உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு. 1 வரை

விக்கிமூலம் இலிருந்து

8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை


காத்யாயனரும் பதஞ்சலியும் :

பாணினியின் "அஷ்டாத்யாயீ' குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அதாவது உரைவிளக்கம் எழுதிய காத்யாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ் லெக்ஸிகன் துணை ஆசிரியர் திருவாளர். பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்யாயனார், ஒரு தென்னிந்தியர் ஆவர். அக்குறிப்பு பின்வருமாறு. 'பாணினி அவர்களின் அஷ்டாத்யாயின் வார்த்திக ஆசிரியரான வரருசி (காத்யாயனரின் இயற்பெயர்), ஒரு தென்னாட்டவர் என்ற உண்மை, தென்னாட்டவர், வியாகரண பாஷ்யகாரர் ஆகிய பதஞ்சலியின் தந்திர வடிவங்களில் விருப்புடையவராவர்: (பிரியதத்தித தாக்ஷிணாத்யாஹ) சொல்லும் அதன் பொருளும், அவற்றின் தொடர்பும் நிலை பேறுடையவாயின், அச்சொல், அப்போது உலக வழக்கில் உள்ள பொருளில் வழங்கப்படுமாயின், இலக்கண அறிவு. "லொகவெதெக" என்பதை ஆள்வதற்குப் பதிலாகத் "தத்திதப்ரத்யய'த்தைப் பயன் கொண்டு வரருசி , 'லௌசீகெ வதிகெசு' என்பதை ஆண்டுள்ளார் எனக் கூறும் மஹாபாஷ்யத்தின் முதல் ஆனிகாவில், அபூர்வதர்மம், தியாகதர்மம் குறித்த சரியான சொற்களை ஆளுவதில் விதிமுறை வகுக்கிறது (சிந்த்ஹே சப்தார்த்ஹ சம்பந்திஹே லொகதொரத்ஹப்ரயுக்த சப்தப்ரயொகெ சாஸத்ரென தர்ம நியமஹ யத்ஹா லெளகிகவைதிகெசு) என்ற அறிவிப்பிலிருந்து உண்மையாகிறது. ஒரு சமஸ்கிருத இலக்கண ஆசிரியர் மரபே, தென்னிந்தியாவில் உருவாகிவிட்டது. பாணினி நன்மிகச் சேயதான காந்தார் நாட்டில், எழுதிய இலக்கணத்தை அவர்கள் கற்றுத் தெரிந்தனர். அந்நூலின் பொருளுக்கு மேலும் விளக்கம் ஊட்டும் உரைகளை எழுதுமளவு தேர்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்ய இதுவே போதுமானது.

காத்யாயனர், ஒரு தென்னாட்டவராகவே, சமஸ்கிருத இலக்கியங்களில், ‘'பாண்ட்ய ‘’, “சொட'’, “கெரள” என முறையே திரிந்து வழங்கப்படும் “பாண்டிய’, “சோழ”, “சேர” என்ற சொற்கள் பாணினியால் ஆராயப்படவில்லை என்பதை உணர்ந்து, அவற்றின் சொல் அமைப்பு குறித்து, விதிமுறைகளை வகுக்க முனைந்தார். ‘'வழிவழி மரபில் வந்தவர் எனும் பொருள் உடையதான ‘அஞ்” என்ற விகுதி, ஒரு சொல்லின் ஈற்றில் வந்து, அவ்வாறு வருவதால் ஒரு நாட்டினைக் குறிப்பிடும் அதே நிலையில், சத்திரிய இனத்தைச் சேர்ந்த, ஓர் அரசமரபையும் குறிப்பிடும்” எனக் கூறும் ஒரு விதியினைப் பாணினி அவர்கள் இயற்றினார்கள் , [ஜளபத சப்தாத் சத்திரியாத் “அஞ்” (அஷ்டாத்யாயீ 4 : 168)] இவ்விதி, போதுமான பொருள் விளக்கம் உடையதல்லதாகவே, காத்தியாயனர், பல துணைவிதிகளை இணைத்தார் : அவற்றுள் மூன்றாவது விதி, ‘'சத்திரிய அரச இனங்களையும் நாடுகளையும் ஒரு சேர உணர்த்தும் சொற்களைப் பொறுத்த மட்டில், அச்சொற்களை, அவற்றுள் அரசனை உணர்த்தவும் செய்ய வேண்டுமாயின், “மகன்” என்னும் பொருள் உணர்த்து வதான ஒரு விகுதி இணைக்கப்பட வேண்டும்” எனக் கூறுகிறது. (சத்திரிய சமான சப்தாஜ் ஜனபதாத்ஸ்ய ராஜ நியபத்யவத்') அவ்வகையில், பாஞ்சாலர் களின் அரசன் “பாஞ்சாலஹ்'’ என வரும். இவ்விதியும், பாண்டிய என்ற சொல் தோன்றுவதற்கான விளக்கம் தரவல்லதாகாது. ஆகவே, “பாண்டு” என்ற சொல்லைப் பொறுத்தமட்டில், ட்யன் என்ற விகுதி ஆளப்படும். அவ்வகையில் பெறப்படும் சொல் ‘'பாண்ட்ய’ என்பதாம் எனக்கூறும் வேறு ஒரு விதியினைக் காத்யாயனர் வகுத்தார். (பாண்டொர் ட்யன் வக்தவ்யஹ்” (பதஞ்சலியின் வியாக்கரண மகாபாஷ்யத்தின் திரு. கெயி லாரன்ஸ் அவர்களின் பதிப்பு : பகுதி : 2. பக்கம் 269) “சொட'’ மற்றும் வேறு சொற்களின் தோற்றம் குறித்துப், பாணினியின் வேறு ஒரு விதியினை மேற்கொண்டுள்ளார் காத்யாயனர். "காம்போஜ என்ற சொல்லுக்குப் பின்னர் ஈற்றுவிகுதி எதுவும் இல்லை " என்பதே அவ்விதி. இவ்வகையில், ஒரு நாட்டைக்குறிக்கும் "காம்போஜ" என்ற சொல்லிலிருந்து அதன் அரசன் பெயராம் "காம்போஜஹ" என்ற சொல் பெறப்படும். காத்யாயனர், இவ்விதியை, "காம்போஜ மன்றும் பிற சொற்களுக்கு இணைக்கும் "'லுக்' என்ற விகுதி சொட” மற்றும் பிற சொல்லாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என மேலும் விரிவுபடுத்தினார். (கம் பொஜா திப்யொலுக் வகனம் சொடாத்யர்த்ஹம்".) இவ்வாத்திகம் (விதி) சொடஹ், கதொஹ், சௌஹ் என்ற சொற்களின் தோற்றத்திற்கு வழி செய்வதாகப் பதஞ்சலி கூறுகிறார். இவ்வகையில், இவ்விரு சொற்களும் அந்நாடுகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து பெறப்பட்டன. ஆனால், பாண்ட்யா என்ற சொல் மட்டும், ஒரு நாட்டின் பெயராகவும் ஓர் அரச இனத்தின் பெயராகவும் ஒரு சேர வழங்கப்பெறும் பாண்டு என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்ற கருத்துடையவர் காத்யாயனரும், பதஞ்சலியும் எனத் தெரிகிறது.

மதுரை சூழ்ந்த நாட்டிற்கு அரசு வழங்கிய பழங்குடி இனம், பாண்டியர்" என அழைக்கப்பட்டனரே அல்லது பாண்டு என அழைக்கப்படவில்லையாதலின், இச்சொற் பிறப்பு முறை ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. உண்மை இயல்பு இதுவாகவும், இச்சொற்பிறப்பு முறைமீது, பாண்டு என அழைக்கப்படும் வடநாட்டு சத்திரிய இனம் ஒன்று தென்னாடு நோக்கிக் குடிபெயர்ந்து, தென்னாட்டிலும், இலங்கையிலும் பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற மிகப் பெரிய கோட்பாட்டினைக் காட்டிவிட்டார் திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள். [Carmichal Lectures : 1918 Page: 9-13)]

காத்யாயனரோ, பதஞ்சலியோ, பாண்டு என்ற சொல், ஒரு வடநாட்டு அரச இனத்தின் பெயர் என்று கூறவில்லை ஆளும் ஓர் அரச இனம், ஒரு நாடு இவற்றைக் குறிப்பதாதலே போதும். ஆளம் அரசர்கள் அனைவருமே சத்திரியர்களாகக் கருதப்பட்டனர் ஆதலன், பாலி மொழியில் "பண்டு" என வரும் "பாண்டு" என்ற சொல்லை, ஒரு சத்திரிய இனத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டதில் பதஞ்சலி பெரியதொரு பிழையினைச் செய்துவிடவில்லை. ஆனால், அதையே அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இனம் அல்லாத ஒரு வெளிநாட்டு இனத்தவர் படையெடுப்பினைக் கட்டிவிடுவது, முற்றிலும் தவறானதாகும், திருவாளர், டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், தம்முடைய கூற்றினை வலுப்படுத்துவதற்காக. மெகஸ்தனிஸ் அவர்களின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டப் பட்டதாகக் கூறப்படும் பொருளற்ற, பொருத்தம் அற்ற ஒரு கட்டுக்கதையினை வலிந்து புகுத்தியுள்ளார். எராக்லெஸ், இந்தியாவில் ஒரு மகளை ஈன்றெடுத்தார். அம்மகளை அவர், பண்டைய எனப் பெயரிட்டு அழைத்தார். அவளுக்குத் தெற்கு நோக்கி நீண்டு, கடல் வரையும் பரவியிருந்த நாட்டை அளித்தார். ஆங்கு, கப்பம் கட்டுவதில் தவறியவர்களை வற்புறுத்தித் திறை செலுத்தும் முறைமைப்பாடு உடையவரின் துணை அரசியார்க்கு எப்போதும் கிடைப்பதற்காக, ஒரு நாளைக்கு ஒரு சிற்றூர், அரண்மனைக் கருவூலத்திற்கான கப்பத்தைக்கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டு, ஆங்கு, அவள் ஆட்சிக்குட்பட்ட மக்களை, 365 ஊர்களுக்குமாகப் பங்கிட்டு அளித்தான்'’ எனக் கூறுகிறது அக்கதை . (Macrindle. Ancient India as described by * Megasthenes and Arrian. - Page : 159.)

இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றி காணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ்படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதை போல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian. Page : 144) இது, மெகஸ்தனிஸ் அவர்களின், எதையும் நம்பும் ஏமாளித்தனத்தை உறுதி செய்யும் மற்றொரு கட்டுக்கதை யல்லது வேறு அன்று. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்திரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி.மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்ரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. மெகஸ்தனிஸ், அந்நாட்டைக் கேட்டறிந்திருந்தார், என்ற உண்மையை மட்டுமே, அக்கட்டுக் கதை உறுதி செய்யும். உண்மை நிலை இதுவாகவும், திரு. டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், எராக்லெஸ்ஸின் மகள் மதுரை ஆண்ட கட்டுக்கதையினை நம்புவது மட்டும் அல்லாமல், இந்தியக் கடவுள் இயல்புகளோடு முற்றிலும் - மாறுபடும் டியொனிஸொஸ்', 'எராக்லெஸ்" போலும் கிரேக்கக் கடவுள்களுக்குச் சரிசமமாக, இந்தியக் கடவுள்களை, யூகத்தின் மூலம், எத்தகைய அகச்சான்றும் இல்லாமல், ஆக்க முயன்று தோற்றுப்போன ஆசிரியர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதும் செய்துள்ளார். கிருஷ்ணனின் குழலிலிருந்து எழும், உள்ளம் உருக்கம் இசை, எரக்லெஸின், பருத்த கைத்தடித் தத்துவத்திற்கு எதிர் துருவம் போன்றதாகவும் திரு. பந்தர்க்கார், கிருஷ்ணனை எரெக்லெஸ்க்குச் சரிசமம் ஆக்கிப் பார்க்கிறார். மெகஸ்த னிஸ், முட்டாள்தனத்தின் முடிவுக்கே சென்று, மத்ய தேசத்தில் இருந்தவனாக கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹமியிரரால் உறுதி செய்யப்பெறும் பாண்டஸ் . என்பான் அவ்வராஹமிஹிரரின் காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்கு, ஒரு பேரரசர் மரபினையும், குறுநிலத் தலைவர் மரபினையும் நிறுவினான் என்பதை இன்னமும் நம்புகிறார், இது ஒரு வஞ்சனைக் கற்பனை.!

தமிழர்களால் எப்போதும் மூவேந்தர் என அழைக்கப்படும் சோழ, சேர, பாண்டியர் ஆகிய தமிழ் அரசர் மூவரும் உலகம் தோன்றிய நாள்தொட்டு, அல்லது, சரியாகக் கூறுவதாயின், தமிழ்ப்புலவர்கள் தமிழரசர்களைப் பாடிப் பாராட்டத் தொடங்கிய நாளிலிருந்தே, தமிழ் நாட்டில் அரசோச்சியிருந்தனர் என்பதே, வரலாற்றுக்கு முந்திய மரபு வழிச் செய்தியாம், பல்வேறு அரசகுலங்களைத் தோற்றுவித்ததாகக் கூறப்படும் ஞாயிறு, திங்கள்களிலிருந்து தாங்கள் வந்தவர்களாக உரிமை கொள்ளுமாறு மிகமிகப் பிற்பட்ட காலத்தில், தமிழரசர்களைப் பிராமணர்கள் தூண்டிவிட்டனர். அந்நிலையிலும், அவர்கள் வேற்று மண்ணுக்கு உரியவர்களாகக் கருதப்படாமல், தமிழ்நாட்டு அரசர்களாகவே மதிக்கப்பட்டனர். மேலும், சோழர், சேர, பாண்டியர் என்ற சொற்கள், தமிழ்ப் பழங்குடிப் பெயர்களாம். காவிரிப் பள்ளதாக்கில் வாழ்ந்து, அந்நிலத்துக்குரியதாம் ஆத்திமலரைத் தங்கள் குலச்சின்னமாகக் கொண்ட சோழர் உழவர்களாம் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவராவர். காவிரிப் பேராற்றின் துணை நதிகளின் தோன்றுமிடம் தொடங்கி, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரை வரையான, தன் மண்ணுக்குரிய மரமாகப் பனையைக் கொண்டிருக்கும், மலைநாட்டு மக்களாம் குறவர் இனத்தைச் சேர்ந்தவர் சேரர், பனையைத்தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தனர். பாண்டியர், வேம்பினைத் தன் மண்ணுக்குரிய மரமாகவும், மீன்பிடி தொழிலைக் குலத்தொழிலாகவும் கொண்ட, இந்தியாவின் தென்கோடி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களாம் பரதவர் இனத்தவர் ஆவர். கயலும், வேம்பும் அவர்கள் குல அடையாளங்களாம். இன்றைய குறவர், பண்டைக் குறவரினும், நிலையால் தாழ்ந்துவிட்ட வழிவந்தவராதல் வேண்டும்) (பழந்தமிழ் இலக்கியங்களில், பரதவர் என்ற சொல், கடலோடிகள் மற்றும் பாண்டி நாட்டுத் தலைவர்கள் என்ற இரு பொருளும் உடையதாகும். உ.ம்: “தென்பரதவர் மிடல்சாய'’ (புறம்: 378-7)” தென் பரதவர் பேரேறே” (மதுரைக் காஞ்சி : 144) இப்பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களும், தொழில்களும், அவர்கள் வாழ்ந்த சுற்றுச் சூழல், அவர்கள் மீது செலுத்திய ஆட்சியின் நேரிடைப் பயனாம். ஆகவே, அவர் தம் இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு வெளியே உள்ள ஓர் இடத்திலிருந்து வந்தவர்களாக அவர்களைக் கொண்டு வரக் காட்டும் கற்பனை மாடங்கள் அனைத்தும், நேர்மைக்கு மாறான காரணங்களின் எடுத்துக்காட்டுக்களாம்.

மகதப் பேரரசு

கி.மு. 400 அளவில், மகாபத்ம நந்தன், மகதத்தின் அரசன் ஆனான். அவன் சத்திரியர்கள் அனைவரையும் பூண்டோடு அழித்துவிட்டான். அவன் காலத்திற்குப் பிறகு சூத்திரர் வழிவந்தவரே, நாட்டில் சிறந்தோங்கியிருந்தனர். அவன் இந்தியா முழுமைக்குமான தனி அரசன் ஆனான். பேரரசின் ஒரே வெற்றிக் கொடைக்கு உரியவன் ஆனான். (சர்வ சத்ராந்த கொன் பஹ் தஹ் ப்ரப்ற்தி ராஜானொ, ப்ஹவிஷ்யஹ் சூத்ர யொனயஹ் எகராத் ச மகாபத்ம எகச் ஹத்ர ஹ்') (Pargiter : Dynasties of Kali Age : Page 25) அந்நாள் முதல், மகத அரசர்கள், ஆரிய நாகரீகத்திற்கு அந்நாள் வரை அடிமைப்படாத மக்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் பெருநிலப்பரப்பு முழுமைக்கும் தனிப்பேரரசர்களாக உரிமை கொண்டனர். தம் உரிமையை நிலைநாட்ட, தட்சிண பாரதத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பு எதையும் கேட்டிலம் ஆதலின், மகதப் பேரரசின் தனி ஆட்சி உண்மை , அசோகன் இறக்கும் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. கலிங்கத்தில், நந்தர்களால், ஒரு பாசனக்கால்வாய் வெட்டப்பட்டிருந்தது . ஆதலின், ஏனைய மாநிலங்களோடு கலிங்கமும், மகத அரசின் கீழ் இருந்தது. ஆகவே, அசோகன், கலிங்கத்தின் மேற்கொண்ட போர், உள்நாட்டுக் கலவரம் காரணமாகவே ஆதல் வேண்டும். அசோகன் அரச ஆணையின் கல்வெட்டுப் படிகள், ஏனைய இடங்களோடு, மைசூர் நாட்டைச் சேர்ந்த சித்தபுரம், ஜதிங்க ராமேஸ்வரம், பிரம்மகிரியிலும், நைஸாம் மாநிலத்தில் உள்ள மஸ்கியிலும், நன்மிக அண்மைக் காலத்தில் கர்னூல் மாவட்டத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது, வடநாட்டுத் தலையாய உள்நாட்டு மொழி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு நீங்கிய தென்னிந்தியர்களால் பொருள் உணரப்பட்டிருந்தது - என்பதையே உணர்த்துகிறது. (இன்று, அடிப்படையில் ஒன்றாகவே கருதப்படும் இந்துஸ்தானி அல்லது இந்தி அல்லது உருது இந்தியாவின் பெரும்பகுதியில் பொருள் உணரப்படுகிறது. இது, வழக்கமாக நம்புவது போல் முகம்மதிய சுல்தான்களின் ஆட்சியால் நேர்ந்தது அன்று. மாறாக, வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில், பல நூறு ஆண்டுகாலமாக இருந்து வந்த, வாணிகம், சமயம், இலக்கியம் ஆகிய துறைகளிலான தொடர்பே காரணமாம்) அவ்வரச ஆணைகள், புலமை சான்றவர்க்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டவை அன்று. அதுவாயின், அவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது என உய்த்துணர்ந்து கொள்ளலாம். எழுத்தைப் பொறுத்தமட்டில், அசோகன் எழுத்துகள் எனப்படும் அதே எழுத்துகள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டது. பண்டைக் காலத்தில் வட இந்தியா, தென்னிந்தியாவுக் கிடையேயான போக்குவரவு பெரிதாம். அப்போக்குவரவு, மகாபத்மநந்தன் நாடு முழுமைக்குமான ஒரே அரசன் (ஏகராட்) ஆகிவிட்டான். மகதம் பெற்றிருந்த இவ்வாட்சி மேலாண்மை, மெளரியப் பேரரசர் காலத்தும் தொடர்ந்து இருந்து வந்தது என்ற உண்மை நிகழ்ச்சிகளால், மேலும் பெருகிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது.

கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக் கொளடில்யர் கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல் குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தட்சிண பாரதத்திலிருந்து பெருமளவில் வந்தன என்று கெளடில்யர் கூறுகிறார். தட்சிண - பரதத்தில் பற்பல சுரங்கங்கள் வழியாக, மிகச் சிறந்த வாணிகப் பொருள்கள் பெருமளவில் கிடைக்கும் நகரங்கள் வழியாக, பல்வேறு வகை மக்களை ஆங்காங்கே கொண்டுள்ள வழியாகச் செல்லும், நீண்ட வழிப்பயணம் செய்வதற்கு எளிமையானது ஏனைய வழிகளிலும் சிறப்பு வாய்ந்தது”. ("ஸ்த்ஹல பாத பி ஹை மவதொ. தஷிண பத்ஹாஎக்ரெயான்)

ஹய்த்யஸ்வ கந்த்ஹ தந்தாஜின் ரூப்ய ஸ்வர்ன பன்யாஹ் சாரவத்தராங் இத்யாசார்யஹ்

நெதி கெளடில்யஹ் கம்பலாஜினாஸ்வபன்ய வர்ஜாஹ் சாங்ஹவஜ்ரமணிமுக்தாஹ். சுவர்ணபண்யாஸ்கரப்ஹத்ரா. தஷிணாபத்ஹே .

தக்ஷிணாபத்ஹே பி பாஹுகனிஹ் சார்பண்யஹ் ப்ரசித்த கதிர் அல்பவ்யாயா மொ வா வணிக்பதஹ ஸ்ரெயான் (அர்த்த சாஸ்திரம். ஜாலி மற்றும் ஸ்கிமித் வெளியீடு. பகுதி 2 : 12 பக்க ம் 30 - 34)

இது பண்டங்களைக் கொண்டு செல்லும் பழைய முறையினைப், புகைவண்டித் தொடர்களும், லாரிகளும், அழித்து விடாமல் விட்டு வைத்திருக்கம் இடங்களில் இன்றும் நாம் காண்பது போல், 'கிரீச்' எனும் ஒலி ஓயாது எழ, குமரி முதல் பாடலி வரையான, சீர்மிகு , சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் கட்டைவண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம் நடைபெற்ற மிகப் பெரிய வாணிக நிலை பற்றிய காட்சியைக் காட்டுகிறது. வேறு ஓர் இடத்தில் அரசன் கருவூலத்திற்குச் செல்லும் அரும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடும்போது, கெளடல்லியர், தாம்பரபரணி, பாண்டிய காவடகா, மற்றும் சூர்ணா (இது, பிற்காலத்தே, உரையாசிரியரால், முரசி” அதாவது கேரள நாட்டில் உள்ள முசிறிக்கு அணித்தாக ஓடும் ஆறு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது) ஆகிய இடங்களிலிருந்து வந்த ரத்தினங்கள் (அர்த்தசாஸ்திரம் - 11 26:2) பல்வேறு வண்ணங்களில் ஆன வைடூரியங்கள் (மேற்படி 26:30 ) ஓர் உரையாசிரியர் இது, ஸ்திரீராஜ்யத்திலிருந்து அதாவது மலபாரிலிருந்து வந்ததாகக் கொள்வர்) பட்டை தீட்டப் பெற்ற மாணிக்கக்கல்லின் மேனி போல் மெத்தென்றிருக்கும். கருமை நிறம் வாய்ந்த பெளண்ட்ரகக் கம்பளங்கள், (அர்த்த சாஸ்திர மொழி பெயர்ப்பாளராகிய காமா சாஸ்திரி யார் இவைஇ பாண்டி நாட்டுச் செய்பொருள்கள் என்கிறார்) (பக்

90). மற்றும் மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (Arthasastra : Jolly and Schmidt. ii. 26.119)


சந்திரகுப்தனும் தென் இந்தியாவும் :

கி.மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் உலகம் அறிந்த நனிமிகு புகழ்வாய்ந்த சந்திரகுப்தன், ஒரு நூற்றாண்டின் கால்கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப் பேரரசர் பலரையும் போலவே, வைராக்கிய மாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து சமணத்துறவியாகி பத்ரபாகுவின் 12,000 மாணவர்களில் ஒருவராகிவிட்டான். தன் குருவோடும், தன்னொத்த மாணவர்களோடும், மைசூர் மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவண பெல்கோலாவைக் கால்கடுக்க நடந்து அடைந்தான். ஏனையோர் ஆங்கிருந்து பாண்டிய, சோழ நாடுகளுக்குச் சென்றனராக, பத்ரபாகுவும், சந்திரகுப்தனும் அங்கேயே தங்கிவிட்டனர். ஆங்குப் பிச்சைக்காரனாக மாறிவிட்ட அப்பேரரசன், தன் குரு இறக்கும் வரை, அவருக்குத் தேவையானவற்றை அளித்துப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். சந்திரகுப்தன், தன் ஆசிரியருக்குப் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தான். பின்னர்த் , தான் உயிர் வாழ்ந்த பயன் கிட்டிவிட்டது : தன் உடல் தனக்கு இனிப் பயன் இல்லை என உணர்ந்ததும், சமண சமயமுறையாம், பசியோடிருந்து வடக்கிருந்து உயிர் துறத்தலாம் “சல்லெக்ஹனம்” மேற்கொண்டு உயிர் துறந்தான். ஒரு பேரரசின் வாழ்க்கை , மறைவுகள் குறித்து நாம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை, ஆனால், இப்போது சாதுக்கள் என அழைக்கப்படும் ஆயிரக் கணக்கானவர், இன்று வழிபாட்டிடங்களுக்குச் சென்று திரும்பும் பல்லாயிரவர் போல வடநாடு விடுத்துத் தென்னாடு வந்தது பற்றியே கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இச்சமண முனிவர்கள் தமிழ்நாடு மலைச்சரிவுகளில் உள்ள இயற்கையான குகைகளில் வாழ்ந்து, படித்துப் பொருள் காண்பதன் மூலம், தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு ஒளிகாட்டும், கல்வெட்டுக்களை அக்குகைகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

பெளத்த நாடோடிகள்

சமணர்களைப் போலவே, பெளத்தர்களும் தம் யோக நெறியை அமைதி குலையாமல் பயில்வதற்கு ஏற்ற தனிமை இடங்களைத் தேடி , தென்னிந்தியாவுக்கு அலைந்து திரிந்து வந்து சேர்ந்தனர். அவர்களும், இயற்கைக்குகைகளில் வாழ்ந்து கல்வெட்டுக்களை விட்டுச் சென்றனர். பல இடங்களில், குறிப்பிட்ட ஒரு குகை, சமணர் வாழ்ந்ததா, பெளத்தர் வாழ்ந்ததா என்பதை அறிந்துகொள்வதில் சிறிது சிரமமே. அது போலும் குகைகள், பாண்டிய, சேர நாட்டுப் பல்வேறு மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெளத்த சந்நியாசிகளின், தொடக்ககால இக்குடி பெயர்ச்சிக்கு அரசியலோ, சமயம் பரப்பும் ஆர்வமோ, காரணங்களாகா. பண்டைக்கால ரிஷிகளைப் போலவே, கி.மு. ஐந்து மற்றும் நான்காம் நூற்றாண்டு புத்த பிக்குகளும், அரசர்களின் நிறைமனத்தோடு படாத ஆதரவிலிருந்தும், துறவறச் சந்நியாசிகளை வரையறையின்றி மகிழ்விப்பதன் மூலம் மிகப் பலவாய புண்ணியத்தையும், மலிவான தகுதிப்பாட்டையும் பெறத் துடிக்கும், பொறுப்பற்ற மாணவர்களின், பொறுக்கவொண்ணாப் போலிப் புகழ்ப்பாட்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளவே, தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளியேறினர். சமணர்களும், பௌத்தர்களும் முறையான மனப்பயிற்சியினை யோக முறை மூலம், மேற்கொள்ளுதல் வேண்டும்; அதன் வெற்றிப் பயிற்சிக்குத் தனிமை தேவை. சமணர்களுக்கு, இவற்றிற்கு மேலாக, சல்லெகனம்" என அழைக்கப்படும் ஒருவகைத் தனிச்சிறப்பு வாய்ந்த முறையாம் வடக்கிருந்து அமைதியாக உயிர் விடுதற்கு ஏற்புடைய மக்கள் நடமாட்டத்திற்கு அப்பாற்பட்ட உறைவிடமும், தேவைப் பட்டது. பண்டைக்காலத்தைச் சேர்ந்த இம் முனிவர்களுக்கு, உயிரைக் காக்கத் துடிக்கும் பேராசை எதுவும் இல்லை. மகாவீரரும், புத்தரும் மக்களைப் பெருங்கூட்டமாக வானுலகிற்கு அனுப்புவனவாகச் சமயங்களைக் கருதவில்லை. கட்டாயமாக்கப்பட்ட பிறப்பு, மறுபிறப்பு எனும் வாழ்க்கைச் சக்கரத்தலிருந்து தனிமனிதனைக் காக்கும் மனப்பியற்சி முறைகளைச் சந்நியாசிகளுக்குக் கற்பித்தலே சமயமாம் எனக் கொண்டனர். இவ்வறவுரையாளர்கள் உலகத்தவர்க்கு உலக வாழ்க்கைக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. துறவிகளுக்குத் துறவற நெறிக்கே விடுத்தனர். அவர்கள் தொழுகை இடங்களை நிறுவினார் அல்லர். நோன்பிடங்களையே கண்டனர். அவர்கள், மாணவர்களின் மனத்தைச் சமயக் கருத்துக்களால் நிரப்பினாரல்லர். மாறாக அவர் உள்ளங்களை, உயிர் உணர்ச்சிகளைத் தூண்டவல்ல அறவுரைகளால் கிளர்ச்சி பெறச் செய்தனர். எப்பொழுதும் ஓயாது இயங்கிக் கொண்டு இருக்கும் அலையலையான அகக்கிளர்ச்சிகள் அடங்கிப்போக, அவற்றின் இடத்தைத் தன்னை மட்டுமே உணரும் நிலைபேறுடைய மனவுணர்வுக்குவியல் வெற்றி கொண்டுவிட்டதோ, எப்பொழுது, கடுமையான புலனடக்க நெறி மேற்கொண்டு, தன் உயிரின் வீடுபெற்றிற்காம் விருப்பம், உலகத்தவர்க்குச் சமயக் கொள்கைகளை அவர் உள்ளம் ஈர்க்கும் சொற்களால் விளக்கி, அவ்வுலகத்து உயிர் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் குப்புறத் தள்ளப்பட்டதோ, எப்பொழுது, உணர்ச்சிக்கு உள்ளாகி, ஓயாது துடித்துக் கொண்டிருக்கும் உயிர், மாறா நியதிகளாம், வலிய இரும்புச் சங்கிலிகொண்டு சிறை செய்யப்பட்டுவிட்டதோ, எப்பொழுது, புத்தர் கூறுவது போல மனத்தொடுபடும் கோட்பாடு, கண்ணொடுபடும் கோட்பாட்டால் கெட்டு மங்கிப் போய்விட்டதோ, எப்பொழுது சாங்கியர் கூறுவது போல் புத்தியின் ‘அத்யவசாயம்” மனத்தின் ‘'சங்கல்பவிகல்பங்களால், ஒளிகெட்டு மங்கிப் போய்விட்டதோ, அப்பொழுதே, ஜீனர், புத்தர்களின் போதனைகள் சமணமாகவும், பெளத்தமாகவும் தாழ்நிலை உற்றுவிட்டன: உற்றன : இந்திய மக்களுக்குப் பெருங்கேடாக, மனிதனின் தன்னை மட்டுமே மதிக்கும் அகவுணர்வு மேலும் இரு சமயப் பிரிவுகளை உருவாக்கி விட்டது. அந்நிலையே பௌத்தர்களின் பேரவைகள் கூடலாயின. ஏனைய மக்களின் உயிர்களைக் காக்கும் சமயத்தின் பெயரால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வேட்கையால் உந்தப்பட்ட புத்தத் துறவிகள், நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டனர். முந்திய தலைமுறை களைச் சேர்ந்த புத்த பிக்குகள் போல் அல்லாமல் போர்க் குணம் வாய்ந்த இப்புத்தத் துறவிகள் தங்கள் சமயப் பிரசாரத் திற்கு மகதப் பேரரசின் துணையையும் பயன் கொண்டனர்.

அசோகனும் தமிழ்நாடும்

ஆனால், அசோக வர்த்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, மற்றும் கேரள புத்ரர்களை "அந்த" அதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13வது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றி கொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் தர்மமாம் பல்வேறு வகையான நன்னெறிகளை, மக்களுக்குப் போதிக்கும் சமயத் தூதுவர்களைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதுதான், தர்மவிஜயம் என்பது. இது பண்டைக்கால், இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர் இருதிறத்தவராலும், பல்வேறு நாடுகளுக்குப் பெளத்த சமய போதனையாளர்களை அனுப்பியதாகத் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று, அசோகன், ஒருவர் விடாமல் மக்கள் அனைவர்க்குமான தன் உபதேசங்களைப் 'பெளத்த சத்யானி" என்று எக்காலத்தும் பெயரிட்டு அழைத்ததில்லை. மாறாக, எச்சமயத்தோடும் சாராததான "தர்மம்" என்றே எப்போதும் பெயரிட்டு அழைத்துள்ளான். இரண்டாவது, பௌத்த மதம் பரப்பும் புத்த சந்நியாசிகளைப் பல நாடுகளுக்கும் அனுப்பிய தன் செயலைப் பலரும் அறியச் செய்ய விரும்பியிருந்தால், உஜ்ஜைனியில் தான் ஆளுநராக இருந்த போது மணந்து கொண்ட தேவி வழிப்பிறந்த தன் மகன் மகிந்தனைப் புத்தமதம் பரப்ப ஈழ நாட்டிற்கு அனுப்பியதைக் கல்வெட்டில் பொறித்து இருப்பான். ஆனால், இச்செய்தியை மகாவம்சந் தான் நமக்கு அறிவிக்கிறது. அசோகன், தூதுவர்களை, தர்ம விஜயத்திற்கே அனுப்பினனாக, பல்வேறு நாடுகளுக்குப் புத்தசமயப் பிரசாரகர்களை, மூன்றாவது புத்தப் பேரவை தான் அனுப்பியது. அசோகன், பிராமண இல்லறத்தார், துறவறத்தார், சமய முனிவர்களை மதித்தது போலவே, பெளத்த முனிவர்களையும், மதித்தான் என்பதில் ஐயம் இல்லை, ஆனால், இது பெளத்த சந்நியாசிகளைச் சமயப் பிரசாரகர்களாக அனுப்பியதாகப் பொருளாகாது. இப்பொருள் குறித்தவரை, பெளத்த வரலாற்று அட்டவணை யாகிய மகாவம்சம், ஒருதலைப்பட்ட சான்றே ஆகும். ஆனால், நம்முடைய ஆய்வு அப்பொருள் பற்றியதன்று. அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து, அசோகன் காலத்தில், அவனுடைய முந்தையோர் காலத்தைப் போலவே, தமிழ்நாடு, வட இந்தியாவோடு சுறுசுறுப்பான மிகப் பெரிய போக்கு வரவினைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்வது ஒன்றே போதும்.

இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர்கள், மெளரியப் பேரரசு பற்றியும், பிற்காலத்தே குப்தர்களில் முடியாட்சி பற்றியும் பரவலாகப் பேசுகின்றனர். பேரரசு, பேரரசைச் சார்ந்த எனப் பொருள்படும் (Empire: Imperial) என்ற இவ்வாங் கிலச் சொற்கள், பண்டைக்காலத்தில், இந்திய நாடுகள் ஒன்றோடொன்று கொண்டிருந்த அரசியல் உறவு பற்றி மிகப் பெரிய தவறான கருத்தினையே உணர்த்துகின்றன. இந்திய வரலாற்றில், இவ்வரலாற்றின் போக்கில், தவறான கொள்கையினை ஏற்படுத்தாமல், “எம்பயர்’ (Empire) என்ற சொல்லை ஆள்வது இயலாது. பேரரசு (Empire) என்ற அச்சொல் உணர்த்தும் உள்ளார்ந்த பொருள் அத்தகைத்து. தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் அமைதி நிலைநாட் டால், உரோம் நாட்டுக் குடியுரிமை உரோம் நாட்டுச் சட்டம் ஒழுங்கு முறைகளை மெல்ல மெல்ல விரிவாக்கல், இலத்தீன் மொழியைப் பரப்புதல் ஆகிய இவையே உரோமப் பேரரசு என்பதன் பொருளாம். சட்டம் ஒழுங்கு நிலையில் பிரித்தானியர் முறைகளை நிறுவுதல், நிர்வாகத்தில் ஆங்கிலத்தைப் பயன் கொள்ளுதல், ஆங்கிலமுறைப் பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் பரப்புதல், ஆங்கிலேயர் வர்த்தக முறையின் மிகப் பெரிய விரிவாக்கம், கிறித்துவ சமயப் போதனைகளை மெல்ல மெல்லத் தொடங்கல், பிரித்தானிய நாட்டு மக்களாட்சி முறையின் மெதுவான வளர்ச்சி ஆகிய இவையே பிரித்தானியப் பேரரசு என்பதன் பொருளாம். பண்டை நாட்களில், இந்தியாவில் பேரரசு நிறுவல் என்பது, இவற்றில் எதுவும் அன்று. மரபு வழிபட்ட 56 இந்திய சிறுநாடுகளும், பிராமண ஆசிரியர்கள், அவ்வப்போது எடுத்து விளக்கிக் கூறும் தர்ம சாஸ்திரப்படியே பெரும் பாலும் ஆளப்பட்டு வந்தன. பேராற்றல் வாய்ந்த பேரரசன் ஒருவன், ஒருதனி ஆழி உருட்டுவோன், உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வோன் , உலகெலாம் ஆள்வோன்" , எனக் கூறப்படும் நிலையிலும், அவன் ஆட்சிக் கீழ் அடங்கிய நாடுகளில் ஆட்சி நிர்வாக முறைகளில், அமைச்சர் புரோகிதர் உள்ளிட்ட அரசவை ஐம்பெருங்குழுக்களில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை. போர்க்காலனிகள் எதுவும் ஆங்கு ஏற்படுத்தப்படுவதில்லை. வெற்றி கொண்ட பேரரசனின் சிறுபடைப் பிரிவும் ஆங்கு நிறுத்தப்படுவதில்லை. பெருவீரன் ஒருவன், எண்ணற்ற நாடுகளுக்கும், தன்னைத் தலைவனாகக் கூறிக் கொள்வதும் ஆகிய இவையே; அச்சொற்றொடர் களுக்குப் பொருளாம். தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது அசுவமேதயாகம் இயற்றுவதன் மூலமே பொதுவாக மேற்கொள்ளப்படும். பொதுவாக, யாகத்திற்கு முன்பாகப் படையெடுப்பு எதுவும் நிகழ்வதில்லை. ஆனால், யாகத்தில் பலி கொள்ள இருக்கும் குதிரையை, அவ்வரசனின் மகன், அல்லது மகள் வயிற்று மகன் பொறுப்பில் கட்ட விழ்த்து விடுவதும், அவ்வேள்வி செய்யும் அரசனின் மேலா திக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசன் நாட்டிற்குச் சென்ற அக்குதிரை ஆங்கு அவனால் கட்டப்பட்டு விடுமாயின், அது மீட்பதற்குப் போர் நிகழ்வதும் மட்டுமே வேள்விக்கு முன்பாக நிகழும். ஆனால் பேரரசு ஆட்சி என்பது தனி அரசன் ஒருவனின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்ததே அல்லது, ஓர் அரச இனத்தின் செயலே அன்று. ஆகவே, இந்தியப் பேரரசுகள் குறித்துக் கூறப்படும் பொதுவான கருத்துக்கள் எல்லாம், குறுகிய காலகட்டத்தில் நிற்பன; பொருள் அற்றன.

அசோகனுக்குப் பின்னர் அரியணை ஏறியவரெல்லாம், அரசியல் நெறியாலும், ஒழுக்க நெறியாலும் வலுவிழந் தவர்கள்!. ஆகவே அவன் மறைவினை, மகதம் போன்ற பிற நாட்டு மன்னர்களின் புகழேற்றம் இடங் கொண்டுவிட்டது. அத்தகைய அரசர்களுள் ஒருவன், கலிங்க நாட்டுக் கார்வேலன். அவனுடைய கல்வெட்டுக்கள், அவன் நாட்டிற்கும் மதுரைக் கும் இடையில் நடைபெற்ற வாணிகத்திற்குச் சான்று பகர்கின்றன.

கலிங்கமும் தென் இந்தியாவும்

விதி, எப்போதும் போல விளையாடிவிடவே, அசோகன் கடைப்பிடித்த தர்மம், அவன் இறப்பிற்குப் பின்னர், அவன் பேரரசைச் சிதறுறச் செய்துவிட்டது. அவ்வகையில் தன்னாட்சி பெற்ற நாடுகளில் கலிங்கமும் ஒன்று. அதன் அரசன் காரவேலன் (கி.மு. 200) பாண்டி நாடுவரையும் சென்று பரவிய பெரும் புகழ்ச்சிக்கு உரியவனாகிவிட்டான். அங்கிருந்து குதிரைகள், இன்தினங்கள், முத்துக்கள், நீலக்கல் மட்டுமல்லாமல், அவற்றைச் சுமந்து வந்த யானைகளும் கப்பல்களும் அவனுக்குப் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தன். குதிரைகளையும், யானைகளையும், மாணிக்கங்களையும் ஏற்றிக் கொண்டு, வியத்தகு யானைக் கப்பல்களும் கொண்டு வரப்பட்டன. முத்துக்கள், நீலமணிகளோடு இவற்றையும் பாண்டிய அரசன் அனுப்பிவைத்தான். (அப்ஹுத அசரியம் அத்தினாவன் பாரிபுரம் யு(ப்) தென்ஹ ஹ ஹதி. ரத்ன (மா) நிகம். பண்டராஜா எதானி அனெகானி முதமணிரத்னாளி ஹராபயதி இத்ஹ சத் ச) (ஹதிகும்பா கல்வெட்டுக்கள் ; J.B. 0. R. S. iv. 401)