உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/151

விக்கிமூலம் இலிருந்து

151. இரவில் வாரற்க!

பாடியவர் : இளநாகனார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) இரவுர் குறிந்தண் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான் தலைவன், அவனுக்குத் தாம் வரைவு வேட்டலைப் புலப்படுத்தக் கருதிய தோழி, அவனும் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றனள்.]

நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்
கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட் டியானை
கன்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்க தில்ல தோழி! கடுவன், 5
முறிஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்துக் களவினிற் புணர்ந்த
செம்முக மந்தி செய்குறி கருங்கால்
பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்,
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன் 10
புன்றலைப் பாறுமயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவி னானே!

தோழி! மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்திருக்கின்ற மலைச்சாரற்புறத்தே ஒரு கடுவனோடு களவுப்புணர்ச்சியிலே கூடி இன்புற்றது சிவந்தது முகத்தையுடைய மந்தி ஒன்று. புணர்ச்சியாலே தன்மேனியிடத்துத் தோன்றிய வேறுபாடுகளைத், தளிர்களைத் தின்றபடி இருக்கின்ற தன் பெரிய சுற்றமெல்லாம் அறிந்து கொள்ளுமோவென அஞ்சியது. அதனால், பொன்போன்ற பூங்கொத்துக்களையுடைய வேங்கையினது பூக்கள் மலிந்திருக்கும் ஒரு கிளையின்மீது ஏறிச்சென்று அமர்ந்ததாய், ஆழமான நீர்நிலையை உடையதான நெடிய சுனையை நோக்கிக் கவிழ்ந்து, தன்னுடைய புல்லிய தலையிடத்துக் கலைந்திருக்கும். மென்மயிரைத் திருத்திக்கொள்ளலையும் செய்தது. அத் தன்மையுடைய நாட்டினன் தலைவன். அவன்தான், நினது அழகான நெற்றியிடத்தே பசலை படர்ந்ததாயினும், நின்னது பெருந்த தோள்கள் வளை நெகிழப் பெற்றவானாலும், இரவுப் போதில் நின்பால் வாராதிருப்பானாக. எதிர்ப்பட்டாரைக் கொல்லுதலான மாறுபாட்டையுடைய பெரிய புலியினைப் புகுதற்கு அரிதான முழையருகே தாக்கிக் கொன்று, அதனாற் சிவந்த குருதிக் கீறையாகிய மறுவினைக்கொண்ட வெண்கோட்டு யானையானது, மலைமேனின்று வீழும் அருவியிடத்தே சென்று அக்கறையினைக் கழுவிக்கொள்ளும். அத்தகைய கொடிய காட்டு வழியைக் கடந்து, இரவில் இனி அவன் வாராதிருப்பானாக!

கருத்து : 'அவன், இனி நின்னை வரைத்துவந்தானாகி மணம்பெற்று வாழ்தலே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : முரண் – மாறுபாடு. கழூஉம் – கழுவும். கறி – மிளகுக் கொடி. முறி – தளிர், செய்குறை – செய்த புணர்குறி; இது தலைமயிர் கலைந்ததைக் குறித்ததாம். புன்தலை – புல்லிய தலை. பாறு மயிர் – கலைந்த மயிர்.

உள்ளுறை : 'மந்தியும் தலைமயிர்க் கலைவினைத் தன் கிளைகட்கு அஞ்சி ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நாடன்' என்றது, அவ்வாறே தலைவியும் தன் களவொழுக்கத்தாலே உண்டாகும் புதுப்பொலிவுகளை மறைத்து வாழ்கின்ற இக்கட்டான நிலையிலே உள்ளனள்: அது தீர்தற்கேனும் அவளை மணந்துகோடலே தக்கது என்பதாம்.

இறைச்சி : 'இரும்புலியைக் கொன்றழித்த களிறு அருவி நீரிலே தன் குருதிக்கறை படிந்த வெண் கொம்புகளைக் கழுவும்' என்றது, வழியது ஏதத்திற்குத் தாம் அஞ்சியதனைக் கூறினாலும், அவ்வாறே, தலைவிக்குக் களவாலே வந்துற்ற பழிதான் நீங்குதற்கு தானே காரணமாதலை அறிந்த தலைவன் அவளை விரைய மணந்து கொள்வானாக' என்பதுமாம்.

விளக்கம் : நுதல் பசத்தலும், தோள்வளை நெகிழ்தலும், களவின்கண் இடையீடுபட்டு வருகின்ற சிறுபிரிவையும் பொறுத்தற்காற்றாத தலைவினது தன்மையைச் சுட்டிக் கூறியனவாம். 'கொன் முரண் இரும்புலி' என அதன் ஆற்றலைக் கூறியது. அதனையும் குத்திக்கொன்ற களிற்றது ஆற்றலை வியந்து பாராட்டுதற்காம். 'அருவியிற் கழுவும்' என்றது, அவ்வழியே வரும் தலைவனைக் காணின், அஃது அவனைத் தாக்குதலும் கூடும்' எனத் தாம் அஞ்சியது கூறியதாம். அதுவும் தான் கொண்ட கறையைக் கழுவுமாறுபோலத் தலைவனும் தன் பழியைப் போக்கவேண்டும் என்பதுமாம். 'பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினை' எனச் சொன்னது, அதுதான் மணத்திற்குரிய நற்காலமென அறிவுறுத்தற்காம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/151&oldid=1731755" இலிருந்து மீள்விக்கப்பட்டது