இளையர் அறிவியல் களஞ்சியம்/வெறிமயக்க மருந்து
வெறிமயக்க மருந்து : சிலவகை நோய்களுக்கு மயக்கமூட்டும் மருந்துகளைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வதுண்டு. அவை மயக்கம், போதை தரும் மருந்துகளாகும். அவை அபினியிலிருந்து செய்யப்படுவதுண்டு. மார்பீன், ஹெரோய்ன், கொக்கேன், எல்.எஸ்.டி. மாத்திரை போன்றவை இவ்வகையான மருந்துகளாகும். இவற்றை மருந்தாக மட்டுமே பயன்படுத்தாது அவைதரும் போதை மயக்கத்திற்காகவே, அவைகளை அடிக்கடி உண்ணும் பழக்கத்தைச் சிலர் மேற்கொள்வதும் உண்டு. இவை ஒருவித வெறித்தனமான மயக்கத்தைத் தருவதால் இவை 'வெறி மயக்க மருந்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இம்மருந்துகளைத் தொடர்ந்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் இவற்றிற்கு அடிமையாகிப் போக நேரிடும். இவ்வெறி மயக்க மருந்துகளை உட்கொள்ளாதிருக்க முடியாத மனநிலை நாளடைவில் ஏற்பட்டு விடும். நோயைத் தீர்க்க வேண்டிய இவ்வெறி மயக்க மருந்துகள் பல்வேறு விதமான உடற்கோளாறுகளைத் தோற்றுவிப்பதோடு வெறித்தனமான செயல்பாடுகளால் ஒழுக்கச் சிதைவும் ஏற்பட ஏதுவாகிறது. மயக்க உணர்வு மட்டுமல்லாது அறிவும் மழுங்கி விடுகிறது. இதனால் சமூகத்திற்குத் தேவையற்ற, தீங்கிழைக்கும் மனிதராகவும் விரைவில் மாற நேர்கின்றது.
ஒரிருமுறை உண்டு பழகினால், அப்பழக்கத்துக்கு நம்மை அடிமை ஆக்கும் வல்லமை படைத்த வேறு சில போதை மருந்துகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை சல்பனால் மருந்து, கஞ்சா, ஈதர், குளோரால் குளோரோபாரம், பிரவுன் சுகர் மற்றும் பாரால்டிஹைடு முதலிய வெறி மயக்க மருந்துகளாகும்.
இவ்வெறி மயக்க மருந்துகளைத் தொடர்ந்து வழக்கமாக உட்கொள்வோரை இரு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினர். நோய் போக்குவதற்காக உட்கொண்டு அதன் மூலம் அம்மருந்துகளுக்கு அடிமையாகிப் போனவர்கள். மற்றொரு வகையினர் ஏதோ ஒருவிதமான வெறி மயக்க இன்பத்துக்காக வென்றே இம்மருந்துப் பழக்கத்தை மேற்கொண்டு அடிமையானவர்கள். இதற்காக இவர்கள் தங்களுக்குத் தாங்களே ஊசி மூலம் வெறிமயக்க மருந்துகளை உடலுள் செலுத்திக் கொள்வதும் உண்டு.
பொதுவாக அறுவை மருத்துவத்தின் போது வலி தெரியாமலிருக்க ஹெரோய்ன் அல்லது மார்பீன் போன்ற மருந்துகளைத் தருவர். ஆனால், அறுவை மருத்துவம் முடிந்த பின்னும் இப்பழக்கம் தொடரவிடுவதும் உண்டு. சாதாரணமாக எந்த வெறிமயக்க மருந்தையும் தொடர்ந்து நான்கு வார காலம் பயன்படுத்தினால் அம்மருந்துக்கு அடிமையாகிவிடும் நிலமை ஏற்பட்டு விடுமெனக் கூறப்படுகிறது.
இவ்வெறி மயக்க மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டால் மருத்துவ அடிப்படையில் பார்க்கும்போது உடல்நலம் முழுமையாகக் கெடும். நாவு தடித்து கரடு முரடாகிவிடுவதால் பேச்சில் குழைவு உண்டாகும். நாளடைவில் தோல் தன் இயல்பான நிறத்தை இழந்துவிடும். தோலில் ஒருவித நமைச்சல் உண்டாகும்.
வெறிமயக்க மருந்துக்கு அடிமையாகிப் போனவர் திடுமென மருந்தை நிறுத்தினால் வேறுசில கோளாறுகள் ஏற்படும், வாந்தி பேதி ஏற்படும். கைகால்களில் நடுக்கம் தோன்றும். சிலருக்குக் கடுமையான உடல் உபாதை உண்டாகும். இதனால் இறப்பும் ஏற்பட நேர்வதுமுண்டு.
இத்தகையவர்கள் மனவுறுதி குலைந்தவர்களாகக் காணப்படுவர். ஒழுக்கச் சிதையைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். பொறுப்புணர்ச்சி குறைந்தவர்களாக ஆகிவிடுவர். நாண உணர்ச்சிகூட அவர்களிடமிருந்து போய்விடும்.
மருத்துவ நோக்கத்திற்காக இவ்வெறி மயக்க மருந்துகளை உட்கொள்வோர் அந்நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். நோய் தீர்ப்பதன்றி வேறு நோக்கம் இருத்தல் கூடாது. ஒரு சில வாரங்கள் தொடர்ந்து உட்கொள்ள நேரின் நோய் தீர்ந்த பின் நிறுத்திவிட வேண்டும். பல மாதங்கள் தொடர்ந்து உட்கொள்ள நேர்ந்தால் சிறிது சிறிதாக நிறுத்த வேண்டும்.
இவ்வெறி மயக்க மருந்துகளுக்கு அடிமையானவர்கள் இப்பழக்கத்திலிருந்து மீள அதற்கென தனிவகைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மனோதத்துவ மருத்துவமும் செய்து கொள்ள வேண்டும். மனவுறுதியே இதற்குப் பெருந்துணையாய் அமைய முடியும். இப்பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற உச்ச நிலையை ஒருவர் அடைந்து விட்டால், அவர் இவ்வெறிமயக்க மருந்தை குறைந்த அளவில் உட்கொண்டு, அதன் மூலம் தன் துன்பத்தையும் குறைத்துக் கொள்ளலாம்,