இளையர் அறிவியல் களஞ்சியம்/நோயியல்

விக்கிமூலம் இலிருந்து

நோயியல் : உடல் நோய்களால் பாதிக்கப்படும்போது நோய்க்கான காரணங்களையும் நோயைப் போக்கும் வழிமுறைகளையும் நோயேதும் வராமல் காப்பதற்கான தொடர் முயற்சிகளையும் பற்றிய மருத்துவ ஆய்வே 'நோயியில்' (Pathology) ஆகும்.

நோயியலின் முதற்படி உடலில் ஏற்பட்டுள்ள நோய் என்ன என்பதையும் அதன் தன்மைகளையும் நுணுகி அறிந்துணர்வதாகும். இதனை அறிய நோய் அறிகுறிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து நோய்க் குறிகளையும் நன்கு அறிந்துள்ள மருத்துவரால் மட்டுமே எந்தவொரு நோயையும் இனங்கண்டு தெளிய முடியும்.

நோய் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் உடல் அமைப்பையும் அஃது இயங்கும் முறைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் நோய்கள் நம் உடம்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்க முடியும் என்பதையும் அதன் இயல்புகளையும் நுணுக்கமாக அறிந்திருக்க வேண்டும். இம் மூன்றையும் உணர்த்துவதே 'நோயியல்’ துறை.

நோயியல் என்பது மனிதன் நோய்வாய்ப்பட்டு அதனின்றும் விடுபடத் தொடங்கிய காலம் முதலே இருந்துவரும் துறையாகும்.

நோயியலை ஒரு முழுத் துறையாக வகுத்தமைத்த பெருமை ஹிப்பாக்-கிரட்டீஸ் எனும் கிரேக்க மருத்துவரையும் இந்தியாவில்வாழ்ந்த சுருதர் எனும் மருத்துவரையுமே சாரும். அதன் பின் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக நோயியல் துறையும் விரைந்து வளரலாயிற்று. இயற்பியல் வளர்ச்சியும் வேதியியல் வளர்ச்சியும் நோயியலின் வளர்ச்சியை மிகவும் விரைவுபடுத்தி வியக்கத்தக்க முறையில் வளரச் செய்துள்ளன.