உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/இனிய மனிதர்

விக்கிமூலம் இலிருந்து

இனிய மனிதர்


காஞ்சி மணிமொழியாருக்கு 60 வயதாகிவிட்டது என்று நண்பர்கள் கூறியபோது இவ்வளவு வயதாகி விட்டதா என்று மலைத்துப்போய் விடுவோம். காரணம் அத்தகைய இளமைத் தோற்றத்துடன் இருப்பவர்.

இதுவரை நாட்டுக்கு அவர் எந்தவிதமான தொண்டாற்றினாரோ அதே தொண்டைத் தொடர்ந்து ஆற்றி எந்தவிதமான இலட்சிய நாட்டைக் காணவேண்டும் என்று கனவு கண்டாரோ--அதைக் காணும்வரை இடைவிடாது பாடுபட வேண்டும் என்று அவரை வேண்டுவதுதான் நாம் அவருக்கு தெரிவிக்கும் பாராட்டு! அதைத்தான் அவர் எதிர்ப்பார்ப்பார்.

இத்தனை வயதாகிவிட்ட பிறகு நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது எதுவும் இருக்காது. ஏனெனில் இளமையிலேயே அவர் எதிர்பார்க்கவில்லை. கழகம் எந்தவிதமான கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றியவர் மணிமொழியார். தடியடி படுவதுதான் தமிழ் கரக்கும் முறை என்றால்-தடியடி படத் தயாரானார்! சிறை செல்வது தான் செந்தமிழ் காக்கும் வழி என்றால் சிறை செல்லத் தயாரானார்! காடு மேடு சுற்றிப் பிரச்சாரம் செய்வதுதான் தமிழின் பெருமையை உணரச் செய்யும் வழி என்றால் அப்படிக் கடுமையான பிரச்சாரத்தைச் செய்யத் தயாரானார். ஏடுகளை வெளியிடுவது தான் இன்தமிழை வளர்க்கும் பணி என்றால்--அவர் ஏடுகளை நடத்தியிருக்கிறார்; இதழ்களை வெளியிட்டியிருக்கிறார், மாநாடுகளைக் கூட்டியிருக்கிறார்-தமிழ் ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார்.

இப்படிப்பட்டவர்களால் தான் மிகச் சாதாரணமானவர்களால் துவக்கப்பட்ட தி. மு. கழகம் அரசாளும் பொறுப்பேற்றிருக்கிறது.

முஸ்லிம் பெருங் கவிஞர் இக்பால் ஒரு கவிதை மூலம் கூறினார்.

சிட்டுக் குருவிகள் வல்லூறைப் போல் கொத்தும் திறனற்றவை. கூர்மையான நகமற்றவை; வல்லூறை விட பலத்தில் குறைந்தது.

ஆனால் ஒருகாலம் வரும்; சிட்டுக்குருவிகள் வல்லூறை வெல்லும் காலம் வரும்! பாமர மக்கள் பாராளும் காலம் வரும்!

--என 25 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பாடினார்.

சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றதுபோல் பாமரர்கள் இப்போது பாராள்கிறார்கள்.

சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றது மட்டுமல்ல. சிட்டுக்குருவிகளின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று வல்லூறுகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன இப்போது!

இந்தச் சிட்டுக் குருவிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் ஆற்றலே கூட வல்லூறுக்கு இல்லாத போது--அதைக் கவிழ்ப்பது எப்படி?

கவிழ்ப்பேன் எனப் பேசுவது ஆசையின் விளைவே தவிர ஆகக் கூடிய காரியமல்ல! நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் நாம் சிட்டுக் குருவிகள் தான் என்பதை மறக்கவில்லை! அதை மறந்தால்--நாங்கள் கவிழ்ந்தோம்! அதை மறக்காதவரை நாங்கள் கவிழ மாட்டோம்.

மந்திரிப் பதவியில் நாங்கள் இருப்பதால் ஏதோ மகிழ்ச்சியோடிருக்கிறோம் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்க வேண்டாம்!

தேர்தலுக்கு முன்பேகூட நான் கூறியிருந்தேன். "நாங்கள் ஆட்சிப்பீடம் ஏறவேண்டும் என்பதில் எங்களுக்கு அவசரமில்லை, மக்கள் ஆணையிட்டால் வருகிறோம்; பொறுத்திரு, இன்னும் ஐந்தாண்டு காலம் என்றாலும் பொறுத்திருக்கத்தயார்" என்றுதான் கூறினேன்.

ஆனால் நாட்டு மக்களுக்குத்தான் அவசரம்! ஆகாத ஆட்சியை எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொள்வது? இருளில் எத்தனை நாள் தவிப்பது? உதயசூரியன் ஒளி என்று கிடைக்கும்?--என்று ஏங்கிய மக்கள்தான் எங்களுக்கு ஆணையிட்டார்கள்; ஆளுகிறோம்!

முன்பு (1938-ல்) நடந்த இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களைப் பற்றிச் சொன்னால் உங்களுக்கே கூச்சமாக இருக்கும்.

சென்னை நகரின் மத்தியப் பகுதியில் மயிலை சிவமுத்து என்ற ஒரு பெரியவர்--அவரது தமக்கையார்--அவருக்குத் துணையாக டாக்டர் தருமாம்பாள் ஆகியோர்--இன்னும் சிலர்!

இப்படிப் பல் போன பெரியவர்கள் பத்துப்பேர். மீசை முளைக்காத எங்களைப்போன்றவர்கள் ஐந்து பேர். மீசை முளைத்த வாலிபப் பருவமுடைய மணிமொழியார் போன்றவர்கள் ஐந்து பேர், ஆக 20 பேருடன் மெல்லிய குரலில் "இந்தி ஒழிக! இந்தி ஒழிக!" என்று ஒலியெழுப்பிச் செல்வோம்.

எங்கள் ஊர்வல ஒலியைக் கேட்டு, வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வந்து பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் கொடுக்கும் குரல் வீட்டைக் கடந்து, வீட்டுக்கூடத்திற்குக் கூடச் செல்லாது!

அப்படி எங்களுக்குள் பேசிக்கொள்வதுபோல் இந்தி வேண்டாம் என்று குரல் கொடுப்போம்!

இந்தி ஒழிக, என்று உரத்த குரலில் கூறினால் ஆயிரம் பேர் சேர்ந்து கொண்டு ஏன் இந்தி ஒழிய வேண்டும் என்று மிரட்டினாலும் மிரட்டுவார்கள்.

ஆனால் இன்றுள்ள நிலைமை வேறு; இந்தி வாழ்க--என்று கூறுவதற்கு இந்திக்காரரே கூச்சப்படுகிறார்.