உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/காக்கும் கரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

காக்கும் கரங்கள்


மது பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவளிக்கும். திட்டத்துக்கு அமெரிக்க அற நிறுவனமான 'கேர்' அளித்து வருகிற உதவியை நான் மதித்து வரவேற்கிறேன். நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவு பலமடைந்து அதன் விளைவாக பல தொழிற் கூடங்களும் மருத்துவமனைகளும் ஏற்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.

கல்வித் துறைக்கும் அவர்களது உதவியால் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இந்த நல்ல நாளும், நடக்கின்ற நிகழ்ச்சிகளும் அத்தகைய நல்ல கருத்துக்களை நம் மனதில் உண்டாக்கட்டும்.

நலிந்தோருக்கு உதவுவது என்ற பொது நலத் தத்துவத்தினடிப்படையில் அமெரிக்கர்கள் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஒரு பக்கத்திலே நலிவும் மறு பக்கத்திலே வளமும் என்ற நிலைஇருக்குமானால் அது உலகம் முழுவதும் பரவும்.

நாம் இங்கேதிரைப்படங்களுக்கும் "காக்கும் கரங்கள்" என்று பெயரிடுகிறோம். அமெரிக்க மக்கள் தங்களது கரங்களைக் காக்கும் கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குமுன்னதாகத் தங்கள் கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்,

வலிவுள்ள கரங்களால்தான் பிறரைக்காக்கவும் முடியும். எனவே நாம் முதலில் நமது கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொள்வோம். அப்போது பிறரை நாமும் காக்க முடியும்.

கரங்கள் எந்த அளவு வலிவுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவு உள்ளம் மென்மையானதாக இருக்க வேண்டும்.

நானும் திரைப் படத்திலே, ஈஸ்வரன் இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் வைப்பதில்லை என்று எழுதினேன்.

நம்முடைய நாட்டு ஈஸ்வரன் ஒருவேளை அப்படியிருக்கலாம். ஆனால் அமெரிக்க மக்களுடைய பணத்துக்கும் அவர்களது இதயங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க மக்களும் ஆரம்ப காலத்திலே நம்மைப் போலத் தான் இருந்தார்கள். இப்போது உள்ள வலிவு ஆப்ரகாம்லிங்கன் காலத்தில் இருந்ததில்லை. காடுகளாகவும், பள்ளத்தாக்குகளாகவும், சதுப்பு நிலமாகவும் தானிருந்தது, ஆதி நாள் அமெரிக்கா.

இன்று அந்நாடு பொன் கொழிக்கும் பூமியாக உள்ளது. தாங்கள் தேடிப்பெற்ற செல்வத்தைத் தேக்கி வைத்து உலகில் பரவிடச் செய்கிறார்கள்.

எவ்வளவு விரைவாக நாம் அந்த வலிவைப் பெறுகிறோமோ அந்த அளவு நமது தன்மானம் தரணியில் உயரும்.

அந்த வலிவினைத் தேடிக் கொண்டு நம் கரங்களைக் காக்குங் கரங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இன்று நம் கரங்கள் கேட்கும் கரங்களாக இருக்கின்றன--நாம் அரிசி, நிதி கடன் கேட்பவர்களாக இருக்கிறோம்.

இந்த உண்மையை உணர்ந்து, இந்தச் சவாலை ஏற்று தன்னிறைவுப் பாதையில்--தன்மானப் பாதையில் நாம் வேகமாக நடைபோட வேண்டும். அந்தப் பாதை நீண்ட நெடியது. அதில் நடக்க நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

நல்ல மனிதர்களாய், நற்குணமுடையோராய், புகழ் ஓங்கி எல்லா வகை ஏற்றமும் பெறத்தக்கவர்களாய் நமது சிறார்கள் வளரவேண்டும்.