திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
"சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும்" - எரேமியா 13:23

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம்[தொகு]


1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:
"நீ உனக்காக நார்ப்பட்டாலான
ஒரு கச்சையை வாங்கி
அதை உன் இடையில் கட்டிக் கொள்.
அதைத் தண்ணீரில் நனைக்காதே."
2 ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி
அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
3 எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:
4 "நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள
கச்சையை எடுத்துக் கொள்;
எழுந்து பேராத்து [1] ஆற்றுக்குச் செல்.
அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை."


5 ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி
நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.
6 பல நாள்களுக்குப் பின்னர்
ஆண்டவர் என்னிடம் கூறியது:
"எழுந்து பேராத்துக்குச் சென்று
நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட
கச்சையை அங்கிருந்து எடுத்துவா."
7 அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று,
அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து
கச்சையைத் தோண்டி எடுத்தேன்.
அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில்
இற்றுப் போயிருந்தது.


8 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9 "ஆண்டவர் கூறுவது இதுவே;
இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.
10 என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து,
தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து,
வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி,
அவற்றிற்கு ஊழியம் செய்து
வழிபட்டுவரும் இத்தீய மக்கள்
எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
11 கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல,
இஸ்ரயேல், யூதா வீட்டால் யாவரும்
என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன்.
அவர்கள் எனக்கு மக்களாகவும்
பெயராகவும் புகழாகவும்
மாட்சியாகவும் இருக்கச் செய்தேன்.
அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,"
என்கிறார் ஆண்டவர்.

திராட்சை இரசச் சாடியின் அடையாளம்[தொகு]


12 நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்:
"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்."
அவர்களோ "சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது
எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?'
என்று உன்னிடம் கூறுவார்கள்.
13 அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது:
"ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்,
குருக்கள், இறைவாக்கினர்,
எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள்
யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.
14 அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன்.
தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர்.
அவர்களின் அழிவை முன்னிட்டு
நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ
அவர்களைக் காப்பாற்றவோ
அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன்,
என்கிறார் ஆண்டவர்.

அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்[தொகு]


15 செவிகொடுத்துக் கேளுங்கள்!
செருக்குறாதீர்கள்;
ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.


16 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவர்
இருள்படரச் செய்யுமுன்பும்,
உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில்
இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்.
நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே
இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;
இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.


17 ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால்,
உங்கள் செருக்கை முன்னிட்டு
என் உள்ளம் மறைவில் அழும்;
அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்;
எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.


18 அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்:
கீழே அமருங்கள்.
ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி
உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.


19 நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன;
அவற்றைத் திறப்பார் யாருமில்லை;
யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது.
அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.

ஐயகோ எருசலேமே![தொகு]


20 உன் கண்களை உயர்த்தி
வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;
உனக்குத் தரப்பட்ட மந்தை -
உன் பெருமைக்குரிய மந்தை - எங்கே?


21 உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே
உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது
நீ என்ன சொல்வாய்?
பேறுகாலப் பெண்ணின் வேதனை
உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?


22 இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என
நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்;
உன் குற்றம் பெரிது!
அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது!
உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.


23 எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா?
சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா?
அப்படி முடியுமானால்,
தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும்
நன்மை செய்ய முடியும்.


24 பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல்
நான் உங்களைச் [2] சிதறடிப்பேன்.


25 இதுவே உன் கதி!
நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!
ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய்,
என்கிறார் ஆண்டவர்.


26 உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல்
தூக்கிக் கழற்றிவிடுவேன்;
உன் அவமானம் காணப்படும்.


27 உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய
விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும்
பரந்த வெளியில் குன்றுகளின்மேல்
நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்;
ஐயகோ! எருசலேமே!
நீ தூய்மை பெறுவது எந்நாளோ?


குறிப்புகள்

[1] 13:4 - 'யூப்பிரத்தீசு' என்பது மறுபெயர்.
[2] 13:24 - 'அவர்களை' என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 14[தொகு]

கொடிய வறட்சி[தொகு]


1 வறட்சி பற்றி எரேமியாவுக்கு
ஆண்டவர் அருளிய வாக்கு:


2 யூதா துயருற்றுள்ளது;
அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன;
அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்;
எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.


3 உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்
தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;
அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்;
அங்குத் தண்ணீர் இல்லை;
அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார்கள்;
வெட்கி நாணித்
தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.


4 நாட்டில் மழை இல்லாததால்
தரை வெடிப்புற்றுள்ளது.
உழவர்கள் வெட்கித்
தங்கள் தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;


5 கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்
புல் இல்லாமையால் தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.


6 காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;
காற்று இல்லாமையால்,
குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன;
பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று,


7 ஆண்டவரே! நாங்கள் பலமுறை உம்மை விட்டகன்றோம்.
உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
எங்கள் குற்றங்களே எங்களுக்கு எதிராய்ச் சான்றுபகர்கின்றன.
எனினும், உமது பெயருக்கேற்பச் செயலாற்றும்.


8 இஸ்ரயேலின் நம்பிக்கையே!
துன்ப வேளையில் அதனை மீட்பவரே!
நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்கவேண்டும்?
இரவு மட்டும் தங்க வரும் வழிப்போக்கரைப்போல்
நீர் ஏன் இருக்க வேண்டும்?


9 நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல் தோன்ற வேண்டும்?
ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல் காணப்படவேண்டும்?
ஆயினும், ஆண்டவரே!
நீர் எங்கள் நடுவில் உள்ளீர்;
உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்;
எங்களைக் கைவிட்டு விடாதேயும்.


10 இம்மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே:
அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்;
தங்கள் கால்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை;
எனவே, ஆண்டவர் அவர்களை ஏற்கவில்லை;
இப்போது அவர்களின் தீமையை நினைவில் கொண்டு,
அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.


11 ஆண்டவர் எனக்குக் கூறியது:
இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.
12 அவர்கள் நோன்பு இருப்பினும்
நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன்.
அவர்கள் எரிபலிகளையும்
தானியப் படையல்களையும் அளிப்பினும்
அவற்றை நான் ஏற்கமாட்டேன்.
மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும்
கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.


13 "ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே!
'நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள்.
உங்களிடையே பஞ்சம் வராது.
மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை
உங்களுக்குத் தருவேன்' என
இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!" என்றேன் நான்.


14 ஆண்டவர் என்னிடம் கூறியது:
'என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள்.
நான் அவர்களை அனுப்பவில்லை;
அவர்களுக்குக் கட்டளையிடவில்லை;
அவர்களோடு பேசவுமில்லை.'
அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை:
பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல்,
வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.


15 ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து
ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் அவர்களை அனுப்பவில்லை;
எனினும், அவர்கள் 'இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா'
என்று கூறுகிறார்கள்.
வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.
16 அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும்
வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக
எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள்.
அவர்களையும் அவர்கள் மனைவியர்,
புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார்.
அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.


17 நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு:
"என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்;
இடைவிடாது சொரியட்டும்;
ஏனெனில் என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்;
அவளது காயம் மிகப் பெரிது.


18 வயல்வெளிகளுக்குச் சென்றால்,
இதோ! வாளால் மடிந்தவர்கள்!
நகரில் நுழைந்தால்,
இதோ! பசியால் நலிந்தவர்கள்!
இறைவாக்கினரும் குருக்களும்
தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.


19 நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?
நாங்கள் குணமாக முடியாதபடி
ஏன் எங்களை நொறுக்கினீர்?
நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;
பயனேதும் இல்லை!
நலம்பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்;
பேரச்சமே மிஞ்சியது!


20 ஆண்டவரே!
எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும்
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;
நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.


21 உம் பெயரை முன்னிட்டு
எங்களை உதறித் தள்ளாதீர்;
உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்;
நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்;
அதனை முறித்து விடாதீர்.


22 வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்
மழை தரவல்லது எதுவும் உண்டா?
வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா?
எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,
நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;
நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்;
ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை