இளையர் அறிவியல் களஞ்சியம்/ஈரல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈரல் : நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல், மண்ணிரல், நுரையீரல் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக அமைந்திருப்பினும் கல்லீரலைக் குறிப்பாக உணர்த்தும் சொல்லாகவே இருந்து வருகிறது.

கருஞ்சிவப்பு நிறமுடைய கல்லீரல் வயிற்றின் வலப்புறமாக நடுச் ஜவ்வின் அடியில் அமைந்துள்ளது. அதன் கீழே சிறுகுடலும் வலப்பக்கம் சிறுநீரகமும் உள்ளன. மண்ணீரல் வயிற்றின் இடதுபுறமாக அமைந்துள்ளது. நுரையீரல் இதயத்தின் வலதுபக்கம் பெரும்பான்மையும் இடப்பக்கம் சிறுபான்மையுமாக அமைந்துள்ளது.

கல்லீரலின் எடை 1.5 கி. கிராம். உடல் உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்; அதிக எடை உள்ளதும் இதுதான்.

கல்லீரலை குறுக்காக பிளந்து பார்த்தால் அதனுள் கொசுவலை போல ஏராளமான சிறு சிறு குழிகள் இருக்கும். அதில் பல்லாயிரக் கணக்கான சுரப்பிச் செல்கள் இருக்கும். இச் செல்களுக்கு இடையே 'பித்தநீர் வடிகால்’ எனப்படும் சிறிய துவாரங்கள் இருக்கும். இவற்றில்தான் கல்லீரலின் செல்கள் ஒருவகை திரவத்தைச் சுரக்கின்றன. அதற்கு 'பித்த நீர்’ (Bile) என்று பெயர். இந்த பித்தநீர் பித்த நாளங்கள் வழியாகக் சென்று கல்லீரல் நாளமாக மாறி கல்லீரலை விட்டு வெளியேறி பித்தப் பையில் சேரும்.

ஒரு நாளில் 700மி.லி.லிருந்து 1,200 மி.லி. பித்தநீர் கல்லீரலில் சுரக்கிறது. இவற்றின்

கல்லீரல் உறுப்புகள்

பணி-உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களைக் கூழாக்குவது; கொழுப்பு அமிலங்களை எளிதில் கரைப்பது; கொழுப்புச் சத்துக்களை சீரணிக்க உதவுவது; குடல் இயக்கங்களை விரைவுபடுத்துவது.

கல்லீரல் நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச் சத்தை கிளைக்கோஜனாக மாற்றி சேமித்து வைக்கிறது. நாம் சில நாட்கள் வரை சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அப்போது இந்த சேமிப்பு கிளைக்கோஜன் தான் உடல் சக்திக்கு உதவுகிறது.

இரத்தத்தில் காணப்படும் நச்சுப் பொருட்களை அகற்றுவது கல்லீரல்தான். இரத்தத்தைச் சேமித்து விபத்து நேரங்களில் இழந்த இரத்தத்தை ஈடுசெய்ய இரத்த ஓட்டத்திற்கு உதவுவதும் கல்லீரல்தான்.