ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

விக்கிமூலம் இலிருந்து
3. கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

இலக்கிய மரபுகளும் மக்கள் வாழ்க்கை முறையும்

இராமாயணத்திலிருந்து பழந்தமிழர் நாகரீகம் குறித்து மிகச் சிலவற்றை மட்டுமே பெற இயலும். இப்பொருள் பொறுத்தவரையில், இராமாயணம், மிகப் பெருமளவில் ஒரு தலைப்பட்ட அகச்சான்றாகவே இருக்க முடியும் என்பதை நினைவு கோடல் வேண்டும். நினைத்தாலே திகில் ஊட்டும் பகைவர்களாகவே ராக்ஷதர்களை, ஆரியர்கள் கருதினர். ஆதலின் அவர்கள், அதற்கேற்ப உடலமைப்பில், மனிதரைத் தின்னும் அரக்கராகவும், கொடுமையின் கோர உருவமாகவும், அவ்வாரியர்களால், இயல்பாகவே வருணிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு அடுத்த காலத் தமிழ்ப்பாக்களின் இலக்கிய மரபுகளை ஆராய்வதிலிருந்து நன்மிகப் பழங்காலத்துத் தமிழர் நாகரீகம் பற்றிய மிகவும் உண்மையான விளக்கத் தினைப் பெறலாம். இலக்கிய மரபு எனக் கூறும்போது, திறனாய்வில் நாமே வகுத்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள் எனும் பொருளுடையதாக நான் கொள்ளவில்லை. தமிழிலக்கிய மரபுகள் என்பதை, ஹொராஸ் அவர்களால் விளக்கிக் கூறப்பட்ட விதிமுறைகள் போலவும், வீரகாவியப் பாக்களுக்கான அரிஸ்டாடில் விதிமுறைகள் போலவும், கவிஞர்களால், கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்ட, பிற்காலத் திறனாய்வாளர்களால் முறைப்படுத்தப்பட்டன ஆகா. பழைய தமிழிலக்கிய மரபுகள், மனித வாழ்க்கையின் மீது இயற்கைச் சூழலின் செயல்பாடுகள் வளர்த்துவிட்ட பழைய வழக்கங்களின், கல் போலும், திண்ணிய பெரும் பிழம்பாம். இலக்கிய மரபுகள். அதிலும் குறிப்பாக, மிகவும் பிற்பட்ட காலத்தே வலிந்து இயற்றப்பட்ட, சமஸ்கிருத, தமிழ்ப்பாக்கள் எழுவதற்கு மிகமிக முற்பட்ட காலத்தில் இருந்த, கலப்பற்ற, தூய, பழைய இலக்கிய மரபுகள், மக்களின் இயற்கையோடியைந்த உண்மையான பழக்க வழக்க ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் படையாகக் கொண்டனவாம். தொடக்கத்தில் பாணர்கள் வானம்பாடிகளைப் போலத் , தங்களை மறந்து பாடினர். அவர் பாக்கள், அக்கால மக்கள் நடத்திய வாழ்க்கையினை உள்ளது உள்ளவாறே காட்டும் உண்மையான காலக் கண்ணாடியாக இருந்தன. பழைய இலக்கிய மரபுகளைத் தோற்றுவித்த வாழ்க்கை முறைகள் வேறுபட்டு, பாக்களின் கற்பனைப் பொருள்களெல்லாம் வெறும் இலக்கிய மரபுகளாகிவிட்ட நிலையிலும், பிற்காலப் பாவலர்கள், பழங்காலத்தைச் சேர்ந்த, வழிவழி வந்த இலக்கியக் கற்பனைகளை விடாமல் மேற்கொண்டு வருகின்றனர், உதாரணத்திற்குப் பண்டை நாள்களில் கால்நடைகளே மக்களின் செல்வமாக அமைந்தன. இனத்தலைவர்கள், ஒருவர், பிறிதொருவர் கால்நடையைக் களவாடும்போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் எழுந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடும் போது, அத்தலைவர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்தன. ஆகவே, பகைவரின் கால்நடைகளைக் களவாடுவதில் போர் தொடங்குவதாகப் பாடல் புனைவது மனித வரலாற்றின் வளர்ச்சி நிலையில், ஒரு கட்டத்து உண்மை நிலைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. பிற்காலத்தில், போருக்கு வேறு பல காரணங்களும் உருவாகிவிட்டன. ஆனால், இலக்கிய மரபோ, பாவலனைப் போர்களின் மாறாத் தொடக்கமாக, தொடக்ககால ஆனினை கவர்தலையே பாட வைக்கிறது. அவ்வாறே, கி.பி. ஆறாவது நூற்றாண்டில், வலிந்து பாடப்பெறும் தமிழ்ப் பாடல்கள் தோன்றிவிட்ட காலத்திற்கு முன்வரையும் பிற்காலப் பாடல்களில், காதல், போர் பற்றிய இருவகைப் பாடல்களை இயற்றுவதை எண்ணில் அடங்கா. இலக்கிய இலக்கண விதிமுறைகள், விடாப்பிடியாக முறைப்படுத்தி வந்துள்ளன.

இவ்விலக்கிய மரபுகளிலிருந்து, மக்கள் மேற்கொண்டிருந்த உண்மை வாழ்க்கை நிலையைப் பாவாணர்கள் பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டிய அக்காலங்களுக்குக் கற்பனையில் பின்நோக்கிச் செல்லலாம். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, பாக்கள் எழுவதற்கு முற்பட்டதான ஒரு காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று, இந்தியர்கள், இந்நனிமிகு பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை - மின்னலின் ஒளிக்கீற்றுக்கள் போல் அங்குமிங்குமாகக் காணக் கிடைக்கும் காட்சியைப் பெறலாம். நன்மிகப் பழங்காலத்தை, இவ்வாறு நுழைந்து பார்ப்பதன் மூலம், தென்னிந்தியர்களின் கி.மு. 2000 அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக் கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர் அந்நனிமிகச் சேய்மைக் கண்ணதாய பழங்காலத்தில் வளர்ச்சி வேகம், வானூர்தி , கம்பியில்லாத் தந்திகளின் காலமாம் இன்றைய வளர்ச்சி வேகத்திலும் மிகமிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சுவிடுவதற்கும் இடைவெளியில்லா விரைவான மாற்றமும் வழுக்குப் பனிப் பாறைகளின் ஆறு போலப் புலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் பண்டைய நாட்களின் மெதுவான, சிந்தனைச் செயல்பாடுகளும் இருகோடித் துருவங்கள் போலும் வேறுபாடுடையன. ஆகவே, கி.மு. 2000இல் எது உண்மை நிகழ்ச்சியோ, அதுவே, அதனினும் நனிமிகவும் பிற்பட்ட பழங்காலத்திலும், உண்மை நிகழ்ச்சியாகும். எண்ணுதற்கும் அப்பாற்பட்ட அப்பழங்காலத்தில், மனிதன், ஏனைய உயிரினங்களைப் போலவே, முழுக்க முழுக்க, நில இயல் கூறுபாடுகளுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தான். அவன் வாழ்க்கை, பெரும்பாலும், அவனுடைய சுற்றுச்சூழல் நிலைகளுக்கு உடன்பாடான விளைவினதாகி, அவ்வகையில், இயற்கையின் கட்டுப்பாடுகளைக் கடக்கக் கற்றுக் கொண்டு, துருவப் பனிப்பாறைகளோடு வெற்றிகரமாகப் போரிடவும், வான்வெளியின் மேல்நிலைகளுக்குப் பறப்பதன் மூலம், நிலைத்து ஈர்ப்பாற்றல் விதிகளின் எல்லையைக் கடக்கவும் செய்யும் இன்றைய வாழ்க்கையோடு உளம் கொளத்தக்க மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும். காதற்பாக்களின் இலக்கிய மரபுகள், உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து பிறந்தனவே

உலக நிலப்பரப்பின் மக்கள் வாழத்தக்க பகுதிகள், ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கி, வேட்டையாடி உயிர் வாழ்ந்த, மரம் செடி, சொடிகளைச் சிறிய அளவிலேயே கொண்ட சிறு மலைப்பகுதி, தண்ணீர் கருதி, மரம், செடி, கொடிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகி, மனிதன், முதன்முதலில், வீர ஒழுக்கங்களையும், கொள்ளையடித்து வாழும் உள்ளுணர்வையும் வளர்த்துக் கொண்ட மணல்செறிந்த பாலை; மனித வாழ்க்கையில் ஆனிரை மேய்க்கும் கூட்டத்தை, முதன் முதலில் கண்ட காட்டுப்பகுதி, மனிதன். மீன் பிடிக்கவும், படகுகளில் கடல்மேல் செல்லவும், உணவுப் பொருள்களுக்காக, மீனையும், உப்பையும் பண்ட மாற்றம் செய்யவும் கற்றுக் கொண்ட கடற்கரைப் பகுதி ; உழவும் நெசவும் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆற்றுப்பள்ளத் தாக்கு எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் ஐந்து திணைகளாக அது பிரிக்கப்பட்டது, என்பது முதல் அதிகாரத்தில் முன்பே குறிப்பிடப்பட்டது. ஒரு நாகரீகத்திலிருந்து மற்றொரு நாகரீகத்திற்கு, மனிதன் மேற்கொண்ட பயணம், காலத்தின் நீண்ட பருவங்களை எடுத்துக் கொண்டது. ஒரு நிலப்பகுதி யிலிருந்து பிறிதொரு நிலப்பகுதிக்கு மனிதனின் குடி பெயர்ச்சியே இதற்குத் தலையாய காரணம். ஆனால் அடுத்து வேறு வகை நாகரீகம் தன்னில் இடங்கொள்ளும் போது, ஒவ்வொரு நிலப்பகுதியும், தத்தமக்குரிய நாகரீகத்தை விடாமல் மேற்கொண்டிருந்தது. அவ்வகையில், மனித நாகரீகத்தின், முதல் நிலை உருப்பெற்ற, குறிஞ்சி அல்லது மலைநாட்டில், மனிதன், பாதி நாடோடி வாழ்க்கையாம், வேடன் வாழ்க்கையை நடத்தி வந்தான். காதல் உறவு, சமுதாய மரபுகளால் தடுக்கப்படவில்லை, கண்டதும் கொண்ட காதலைத் தொடர்ந்து உடனடிக் கூடலே அக்கால வாழ்க்கைச் சட்டமாம். குலமுறைப்படியான விருந்து பின் தொடர மணந்த இருவரைப் பொதுமக்கள் வரவேற்கும் திருமண விழா. மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது. ஆனால், மணவிழாவிற்கு முந்திய காலாகாலமாக இருந்து வரும் வழக்கமாம். களவுக்காதல் ஒழுக்கம் மலைநாட்டுப் பழங்குடியினரிடையே இக்காலத்தும் இடம் பெற்று இருப்பதுபோல், கைவிடப்படாமல் அவ்வாறே கடை பிடிக்கப்பட்டது. மலைநாட்டு ஆடவரும் பெண்டிரும் குறைந்த ஆடையில் நிறைவு கண்டனர். மனிதனை மறைக்க, கழுத்திலிருந்து தொங்கும், எண்ணற்ற கிளிஞ்சல் சரடுகள் (பிற்காலத்தில் அரைக்கச்சை அணியாம் மேகலை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்த) மலர்களாலும் இலைகளாலும் ஆன மாலைகள், இவையே போதுமானவையாயின. குறிஞ்சிநாட்டு உட்பகுதியில் வாழும் குறவரிடையே, இந்த ஆடை கைவிடப்படாமல் இன்றும் உளது. இக்குறவர் மலைகளிலிருந்து இறங்கிக் கீழ் நாடுகளுக்கு வரும்போது, உடை வகையில் மேற்கொள்ளும் ஒரே மாற்றம், மலர்களாலும் இலைகளாலும் ஆன அரைக்கச்சைக்குப் பதிலாகக் கிழிந்த துணியின் சிறு துண்டை மேற்கொள்வது ஒன்றே. குறவரிடையே பாக்கள் முதல் முதலில் எழுந்தபோது, பாவாணர்கள் மலைநாட்டுத் தலைவர்களின், புணர்ச்சிக்கு முந்திய கள்ளக்காதலை, அவர்கள் தங்கள் காதலியர்க்குத் தழை உடை எனப்படும் இலை ஆடைகளையும், அம்மலை நாட்டுத் தலைவர்கள் வேட்டையில் கொன்ற புலிகளின் பற்களையும் கொடுப்பதையே இயல்பாகப் பாடினர். இப்பற்கள், மாலையாகக் கோக்கப்பட்டு கழுத்திலிருந்து தொங்க அணியப்பட்டு, புலிப்பல் தாலி என அழைக்கப்படும். (புலிப்பல்லால் செய்யப்பட்டு, மணம் ஆவதற்கு அறிகுறியாகக் கழுத்திலிருந்து தொங்கும், இப்புலிப்பல் தாலி, இளஞ்சிறுவர்களாலும் அணியப் பட்டது) பிற்காலத்தில் இதிலிருந்தே பொன்தாலி உருப்பெற்றது. பிற்காலத்தில் புணர்ச்சிக்கு முந்திய களவுக்காதல், குறிஞ்சித் திணைப்பாடல் கள் என்ற ஒருவகை பாடல்களுக்கு மட்டுமே கருப்பொரு ளாதல் வேண்டும். மலைநாட்டு மாவின் மரவினங்களோடும், இலை ஆடைகளைத் தருவதோடும், காதல் நோய்க்கு, அப்பெண்ணைக் கொண்டுவிட்ட மலைநாட்டுக் கடவுளாம் முருகனையே காரணம் காட்டி , வெறியாடல் மூலம், அந்நோய் தீர்த்தலோடும் மட்டுமே தொடர்புபடுத்தல் வேண்டும் என்பது இலக்கியமாகிவிட்டது. உண்மைக்காதல் ஒழுக்கத்தின் ஒரே சீரான போக்கில் அமையாத இந்நிகழ்ச்சிகளெல்லாம், குறிஞ்சித்திணைப் பாக்களின் கருப்பொருளாக வகைப்படுத்தி வகுக்கப்பட்டன.

அதுபோலவே, கால்நடைகளைக் காத்தற் பொருட்டு ஆயன் பிரிந்து செல்வது போலவும் சிறு பிரிவுகளால் நேரும் கடுந்துயரும், இருவரும் பின்னர் இணைந்த வழிப் பிறக்கும் பெருமகிழ்ச்சியும் (காட்டோடும் காடு சார்ந்த நிலத்தோடும் தொடர்புடையதான முல்லைத் திணைப் பாடல்களின் கருப்பொருள்களாக) முடிவு செய்யப்பட்டன. முல்லைத் திணைப்பாக்கள், தம்முடைய கற்பனைகளை, அம்மேய்ப் புலத்து இயற்கைப் பொருள்கள் பழக்கவழக்கங்களிருந்தே பெற்றுக் கொண்டன.

நெய்தல் திணைப்பாடல்கள், மீன்பிடி பெருந்தொழில் இன்றியமையாததாக ஆக்கிவிட்ட நெடும் பிரிவு, உலர்ந்த மீனாம் கருவாட்டு நாற்றத்தை இடைவிடாது வெளிப்படுத்தும், கருமை நிறம் மின்னும் மேனி அழகியாள் பால் அன்புகாட்டல் ஆகியவற்றைப் பாடற் பொருளாக்குகின்றன. வறண்ட பாலைத்திணைப்பாடல்கள், பெருமணல் பரந்து, இடையீடின்றி நீண்ட, வறண்ட நிலப்பரப்பில் வாழ்வோரின், கொள்ளையடித்துண்ணும் வாழ்க்கையின் இடை நிகழ்வாம் நெடும் பிரிவின் தொடர்பாகப் பிறந்தன. ஆகவே, நெடும் பிரிவு தரும் கடுந்துயர் பாலைபாக்களின் கருப்பொருள் ஆயின.

தமிழ்க் கவிதை உலகின் ஆட்சி எல்லைக்குள் அவல நிகழ்ச்சி எனப்படுவன, தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே, பழந்தமிழர் மனப்போக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய துன்பியல் பாக்களின் மிக நெருங்கிய அணுகு நிலை இவ்வளவே.

முடிவாக, முறையான திருமணம், அத்திருமண உறவைத் தொடர்ந்த அன்பு வாழ்க்கையாம் கற்பு நெறி, அதன் பாதையில் முள் உறுத்தும், பரத்தையர் ஒழுக்கத்தால், மனைவாழ்க்கையின் சீர்கேடு, அதன் விளைவாம் , மணங்கொண்ட காதலரிடையே ஊடல், அவ்வூடலைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சி தருகூடல் ஆகியவை, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பாடல்களாம். மருதத்திணைப்பாக்களின் கருப்பொருள்களாம். நீர் நிறைந்த நெல்வயல்களில் சிலமாதக் கடின உழைப்பை அடுத்து, நெற்கதிர் முற்றும் பருவத்திலும், நெல்மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு உழவிற்குப் பக்குவப்பட்டுக் கிடக்குமாறு நிலம், ஓய்வுக்கு விடப்பட்ட பின்னரும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு தொடர்ந்து கிடைக்கும் உழவுத் தொழில் நடைபெறும் நிலப்பகுதியில், நாகரீகத்தின் மெருகேற்ற மலர்ந்து வளர்ந்ததை உணர்ந்து கொள்வது எளிது. இவ்வோய்வுப் பருவத்தில், காதலர்களின் ஊடலும், இன்பலீலைகளுமே, கிடைக்கக்கூடிய இன்பப்பொழுது போக்குகளாகும்.

நில இயல்புக்கு ஏற்ப அமையும் போர்ப்பாடல் மரபுகள்

காதல் அல்லாமல், பாக்களின் மற்றொரு கருப்பொருள் போர். குறிஞ்சி நிலத்தில், போர், வெட்சி எனப்படும் ஆனிரை கவர்தலில் அடங்கியிருந்தது. ஆனிரை கவரப்படையெடுத்துச் செல்வார்வெட்சி மலர்களால் ஆன மாலை அணிந்து கொள்வர் ஆதலின், அப்போர், வெட்சி என அழைக்கப்பட்டது. கவர்ந்து சென்றாரிடமிருந்து ஆனிரைகளை மீட்டுக்கோடல், அது போலும் ஒரு காரணத்தால், கரந்தை எனப் பெயரிடப்பட்டது, அடுத்து இருந்த காட்டு நிலம். தற்காப்புப் போர் நிலையில், இயற்கை முதல்தரமாக அமைந்து அதனால் காவற்காடு என அழைக்கப்பட்டது. வஞ்சி மாலை அணிந்த படைத் தலைவர்கள், காட்டு நிலத்துள் படையெடுத்துச் சென்றனர்; இது வஞ்சித்திணை என அழைக்கப்பட்டது. அரசர்கள், தங்கள் தலைநகர்களை, ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதாவது மருதத்தில் நிறுவிய போது, தங்கள் காப்பிற்காகக் கோட்டைகளைக் கட்டினார்கள்; முற்றுகையும், அது தொடர்பான செயல்களும் போர்முறைகளில் ஓர் அங்கமாகி விட்டன. இந்நடவடிக்கைகளின் போது, உழிஞைக்கொடி அணிந்து கொள்ளப்பட்டது. அதனால் அந்நடவடிக்கைகளை விளக்கும் பாடல்கள் உழிஞை என்ற இனத்தின் கீழ் வந்தன. போர்த் தந்திரங்களைப் பேராண்மைகளை மேற்கொள்ள நேரிடும். எதிர் எதிர் நின்று செய்யும் போர்கள், மரங்கள் செறிந்த காட்டு நிலங்களுக்கும், விளை நிலங்களுக்கும் வெகு தொலைவிலான, திறந்த போர்க் களத்திலேயே இயலுமாதலின், நெய்தல் என அழைக்கப்படும் கடற்கரைக்கு அணித்தாக உள்ள அகன்ற சம நிலங்களோடு தொடர்புடையதாகி, இந்நிகழ்ச்சிகளில், தும்பை மாலைகள் அணிந்து கொள்ளப்பட்டமையால், தும்பை என அழைக்கப்பட்டன. இறுதியாகப் பாலை நிலத்தோடு தொடர்புடைய காதலர்களின் பிரிவோடு ஒத்திருப்பது, பாவாணர்கள், வாகை மலர் மாலை அணிந்து கொண்டு, போரின் அவலம் போர்களிலிருந்து விளையும் நாட்டழிவுகளைப் பாடுவேது போலவே, வெற்றிகளையும் பாடும், வாகை ஆகும்.

பல்வேறு வகைப்பட்ட இத்திணைப் பாடல்களெல்லாம் மலர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது ஈண்டுக் குறிப்பிடல் வேண்டும். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நிலத்தின் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த விளைபொருளாம். இம்மலர்களால் ஆன மாலைகள், காதல் துறையின் அல்லது போர்த் துறையின், விளக்கப்படும் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியின் சின்னமாக அணிந்து கொள்ளப்பட்டன. மலர்கள் போர்க்கள நிகழ்ச்சியின் போது, போர் வீரர்களை இனம் பிரித்து உணர்த்தும் சீரணிகளாக அமைந்தன. பழந்தமிழர்கள், மலர்களில் பேரின்பம் கண்டனர்; தங்களைத் தங்கள் தொழிற் கருவிகளை, ஏனைய உடமைகளைத் தங்கள் வீடுகளைப் பந்தல்களை, நன்மிகப் பழங்காலம் தொட்டே, இலைகளாலும், மலர்களாலும் அழகு செய்தனர்.

கொடிகள், இலைகள், மலர்கள், விலங்குகள் போலும் வடிவங்களைச் செதுக்குவதன் மூலம், தங்களுடைய தொழிற்கருவிகள் வீடுகள், தட்டுமுட்டுப் பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை அழகு செய்ததற்கும், இயற்கைப் பொருள்கள் மீது கொண்ட அதே காதல் தான் காரணமாம். இன்றைய நாட்களில்தான், தமிழர் வீடுகளில், அழகிழந்த அணிநலன் இழந்த, விசைப் பொறிகள் வனைந்து குவிக்கும் பண்டங்கள், அணி அழகுமிக்க பண்டைய பண்டங்களுக்கு மாற்றாக இடம் பெற்றன. இன்றைய நவநாகரீக வாழ்க்கையை மேற்கொண்டு விட்டோர் உள்ளங்களிலிருந்து, கவின் கலை யுணர்வைத் துடைத்து அழித்து விடுகின்றன. தங்கள் பாடல்களில் போலவே, தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் எண்ணங்களை, அடையாள வடிவில் வெளிப்பட உணர்த் தும், மலர்களின் மொழி ஒன்றைத் தமிழர் வளர்த்தனர்.

இலக்கிய மரபுகளின் முறையான வளர்ச்சி

பாக்களின் இவைபோலும் பல்வேறு மரபுகளெல்லாம், தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கியவாறே, (இனி - வெளிவரவிருக்கும், பண்டைத் தமிழர்கள் (Ancient Tamils ) என்ற என் நூலில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே அவ்விலக்கண நூலில் விளக்கிக் கூறப்பட்டிருக்கும் இலக்கிய , மரபுகள், கீழே குறிப்பிட்டிருக்கும் கால கட்ட வரிசை யில்தான் வளர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்றையே ஈண்டுக் கருத்தில் கொண்டுள்ளேன்.

1. மனித நாகரீகத்தின் ஐந்து படிநிலைகளும், இயற்கை நிலப்பகுதிகள் ஐந்திலும் உருப்பெற்று மெல்ல மெல்ல வளர்ந்த காலகட்டம். (இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எண்ணப்பட வேண்டிய மிக நீண்ட கால கட்டமாதல் வேண்டும்.)

2. பாவாணர்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், பாடத் தொடங்கி அந்நிலப்பகுதியில் மக்கள் வாழ்க்கை நிலைகள் அந்நிலங்களின் மாவடை, மரவடைகள், சுற்றுக்சூழலுக்கு எதிர் ஏற்று வளர்ந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தங்கள் பாக்களில் தங்களை அறியாதே எதிர் ஒலிக்கும் காலகட்டம்.

3. ஒரு பாட்டு, ஐவகை நிலப்பகுதியில் எந்நிலப்பகுதியில் பாடப்பட்டிருந்தாலும், அது குறிப்பிட்ட ஒரு ஒழுக்கம் பற்றிக் கூறுவதாயின், அதை அந்நிகழ்ச்சிக்கு உரிய திணைக்கே உரியதாக ஆக்கச் செய்யும், மாற்றுதற்கியலா இலக்கிய மரபுகளாகப் பாவணர்களின் பாடற்பணிகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டம். இயற்கை நிலப்பிரிவு, மற்றும் அந்நிலத்து நிகழ்ச்சிகளைக் கூறும், ஒருவகைப் பாடல் என்ற இருபொருள்களை ஒரு நிலையில் இயல்பாகக் குறித்த, திணை என்ற அச்சொல், இப்போது, இலக்கிய மரபாக, ஐந்து இயற்கை நிலப்பிரிவுகளில், ஒரு - நிலப்பிரிவோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

இம் மரபுகளெல்லாம் தொல்காப்பியனார் இயற்றிய தமிழ் இலக்கணமாம். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்படாத காலத்தில இயற்றப்பட்டு, இன்றுவரை அழியாமல் இருக்கும் மிகப் பழைய தமிழ் நூலாம் இந்நூல், செய்யுள் இலக்கணம் பற்றிய, இப்போது ஒன்றுகூடக் கிடைக்காத, பழைய விதிமுறைகள் பலவற்றைச் சுட்டுகிறது. அவ்விலக்கணம் தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைந்த, பெரும்பகுதி அல்லது முழுவதும் அழிந்துபோன தமிழ்ச் செய்யுள் இலக்கியப் பெருந்தொகுதி பண்டு இருந்ததை ஊகிக்கச் செய்கிறது.

காதல், போர் ஆகிய நெறிகளில் நிகழும், பாடல் புனைவதற்கு உரிய கருப்பொருள்களாகும், நூற்றுக்கணக் கான நிகழ்ச்சிகளைத் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார்.

இலக்கண ஆசிரியன், காதல், போர் பற்றிய ஒழுக்கங்களில், நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து முன்னதாகவே ஆராய்ந்து வகைப்படுத்தி இலக்கணம் - வகுத்தான். அதன்பின், பாவாணர்கள், அவ்விலக்கண ஆசிரியன் ஆராய்ந்து வகைப்படுத்திய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்று குறித்தும் பாக்களைப் புனைந்தனர் எனில், எள்ளி நகையாட்டிற்குரியது. ஆகவே, இந்நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும், தம் காலத்திற்கும் முன் வாழ்ந்த பாவாணர்களால் பாடப்பெற்ற ஒரு சில பாக்களையாவது, தொல்காப்பியனார், தம் உள்ளத்தில் கொண்டிருக்க வேண்டும்.

அழிந்துபடாமல் இப்போது கிடைக்கும் பழம்பாக்கள் அனைத்துமே, தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தனவே. தொல்காப்பிய உரையாசிரியர்கள், தொல்காப்பிய விதிகள் பலவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப், பிற்காலத்தைச் சேர்ந்த இப்பாக்களில் காணல் அரிது என்பதை உணர்கின்றனர். சில இடங்களில், அவர்கள் காட்டும் பொருள் விளக்க மேற்கோள்கள் பொருத்தமற்றவை ஆகின்றன; பல நேரங்களில், தொல் காப்பிய விதிகளுக்கான மேற்கோள்களைக் கண்டுகொள்ளு மாறு படிப்பவர்க்கே விட்டு விடுகின்றனர். கூறிய இவ்வெல்லாவற்றிலுமிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர், மிகப் பரந்த தமிழ் இலக்கியம் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது. இவ்விலக்கியம் வளர்ந்த காலம், ஐந்நூறு ஆண்டுகள் என்பது, கூட்டல், குறைத்தல் இல்லா, ஓர் அளவான மதிப்பீடாம்.

இவ்விலக்கியம், அதனுடைய, அழிக்கலாகா, உரம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டுவிட்ட பாவின மரபுகளோடு இணைந்து தோன்றுவதற்கு முன்னர், இந்த மரபுகளெல்லாம், வெறும் மரபுகளாக இல்லாமல், உண்மை நிகழச்சிகளாக இருந்தது. உதாரணத்திற்குப் புலவன், காதல் பிறப்பதை, மலைநாட்டுக்கு உரியதாக, பா மரபுக்காகக் கற்பித்துக் கூறாமல், தன்னுடைய பாக்களில் ஐந்து இயற்கை நிலக்கூறுகளின் உண்மை வாழ்க்கை நிலகளை, உள்ளது உள்ளவாறே எதிரொலித்த வேறு ஒரு இலக்கியம் இருந்திருக்க வேண்டும், அந்த மிகத் தொலைநாட்களில், காதலர்களின் தற்காலப்பிரிவு, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய நிலங்களுக்கு உரியதாக மரபுக்காக ஏற்றிப் பாடாமல், அந்நிலங்களில் வாழ்ந்து அந்நிலங்களைப் பாடிய புலவன், அந்நிலம் ஒவ்வொன்றிலும், தான் கண்ணெதிரில் கண்ட, காதலர்கள் பிரிவால் நேரும் கருத்துரையை விளக்கிக் கூறினான், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாய்க் கொண்ட மரபுவழிப்பாடல்களுக்கு முற்பட்டதான , இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு, ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளாகா. இவ்வகையில் தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம் 43 எல்லையாக, ஏறத்தாழ கி.மு. 1000ஐ அடைகிறோம். இவ்வகைப் பாக்களின் வளர்ச்சிக்கு வழி செய்து, அப்பாக்களில் எதிர் ஒளி காட்டும் நாகரீகம் வளர்ச்சி பெறுவதற்கும் பல நூறு ஆண்டுகளை எடுத்துக் . கொண்டிருக்க வேண்டும். ஆகவே, தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்தை, அவர்கள், கிறித்துவுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்க வேண்டும் என காள்ளலாம்.

பாட்டுடைத் தலைவர்களாகப் பழங்குடி இனத்தலைவர்கள்

பாவாணர்கள், பண்டைக்காலம் தொட்டே, பரிசில் பெறும் நோக்கோடுதான் பாடினார்கள். ஆகவே, அவர்களுடைய பாட்டுடைத் தலைவர்களெல்லாம், பழங்குடி இனத் தலைவர்களே. போர் இத்தலைவர்களால் கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில நிகழ்ச்சி களின்போது மட்டுமே, ஆற்றல்மிகு அருஞ்செயல் ஆற்றும் வாய்ப்பு, பொதுமக்களுக்கு வாய்க்கும். ஆனால், போரில் ஆற்றும் அருஞ்செயல்களுக்கான பெருமையெல்லாம், பொதுவாகப் போர்ப்படைத் தலைவர்களையே சென்று சேரும். ஏழையின் காதலைப் பாடினால் பரிசு கிட்டாது. ஆகவே காதற் பாக்களின் பாட்டுடைத் தலைவர்களும் அரசர்களே. அவ்வகைப்பாட்டுடைத் தலைவர்களும் அவர் வழிவந்தவர் களும், அவர்கள் வாழும் நிலத்தோடு தொடர்புடைய சொல்லால் பெயரிடப்பட்டனர். "திணைகளுக்குரிய பழங்குடித் தலைவர்களின் பெயர்கள், பெயர் அதாவது : பண்பு, வினை, அதாவது செயல் ஆகிய இரண்டை அடிப்படையாகக் கொண்டு வருவனவாம், என்றும், ஆயர், வேட்டுவர் என்ற, திணைவாழ் மக்களுக்குரிய பெயர்கள், அத்திணைவாழ் மக்களின் தலைவர்களுக்கும் பொருந்தும்" என்றும் ஏனைய நிலங்களில் வாழும் மக்களைக் குறிக்க வரும் திணைப் பெயர்களை ஆராய்ந்து காணின், அவையும் இவை போன்றனவே. அவை, அத்திணை மக்களின் தலைவர்க்கும் பொருந்தும் என்றெல்லாம் கூறுகிறார் தொல்காப்பியனார்.

“பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலப் பெயரே”
“ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”
“ஏனோர் மருங்கினும் எண்ணுங் காலை
ஆனா வகைய திணைநிலப் பெயரே”
(தொல். அகத்திணை இயல் - 20,21,22)

பழங்குடி மக்களின் இனப்பெயர்களாக இருந்த அப்பெயர்களெல்லாம், இப்போது, சாதிப் பெயர்களாகி விட்டன, உ-ம். குறவர், பரதவர், இடையர், வெள்ளாளர். குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியிலேயே வாழ்ந்து, அப்பழங்குடியினரிடையே இயற்கைச் சூழல், விதித்துவிட்ட தொழில்களுக்கே உரிய பழக்க வழக்கங்களை மேற் கொண்டவரிடையே, தங்கள் தங்கள் இனத்தவர்க்குள்ளாகவே திருமண உறவு கொள்ளும் முறை, இடம் பெற்று விடுவது இயல்பே. இவ்வகையான உறவுக்கட்டுப்பாடல்லாமல், பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் பால், இவ்வினப் பெண்டிர் காட்டும் பற்றுமே, பழங்குடி இனம் பிற்காலத்தே சாதியாக மாறியதற்குக் காரணமாம். பழங்குடி இனத்தவர் தலைவன் அல்லது அரசனின் செல்வாக்கும், பழங்குடியினர் பழக்க வழக்கங்களை அழியா நிலைபேறுடையதாக ஆக்கத் துணை நின்றது. ஆட்சிமுறை அறிவு, வளர்ந்திருந்தது, அல்லது நூல்வழியிலோ, நடைமுறை யிலோ, ஒருவகை ஆட்சிமுறை பின்பற்றப்பட்டது என்பதை உணர்த்த, பண்டைத் தமிழ்ப்பாக்களிலோ, தொல்காப்பியப் பொருளதிகாரத்திலோ எதுவும் இல்லையாகவே, பழங்குடித் தலைவனின் அரசுரிமை, நாகரீக வளர்ச்சி பெறாக் காட்டுத்தன் இயல்பினதாகும்.

ஒவ்வொரு நிலத்துக்குமான கவி மரபுகள்

பல்வேறு நிலங்களுக்கும் உரிய தெய்வங்கள் அந்நிலங்களுக்கு உரிய கருப்பொருள்களில், முதல்வனவாகக் கூறப்படுகின்றன. திறனாய்வுக்காக, அவை, உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும். அவை தவிர்த்த ஏனைய கருப்பொருள்கள், அந்நிலம் ஒவ்வொன்றிற்கும், அந்நிலம் பற்றிய பாக்களுக்கும் உரியனவாய், உணவுப் பொருள்கள், மாவினங்கள், மரவினங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழ்கள் முதலியனவாம்.

தெய்வம், உணாவே, மா,மரம்,புள், பறை,
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 18.

அக்கருப்பொருள்களை வரிசைப்படுத்திக் காண்பது, பழந்தமிழ்ப்புலவர்கள், எத்துணை நுண்ணிய நோக்கர்கள், இயற்கையோடு உண்மையான உறவு கொண்டிருப்பதில் எத்துணை ஆர்வமுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. முல்லைக்கு உரிய உணவு, வரகும், சாமையும் அவரையும் மாவினம்: மானும், முயலும், மரம் : கொன்றையும், குருந்தும். பறவை ; காட்டுக் கோழியும், கெளதாரியும். தொழில் : நிரை மேயத்தலும், வரகு, சாமை திரட்டலும். பொழுதுபோக்கு : ஏறுதழுவல். மலர்; இந்நிலத்துக்குத் தனிப்பெயர் தந்த முல்லையும், பிடவும், தளவும் தோன்றியும், நீர்: காட்டாறு.

குறிஞ்சிக்குப் பொருந்தும் உணவு: ஐவனம் எனப்படும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும், தினையும் . மாவினம் : புலியும், யானையும், கரடியும், காட்டுப்பன்றியும். மரம்: அகிலும், ஆரமும் தேக்கும், திமிசும், வேங்கையும். பறவை : கிளியும் மயிலும், தொழில் : தேன் அழித்தலும், தினை விளைத்தலும், கிளிகடிதலும், வேட்டையாடலும். மலர்கள்: குறிஞ்சியும், காந்தளும், சுனைக் குவளையும். நீர்: அருவி நீரும் சுனை நீரும். மருதத்துக்குரிய உணவு: செந்நெல்லும், வெண்ணெல்லும். மாவினம்: எருமையும் நீர் நாயும். மரம்: மருதமும், காஞ்சியும், வஞ்சிக் கொடியும். பறவை: தாராவும் நீர்க்கோழியும், அன்னமும், அல்லிசைப் புள்ளும். தொழில் : நடுதலும், களைகட்டலும், அரிதலும் கடாவிடுதலும். மலர் : தாமரையும் கழுநீரும். நீர்: ஆற்று நீரும், கிணற்று நீரும், குளத்து நீரும்.

நெய்தல் திணைக்குரிய உணவு உப்பு, மீன் விற்றுப் பெற்ற பண்டங்கள். மாவினம்: உப்பு மூட்டை சுமக்கும் பொதிமாடு.. மரம் : புன்னையும் ஞரழலும், கண்டலும். பறவை : கடற்காக்கை. தொழில் : மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், அவற்றை விற்றலும். மலர்: கைதையும், நெய்தலும். நீர்: மணற்கிணறும், உவர்க்குழியும்.

பாலைக்குப் பொருந்தும் உணவு : ஆலனைத்தும், சூறையாடியும் கொண்ட பொருள்கள் மாவினம்: வலுவிழந்த யானையும், புலியும், செந்நாயும். மரம்: வற்றிய இலுப்பை , ஓமை, உழிஞை, ஞெமை, பாலை கள்ளி தாழை முதலியன. பறவை : கழுகும், பருந்தும், புறாவும். தொழில் : ஆறலைத்தலும், சூறைகோடலும். மலர்கள்: மரா, குரா, பாதிரி ஆகியவை நீர்: அறுநீர்க்கூவலும் சுனையும். இப்பொருள் களும், தொழில்களும், அவ்வவற்றின் திணைகளுக்குரிய பாக்களில் இடம் பெற்றிருப்பதற்கான எடுத்துக்காட்டுகள், அடுத்துவரும் பல அதிகாரங்களில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் செய்யுட்களில் காணலாம்.

சமயம்

மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன்தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத் தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவரவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லா வற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும் அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன். இச்சமய வழிமுறைகளெல்லாம் சமயச் சார்புடைய மாயமந்திர வழிபாடுகள், சமயங்களுக்கிடையே, உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை காணல், பாராட்டும், காணிக்கை வழங்கலுமாகிய முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனிதன், கட்டளைகளுக்கு, இயற்கையின் ஆற்றல்களுக்குப் பணியுமாறு வற்புறுத்தும் வழிமுறையாம் மாயாஜால அநாகரீக காட்டுமுறை பிற்பட்ட நாகரீக நிலையைச் சார்ந்ததாம். இச்சமயச் சடங்கு முறை என்பது, சமயச் சார்பான விருந்து (இது, உண்ணா நோன்பைத் தொடர்தலும் கூடும்) சமயச்சார்பான பாடல் கூட்டாகவும் தனித்தும் சமயச் சார்பான ஆடல்களை உள்ளடக்கியதாம். பிற்காலத்தில், விருந்து, பாடல், ஆடல், நாடகம் ஆகியவை, சமய, நெறியிலிருந்து பறிக்கப்பட்டு, உடனடி இன்ப நுகர்வுக்காக மேற் கொள்ளும் செயல்களாக ஆக்கப்பட்டுவிட்டன. ஆனால், இவ்வேறுபாடு, நிலைபேறுகொள்ள, நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது.

மனித வாழ்க்கை வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே, அவன், சில கடவுள் அல்லது கடவுள்களை வணங்கி வந்தான் . என்பதில் ஐயம் இல்லை.

அப்பழங்காலத்தில் குடிப்பெயர்களில் அக்குடிகளுக்கு " உரிய அடையாளச் சின்னங்களைக் காணவல்ல, இருளில், வன்னியர் போலும், பல்வேறு குழுக்களாக மக்கள் பிரிக்கப் பட்டனர். சமஸ்கிருத இலக்கியத்தில் வானரர், (குரங்குப் பழங்குடி) கஜர் (வெள்ளாட்டுப் பழங்குடி) கருடர் (கருடப்பழங்குடி) மட்சர் (மீன் பழங்குடி) விருஷ்ணர் (செம்மறியாட்டுப் பழங்குடி நாகர் (பாம்புப் பழங்குடி ) என்ற அடையாளச் சின்னக் குடிபெயர்களைக் காண்கிறோம். இவர்களில் நாகர்கள், வரலாற்றுக் காலத்தில், வடகிழக்கு, வடமேற்கு, மத்திய, தென்னிந்திய மாநிலங்களில் வாழக் காண்கிறோம். ஆதலின், அவர்கள், பரவலாக வாழ்ந்தவர் களாகத் தெரிகிறது. நாகவழிபாட்டு முறை பெரும்பாலும், மலைநாட்டுக் குகைவாழ் மக்களிடையே தோன்றியதாகும். குலமரபு காட்டும் அடையாளச் சின்னக் கடவுள்களே! அல்லாமல், மரங்கள், ஆறுகள், மலைகளில் வாழும் கடவுள், காவல் தெய்வங்கள், கிராம தேவதைகள், எல்லையம்மன்கள், துயர் தரும் பேய்கள், எண்ணற்ற ஆவிகள், பல்வேறு சிறு தெய்வங்களையும் மக்கள் வழிபட்டனர். இந்தப் பழைய கடவுள் வழிபாட்டு முறைகளில், பெரும்பாலானவை, மக்களில், சமுதாய நிலையில் தாழ்ந்திருப்பவர்களிடையே, தங்களுடைய நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கரடுமுரடான நிலையில், இன்றும் இடம் பெற்றுள்ளன. சமுதாயத்தில் மேல்தட்டில் நிற்கும் மக்களும் துன்பக் காலங்களில், பேய், பிசாசு போலும் ஆவிகளின் துணை நாடிச் செல்வதை அடியோடு விட்டு விட்டாரல்லர்.

இவற்றில் ஒருசிலவழிபாட்டு முறைகள், ஒரு படி உயர்ந்த நாகரீக நிலையை உணர்த்தும், உயர்ந்த வழிபாட்டு முறைகளால் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அவ்வகையில், நாகவழிபாடு, முருக வழிபாட்டோடு இணைந்து ஒன்றாகி விட்டது. அம்முருகன் ஆரியர்களின் சுப்பிரமணியனோடு மீண்டும் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிட்டான், காரணம், பக்தனின் ஊனக் கண்களுக்குச் சுப்பிரமணிய சுவாமி, பாம்பு வடிவிலேயே காட்சி அளிக்கிறான். முருக பக்தன் அவன் துணை வேண்டித் தொழும் போது, பாம்பு தோன்றுவது, அக்கடவுள், அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விட்டது என்பதே பொருளாம். மர வழிபாட்டுமுறை, சிவவழிபாட்டு முறையோடு கலந்துவிட்டது. இப்போதுள்ள சிவன் கோயில்களில், மிகவும் புகழ்பெற்ற கோயில்களெல்லாம், ஏதோ ஒரு நிலையில், சில மரங்களோடு, நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. அதுபோலவே, உடலுக்கு நலம் தரும் துளசி வழிபாடும், விஷ்ணு வழிபாட்டோடு கலந்துவிட்டது. நாக வழிபாட்டிலிருந்து, சிவன், எண்ணற்ற பாம்பாபரணங்களைப் பெற்றான். விஷ்ணு, ஆயிரம் தலைகளைக் கொண்ட படுக்கையைப் பெற்றான். புத்தர் தாமே ஒரு நாகர் ஆகிவிட்டார். பல புத்த, ஜெயினக் கடவுள்கள், ஐந்து தலை நாக வடிவினராகி விட்டனர்.

ஆனால் “ஆஜமிகம்” எனப்படும், நாகரிக நிலையால் உயர்ந்த இவ்வழிபாட்டு முறைகள் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, உள்நாட்டுப் பேய்கள், மரம், ஆறு, மலைகளில் குடிகொண்டிருக்கும் ஆவிகளைக் காட்டிலும் உயர்ந்த கடவுள்கள் நாட்டில் தோன்றி வளர்ந்து நின்றன. இக்கடவுள்கள், ஒவ்வொரு நிலப்பகுதியிலும், அவ்வந்நிலங்களின் நில இயல்புகளுக்கு ஏற்ப, தனித்தனியே தோன்றி வளர்ந்தன. மலைநாட்டுத் தெய்வம் செம்மேனிக் கடவுள், அதாவது சேயோன். அவன், புணர்ச்சிக்கு முந்திய தான களவுக்காதல் காவலனாம் முருகன் எனவும் அழைக்கப் பட்டான். அவனை வழிபடுவார், அவனுக்காகப் பலி கொடுத்த ஆட்டின் செங்குருதி கலந்த சோற்று உருண்டைகளை அவனுக்குப் படைத்தனர். அவன் ஒரு வேடுவன். வேல் ஏந்துவான். அதனால், வேலன் என அழைக்கப்பட்டான். அவனை வழிபடும் அர்ச்சகனாம் பூசாரியும் வேலன் என அழைக்கப்பட்டான். மகளிரிடையே, அவன், காதல் நோயைத் தோற்றுவிப்பான். மகளிர் அம் முருகனால் அலைக்கழிக்கப் படும்போது, வேலன், பெண்களின் காதல் நோய் தீர்க்க, மாயாஜால வழிபாட்டு முறைகளை மேற்கொள்வன். வேலன், முருகனோடு கலந்து தெய்வம் வரப்பெற்று அவனோடு உரையாடும் பொழுது, அவனும், தெய்வீக வெறிக்கு உள்ளாகி, வெறியாட்டம் எனப்படும் பேயாட்டம் ஆடுவதும் பாடுவதும் செய்வன். இவ்வெறியாட்டத்தில், மகளிரும் பங்கு கொள்வர். ஆடவர் அல்லது மகளிர் பூசாரிகள், கடவுள் ஏறி, அக்கடவுள் ஆட்சிக் கீழ் இருக்கும் போது ஆடுவதும், பாடுவதும் மட்டும் செய்வதில்லை. இருண்டு போன இறந்த காலத்தைப் படித்துக் .. காட்டுவர். எதிர்காலத்தே வருவது அறிந்து கூறுவர். எந்தப் பேய் எந்த நோயைத் தந்தது என நோய்க் காரணம் கண்டு கூறுவர். உடலையும் உள்ளத்தையும் உடைமையாகக் கொண்டுவிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பர். நோய் தீர்க்கும் முறை, தெய்வத்தன்மை மட்டுமே வாய்ந்தது அன்று, மலைநாடு, நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பெருமளவில் கொண்டது. ஆகவே, வேலன், தேவராட்டிகளின் வெறி யாடல் நிகழ்ச்சி, அம்மூலிகைகளாலும் அரண் செய்யப் பட்டது. ஆகவே, பழங்காலப் பூசாரி , மருத்துவனும் ஆவன். ஆயிரமாயிரம் சமயத் தத்துவங்கள் வளர்ந்து விட்டிருக்கும். இன்றும், பேய்களை வழிபடுவோரும், மருத்துவருமாக இணைந்த தாழ்த்தப்பட்ட இனத்தவராம் குறவர், சமுதாயத்தில் உயர்நிலை பெற்றவரிடையேயும், இலைமறைவு காய்மறைவாகச் சிறந்த வாணிகத்தை நடத்தி வருகின்றனர்.

மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால், பால் படு பொருள்கள், சில சமயம், இவற்றொடு கலந்த சோறு, அவன் படையல்களாம்.

மீண்டும் கூடலால் பிறக்கும் இன்பத்தைப் பெரிதாக்கவே உதவும். காதலர்களின் சிறு பிரிவுக்கான வாய்ப்பினை அளிக்கிறது ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை . ஆதலின், காதல் இன்பத்தை விருப்பம் போல் நுகர, வேட்டையாடும் வாழ்க்கையிலும், ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை, பெரிதும் துணை நிற்கின்றது, வேட்டையாடுவான் போலவோ, எதிர்பாரா இன்னல்கள் நிறைந்த, நெடுந்தொலைவு கடல் மேல் செல்லும் வாழ்க்கை உடையவரைப் போலவோ அல்லாமல், ஆனிரை மேய்ப்பவர் காட்டில் ஓய்வாக இருந்து ஆனிரை ஓம்புவதில் ஈடுபட்டுள்ளமையால், அவர் வாழ்க்கையே மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாம், ஆகவேதான் ஆனிரை ஓம்புவாரின் கார்மேனிக் கடவுளும், இந்தியக் கடவுள்களனைத்திலும் மகிழ்ச்சியால் நிறைந்த கடவுளாவன்.

கடற்கரையைச் சார்ந்த நிலத்துத் தெய்வம், அச்சமூட்டும் கடல் தலைவன் ஆவான். கரிய மேனியராகிய ஆடவரும் மகளிரும், இடுப்பில் தங்கள் குழந்தைகளோடு கடற்கரைக் . கண் திரண்டிருந்து, அன்று பிடித்த புத்தம்புதிய அல்லது , உப்பிட்டு உலர்ந்த மீனையும், ஊனையும் அக்கடல் , தெய்வத்துக்குப் படைக்கும் மீனவ வழிபாட்டாளர்களின் வழிபாட்டுச் சடங்குகளில், அக்கடற் கடவுளின் அடையாளமாகக் கொடிய சுறாமீனின் கொம்பு அமையும். காதல் இன்பம், மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை , கழி நீரில் படர்ந்திருக்கும் அல்லி மலர்களை, அவற்றின் மீதுற்ற ஆசையால் அணிந்து கொண்டு தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் கரிய மேனியராகிய மீனவ இன மகளிரின் . நன்கு வளர்ந்த உடல் உறுப்புகள், மீன் முடைநாறும் நிலையிலும், அவர்களின் இல்லத்து ஆடவர் கடல் மேல் செலவு குறித்துப் போய்விட்ட நிலையில் அண்டை நிலத்துச் சிறந்த ஆடவர், தங்கள் காதலியராம் அம்மகளிரைக் காண்டல் விருப்போடு, தங்கள் வண்டிகள் அல்லது தேர்களில் கடற்கரைக்கு வந்து செல்வர் என்பதைப் பிற்கால இலக்கியங்களில் படிக்கிறோம்.

ஏனைய நிலப்பகுதிகளிலும், நாகரீகம் நனிமிக வளர்ந்துவிட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில், களவுக் காதல், கற்புக்காதலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழர் களிடையே இடம்பெற்றுவிட்ட, ஆரியர்களால் திருத்தப் படுவதற்கு முற்பட்டதால், பழைய திருமணச் சடங்குமுறை, அகநானூறு என்ற தொகை நூலைச் சேர்ந்த இரண்டு செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது. "உழுத்தம் பருப்புக் கலந்து நன்கு குழையச் சமைத்த பொங்கலோடு, பெரிய சோற்றுக் குவியல், பலரும் உண்ட பிறகும் குவிந்து கிடக்கிறது. வரிசையாகக் கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தலின் கீழ், புதுமணல் பரப்பப்பட்டுள்ளது. மனை விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மணமக்கள் மாலைகளால் அணி செய்யப்பட்டுள்ளனர். தீயன விளைவிக்கும் கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற, வெண்பிறைத் திங்கள், சிறந்த புகழ் வாய்ந்த உரோகிணி எனும் நாளோடு கூடிய அந்த நல்ல நாளில் இருள் அகன்ற விடியற்போதில், திருமண ஆரவாரத்தில் மூழ்கிவிட்ட முதிய மகளிர், தலையில் கொண்ட குடங்களிலும், கையிற் கொண்ட பண்டங்களிலும் நீரைக் கொண்டு வந்து, வரிசையாகக் கொடுக்கக் கொடுக்க, மகப்பேறு பெற்று மாண்புடைய தூய அணிகள் அணிந்த மகளிர் நால்வர், 'கற்பு நெறி வழுவாது, நல்ல பல பேறுகளையும் பெற்றுத்தந்து, கணவனைப் பேணும் அன்புடையை - ஆகுக' என வாழ்த்தியவாறே, அத்தண்ணீரால் குளிப்பாட்ட, அந்நீரோடு கலந்து சொரியப்பட்ட நெல்லும் மலரும் மணமகள் கூந்தலில் கிடந்து சிறக்க, திருமணச் சடங்கு இனிதே முடிவுற்ற பின்னர், அன்று இரவு, தமரகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடியிருந்து, மணமகளுக்குப் புதுக்கூறை உடுத்திப் பெரிய மனைக்கிழத்தி ஆகுக’ என வாழ்த்தி அவள் காதலனோடு ஓர் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அவளும் நாண்தரு நடுக்கத்தோடு உள்ளே நடந்தாள்”

“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை,
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணமல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்,
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி,
பல்லிருங் கதுப்பில் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரிற் கிழத்தி ஆகு’ எனத் தமர்தர
ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்.”
அகநானூறு 86 : 1:22

கூறிய இப்பண்டைத் தமிழ்த் திருமணச் சடங்கு முறையில், ஆரியக் கலப்பு எதுவும் அறவே இல்லை , தீ ஓம்பல் இல்லை . தீ வலம் வருதல் இல்லை . தட்சணை வாங்கப் புரோகிதர் இல்லை என்பது உணரப்படும். அதே தொகை நூலில், மற்றொரு செய்யுளும், திருமணச் சடங்கு முறையினைக் குறிப்பிடுகிறது. "இறைச்சி கலந்து நெய் மிதக்க ஆக்கிய வெண்சோற்று உணவு, வரையா வண்மையொடு பெரியவர் களுக்கு வழங்கப்பட்டது. பறவைகள் உணர்த்திய நிமித்தமும் நன்றாக இருந்தது. வானம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. திங்கள், குற்றமற்ற உரோகிணியோடு கூடியிருந்தது. மணமனை - அழகு செய்யப்பட்டது. அவர்கள் கடவுளை . வழிபட்டனர். முரசும் மண இசையும் முழங்கலாயிற்று. மகளிர், மலர் போலும் கண்களை இமையாராய் நீராடி அணி செய்யப்பட்ட மணமகளை ஆர்வத்தோடு நோக்கினர். மாசு போகக் கழுவிய நீலமணி போன்ற, பெரிய மலர் இதழ்களாலான வழிபடுகடவுள் வடிவம், வாகையின் கவர்த்த இலைகளோடு கூடிய மலர் மீது, ஆண்டு முதிர்ந்த கன்று மேய்ந்துவிட்ட கார் மேகத்தின் முதல் மழை பெற்றுத் தலைகாட்டிப் பள்ளத்தில் படர்ந்திருக்கும் அறுகம்புல் லோடு வைக்கப்பட்டது. அது, குளிர்ந்த நறுமணம் கொண்ட மலர் அரும்புகளும், வெண்ணூலும் சூட்டப்பட்டு, தூய உடை அணியப்பட்டு, அழகு செய்யப்பட்டது, மணமகள், மழையொலிபோல், மறை ஒலி எழும், புதுமணல் பரப்பப்பட்ட மணற்பந்தற் கீழ் அமர்த்தப்பட்டாள், அணிந்திருக்கும் அணிகளின் சுமையால், அவள் வியர்த்துப் போகத், தோழியர் அவ்வியர்வை போக வீசினர். இவ்வகையில், அவள் சுற்றத்தார், அவளை மணம் செய்து கொடுத்தனர்.

"மைப்புறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோரப் பேணிப்
புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகட மண்டிய துகள் தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்
படுமண் முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை

பழங்கன்று கறித்த பயம் பமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலை பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்துமே வரத் துவன்றி
மழைபட் டன்னமணன்மலி பந்தர்
இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக் கீத்த” அகநானூறு 36, 7-18

இவ்விரு செய்யுட்களும், நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் காலத்திலும், பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன. ஆனால், அவை, உண்மையில், மிகமிகப் பழைய காலத்தில் நிலவியிருந்த திருமணச் சடங்கு முறைகளையே விளக்குகின்றன.

திருமண வாழ்க்கை , இவ்வாறு, நல்ல நிமித்தத்தில் தொடங்கினாலும் பெரும்பாலும், ஒரே சீரான வழியில் , ஓடியதில்லை. மண வாழ்க்கையில், உண்மையாக நடந்து கொள்வதிலிருந்து, கணவன்மார்களைத் தவறான வழிக்குத் தூண்டிவிடும் பரத்தையரின் சூழ்ச்சிகளால், கற்புக் காலத்து , அன்பு வாழ்ககை, தற்காலிக, அல்லது நிரந்தர முடிவுக்குப் பல சமயம் ஆளாக்கப்பட்டுவிடும். வயல்களில் கதிர் முற்றிக் கொண்டிருக்கும் காலத்திலும், அறுவடைக்குப் பின்னர், நிலம் தரிசாக விடப்பட்டிருக்கும் காலத்திலும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு நாட்களில் வேலையற்றுக் கிடக்கும் கைகளுக்குச் சில குறும்புகளைக் கொடுத்து விடுகிறது சைத்தான். ஆகவே, விளைநிலப் பகுதிக்கு மட்டுமே தனி உரிமை வாய்ந்த ஒன்று, பரத்தையர். ஒழுக்கமுறை. கோடையில் நீர்வேட்கை மிகுந்து நிலங்களெல்லாம் திணறும்போது, மழை மேகங்களை, இடியேறு (முருகனின் பழைய வேற்படை போலும், கல்லால் ஆன, படைக்கலம் ) எனும் படைக்கலத்தால் பிளந்து மழை பெய்யப்பண்ணும் கார்மேகத்தை ஆட்சி கொள்ளும் கடவுள், இந்நிலத்தின் தெய்வமாம். தன்னை வழிபடும் நிலஉலக ஆடவர், அந்நில உலகப் பரத்தையர்களால் சூழப்பட்டிருப்பது போலவே, இவனும், வானுலகப் பரத்தையர் குழாத்தால் சூழப்பட்டிருக் கும் ஒரு காமக் கடவுளாவான். பொங்கல் என அழைக்கப் படும், பருப்போடு கலந்து ஆக்கிய சோறு, இவன் மிகவும் விரும்பும் படையல், விளைநிலப் பகுதிகளில், அறுவடை விழாவாக, மக்களால், இன்றும் பெரிதும் பாராட்டப் பெறும் * விருந்துப் பெருவிழா இது.

கடைசி நிலப்பகுதி, கொள்ளைக்காரர்களின் வாழிடமாம் பாலை. அடுத்துள்ள மலைநிலத்தைப் போலவே, தாயைக் ; குடும்பத் தலைவியாகக் கொண்ட சமுதாய முறை, நெடுங்காலம் நிலை பெற்றிருக்கும் நிலப்பகுதி, இது. ஆகவே, இந்நிலத் தெய்வம். வெற்றிப் பெண் தெய்வமாம் கொற்றவை. அவள் வழிபாட்டாளராம் கொடுந்தொழில் புரியும் மறவர், அவளுக்கு, மனிதனையும், விலங்குகளையும் கொன்று குருதிப் பலி தருவர். பாலை ஒரு வறண்ட நிலம். அதற்கேற்ப காதலியின் காலடியில் சேர்ப்பதற்குப் பெரும் பொருள் தேடுவான். வேண்டி, இறந்தோர்களின் வெள்ளெலும்புகள் சிதறுண்டு கிடக்கும் மணல் பரந்த நெடு வழியில் பயணம் செய்யும் காலத்தில் காதலிகள் நெடிது பிரிந்து வாழ நேர்வதாம், காதல் அவலத்தோடு, பொறுத்த நிலையில், பெருங்களோடும் களியாட்டங்களோடும், கொற்றவை வழிபடப்படுவாள்.

இந்த ஐந்து கடவுள்களில், நான்கு கடவுள்களைத் தொல்காப்பியனார் வரிசைப்படுத்தியுள்ளார். "மாயோனால் விரும்பப்பட்டது காட்டுவளம்; சேயோனால் விரும்பப் பட்டது மலைநாடு; இனிய நீர் பாயும் புனல் நாடு, கடவுளர்க்குக் கடவுளாம் வேந்தனால் விரும்பபட்டது. வருணனால் விரும்பப்பட்டது, பெருமணல் உலகம். இந்நான்கு உலகமும், முறையே, முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல் என அழைக்கப் பெறும்".

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் -

தொல்காப்பியனார், பழந்தமிழ்க் கடவுள்களை , அவற்றோடு நேரொத்த ஆரியக் கடவுள்களாக அடையாளம் கண்டு, ஆரியர்களுக்குச் சுவர்க்கத்தின் கடவுள், தேவர்க்கு அரசனே ஆதலின், ஆற்றுப் பள்ளத்தாக்குக் கடவுளை , வேந்தன் என்று அழைக்கின்றார். கடல் தெய்வத்திற்கு, வருணன் எனச் சமஸ்கிருதப் பெயர் சூட்டியுள்ளார் என்பது . குறிப்பிடல் தகும். பின் இரண்டின் தமிழ்ப் பெயர்கள் திரும்பக் கிடைக்கவில்லை போலும். அவை, முறையே, சேயோன், கடலோன் என்பனவாகலாம், தொல்காப்பியனார், மக்கள் நிலையாகக் கூடி வாழும் நிலப்பகுதிகளின் பட்டியலில் பாலையைச் சேர்க்கவில்லையாகவே, அப்பாலைக்குரிய கடவுள் பெயர் குறிப்பிடவில்லை.

வட இந்தியாவில் ஐந்து பழங்குடி இனங்கள்

இவ்வைந்து வகையான மனித நாகரீகம், தென்னிந்தியாவைப் போலவே வடஇந்தியாவில், பழங்காலத்தில், அதாவது வேதங்களும், வேத மந்திரங்கள் இயற்றப்படுவதற்கு நிலைக்களமான தீ வழிபாட்டு முறைகளும் எழுவதற்கு முற்பட்ட காலத்தில், வளர்ந்திருக்க வேண்டும். ஆரிய நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, வட இந்திய தஸ்யூக்கள், தென்னிந்திய தஸ்யூக்களைப் போலவே, அதே ஐந்து இனத்தவர்களாகப் பிரிந்திருக்க வேண்டும். வட இந்தியா, தென்னிந்தியாவைப் போலவே அதே ஐந்து, இயற்கை யோடியைந்த நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப்படக் கூடியதே. ஆனால் ஒன்று, அவை தென்னிந்தியப் பிரிவுகளைக் காட்டிலும் பரப்பளவில் பெரியனவாம். அங்கு, அதே நில இயல் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆகவே அதே - விளைவுகளுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் கடவுளின் வாய், தீ; ஆகவே கடவுளுக்குப் படைக்கும் அனைத்தும், கொழுந்துவிட்டு எரியும் தீக்கடவுளின் வாயில் இடுதல் வேண்டும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீ வழிபாட்டு நெறி, வட இந்தியாவில், ஏறத்தாழ, கி.மு. 4000இல் உருவாகிவிட்டது. இவ்வழிபாட்டு நெறி, ஆரிய வழிபாட்டு. நெறி என அழைக்கப்பட்டது. தீ இல்லா வழிபாட்டு நெறியினைப் பின்பற்றிய பழங்குடியினர், தஸ்யூக்கள் எனப்பட்டனர். தீ வழிபாட்டு முறையினைப் பின்பற்றுவோர், தங்கள் படையலைத் தொடர்ந்து கவிவல்ல பார்ப்பனராம் ரிஷிகள் இயற்றிய மந்திரங்களை ஓதும் முறையினை மேற்கொண்டனர். சமஸ்கிருத மொழி எப்படி, எப்போது உருவாயிற்று? யார் இந்த ரிஷிகள்? என்பன கண்டுபிடித்தற்கு இயலா. நமக்குத் தெரிந்த ஒரே உண்மை , சொல் அமைப்பிலும், சொற்றொடர் அமைப்பிலும், அது மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பெருநிலப்பரப்பில் பேசப்பட்டு வரும் மொழிகளோடு உறவுடையதாம் என்பது.

இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டும், இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டினை உணரமாட்டா. வடிகட்டிய அறியாமையால் தூண்டப் பட்டும் மனித இயல் நூல் தன் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் ஆரியர்களின், உலகக் குடிபெயர்ச்சி என்ற தத்துவம் உருப்பெற்றது. ஆனால் வடநாட்டில், ஆரிய நாகரீகம் எழுவதற்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்கள் வாழ்க்கை - முறையினை, ஆரிய நாகரீகத் தோற்றம் எவ்வாறு மாற்றி விட்டது என்ற வினாவிற்கு, விடை காண்பது ஒன்றே ஈண்டு. நம்முடைய நோக்கம்.

அத்தொல்லூழிக் காலத்தில், தங்கள் தமிழ் உடன் பிறப்பாளர்களைப் போலவே, வட இந்திய தஸ்யூக்களும், அவ்வந்நிலத் தெய்வங்களையே வழிபட்டிருக்க வேண்டும். ஆரியத் தீ வழிபாட்டு நெறி, இந்த உள்நாட்டுக் கடவுள்களைத் தங்களுடையனவாக ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தங்களுடைய, புது நெறிப்படி வழிபட்டதா? இதுபற்றி ஆராய இது இடம் அன்று. அத்தொல்லூழிக் காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இந்த ஆரிய வழிபாட்டு நெறி, தென்னிந்தியாவுக்குக் குடிபெயர்ந்தபோது, தென்னிந்திய உள்நாட்டுக் கடவுள்களாக, சேயோன் சுப்பிரமணியனாக, மாயோன், விஷ்ணுகிருஷ்ணனாக, கடல் தெய்வம், வருணனாக, கார்மேகக் கடவுள் இந்திரனாக, பாலைத் தெய்வம் துர்க்கையாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்பது, ஈண்டுக் குறிப்பிடல் கூடும். இந்த ஆரியக் கடவுள்கள் தாமும் பண்டைய தஸ்யூக் கடவுள்களின் மறு அவதாரங்கள் தாமா? வேதகாலத்தில் அக்கடவுள்களில், இந்திரனுக்கே தலைமை அளித்திருப்பது, ஏனைய நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரைக் காட்டிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மக்கள், தலையாய நிலை பெற்றிருந்ததன் விளைவுதானா என்பன ஈண்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா.

வேதச் சொற்றொடர் ஒன்று, மக்கள் ஐந்து பழங்குடியினராகப் பிரிவுண்டிருந்த வரலாற்றுப் பழஞ்செய்தி ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. “பங்கஜனாஹ்” என்பது, அத்தொடர், இப்பொருள் விளங்காத் தொடர், பழைய, புதிய எழுத்தாளர் பலரால், பொருள் காண முயலப்பட்டுளது. ஆனால், மனநிறைவு கொள்ளும் வகையில் பொருள் விளக்க எவராலும் முடியவில்லை. அது, ஆரியத்திற்கு முற்பட்ட, ஐந்து பழங்குடியினரைக் குறிக்க வேண்டும் என்ற ஊகத்தை நான் கூறினேன். ஆனால், தமிழிலக்கியம் பற்றி ஏதும் அறியாத, ஆரியத்துக்கு முந்திய இந்தியாவுக்கும், ஆரிய இந்தியாவுக்கும் இடையில் வரலாற்றுத் தொடர்பின் இன்றியமையாமையினை மதிக்க மறுக்கும் வரலாற்று வல்லுநர்களால், என்னுடைய ஊகத்தின் மதிப்பீட்டை - மதிக்க முடியவில்லை.

“இந்தியாவில் கற்காலம்” (பக்கம் 28-29) என்ற என் நூலினைக் காண்க.