இளையர் அறிவியல் களஞ்சியம்/ஐசக் நியூட்டன்
ஐசக் நியூட்டன் : அறிவியல் உலகின் தனித் தாரகையாக ஒளிவீசுபவர் ஐசக் நியூட்டன் ஆவார். மாபெரும் கணித மேதையாகவும் வானவியல் அறிஞராகவும் திகழ்ந்தவர்.
மாபெரும் வானவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்த கலிலீயோ இறந்த 1642ஆம் ஆண்டிலேயே ஐசக் நியூட்டன் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ஊல்ஸ்திரோப் எனுமிடத்தில் பிறந்தார். இவர் பிறக்குமுன் இவர் தந்தை இறந்துவிட்டார்.இளமையில் மந்தமாக இருந்த இவரை இவர் தாயார் பள்ளிப்படிப்பை நிறுத்தி பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். அதில் இவருக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. இவர் நாட்டமெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்தது. இதையறிந்த இவர் தாயார் இவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார். இங்கு இவர் அறிவியல் நுட்பங்களையும் கணக்கியலையும் வெகு விரைவாகக் கற்றறிந்தார். இருபத்தியொரு வயதாகும்போது இவர் யார் துணையுமின்றி தானாக ஆராய்ச்சியில் ஈடுபடலானார். அன்று கண்டறியப்பட்டிருந்த தொலைநோக்காடி வானவியல் ஆராய்ச்சியில் பேரார்வத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐசக் நியூட்டனும் அதில் பேரார்வம் கொண்டிருந்தார். தொடர் ஆய்வை மேற்கொண்டார்.
இன்றைய வானவியல் ஆய்வின் அடிப்படையாக அமைந்துள்ள ஈர்ப்பியல் தத்துவத்தை முதன்முதலில் கண்டறிந்து கூறியவர் ஐசக் நியூட்டன் ஆவார்.
ஒரு சமயம் இவர் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டார். ஆப்பிள் பழம் ஏன் மேலேயிருந்து கீழ் நோக்கி விழவேண்டும், இதற்குக் காரணம் என்ன? எனச் சிந்திக்கத் தொடங்கினார். அவ்வாராய்ச்சியின் விளைவாக அவர் கண்டுபிடித்த உண்மையே 'புவியீர்ப்பு விசை' அதன் பின்னர் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து பூமி மட்டுமல்ல, வானிலுள்ள கிரகங்கள். நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் ஈர்ப்பாற்றலோடு இருப்பதைக் கண்டறிந்தார். சூரிய இயக்க முறைகளையும் அதன் ஈர்ப்பாற்றலையும் கண்டறிந்தார். அதன் விளைவாக அவர் உருவாக்கிய அறிவியல் தத்துவங்களே இயக்கவியல் நிலையியல் கோட்பாடுகள். இவையே 'நியூட்டன் இயக்கவிதிகள்’ என அழைக்கப்படுகிறது.
வானவியலுக்கு அடிப்படையான கணித வியலிலும் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஐசக் நியூட்டன். இவர் ஒளியைப் பற்றியும் நிறங்
களைப் பற்றியும் பல அரிய உண்மைகளை ஆராய்ந்து கண்டறிந்தார். நாம் சாதாரணமாகக் காணும் வெண்மை நிறத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, கருமை, நீலம் ஆகிய ஏழு வண்ணங்கள் கலந்த கலவையே என்பதைக் கண்டறிந்து உலகுக்குக் கூறினார்.
அவர் காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்த தொலை நோக்காடியை மேலும் முனைப்பாக ஆய்ந்து 'பிரதிபலிப்புத் தொலை நோக்காடியைக் கண்டுபிடித்தார். இதுவே வானவியல் ஆய்வு வளர்ச்சிக்கு மாபெரும் உந்து சக்தியாக அமைந்தது.
இவரது அரிய கண்டுபிடிப்புகளைப் பாராட்டிய ஆங்கில அரசு 1705ஆம் ஆண்டில், இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. இவரது ஆய்வும் கண்டுபிடிப்புமே இன்றைய வானவியல் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவதாயிற்று.