ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/தமிழர் பண்டை நாகரீகத்தின் நிலஇயல் அடிப்படை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
2. தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை

தமிழர், தென்னிந்திய மண்ணுக்குரியவர்

ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன் விளைவாகத் தோன்றிய ஒரு நாகரீகம், அம்மக்கள் வாழும் நில இயல் கூறுபாட்டுக் காரணம் அடிப்படையில் எழுந்ததேயல்லது, வென்று அடிமைகோடல், வாணிகம், மற்றும் பிற அறவழி மூலம் அம்மக்களோடு தொடர்பு கொண்டுவிட்ட வெளி நாட்டவரின் ஆதிக்க விளைவு போலும் வரலாற்றுக்கான அடிப்படையில் எழுந்ததாகாது.

தொல்லூழிக் காலத்தில், மனித வாழ்க்கையில், இயற்கைச் சூழ்நிலை செலுத்திய ஆட்சியின் விளைவாக மனித நாகரீகம் தமிழகத்தில் படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்ற வளர்ச்சி நிலையினைக் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோம். நிலத்துக்கடியில் வியத்தகு - கனிவளச் செல்வங்களையும் நிலப்பரப்பின் மேல், எண்ணிக் காணமாட்டாது வேறு வேறுபட்ட மாவடை, மரவடைகளையும், ஒருபால், பெருநீர்ப்பரப்பையும், பிறிதொருபால் பெருநிலப் பரப்பையும் கொண்டதாய தட்பவெப்ப நிலையினையும் கொண்டு, மனித இனத்தின் வளர்ச்சியில், அதிலும் அவனுடைய தொடக்கநிலை வளரச்சிப் பருவத்தில், ஒப்புயர்வற்ற நிலையில் துணை நிற்பதாக இருந்தும், வளங்கொழிக்கும் இந்திய நாடு, தன் மைந்தர்களின் வாழ்க்கை நிலைக்கும், தன் வரலாற்று ஏடுகளுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நாகரீக நலத்திற்கும், தன் எல்லைக்கு அப்பாற்பட்ட வறண்ட பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன வற்றையே சார்ந்திருக்க வேண்டியுளது என்பது வெள்ளிடை மலையாகும் என்றே இந்திய வரலாற்று ஆசிரியர் பலரும் கருதுவதாகத் தெரிகிறது.

சில வரலாற்று ஆசிரியர்கள், திராவிடர்களின் மூதாதையர்களை, இந்தியாவின் வடமேற்கு அல்லது வடகிழக்குக் கணவாய்கள் வழியாக நம்பிக்கைமிக்க நல்ல வழிகாட்டி களின் துணையோடு கொண்டுவந்து, எடுத்த எடுப்பிலேயே முழுமை பெற்ற வெளிநாட்டு நாகரீகத்தோடு காவிரி அல்லது வைகைக்கரைகளில் குடியமர்த்துகின்றனர். தமிழ்ச்சொற் களோடு ஒரு சார் உறவுடைய சொற்கள் சிலவற்றை, வட இந்தியாவின் ஒரு மூலையில் வழங்கும் பிராஹிமொழி கொண்டிருப்பது ஒன்றே அவர்தம், மிகப்பெரிய இக் கற்பனைக்கு, அவர்கள் நம்பும் மிகச்சிறிய அகச்சான்று. தமிழ்மொழி அல்லது அதனோடு உறவுடைய ஒரு மொழி, பண்டைக்காலத்தில், அவ்வடமேற்கு மாநிலங்கள் வரை வழக்கில் இருந்துள்ளது என்பதே இதிலிருந்து பெறக்கூடிய முறையான முடிவு ஆகும்.

ஒரு மொழிக் குடும்பத்தின் ஒரு மொழியின் ஒரு வாக்கியத் தொடரை, மொழியியல் மரபைச் சிறிதும் மீறாமல், அத்தொடரில் உள்ள சொல்லுக்குச் சொல் மாற்றி வழங்குவதன் மூலமே, வேற்று மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியின் வாக்கியத் தொடராக மொழி பெயர்த்துக் கொள்ளுவதற்கு ஏற்புடையதாகும் வகையில், வட இந்தியாவில், இன்று வழக்கில் இருக்கும், சமஸ்கிருதம் அல்லது கெளடியன் இனத்தைச் சேர்ந்த மொழிகள் பலவும், திராவிட இன மொழிகளில் உள்ளது போன்ற இலக்கண அமைப்பு முறைகளையும், சொற்றொடர் அமைப்பு முறை களையும் கொண்டுள்ளன என்ற உண்மை நிலையாலும், மேற்கூறிய முடிவு அரண் செய்யப்படுகிறது.

கூறிய இவ்வுண்மைகள் தமிழ்மொழியோடு உறவுடைய மொழிகளை வழங்கிவந்த மக்கள் ஒரு காலத்தில் இந்தியப் பெருநிலப்பரப்பு முழுதும் வாழ்ந்து வந்தனர் என்பதை உறுதி செய்யுமேயல்லாது, அம்மக்கள், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத நிலையில், இந்தியாவுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்யா இந்தியப் பழங்குடிகள், இம்மண்ணின் மாந்தர் அல்லர் என்பதை நம்மை நம்பவைக்கத்தக்க அகச்சான்று ஒன்றுகூட இன்று வரை தரப்படவில்லை.

மேலும், தென்னிந்தியாவில், இதுவரை, அகழ்ந்து எடுக்கப்பட்ட பண்டைக் காலத்தைச் சார்ந்த கலைப் பொருட்களும், வரலாற்று நினைவுச் சின்னங்களும் தொடக்க நிலையாகிய பழங்கற்காலம் முதல் புத்தம் புது நிலையாகிய உலோக காலம் வரை எவ்வித இயற்கை நிலை பிறழ்வு காரணமாகவும், இடையற்றுப் போவதற்கு உள்ளாக்கப்படாத நாகரீகத்தின் முறையான வளர்ச்சி, இந்நாட்டில் இருந்து வந்தது என்பதை நிலைநாட்டும் அழியாக் களஞ்சியத் தொகுப்பாய் அமைந்துள்ளன (இக்கூற்றிற்கான அகச் சான்றுகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் கற்காலம் என்ற என் நூலில் காண்க.

இந்நாகரீகத்தின் வளர்ச்சிப் பருவ நிலை முழுவதும், தமிழ் மொழி, தென்னிந்தியாவில் வழக்காற்றில் இருந்து வந்துள்ளது. இந்நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும் மொழி வடிவில் உணர்த்தத் தேவைப்படும் சொற்கள், தமிழ் மொழியின் தொடக்க நிலை மொழயமைப்பிலேயே இடம் பெற்றுள்ளன. அப்பண்டைக் கால பழக்க வழக்கங்கள், தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கிய ஏடுகளில், போற்றிக் காக்கப்படுவது நீண்டகாலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதற்கான எண்ணற்ற அகச் சான்றுகளுக்கு “ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம்” என்ற என் நாலைக் காண்க). ஆகவே, தமிழர், தென்னிந்தியாவின் பழம் பெருங்குடிகளாவர் என்பது முழுதும் உண்மையாம் எனக் கொள்ளலாம்.

ஐந்நிலங்கள்

நிலப்பரப்பின் வாழத் தகுதி வாய்ந்த பகுதிகள், ஐந்து இயற்கைக்கூறுகளாகப் பிரிக்கப்படலாம் என்பதைப் பண்டைத் தமழர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும், அவர்கள், திணை என்னும் பெயரிட்டனர். திணை எனும் அச்சொல், ஒரு நிலப்பரப்பு எனும் பொருள் தருவதாய் திண் அல்லது திட் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாகத் தோன்றுகிறது. திணை என்ற அச்சொல், பொதுவாக நிலம் என்ற பொருளிலும் ஆளப்படுகிறது. பண்டைத் தமிழர்கள், நிலப்பரப்பு, ஐந்து இயற்கைக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை மட்டும் அறிந்திருந்தாரல்லர். மனித வாழ்வின் செயல்பாட்டு முறைகள், ஒவ்வொரு மனித இனமும் எந்த இயற்கைச் சூழலில் வளர்ச்சி பெற்றதோ அந்த இயற்கைச் சூழலின் இயல்புகளோடு ஒத்திருந்தன என்பதையும் அறிந்திருந்தனர்.

அந்த ஐந்து நிலப்பகுதிகளாவன, மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி, நீரற்று வறண்ட நிலப்பகுதியாகிய பாலை. மலைக்கும் மடுவிற்கும் இடைப்பட்ட காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகிய முல்லை, ஆற்றுப்படுகை நிலமாம் மருதம், கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல், நிலப்பரப்பின் இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகளும் தமிழ்நாட்டில் சிறுசிறு அளவிலேனும் காணப்படுகின்றன. தென்னிந்தியர் ஒரு நிலப்பிரிவிலிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குப் பரவி வாழ்ந்தமையால், அந்நிலப்பரப்பு ஒவ்வொன்றும் உருவாக்கி அளித்த நாகரீகத்தை, அவர் படிப்படியாக வளர்த்துள்ளனர்.

மனித இன நூல் வல்லுநர், வேறுவேறுபட்ட மூவகை மனித நாகரீகத்தின் இயல்பினைக் காட்டவல்ல முப்பெரும் இடங்களான. முப்பெரும் நிலப்பிரிவுகளைக் குறிப்பிட்டுள் ளனர். அவ்வகை நாகரீகம், மத்திய தரைக்கடல் நாகரீகம், ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம், நார்டிக் எனப்படும் வடமேற்கு ஐரோப்பிய நாகரீகம் என அழைக்கப்பட்டன. மத்திய தரைக்கடலைச் சார்ந்து நிலவிய நாகரீகத்தையும், ஆல்ப்ஸ் மலையின் இருபக்கத்தும் நிலவிய நாகரீகத்தையும் , ஆராயத் தொடங்கியபோதுதான், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் அம்மக்கள் வாழும் சுற்றுச்சூழல் செலுத்தும் ஆட்சியின் இயல்பு உணரப்பட்டது. ஆகவே, முதல் இரு நாகரீகங்களும் அவ்வாறு பெயரிடப்பட்டன. மூன்றாவது இயல்பினைக் காட்டவல்ல இடப்பகுதி, யுரேஷியா எனப்படும் பிரிவுறாத ஆசிய ஐரோப்பியப் பெருநிலப் பரப்பின் வடபகுதியைச் சார்ந்தது. ஆகவே, மூன்றாவது நாகரீகம் அவ்வாறு பெயரிடப்பட்டது. தமிழ்ப்பெயர் சூட்டுவதாயின் மத்திய தரைக்கடல் நாகரீகம், நெய்தலாம். ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம் குறிஞ்சியாம். நார்டிக் நாகரீகம் முல்லையாம்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாகத் தொழில்மயமாக்கப்பட்டு பண்டைக்காலத்து ஐரோப்பிய மக்களுக்கு ஆறும், அது ஓடும் பள்ளத்தாக்காம் நிலப்பரப்பும் செலுத்திய ஆட்சித்திறன் அறவே மூடி மறைக்கப்பட்டுவிட்டமையால், மிக மிக முக்கிய நாகரீக மாகிய மருதம் என அழைக்கப்படும் ஆற்றுவெளி நாகரீகம் அறவே புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பரந்து கிடப்பது போன்று ஐரோப்பாவில் பாலைவனம் எதுவும் இல்லை. அராபிய நாடோடி இனத்தவரின் நாகரீக இயல்பினைக் காட்டவல்லது பாலை வனம். மக்கள் இனப்பண்பாட்டு நிலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கடைக்கண் பார்வையை, இது, ஒரு சிறிதே பெற்றுள்ளது.

மனிதன் பண்டு கடந்துவந்த நாகரீகத்தின் படிக்கட்டுகள் ஐந்து. அவையாவன: வேட்டையாடல், நாடோடி வாழ்க்கை, கால்நடை மேய்த்தல், கடல் மேற்சேறல், தொழில்மயமும் கலந்த உழவுத்தொழில் மேற்கோடல்: இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதத் திணைகளுக்கு நிகராகும். ஒவ்வொரு நிலப்பிரிவையும் சார்ந்த, இயற்கை வளங்களின் இயல்புகள், அவ்வந் நிலத்துக்குரிய நாகரீக வளர்ச்சிக்குத் தூண்டுதலாய் அமைந்தன.

வேடன்

எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். அம் மலைநாட்டின் அடிவாரத்தில், தண்டகன் என்ற அரசன் பெயரிடப்பட்ட, தன் நிலைபேற்றிற்காக, ஆதி மனிதன் மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தில், அவனோடு போட்டியிட்டு வந்த, பருத்த உருவ அமைப்பு உடையவாய், அவன் பகை விலங்குகளாம் சிங்கம், புலி, யானை, காட்டெருமை, மலைப் பாம்புகளையும், அவைபோன்றே மனித உயிர்களை மாய்ப்பதில், அப்பெரு விலங்குகளிலும் கொடுமை வாய்ந்த, ஆனால், மிக நுண்ணிய உயிரினங்களாகிய பூச்சிப் பூஞ்சானங்களையும் பெருமளவில் கொண்டிருந்த வெப்ப மண்டலப் பருமரக்காடுகள் இடம் பெற்றிருந்தன.

குறிஞ்சியில், ஞாயிற்றின் வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் தன் பகை விலங்குகளிலிருந்தும், ஆதி மனிதன், தன்னை எளிதில் காத்துக் கொள்ளும், புகலிடங்களைப் பெரும் பாறைகளின் இடுக்குகளிடையேயும், இயற்கையாகவே அமைந்துவிட்ட மலைக்குகைகளுக்கிடையேயும் எளிதில் கண்டுகொண்டான். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்குப் பானையை, இன்னமும் அவன் கண்டுகொண்டானல்லன், இயற்கை நீரூற்றுகள், அவனுக்கு நீர் வழங்கத் தவறிவிடும் போது, மலை நாட்டில் கணக்கின்றிக் காணப்படும் பள்ளங்களில் நீர்த் தேக்கங்களைக் கண்டு பயன் கொண்டான்.

காலின் கீழிருந்து எளிதில் எடுத்துக்கொண்ட கூழாங்கல், அவனுக்குத் தொடக்கநிலைத் தொழிற்கருவியாகப் பயன்பட்டது. பல்வேறு வடிவங்களில் ஏராளமாகக் கிடைத்த கல்வகைகள், புதியன காணும் அவன் அறிவிற்கு ஊக்கம் ஊட்டின. அவனும் அவனுக்குத் தேவைப்பட்ட கோடரி, குத்தீட்டி, வெட்டுவாள், மண்வெட்டி முதலானவற்றை வடித்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான். பழங்கற்காலம் என அழைக்கப்படும் மனித நாகரீகத்தின் தொடக்கநிலை, இந்த மண்ணில், இவ்வகையில் உருப்பெற்றது. இக்காலத்தைச் சேர்ந்தனவாகிய பழங்காலக் கலைப்பொருட்கள், கடப்பை, நெல்லூர், வடார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் பெருமளவில் பரவிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் சிறப்பாகக் காணப்படுகின்றன.

குறிஞ்சியில் பண்டைமனிதன், தொடக்கத்தில் கனி, கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, கிழங்கு வகைகளை உண்டே உயிர் வாழ்ந்திருந்தான். பருவநிலை மாறுதல் காரணமாக, இவ்வுணவுப்பொருள் கிடைப்பதில் ஏற்பட்டு விட்ட முரண்பாட்டு நிலை, அவன் உணவு வகையில் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்துக் கொள்ளத் தூண்டிற்று. விலங்குப் பகைவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு மேலாக இவ்வுணவுத் தேவையே, அவனை வேட்டையில் வல்லுநனாக ஆக்கிற்று. ஆகவே, மனிதனின் முதல் தொழில், வேட்டையாடுதலாய் அமைந்தது. பழங்கற்காலக் கருவிகளெல்லாம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இவ்வுண்மை, தொடக்க காலத்து வேடுவன், உலகின் பல பாகங்களிலும் அலைந்து திரிந்த பெரிய நாடோடியாம் என்பதை உறுதி செய்கிறது.

குறிஞ்சி நிலத்தின் சுற்றுச் சூழ்நிலை, மனித நாகரீகத்தின் வேட்டுவர் வாழ்வில் வில் - அம்பு, தீ மூட்டுதல் என்ற மேலும் இரு அரிய பெரிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணவும். வழிவகுத்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த குறிஞ்சி நிலங்களில் மூங்கில் ஏராளமாக விளைகிறது. குறவர் என அழைக்கப்படும் அந்நிலத்து வாழ் மக்கள், மூங்கிலின் - பிளவுபட்ட கழிக்களின் வளைந்துகொடுக்கும் இயல்பை நுண்ணியதாக அறிந்து, அவற்றை வளைத்து, அவற்றின் இரு முனைகளையும், உலர்ந்து நீண்ட கொடிகள் கொண்டு இறுக்கிப் பிணித்து, அவற்றினின்றும் நீண்ட முட்களை, இருந்த இடத்திலிருந்தே தொலைவிடங்களுக்கு விரைந்து செலுத்த அறிந்து கொண்டனர். தாரியஸ் , ஸெர்ஸஸ் என்ற மாவீரர்களின் படைவரிசையில் பெரிதும் பாராட்டப்பெற்ற பிரிவு, இந்திய விற்படையினர் தாம், இந்திய நாட்டு வேடுவன், புலியைத் தன் வில்லிலிருந்து செலுத்தும் ஒரே அம்பினால் இன்றும் கொன்று விடுவான் என்ற செய்திகள் மூலம், தம் தொழிலில் எக்காலத்தும் சிறந்தவர் என்ற பாராட்டினைப் பெற்றுவிட்ட இந்தியாவின் மலை நாட்டு மக்கள், மேற்கொண்ட, விற்படையின் தோற்றம் இதுதான்.

பண்டைக்காலத்துக் குறவர்களின் மற்றொரு கண்டு பிடிப்பு, மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாம் தீ மூட்டுதல், பழைய கற்காலத்துத் தொடக்க நிலையில், குறிஞ்சிவாழ் மக்கள் கடுமையான புயற்காற்று வீசுங்கால் மூங்கிற்கழிகள் ஒன்றோடொன்று கடுமையாக உராய்த்துக் கொள்ளும் போது, தீப்பொறிகள் எழக்கண்டு இரண்டு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று தேய்ப்பதன் மூலம் நெருப்பை உண்டாக்கலாம் என்பதைக் கண்டு கொண்டனர். நெருப்பை , அவன் முதன்முதலாகப் பயன் படுத்தியது, தான் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை வதக்குவதற்கே.

வேட்டுவ மகளிர்

அக்குடியிருப்பில், ஆடவர், வேட்டை குறித்து வெளியே சென்றிருக்கும்போது மகளிர், கனிபறித்தல், கிழங்ககழ்தல், தங்கள் வாழிடங்களைச் சூழ, நிறைய விளைந்திருக்கும் புல்லரிசி, மூங்கிலரிசி, தினை அரிசிகளைத் திரட்டிக் கொணர்ந்து களஞ்சியங்களை நிரப்பிக்கோடல் போன்ற வற்றில் ஈடுபட்டிருப்பர்.

தங்கள் குழந்தைகளை வளர்ப்பது, மகளிரின் மற்றொரு பணியாம். அந்த நாகரீகப்பருவத்தில், மனிதன் வீடுகட்டத் தெரிந்து கொள்ளவில்லை. வெயில் மழைகளிலிருந்து காத்துக் கொள்ள, பருமரங்கள், பெரும்பாறைகள், இயற்கைக்குகைகள் அளிக்கும் புகலிடம் தவிர்த்து வேறு புகிலடம் தேட வேண்டிய தேவை இல்லாத அளவு, தென்னிந்திய தட்பவெப்பநிலை துணை புரிந்தமையால் வீடுகள் அருகியே தேவைப்பட்டன. தங்குவதற்கான இடத்திற்காக அல்லாமல் உணவுப் பொருட்கள் வடிவிலான பழங்காலச் செல்வத்தை ஈட்டி வைப்பதற்காகவே வீடுகள் முதன்முதலாகக் கட்டப் பட்டன. உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் தேவையைப் பழங்கால மனிதன் இன்னமும் உணரவில்லை. ஓரிடத்தில் நிலைத்து இராமல் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் நாடோடி வாழ்க்கை முறையின் தேவை, நிலையான குடியிருப்பு இல்லாக் குறைபாடு ஆகிய இவை ஆண்மகன் வாழ்வில், குடும்ப வாழ்வு பற்றிய இயல்பான உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. ஆகவேதான் குடும்பத்தில் பெண்ணே தலைவியாம் வாழ்க்கைமுறை, பழங்குடி மக்களிடையே முதலில் இடம் பெற்று வளர்ந்தது.

இவ்வகை வாழ்க்கைமுறை அமைப்பிற்கு, மற்றுமொரு சூழ்நிலையும் ஊக்கம் அளித்தது. ஆதிமனிதன் விரிவான மணச் சடங்குகளால் சிக்கவைக்கப்படவில்லை. கண்டதும் காதல், உடனடியாக ஏற்றுக்கோடல், இவற்றைத் தொடர்ந்து பையப்பைய இடம்பெற்றுவிட்ட பண்டை முறையிருந்தே திருமணச் சடங்காக உருப்பெற்றது. திருமண உறவு நிலையான ஒழுக்கமாக எல்லாக் காலத்தும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். கூறிய இக்காரணமும், தனக்கெனச் சொத்துரிமை கொள்ளும் முறை வளர்ச்சி பெறாத நிலையும், நிலையான குடியிருப்பு முறையில் பற்று இன்மையும், பெண்ணே குடும்பத் தலைவியாம் முறை, மிக நீண்ட காலம் நிலைத்திருந்தமைக்கு ஊக்கம் ஊட்டுவவாயின.

தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் ஆசை எப்போதும் மனிதனுக்குச் சிறப்பளிப்பதாம். அதிலும் குறிப்பாக மகளிரின் பெருவழக்கமாம். குறவர் மகளிர். இன்று போலவே, அன்றும் கிளிஞ்சல்களைப் பொறுக்கி எடுத்து, தங்கள் மாந்தர்களை ஒப்பனை செய்ய, அணிந்து கொள்ளும் மாலையாக, அவற்றைக் கோப்பதிலேயே தங்கள் ஓய்வு நேரங்களைக் கழித்தனர். அவர்களின் காதலர் வேட்டையில் தாம் கொன்று வீழ்த்திய புலியின் பல்போலும் வெற்றிச் சின்னங்களை அவர்களுக்கு அளிப்பர். அவர்களின் கழுத்தில் அணிந்து கொள்ளும் அதுவே, பிற்காலத்தில், ஒரு கயிற்றில் அல்லது கழுத்து அணியில் தொங்கவிடப்பட்டு, கணவன்மார் உயிரோடிருக்கப்பெற்ற மணமான மகளிரின் அடையாளச் சின்னமாகத் தென்னிந்தியாவில், பெரிதும் சிறப்பிக்கப்படும் தாலி ஆயிற்று. மற்றுமொரு வகை உடல் அணி, தென்னிந்திய மலைவாழ் மக்களாகிய பழங்குடியினரிடையே இன்றும் அழியாதிருக் கும் வழக்கமான பல இலைகளை, உலர்ந்த கொடி கொண்டு ஆடை போல் தைத்து இடையைச் சுற்றி அணிந்து கொள்ளும் தழையாடையாம்.

பாலைநிலத்து வாழ்வார்

வறண்ட மணல் பரந்த நிலமாகிய பாலை, உலக நிலப்பரப்பில் வாழ்வதற்குரிய பகுதிகளில் ஒன்றாக, மிகமிக அருகியே மதிக்கப்படும். கொடுவிலங்குகளை வேட்டை யாடுதலில், ஈர்ப்புற்று அவற்றைப் பின்தொடர்ந்து செல்லும் பொழுது, முரட்டுவேடுவன் பாலை நிலத்தில் தற்காலிக வாழிடத்தை வகுத்துக் கொள்ள வற்புறுத்தப்படுவான். வீரச் செயல் புரியும் ஆர்வத்துடன் பிறந்து விட்டவர் உள்ளத்தில், பாலையின் அழைப்பு, ஓர் எதிரொலியை ஏற்படுத்திற்று. நாடுவிட்டு நாடு செல்லும் ஓர் நாடோடி வாழ்க்கையில் காட்டும் அளவிறந்த ஆர்வமும், முறுக்கேறிய உடலும், உரம் வாய்ந்த உள்ளமும் வாய்க்கப்பெற்ற பலருடைய வாழ்க்கை யில் உணர்ச்சி ஊட்டிய தலையாய உந்து ஆற்றலாம்.

ஒரு சிறுகாலமோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ பாலையில் வாழ்ந்த மனிதர், மறம் வாய்ந்த, வீரம் வாய்ந்த மறவர். வலிமை வாய்ந்த கள்வர் என்போராவார். (கள்வர்கள் வலிமை அதிலிருந்து விலங்குகளிலெல்லாம் வலிமை வாய்ந்த யானையைக் குறிக்கும். களிறு என்ற சொல்லும், வலிமை தரும் குடிவகைகளாகிய மதுவைக் குறிக்கும் களம் என்ற சொல்லும் பிறக்கும்) பாலை வளமிலா நிலமாதலாலும், ஆண்டு வாழ் மக்கள் படைக்கலம் ஏந்துவதில் சிறந்து விளங்கினமையாலும், மற்றவர்களும் கள்வர்களும், பிற்காலத் தில் படைவீரர் தொழிலையும், அண்டை நிலங்களில் வாழும் உடலுரம் இல்லாத, ஆனால் செல்வத்தில் சிறந்திருந்தவர் களைக் கொள்ளையடித்து உண்ணும் கொடுந்தொழிலையும் மேற்கொண்டுவிடவே மறம் என்ற சொல், கொடுமை எனும் பொருள் குறிப்பதாகவும், கள்வர் என்ற சொல், திருடர் எனும் பொருள் குறிப்பதாகவும் மாறி விட்டன.

ஆனால் தொடக்க நிலையில் மனிதர், வீரச் செயல் புரிவதில் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவே பாலைநில வாழ்வை மேற்கொண்டனர். ஆடவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து வாழ்க்கை, பழங்குடி மக்கள் வாழ்வில், குடும்பத் தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது.

ஆயர்

குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய, மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப் பிடித்தனர்.

இது, மனித வாழ்க்கை முன்னேற்றமாம், ஏணியில் இரண்டாம் படிக்கு, அதாவது மேய்ச்சல் நாகரீகத்திற்குக் , கொண்டு சென்றது. முல்லையில், கால்நடைகள், விரைவாகப் பெருகின. பழங்குடி வாழ்விலிருந்து, குடும்ப வாழ்வுமுறை முகிழ்த்ததற்கு, எந்தத் தனியுடைமை தத்துவமுறை துணை செய்ததோ, அத்தத்துவமுறை, கால்நடைச் செல்வப் பெருக்கால் உருப்பெறலாயிற்று.

முதல் காட்சியிலேயே காதலர் ஒன்றுபடுதல், திருமணச் சடங்குகளால் கட்டுப்படுத்தப்படாமை, புலிப்பல் தாலியையும், இடையில் அணிந்து கொள்ளத் தைத்த தழை ஆடையையும் அளிப்பது ஒன்றினாலேயே திருமணம் முறைப்படுத்தப்படுதலாய், இயற்கை வழித்திருமணம் என அழைக்கப்பட்ட பழங்கால மணமுறை, பழந்தமிழ் இலக்கியங்களில் களவு என அழைக்கப்பட்டது. அது மேய்ச்சல் நிலப்பகுதியாம் முல்லையில், காதலர் ஒன்றுபடுவதற்கு முன்னர், திருமணச் சடங்குகள் இடம்பெற வேண்டுவதான கற்பு எனும் வடிவில் மெல்ல மெல்ல மாற்றி அமைக்கப்பட்டது. காதலர் இருவரையும் ஒன்றுபடுத்துவது, நிகழ்வதற்கு முன்னர், மலர்களாலும் இலைகளாலும் அழகு செய்யப்பட்டதும் ஆயர்களின் இயல்பான குடியிருப்பாவதுமாகிய பந்தலின் கீழ், அப்பழங்குடி ஆயர் மகளிர் ஆகிய அனைவர்க்கும் விருந்தளிக்கும் நிகழச்சியே திருமணச் சடங்கு முறையில் சிறப்பான பகுதியாம். குடும்பத்தந்தை, கணக்கின்றிப் பெருகும் கால்நடைகளை உடையவராகி, அக்கால்நடைச் செல்வம் வழங்கும் பெருஞ்செல்வாக் கினைப் பெற்றுவிடுவதால், கற்பு என்ற அத்திருமண முறையும், தனியுடைமை முறை வளர்ச்சியும், குடும்பத் தலைமை ஆடவர்க்காம் சமுதாய மறுமலர்ச்சி முறைக்கு வழிவகுத்துவிட்டன.

சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட மேய்நிலங்கள், கால்நடை மந்தை ஒன்றைப் பேணுவதற்குப் போதுமானதாக ஆகாது போமளவு சிறுத்துவிடும் ஆதலாலும், பழங்குடி யினர் பல்வேறு உட்பிரிவினராகப் பிரிவுண்டதனாலான குடும்பம், அக்குடும்பத்தவர் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே . குழுவாக ஆக்கப்பட்டால்தான், போட்டிகளைக் கடந்து நிலைபெற்று நிற்கும் ஆதலாலும், கூட்டுக்குடும்ப முறை தோன்றலாயிற்று. பெரிய குடும்பத்தின் தலைவனாக இருந்தவன், அரசனாக நிலை உயர்வு பெற்றான். தமிழ்மொழியில் அரசனைக்குறிக்க வழங்கும் கோன் என்ற சொல், ஆயர் மகன் எனும் பொருள்படும். அதுபோலவே அரசியைக் குறிக்கும் ஆய்ச்சி என்ற சொல் ஆயர் மகள் எனும் பொருள்படும் என்ற உண்மை நிலையால், தமிழ்நாட்டில் முதன்முதலில், முல்லையில், கால்நடை மேய்ப்பாளராகிய ஆயரிடையேதான், அரசு முறை தோன்றிற்று என்பது தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு விட்டது. கோன் என்ற சொல், ஆயர்களின் அடையாளச் சின்னமாம் கைத்தடியைக் குறிக்கும் கோல் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகத் தெரிகிறது. அரச ஆணையின் சின்னமாகிவிட்ட அரசர்கைச் செங்கோல் ஆடுமாடுகளை மேய்க்க உதவும் வெறும் கோலே ஆகும்.

மத்திய ஆசிய அடுக்குகளில் உள்ளது போன்ற, இந்தியாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளின் கால்நடை மேய்ப்பு வாழ்க்கை, தென்னிந்திய மேய்ப்பாளரிடம் முல்லை நிலத்து ஆயர் வாழ்க்கையிலிருந்து, கூடாரங்களைப் பயன் கொள்ளுதல், ஒரு மேய் நிலப்பகுதியிலிருந்து பிறிதொரு மேய்நிலப் பகுதிக்கு எனக் கால்நடை மேய்க்கும் பழங்குடியினர் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருத்தல் ஆகிய இரு நிலைகளின் வேறுபடுகிறது.

ஆண்டு முழுதும், தட்பவெப்பநிலை ஒரே சீராக இருப்பதால் தென்னிந்தியாவில், கூடாரங்களின் கண்டுபிடிப்பு தேவையற்றதாகிறது. உடைந்த பானை ஓடு மூடப்பட்ட மூங்கில் கற்களால் முட்டு கொடுக்கப்பட்ட உலர்ந்த கொம்புகளாலான பந்தல் மீது, வேயப்பட்ட விசிறி வடிவிலான ஒரு சில பனை ஓலைகள், ஒரு மனிதனுக்கும் அவன் கால்நடைக்கும் காப்பளிக்கப் போதுமானதாக நிரூபிக்கப்பட்டுவிட்டன. நிலத்தின் வளமும், காலந்தோறும் பெய்யும் பருவமழையும், ஆண்டுக்கு ஒரே நிலத்தில் புல் பூண்டு விளைவை உறுதிசெய்தன. ஆகவே, வடக்கத்திய அடுக்குகளில் உள்ளதுபோல், ஒரு குடியிருப்பைச் சூழ இருந்த புல், கால்நடைகளால் மேயப்பட்டு விட்ட போதோ, கோடை ஞாயிற்றால் எரிக்கப்பட்டுவிட்ட போதோ, கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு புதிய மேய்ச்சலிடம் தேடிச் செல்ல வேண்டியது தேவையற்றதாகி விட்டது. ஆகவே தென்னிந்திய கால்நடை வளர்ப்பு வாழ்க்கை அரைகுறையான நாடோடி வாழ்க்கையன்று. அது நாகரீக வசதிகளை வளர்த்துக் கொள்ள வல்லதான நிரந்தர வாழ்க்கையாம். காட்டில் கால்நடைகளின் ஓய்வுநிலை அளித்த அமைதி வாழ்க்கை , குழல் எனும் இசைக்கருவியைக் காண வழிவகுத்தது. நீளவாட்டில் ஒரு சில துளைகள் இடப்பட்ட சிறுமூங்கில் துண்டே குழல். கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்க, நீண்ட நெடுநேரம் காத்திருப்பதால் ஏற்படும் ஆயரின் மனச்சோர்வைப் போக்கவல்ல இனிய இசை அதினின்றும் எழும்.

ஆயர்களின் ஒரு பிரிவினராகிய குறும்பர் என்பார், ஆடுகளில் குறுகிய கால்களும் உடல் முழுவதும் அடர்ந்து நீண்ட மயிரும் உடைய இனமாம் குறும்பாடுகளை வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில், இன்று நீராவி இயந்திரங்கள் கட்டுப்பாடின்றி நிறுவப்பட்டு, விசைத்தறிகள் மூலம் கம்பளி நெய்யப்படுதல், ஏனைய கைவினைஞர்களைப் போலவே, குறும்பர்களின் அன்றாட வாழ்க்கைக்காம் உணவினைப் பெறும் ஆண்டாண்டு கால வழிமுறையினை இழக்கச் செய்துவிட்டது. என்றாலும், குறும்பர், தங்கள் ஆடுகள் அளிக்கும் மயிரிலிருந்து கம்பளி நெய்யக் கற்றிருந்தனர். சென்னை மாநிலத்தின் முல்லைப்பகுதிகளில் இன்றும் குடிவாழ்ந்து கொண்டு தங்கள் இனம் வழிவழி மேற்கொண்டு வந்த குலத்தொழிலாம் கம்பளி நெசவை மேற் கொண்டுள்ளனர்.

மீனவர் இனம்

மக்கள், அடுத்துக் குடியேறிய இடம், கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல். உயிர்பெற்று விட்டது போல் ஓங்கி எழுந்து ஓய்ந்து அடங்கும் அலை ஓயாக்கடலின் பெருநீர்ப்பரப்பு, தாம் அளிக்கவல்ல பேரிடர்ப்பாடுகள் பால் காதல் கொண்டு, உண்டற்கினிய மீனாம், என்றும் குறையற்றுப் போகாத தன் பெரும் செல்வத்தை வாரிக் கொண்டு வரத்துணிந்து தொழில் படுமாறு பரந்த அகன்ற மார்பும் அழகுறச் செதுக்கி வைத்தாற்போலும் சதைப் பிடிப்பும் கொண்டு, வீரச்செயல் விரும்பும் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்தது. கடலோரத்தில் மீன் பிடிப்பதிலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். கடற்கரைச் சூழல், அங்கு வாழ்பவராகிய பரதவர்களைப், படகு கட்டுவோராகவும், மீனவர்களாகவும் ஆக்கிவிட்டது. மிதப்பதற்கு ஏற்ப, ஒன்றாக இணைக்கப்பட்ட பருத்து நீண்ட இரு மரத்துண்டுகளால் ஆன, பழங்காலத் தெப்பங்களே, முதன்முதலாகக் கண்ட படகுகளாம். பிரம்பினால் பின்னப்பட்டுக் கடல், விலங்கின் தோலால் மூடப்பட்ட கூடையாம் தோணி, அல்லது பரிசில் அடுத்து இடம் பெற்றது.

இந்நிலத்து முக்கிய விளைபொருள்கள் மீனும், உப்பும் ஆம். பரதவர் அவற்றை அகநாடுகளுக்குக் கொண்டுசென்று, பிற உணவுப் பொருள்களுக்காகப் பண்டமாற்று முறையில் தரவேண்டியதாயிற்று, அவர்களின் இச்சுற்றுச்சூழல், பரதவர்களை வணிகர்களாக ஆக்கிற்று. அப்பரதவர் அவர்களின் வழிவந்தவராய, இன்றைய பலிஜிகளைப் போலவே தங்கள் விற்பனைப் பொருள்களை, இரட்டை மூட்டைகளாகக் கட்டிப் பொதி எருதுகளின் முதுகுகளில் ஏற்றிக் கொண்டு சதுப்புநிலப்பாதைகளை வருந்திக் கடந்து, ஆற்றுப்பாய்ச்சலால் வளம் பெற்ற நாட்டு விளைபொருட்களுக்காக மாற்றுப் பண்டமாகக் கொடுப்பர். இப்பரதவர். குடியிலிருந்தே மேற்கே ஆப்பிரிக்க, அராபிய நாடுகளுக்கும், கிழக்கே மலாய், சீன நாடுகளுக்கும், இந்திய வணிகப் பொருள்களைப் படகுகளில் கொண்டு சென்ற பண்டைய இந்திய மாலுமிகள் தோன்றினர்.

உழவர்

முல்லைக்கும் நெய்தலுக்கும் இடைப்பட்ட, தாழ்வான சமவெளியாம் மருதமே, மக்கள், இறுதியாகக் குடிவாழத் தொடங்கிய நிலப்பகுதியாம். அது நிகழ்ந்தது பழங்கற்கால இறுதியில், புதிய கற்கால நாகரீக காலத்தோடு இன்றைய புதிய நாகரீக வாழ்க்கை தொடங்கிவிட்டது. கால்நடை வளர்க்கும் முல்லை நாகரீகப்பருவத்தில் தொடங்கிவிட்ட மரம், செடி, கொடிகளைக் குறிப்பாக நெல், வாழை, கரும்பு, மா ஆகியவற்றை மனித வாழ்விற்குப் பயன்கொள்ளும் நிலை, இம் மருத நாகரீக நிலையில் முழுமை அடைந்து விட்டது.

மருதத்தில், மண்ணின் விளைவாற்றல், அம்மண்ணுக்குரிய வனாம் உழவனுக்கு நிலத்தை உழுதபின்னர், நெல், முதலாம் - உணவுப் பொருட்களை விளைவிக்கும் முறையினைக் கற்றுத்தந்தது. ஆறுகளின் இரு பக்கங்களிலும், படிப்படி யாகத் தாழ்ந்து செல்லும் நில அமைப்பு, தங்கள் விளை நிலங்களுக்கு உயிர் ஊட்டும் நீரைக் கொண்டு செல்லும் முறையினை, வெள்ளத்தை, அது விரும்புமாறு ஓடவிடாது, தாம் விரும்புமாறு கொண்டு சென்று, வெள்ளநீரை ஆட்சி கொள்ளவல்லராகிய வெள்ளாளர்க்குக் கற்றுத் தந்தது. மழை நீரை ஏரி, குளங்களில் தேக்கி வைத்துப், பாசனக் கால்வாய்கள் மூலம் தங்கள் விளை நிலங்களுக்குச் செலுத்தவும், கிணறுகளிலிருந்தும், நீர் ஊறும் கசங்களில் லிருந்தும் நீரேற்றுவான் மூலம் நீரை மேலே கொணர்ந்து, தாங்கள் பயிரிடும் நிலத்துண்டுகளுக்குப் பாசனம் அளிக்க வல்லவரும், பெய் எனக் கூறும்போது பெய்யுமாறு கார்மேகங்கள் மீது ஆட்சி செலுத்த வல்லவருமாகிய காராளர் ஆற்றுப்படுகைக்கு அப்பாற்பட்ட மேட்டுப்பகுதி களில் வாழ்ந்திருந்தனர்.

தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மண்ணும், தண்டகன் பெயர் பெறும் காட்டின் அழிந்த புல் பூண்டுகளின் கூளமும் கலந்த கலவையாம் நிலப்பகுதி, ஆற்றுப்படுகைக்கு அப்பால் கிடந்தது. இந்நிலப்பகுதிதான், பருத்திச் செடியின் பிறப்பிடம். புதிய கற்காலத்து மனிதன், பருத்தியை நூலாக நூற்கவும், அந்நூலை ஆடையாக நெய்யவும் கற்றுக் கொண்டான்.

தம்முடைய தேவைக்கு மேல் குவிந்துவிட்ட உணவுப் பொருட்களையும், பருத்தி ஆடைகளையும் சேர்த்து வைக்க, மாந்தர், மரத்தாலான வீடுகளை, இப்போது கட்டத் தொடங்கினர். தேவைக்கு மேல் குவிந்துவிட்ட பொருட்களை மருத நிலத்தில் எளிதில் கிடைக்காத பொருட்களுக்காகப் பரதவரிடமிருந்து உப்பு மீன் போன்றவற்றிற்கும் இடையரிடமிருந்து, பால், பால் படுபொருள் சிறப்பாக நெய் போன்றவற்றிற்கும், குறவரிடமிருந்தும், கற்கள், கற்களாலான தொழிற்கருவிகள் (இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இரும்பு, இரும்பாலான தொழிற்கருவிகள்) போன்றவற்றிற்கும் விலையாகக் கொடுக்கும் பண்டமாற்று வாணிகம், பொருட்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நிலவழியாகக் கொண்டு செல்லும் வண்டிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. நாகரீக வளர்ச்சிச் சக்கரம் முழுமை பெற்று விட்டது. புதுக்கற்கால நாகரீகக் காலத்திற்குப் பின்னர் உணவுகளும், புதிய மரம், செடி கொடி எவையும் வழக்கத்தில் கொண்டுவரப்படவில்லை, மேனியை மறைத்துக் கொள்ளும் ஆடையை உருவாக்க, புதிய தொழிற்முறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே மருத நிலத்தைச் சார்ந்த புதுக்கற்கால நாகரீகத்தின் முற்ற வளர்ந்த நிலையும் அந்நிலத்துக் கலையும், தொழில்களும், நாகரீகத்தின் கடைசி உண்மையில் மிகப்பெரிய படிக்கட்டைக் காட்டுவ ஆயின.

பழங்காலத்தில் இரும்பு முதல், நம் காலத்தில் அலுமினியம் வரையிலான கனிவளக் கண்டுபிடிப்பும், நீராவி, எண்ணெய் ஆவி ஆகியவற்றால் இயங்கும் இயந்திரங்களும், மின்சாரத்தால் இயங்கும் விசைப் பொறிகளும் பழைய முறையிலான உழவுத்தொழில் உற்பத்திகளை விரைவும் எளிமையும் படுத்திப் போக்குவரத்தை விரைவுபடுத்த உதவு புரிந்தனவே அல்லது, புதிய உணவுப்பொருள் எதையும் உற்பத்தி செய்யவோ, வெயில், மழை, பருவந்தோறும் மாறும் வெப்ப தட்ப நிலைகளிலிருந்து உடலை மூடி மறைக்கும், புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கவோ இல்லை.


இந்த வளர்ச்சி முதன்முதலில் எங்கே இடம் பெற்றது?

மனித வாழ்க்கைக்குத் தகுதியுடைய நிலப்பகுதியின் இந்த ஐந்து. உட்பிரிவுகளும் நிலப்பரப்பில் சிறுசிறு அளவில் ஒன்றையொன்று தொடர்ந்தாற்போல், இந்தியாவில், விந்திய மலைக்குத் தெற்கில் இடம் பெற்றுள்ளன. அதனால் மக்கள் தொகைப் பெருக்கமும், உணவுப்பொருட்கள் இயல்பாகக் கிடைத்து வருவதில் நிகழும் மாற்றமும், பல்வேறு கால கட்டத்தில் மக்கள் ஒரு நிலப்பகுதியிலிருந்து மற்றொரு நிலப்பகுதிக்குக் குடிபெயர்ந்தமையும், அதைத் தொடர்ந்து, மாறிய வாழ்க்கைச் சூழ்நிலை வழங்கிய தூண்டுதல் உணர்ச்சிக்கு ஏற்ப, வேடர், நாடோடி, மேய்ப்பாளர், கடலோடி, உழவர் என்ற வேறு வேறுபட்ட மனித நாகரீக வளர்ச்சியையும், இப்பகுதியில் எவ்வாறு உருவாக்கிவிட்டன என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வேறு வகையில் கூறுவதாயின், உலகப் பெருநிலப்பரப்பில் வரையறுக்கப்பட்ட இச்சிறு பகுதியில் மனித வளர்ச்சி பற்றிய ஆய்வு மனித நாகரீக வளர்ச்சியில், நில இயல் கூறுபாடு செலுத்தும் ஆட்சியின் அளவைக் கணக்கிட்டு, வரைபடத்தில் காட்டுவதுபோல் தெளிவாக வரையறுத்துக் காட்டிவிடலாம். இந்த ஐந்து இயற்கைப் பிரிவுகள் மிகப் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு, கார்ப்பேத்தியன் முதல், அல்டாய்ஸ் அடிவரையான பரந்து கிடக்கும் பெருநிலப்பரப்பில் முல்லைத்திணையும், பயரினிஸ் முதல் இமயமும் அதற்கு அப்பாலும் வரையான பெருமலைப்பகுதியில் உலக மாதாவின் இடையைச் சுற்றி அணியப்பட்டிருக்கும் ஒட்டி யாணம் என்ற அணிபோல் குறிஞ்சித் திணையும், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்களைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் நெய்தல் திணையும், மிகப்பெரிய பாலைவனமாம் சகாராவும், அரேபியா, பர்ஷியா, மங்கோலியா நாடுகளில் அதன் தொடர்ச்சியுமாகிய பகுதியில் பாலைத் திணையும் இடம் பெற்றுள்ளன.

படிப்படியாகக் கடந்து வந்த நாகரீக வளர்ச்சி, முதன்முதலில் தென் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடங்கி, அங்கிருந்து வெகு தொலைவிற்கு அப்பால் உள்ள பெரிய நிலப்பரப்பிற்கும் பரவிற்றா? அல்லது நிலையெதிர் மாறாக நிகழ்ந்ததா? இப்புதிர், இன்றைய நிலையில் விடுவிக்க மாட்டா ஒன்று என்றாலும் மக்கள் கூட்டம், ஒரு நிலப்பிரிவில் லிருந்து பிறிதொரு நிலப்பிரிவிற்குக் குடிபெயர்வதும் அதன் பயனாய், மேலும் மேலும் உயர்ந்த நாகரிக வளர்ச்சியும், எல்லை காண இயலாப் பரந்த நிலப்பரப்பில் காட்டிலும், , மக்கள் குடி பெயர்ச்சி எளிதில் இடம் பெறத்தக்கதான, குறிப்பிட்ட சிறுநிலப்பகுதிகளில் நிகழ்வதே இயல்பாம் என்பது குறிப்பிடப்படலாம்.

இயற்கையின் ஆய்வுக்கூடமும், தமக்குக் கிடைக்கக்கூடிய நில இயல் ஆற்றல் துணையோடு, மனித நாகரீகம் குறித்து, அவ்வியற்கை நடத்திய முதல் சோதனையும், ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கப் பெருநிலப்பரப்புகளின், இயற்கை அமைப்பையொட்டி எழுந்த, மிகப்பெரிய நிலப்பிரிவுகளில் அல்லாமல் தட்சிண பாதா என வழங்கும், விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள இந்தியப் பகுதியில்தான் நடைபெற்றன என்று கருத்தில் கொண்டால், மனிதனின் பழைய வரலாற்றினை அறிய அது நமக்குப் பெரிதும் துணை நிற்கும்.

இந்த நாகரீகங்களை இயற்கை அன்னை மிகப்பெரிய அளவில் இந்திய எல்லைக்கு அப்பால் உருவாக்கிப் பின்னர், தென்னிந்தியாவை மனித இன ஆராய்ச்சிப் பொருள்களின் அரும்பொருட்காட்சி சாலையாக நிறைவு செய்வதற்காக, அந்நாகரீகம் ஒவ்வொன்றினுடைய சிறிய அளவிலான வடிவங்களைத் தென்னாட்டில் அரும்பாடுபட்டுப் புகுத்திற்று என்பதினும், பண்டைக்காலத்தைச் சேர்ந்த இப் பல்வேறு நாகரீகங்களும், தம்மில் தோன்றிய தம் இளந்தோன்றல்களை, இந்திய மண்ணில் சிறிய அளவில் பெற, இயற்கை எதில் வெற்றி கண்டதோ, அதை, அவ்வியற்கை பெரிய அளவில் மறுவலும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும் வகையில், இந்திய நாட்டுக்கு வெளியே, உரிய தகுதி வாய்ந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது என்பதே பெரும்பாலும் ஏற்கக்கூடியதாம். இக்கருத்தும், ஒருவகையில் யூகம்தான். ஒரே இயல்பான நிலை இயல் ஆட்சிபுரியும், உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில், இயற்கை. ஒரே மாதிரியான நாகரீகங்களை, ஒன்றிற் கொன்று தொடர்பில்லா நிலையில் உருவாக்கிற்று என்பதாகும் நிலைமை மாறக்கூடும்.

பழந்தமிழ்ப்பாக்கள்

உணவு ஆக்கலும், ஆடை நெய்தலும் இல்லாமல் மனிதனின் பிறிதொரு பெரிய கண்டுபிடிப்பு சொல்லாடல், உரையாடல், ஓசை ஒழுங்குடையதாகவும் இருக்கலாம். ஓசை ஒழுங்கற்றதாகவும் இருக்கலாம். பெரும்பாலோர் கருதுவது போல், உரைநடை செய்யுள் நடையை முந்தியதா அல்லது பெரும்பாலும் அதுவே உண்மை நிலையாதல் பாதி ஓசையொழுங்குடையதாகவும், பாதி ஓசையொழுங்கற்ற தாகவும் கலந்து இருந்த மூலமுதல் உரையாடலின் பிற்பட்ட காலத்து ஒரு வேறுபட்ட நிலைகள்தாமா, உரைநடையும், செய்யுளும் என்பதைத் துணிந்து முடிவு கூறுவது, அத்துணை எளிதன்று. ஆனால் இலக்கிய வளர்ச்சியில், செய்யுள் நடை உரைநடையை மிகப் பழங்காலத்திலிருந்தே முந்தியுளது என்பது முற்றிலும் உண்மையாம்.

பண், பாண் என்ற இரு சொற்களும் அவற்றிலிருந்து பாடு - வினைச்சொல், பாட்டு - பெயர்ச்சொல் தமிழின் மிகப் பழைய மொழிநிலைக்கு உரியவாகித், தமிழர்களின் தொடக்க காலத்து இன்பப் பொழுதுபோக்குகளில், இசை வழங்கலும் ஒன்று என்பதை உறுதி செய்கின்றன. தொடக்கத்தில், இசைவாணர்களாகவும், பின்னர்க் கால்நடை வளர்ப்பு, நாகரீகப் பருவத்தில், அரசு நிலை இடங்கொண்டபோது, அரசவைக் கலைஞர்களாகவும், அரசன் புகழ்பாடுபவராகவும், வாழ்ந்த பாணர், தமிழர்களில், மிகப் பழைய, நன்கு பாராட்டப்பெற்றது. ஆனால் சிறிய அளவிலேயே பரிசு அளிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தனர். தூய தனித்தமிழ் நாகரீகம் சிறந்து விளங்கிய போது, அப்பழங்காலப் பாணர், அரசர்களின் நண்பர்களாகவும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவோர்களாகவும் விளங்கினர்.

ஆனால், வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய நாகரிகம், தென்னிந்திய நாகரீகத்தோடு கலந்துவிட்ட வரலாற்றுக் காலத்தில், இறைச்சியை அதிலும் மாட்டிறைச்சியை அளவுக்கு மீறி உண்பதிலும், வெறியூட்டு மதுவகைகளைக் குடிப்பதிலும், அப்பாணர்கள் கொண்டுவிட்ட இடையறவு படாத் தீயொழுக்கம், தென் இந்தியாவில் மிகவும் தீண்டத் தகாத, இழிந்த இனத்தவருள் ஒருவராம் சமுதாய இழி நிலையை அவர்க்குத் தந்துவிட்டது.

மிகமிகத் தொன்மைக்காலத்துத் தமிழர், வரலாறு என ஏது ஒன்றும் இல்லாமலே, இவ்வகையில் வளர்ச்சி பெற்றனர். நாகரீக வளர்ச்சி குறித்த அளவுகோலில், அவர்கள் சிறது சிறிதாக அடைந்த வளர்ச்சி நிலையை, அவர்களுடைய மொழியிலிருந்தும் வரலாற்றுக்கு முந்திய அவர்களின் நாகரீகம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். உலக இலக்கியங்களில், நன்மிகப் பழைய இலக்கியங்களாம் வேதங் களிலும், உலகின் மிகப் பழைய வரலாற்று மூலங்களாம் மெசபடோமியப் பள்ளத்தாக்குக் கல்வெட்டுகளிலும், வட இந்தியாவோடும் அதற்கு அப்பாலும், அவர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம் அறியப்பட்டதும், அவர்கள், வரலாற்றில் முதன்முதலாகத் தெரியவந்தனர்.