இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆன்டிமனி

விக்கிமூலம் இலிருந்து

ஆன்டிமனி (Antimony) : இது தமிழில் ‘அஞ்சனக்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இஃது பெருமளவு உலோகப் பண்புகளையும் சிறிதளவு அலோகத் தன்மைகளையும் கொண்டிருப்பதால் இதை 'உலோகப்போலி' என்று கூட அழைப்பதுண்டு. இவ்வுலோகமும் இதன் சல்பைடும் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இயற்கையில் பலவித ஆண்டிமனித் தாதுக்கள் கிடைக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கச் சிறப்புத்தன்மையுடையது ஸ்டிபுனைட்டு (Stibunite) என அழைக்கப்படும் சாம்பல் நிறமுடைய ஆன்டிமனி சல்ஃபைடாகும்.

ஸ்டிபுனைட் பழங்காலத்தில் மருந்தாகவும் புருவங்களை கருப்பாக்கவும் பயன்படுத்தப்பட்டது

ஆன்டிமனி வெள்ளி போன்று பளபளப்புடைய உலோகமாகும். படிக அமைப்புடைய இது கடினத்தன்மை மிக்கதாகும். ஆனால் எளிதில் உடையும் இயல்பு உடையதாகும்.

வெள்ளியம், காரீயம் ஆகியவற்றுடன் ஆன்டிமனியைச் சேர்த்து உலோகக் கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. அச்சு உலோகத் தயாரிப்பில் ஆன்டிமனி மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டிமனி வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துவதில்லை. உலர் காற்றில் இதன் நிறம் மாறாவிடினும் ஈரமான காற்றில் இது மெதுவாக ஆக்சைடாக மாறத் தொடங்குகிறது.

ஆன்டிமனியை காரீயத்துடன் 8 முதல் 12 சதவிகிதம் கலந்தால் காரீயத்தின் கடினத்தன்மை அதிகரிக்கும். அமில அரிப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் மிகும். இக்கலவை ஊர்திகளில் பயன்படுத்தப்படும் மின்கலப் பெட்டிகளின் பகுதிகள் செய்யப் பயன்படுகிறது, உலகில் கிடைக்கும் ஆன்டிமனியில் பாதிக்குமேல் இத்தகைய காரியங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. மின்கலப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் ஆன்டிமனியை மீண்டும் மீண்டும் உருக்கிப் பயன்படுத்தலாம்.

காரீயத்துடன் 11, 25% ஆன்டிமனியும் 9. 137%வெள்ளீயமும் கலந்து உருவாக்கப்படும் அச்சு எழுத்துக்கள் உறுதியாக இருக்கும். இக்கலவை உருகிய நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாறும்போது சிறிது விரிவடையும். அப்போது உருக்குக் குழியிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் அடைத்துக் கொள்ளும். குளிர்ந்தபின் அச்செழுத்துக்கள் ஒழுங்கமைதியோடு கூடிய அழகிய வடிவைப் பெறும். எனவே, நேர்த்தியான உறுதியான அச்சு எழுத்து வார்ப்புக்கு ஆன்டிமனி விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டிமனி கலக்கும்போது உறுதித்தன்மை மிகுவதால் ஊர்திகளிலும் நீர் இறைக்கும் பம்புகளிலும் உராய்வுக் குறைப்புக்கான உருளைகள் ஆன்டிமனி, செம்பு, வெள்ளியம் கலந்த கலவைகளால் உருவாக்கப்படுகின்றன.

விலை குறைந்த ஆடம்பர அணிகலன்கள் ஆன்டிமனியும் வெள்ளியமும் கலந்த வெண் உலோகத்தால் (White metal) செய்யப்படுகிறது.