உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/சீக்கியர் மாண்பு

விக்கிமூலம் இலிருந்து

சீக்கியர் மாண்பு


குருகோவிந்த சிங்கின் 301-வது பிறந்த நாள் புனிதத் தன்மையுடைய நாளாகும்.

சமூகத்தாரிடையே தோழமையையும் உறுதியையும் வளர்த்ததோடு சீக்கிய சமூகம் பிறருக்குப் பணி செய்யவேண்டுமென்பதையும் போதித்தது.

அமிர்தசரசில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு நான் 3-4 தடவைகள் போயிருக்கிறேன். அந்த கோவிலுக்குள் சென்று வரக் கூடிய எவரும் சீக்கிய மதத்திடம் மிகுந்த மரியாதையுடனே திரும்புவர். அத்தனை நேர்த்தியாகவும்சுத்தமாகவும். அக்கோயில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே நான் ஒரு காட்சியைக் கண்டேன். நன்றாக உடுத்தியிருந்த ஒருவர் அக்கட்டிடத்தின் தாழ்வாரங்களை எல்லாம் சுத்தம் செய்ததோடு அங்கிருந்த காலணிகளையெல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஏனென்று நான் அவர் அருகில் சென்று கேட்டேன். பண்புகள் எல்லாவற்றிலும் தன்னடக்கமே மிக உயர்ந்த பண்பு என்பதைச் செயலால் உணரவே இவ்வாறு செய்கிறேன் என்று அவர் சொன்னார்.

சீக்கிய மதமானது மக்கள் அமைதி கிடைக்காதா என்று கேட்டு வாழ்க்கையின் மீதே வெறுப்புற்று இருந்த காலத்தில் தோன்றியது.

தங்களது மக்கள் ஒரு சமுகமாகக் கூடிப்பிணைந்து வாழவும் மக்கட் சமுதாயத் தொண்டினுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவுமே சீக்கிய சமயம் தோன்றிற்று- சீக்கியர் கடின உழைப்பாளிகள். நான் இங்குமட்டுமல்லாமல் தூர கிழக்காசிய நாடுகளில் கண்டவரை சோம்பேறி என்று சொல்லிடத் தக்க ஒரு சீக்கியரையேனும் காண முடியவில்லை.

பணி தனக்கென மட்டுமல்லாமல் சமுக முழுமையும் அதன் மூலம் நாடுமுழுமையும் பயனடைய வேண்டும் என்ற மனோ நிலையுடனே அவர்கள் பணி செய்கின்றனர். தமிழர்களாகிய நாங்களும் அத்தகைய உயர்ந்த கோட்பாடுகள் உடையவர்களாயிருந்தோம். சமுதாயத்தொண்டே தமிழர் பண்பாட்டின்மையமாக விளங்கிற்று.

இதனால் தான் தமிழகம் சீக்கியர்களை அணைத்துச் செல்கின்றது. சீக்கியப் பிரமுகர் "எங்கள் குழந்தைகளெல்லாம். இங்கே தான் பிறந்தன" என்றார்! ஒன்றைச் சொல்கிறேன் குழந்தைகள் மட்டுமல்ல, பேரன்களும் கொள்ளுப் பேரன்களும் இங்கேயே பிறக்கட்டும். அக்குழந்தைகளெல்லாம் சுவாசிக்கிற முதல் காற்று தமிழ் மணங்கமழும் காற்றாக இருக்கட்டும். தமிழ் மண்ணில் அவர்கள் தவழட்டும். நிரந்தரமாக இங்கேயோ இருக்கலாம். வேறு சில சமூகத்தாரைப் போல் கவலைகொள்ளத் தேவையில்லை.

சீக்கியர் வீரம்

சீக்கிய நெறி சுரண்டலை அனுமதிப்பதில்லை; பிறர் உழைப்பின் பலனைக் கொண்டு வாழுவதை அனுமதிப்பதில்லை. எனவே சீக்கிய நண்பர்களின் உறவு தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் உறவாகும். என்றேனும் ஒரு நாள் தமிழ் சீக்கிய பண்பாடுகள் இணைந்தியங்கிட வகை காண்போம்.

சீக்கிய மக்களது வீரம் போற்றற்குரியது. நாட்டின் எல்லையிலே அவர்கள் வீரத்தோடு எதிர்த்து நின்றிரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று எண்ணவே இயலவில்லை. சீக்கியரது வரலாறு புகழுடையதாக இருந்திருப்பின் அவர் களது வருங்காலமும் மேலும் சிறந்த புகழுடன் இருக்கும்.

தமிழக அரசு அவர்களுக்கு ஏதேனும் உதவியாக இருக்க முடியுமென்றால் அதைச் செய்திட நான் தயங்க மாட்டேன். சீக்கிய சமயத்தின் மீது எனக்குள்ள உயர்மதிப்பே இதற்குக் காரணம்!

அமிர்தசரஸ் கோயிலின் மாடங்களிலே உள்ள ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். சீக்கிய சமுகமானது எத்தனை துன்பங்களைத் தாங்கி இன்னல்களைக் கடந்து வந்துள்ளது என்பவற்றையெல்லாம் அந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. அயரா உழைப்பின் மூலம் அவர்கள் இன்றைய மேம்பாடான நிலையை அடைந்தார்கள். தற்காலத் தமிழ் மக்களும் சீக்கியரைப் போன்ற நல்ல பண்புகளைப் பெற வேண்டுமென நான் விழைகிறேன்.

தமிழர் சமயம்

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதே பண்டைத் தமிழ் மக்களின் சமய நெறியாக இருந்தது. சாத்திரச் சடங்குகள் அங்கிருக்கவில்லை. மூடப்பழக்க வழக்கங்கள் இருந்ததில்லை. சீக்கியர் நெறியைப் போலவே தமிழர் நெறியிலும் விக்கிரகங்களுக்கு இடமில்லாதிருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்ததாகக் கற்பனை செய்து பார்த்தால் இங்கே இருந்த சமயமும் ஒன்றாகவே இருப்பதை அறிவோம்.

கடவுள் பக்தி இல்லாத என்னை இங்கு அனுமதித்தது பற்றி இங்கு நாளை எவரேனும் கேட்கக்கூடும். மனிதன் மற்றெல்லாவற்றுக்கும் முதன்மையானவனாகவும் கடவுளைத் தவிர வேறு எவருக்கும் மனிதன் அடிமையாகிடத் தேவையில்லையென்றும் சமயம் கூறுமானால் நான் நூற்றுக்கு நூறு சமயவாதியே, இதைவிட்டு தனி மனிதருக்குள் கீழ்சாதி மேல்சாதி என்று ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கக்கூடியதாக சமயம் இருக்குமானால் அது நடவாது.

மனிதனைப் பாகுபாடு செய்திடுவதே கடவுள் நெறி என்று எவரேனும் சொல்லுவார்களானால் நான் நாத்திகனே என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். சமய நெறி என்பது புனிதமானது, உண்மையானது, மனிதாபிமானமுள்ளது. அடக்க உணர்வை சோதிப்பது, என்றால் என்னை சமயத்துக்கு அப்பாற்பட்டவனென்று எவரும் சொல்லிவிட இயலாது. என்னை நாத்திகனென்று கூறுவார்க்கு நான் கூறவிரும்புவது இதுதான்.

இந்தியா ஒன்றுபட்டிருக்க வேண்டும். அதன் வலிவு வெல்லற்கரியதாக இருக்கவேண்டும் என்று நாமெல்லாம் விரும்புகின்றோம். இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதெப்படி. சட்டத்தின் மூலமோ, கட்டளையின் மூலமோ, குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமோ ஒற்றுமையை ஏற்படுத்திட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்பட வேண்டும்; வெறும் உதட்டளவுப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது.

ஒற்றுமையை வளரும் பசுஞ்செடிக்கு நிகராகக் கருதி ஒரு சீராகத் தண்ணீர்விட்டுப் பேணி வந்தால் மட்டுமே அது வளரும். அதைவிட்டுத் தண்ணீரும் வெந்நீரும் மாற்றி மாற்றி ஊற்றினால் செடியின் நிலை என்னவாகும்? தமிழக அரசு கொண்டுள்ள மொழிக் கொள்கையை சென்னைவாழ் சீக்கியர் ஆதரிப்பதாக உள்ளது-சங்கத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். அது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே தமிழ் நாட்டில் பொதுவாகவே ஒரு தப்பெண்ணம் நிலவுகிறது. வடக்கேயிருந்து வருகிறவர்களெல்லாம் இந்தி தனியொரு ஆட்சி மொழியாவதை ஆதரிப்பவர்கள் என்ற எண்ணமே. அது சரியல்ல--சீக்கிய மக்கள் தங்கள் குர்முகி மொழியை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பதையும் அறிவேன்--அதேபோல அசாம் மொழி எப்படி அசாமியர்களால் நேசிக்கப்படுகிறதென்பதையும் அறிவேன்.