சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/கோபாக்னி

விக்கிமூலம் இலிருந்து
21. கோபாக்னி

ஆயனரும், சிவகாமியும் வாதாபி வீரர்களைச் சந்திக்க நேர்ந்தது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் சிறிது பின்னோக்கிச் செல்ல வேண்டும். காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலில் மகேந்திர பல்லவரிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்த போது புலிகேசியின் மனநிலை எப்படியிருந்தது என்பதை ஒருவாறு நாம் தெரிந்து கொண்டோம். கரும் புகையும், தீக் குழம்பும், அக்கினிச் சுவாலையும் குமுறிக் கொண்டு எப்போது வெளிக் கிளம்பலாம் என்று வழி பார்த்துக் கொண்டிருக்கும் நெருப்பு மலையின் கர்ப்பத்தைப் போல் இருந்தது அவருடைய உள்ளம்.

காஞ்சி மாநகரின் மணிமாட மண்டபங்களும், அந்நகர மக்களின் செல்வமும், சிறப்பும், காஞ்சி அரண்மனையின் மகத்தான ஐசுவரியமும், அங்கு அவர் கண்ட காட்சிகளும், வைபவங்களும் அளவற்ற பொறாமைத் தீயை அவர் உள்ளத்தில் மூட்டியிருந்தன. அந்தப் பொறாமைத் தீயை வளர்க்கும் காற்றாக அமைந்தது கடைசியாக நடந்த சிவகாமியின் நடனம். நடனத்தின் போது மகேந்திர பல்லவர் கலைச் செருக்குடன் கூறிய மொழிகள் கலை உணர்வு இல்லாத புலிகேசியின் உள்ளத்தில் பெரும் துவேஷத்தை உண்டாக்கின. எல்லாவற்றுக்கும் மேலாக, புலிகேசியின் மனத்தில் கோபம் குமுறி எழும்படி செய்த விஷயம், மகேந்திர பல்லவர் தம்மை நெடுகிலும் ஏமாற்றி வந்திருக்கிறார் என்ற உணர்ச்சியேயாகும். வடபெண்ணைக் கரையில் தம் முன்னிலையில் அவர் தன்னந்தனியாக வந்து நின்று, பொய் ஓலையைக் கொடுத்து ஏமாற்றி விட்டல்லவா போய் விட்டார்? அதற்குப் பிறகு நெடுகிலும் எத்தனை ஏமாற்றங்கள்? எத்தனை தந்திர மந்திரங்கள்? எத்தனை மாயா ஜாலங்கள்.

நியாயமாக இந்தக் காஞ்சி மாநகரம் இதற்குள்ளே தமது காலடியில் விழுந்து கிடக்க வேண்டும். ஐசுவரிய கர்வமும் கலைக் கர்வமும் கொண்ட காஞ்சி மக்கள் தம் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு உயிர்ப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆ! இந்த மகேந்திர பல்லவனுடைய மணிமுடியைத் தமது காலால் உதைத்துத் தள்ளியிருக்க வேண்டும்! ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் வடபெண்ணைக் கரையில் நின்றிராமல் நேரே முன்னோக்கி வந்திருந்தால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்கும். இப்போது காஞ்சியிலும் உறையூரிலும் மதுரையிலும் கூட வராகக் கொடி பறந்து கொண்டிருக்கும்.

இதெல்லாம் நடக்காமற் போய் விட்டதன் காரணம் என்ன? எல்லாம் மகேந்திர பல்லவனுடைய மாய தந்திரங்கள்தான். வன விலங்குகளையெல்லாம் கதிகலங்கச் செய்யக்கூடிய வீரப் புலியைக் கேவலம் ஒரு நரி வளையில் பதுங்கி வாழும் நரி தந்திரத்தினால் வென்று விட்டது! இதை நினைக்க நினைக்க, வாதாபிச் சக்கரவர்த்திக்குக் கோபம் மேலும் மேலும் பொங்கிக் கொண்டு வந்தது. அவருடைய நெற்றியின் நரம்புகள் ஒவ்வொன்றும் புடைத்துக் கொண்டு நின்றன. அவருடைய முகத்தைப் பார்த்தவர்கள் என்ன விபரீதம் வரப் போகிறதோ என்று அஞ்சி நடுங்கினார்கள்.

காஞ்சி நகரிலிருந்து வெளியேறியது முதல் அந்த நகருக்கு வடக்கே ஒரு காத தூரத்தில் சளுக்கர் பெரும் சைனியம் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ச் சேரும் வரையில் வாதாபிச் சக்கரவர்த்தி வாய் திறந்து பேசவில்லை. இந்த விபரீத அமைதியானது அவருடன் சென்றவர்களுக்கெல்லாம் பீதியை ஊட்டியது. சக்கரவர்த்தி கூடாரத்தை அடைந்ததும், எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்தது. வாதாபியின் படைத் தலைவர்களும் பண்டக சாலைத் தலைவர்களும், ஒற்றர் படைத் தலைவர்களும் புலிகேசியின் கோபாக்னியில் எரிந்து பொசுங்கினார்கள்.

தளபதிகள் முதலியோர் மந்திராலோசனைக்காக வந்து கூடியதும், "உங்களில் பாதிப் பேரை யானையின் காலால் இடறச் செய்யப் போகிறேன்; மிச்சப் பாதிப் பேரைக் கழுவிலே ஏற்றப் போகிறேன்!" என்று புலிகேசி ஆரம்பித்தார். அதை கேட்டு மௌனமாயிருந்த சபையினரைப் பார்த்து "ஏன் சும்மா இருக்கிறீர்கள்? எல்லாருக்கும் வாய் அடைத்துப் போய் விட்டதா?" என்று கர்ஜித்தார். பின்னர் சரமாரியாக அவர் வசை பாணங்களைப் பொழிந்தார். தென்னாட்டுப் படையெடுப்பில் நாளது வரையில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

"வீரம் மிகுந்த படைத் தலைவர்களே! புத்தியிற் சிறந்த ஒற்றர்களே! கேளுங்கள்! இந்தக் காஞ்சி நகரின் கோட்டை வாசல்களுக்கு ஒரு சமயம் வெறும் ஒற்றை மரக்கதவு போட்டிருந்தது. அப்போது நாம் வந்திருந்தால் நம்முடைய யானைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்டை வாசலைத் திறந்து விட்டிருக்கும். இந்தக் கோட்டை மதிலைக் காக்க அப்போது பத்தாயிரம் வீரர்கள் கூட இல்லை. நமது வீரர்கள் ஒரே நாளில் அகழியைக் கடந்து மதிலைத் தாண்டி உள்ளே புகுந்திருக்கலாம். இந்த மகேந்திர பல்லவன் ஓடி வந்து என் காலில் விழுந்திராவிட்டால், காஞ்சியை லங்காதகனம் செய்திருப்பேன். அப்படிப்பட்ட காஞ்சி நகரில் என்னை அந்தப் பல்லவன், இல்லாத அவமதிப்புகளுக்கெல்லாம் உள்ளாக்கினான். ஒரு கல்தச்சனுக்கும் ஒரு கூத்தாடிப் பெண்ணுக்கும் முன்னால் என்னை அவமானப்படுத்தினான்! எனக்குக் கலை தெரியாதாம்! ரஸிகத்தன்மை இல்லையாம்! என்ன கர்வம்! என்ன அகம்பாவம்!" என்று கூறிப் பற்களை நறநறவென்று கடித்துத் தரையில் காலால் உதைத்தார் புலிகேசி மகாராஜா! பிறகு" மகேந்திர பல்லவன் இந்தக் காஞ்சிக் கோட்டையைப் பழுது பார்த்துச் செப்பனிட்டுக் கொண்டிருந்த போது, நீங்கள் வடபெண்ணைக் கரையில் சாவகாசமாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்!" என்று கூறிப் பயங்கரத் தொனியுடன் சிரித்தார்.

அப்போது வாதாபி ஒற்றர் படைத் தலைவன் சிறிது தைரியம் கொண்டு, "பிரபு! எல்லாம் நாகநந்தியின் ஓலையால் வந்த வினை! அப்போதே நான் ஆட்சேபித்தேன்!" என்றான். புலிகேசி கண்ணில் தீப்பொறி பறக்க அவனைப் பார்த்துச் சொன்னார்; "நிர்மூடா! உன்னுடைய முட்டாள்தனத்துக்கு நாகநந்தி மேல் பழி போடப் பார்க்கிறாயா? நாகநந்தி ஒருநாளும் தப்பான யோசனை கூறியிருக்க மாட்டார். நமக்கு வந்த ஓலை நாகநந்தியின் ஓலை அல்ல. நாகநந்தியின் ஓலையை இந்தத் திருடன் மகேந்திரன் நடுவழியில் திருடிக் கொண்டு விட்டான். அது மட்டுமா? வேறு பொய் ஓலை எழுதி இவனே மாறுவேடத்தில் என்னிடம் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். நமது புத்திசாலிகளான ஒற்றர்களால் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆஹா!...நாகநந்தி மட்டும் அச்சமயம் நம்முடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இந்தப் பல்லவ நரியின் தந்திரமெல்லாம் அவரிடம் பலித்திருக்குமா..." நீங்கள் இவ்வளவு பேர் இருந்து என்ன பயன்? புத்த பிக்ஷு ஒருவர் இல்லாததனால் நமது பிரயத்தனமெல்லாம் நாசமாகி விட்டது!....

நாகநந்தியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடனே சக்கரவர்த்தியின் உள்ளம் கனிவடைந்து, பேச்சும் கொஞ்சம் நயமாக வந்தது. இதுதான் சமயம் என்று வாதாபி சேனாதிபதி, "பிரபு! போனது போயிற்று! இப்போது நமது சைனியத்தை வாதாபிக்குப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாள் ஆக ஆக, நாம் திரும்பிப் போவது கடினமாகி விடும்..." என்று கூறி வந்த போது, புலிகேசி, இடிமுழக்கம் போன்ற குரலில், "சேனாதிபதி! என்ன சொன்னீர்? திரும்பிப் போகிறதா?" என்று கர்ஜனை செய்தார். மறுபடியும், "தளபதிகளே! கேளுங்கள்! நாகநந்தியடிகள் இந்தக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே பல்லவனுடைய சிறைக்கூடத்தில் அடைபட்டுக் கிடக்கிறார். இளம்பிள்ளைப் பிராயத்தில் பெற்ற தாயைப் போல் என்னை எடுத்து வளர்த்துக் காப்பாற்றியவர்; என் உயிரைக் காப்பதற்காகத் தம் உயிரைப் பல தடவை பலி கொடுக்கத் துணிந்தவர்; வாதாபிச் சிம்மாசனத்தில் என்னை ஏற்றி வைத்தவர்; உத்தராபதத்தின் மகா சக்கரவர்த்தி ஹர்ஷவர்த்தனரை என்னிடம் சமாதானம் கோரித் தூது அனுப்பச் செய்தவர்; அத்தகைய மகா புத்திமான் இந்தப் பல்லவ நரியின் வளையிலே அடைபட்டுக் கிடக்கிறார்; அவரை அப்படியே விட்டு விட்டு நாம் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று சொல்கிறீர்கள்; ஒருநாளும் இல்லை. படைத் தலைவர்களே! காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி உடனே நமது வீரப் படைகளுக்குக் கட்டளையிடுங்கள். காஞ்சியைப் பிடித்து, மகேந்திர பல்லவனுடைய மாளிகையைச் சுட்டெரித்து, மகேந்திரனுடைய தலையை மொட்டையடித்து நமது தேர்க்காலில் கட்டிக் கொண்டு வாதாபிக்குத் திரும்பிப் போவோம். நாகநந்தியடிகளைச் சிறை மீட்டு அவரை நமது பட்டத்து யானையின் மீது வைத்து அழைத்துப் போவோம்! உடனே புறப்படுங்கள்!" என்று கூறி நிறுத்தினார். சபையில் சற்று நேரம் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

"இது என்ன மௌனம்? ஏன் பேசாதிருக்கிறீர்கள்? பல்லவ நாட்டுக் கற்சிலைகளைப் பார்த்துவிட்டு நீங்களும் கற்சிலையாகப் போய் விட்டீர்களா?" என்று சக்கரவர்த்தி கேட்டார். அதன் பேரில், தளபதிகள் ஒவ்வொருவராகத் தம் அபிப்பிராயங்களைச் சொல்லலானார்கள். யானைப் படைத் தலைவர், யானைகள் எல்லாம் உணவின்றி மெலிந்து விட்டன என்றும், அவற்றின் வெறி அதிகமாகி வருகிறதென்றும், சில நாள் போனால் யானைகள் கட்டுமீறிக் கிளம்பி நமது வீரர்களையே அழிக்க ஆரம்பித்து விடுமென்றும் கூறினார்.

காலாட் படைத் தலைவர், காஞ்சிக் கோட்டையைத் தாக்கும்படி வீரர்களை ஏவுதல் இயலாத காரியம் என்றும், அவர்கள் ஏற்கெனவே சோர்வும், அதிருப்தியும் கொண்டு ஊருக்குத் திரும்பிப் போக துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். பண்டகசாலை அதிபதி, இன்னும் சில நாள் போனால் எல்லாரும் பட்டினியினாலேயே செத்துப் போக நேரிடுமென்று கூறினார். ஆயுதசாலை அதிபதி, கோட்டையைத் தாக்குவதற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லையென்றும், கொண்டு வந்தவையெல்லாம் முன் தாக்குதல்களில் நஷ்டமாகி விட்டன என்றும் சொன்னார். இதையெல்லாம் கேட்கக் கேட்கப் புலிகேசிக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆயினும் அவ்வளவு பேரும் சேர்ந்து சாத்தியமில்லையென்று சொல்லும் போது அந்த ஒரு முகமான அபிப்பிராயத்துக்கு மாறாகக் கோட்டையைத் தாக்கத்தான் வேண்டுமென்று சொல்லப் புலிகேசிக்குத் துணிச்சல் வரவில்லை. "ஆஹா! உங்களை நம்பி நான் இந்தப் படையெடுப்பை ஆரம்பித்தேனே!" என்று வெறுப்புடன் பேசி விட்டு, "இருக்கட்டும், எல்லாரும் போய்த் தொலையுங்கள். இன்றிரவு யோசித்து நாளைக்கு முடிவு சொல்லுகிறேன்!" என்றார்.