இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒலி

விக்கிமூலம் இலிருந்து

ஒலி : ஒருபொருள் அதிரும்போது ஒலி அலைகளாகக் காற்றில் பரவிச் செல்கிறது. அது நம் காதை எட்டும்போது ஒலி கேட்கிறது. இவ்வொலி பரவும் அலைகள் ஒலி அலைகள் எனப்படும். அமைதியாக இருக்கும் நீரின் மேல் ஒரு சிறு கல்லைப்போட்டால் நீர் அதிர்ந்து வட்ட வட்ட அலைகளாகக் கரையை மோதுவதைப் பார்த்திருக்கலாம். இதே முறையில்தான் அதிர்வு ஒலியும் காற்றில் அலைகளாகப் பரவி கேட்கும் புலனை அடைகிறது.

காற்றில் ஒலி அலைகள் பரவிச் செல்வது போலவே நீரிலும் ஒலி அலைகள் பரவிச் செல்லும். காற்றைவிட நீரில் ஒலி அலைகள் விரைந்து பரவிச் செல்லும்.காற்றில் வினாடிக்கு 330 மீட்டர் செல்லும் ஒலி, நீரில் 1450 மீட்டர் செல்லும். கண்ணாடி, எஃகு போன்ற திடப் பொருள்களின் வழியே செல்லும் ஒலி வேகம் இன்னும் அதிகமாகும்.

அதிர்வுக்கேற்ப ஒலி அமையும். வினாடிக்கு 20-க்கும் குறைவாக அதிர்வு அமைந்தால் அந்த ஒலியை நாம் கேட்கவே முடியாது. அதேபோன்று20,000-க்கு மேற்பட்ட அதிர்வுகளையும் நம்மால் கேட்க முடியாது.

ஒளி அலைகள் பரவ ஊடகப் பகுதி தேவை. சாதாரணமாகக் காற்று, வாயு, திரவம், திடப் பொருள்களில் ஒலி பரவும். வெற்றிடத்தில் ஒலி பரவாது.

ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றலாம். இம் மின்சக்தியைக் கம்பி வழியே வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லவும் மீண்டும் அதனை ஒலி அலைகளாக மாற்றவும் இயலும். இம்முறையில்தான் தொலைபேசியில் பேச இயலுகிறது. வானொலிப் பெட்டி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதும் ஒலித்தட்டு மற்றும் ஒளி நாடாவில் ஒலியைப் பதிவு செய்து பயன்படுத்துவதும் இம்முறையில்தான்.