உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/பிறந்த பொன்னாட்டை மறக்கக் கூடாது

விக்கிமூலம் இலிருந்து

பிறந்த பொன்னாட்டை
மறக்கக் கூடாது


வரும் தான் பிறந்த மண்ணை மறப்பது கூடாது. வெங்கட்ராமனும் மறக்கமாட்டார் என்றே நம்புகிறேன். இந்த மண்ணோடுள்ள உறவு தான் நின்று நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கும். தமிழ் நாட்டின் தேவைகளையும், அவசியங்களையும் உணர்ந்துள்ள அவர் இதுகாறும் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்து தமிழகத்துக்கு நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த நாம் கொடுத்துப் புகழெய்தியவர்கள்; வாங்கிப் பழகியவர்கள் அல்ல. நாம் கேட்பது பொருளாதார நியாயமே--அரசியல் நியாயம் கோரவில்லை.

இயற்கைக் கனிப் பொருள்கள் கிடைக்குமிடத்தில் தொழிகள் துவக்கப்பட வேண்டுமென்ற கோட்பாடே கல்லூரிப் பொருளாதார வகுப்பில் படித்திடும் ஆரம்பப்பாடம். இந்த வகையில் தான் சேலம் உருக்காலை திட்டத்தை வலியுறுத்துகிறோம்.

ஒருவர் புகழெய்திவிடுகிறார் என்பதால் இந்த ஆரம்பப் பொருளாதாரப் பாடத்தை மறந்துவிட இயலுமா?

இதே வகையில் தான் தூத்துக்குடி ஆழ்க்கடல் துறை முகத்திட்டம் பற்றியும் வலியுறுத்துகிறோம்.

நாட்டின் வரலாற்றில் பரபரப்பானதொரு காலம் இது. இந்தியாவின் கூட்டமைப்பு அரசியல், பல்வேறுபட்ட கட்சிகளில் ஆட்சிகள் ஆங்காங்கு அமைந்துள்ளதால்--இயங்க முனைந்துள்ள காலம் இது. இத்தகைய நேரத்திலே வெங்கட்ராமன் டில்லி செல்கிறார்.

பல்வேறு கட்சிகளிடையேயும் ஒன்றுபட்ட உணர்வையும், தோழமையையும் உருவாக்குவதில் அவர் பணி அவசியப்படும். இத்தகையதொரு தோழமை உணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது. இன்றைய விழாவே அதற்கொரு சான்று.

ஒரு கட்சியை மற்ற கட்சி தாழ்வாய்ப் பேசுவது ஜனநாயகம் அல்ல. இத்தனை நாள் ஆட்சி செலுத்தினீர்கள்; இதுவரை போதும்; எங்களிடம் ஆட்சியை விடுங்கள். இன்னும் வேகமாகக் காரியங்களை நிறைவேற்றுகிறோம் என்று கூறுவதே ஜனநாயகமாக விளங்கும் தத்துவம்.

தமிழகத்திலே நாம் இவ்விஷயங்களில் உறுதியாக இருக்கிறோம்.

டாக்டர் லட்சுமணசாமியின் வாழ்க்கையே சிறந்த ஒரு எடுத்துக் காட்டு. அவரது வாழ்நாளில் எத்தனை விதமான அரசியல் லாபங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். அதற்கெல்லாம் அசைந்து கொடாமல் என் வழி நான் செல்கிறேன் என்று இருந்துவிட்டார். அலைபாயும் கடலில் திசைக்காட்டும் கருவியில் பார்வையைச் செலுத்தியபடி கலம் செலுத்தும் தேர்ந்த மாலுமி போல் டாக்டர் லட்சுமணசாமி இருந்துள்ளார்.

நாம் நமது குறிக்கோள்களில், நமது அரசியலில் உறுதியுடையவர்களாக இருக்கிறோம். அரசியல் ஸ்திரத்தன்மையும், உண்மை உணர்வும் இங்கு மிகுந்துள்ளது. மற்றவர்கள் நம்மிடமிருந்து பெறவேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் நான் கூறக் காரணம், நண்பர் வெங்கட்ராமனிடம் இந்த குணங்கள் நிரம்ப உண்டு என்பதாலேயாகும். இந்தக் குணங்கள் எங்கு தேவைப்படுகிறதோ அந்த இடத்துக்கு வழங்குகிறோம், வெங்கட்ராமனை அங்கு அனுப்புவதன் மூலம்,

அவர்களிடமிருந்து நாம் பெறுவதெல்லாம் இங்கிருந்து அவர்கள் வரியாக எடுத்துச் சென்றதில் ஒரு பகுதியே.

நான் இனி ஒவ்வொரு மாதமும் கையில் ஒரு பட்டியலோடு டில்லியில் வெங்கட்ராமன் அறைக் கதவைத் தட்டுவதாக இருக்கிறேன்.

அப்படித் தட்டத் தேவையில்லை; கதவு திறந்தேயிருக்குமென்கிறார் வெங்கட்ராமன். கதவு திறந்தேயிருந்தாலும் தட்டி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டுமென்பது ஆங்கிலேயே முறை.

நாம் கொடுக்கும் திட்டங்களை திட்டக்குழுவின் சக உறுப்பினர் முன்வைத்து நமக்கு நியாயம் கிடைக்கச் செய்வார் என்று நம்புவோமாக!

வெங்கட்ராமன் தமது பதவியில் சிறப்பாகச் செயலாற்றும் பரிவு செலுத்துவோம்--தமிழ் மக்களின் நல்லெண்ணமே அவருக்குச் சிறந்த பக்கப்பலமாக இருக்கும்.