உணர்ச்சி வெள்ளம்/சீர்மிகு சீரணி
சீர்மிகு சீரணி
வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்துக் கொடுக்க முடியாதவர்களும் கூட தேர் இழுக்கச் செல்வார்கள்.
தேர் இழுக்க முடியாதவர்கள் தங்கள் கைகளில் பெரிய விசிறிகளைப் பிடித்துக் கொண்டு தேர் வடத்தைப் பிடித்து இழுப்பவர்களுக்கு விசிறுவார்கள்--காற்றுவராது; சில நேரங்களில் விசிறி தேர் இழுப்பவரின் முதுகைத் தாக்கும். விசிறியது போதும் நிறுத்து என்று சொல்லுவார்கள்.
ஊருக்குழைப்பது என்ற இயற்கைப் பண்பை ஒன்றுபடுத்த வேண்டும்; இன்னின்ன பணிகளை மேற்கொண்டால் நல்ல பலன்களைக் காணலாம் என்ற உணர்வை ஊட்ட வேண்டும். தேவையான கருவிகளைக் கொடுக்க வேண்டும்; சரளைக் கற்கள்-உருளைகள் கிடைக்கவில்லையென்றால் அவை கிடைக்கச் செய்ய வேண்டும்; இவைகளுக்கெல்லாம் சர்க்கார் அதிகாரிகள் ஒத்துழைக்க முன் வரவேண்டுமென நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நேரு இத்தகைய பொதுநலத் தொண்டு குறித்துக் கனவு கண்டார். 20 வருடமாக மக்கள்தான் உழைத்திருக்கிறார்கள். காரணம் தெரியாமலே உழைத்திருக்கிறார்கள். யாருக்காக உழைக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே உழைத்திருக்கிறார்கள். பலனென்ன என்று தெரியாமலே உழைத்திருக்கிறார்கள்.
நமக்காக நம் குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். மீதமிருக்கும் நேரத்தில் ஊர் நன்மைக்காக உழைக்கவேண்டும்.
இருவண்ணக் கொடியைக் கையில் பிடித்து 'திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க! திராவிட முன்னேற்றக் கழ்கம் வளர்க என்று குரலெழுப்பிச் செல்வதற்காகச் சீரணிப்படை அமையவில்லை. இப்படையைக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிலையில் தி. மு. கழகம் இல்லை. அப்படியென்றால் 1966 ல் அல்லவா இதனை ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்னர் இதைச் செய்திருப்பதற்குக் காரணமே மக்கள் நலப் பணிக்காகத்தான்.
எந்தச் சாரர் ஆயினும் சரி, எந்த மக்களாயினும், என்ன குறையாயினும் என்னிடத்திலோ என் நண்பர்களிடத்திலோ தாராளமாக வந்து சொல்லலாம். நாங்கள் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
நான் இங்கே உட்கார்ந்திருக்கும்போது உங்கள் சட்டையிலே பூச்சி இருக்கிறது--தட்டி விடுங்கள்" என்று பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வாரானால் "இது எனக்குத் தெரியாதா?" என்றா கேட்பேன்? சில நேரங்களில் சிறிய விஷயங்கள் கூடத் தெரியாமல் போகலாம்.
கோட்டையிலே வீற்றிருக்கும் எங்களுக்கு மக்களின் குறைகள் என்னென்ன என்று தெரிந்து விடும் என்று எண்ணியிருந்துவிடாமல் அப்போதைக்கப்போது உள்ள குறைகளை எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படிக் கூறும்போது ஒவ்வொரு நாணயத்துக்கு உபகரணங்கள் இருப்பது போல ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டென்பதை மனதிற்கொண்டு கூற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
குடிநீர்த் தட்டுப்பாடு இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகும். ஐந்தாறு லட்சம் பேர் வாழ்ந்த சென்னைக்கென்று வகுக்கப்பட்டது, இப்போதுள்ள தண்ணீர்த் திட்டம். இப்போது 22 லட்சம் பேர் இந்நகரில் வாழ்கிறார்கள்.
நாகரிகமான ஓரளவு வசதியோடு கூடிய வீடுகளில் வாழக்கூடும், மாளிகைகளில் மற்றொரு லட்சம் பேர் இருக்கக் கூடும். நாலு குடித்தனம் ஐந்து குடித்தனம் என்றுள்ள வீடுகளில் ஐந்தாறு லட்சம் பேர் இருப்பார்கள். மற்றுமுள்ளோர் எங்கெங்கெல்லாமோ வாழுகிறார்கள்.
நான் யாரையாவது அழைத்து அந்தக் கூவம் நதியோரம் போய் குடியிரு என்றால் என் கன்னத்தில் அறைவான். ஆனால் யாரும் சொல்லாமலே அங்கே அவர்களாகவே வாழுகிறார்கள்; நாற்றமாயிற்றே என்றால் ஏதோ ஒரு நாளில் அரை மணி--கால் மணி அப்படியிருக்கும் என்கிறார்கள். இவர்கள் இப்படி குடியிருப்புக்காக வேண்டி இருக்கும் நாற்றத்தையும் இல்லை என்கிறார்கள்.
இவர்களது குடிசைகளை வெளிநாட்டார் பார்த்தால் நம்மைப்பற்றி மிகத்தாழ்வான கருத்தைக் கொள்வார்கள். ஆகையினால் தான் கூவத்தின் நாற்றத்தைப் போக்கி சேற்றை வாரி கூவத்தை எழிலுடையதாகச் செய்திட திட்டமிட்டுள்ளோம்.
லண்டனுக்கு நான் போனதில்லை. போய் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லண்டன் நகருக்கு அழகைக் கூட்டுவது அத்நகரின் பெரும் பகுதியில் ஊடுருவிச் செல்கிற தேம்ஸ் நதி என்பதாகும். அதுபோல கூவம் சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கிறது. ஏனோ இந்த எளிய திட்டம் என்னைவிடப் பெரியவர்கள் வல்லவர்கள் ஆண்ட நாட்களிலே செய்யப்படாமலே இருந்தது; எளிய காரியம் தானே என்று இருந்துவிட்டார்கள் போலும் நாங்கள் சின்னவர்களென்பதால் சிறிய விஷயங்களெல்லாம் என் கண்ணுக்குப்படுகிறது. கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் அப்பணியின் மூலம் நோய் நொடிகள் நீங்கும், சுகாதாரம் ஓங்கும்.
இதைப்போலவே காவிரி நீர் திட்டம் நீண்ட நாட்களாகப் பேசிப் பேசி நிறுத்தப்பட்டதே தவிர நடைமுறைக்கு வரவில்லை.
நண்பர் முனுசாமி அதைச் சொன்னார். அதையும் அவர் காமராஜரிடம் தான் முதலில் சொன்னார். காவிரி திட்டத்தின் பயன்கள் பற்றி முனுசாமி பேசியதைக் கேட்ட காமராஜர்...“நீ என்ன வக்கீலா?” என்று அவரைப் பார்த்துக்கேட்டார்.
காவிரி தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படயிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
காவிரித் தண்ணீர் இங்கே வருவதில் ஒரு பொருத்தம் இருக்கின்றது. காவிரிக் கரையில் காவிரித் தண்ணீரைக் குடித்து வாழ்ந்தவர்கள் தான் இப்போது இப்பகுதியில் குடியேறியிருக்கிறார்கள்.
அவர்களைத் தேடி வருகிறது காவிரி நீர்.
தண்ணீர் இந்நகரில் நிரம்பத் தேவையிருக்கிறது. பல புதிய தொழில்களுக்கும் தேவையான தண்ணீரும் கிடைக்கும்.
எங்கள் தொழிற்சாலைக்கு 2 லட்சம் காலன் தண்ணீர் கொடுக்க இயலுமா என்று கேட்கிறார்கள். நம்மால் முடியவில்லையென்றால் வேறு எந்த மாநிலத்தில் தங்கள் தொழிலை துவக்கலாமென்று பார்க்கிறார்கள். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறோமென்றால் பணம் வாங்கிக்கொண்டு தான் கொடுக்கிறோம்.
இதுபோல சென்னைத் துறைமுகத்துக்கு வருகிற கப்பல்களுக்கும் தண்ணீர் நிரம்பத் தேவைப்படுகின்றது. போதுமான தண்ணீர் இருந்தால் நாம் கொடுக்கலாம். இப்படி விலைக்கு விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு ரூபாய் ஒரு கோடி வரை வருமானம் கிடைக்கும். இப்போது பணத்தை செலவிட்டு நாம் செய்தாலும் கிடைக்கிற வருவாயைக் கொண்டு அதைச் சரிகட்டலாம் என்பதோடு இந்தக் காவிரி நீர் திட்டம் இன்னும் பத்தாண்டுகளில் லாபகரமானதாகவும் ஆகிவிடும்.
★