உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆரியபட்டா

விக்கிமூலம் இலிருந்து

ஆரியபட்டா : இவர் உலகப்புகழ் பெற்ற இந்திய வானியல், கணிதவியல் மேதையாவார். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ‘ஆரிய பாட்டீயம்’ எனும் அரிய நூலை எழுதியுள்ளார். இந்நூல் கணிதவியலின் பல்வேறு கூறுகளையும் வானியல் பற்றிய அரிய செய்திகளையும் தொகுத்து வழங்குகிறது. கவிதை வடிவில் அமைந்துள்ள இந்நூல் ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியர்களின் கணித வானியல் கண்டுபிடிப்புகளை உலகத்துக்குப் பறை சாற்றி, இத்துறை சார்ந்த உலக மேதைகளை வியக்க வைத்துள்ளது. இந்நூல் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நிகழும் நில உலகச் சுழற்சி பற்றியும் சூரியகிரகணம், சந்திர கிரகணம் பற்றியும் மற்றும் இயல்பு எண்கள் (Natural Numbers) பற்றியும் அவைகளின் இருமடிகள் (Squares) பற்றியும் அவைகளின் இருமடிகள் (Squares) மும்மடிகள் (Cubs) கூடுதல் ஆகியன பற்றியும் அவற்றைக் கணிக்கச் சரியான பொது முறைகளை வகுத்து உலகுக்கு வழங்கிய பெருமை இவரையே சாரும்,

இவரைப்போன்ற மற்றொரு கணித வானியல் மேதை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். அவர் பெயரும் ஆரியப்பட்டா என்பதேயாகும். எனவே, இவர்களைப் பிரித்தறிய முன்னவர் ஆரியபட்டா I என்றும் பின்னவர் ஆரியபட்டா II என்றும் குறிக்கப்படுகின்றனர்.

ஆரியபட்டா 1 கி.பி. 9ஆம் ஆண்டில் வானியல் நுட்பங்களை விளக்கும் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார். பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் அரிய படைப்பாகக் கருதப்படுகிறது.

ஆரியபட்டா II எழுதிய கணிதவியல் நூலான 'மகாசித்தாந்தா’ அரிய கணிதவியல் ஆய்வு நூலாகப் போற்றப்படுகிறது. இதில் உள்ளபடி கணிதா, குட்டகணிதா, பீஜ கணிதா ஆகிய முப்பெரும் பிரிவுகளில் பணிதத்துறையின் பல்வேறு கூறுகள் ஆராயப்படுகின்றது.