உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/சீர்திருந்தும் கூவம்

விக்கிமூலம் இலிருந்து

சீர்திருந்தும் கூவம்


வெகு காலமாகவே துர்நாற்றம் பிடித்த ஆறு என்று ஏசப்பட்டுவந்துள்ள இந்த ஆறு இன்று மிகுந்த பாக்கியம் செய்துள்ளது. எந்த ஒரு ஆற்றுக்கும் இப்படி ஒரு சேர ஐந்து மந்திரிகள் சென்றதில்லை. அழுக்காற்றை நல்ல நீரோடும் ஆறாக ஆக்கும் திட்டத் துவக்கத்துக்கு ஐந்து மந்திரிகளும் வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் இங்கு புதிதாக வந்து போகக் கூடியவர்கள் அவரவர் ஊர் சென்றதும் இந்த ஆற்றின் துர்நாற்றம் பற்றியே பேசுவார்கள் 10 - 15 ஆண்டுகளுக்கு முன் இது தான் அன்றாடப் பேச்சுக்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

புறப்படுகிற இடத்தில் தூய்மையாகவே புறப்படுகிற இந்த ஆறு அலைந்து வளைந்து அழுக்கைச் சேர்த்துக் கொள்ளுகின்றது.

'கடலோடு போ' என்று நகர மக்கள் அதை விரட்டுகிறார்கள். கடல் அலைகளோ நீ இங்கே வராதே என்று விரட்டுகின்றன. ஆக இந்த பலமான போராட்டம் பலகாலமாகவே நடை பெற்று வருகின்றது.

இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் தந்திருக்கிறார்கள்.

அதன்படி இத்திட்டம் நிறைவேறியதும் அது தரக்கூடிய எழில் தோற்றத்தைத்தான் வரைபடமாக்கி இங்கே வைத்திருக்கிறார்கள். கிடைப்பதற்கரிய கற்பனை அல்ல. உண்மை நிலையாக இது உருவாகும். இந்தத் திட்டம் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

தேம்ஸ் நதிக் கரையினிலே

மற்ற மாநகரங்களிலெல்லாம் இத்தகைய இயற்கை வசதி அதாவது நகருக்கு மத்தியில் ஆறு ஓடுவதை பெரும் வாய்ப்பாகக் கருதுகிறார்கள்.

தேம்ஸ் நதிக்கு லண்டன் மாநகர மக்கள் அளித்துள்ள முக்கியத்துவம் பற்றி அங்கு போய்வந்தவர்கள் சொல்லவும் படித்தும் அறிந்திருக்கிறேன்.

உல்லாசமாக உலாவரத்தக்க பூங்காற்று வீசுகின்ற பூங்காக்கள் நிரம்பிய கரைகளை அந்த ஆறுகள் பெற்றிருக்கின்றன.

அப்படிப்பட்ட இயற்கை அழகைக் கொண்ட இந்த நதி சென்னை நகரினுள் ஊடுருவிப் பாய்கிறது. மக்கட் தொகை நிரம்பிய பகுதிகளின் வழியே இந்நதி ஊடுருவி வருவதை இந்த வரை படத்தை உற்று நோக்கினால் தெரியும்.

சிலகாலம் வெள்ளக்காடாகவும், சிலகாலம் சேறும் சகதியும் மிகுந்ததாகவும் ஒழுங்கின்றி இருக்கும்.

சிலகாலமாகவே இதை சீரமைப்பது பற்றிப் பேசப்பட்டு நிபுணர்களால் திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளன.

கூவம் சீரமைப்பு பற்றி விவாதிக்கக் கூடிய கூட்டமொன்றில் நானும் பங்கேற்றதாக எனக்கு நினைவு.

வேறு காரியங்களில் அரசு ஈடுபட வேண்டியிருந்ததால் இதனைக் கவனிக்க இயலாமற்போனது. மேலும் இதை புறாக் கூட்டிலேயே போட வேண்டாம் என்றே நாங்கள் வந்ததும் இதை நிறைவேற்றத் தீர்மானித்தோம்.

கருணாநிதியின் ஆர்வம்


முதல் பட்ஜெட் தயாரிக்கும் போதே இந்தத் திட்டத்துக்கு பணம் ஒதுக்கும்படி என்னுடைய தம்பி கருணாநிதி என்னைத் துளைத்துக் கொட்டி விட்டார்--ஒதுக்கியிருக்கிறேன் என்று சொல்லியும் திருப்தியடையாமல் அது பட்ஜெட்டில் இருக்கிறதா என்று பார்த்த பின்னரே திருப்தி அடைந்தார்.

இவ்வாறாக இப்போது ரூபாய் 2 கோடி அளவுக்கு செலவிடத்தக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டு இன்று அதன் கால்கோள் விழாவும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மிகச் சிறந்த திறம் படைத்த நிபுணர்கள் இருக்கிறார்கள். குறைந்த செலவில் இத்திட்டத்தை நிறைவேற்றித்தர அவர்கள் முயலவேணடும். தொகைதான் ஒதுக்கியாகிவிட்டதே என்று இருந்திடாமல் குறிப்பிட்ட தொகையைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவேற்றித் தரவேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு நிறைந்த புகழ் வந்தடையும்.

இப்படியும் ஒரு ஆறா?

பார்க்கிற வெளிநாட்டாரெல்லாம் இப்படி ஒரு ஆறு இந்த ஊரில் இருந்ததா? என்று கேட்கும்படியாக அமைய வேண்டும்.

இதற்குமுன் இந்த ஆறு இப்படி இருக்கவில்லை. தாங்கள் இதனை இப்படி திருத்தி அமைத்திருக்கிறோம் என்று பெருமிதத்துடன் கூறுகிற நிலைமை இருக்கவேண்டும்.

நம்முடைய நாட்டில் இயற்கையின் எழிலை அழிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் உண்டு, நல்ல பூங்காவை இருக்கவிட மாட்டார்கள். அதை அழிப்பதிலே அவர்களுக்கொரு தனி இன்பம்.

நல்ல கட்டிடம் இருந்தால் கரியால் அதன் சுவர்களில் கிறுக்கி வைப்பார்கள். நல்ல வாய்க்கால் ஓடினால் கல்லையும் மண்ணையும் அதில் தள்ளி நீர் ஓடாதபடிச் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட விந்தை மனிதரை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

எழிலும் பயனும் ஒருசேர அமைந்த சீரிய திட்டம் இது--இதனோடு இணைந்த பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் வாணிபத் துறையில் ஆந்திரத்துக்கும் தமிழகத்துக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்த உதவும். அந்த கால்வாயும் பலவருடங்களாகத் தூரு வாராமல் விடப்பட்டதால் படகுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திலேயே நாவாய் போக்குவரத்தே செலவு குறைந்தது. பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புத் திட்டம் பற்றியும் பொதுப்பணி அமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.

நகருக்கு எழில் தோற்றத்தையும் வாணிபப் பெருக்கையும் அளித்திடக் கூடியது இந்தத் திட்டம்.

இத்திட்டத்தை நிறைவேற்றி சென்னையைச் சிங்கார திருநகராக்குவது நமது கடமை!