திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
எசாயா (The Book of Isaiah)
[தொகு]அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
அதிகாரம் 7
[தொகு]ஆகாசுக்கு ஆண்டவரின் செய்தி
[தொகு]
1 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு
யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில்,
இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும்
இரமலியாவின் மகன் பெக்கா
என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும்
எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து
அதை வீழ்த்த முயன்றனர்.
அவர்களால் அது இயலாமற் போயிற்று.
2 'சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது'
என்னும் செய்தி
தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது;
உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள்
அலையதிர்வுகொள்வதுபோல்,
ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும்
அலைக்கழிக்கப்பட்டன.
3 அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி:
"நீ உன் மகன் செயார்யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று
ஆகாசைச் சந்திப்பாயாக.
வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில்,
மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில்
நீ ஆகாசைக் காண்பாய்.
அவனுக்கு இதைச் சொல்:
4 'நீ அமைதியாய் இரு;
அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்;
இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன்
ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே.
அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து
வரும் புகை போன்றவர்கள்.
5 சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும்
உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,
6 'யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று
அதை நடுநடுங்கச் செய்வோம்;
அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து
தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்'
என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.'
7 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்:
"அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது,
அது ஒருபோதும் நிறைவேறாது.
8 ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு;
தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின்.
(இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில்
எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை
இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்)
9 எப்ராயிமின் தலைநகர் சமாரியா;
சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன்.
உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில்
நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள்."
இம்மானுவேல் அடையாளம்
[தொகு]
10 ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும்
தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:
11 "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு
ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்;
அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ
தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார்.
12 அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட்டேன்.
ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார்.
13 அதற்கு எசாயா:
"தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்;
மனிதரின் பொறுமையைச் சோதித்து
மனம் சலிப்படையச் செய்தது போதாதோ?
என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு
ஓர் அடையாளத்தை அருள்வார்.
இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண்
ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்;
அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
15 தீமையைத் தவிர்த்து,
நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது
அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.
16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து,
நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன்,
உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும்
பாலை நிலமாக்கப்படும்.
17 எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின்
இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும்,
உம் நாட்டு மக்கள் மேலும்,
உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும்
ஆண்டவர் வரச் செய்வார்.
அசீரிய அரசனையே வரவழைப்பார்.
18 அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும்
அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும்
ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்;
19 உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து,
செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள்,
முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.
20 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து,
அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்;
அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள
முடியை மழித்து விடுவார்;
அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.
21 அந்நாளில், இளம்பசு ஒன்றையும்
ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.
22 அவை மிகுதியாகப் பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்;
நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும்,
வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.
23 அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள
ஆயிரம் திராட்சைச் செடிகள் வளாந்த நிலம் முழுவதிலும்
நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.
24 நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால்,
வில்லோடும் அம்போடுமே மனிதர்கள் வருவார்கள்.
25 மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில்
நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால்
அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார்.
அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்;
ஆடுகள் நடமாடும் காடாகும்.
- குறிப்புகள்
[1] 7:1 = 2 அர 16:5; 2 குறி 28:5-6.
[2] 7:3 "செயார்யாசிபு" என்பதற்கு "எஞ்சியோர் திரும்பி வருவர்" என்பது பொருள்.
[3] 7:14 "இளம் பெண்" - கிரேக்க மொழிபெயர்ப்பிலும்
மத்தேயு (1:23) எழுதிய நற்செய்தியிலும் "கன்னி" என்பது பாடம்.
[4] 7:14 "இம்மானுவேல்" - எபிரேயத்தில் "இறைவன் நம்மோடு உள்ளார்" என்பது பொருள்.
[5] 7:14 = மத் 1:23.
அதிகாரம் 8
[தொகு]எசாயாவின் மகன்
[தொகு]
1 அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி:
"நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில்
மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில்
மகேர் சாலால் கஸ்பாசைக் குறித்து எழுது.
2 உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும்
எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்" என்றார்.
3 நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது
அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள்.
அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி,
"அவனுக்கு 'மகேர்சாலால் கஸ்பாசு' [1] என்று பெயரிடு.
4 ஏனெனில் இச்சிறுவன் 'அப்பா, அம்மா' என்று அழைக்க அறியு முன்னே,
தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும்
அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்" என்றார்.
அசீரியரின் முற்றுகையை முன்னறிவித்தல்
[தொகு]
5 மீண்டும் ஆண்டவர் என்னோடு உரையாடினார்:
6 "அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை
வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்;
இரட்சினையும், இரமலியாவின் மகனையும் கண்டு
அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.
7 ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும்
பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும்
அவன் மேன்மையான படைகள் அனைத்தையும்
அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்வார்;
கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்;
எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்;
8 எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்;
யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்;
இம்மானுவேலே, அதன் கிளைகள்
உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்."
9 மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்;
ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்;
தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்;
போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்;
ஆயினும் கலக்கமுறுவீர்கள்.
போர்க்கோலம் கொள்ளுங்கள்;
ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.
10 ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்;
அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்;
கூடிப்பேசி முடிவெடுங்கள்;
அதுவும் பயனற்றுப் போகும்.
ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.
எசாயாவுக்கு எச்சரிக்கை
[தொகு]
11 தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து
ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க
எனக்குக் கட்டளை பிறப்பித்தார்:
12 "இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம்
நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள்.
அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ,
அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம்,
நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்;
13 படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்;
அவருக்கே அஞ்சுங்கள்;
அவர் திருமுன்னேயே நடுங்குங்கள். [2]
14 அவரே திருத்தூயகமாய் இருப்பார்;
இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும்,
இடறு கல்லாகவும்,
தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்;
எருசலேமில் குடியிருப்போருக்குப்
பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.
15 அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்;
இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்;
கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர். [3]
குறி கேட்பது பற்றி எச்சரிக்கை
[தொகு]
16 இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாய்க் கட்டிவை;
என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை;
17 யாக்கோபு குடும்பத்தாருக்குத்
தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார்,
ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்;
அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன். [4]
18 படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடிகொண்டிருக்கிறார்;
நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும்
இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும்
அறிகுறிகளாகவும் இருக்கிறோம். [5]
19 "மாயவித்தைக்காரரையும்,
முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்வோரையும்
அணுகிக் குறி கேளுங்கள்"
என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள்.
"மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ?
உயிருள்ளோருக்காகச்
செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?" என்பார்கள்.
20 "இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்"
என்று அவர்கள் சொல்லாததனால்
அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.
21 பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும்
அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்;
பசியால் வாடி வதங்கும்போது
வெறிகொண்டு தங்கள் அரசனையும்,
தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்;
முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.
22 தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்;
எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர்,
மன வேதனைகளே புலப்படும்;
காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.
- குறிப்புகள்
[1] 8:3 "மகேர் சாலால் கஸ்பாசு" - எபிரேயத்தில்,
"கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது;
இரை விரைகின்றது" என்பது பொருள்.
[2] 8:12-13 = 1 பேது 3:14-15.
[3] 8:14-15 = 1 பேது 2:8.
[4] 8:17 = எபி 2:13.
[5] 8:18 = எபி 2:13.
(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை