ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


9. வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்


பாக்களின் தோற்றம் :

பாக்கள், பொதுவாக, கடவுள்களையும், காவலர் களையும் பாராட்டும் புகழுரைகளோடு பிறந்தன. எப்பொழுதெல்லாம், வழிபாட்டு நெறி ஒன்று நிறுவப்படுகிறதோ, அல்லது ஓர் அரசகுலம் தோன்றுகிறதோ, பாணர் முதலாம் புகழ் பாடுவார் அவற்றைப் பாராட்டிப் பாடுவதன் மூலம் அக்கடவுள்களின் அக்காவலர்களின் அரவணைப்பைப் பெறத் தொடங்கினர். வேதங்கள் போலும் சமயப் பாக்களின் திறனாய்வை விடுத்துப் பார்த்தால், எந்த ஒரு மொழியிலும், சமயச்சார்பற்ற பாட்டு, அம்மொழி பேசும் அரசன், பாராட்டத்தக்க போர் வெற்றிகளைப் பெறும்போது பாடத் தொடங்கப் பெறுகிறது என முடிவு கொள்ளலாம். பாணர் முதலாம் இரவலர்கள், இறைச்சி மீன் பாலும், இனிய மதுவின் பாலும் தணியா வேட்கையுடையராய், எப்போதும் அரைப்பட்டினி யோடிருப்பர். காதல், போர் ஆகிய துறைகளில் மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் பெறும் பெஞ்செயல்களைப், பாக்களில் வைத்துப் பாராட்டுவதன் மூலம், இறைச்சியையும், இனிய மதுவையும் பெற முயற்சிப்பர். தமிழ்க் கவிதைக்கலை, பிறந்த வழி தெளிவாக, உறுதியாக, இதுவே.

நன்மிகப் பழம் பாடல்களெல்லாம், உண்மையில் பேச்சு வழக்கிலிருந்த திருந்தாக் கிளைமொழிகளிலேயே இருந்தன. சமஸ்கிருத மொழி, சமஸ்கிருதமாக (அதாவது செப்பம் செய்யப்பெற்று, மரபுவழி நெறிப்படுத்தப்பட்டு, கண்டிப்பான இலக்கண விதிமுறைகளின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலை) திருந்திய வடிவமாக ஆக்கப்பட்டு வேதமந்திரங்களின் யாப்பு முறைகளும், இலக்கிய மரபுகளும் தோன்றுவதற்கு முன்னர்ப், பல நூறு ஆண்டுகாலம் வழக்கில் இருந்திருக்க வேண்டிய சமஸ்கிருத நாடோடிப்பாடல்கள் அழிந்துபட்டது போலவே, அப்பழந் தமிழ்ப் பாடல்களும், அழிந்து போயின. வேத மந்திரங்கள், மாக்ஸ் முல்லர், வெறியுணர்வோடு விளக்குவது போல், ‘'குழந்தை நிலை மானுடத்தின் பொருளற்ற உளறல்” அன்று. அம்மந்திரங்களின் மொழிநடை “புலமை நலம் வாய்ந்த இலக்கிய மொழி நடை’, ‘'மதகுரு, வழிபாட்டு இசைப் பாணர்களுக்கிடையே, தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவரப்பட்ட செயற்கையாக வழக்கிறந்து போனதாக்கப்பட்ட பழம் பெரும் மொழி (A Macdonell. Sans. Lit. P. 20.) வேறு நடையில் சொல்வதானால், வேதமொழி, பாதிரி முதல் பறையன் வரையான, எல்லா நிலையில் உள்ளாராலும் பேசப்பட்ட ஒரு மொழி அன்று. அது ஒரு ‘'தேவ பாஷை'’. அது போலவே, இப்போது நாம் பெற்றிருக்கும் பழந்தமிழ்ப்பாடல்களெல்லாம், ஒப்புநோக்க, பிறபட்ட கால இலக்கிய வளர்ச்சியினைக் காட்டுவனவாம். அவற்றின் மொழிநடை, சாதாரண மக்களின், பேச்சு நடையன்று. நனிமிகத் திருத்தம் பெற்ற, மரபுவழிப்படுத்தப்பட்ட இலக்கிய நடையாகும். இப்பழம்பாடல்கள், யாப்பிலக்கண விதிகளின் கட்டுப்பாட்டிற்கு உறுதியாக அடங்கியிருப்பவை. இலக்கிய மரபுகளின், நனிமிக உயர்ந்த பல்வேறு விதிமுறைகளை விளக்கிக் காட்டவல்லன.

இலக்கியக் கிளைமொழிகள்

தமிழ் அரச இனங்கள் மூன்றம், தென்னிந்தியா, ஸ்ரீ ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். இம்மூன்று இனங்களில், பாண்டிய அரச இனம், மதுரை நாடு என, இன்று நாம் அழைக்கும் பகுதியில் ஆண்டிருந்தது. இந்நாடு, தமிழகத்தின், இருதயம் போலும் மைய இடமாகும். முழுக்க முழுக்க மருதமாகவே (விளை நிலமாகவே) இருக்கும் சோழ நாடு போலவோ, பெரும் பகுதி குறிஞ்சியாக (மலை நாடாக) இருக்கம் சேர நாடு போலவோ அல்லாமல், பாண்டியநாடு, ஐந்திணைக்காதல் பாடல்களும், அவை ஒவ்வொன்றொடும் உறவுடையவாய, ஐந்திணைப் போர்ப் பாடல்களும் எழுவதற்கு ஏற்புடைய, ஐந்திணைக்கும் உரிய வாழிடங்களைக் கொண்டிருந்தது. ஆகவே, தமிழிலக்கிய வளர்ச்சியின் நடுவிடமாக, இலக்கிய நடைத்தமிழ், அதாவது செந்தமிழ் வழங்கும் இடமாக மதுரை சிறந்து உயர்ந்தது வியப்புக்கு உரியதன்று. செந்தமிழ் நாட்டை அடுத்திருந்த, அவ்வந் நிலத்துக்கே உரிய கிளைமொழிகள் வழக்கில் இருந்த பன்னிரண்டு மாவட்டங்கள் குறித்துத் தமிழ் இலக்கணங்கள் ' குறிப்பிடுகின்றன. (செந்தமிழ் சோர்ந்த பன்னிரு நிலம்". தொல்காப்பியம் : சொல்லதிகாரம் : 9:3) நன்கு தெரிந்த ஒரு தமிழ்ப் பாட்டு, அச் செந்தமிழ் வழங்கும் பன்னிரு நாட்டையும், தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா . வடதலை நாடு, சீதநாடு, மலையமா நாடு, சோழ நாடு என வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

"தென்பாண்டி, குட்டம், குடம் கற்கா, வேண், பூழி ,
பன்றி, அருவா, அதன் வடக்கு , நன்றாய
சீதம், மலாடு, புனல் நாடு, செந்தமிழ்சேர்
ஏதம் இல் பன்னிரு நாட்டு எண்"

தொல்காப்பிய உரையாசிரியராய சேனாவரையர், தென்கிழக்கிலிருந்து வரிசைப்படுத்தத் தொடங்கி, பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழிநாடு, மலைநாடு, அருவா நாடு, இறுதியாக அருவாவடதலை நாடு என முடிக்கிறார். இறுதியாகக் கூறப்பட்டது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர்த் தொண்டை நாடு என்றும், வட இந்திய எழுத்தாளர்களால் திராவிடம் என்றும் அழைக்கப்பட்ட நாடாகும்.

ஓரிடத்தில் வழங்கும் மொழி, ஏனைய இடங்களில் வழங்கும் மொழிகளைப் போலவே, சிறந்ததும் ஆம். அல்லது சிறப்பற்றதும் ஆம், ஆதலாலும், இலக்கியத்தமிழ், முதன் முதலில், பாண்டி நாட்டில் மேற்கொள்ளப்பட்டது ஆதலாலும், அவ்விலக்கியத் தமிழ், பிற நாடுகளில் பாக்களில் மேற்கொள்ளப்பட்டபோது, ஆங்கு வழக்கிலிருந்த, அந்நிலத்துக்குரிய சொற்கள் சில, அப்பாக்களில் இடம் பெற்றன. ஆதலாலும், தமிழ்நாடு, இவ்வாறு பிரிக்கப்பட்டடிருந்தது கொண்டு, பொதுவாகக் கருதப்படுவது போல, பாண்டிய நாட்டில் வழங்கிய தமிழைவிட உயர்ந்தது என்பது பொருளாகாது.

தொடக்ககாலப் பாக்கள் அனைத்தும் அழிந்துவிட்டன

இப்போது வழக்கில் உள்ள பழைய செய்யுட்களின் பண்பாகிவிட்ட திருந்திய இலக்கண இலக்கிய மரபுகள் எல்லாம் இடம் பெறுவதற்கு முன்பே, எண்ணற்ற பாக்கள் இயற்றப்பட்டிருக்க வேண்டும். நான் அடிக்கடி, மேற்கோள் காட்டும் அந்த ஐந்திணைப்பாக்களில், ஒவ்வொரு திணைப் பாட்டும். அந்தந்தத் திணைக்கே உரிய நிலத்தில், ஒரு நிலத்திலிருந்து ஒரு நிலத்திற்கிடையே நிகழ்ந்த மக்கள் குடி பெயர்ச்சி அவ்வந்நிலத்துப் பழங்குடி மக்களின் சிறப்புப் பண்பாடுகளைத் தடம் தெரியாவாறு அறவே அழித்துவிட்டு, பண்பாட்டுக் கலை வளர்ச்சியில், சற்றுச்சூழல் செலுத்தும் ஆதிக்கத்தை மூடி மறைத்துவிட்ட ஏற்றத்தாழ்வற்ற ஒரே நிலையில் நடை போடும் நவநாகரீக வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர், பிறந்தனவாதல் வேண்டும். இவ்வகைப் பழம் பாடல்கள் அனைத்தும், இப்போது அழிந்துவிட்டன. (நன்மிகப் பழம் பாடல்களின் மாதிரிகளாக, இப்போது நாம் பெற்றிருக்கும் பாக்களுக்குக், கிறிஸ்துவ ஆண்டின் தொடக்கத்திற்கு மிக மிக முற்பட்ட காலத்தை வகுக்க இயலாது. அப்பழைய இலக்கியங்களெல்லாம் ஏன் . மறையலாயின? ஹாரப்பா, மொகஞ்சோதரரோக்களில் நிகழ்ந்த அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகளால் தெரிய வருவதுபோல், இந்தியர்களுக்குக் கி.மு. 3000 அல்லது 4,000 பேரிலும் மிகப் பழைய காலத்திலேயே எழுதத் தெரிந்திருந்தது என்றாலும், நிலப்படைத் துணைத்தலைவர், திரு. வாடல் ஷோ (Lient col. Waddel show) அவர்களால் பொருளாயப்பட்ட, சிந்து வெளிப்பழைய கல்வெட்டுக்களின் படி, எழுத்துக்கலை, நீண்ட காலம் வரை, அரச வீரர்களின் வெற்றிச் செயல்களை வரிசைப்படுத்தி எண்ணப் பயன் பட்டதேயல்லாமல், இலக்கியப் பணிக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளல் வேண்டும். வேத மந்திரங்களின் தெய்வீகத் தன்மையும் ஆரியவர்த்த ஆரியர்களை நினைவுப்பாறை மீது பொறிக்க அல்லது செய்யுள் வடிவில் தரத் தூண்டவில்லை. சமயச் சார்பற்ற இலக்கியங்கள், இலக்கியத் திறனாய்வாளர்கள், அவற்றின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி, மனித நினைவாற்றல் குறைவால் மறைந்து போவதிலிருந்து, அவற்றைக் காக்க வேண்டிய விருப்பத்தைத் தெரிவித்த நிலையில்தான், ஓலை அல்லது காட்டு மரப்பட்டைகள் மீது எழுதப்பட்டன. இவ்வகையில், மிகவும் பழிக்கப்படு திறனாய்வாளர்களும், நாகரீக வளர்ச்சியில், பயனுள்ள ஒரு செலைச் செய்தவர்களாயினர். சிறந்த திறனாய்வாளராம் தொல்காப்பியர் துணை இல்லாமல், பழந்தமிழர் வாழ்க்கை ஓவியத்தை, மறுவலும் வரைந்திருக்க நம்மால் இயன்றிராது. ஆகவே இலக்கியத் திறனாய்வாளர்கள், குறிப்பாக இந்தியாவில் நாகரீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பணிபுரிந்துள்ளனர். பிற நாடுகளைப் போலவே, தமிழ்நாட்டிலும், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், பறவைகளைப் போலத் தங்களை அறவே மறந்து பாடினார்கள். ஆரியர்கள் , தென்னிந்தியாவில் வந்து வாழத் தொடங்கியது மட்டுமல்லாமல், தமிழ்மொழி, தமிழிலக்கியங்களைக் கற்று அம்மொழி இலக்கணங்களையும் அம்மொழியில் யாக்கப்பட்ட பாக்களையும் ஆராயத் தொடங்கிய பின்னரே இலக்கியத்தின் மீது எழுத்துக்கலை பொறிப்பதான தமிழ் இலக்கியம் எழுத்து வடிவம் பெறத் தொடங்கி, ஒருசில காலம் வரையாவது அழியாதிருக்கும் நிலையைப் பெற்றது.

நனிமிகப் பழைய தமிழ் இலக்கியங்களையெல்லாம் அழிந்து விட்டன. முதன் முதலில் எழுதப்பட்ட தமிழ்ப் பாக்கள் ஒவ்வொன்றும், ஒரு சில வரிகளையே கொண்ட சின்னம் சிறு பாக்களே எனக் கொள்ளலாம். அதற்குப் பிற்பட்ட காலத்திலும், நான்கு வரிகளிலிருந்து இருபது அல்லது முப்பது வரிகளைக் கொண்ட பாக்களே தொடர்ந்து இயற்றப்பட்டன. சில நூறு வரிகளைக் கொண்ட பத்துப்பாட்டுப் பாக்கள், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான், தோன்றத் தலைப்பட்டன. ஆரிய இலக்கியங்கள், தமிழின் மேதகவினை மேலும் வளப்படுத்தத் தொடங்கிய பின்னரே, நீண்ட காவியங்கள் எழலாயின. பரசுராமர்காலந் தொட்டு, தங்களை ஆரியத் தன்மையராக ஆக்கிக் கொண்டதன் காரணத்தால், தங்களைப் பிரம்மராக்கதர் எனக் கூறிக் கொண்ட, ஒரு சில தென்னிந்தியரால், ஆரிய நாகரீகம் பின்பற்றப்பட்ட நிலையிலும், இராம் - இராவணப் போருக்குப் பிறகும், மறுபடியும் மகாபாரதப் போருக்குப் பிறகும், ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றும் தென்னாட்டவர் எண்ணிக்கை உயர்ந்துவிட்ட நிலையிலும், பழந்தமிழ்ப்பாக்கள், ஆரிய ஆதிக்கம் சிறிதும் இன்றி, அதே நிலையில் பல நூறு ஆண்டு காலம் தொடர்ந்து இருந்து வந்துள்ளன. காரணம், தென்னாட்டு ஆரியர்களும், பெரும்பாலான தமிழர்களும், வேதகாலத்தில், வட இந்திய ஆரியர்களும், வட இந்திய தஸ்யுக்களும் போலவே, தங்கள் தங்கள் நாகரீகச் சாதனைகளிலும், வழிபாட்டு நெறிகளின் சிறப்புகளிலும், ஒருவரோடு ஒருவர் பெருமிதம் கொண்டு வழாலாயினர்.

சமஸ்கிருதச் செல்வாக்கிலிருந்து விடுபட்ட பழைய தமிழ்ச் செய்யுள் :

தமிழர் வாழ்க்கை , தம்முடைய போக்கின் ஒரே சீரான ஒழுங்கு நடையினைச், சமஸ்கிருதத் தன்மை வாய்ந்த எதனாலும், தீண்டப்படாமல், பல நூறு ஆண்டுகள், கடைப்பிடித்துச் சென்றது. பழைய தமிழ்ச் சொற்களஞ்சியம், தமிழ் மேதைகளின் உள்ளங்களைத் தம்மால் மட்டுமே தொடவல்ல கருத்துக்களை வெளிப்படுத்த, முற்றிலும் தகுதி வாய்ந்ததுவாதலின், பழைய தமிழ் இலக்கியங்களில், ஒரு சில சமஸ்கிருதச் சொற்கள் மட்டுமே இடம் கொண்டன. தமிழர் களில் பெரும்பிரிவினர், ஆரியப் பழக்கவழக்கங்கள், ஆரிய வாழ்க்கைத் தத்துவங்களால் பாதிக்கப்படாமல், தங்கள் பழைய வழிகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஆகவே, தமிழ்நாட்டில், தமிழர் வாழ்க்கை நீரோட்டம் தென்னாட்டு ஆரியர் வாழ்க்கை நீரோட்டம் என்ற, தங்கள் நீர்த் தாரைகளை ஒன்றுகலக்கவிடாத, அடுத்தடுத்த நேர்க் கோட்டில் ஓடிய இரு நீரோட்டங்கள் இருந்தன. தமிழரின் சிறப்பியல்பு, ஆரியரின் சிறப்பியல் போடு, முற்றிலும் வேறு பட்டது. தமிழர், காணும் இந்நிலவுலகை, உண்மை என ஏற்று, உலகவாழ்க்கை இன்பத்தில் மனநிறைவு கண்டனர். அழிக்கலாகாக் காதல் தூண்டுதல், போரின் வெறிகொண்ட மகிழ்ச்சி, மகளிர்பால் பெருங்காதல், பகைவர்பால் பெரும் வெறுப்பு, முறையே, அகம், புறம் என அழைக்கப்படும் இவை அவர் பாட்டின் கருப்பொருளாதற்குப் போதுமானவை ஆகும். ஆரியர்கள், குறிப்பாக ஆக்க அழிவுகளுக்கிடையே ஆன இறுதிப் போராட்டமாம் பாரதப் பெரும் போருக்குப் பிற்பட்ட காலத்து ஆரியர்கள், மண்ணுலக, விண்ணுலக இன்பங்களின் வெற்று ஆரவாரங்களைப் போர்கள், கணப்பொழுது தோன்றி அழியும் காதலின்பம், மேற் கொண்டாரை அழித்துச் சாம்பலாக்கும் போரின்பால் பெருமகிழ்ச்சி ஆகியவற்றின் பால் மிகப்பெரிய வெற்று ஆரவாரங்களை நினைந்து நினைந்து ஏங்குவாராயினர். பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுதற்கான வழிமுறைகளை இடைவிடாது ஆராய்ந்து வந்தனர். அது பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அவர் உள்ளத்தில், என்றும் அழியாப் பெருமாற்ற மாம் வைராக்கிய உணர்வை, அதாவது பற்றற்ற நிலையினைத் தோற்றுவித்துவிட்டது. ஆதலால், அழிபேறுடைய வாழ்க்கை இன்பத்தைத் துறப்பது, கால், இடங்களின் கட்டுப்பாடற்ற, அழியாப் பெருவாழ்வின் நிலைபேறுடைய பேரானந்த நுகர்விற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு, வைஷ்ணவர்கள், சைவ ஆகமிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகிய வைதீகர்களிடையே சந்நியாச வாழ்க்கை முறை வளரலாயிற்று. பழந்தமிழ்ப் புலவர்கள், இந்நிலவுலக வாழ்வினர். அவ்வுணர்வுடையவர் மக்கள் உணர்ந்தவாறே, வாழ்க்கையின் நடைமுறை இயல்புகளை, அழியா ஓவியங்களில் வடித்துக் காட்டினர். வேத காலத்துப் பிந்திய ஆரியர்கள், மண்ணுலக வாழ்வின் பிடிப்பிலிருந்து, பருத்திக் கம்பளம் போல் விடுதலை பெற்றுத் தருவதும், ஞாயிறும், திங்களும், ஏன், மண்ணும் விண்மீன்களும் புகுந்து ஒளிகாட்ட மாட்டாப் பேருலகிற்குச் சென்றவர்க்கு மட்டுமே. மேலான அழியாப் பெருநிலை தரவல்லதுமான, படிப்படியாக வளர்ந்து நிற்கும், கட்புலனாகக் கருத்துக்களுக்கு உரியராயினர். காணும் இந்நில உலகைப் பொறுத்த வரையில், தமிழரின் மனப்போக்கு, எதிலும் நலமே காணும் நம்பிக்கை உடையதாக, ஆரியரின் மனப்போக்கு, எதிலும், துன்பமே காணும் நம்பிக்கை அற்றதாக அமைந்துவிட்டது. அன்றைய தமிழர்கள், கடுமையான சாதிப்பிரிவுகளால் பிரிக்கப்படவில்லை. ஆனால், ஆரியர்கள் நான்கு வருணத் தலைவர்களாகப் பிரிவுற்றிருந்தனர். பழைய தமிழ்ப் பாக்களின் மரபு சமஸ்கிருதப் பாக்களின் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. ஆகவே, பெரும்பாலான தமிழர்களும், தென்னாட்டு ஆரியர்களும், மற்றவர் பண்பாட்டு நாகரீக நிலையைப் பாதிக்காத வகையில், அவரவர்க்குரிய தனி வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரலாயினர். பழந்தமிழ்ப் பாடல்களில் பெரும் பகுதி அழிந்துவிட்டன என்றாலும், கிறித்துவ ஆண்டுக்குப் பிறகும், சில ஆண்டுகாலம், சமஸ்கிருத நாகரீகம், தமிழ்ப்புலவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டுவிடவில்லை என்பதை உறுதி செய்வதற்குப் போதிய பாக்கள் இன்னமும் உள்ளன.

தொகை நூல்கள்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளிலும், பழந்தமிழ்ப்பாக்களில், மறந்து போகாம்ல நினைவில் நின்ற எல்லாப் பாக்களும், பல்வேறு தொகை நூற்களில் ஒன்று தொகுக்கப்பட்டன. நேரிடையாக அல்லது ஒருவகையில் போரோடு தொடர்புடைய நானூறு எண்ணினைக் கொண்ட, வெவ்வேறு அளவுடைய பாக்கள், புறநானூறு என்ற தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பட்டன. அன்பின் ஐந்திணை ஒழுக்கத்தோடு தொடர்புடைய அகப்பாடல்கள், ஒவ்வொரு தொகையிலும் இடம் பெறும் பாக்களின் அடிகள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மூன்று தொகை நூல்களில் தொகுக்கப்பட்டன. ஒவ்வொரு தொகை நூலும் சரியாக , நானூறு, நானூறு பாக்களைக் கொண்டனவாக, குறைவான அடிகளைக் கொண்டவை குறுந்தொகை என்ற தொகையிலும், எண்ணிக்கையில் இடைநிலையான அடிகளைக் கொண்டவை நற்றிணையிலும், நிறைந்த அடிகளைக் கொண்டவை நெடுந்தொகை அல்லது அகநானூற்றிலும் தொகுக்கப்பட்டன. தொகை நூல்களைத் தொகுத்தவர்கள், ஒவ்வொரு தொகைக்கும் ஒன்று கூடுவதோ, ஒன்று குறைவதோ இல்லாமல், செவ்வெண்ணாக, நானூறு பாக்களை எவ்வாறு பெற்றார்கள்? நானூறு என்ற செவ்வெண் கிடைக்க, ஒரு சிலவற்றை அவர்களே இயற்றிக் கொண்டார்களா? அல்லது சிலவற்றைக் கழித்து விட்டார்களா? என்ற வினாக்களுக்கு விடை காண்பது இயலாது. ஒவ்வொரு தொகையிலும் இடம் பெற்றிருக்கும் பாக்கள் அனைத்தும் ஒரே காலத்தன அல்ல. அப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் மொழிநடை கருப்பொருள், உவம உருவக அணிவகைகள், உள்ளுறைப் பொருள்களைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால், அவற்றில் பிற்காலப் பாக்களிலிருந்து பழங்காலப் பாக்களை, வேறுபிரித்துக் காண்பது இயலாத ஒன்றன்று. உதாரணத்திற்குப், பழம் பாடல்களில் சமஸ்கிருதச் சொற்கள் பெரும்பாலும், அறவே இடம் பெறவில்லை. கூறப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள் ஐந்திணை நிலங்களுக்கே உரிய, பண்டைத் தமிழ்ப் பழக்க வழக்கங்களாம். கூறப்பட்டிருக்கும் மரவடை, மாவடைகள் இந்நிலங்களுக்கே உரியவை : கூறப்பட்டிருக்கும் மூட நம்பிக்கைகளும், தமிழ்த்தன்மை வாய்ந்தவை, ஆரியத் தன்மை வாய்ந்த அன்று. ஆரியக் காவியக் கற்பனைகள் பற்றிய குறிப்பு எதுவும் அறவே இடம் பெறவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அக்காலப் பாவா ணர் எவரும் புராமணர் அல்லர். கி.பி. முதல் ஆயிரத்தாண்டின் முற்பாதியின் இறுதி நூற்றாண்டில், பிராமணர்கள், தமிழ்ப்பாக்களை இயற்றத் தலைப்பட்டனர். அவர்கள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த தமிழிலக்கிய மரபுகளை, உறுதியாகப் பின்பற்றி வந்தாலும், ஆரிய . எண்ணங்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கை கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை. தங்கள் பாக்களில் நுழைந்து இடம் பெற்றுவிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், இப்பொருள் பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு அப்பாக்களில் கிடைக்கும் அகச்சான்றுகளை நுண்ணியதாக மதிப்பீடு செய்து, இந்த ஆயிரத்து அறுநூறு (அகம், புறம், குறுந்தொகை, நற்றிணை) பாக்களில், பழம் பெரும் பாக்களைப் பிற்பட்ட காலத்துப் பாக்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பது விரும்பத்தக்கது. வேண்டத்தக்கது. ஆனால், அத்தகைய விரிவான ஆராய்ச்சி இல்லாமலே கூட, இப்பாக்களை நுணுக்கமாகப் படிக்கும் எவரும் இப்பாக்கள், நீண்ட கால அளவில், குறைந்தது ஐந்நூறு ஆண்டு கால அளவில் பாடப்பட்டுள்ளன என்பதை மன நிறைவோடு காண்பர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அகநானூறு

இத்தொகை நூல்களில், அகநானூறு, உக்கிரப் பெருவழுதி ஆணைப்படி, இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூற்றுப்படி, அகப்பொருள் சூத்திரம் அறுபதின் உண்மைப் பொருள் காணும் புலவர் குழாமுக்கு, ஊமையாக இருந்தும் தலைமை தாங்கிய உருத்திர சன்மனால் தொகுக்கப்பட்டது ஆதலின், அது முதன் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் ஆகும். அப்பாக்கள் அனைத்தும், திருமண உறவுக்கு முற்பட்ட , திருமண உறவுக்குப் பிற்பட்ட, காதல் நிகழ்ச்சி களைக் கருப் பொருளாகக் கொண்டுள்ளன. அப்பாக்களில், மூன்று, எழுதியோர் பெயர் அறியப்படாதன. ஏனைய பாக்கள், சிலர் பண்டைக்காலத்தைச் சேர்ந்தவராகவும், ஏனை யோர், நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவராகவும், உள்ள 142 புலவர்களால் பாடப்பட்டுள்ளன. அப்பாக்கள், அவை பாடப்பட்டபோது சிறப்புற்றிருந்த அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய, பாராட்டத்தக்க பேரரசர்கள், பெரிய வள்ளல்களின் வரலாறுகளை எழுதத் துணை புரியவல்ல குறிப்புகளை உள்ளடக்கிய எண்ணற்ற உவமைகளைக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிய செய்திகளையும் பெறலாம். இத்தொகையில் உள்ள பாக்கள், 13 அடிகளிலிருந்து 37 அடிகள் வரை என அளவால் வேறுபட்டுள்ளன. முதற்காட்சி யிலேயே கொள்ளும் காதல், அக்காதல் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கூறும் குறிஞ்சி, காதலர்களிடையே பல்வேறு காரணம் குறித்து நிகழும் பிரிவுகளையும், பிரிவு இறுதியில் இருவரும் ஒன்றுபடும் கூட்டத்தையும் கூறும் முல்லை, பாலை, நெய்தல், பரத்தையர் இடையீட்டால் மண வாழ்க்கையில் இடம்பெறும் ஊடல், கூடல்களைக் கூறும் மருதம் ஆகிய அகப்பொருள் குறித்த ஐந்து தலைப்புகளும் இத்தொகை நூலில் விளக்கப்பட்டுள்ளன. இப்பாக்கள், ஒருவகை செயற்கை முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 1 முதல் 399 வரையான பாக்களில் ஒற்றைப்படை எண்ணுள்ள பாக்கள் பாலைத்திணை குறிக்கின்றன. 4 முதல் 394 வரையான பாக்களில் 4 என்ற எண் கொண்டு முடியும் எண்ணுடைய பாக்கள் முல்லைத் திணை குறிக்கின்றன. அதுபோலவே 6 முதல் 396 வரையான பாக்களில் 6 என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட பாக்கள் மருதத்திணை குறிக்கின்றன. 2 முதல் 398 வரையான பாக்களில், 2, 8, என்ற எண்களில் முடியும் பாக்கள் குறிஞ்சித் திணை குறிக்கின்றன. பத்து என்ற எண் கொண்டு முடியும் எண்களைக் கொண்ட பாக்கள் நெய்தல் திணை குறிக்கின்றன. ஆக, இறையனார் அகப்பொருளுக்கு உரைக்கப்பட்ட உரைகளுள் ஏற்புடைய உரை எது என்பதை மதிப்பீடு செய்த அந்த ஊமைப்பிள்ளை, தன் தொகை நூல் பாடல்களை வரிசைப்படுத்தும் போது, ஒரு சீராக எண்ணும் அறிவும் கொண்டிருந்தான் போலும்!

குறுந்தொகையும் நற்றிணையும் :

குறுந்தொகையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் நான்கடி முதல் எட்டடி வரையானவையாகவும், நற்றிணையில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள், ஒன்பது முதல் பன்னிரண்டு அடிவரையானவையாகவும் உள்ளன. என்பது ஒன்றினாலேயே அகநானூற்றிலிருந்து இவை வேறுபடுகின்றன. இம்மூன்று தொகை நூல்களையும், ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட, அவற்றின் பாக்களின் கருப்பொருளில் எதுவும் இல்லை. எல்லாப் பாக்களுமே, களவு, கற்பு, என்ற இரு நிலைக் காதல்களையும் கூறுகின்றன. அரசர்கள், குறுநில மன்னர்களைக் குறிப்பிடுகின்றன. தமிழர் கொள்கைகள், வாழ்க்கை அமைப்புகள் பற்றிய குறிப்புகள் நிறையக் கொண்டிருந் தாலும், ஆரியக் கடவுள்கள் ஆரிய நம்பிக்கைகளை அருகியே குறிப்பிடுகின்றன. ஐந்திணைப் பாடல்களைத் தொகுத்ததில், இவ்விரண்டிலும் எந்தவிதமான வரிசை முறையும் மேற் கொள்ளப்படவில்லை. நற்றிணை, பன்னாடு தந்த மாறன் வழுதி ஆணையாலும், குறுந்தொகை, பூரிக்கோ ஆணை யாலும் தொகுக்கப்பெற்றன. இருவருமே, பெரும்பாலும் ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த அரசர்களாவர்.

புறநானூறு :

புறநானூற்றுப் பாடல்கள் நானூறும், யாருடைய ஆணையின் கீழ், யாரால் தொகுக்கப்பெற்றன என்பது அறியப்படவில்லை. மற்ற தொகை நூல்களோடு பல வழிகளில் வேறுபடுகின்றன. முதலாவது, அவை, அரசர்கள், குறுநில மன்னர்களின் போர்ச் செயல்கள், தங்களைப் பாடிய, புலவர் பாணர் போன்றார்க்கு அவர்கள் வழங்கிய கொடை வளம் ஆகியவற்றைக் கூறுகின்றன. இரண்டா வதாகப் போர்கள் குறித்துக் கூறுவதோடு, போரில் உயிர் நீத்த அரசர்கள் கொடைவள்ளல்கள் மீதான கையறுநிலைப் பாடல்களையும் கொண்டுளது. முதல் பாதிப்பாக்கள், போர்கள் குறித்தும் அடுத்துள்ள பாதியில் பாதிப்பாக்கள், கையறுநிலை குறித்தும் அடுத்துள்ள பாதியில் பாதிப்பாக்கள், கையறுநிலை குறித்தும், கடைசிக் காற்பகுதி, மேற்கூறிய இருபொருள்கள் மீதுமான பிற்காலத்தே கண்டுபிடிக்கப் பட்ட, கலப்படப் பாடல்களின் பின் இணைப்பாம். மூன்றாவதாக, பெரும்பாலான பாக்களின் கீழ், அப்பாக்கள் பாடப்பட்ட சூழ்நிலையை விளக்கும், கொளு எனப்படும் பின்னுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இக்கொளுக்கள், அவை கூறும் கருத்தின் ஒரு பகுதியை அப்பாக்களைப் படித்து அறிந்துகொண்டதன் மூலமும், ஒரு பகுதியை வழிவழியாக வந்த காதுவழிச் செய்திகள் மூலமும் அறிந்து கொண்ட அத்தொகை நூலைத் தொகுத்தவரின் பிற்காலத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டனவாகத் தெரிகிறது. இத்தொகை நூலுக்குத் தெள்ளாறு எறிந்த நந்திவர்ம பல்லவன் (கி.பி. 830-854) காலத்தில் வாழ்ந்திருந்த, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார், பாடிய, கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும், முன்னுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுளது. இக்கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகம சமயக் கொள்கைகள், கி.பி. 6 முதல் 9 வரையான நூற்றாண்டுகளில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்ட பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிவனாகக் கொண்டு சிவன் புகழ் பாடுகிறது. இப்பெருந்தேவனார், சிவன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்து முன்னுரைப் பாடல்களை அகநானூறுக்கும், ஐங்குறுநூறுக்கும், முருகன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலைக் குறுந் தொகைக்கும், விஷ்ணு சகஸ்ராம ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாக விளங்கும் திருமால் வாழ்த்துப் பாடலை நற்றிணைக்கும் கொடுத். திருப்பதால், இப்பெருந்தேவனார், பழங்காலப் பாடல்களைத் தொகுப்பதில் பெரு முயற்சி மேற்கொண்டார் எனத் தெரிகிறது.


பிற்காலப்பாக்களைக் கொண்ட மற்ற நான்கு தொகைகள் :

இந்நான்கு தொகை நூல்கள் அல்லாமல் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிநூற்றி ஐம்பது என்ற வேறு நான்கு தொகை நூல்களும் உள்ளன. இவை முன்னவை போல, வேறு வேறு ஆசிரியர்களால், பாடப்பட்ட வேறு வேறு பொருள் கொண்ட பாக்கள் கலந்து வரத் தொகுக்கப் பெற்றவை அல்ல. முதலாவதான ஐங்குறுநூறு, ஒவ்வொரு திணைக்கும் அத்திணைப் பொருளை விளக்க, ஓர் ஆசிரிய ரால் பாடப்பெற்ற நூறு நூறு பாக்களாக, ஐந்திணைக்குமாக தொகை, ஒவ்வொரு திணைக்கும் முப்பது என ஐந்து திணைக்குமாக, முன்னைய தொகைகளின் பாவகை போல் அல்லாமல், வேறு பாவகையில் யாக்கப்பட்ட, ஆனால் அதே . பயன் குறித்த நூற்றி ஐம்பது பாக்களைக் கொண்டது. பரிபாடல் என்ற பாவகையில், வைகை, திருமால், முருகன் என்ற தலைப்புகளில் பாடப்பெற்ற பாக்களின் தொகுப்பு, பரிபாடல், பதிற்றுப்பத்து, சேர அரசர்களின் புகழ்பாட இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு ஆகும். இத்தொகை நூல்களில், அவ்வப்போது நிகழ்கிற சிறப்பு நிகழ்ச்சிகளைக் கொண்ட பாடல்களே இடம் பெற்றிருக்க, முந்தைய நான்கு தொகை நூல்களில், குறிப்பிட்ட ஒரு கொள்கையை விளக்க ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பாடப்பட்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பதால் பிந்திய தொகை நூல்கள் நான்கும், முந்திய தொகை நூல்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன. இலக்கியத் திறனாய்வு குறித்துத் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் வகுத்த நெறிகளில் பாக்கள் புனையப்பட வேண்டும் என்ற எண்ணம், பிற்காலத்தில் வழக்கில் வந்தது. மேலும், பிற்கூறிய தொகை நூலை உருவாக்கிய பாக்கள், சிவன், விஷ்ணு குறித்த ஆரியக்கோட்பாடுகளும், ஆகம நெறி போதிக்கும் வழிபாட்டு முறைகளும், தமிழ்நாட்டில் கால் கொண்டு விட்ட காலத்தை, வேறு வகையில் கூறுவதானால், சிந்தனையிலும், வழிபாட்டு முறையிலும், தமிழர்கள், ஆரிய மயமாகிவிட்ட காலத்தைச் சேர்ந்தனவாம். இப்பாக்கள் தமிழ்ச் செய்யுள் மரபுகளை, இன்னமும் கொண்டுள்ளன என்றாலும், அவை கூறும் சமயக் கருத்துக்கள், ஆகமகருத்துக்களுக்கேற்ப மாறுதல் பெற்று விட்டன. ஆகவே, முந்தைய தொகை நூல்களை உருவாக்கிய பாக்களில் சில, பிந்திய தொகை நூல்களைச் சேர்ந்த இப்பாக்களும் பழம்பாடல்களே என எண்ணப்பட்ட பிற்காலத்தே, இத்தொகை நூல்களும், எட்டுத்தொகை நூல்கள் என்ற பொதுப் பெயரைப் பெற்றுவிட்டன.

பத்துப்பாட்டு :

பத்து நெடும் பாக்களைக் கொண்ட, பத்துப்பாட்டு எனும் பெயருடைய மற்றொரு தொகை நூலும் உளது. பத்துப் பாட்டு 103 அடிகள் முதல் 782 அடிகள் வரையுள்ள நீண்ட பாக்களைக் கொண்டது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும், கரிகாலனின் தொடக்க நிலை வாழ்க்கையைப் பாடுவதுமாகிய பொருநராற்றுப்படை கி.பி. 400க்குச் சிறிது முற்பட்ட காலத்தில் பாடப்பட்டது. காலத்தால் முற்பட்ட பாட்டிலிருந்து பிற்பட்ட பாட்டு வரையான இப்பத்துப் பாட்டுப்பாக்களில், சமஸ்கிருதச் சொற்களின் படிப்படியான பெருக்கமும், நாட்டின் பெருகும் ஆரியத்தன்மையும், மிகத் தெளிவாகச் சுட்டிக்காணக் கூடியனவாம் ; மேலும், அப்பாக்களில் இடம் பெற்றிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளோடு, அப்பாட்டு ஒவ்வொன்றும் பாடப்பட்ட காலத்தை உணரும் துணைச்சான்றாகவும், அவை கொள்ளத்தக்கனவாம். பத்துப்பாட்டு, முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அந்த நான்கு தொகை நூல்களோடு, பாக்களின் யாப்பு முறையிலும், இலக்கிய மரபுகளிலும் பெரிய அளவில் வேறுபடுவன அல்ல. ஒவ்வொன்றும் கொண்டிருக்கும் நீளத்தால் மட்டுமே வேறுபடுகின்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான காலத்தில், தமிழர்கள் நடத்திய வாழ்க்கை பற்றிய முழு ஓவியத்தை வரைதற்கு அவை, இன்றியமையா மதிப்புடையவாம்.

பதினெண் கீழ்க்கணக்குப் பாக்கள் :

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ற மூன்றாவது வகை நூல்கள் உள்ளன. அவை, பொதுவாக ஒவ்வொன்றும் இரண்டு முதல் நான்குவரை அல்லது ஐந்து வரையான அடிகளைக் கொண்ட பாக்களைப் பெற்றுள்ளன என்பது இப்பாக்களின் சிறப்பு இயல்பாகும். இப்பதினெட்டு நூல்களில், சில நூல்கள் அகப்புறப்பாடல்கள் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்ற இலக்கண விதிகளை விளக்கும் எடுத்துக்காட்டுக்கள் ஆவதற்காகவே பாடப்பட்டுள்ளன. அவை, பழைய மரபுகளைக் கொண்டுள்ளன என்றும் சொல்லலாம். ஏனையவை, சிறப்பாக, அவற்றில் தலையாய தாம் திருக்குறள், பழந்தமிழ் இலக்கியங்களில் அறவே இடம் பெறாத, ஒழுக்க நெறி உணர்த்தும் ஒருவகைப்பாக்களை அறிமுகம் செய்கின்றன. ஆன்மீக நோக்கிலிருந்து சிறந்த ஒழுக்க நிலையைக் கற்பிக்கின்றன, கலையுணர் நோக்கிலிருந்து, அணிநலம் வாய்க்கப்பட்ட, கவர்ச்சி அற்ற வறண்ட அறிவுரை வழங்கும், செய்யுட்குரிய புகழ் ‘வடிவிலிருந்து விடுபடாத பாக்களைக் கொண்ட, சமஸ்கிருத மொழியின் தர்ம, அர்த்த சாத்திரங்கள், பொருள்வளம் நிறைந்த சொற்செறிவுமிக்க மொழிநடைச் சூத்திரங்கள் ஆகியவற்றின் இணைப்பாகும். இப்புதுவகை இலக்கியம், பழைய தொகை நூல்கள், பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கு எழுச்சியூட்டிய பாக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டன. வாம். பதினெண் கீழ்க்கணக்கில், அறிவுரை கூறும் நூல்களின் காலம், ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி, எட்டாம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கிறது. 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவீன காலத்தவர்க்கு மேலே குறிப்பிட்ட அனைத்துப் பாக்களுமே, பழம் பாக்கள் தாம். பழைய என்பதன் பொருள் கூறப்படாதவரை, எல்லாமே பழமையானவைதாம். துரதிருஷ்டவசமாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய இம்மூன்று தொகை நூல்களையும், ஒருசேர ஒரே காலத்தை ஒரே நூற்றாண்டைச் சேர்ந்தனவாக மதிப்பதும், அவற்றிலிருந்து, தமிழ் இலக்கியங்களின் படிப்படியான வளர்ச்சி குறித்த வரலாற்றினை அறிய விரும்பும் ஆராய்ச்சியாளர்களால், ஒப்புக் கொள்ளத்தக்கன அல்ல என மறுத்து ஒதுக்கத்தக்கதான வரலாற்றுக்குப் புறம்பான முடிவுகளைக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது.