அறிவுக் கனிகள்/படித்தல்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

57. படித்தல்

935. நூல் கற்பவன்—அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான்.

ஹெர்ஷல்

936.படித்துக்கொண்டே இருந்தால் அறிவு பெருகும் என்று எண்ணுவது, உண்டுகொண்டே இருந்தால் பலம் பெருகும் என்பதை ஒக்கும்.

புல்லர்

937.படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையே தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும்.

லாக்

938.மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன்.

ஹாப்ஸ்

939.நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே.

ஸெனீக்கா

940.நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள்.

ஸிட்னி ஸ்மித்

941.சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும்.

பர்க்

942.படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும்.

பேக்கன்

943.சிந்தியாது படித்தல் மூளையைச் செழிப்புள்ளதாகச் செய்யுமே யன்றி ஒருநாளும் தெளிவுள்ளதாகச் செய்யாது.

நாரிஸ்

944.எவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது.

டாக்டர் அர்னால்டு

945.படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே.

பேக்கன்

946.வண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணாத்திப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது.

எட்வர்ட் புல்லக்

947.படிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்; படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகா.

லாக்

948.சிலர் வாழ்நாள் முழுவதும் படிக்கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள்-யோசனை செய்வதைத் தவிர.

டோமேர்கு

949.கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன்.

கன்பூஷியஸ்

950.முட்டாள்களுக்கு அர்த்தமாவதே யில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர்.

லா புரூயர்

951.கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்!

ஸ்காட்

952.படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன்.

தோரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/படித்தல்&oldid=1000158" இலிருந்து மீள்விக்கப்பட்டது