இளையர் அறிவியல் களஞ்சியம்/குளோரஃபில்
குளோரஃபில் : தமிழில் இது 'பச்சையம்’ (Chlorophyl) என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரங்களின் இலைகள் பச்சை நிறமாக இருப்பது இயல்பாகும். இத் தாவரப்பச்சை உலக வாழ்வுக்கு மிக இன்றியமையாத அவசிய அம்சமாக அமைந்துள்ளது. எவ்வாறெனில், பச்சையமாகிய இந்த பச்சை வண்ணத்தைக் கொண்டுதான் தாவரங்கள் மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் போதிய சத்துப் பொருட்களையும் வேண்டிய அளவு தயாரித்துக்கொள்கின்றன. இத் தாவரங்களை உண்ணும் பிற உயிர்களுக்கும் இச்சத்துப் பொருட்களை வழங்கி அவற்றின் உயிர் வாழ்வை வளமாக்குகின்றன. இவ்வாறு தாவரங்கள் பச்சையம் மூலம் சத்துப் பொருட்களை உருவாக்கவில்லை யென்றால் இவ்வுலகில் உயிரினங்களே வாழமுடியாமல் போய்விடும். நுணுகி ஆராய்வோமானால் அனைத்து உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கும் அடித்தளமாக அமைவது பச்சையம் தயாரிக்கும் உணவே என்பது புலனாகும்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரப் பொருட்கள் உணவாவதன் மூலம் இவை அடிப்படை ஆதாரமாய் அமைகின்றன. தாவரத்தின் இலைகள், தண்டு, பூக்களில் உள்ள சிறுசிறு செல்களாகிய நுண்ணறைகளில் இப்பச்சையம் அடங்கியுள்ளது. இப்பச்சையத்தின் துணை கொண்டு தாவரத்தின் திசுக்கள் சூரிய ஒளியிலிருந்து உயிர்ச்சத்தை உறிஞ்சிப் பெறுகின்றன. இதுவே 'ஒளிச்சேர்க்கை’ என வழங்கப்படுகிறது.
சிலவகைத் தாவரங்களுக்குப் பச்சையம் இருப்பதில்லை. காளான் வகைகளுக்குப் பச்சையம் என்பது இல்லை. இவை வேறு வகையில் தங்களுக்கு வேண்டிய சத்துப் பொருளைத் தயாரித்துக் கொள்கின்றன. மற்றத் தாவரங்களிலிருந்தோ அல்லது பிராணிகளிடமிருந்தோ தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களைப் பெற்றால், அத்தாவரங்கள் 'ஒட்டுயிர்கள்’ (Parasites) என அழைக்கப்படும். கெட்டுப்போன தாவரங்கள், பிராணிகளிடமிருந்து சத்துப் பொருளைப் பெறும் தாவரங்கள் மட்குண்ணி அல்லது சாருண்ணி (Sapropeytes) என அழைக்கப்படும்.