திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
எசாயா (The Book of Isaiah)
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு
[தொகு]
1 மோவாபைப் பற்றிய திருவாக்கு:
ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால்,
மோவாபும் அழிக்கப்படும்.
ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,
மோவாபும் அழிக்கப்படும்.
2 தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப
உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்; [*]
நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து
மோவாபு அலறி அழுகின்றது;
அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டாயிற்று.
தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.
3 அதன் தெருக்களில் நடமாடுவோர்
சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;
வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள
யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர்.
விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர்.
4 எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர்.
யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது;
படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள்,
ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான்.
5 மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது;
அதன் அகதிகள் சோவாருக்கும்
எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;
ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்
அழுதுகொண்டு செல்கின்றனர்;
ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;
6 நிம்ரியின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;
புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;
பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.
7 ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும்
சேமித்து வைத்தவற்றையும் தூக்கிக் கொண்டு
அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.
8 மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது;
அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;
அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.
9 தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;
ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;
மோவாபியருள் தப்பிப் பிழைத்தோர்மேலும்
நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்
சிங்கத்தை ஏவிவிடுவேன்.
- குறிப்பு
[*] 15:1-16:14 = எசா 25:10-12; எரே 48:1-47;
எசே 25:8-11; ஆமோ 2:1-3;செப் 2:8-11.
அதிகாரம் 16
[தொகு]மோவாபின் நம்பிக்கையற்ற நிலை
[தொகு]
1 சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச்
சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்
செம்மறியாடு அனுப்புங்கள்.
2 சிறகடித்து அலையும் பறவை போலும்
கூடு இழந்த குஞ்சுபோலும்
மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர்.
3 வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;
நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;
நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி,
விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்;
தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
4 மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
உங்களிடமே தங்கியிருக்கட்டும்;
அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப
அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;
ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;
அழிவு ஓய்ந்து போகும்;
மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர்.
5 அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்
ஓர் அரியணையை அமைப்பார்;
அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்;
அவர் உண்மையுடன் ஆள்பவர்;
நீதியை நிலைநாட்டுபவர்;
நேர்மையானதைச் செய்ய விரைபவர்.
6 மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்;
அவன் ஆணவம் பெரிதே;
அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்
செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோம்.
அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.
7 ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;
மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;
கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து,
நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.
8 எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன,
மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய
சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன.
அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;
பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;
அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து
கடல்கடந்து படர்ந்து சென்றன.
9 ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்
நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக்
கண்ணீர் விடுகின்றேன்;
எஸ்போன்! எலயாரே!
உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்;
ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்
அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.
10 வளமான வயல் நிலங்களிலிருந்து
அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.
திராட்சைத் தோட்டங்களில்
பாடல்கள் பாடுவார் யாருமில்லை;
ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.
இரசம் எடுப்பதற்கு ஆலையில்
திராட்சைக்கனி பிழிவாருமில்லை;
பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது;
11 ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,
கீர்கேரசிற்காக என் இதயமும்
வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;
12 மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில்
வழிபாடு செய்து களைத்தும்,
திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்
அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.
13 இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து
ஆண்டவர் கூறிய திருவாக்கு.
14 ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது:
கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில்,
மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும்,
அதன் மேன்மை அழிவுறும்;
ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்;
அவர்களும் வலிமை இழந்திருப்பர்.
(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை