அறிவுக் கனிகள்/சான்றோர்
412.பிறர்க்கு இன்பம் அளிப்போரே பாக்கியவான்கள். பிறரிடம் சச்சரவை நீக்கி சாந்தியை விளைவிப்போரே பாக்கியவான்கள்.
பீச்சர்
413.இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார். யாரையும் துவேசித்ததில்லை.
மாஜினி கல்லறைமீது
414. சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே.
எமர்ஸன்
415.சான்றோர் என்பவர் குறைகளை அறியாதவர் அல்லர்; குறைகள் இருந்தும் அவைகளைத் திருத்திக் குணங்களை உண்டாக்கிக் கொண்டவரே சான்றோர் ஆவர்.
ஷேக்ஸ்பியர்
416.எனக்குத் தெரிந்தவற்றில் சிறந்ததையும் என்னால் செய்யக் கூடியதில் தலைசிறந்ததையுமே செய்கின்றேன். இறுதிவரை அப்படியே செய்துகொண்டிருப்பேன். இறுதியில் நான் செய்தது நியாயமாகுமானால் இப்பொழுது எனக்கு விரோதமாகச் சொல்வதெல்லாம் எள்ளளவும் நிற்காது போகும். இறுதியில் நான் செய்தது தவறாய் முடியுமானால் இவர் செய்தது சரி என்று எத்தனயோ தேவதூதர்கள் சத்தியம் செய்தாலும் தவறு சரி ஆய்விடாது.
லிங்கன்
417.பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார்.
எமர்ஸன்
418. சான்றோர் சரிதையை அரை குறையாகவே கற்றாலும் அதனால் நன்மை அடையாமல் இருக்க முடியாது.
கார்லைல்
419. பெரியோர் எப்பொழுதும் வானிலிருந்து இறங்கும் மின்னலே ஆவர்; மக்கள் எல்லோரும் அவர் வருகைக்காகக் காத்திருப்பர், வந்ததும் அவர்களும் ஜோதியாவர்.
கார்லைல்
420.உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.
எமர்ஸன்
421.சங்கடங்களே சான்றோரை நீட்டி அளக்கும் கோல்.
பர்க்
422.பேருண்மைகள் எளியன. அதுபோல் பெரியோரும் எளியர்.
423.சான்றோர் கெட்டாலும் சால்பு அழியாது.
லாங்பெல்லோ
424.தமது உயர்வை அறியாதவரே சான்றோர்.
கார்லைல்
ஜார்ஜ் லாங்