கம்பன் சுயசரிதம்/003-012

விக்கிமூலம் இலிருந்து



3. கம்பன் கலைக்கோயில்

மிழ்நாட்டில் ஒரு கோயில். ஏன் ஒரு கோயில்? தமிழ்நாடு முழுவதும் எத்தனை எத்தனையோ கோயில்கள் வானுற ஓங்கி வளர்ந்து நிமிர்ந்திருக்கின்றன.

விண் மறைக்கும் கோபுரங்கள்
வினை மறைக்கும் கோயில்கள்
வேறு எந்த நாட்டில் உண்டு
வேலையின் விசித்திரம்

என்றெல்லாம் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாராட்டப்படுகின்றன. இருந்தாலும் எல்லாக் கோயில்களையும் விடப் பெரிய கோயில் ஒன்று, இன்று தமிழ்நாட்டில் உண்டு. ஆம் உருவத்திலும் பெரிய கோயில்தான். பெயரிலும் பெரிய கோயில்தான். கோயில் அமைப்பும் மற்றக் கோயில்களைப் போலச் சாதாரணமானதல்ல. கோயிலைச் சுற்றி ஓர் அகன்ற அகழி. அகழிக்கு உள்ளடங்கிய ஓர் உயர்ந்த மதில், மதிலுக்கு உள்ளே வெளிப்பிரகாரம். அதன் உள்ளே கோயில். அர்த்த மண்டபம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம். எல்லாவற்றிற்கும் நடு நாயகமாய்க் கர்ப்பக்கிருகம். கர்ப்பக் கிருகத்தின் உள்ளே கோயில் கொண்டிருக்கிறார் இறைவன் லிங்க உருவத்தில். பெரிய கோயிலில் உள்ள லிங்கமும் பெரிய லிங்கம்தான். பெருவுடையார் அல்லது பிருஹதீசுவரர் என்பது அவர் பெயர். கர்ப்பக் கிருகத்திற்கு மேலே பிரம்மாண்டமான கோபுரம். மேருமலை போன்ற தஷிணமேரு அது. அதன் விமானத்தின் உச்சியில் சதுரவடிவமான பிரம்மரந்திரத் தளக்கல், பொற்கலசம், பொன் போர்த்த ஸ்தூபி எல்லாம் உண்டு. பிரம்மரந்திரத் தளக்கல் ஒரே கருங்கல், இருபத்தைந்து கன அடி, எண்பது டன் நிறையுள்ளது. அதை அந்தக் கோயில் கட்டிய இடத்திலிருந்து நாலு மைலுக்கு அப்பாலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்தே சாரம் போட்டு இச்சிகரத்தில் ஏற்றினார்களாம். இந்தப் பெரியகோயில் இன்று இருப்பது தஞ்சை நகரிலே, இதை அன்று கட்டினான் ராஜராஜன் என்னும் சோழ மன்னன். சோழ அரசர்கள் ஏன் தமிழ்நாட்டு மூவேந்தர் எல்லோரும் எடுப்பித்த கோயில்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவது இந்தத் தஞ்சைப் பெரிய கோயில்தான். ராஜராஜன் கி.பி. 985 முதல் இருபத்தொன்பது ஆண்டு சோழ சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்திருக்கிறான். ராஜராஜன் கட்டிய கலைக்கோயில் இன்று ராஜராஜேசுவரம் என்று வழங்கப்டுகிறது.. ஆம், அது தமிழரின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்ட அமைந்த ஒரு கலைக்கோயில்தான்.

கலை என்றால் என்ன?

கடவுள் என்றால் யார்? என்று கேட்டால்கூட எளிதாகச் சுட்டிக்காட்டிவிடலாம் போலிருக்கிறது. கலை என்றால் என்ன? என்று சொல்வது மட்டும் முடிகிற காரியமாக இல்லை. கலைகளைப் பற்றி மேல்நாட்டார் எழுதிய புத்தகங்களையெல்லாம் புரட்டலாம். ரஸ்கின், தாகூர், ஹாவெல், ஆனந்த குமாரசாமி முதலிய அறிஞர்கள், கலா ரசிகர்கள் எழுதியதையெல்லாம் படித்துப் படித்துப் பார்த்தாலும் கலை என்றால் என்ன என்ற கேள்விக்குச் சரியான சுருக்கமான ஒரு விடை கிடைப்பது என்னவோ சாத்தியமில்லைதான்.

அழகுணர்ச்சிக்குத் திருப்தி அளிக்கக்கூடியதெல்லாம் கலை என்பார் ஒருவர். கலை என்பது மனிதனுடைய சௌந்தர்ய உணர்ச்சியில் பிறந்து அவனுடைய இச்சையைப் பூர்த்தி செய்வது என்பார் மற்றொருவர். அழகைப் பற்றிய சாஸ்திரமே அது என்பார் இன்னும் ஒருவர். சரி இந்த வியாக்யானங்கள் எல்லாம் கலை என்ன என்பதைக் காட்டி விடுகின்றனவா? என்று கேள்வி. கன்னியாகுமரியில் கடற்கரையில் நின்று கொண்டு காலைக்கதிரவன் கடல் அலைகளின் மீது மிதந்து கொண்டு உதயமாகிற காட்சியைப் பார்க்கிறான் ஒருவன். அந்தக் காட்சி அவனுடைய சௌந்தர்ய உணர்ச்சியில்தான் பிறக்கிறது. அவனுடைய உள்ளத்திலே ஓர் ஆனந்தத்தை உண்டாக்கத்தான் செய்கிறது. அப்படியானால் அந்தச் சூரியன், அந்தக் கடல், அந்தச் சூரிய உதயக் காட்சி எல்லாம் கலையா? கடலை விட்டு மலைக்குப் போவோம். திருக்குற்றால மலையில் சித்திரா நதி ஓர் அருவியாகக் குதிக்கிறது. ஒரு கண்கொள்ளாக் காட்சி. அந்த அருவி நீர் ஓசையோ, நம் செவிகளில் இசையமுதத்தையே பொழிகிறது. அந்த அருவியில் ஆடினாலோ உடல் மாத்திரம் அல்ல, உள்ளமுமே குளிருகிறது. மலையும் மலைவீழ் அருவியும் அருவி நீர் ஓசையும் நமது அழகுணர்ச்சிக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஓர் ஆனந்தத்தையே உண்டாக்குகின்றன. ஆனால், இந்த மலை, இந்த அருவி இந்த ஓசையெல்லாம் கலையா? ஒரு பெண் அழகே உருவமாக அமைந்தவள். மன்மதனுக்கு ஏற்ற ரதி. அவள் சௌந்தர்யம் மக்கள் எல்லோரையும் வசீகரிக்கிறது. அவள் மனிதனது அழகுணர்ச்சியைத் தூண்டுகிறாள். உள்ளத்திற்கு ஓர் ஆனந்தத்தைக் கொடுக்கிறாள். அப்படியானால் அந்தப் பெண் கலையா? எல்லாக் கேள்விக்கும் ஒரே பதில். இவை எல்லாம் கலை அல்ல என்பதுதான். ஏன்? இவையெல்லாம் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டவை.

இறைவனது அருளைத் துணைகொண்டு மனிதன் தனது கற்பனையினால் சிருஷ்டிப்பதுதான் கலை. கலை என்பது கற்பனை சிருஷ்டி கலை மனிதனுடைய அநுபவத்தின் மொழிபெயர்ப்பு என்று கூறலாம். மனிதன் ஜீவிப்பதே சிந்தனை செய்யத்தான். நான் சிந்திக்கிறேன். அதனால் நான் ஜீவிக்கிறேன் என்பதுதான் டேகாட் என்ற பிரஞ்சுத் தத்துவஞானி கண்ட உண்மை. மனிதன் தன் அறிவாற்றலால் ஆலோசிக்கும் காரியங்கள், உணர்ச்சிப் பெருக்கால் அவன் உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகள் எல்லாம் விண் பார்க்கின்றன? ஆராய்ந்து பார்த்ததற்கும் இயலாத தத்துவங்களுக்குள்ளும் நுழைந்து எல்லா இடத்தும் பறந்து நிற்கும் இறைவனையும் கூட எட்டிப் பார்த்து விடுகின்றன. சிந்தனை செய்கிற மனிதன் தன் சிறுமையை மறந்து விடுகிறான். கற்பனா சக்தியாகிய புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய வீதிகளில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்த விதமாகச் சிந்தனையில் பிறக்கின்ற கற்பனா சிருஷ்டியை, சப்த சித்திரத்திலும், வர்ணப் பூச்சுக்களிலும், கல்லுருவங்களிலும் பரிணமிக்கும்படி செய்கிறவன் எவனோ அவனே கவிஞன். அவனே சித்திரக்காரன். அவனே சிற்பி அவர்களது சிருஷ்டியே கலை, கலை உண்மைக்கும் உலகியலுக்கும் மாறுபட்டதல்ல. உலகியலில் காணுகின்ற உண்மையை எடுத்துக்காட்டி மக்கள் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை ஓர் உன்னத நிலைக்கு உயர்த்துகிற திறம் படைத்ததுதான் கலை.

சூரிய உதயம் கலை அல்ல என்று கண்டோம். ஆனால் அதே சூரிய உதயத்தை,

தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி

எங்கும் பரப்பிய தோர் இங்கிதமோ

என்று ஒரு கவிஞன் கற்பனா சக்தியால் சப்த ஜாலத்தில் அமைத்துக் காட்டினால் அந்தச் சிருஷ்டி கலையாகிவிடுகிறது. திருக்குற்றால மலையும், அருவியும் கலையல்ல. ஆனால் அங்கு நாம் காணும் மலைகளையும், மரங்களையும் மணிக்கற்பாறைகளையும், தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகுவதையும் ஒரு சித்திரக்காரன் ஒரு பலகையில் வர்ணங்களைக் குழைத்துப் பூசிச் சித்தரித்து விடுவானேயானால் அது கலையாகிவிடுகிறது.

ஓங்கு மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி,
பூங்குலை குலாவுகுளிர் சோலை புடை விம்மத்

தூங்குதிரை ஆறுதவழ் சூழலதோர் குன்று.

என்ற சொற் சித்திரம் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் கலையல்ல தான். ஆனால் அந்தப் பெண்ணுருவை சௌந்தர்ய தேவதையை, ஒரு சிற்பி தன் கற்பனைத் திறன் முழுவதையும் காட்டி, தன் சிற்றுளியால் செதுக்கி நிறுத்தி விடுவானேயானால், அந்தச் சிலை கலையாகிவிடுகிறது. ஆகவே, மனிதன் தன் கற்பனா சக்தியால் சிருஷ்டித்து, அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட பொருளைப் பிறர் உணர்ந்து அது அனுபவிக்கத்தக்க விதமாகச் சொல்லிலோ, இசையிலோ, ஆட்டத்திலோ, சித்திரத்திலோ, அல்லது கல்லிலோ காட்டி விடுவானேயானால் அது கலையாகி விடுகிறது. Art is to be imagined first and then made manifest through the medium of visible materials, visible movements, audible sounds, and perceptible smells என்ற ஆங்கில விளக்கம் இந்தக் கொள்கைக்கு அரண் செய்கின்றது.

சரி இனி கம்பனைப் பார்க்கலாம். கம்பனுடைய காவியம் இமயமலையைப் போன்ற ஒரு கம்பீரமான காவிய மாளிகை. கம்பன் அந்தக் காவிய மாளிகையையும் அந்தக் காவிய மாளிகையில் நடமாடும் பாத்திரங்களையும், எத்தகைய கலையழகோடு சிருஷ்டித்திருக்கிறான் என்பதை எண்ணும் போது, கம்பன் கலை உணர்ச்சியின் வேகம் நமக்குப் புலப்படுகின்றது. இராமகாதையிலே வரும் பாத்திரங்களில் எல்லாம் அதிமுக்கியமான பாத்திரமான சீதாதேவியை கம்பன் எப்படிச் சித்தரித்திருக்கிறான் என்று பார்ப்போம்.

ஜனகன் மகள் ஜானகி மிதிலையில் அவதரிக்கிறாள். பொன்னின் ஜோதி, போதினில் நாற்றம், தென்னுண்தேனின் தீஞ்சுவை, செந்சொற் கவி இன்பம் எல்லாம் திரண்டு உருவெடுத்தவளாக அவள் இயங்குகின்றாள். அவள் ரூப சௌந்தர்யத்தின் எல்லை காணுகின்றாள்.

கணங் குழையாள் எழுந்ததற் பின்
கதிர் வானிற் கங்கை யெனும்
அணங்கு இழியப் பொலிவிழந்த
ஆறெத்தார் வேறுற்றார்

என்று பாராட்டப்படுகின்றாள். இளமை நலமெல்லாம் நிறைந்து விளங்கும் பேதைதான் அவள். அந்த நிலையிலே தான் கன்னி மாடத்திலிருந்து தெருவூடே செல்லும் இராமனைக் காண்கின்றாள். காதல் கொள்ளுகிறாள். வில்லொடித்த வீரன் என்பதற்காக இராமனை மணக்க அவள் இசைகின்றாள் இல்லை. தான் முன்னர் கண்டு காதலித்த தலைவனே என்று ஐயமற உணர்ந்த பின் தான் அவனை மணக்க இசைகின்றாள். இளமை உள்ளந்தான் எனினும் அதில் உறுதியும் உறைந்து கிடக்கின்றது. இவள்தான் நாம் மிதிலையில் காணுகின்ற சீதை.

பின்னர் அயோத்தியில், சக்கரவர்த்தியின் மருமகளாய், அண்ணல் வெஞ்சிலைக் குரிசிலாகிய இராமனை இணைபிரியாது பெண்ணின் இன்னமுது அன்னவளாகிய சீதை வாழ்கின்றாள். இராமன் தாயுரை கொண்டு தாதை உதவிய தாணி தன்னை நீத்துக் கானாளப் புறப்பட்ட போதும், நாயகன் வனம் நண்ணலுற்றான் என்றும் மேயமண் இழந்தான் என்றும் விம்மலள் அவள். அவன் நீ வருந்தாதே, இங்கேயே இரு என்று சொன்ன தீய வெஞ்சொல்தான் அவளைச் சுட்டு வருத்துகின்றது. கல்லரக்கும் கடுமைய அல்லநின் சில்லரக் குண்ட சேவடிப் போது - என்று செல்லும் வழியின் கஷ்டத்தையெல்லாம் இராமன் பன்னிப் பன்னி எடுத்துரைத்தாலும் நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்பதுதான் அவள் பதிலாக நிற்கின்றது. இராமனும் பின்னர் ஒன்றும் செய்ய இயலாதவனாய், தையல் தன் கற்பையே துணையெனக் கொண்டு காட்டிற்குச் செல்கின்றான். இது நாம் அயோத்தியில் காணுகின்ற சீதை. சீதையின் ரூப சௌந்தர்யமும் குண செளந்தர்யமும் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன.

கானகத்திற்குத் தன் தலைவனான இராமனுடன் போவதில்தான் எவ்வளவு உத்ஸாகம் அவளுக்கு. பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும், சேலுடை நெடு நன்னீர் சிந்தி விளையாடிப் போகும் காட்சியைக் காணும்போது சீதை காட்டுக்குப் போகிறோமே என்று அஞ்சியவளாகவா இருக்கிறாள்? சித்திரக் கூடத்திலே இலக்குவன் கட்டிய பர்ணசாலையில் சீதைக்கு ஓர் அந்தப்புரமும் அமைக்கிறான். சித்திரக்கூடத்திலும் பின்னர்ப் பஞ்சவடியிலும் சீதை தன் நாயகனுடன் உறையும் ஆனந்தத்திலேயே முழுகி இருக்கிறாள்.

ஓதிமம் ஒதுங்கக்கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை தன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்கிறான்
மாதவள் தானும் ஆங்கு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூக்கறாள.

இதுதான் அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் எல்லையாகிவிடுகிறது. இவள் தண்டகாரண்யத்தில் நாம் காணும் சீதை.

இலக்குவன் கட்டிய பர்ணசாலை, அந்தப் பர்ணசாலை கட்டியிருந்த இடம் - எல்லாவற்றையுமே பெயர்த்தெடுத்து இராவணன் சீதையைத் தூக்கிச் செல்கிறான். இலங்கை நகரிலே, அசோகவனத்திலே சிறை வைக்கிறான். இங்கே சிறையிருக்கும் செல்வியாகிய சீதையின் சௌந்தர்யம் சுடச்சுட ஒளிரும் பொன்னேபோல் மேலும் மேலும் பிரகாசிக்கின்றது. ரூப சௌந்தர்யத்தின் எல்லையாக நின்ற அவள் குண சௌந்தர்யத்தின் எல்லையாகவும் நமக்குக் காட்சி அளிக்கிறாள்.

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றி வேறு அறியாள்
தூவி யன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்
தேவு தெண்கடல் அமுது கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்

என்று தீட்டும் சோகச் சித்திரத்தில் அவளுடைய ரூப சௌந்தர்யம் குறையத்தான் செய்கிறது.

அருந்து மெல்லடகு யாரிட அருந்துமென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்து முண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு என மயங்கும்

என்ற புலம்பும் நிலையில் சீதையின் குண சௌந்தர்யம் உச்ச ஸ்தானத்தையே அடைகிறது. இந்த நிலையில்தான் இராமதூதனாகிய அநுமன் வந்து சீதையைக் காண்கின்றான். ஆழி கொடுத்து ஆற்றுகின்றான். திரும்பிச் சென்றுதான் சீதையைக் கண்டு களித்ததை இராமனிடம் கூறுகின்றான்.

விற்பெருந் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பு என்ப தொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரெதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்

என்று அவன் தான் கண்ட காட்சியை வர்ணிக்கின்றான்.

உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரும் மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெரும் தநயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந்தெய்வம் ஐயா!

என்று வாயாரப் பாடி நாவாரத் துதித்து, சீதையை ஒரு சௌந்தர்ய தேவதையாகவே ஆக்கிவிடுகிறான். சௌந்தர்ய தேவதையை அத்துடன்விட்டானா அவன்? அவளுக்கு அழகான கோயிலையும் கட்டிக் கொடுத்து, அதில் அந்தத் தேவதையைப் பிரதிஷ்டை செய்துவிட்டான். ஆழியாகிய அகழி, இலங்கையாகிய மதில், அதனுள் அசோகவனமாகிய கோயில், கோயிலுள், இலக்குவன் கட்டிய பர்ணசாலையாகிய கர்ப்பக்கிருகம். அதனுள் தவமும் தவஞ்செய்து பெற்ற சௌந்தர்ய தேவதை கோயில் கொள்ளுகிறாள்.

“வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார், விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச்
சோலை, அங்கு அதனுள் உம்பி புல்லினால தொடுத்த தூய
சாலையுள் இருந்தாள் ஐய, தவம் செய்த தவமாம் தையல்”

என்று கம்பர் சௌந்தர்ய தேவதைக்குக் கட்டிக்கொடுக்கும் கலைக்கோயிலையும், ராஜராஜன் பெருவுடையாருக்குக் கட்டிக்கொடுத்திருக்கும் கலைக்கோயிலையும் ஒப்பிட்டு நோக்கினால் அவற்றின் ஒப்புமை தெரியும். இல்லாவிட்டால் முந்தையோர், செய்யுள் போல் செய்த திருக்கோயில் என்று தெரியாமலா பாடி வைத்தார்கள்?

கம்பன் பாட்டைப் படித்து ராஜராஜன் கோயிலைக் கட்டினானா? அல்லது ராஜராஜன் கலைக்கோயிலைப் பார்த்துக் கம்பன் கவி அமைத்தானா? அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியவர்கள் சரித்திர ஆசிரியர்கள். கம்பனையும் கலையையும் நாம் அனுபவித்தால் போதும். ராஜராஜன் கோயிலையோ அல்லது அதனுள் கோயில் கொண்டிருக்கும் பெருவுடையாரையோ கண்டு தமிழர் பலர் தலை வணங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த அரிய கலைக்கோயிலை அமைத்த தெய்வத் தச்சன், மகாகவி கம்பன் சந்நிதியிலே தமிழர் எல்லோரும் தலைதாழ்த்தித்தான் நிற்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/003-012&oldid=1346290" இலிருந்து மீள்விக்கப்பட்டது