உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/155

விக்கிமூலம் இலிருந்து

155. பனி பரந்தன!

பாடியவர் : பராயனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது: (2) உணர்ப்புவயின் வாரா ஊடற் கண்ணே தலைவன் சொற்றதூஉம் ஆம்.

[(து–வி.) (1) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன் பிற்றை நாளிலே, குறியிடத்தில் தலைவியைச் சந்திக்கும் தலைவன், அவளைப் பேசவைக்கும் விருப்பினனாக இப்படிக் கூறுகின்றனன். (2) வெள்ளணி நாளிலே தலைவிபால் வந்துற்ற தலைவன், தான் இரந்து நின்று பலவாறு உணர்த்தியதன் பின்னரும் ஊடி நின்றாளை நோக்கி, "இவள்தான் யாவளோ?" என வேற்றாள்போலப் பாவித்துக் கூறுதலாக அமைந்தது]

'ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்!.
யாரை யோநிற் றொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்திரைப் 5
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ;
இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ?
சொல்லினி, மடந்தை!' என்றனென்; அதனெதிர்
முள்எயிற்று முறுவல் திறந்தன;
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே. 10

"ஒள்ளிழையரான நின் ஆயமகளிரோடுங் கூடிக்கலந்து பாவை புனைந்தாடும் ஓரையாடலையும் செய்யபாட்டாய். வளவிய இதழ்களையுடைய நெய்தற் பூக்களைத் தொடுத்து அமைத்த தொடலை மாலையினையும் புனையமாட்டாய். விரிந்த பூவையுடைய கானற்சோலையிடத்து ஒருபுறத்தே தனியாகச் சோர்ந்து நிற்பவளும் ஆயினை! நோக்கினாராலே நெருங்கமுடியாத நலத்தினை உடையவளே! மடந்தையே! நின்னைத் தொழுதேமாக நின்று வினவுகின்றேன். தெளிந்த அலைகளைக் கொண்ட பெருங்கடற் பரப்பினிடத்தே விரும்பி உறைகின்றவொரு நீரரமகளாமோ? கரிய கழியிடத்தே வந்து நிலைகொண்டு உறைகின்ற தேவமகளாமோ? நீதான் யாராவையோ? அதனைச் சொல்வாயாக" என்றேம். என்றலும், அதற்கு விடையாக, முட்போன்ற கூரிய பற்களிடையே நின்றும் முறுவற்குறிப்புப் பிறந்தது; ஈரிமைகளை உடைய மையுண்ட கண்களும் முயங்கற் குறிப்பைக் காட்டியவாய்ப் பனிபரந்தன!

கருத்து : 'முயங்கற் குறிப்பினை உடையாள் எனினும், நாணம் துறந்தாள் அல்லள்' என்பதாம்.

சொற்பொருள் : ஓரை – 'ஓரை' என்னும் மகளிர் விளையாட்டு. தொடலை – தழையும் பூவும் கலந்து தொடுத்த பெரிய மாலை. விரிபூங்கானல் – இதழ்விரித்த பூச்களையுடைய கானற்சோலை. 'கண்டோர்' என்றது, தனக்கு முன்பேயும் கண்டோரான இளைஞர் பலரையும் சுட்டிக் கூறியதாம். 'நீரர மகளாகிய நீதான் கருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ?' என்றலும் பொருந்தும்.

விளக்கம் : முறுவலித்தலும் கண்கலங்குதலும் புணர்ச்சி நாட்டத்தையும், நாணத்தால் கவிழ்ந்த தலை அச்சத்தையும் காட்டுவனவாகும். இரண்டாவது துறைக்கேற்பக் கொள்வதாயின், முறுவல் இசைவையும், கண்கலங்கல் பிரிவுத் துயரினை நினைத்து வருந்திய வருத்தத்தையும் காட்டுவனவாம். 'நின்னைத் தொழுதேமாகக் கேட்பேம்' என்றது. அவள்தான் கற்பு மிகவுடையாளாதலின், அவனை ஒதுக்கற்கு நினையாள் ; அவனை ஏற்று அருள்வாள் என்பதனாலாம்.

மேற்கோள் : 'நாணமும் அச்சமும் மீதூர வேட்கைக் குறிப்பு இல்லாதாளைப் போலத் தலைவி நின்ற வழி, அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதலுக்கு' இச் செய்யுளைக் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். களவு. 10 சூ. உரை).

மதியுடம்பட்ட தோழி 'நீர் கூறிய குறையை யான் மறந்தே'னெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னோடு கூடாமையால் தலைவி மருங்கிற் பிறந்த வேட்கையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையும், தலைவன் கூறுதற்கு இச்செய்யுளைக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கள. 11. சூ உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/155&oldid=1731766" இலிருந்து மீள்விக்கப்பட்டது