உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/புரட்சிக் கனல்

விக்கிமூலம் இலிருந்து

புரட்சிக் கனல்

பெரியார் அவர்கள் செல்வக் குடியில் பிறந்தவரானாலும், தமக்குள்ள சுக போகங்களையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு, இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நாட்டு மக்களின் நலிவினைப் போக்கி, அவர்களின் நல்வாழ்விற்காகவும் தன்னை ஒப்படைத்தவராவார்.

அவர் இந்த நாட்டுக்கு ஆற்றிய தொண்டு இங்கே ஏற்படுத்திய புரட்சிக்கனல்--அறிவுப்புனல், எவரும் எங்கும் காணாத ஒன்றாகும். அவர் ஏற்படுத்திய பகுத்தறிவுப் புரட்சியை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.

அவர் பல போராட்டங்களை வென்றவர். எதிர்த்து வரும் எதிர்ப்புக்கு மூலபலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்து அதனைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்.

1935--37-ல் அவர் தொடுத்த போராட்டத்தின் விளைவால் தான் ஆட்சி மொழி என்று சொல்லி வந்த இந்தி மொழியை இணைப்பு பொழி என்றழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்தி ஆட்சி மொழி என்று அவர்கள் சொன்ன நேரத்தில், ஆட்சிமொழி இருக்கட்டும், உன் ஆட்சியின் லட்சணமென்ன என்று துணிவோடு கேட்டதை நாமறிவோம். தேசியமொழி என்ற தகுதியிலிருந்து மாறி, இந்தி இணைப்பு மொழி என்று அவர்கள் கூறுகின்ற நிலைமைக்கு இறங்கி வந்ததற்கு காரணம் பெரியார் எடுத்துக் கொண்ட போராட்டம் தான்.

அதை மறுப்பவர்கள் தமிழராக இருக்க முடியாது. காட்டு மிராண்டித்தனமான கொள்கைகளை விட்டு விட்டு, மனிதன் மிருகத்தனத்திலிருந்து நீக்கப்பட்டு, பகுத்தறிவுள்ள வனாக, பண்பாளனாக மாறவேண்டும் என்று அறிவுப் பிரச்சாரம் செய்தவர்.

எந்த நாட்டிலும், இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கவேண்டிய காரியங்களை 20 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் எனக் கருதி திட்டமிட்டு செய்து முடிப்பார்.

நான் கல்லூரியை விட்டு வந்த காலத்தில் எங்கெங்கோ சிக்க வேண்டியவன். அங்கெல்லாம் சிக்காமல் பெரியாரிடம் தான் சிக்கிக் கொண்டேன். இப்பொழுது 'கிடைக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் இனி கிடைக்கப் போகும் பெருமையும் மகிழ்ச்சியும் இதற்கு முன்பெற்ற பெருமையையும் மகிழ்ச்சியையும் விட அதிகமாக இருக்க முடியாது.

நீதிக்கட்சி அழிந்து போகும் நிலைமையில் இருந்த சமயம் அந்த நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, அந்த நீதிக்கட்சி என்ற யந்திரத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்ற என்ஜினைப் பூட்டி இயக்க ஆரம்பித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தி. க. மாநாட்டில், முதல் நாள் பெய்த பெருமழையால் மாநாட்டுப் பந்தல் பூராவும் தண்ணீர் தேங்கி நின்றது. மறு நாள் மாநாடு நடக்குமா என்று எண்ணிக் கொண்டிருந்தோம். பெரியார் எடுத்துக் கொண்ட துணிவான முயற்சியால் இரவோடு இரவாக தண்ணீரையெல்லாம் வெளியேற்றி, அங்குள்ள சேற்றையெல்லாம் அப்புறப்படுத்தி, குறித்த காலத்தில் மாநாடு நடைபெற்று முடிந்தது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால் மாநாட்டிலிருந்த சேற்றை மட்டுமல்ல தமிழகத்தின் மக்களின் நெஞ்சிலே ஊறிப்போன சேற்றை களைந்தெறிந்து பகுத்தறிவு நல்லுணர்வு ஊட்டியவர் என்பதனைக் கூறிடத்தான்.

அவரைப் பார்த்து பல்லோரும் பல சமயங்களிலும் கேட்டது என் நினைவுக்கு வருகிறது. நீங்கள் பேசும் பகுதிகளில் ஆயிரத்தில் ஒன்று பேசினாலும், எங்களை தடுத்து விடு கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி அவ்வளவு துணிவாகப் பேசுகிறீர்கள்?" என்று கேட்பார்கள். ஆகவே தான் கூறுகிறேன், இந்த நாட்டில் அவர் சாதித்த சாதனை மிகப்பெரியது.

அவர் அழைத்தால் வாராத தமிழ் மக்களில்லை. அவர் கூப்பிட்ட குரலுக்கு வாராத இளைஞர்களில்லை. இன்று பெரியார் அவர்களின் முகத்திலே தெரிகின்ற உற்சாகமும், கனிவும் நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியும் வாழ்க்கையிலே என்றோ ஒரு நாள் தான் வரும்.

அவர் பல்லாண்டு வாழ வேண்டும். நாம் அவரை மறக்கின்ற நேரத்தில் நமக்கு ஒரு தளர்ச்சி ஏற்படுவதையும் அவரை நினைக்கின்ற நேரத்தில் ஏதோ ஒரு ஊக்கம் பிறப்பதையும் காண்கிறோம். அவரை நினைக்காத வணிகப் பெருமக்களில்லை; தமிழ்ப் புலவர்களில்லை.

அனைவரும் அவரது பிள்ளைகள்

அவருடைய பிள்ளைகள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கின்ற பிள்ளைகளில் எந்தப் பிள்ளையும் சோடையில்லை.

30 வருடங்களுக்கு முன் பேசப் பயந்தவைகளை இன்று 8 வயதுச் சிறுவன் பேசிடவும் 20 வருடத்திற்கு முன் பயத்தை மூட்டி வந்தவைகள் இன்று கேலிக்குரியவைகளாக மாறியதற்கும் பெரியார் காரணமாவார்.

இதற்கெல்லாம் அடிப்படை அமைத்திட பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. இன்று போல் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரித்து மாலைகள் போட்டு வரவேற்பதில்லை. அன்றெல்லாம் செருப்புத் தோரணங்களைக் கட்டியால்லவா எதிர்ப்புக்காட்டினார்கள்? அதையெல்லாம் தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவம் பெற்றதினால் தான் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியைக் காணமுடிகிறது.