இளையர் அறிவியல் களஞ்சியம்/அபிரகம்
அபிரகம் : இது ஒருவகை கனிமம் ஆகும். இதை 'மைக்கா’ என்றும் 'காக்காய்ப் பொன்’ என்றும் அழைப்பார்கள். இது மினுமினுப்பாக இருக்கும். மண்ணுக்கடியிலிருந்து இது தோண்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு அலுமினியம் சிலிகேட் எனப்படும் சேர்மமாகும். உலகில் மைக்கா அதிக அளவில் கிடைக்குமிடங்களில் இந்தியாவும் ஒன்றாகும். பீகார் மாநிலத்தில் ஹசாரிபாக் என்னும் இடத்திலும் ஆந்திராவில் நெல்லூரிலும் அதிக அளவு மைக்கா படிகங்கள் காணப்படுகின்றன. அபிரகம் சிலவகைக் கற்களில் ஒன்றின் மீது ஒன்றாகப் பல அடுக்குகளாய்ப் படிந்திருக்கும். இவற்றை எளிதாகத் தகடுகளாகப் பிரித்தெடுக்க முடியும். நம் தமிழ் நாட்டிலும் இது கிடைக்கிறது.
இதில் பல வகைகள் உண்டு. பல நிறங்களிலும் கிடைக்கின்றன. இதில் வெண்மை, கருமை, மஞ்சள், பச்சை, பழுப்பு என பல வண்ணங்கள் உண்டு, நிறத்திற்கும் தரத்திற்கும் தன்மைக்கேற்ப இவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. ஒருவகை அபிரகம் கண்ணாடி போன்று வெண்மையாக இருக்கும். ஒளியை ஊடுருவவிடும். இதைக் கண்ணாடிக்குப் பதிலாகப் பயன்படுத்துவர். இதை ‘மஸ்கோபைட்டு’ எ ன் று அழைப்பர். மற்றொரு வகை ஒளியைப் புகவிடாது. இது வெப்பிடோமைன் என்று அழைக்கப்படுகிறது. அபிரகம் சிக்கலான வேதியியல் பண்புடைய கனிமமாகும்.
இதை வெப்பம் தாக்குவதில்லை. இதனால் வெப்பம் மிகுதியாக இருக்கக்கூடிய தொழிற் சாலைப் பகுதிகளில் உள்ள கதவுகள், சன்னல்கள் அபிரகம் கொண்டு தயாரிக்கப் படுகின்றன. இது எளிதில் உடைவதில்லை.
அபிரகம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை. எனவே மின்சாதனப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது. ஒளிபுகும் தன்மையும் வெப்பத்தைத் தாங்கும் தன்மையும் உள்ளதால் அடுப்புகளிலும் விளக்குகளிலும் அபிரகம் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரப் பொருள்களில் மினுமினுப்புக்காக மேல் பூச்சாக அபிரகம் பூசப்படுகிறது.
மினுமினுப்பான வர்ணங்கள் செய்யவும் பளப்பளப்பான காகிதங்கள் தயாரிக்கவும் அபிரகம் பயன்படுத்தப்படுகிறது. தாவரங்கள் நன்கு வளரத் தேவையான பொட்டாசியச் சத்து இதில் உள்ளதால் இரசாயன உரத் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.