேற்கோள் : 'நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்' என்னும் சூத்திரத்திற்கு (தொல், பொருள். 42. உரை.)

இச் செய்யுளை எடுத்துக்காட்டி, 'இவை தலைவிகண் நிகழ்ந்தனவும், அவள் தன்மையும், பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க' எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இளம்பூரண அடிகளும், இச்செய்யுளை இச்சூத்திரத்திற்கே மேற்கோளாகக் காட்டியுள்ளனர் (தொல். பொருள். இளம்.சூ.46 உரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/062&oldid=1731457" இலிருந்து மீள்விக்கப்பட்டது