இளையர் அறிவியல் களஞ்சியம்/வெற்றிடக் குடுவை
வெற்றிடக் குடுவை : இது 'வாக்குவம் ஃபிளாஸ்க்' (Vaccum Flask) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
நாம் எங்காவது வெளியே செல்லும்போது வெப்பம் அல்லது குளிர்ச்சி குறையாமல் பொருளை வைத்த நிலையிலேயே நீண்ட நேரம் இருக்குமாறு வைக்கப் பயன்படும் குப்பியே வெற்றிடக் குடுவையாகும்.
சாதாரணமாக வெப்பமானது வெப்ப இயக்கம், வெப்பக்கடத்தல், வெப்பக் கதிர்வீச்சு என்ற மூன்று முறைகளில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்தை அடைகிறது. வெப்பத்தைக் கடத்தாமல், வெப்பக் கதிர்வீச்சு மற்றும் வெப்பச்சலனத்தின் மூலம் வெளியேறாமல் குடுவையின் வெளிப்புறத்தில் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. பொருள் வைக்கப்பட்டிருக்கும் குடுவை போன்றே சற்றுப் பெரிதானவேறொரு குடுவை வெளிப்புறத்தில் இருக்கும்,
இரண்டும் இணைந்திருக்கும் போது உண்டாகும் இடை வெளியிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு வெற்றிடம் உண்டாக்கப்படுகிறது. பின் இதன் கீழ் மேல் விளிம்புகளை இளக்கி ஒன்றாக இணைப்பர்.இவ்வெற்றிடத்தால் வெப்பச் சலனம் ஏற்பட இயலாமல் போகிறது. காற்று இல்லாத காலியிடமான வெற்றிடத்தின் இயல்பு அது.
கண்ணாடிக் குடுவையின் வெளிப்புறம் பளப்பளப்பான பூச்சுடன் இருக்கும். இஃது வெற்றிடக் குடுவை வெப்பக்கதிர் வீச்சைத் தடுக்கிறது. இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையின் கீழாக அமைக்கப்படும் தக்கைத் தாங்கியும் கண்ணாடியும் வெப்பக் கடத்தலைத் தடுக்கிறது. இதனால் குடுவையுள் இறுக மூடி வைக்கப்படும் பொருள் தன் வெப்பத்தை இழக்காமல் இருக்க முடிகிறது. கண்ணாடிக் குடுவையின் அடிப்பகுதியில் சிறிய வளைவு ஒன்று இருக்கும். இஃது குடுவைக்கு ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் தன்மையுடையதாகும்.
வெற்றிடக் குடுவையில் சூடான பொருட்களோ அல்லது ஐஸ் போன்ற குளுமையான பொருட்களோ வைக்கப்பட்டால் அவை வைத்த நிலையிலேயே நீண்ட நேரம் இருக்கும்.
வெற்றிடக் குடுவையை முதன்முதலில் கண்டறிந்தவர் சர் ஜேம்ஸ் டியூவர் என்பவராவார். இவர் இதை 1885ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.