கம்பன் சுயசரிதம்/004-012

விக்கிமூலம் இலிருந்து



4. கம்பன் கண்ட ராமன்


அந்தம் இல் அழகன் - இராமன்

மங்கியதோர் நிலவினிலே
கனவில் இதுகண்டேன்,
வயது பதினாறு இருக்கும்
இளவயது மங்கை
பொங்கிவரும் பெரு நிலவு
போற்ற வருந் தோற்றம்
துங்கமணி மின் போலும்
வடிவத்தாள் வந்து
‘தூங்காதே எழுந்து என்னைப்
பார்’ என்று சொன்னாள்.
அங்கு அதனில் கண் விழித்தேன்
அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வம்தான்
அது என்றே கண்டேன்.

என்று தன் அழகுத் தெய்வ தரிசனத்தைக் கூறுகிறான் பாரதி. அழகுத் தெய்வம் அவனுக்குப் பதினாறு வயது நிரம்பிய இளவயது மங்கையாகக் காட்சி கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே அழகுத் தெய்வம் பெண்மை உருவினதுதானா? ஆண்மையில் அழகே இல்லையா? ஆண்மையின் அழகைப் பெண்மையின் அழகு வென்று விடுகிறது என்று அர்த்தமா? பெண்ணே அழகுடையவள் என்று சொன்ன பெருமக்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம் ஆண்மக்களே அல்லவா? பறவை இனத்தை எடுத்துக் கொண்டால், சேவல் கோழியைவிட அழகுடையதாக இருக்கிறது; ஆண் மயில் பெண் மயிலை விட அழகு வாய்ந்தது என்பதை மறுப்பவர் இல்லை. அதுபோலவே, மிருக உலகிலும், பசுவை விடக் காளையும், பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கமும் அழகுடையதாய் இருக்க, இந்த மக்கள் இனத்திலே மட்டும், பெண் எப்படி ஆணை விட அழகாய் இருந்துவிட முடியுமா? இது நியாயமான கேள்வி. ஆடவர் தங்கள் பலவீனத்தை மறைக்கவே இப்படி பெண்ணின் அழகை மிகைப்படுத்திக் கூறி இருக்கிறார்கள். இந்த ஆண்களில் ஒரு சிலராவது நெஞ்சில் உரம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘பெண்ணின் அழகெல்லாம் எண்ணிப் பிரித்திடில் பீழை சதை என்றே கண்டிடுவோம்; வண்ண மலரிடை வாய்ந்த வனப்பெலாம் வாடி வதங்குதல் யாமறிவோம்’ என்று ஒரு இளங்கவிஞர் துணிந்து கூறி ஆண்களின் மானத்தையே காத்திருக்கிறார்.

இன்னும் அழகு ஆராய்ச்சியில் பலர் செய்கிற தவறு ஒன்று. ‘ராஜா மக்கள் ரோஜா மலர் நிறம்’ என்பர். சிவந்த நிறம் உடையவர்களே அழகு உள்ளவர்கள், கருப்பு நிறம் என்றால் அழகே இல்லாதவர்கள் என்பதுதான் பொதுஜன அபிப்பிராயம். இதிலே கூட அழகை ஆராதனை பண்ணுகிறவர்கள் தவறுதான் செய்கிறார்கள். மஞ்சள் கலந்த சிவப்பு கொஞ்சம் கவர்ச்சி உடையதே. அதற்காக செம்மேனி எம்மானையோ வெள்ளை வெளேரென்ற வெள்ளை நிறத்தவரையோ அழகுடையவர்கள் என்று சொல்லிவிடுதல் முற்றிலும் தவறு. குளிர்ச்சியில் ஒரு ருசி என்று கண்டவனே கருப்பில் ஒரு அழகு என்றும் சொல்லி மகிழ்ந்திருக்கிறான். நாம் வணங்கும் தேவர்கள் உலகிலே, பச்சைப் சுங்கொடி அந்த கருப்பில் அழகி உமை, சிவந்த லக்ஷ்மியின் அழகுக்கோ அல்ல வெள்ளை நிறத்து கலைமகள் அழகிற்கோ கொஞ்சமும் குறைந்தவள் அல்லவே. விஷ்ணுவின் நீலமேக சியாமள நிறத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ஆணழகன் அருச்சுனனும், காதற் கடவுள் காமனும் நல்ல கருத்த நிறத்தினரே. இவர்கள் எல்லாம் அழகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஆயிற்றே. அப்படியிருக்க, கருப்பைவிடச் சிவப்பு அழகு என்று கலா ரசிகர்கள் சொன்னால் அவர்களது ரசிகத் தன்மையை என்ன என்று சொல்வது?

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிந்த முடிவை நிலைநிற்கச் செய்கிறான் காவிய நாயகனான ராமன். வான்மீகர், ராமனது அழகில் எப்படி ஈடுபட்டாரோ? மூலத்தைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு இல்லாததினால் கூறுவதற்கில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்தி கம்பன் இருக்கிறானே அவன் ராம சௌந்தர்யத்தில் அப்படியே ஈடுபட்டு மெய் மறக்கிறான். ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகன்’ என்று அந்த அழகனை நிறைந்த பெருமையோடேயே குறிப்பிடுகிறான். அதிலும் அவனது கரிய நிறத்தையே பாராட்டி நல்ல இருட்டைப் போலக் கரிய நிறத்தவன் என்றே கூறுகிறான். இந்த ‘இருங்கடக் கரதலத்து எழுதரிய திருமேனிக் கருங்கடலை’ மனதிற்கும் எழுத ஒண்ணாச் சீதை கன்னிமாடத்திருந்து கண்டு காதல் கொள்கிறாள் என்பது கம்பன் சொல்லும் கதை. இந்த அழகனது அழகைத் தான் சீதை எப்படி அனுபவித்திருக்கிறாள். அதைக் கவிஞன் தானே சொல்ல வேண்டும். சொல்கிறான்; அழகு ஒழுகும் தமிழ்ப்பாட்டிலே

இந்திர நீலம் ஒத்து
   இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும்
   தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணிவரைத்
   தோளுமே, அல;
முந்தி என் உயிரை
   அம்முறுவல் உண்டதே

என்பதுதானே சீதையின் கூற்றாகக் கம்பன் சொல்வது. காதலுற்ற கன்னி சீதை கண்வழி நுழைந்த கள்வனாம் ராமனது அழகில் ஈடுபட்டு நின்றது வியப்பில்லை. பின்னர் ராமன் மிதிலை நகரிலே உலாவந்தபோது, வீதி வீதியாய் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம் தலைவாயிலுக்கு ஓடி வந்து ராமனைக் காணுகிறார்கள். ராமனது அழகு அவர்களை எப்படி வசீகரிக்கிறது? சிலர் அவன் தோளைப் பார்த்தார்கள்; சிலர் தாளைப் பார்த்தார்கள் தோளைப் பார்த்தவர்கள் தோளில் பதிந்த பார்வையை வேறு திருப்ப முடியாது தவித்தார்கள். தாளைப் பார்த்தவர்களும் தடக்கையைப் பார்த்தவர்களும் அப்படி அப்படியே. இப்படியே ஒருவராலும் அவனது வடிவம் முழுவதையும் கண்டுகளிக்க முடியாமலே போய் விடுகிறது. ஒவ்வொரு அங்கமுமே அத்தனை வசீகரம் என்றால், முழுவடிவினையும் எப்படி என்று சொல்ல?

தோள் கண்டார் தோளே கண்டார்;
   தொடுகழல கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
   தடக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே
   வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்

என்பது பிரபலமான பாட்டாயிற்றே. அடடே இந்த சௌந்தர்ய ஈடுபாட்டை வைத்துக்கொண்டு, சமயவாதிகள் ஒவ்வொருவரும் இறைவனது திருஉருவில், ஒவ்வொரு அம்சத்தையே காண்கிறார்கள் என்ற அற்புத உண்மையைக் கூட அல்லவா கவிச்சக்கரவர்த்தி எளிதாக விளக்கிவிடுகிறான்.

சீதையும் இராமனும் காதலித்துக் களிக்கும் வாழ்வில்தான் எத்தனை அழகு? அவர்களது அழகுடைய வாழ்க்கைக்கு மிதிலா நகரமோ, அல்லது அயோத்திப் பட்டணமோ, இல்லை அங்குள்ள அரச மாளிகைகள் தான் வேண்டும் என்றில்லை. கங்கையிலே, தோணியிலே ஏறிச் சென்றாலும் சரி, தண்டகாரண்யத்திலே கோதாவரிக் கரையானாலும் சரி, அழகனும் அழகியும் குதூகலமாகவே இருக்கிறார்கள். படகில் செல்லும்போதோ,

பால் உடை மொழியாளும்
   பகலவன் அனையானும்
சேல் உடை நெடுன்னீர்
   சிந்தினர் விளையாடி

என்பதுதான் காட்சி. இன்னும் கோதாவரிக் கரையிலே ஓதிமம் ஒதுங்கக் கண்டால், பக்கத்தில் உள்ள சீதையின் நடையோடு, அன்னத்தின் நடையை ஒப்பிட்டு, அன்ன நடை சீதையின் நடைக்குத் தோற்கிறதே என்று சிறுநகை செய்கிறான் ராமனும். சீதையோ, அங்கு வந்து நீருண்டு மீளும் யானைக்குட்டி நடப்பதைத் தன் கணவன் நடையோடு ஒப்பிட்டு, யானையின் நடையையும் விஞ்சுகின்றதே தன் காதலன் நடை என்று பெருமிதம் அடைந்து, புதியதோர் முறுவலே பூக்கிறாள். இப்படியே இன்னும் எத்தனையோ காட்சிகள் காவியம் முழுவதும்.

பெற்ற தந்தையாம் தயரதனோ, அன்னையரோ, இல்லை வில்வித்தை பயிற்றிய விஸ்வாமித்திரனோ ராமனது அழகில் ஈடுபட்டு நிற்பது வியப்பில்லை. கிஷ்கிந்தையை அடுத்த மலையிலே ஒழிந்திருந்த வானர வீரன், சுக்ரீவன் கூட, அந்த குண்டலம் துறந்த கோலத்திலும் குளிர்ந்த கண்களின் அழகிலும் ஈடுபட்டு நிற்கிறானே. அடடே, புயல் தழுவிய மரகத மலை போன்ற அந்தத் தோள்களின் பேரிலே மதி தவழும் முகமாகிய புண்டரீகங்கள் அல்லவா பூத்துக் குலுங்குகின்றன என்றே அதிசயிக்கிறான் அவன். இராமனது சௌந்தர்யத்திலே குகன் ஈடுபடுகிறான், அனுமன் ஈடுபடுகிறான், விபீஷணன் ஈடுபடுகிறான், என்றெல்லாம் எத்தனையோ சான்றுகள். எல்லாவற்றையும் விட, அந்த காமவல்லியாம் சூர்ப்பனகை ஈடுபடுகிறாளே அதை என்ன என்று சொல்ல? பஞ்சவடியிலே பன்னக சாலையிலே இருக்கின்ற ராமனைக் காண்கின்ற சூர்ப்பனகை இவன் என்ன மன்மதனா? ஆம், அன்று கற்றைவார் சடையவன் கண்ணில் எழுந்த தீயினால் வெந்த அநங்கன், எத்தனையோ வருஷ காலம் தவம் செய்து இந்த நல்ல உருவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே அவளது தீர்மானம். அவனது மணிக்கரம், வீரத்தோள் எல்லாம் கிடக்கட்டும் அவனது அகன்ற மார்பு இருக்கிறதே. அதை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் பார்க்க கண்களுக்கு நீளம் போதாது போல் இருக்கிறதே என்று வேறே ஐயுறுகிறாள். கடைசியில் அந்த அழகன் வாள் முகம் பொதி அவிழ் தாமரைப் பூவை ஒத்ததா? இல்லை மதியை ஒத்ததா என்றெல்லாம் தீர்மானிக்க முடியாமல் தத்தளிக்கிறாள். இத்தனை அழகை இவன் பெறத் தவமே தவம் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். இம்மட்டோ பின்னர் சீதையையும் இராமனையும் சேர்த்துப் பார்த்த பின் இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவ்விருவர் என்றே அவர்களது அழகை அனுபவிக்கிறாள். இப்படி எல்லாம் ராமனது அழகை அனுபவித்த சூர்ப்பனகை, இலங்கைக்கே ஓடி இராவணனிடம் தன் முக்கு அறுபட்ட கதையைச் சொல்கிறாள். சீதையின் அழகை வர்ணிப்பதற்கு முன்பே, யாவர்க்கும் எழுத ஒண்ணாத ராமனை வர்ணிக்கிறாள். கடைசியில் விரகதாபத்தால் வெந்து கொண்டிருக்கும் ராவணன், தன் உரு வெளித்தோற்றத்தில் கண்ட சீதை தானா அவள் சொன்ன சீதை என்று சூர்ப்பனகையிடம் கேட்க, அவள் ராமனையே அவளது உரு வெளித்தோற்றத்தில் கண்டு. ஆம் அவனே,

செந்தாமரைக் கண்ணொடும்,
   செங்கனி வாயினோடும்,
சந்து ஆர்தடந் தோளொடும்,
   தாழ் தடக்கைகளோடும்
அம்தார் அகலத் தோடும்
   அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும்
   அவ்வல் வில் இராமன்

என்கிறாள். ராமனது அழகை எல்லோரையும் விட, நன்றாக அனுபவித்தவள் (கவிச் சக்கரவர்த்தி கம்பன் சொற்படி) சூர்ப்பனகை என்று சொன்னால் வியப்பில்லைதான்.

இந்த கருநிறக் கமலக் கண்ணன் போர் செய்யப் புறப்பட்டாலும் அதிலுமே ஒரு அழகு. ‘சரன் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்து, தள்ளா உரன்படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஈர்த்து’ அவன் போருக்கு எழும் காட்சியும் அழகாகவே இருக்கிறது. இப்படியே இருந்தால், எழுந்தால், நடந்தால், கிடந்தால் எல்லாம் ராம சௌந்தர்யம் வளர்ந்துகொண்டே போகிறது. இன்னும், வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எல்லோருமே ராமனது அழகில் ஈடுபட்டு நிற்கிறார்கள். இப்படி ஒரு ராமனை, அந்தமில் அழகனை உருவாக்கிய கம்பன் கடைசியில் தானுமே அவன் அழகில் ஈடுபட்டு மெய்மறக்கிறான். ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தான்’ என்பான் ஒருதரம். ஆடவரும் பெண்மையை அவாவுவர் அவன் தோள்களை அணைய என்பான் மறுதரம். இதனால் எல்லாம் திருப்தி அடையாது

வெய்யோன் ஒளிதன் மேனியின்
   விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும்
   இளையானொடும் போனான்
மையோ! மரகதமோ! மழைமுகிலோ
   ஐயோ! இவன் வடிவு என்பதுஓர்
அழியா அழகுடையான்

என்றே முடிப்பான். அவன் அழியா அழகினை அழியாக் காவியத்திலேயே நிலைநிறுத்திவிடுகிறான் கம்பன். அந்த அழகை ஆராதனை பண்ணிப் பண்ணியே காவியம் வளர்கிறது, விரிகிறது. உயர்கிறது என்று சொன்னால் அது மிகையே அல்ல.

விற்பெரும் தடந்தோள் வீரன் - ராமன்

தமிழர்களது வீரம் பிரசித்தமானது. இன்றைய தமிழர்களை, நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி நிற்கும் தமிழர்களைச் சொல்லவில்லை. பழைய சங்க காலத்திய தமிழர்களைத் தான் சொல்கிறேன். சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் வீரப் பிரதாபங்களும் மெய்க் கீர்த்திகளுமோ அனந்தம். இந்த அரசர் பெருமக்கள் எல்லாம் எப்படிச் சிறந்த வீரர்கள் ஆனார்கள்? நல்ல வீரர்களைத் தங்கள் படை வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும் வைத்திருந்ததினாலே அல்லவா? பரணி பாடிய ஜயங்கொண்டார் நமக்கு ஒரு வீர மனைவியை, அவள் மூலமாக ஒரு வீரபுருஷனையே நமக்கு அறிமுகப்படுத்துகிறார். போருக்குச் சென்ற தலைவன் போரில் விழுந்துவிடுகிறான். அவனது உடலைத் தேடி ஓடுகிறாள் மனைவி. அவள் எதைத் தேடுகிறாள்?

பொருதடக்கை வாள் எங்கே?
   மணிமார்பு எங்கே?
போர்முகத்தில் எவர் வரினும்
   புறங்கொடாத பருவயிரத்
தோள் எங்கே? எங்கே?
?

என்று கேட்டுக்கொண்டே ஓடும் வீரப்பெண்ணை நினைக்கும்போது, அவள் புருஷன் எத்தனை வீரனாக இருக்க வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வீர மனைவியை மாத்திரமா பார்க்கிறோம் வீரத் தாயாரையுமே பார்க்கிறோம் போர்க்களங்களில். நரம்பு எழுந்து உலறிய பழுத்த கிழவி ஒருத்தி போருக்குச் சென்றிருந்த தன் மகன் அங்கே விழுந்து விட்டான் என்று கேட்டு, மகனைத் தேடிச் செல்கிறாள் போர்க்களத்திற்கு. வாளேந்திச் செல்லும் அவளது ஆதங்கம் எல்லாம் அவன் எப்படி இறந்தான் என்று அறிவதிலேதான். மார்பிலே வேலை ஏற்றா அல்லது முதுகிலே புண்பட்டா? என்பதே அவளது கேள்வி. போர்க்களத்தைச் சுற்றிவந்து தன் மகன் மார்பிலே விழுப்புண் பெற்றே மடிந்து வீழ்ந்திருக்கிறான் என்று அறிந்தபோது, அவனை ஈன்றபொழுதில் பெற்ற மகிழ்ச்சியைவிட பெரிய மகிழ்ச்சியே அடைகிறாள். இவள் வீரத்தாய். நல்ல தமிழ் மகள். இத்தகைய வீர மனைவியரை, வீரத் தாயரைப் பெற்றிருந்தது அன்றைய தமிழகம் என்றால் அர்த்தம் என்ன; நாடு முழுவதும் நல்ல வீரர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பதுதானே.

இப்படி வீரர்கள் நிறைந்த நாட்டிலே பிறந்த வீரக் கவிஞன் ஒரு வீர காவியம் எழுதுகிறான். காவிய நாயகனோ வீர மரபிலேயே வந்தவன், வீர மன்னனின் மகன், ஏன் கோதண்டம் ஏந்திய கையன். அவனைப் பற்றி அவன் விரத்தைப் பற்றியே காவியம் முழுவதும் எழுதித் தீர்க்கிறான். எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் மிகுந்த அரக்கரது பலமே முன்னிற்கிறது. ராமன் வில்லேந்தி தன்னந் தனியனாய் அவர்கள் முன் நிற்கிறான். அவன் வில்லின் நாணை வளைக்கிறான், சரங்கள் பாய்கின்றன. வில்லில் கட்டிய மணிகள் ஒலிக்கின்றன. அந்த ஒலியைக் கேட்கிறான் கவிஞன். வில்லின் ஆற்றலைச் சொல்கிறான் காவியத்திலே

படுமத கரிபரி சிந்தின;
   பனிவரை இரதம் அவிந்தன;
விடுபடை திசைகள் பிளந்தன;
  விரிகடல் அலறது எழுந்தன;
அடுபுலி அவுணர்தம் மங்கையர்
   அலர்விழி அருவிகள் சிந்தின
கடுமணி நெடியவன் வெஞ்சிலை
   கணகண, கணகண எனுந்தோறும்

என்ற பாடலை இரண்டு மூன்று தடவைப் பாடித்தான் பாருங்களேன். வில்லின் மணியோசை கேட்கும் உங்கள் காதில் ‘கணகண’ என்று. வில்லேந்திய வீரனாம் ராமனை இப்படி இலங்கைப் போர்க்களத்திலே காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

ராமனது வீரம் எத்தகையது எனறு தெரியப் போாக்களத்திற்கே போகவேண்டாம். அயோத்தியிலே அரண்மனையிலேயே இருக்கட்டுமே, அங்குமே அவன் வீரனாகத்தான் வாழ்கிறான். அந்த இளவயதிலே அவனை விரும்பிக் கேட்டுப் பெறுகின்றார் விஸ்வாமித்திரர் தன் வேள்வி காக்க அவருடன் புறப்படுகிறான் தம்பி இலக்குவன் உடன்வர.

வென்றிவாள் புடை விசித்து
   மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி
   யாத்து, இரு
குன்றம்போல் உயர்
   தோளில் கொற்றவில்
ஒன்று தாங்கி

அவன் புறப்படுவதைச் சொல்கிற கம்பன் அப்படியே ஒரு வீரனை, இளைஞனான வீரனைத்தான் நம் கண் முன் கொணர்கிறான். விஸ்வாமித்திரர் வேள்வி காக்கிற நேரத்திலேயே அவன் முதற்போர் ஆரம்பித்து விடுகிறது. அந்தக் கன்னிப் போரில் காகுத்தனுக்கே வெற்றி. அதில் ராமனுக்கு மட்டும் ஒரு குறை. முதற்போரில் தன் எதிராளி ஒரு பெண்ணாய் அமைந்துவிட்டாளே என்று. தாடகை என்பவளையும் பெண்களின் வரிசையிலா சேர்ப்பது? பெண்ணுருவில் வந்த பெரும்பூதம் ஆயிற்றே. ஆதலால் குரு ‘கொல்’ என்ற உடனே வில்லை வளைக்கிறான். தாடகையின் சூலம் இற்று விழுகிறது. அவள் உடலில் சுடுசரம் பாய்ந்து வெளிவருகிறது. அவளும் விழுந்து மடிகிறாள். இப்படி ராமன் முதற்போரிலே வெற்றிபெற்றதை, பார்த்தவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் விஸ்வாமித்திரர். சீதையின் தந்தையாய ஜனகனிடத்து ராமனை அறிமுகப்படுத்தும் போது,

அலைஉருவக் கடல் உருவத்து
   ஆண்தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புயவலியை
   நீஉருவ நோக்கு ஐயா!
உலைஉருவக் கனல உமிழ்கண்
   தாடகைதன் உரம்உருவி
மலைஉருவி, மரம்உருவி
   மண்உருவிற்று ஒருவாளி

என்று எவ்வளவு கம்பீரமாகப் பெருமிதத்தோடு சொல்கிறார்.

சீதையை மணக்க நிபந்தனையாக அமைந்த அந்த அரனது வில்லை, எடுத்ததைப் பார்த்தனர் கூடி இருந்தவர், பின்னர் அது இற்றதையே கேட்டனர். எத்தனையோ வீரர்களால் அசைக்கவே முடியாத அந்த வில், இராமன் எடுத்து நாணேற்றுவதற்குள்ளே ஒடிந்தே விடுகிறது என்றால் எவ்வளவு வலியுடையவனாக அவன் இருந்திருக்க வேண்டும்? இது மட்டுந்தானா? பரசுராமன் ஏந்தி வந்த அந்த நாரணன் வலியன் ஆண்ட அந்த வெற்றி வில்லையுமே வளைத்து இதற்கு இலக்கம் தருக என்று பரசுராமனிடத்திலேயே கேட்க வேண்டும் என்றால் எவ்வளவு வீரனாக வாழ்ந்திருக்க வேண்டும். இந்த வீரம் அவன் கைகளில் மாத்திரம்தானா இருக்கிறது, அவன் நெஞ்சிலுமேதான் இருக்கிறது. இந்த வீரமே தண்டகாரண்யத்திலும், பின்னர் இலங்கையில் நடந்த போரிலும் துணைநின்று வெற்றியை ராமனுக்குத் தேடித் தந்திருக்கிறது.

பஞ்சவடியிலே நடக்கிறது ஒரு போர். அந்தப் போரிலோ, கரன் தூடணன் திரிசிரா என்ற வீரர்களை எல்லாம் ‘வில்லொன்றால் கடிகை மூன்றில்’ கொன்று குவித்து விடுகிறான். இந்த சுந்தரத் தனி வில்லியே பின்னர் இலங்கையிலே, கும்பகர்ணனையும், இராவணனையும் முடிக்கிறான். மூல பலத்தையே நிர்மூலம் ஆக்குகிறான். இத்தனையையும் கவிஞன் எத்தனையோ தரம் எப்படி எப்படி எல்லாமோ சொல்லிச் சொல்லி மகிழ்கிறான்.

இதில் எல்லாம் விசேஷம் என்ன என்றால், குன்றாத வலியுடை அரக்கர் தலைவனாம் ராவணன் முதல் நாள் போரில், இராமனிடம் தோற்று, தார்அணி மவுலிபத்தையும், சங்கரன் கொடுத்த வாளையும் வீரத்தையும் களத்திலேயே விட்டு வெறுங்கையோடு இலங்கை புகுந்தவனே, ராமனது வீரத்தைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுகிறான். ‘அந்த ராமனால் செய்யமுடியாத காரியம் என்னதான் இருக்கிறது? மேருவைப் பிளக்க வேண்டுமா? விண்கடந்து ஏகவேண்டுமா? பாரினை உருவ வேண்டுமா? பௌவத்தைப் பருக வேண்டுமா? அத்தனையும் செய்யவல்லது அவன் விடும்சரங்கள். அவன் எப்படி வில்லை வளைக்கிறான், நாணேற்றுகின்றான், எப்படி அம்பை எய்கின்றான் என்பதை எல்லாம் யார் கண்டார்கள்? யார் அவன் செய்கை தேர்வார்’ என்று தன் பாட்டனான மாலியவானிடமே சொல்லிச் சொல்லி ஆற்றாது நைகிறான். ‘அடடா! அவன் வில்லினின்றும் எழும் பகழி இருக்கிறதே அதை என்ன சொல்ல’ என்று அலறுகின்றவன் ஒரு கவிஞனாகவே ஆகிவிடுகின்றான்.

நல்இயல் கவிஞர் நாவில்
    பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல்என, செய்யுள் கொண்ட
    தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா
    இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே
    காகுத்தன் பகழி மாதோ!

என்பதே அவனது பாராட்டு. வீரனை வியவாத வீரனும் உண்டோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இந்த இராவணன் பாராட்டுக்களைக் கம்பன் கவியாக நாம் படிக்கிறபோது.

கடைசியில் இந்த வீரன் ராவணனது மார்பையே சல்லடைக் கண்களாகத் துளைத்து விடுகிறது ராமனது சரம். போர்க்களத்தில் விழுந்து உயிர் துறந்து கிடக்கிறான். அவன் மனைவி மண்டோதரி வந்து மேல் விழுந்து புரண்டு அழுகிறாள். அவன் உடலை, ராமனது அம்புகள் எப்படித் துளைத்திருக்கின்றன என்பதைப் பார்க்கிறாள். புலம்புகிறாள்,

வெள் எருக்கம் சடைமுடியான்
வெற்பு எடுத்த திருமேனி
மேலும் கீழும்
எள் இருக்கும் இடம் இன்றி
உயிர் இருக்கும் இடம் நாடி
இழைத்த வாறோ!
கள் இருக்கும் மலர்க் கூந்தல்
ஜானகியை மனச் சிறையில்
கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி
உடல் புகுந்து தடவியதோ
ஒருவன் வாளி

என்பதுதானே அவள் தன் அங்கலாய்ப்பு. ‘சொல் ஒன்றே, மனைவி ஒன்றே, அம்பும் ஒன்றே’ என்ற புகழ் நிறுவிய வீரன் ராமனின் பெருமைகளைக் கவிஞனும் சொல்லிக் கொண்டே போகிறான். நானும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். முடிவு வேண்டுமே என்றுதான் நிறுத்தவேண்டியிருக்கிறது.

ஒரேயொரு ஐயம். ‘ராவணாதியர் வதத்தை நிகழ்த்தி முடித்தது, ராமனது வீரம் மட்டுந்தானா? சீதைக்கு இந்த வெற்றியில் பங்கே இல்லையா? அவள் தன் கற்பு என்னும் கனலும் ராமனது அம்போடு சேர்ந்து அரக்கர்களைச் சுட்டெரிக்கவில்லையா? பஞ்சு எரி உற்றது போல, அரக்கர் எல்லாம், சீதையின் கற்பாகிய கனலில் அல்லவா வெந்து மடிகிறார்கள். ஏன்? விபீஷணனே ராவணன் இறந்து வீழ்ந்ததும்,

உண்ணாதே உயிர் உண்ணாது
ஒரு நஞ்சு ஜானகி எனும்
பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே
போக்கியதே உயிர் நீயும்
களப்பட்டாயே

அண்ணாவோ! அண்ணாவோ! என்று அலறுகின்றானே. ஆதலால் ராமவீரத்திற்குத் துணை நின்றது சீதையின் கற்பும்கூடத்தான் என்றும் சொல்லலாமே’ என்கிறார் ஆராய்ச்சி அறிஞர். சொல்லலாம்தான். ராமனிடம் அமைந்திருந்த வீரம், சீதையின் கற்பு காத்த வீரம். ஏன் அறம் நிலைநிறுத்திய வீரம் என்றெல்லாம் விரித்தாலும் வீரம் வீரம் தானே. ஆகவே, அந்த வீரம் விளைத்த வீரனுக்கே நமது அஞ்சலி.

உத்தமபுருஷன் - இராமன்

வான்மீகி முனிவரைக் காண நாரதர் ஒருநாள் வருகிறார். சண்டைகளை ஆரம்பித்து வைப்பவரும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவரும் நாரதர்தானே. அதனால் நாரதரிடம் தன் சந்தேகங்கள் தீர வான்மீகர் கேட்கிறார். இந்த நிலவுலகத்திலே பிறந்தவர்களுள்ளே சிறந்த வீரியவான் யார்? சிறந்த குணவான் யார்? நல்ல தருமம் அறிந்தவன் யார்? நன்றி அறிதல் உள்ளவன் யார்? சத்தியமே உரைப்பவன் யார்? திடமான விரதம் உள்ளவன் யார்? என்று அடுக்கிக் கொண்டே போகிறார். நாரதர் அவரை இடைமறித்து இத்தனை கேள்விக்கும் பதில் ஒன்றுதான். வீரமும் குணங்களும் நிறைந்தவன் ராமன், சத்திய சந்தன் ராமன், தருமம் உணர்ந்தவன் ராமனே என்று கூறிவிடுகிறார். அத்தகைய சகல குண சம்பன்னனாகவே ராமன் உருவாகியிருக்கிறான்.

வான்மீகியின் ஆதிகாவியத்திலே சிறந்த புருஷனுக்கு இருக்கவேண்டிய குணங்கள் பதினாறு என்பர். அதில் முதன்மையாக இருக்கவேண்டியது சீலம் என்று சொல்லுவர். சீலம் என்றால் அரிய பண்பு. பெரிய நிலையில் உள்ளவர்கள், தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடத்து அன்பு காட்டி அவர்களையும் அரவணைத்துக் கொள்வதுதான். அந்தச் சீலம் நிரம்பியிருந்தவன் ராமன். சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவாகிய சீதையை மணம் முடித்துக் கொண்டதனால் மட்டும் சீலவானாக அவன் அமையவில்லை. அது அவனுக்குக் கருவிலே வாய்த்த திரு. சக்கரவர்த்தி, திருமகனாகப் பிறந்து வளர்ந்தவன். இளவயதிலேயே, தெருவில் போவோர் வருவோர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் நலன் வினவுவான் என்பான் கம்பன்.

எதிர் வரும் அவர்களை
   எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின்
   முக மலர் ஒளிரா
எதுவினை? இடர் இலை?
   இனிதின் நும் மனையும்?
மதி தரு குமரரும்
   வலியர் கொல்?

என்றெல்லாம் விசாரிப்பது கொஞ்சம் வயதுக்கு மூத்த செயலே என்றாலும் சீலம் நிறைந்தது என்பதை மறுக்க முடியாது. இதே சீலமே, பின்னர், கங்கைக் கரையில் உள்ள குகனிடத்தும், கிஷ்கிந்தையில் இருந்த சுக்ரீவனிடத்தும், இன்னும் தன்னோடு தொடர்பு கொள்ளும் எல்லாப் பாத்திரங்களிடத்தும். இப்படி அவன் நடந்து கொள்வதே அவனை ஓர் உத்தமபுருஷன் ஆக்குகிறது. குகனோ வேடன். அவன் செய்கின்ற காரியம் கங்கையைக் கடக்கத் தோணிவிடுதல். இதைத்தான் செய்கிறான் குகன், ராமன், இலக்குவன், சீதை மூவரும் கானகம் செல்லும் வழியில் கங்கை கரைக்கு வந்தபொழுது. ஏதோ அன்பின் மிகுதியால், தராதரம் அறியாமலே ‘தேன்உளது, தேனை உண்டு தேவ்ரும் நுகர்தற்கு ஆம் ஊன் உளது, துணைநாயேம் உயிர் உளது, விளையாடக் கான் உளது, புனலாடக் கங்கையும் உளது. வேறு என்ன வேண்டும். இங்கேயே நீ இருந்துவிடு’ என்று இராமனை மிக்கப் பரிவோடு வேண்டிக் கொள்கிறான். குகனது அன்பினை அறிந்த ராமன் அப்படியே கனிந்து உருகி விடுகிறான். தன்னுடன் சக்கரவர்த்தியின் மக்களாகப் பிறந்தவர் இலக்குவன் பரதன் சத்ருக்கனன் என்ற மூவர் மாத்திரம் அல்ல. இங்கேயும் ஒருவன் இருக்கிறானோ, நான்காவது குமாரனாக என்றே எண்ணுகிறான்.

என்னுயிர் அனையாய் நீ
    இளவல் உன் இளையான்;
நன்னுதல் அவர் நின்கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது, நான் உன்
    தொழில் உரிமையில் உள்ளேன்

என்றே கூறி அவனை மகிழ்வககறான். தானுமே சந்தோஷமுறுகிறான். இந்த சீலம் வளர்க்கும் சகோதரத்துவம் இன்னும் விரிந்து கொண்டே போகிறது. கிஷ்கிந்தையில் ஒரு வானர வீரன் சுக்ரீவன் அடுத்த தம்பியாகிறான். இலங்கை அரக்கர் கோனின் தம்பி விபீஷணனையும் ஆறாவது சகோதரனாகவே ஏற்றுக் கொள்கிறான்.

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு,
    பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்,
    எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல் அரும் கானம் தந்து
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை

என்றே பாடுகிறான் கம்பன். அற்புதமான சீலமே உருவாகிவிடுகிறது. கம்பன் கண்ட ராமாயணத்தில் தசரதன் தன்னுடைய தந்தை மட்டுமல்ல. வீபிஷணனுக்கே தந்தை என்றல்லவா கூறுகிறான் ராமன். இந்த சகோதர தத்துவத்தையே விளக்க எழுந்த கதையாகவே, கம்பனது ராமாயணம் உருவாவதைப் பார்க்கிறோம். இந்தச் சகோதர உணர்ச்சியே கதை முழுவதும் வியாபித்து நிற்கிறது.

ராமன் சீலம் நிறைந்தவன் மட்டும் அல்ல. மக்களுள், நல்ல பிள்ளைக்கும், நல்ல கணவனுக்கும், நல்ல அரசனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் உத்தம புருஷனாகவும் இருக்கிறான். வயது முதிர்ந்த தந்தை, ‘இருளுடை உலகம் தாங்கும் இன்னலை’ இளவயதிலேயே ராமன் மீது ஏற்ற விரும்பிய போது அந்த அரச பதவியை விரும்பவும் இல்லை. இகழ்ந்து ஒதுக்கவும் இல்லை. ஆகவே கடன் என உணர்ந்து அரசன் என்ன பணி செய்யச் சொல்கின்றானோ அதனைச் செய்வதே நீதியும் தருமமும் என்று மிக்க அடக்கமாகவே ஏற்றுக் கொள்கிறான். ஆனால் மறுநாளே, மந்தரையின் சூழ்ச்சியால் மனம் மாறிய கைகேயிக்குக் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்பட்டு ‘காட்டுக்குப் போ’ என்று ராமனை, தந்தையும் தாயும் ஏவியபோதும், ‘தந்தை ஏவ, அதைத்தாய் உரைக்க இயைந்து என்னைவிடப் பிறந்த பயன் எய்தினவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்’ என்று அமைதியோடு ஏற்றுக் கொள்கிறான். இந்த நிலையில் கவிச்சக்கரவர்த்தி கம்பன், அந்த செப்பருங்குணத்து ராமன் திருமுகச் செவ்வியை நோக்குகிறான். அப்போதும், அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினையும் வென்று நிற்கும் முக அழகைக் கண்டு அப்படியே பரவசம் அடைகிறான், என்னே இவனது உள்ளத்தின் உயர்வு என்று. கோசலை, சுமித்திரை முதலிய தாயாரிடம் அவன் விடைபெறும் காட்சி, அவன் சிறந்த மகன் என்பதையே காட்டும். வள்ளுவன் சொன்னானே ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்’ என்று. அதையே நினைவு கூறுகிறோம் நாம், இத்தகைய புதல்வனைப் பெறுவதற்கு தந்தையாம் தசரதன் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்று.

ராமன் ஏக பத்ணி விரதன் என்பது பிரசித்தம். எவ்வளவோ சொல்லியும் கேளாமல் சீதை ராமனுடன் காட்டிற்குப் புறப்பட்டு விடுகிறாள். எல்லையற்ற இடர் இதனால் நேரும் என்று தெரிந்தும் உடன்கூட்டிச் செல்கிறான். அங்கும் அந்த சீதை சொல்கேட்டு மாரீசன் என்னும் மாயமானையே தொடர்கிறான். அதனால் சீதையை அரக்கன் சிறை எடுக்கவே காரணமாக இருக்கிறான். பின்னர் சிறையிலிருந்த செல்வியாம் சீதையைத் தேடி இலங்கை சென்று ராவணனைக் கொன்று சீதையைச் சிறைமீட்டு வருகிறான். சீதை அசோகவனத்தில் சிறை இருந்த காலம் எல்லாம் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் உயிர் காத்தது என்னது என்று நினைக்கிறீர்கள். ராமன் அவள்பால் கொண்டிருந்த அன்புதான்.

அன்று மிதிலையில் வந்து தான் கரம் பற்றிய போது ‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று கூறி அந்தச் செவ்விய வரம்பிலேயே நின்றிருக்கிறான் என்றால், அதனைச் சீதையால் பாராட்டாதிருக்க முடியுமா? சீதையின் பிரிவால் அவன் துயறுற்றுப் புலம்பும் நிலையெல்லாம் அவனை ஓர் உத்தம புருஷனாகத்தானே காட்டுகின்றது.

இந்த மாவீரன் ராமனுக்குத்தான். விதியின் விளையாட்டில் எத்தனை நம்பிக்கை. ‘வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ’ என்று தன்னையே தேற்றிக் கொள்ளும் வகையைக் கம்பன் பல இடங்களில் கூறுகின்றானே. ஏன் அன்று ராமனுக்குப் பட்டம் இல்லை, பரதனுக்குத் தான் பட்டம் என்பதை இலக்குவன் அறிந்து கொதித்து எழுந்தபோது, அவனது ஆறாக்கனல் ஆற்றும் அஞ்சனமேகம் போன்றல்லவா இருந்திருக்கிறான். அத்தோடு தம்பி இலக்குவனைப் பார்த்து

நதியின் பிழை அன்று
    நறும் புனல் இன்மை; அற்றே
பதியின் பிழை அன்று
    பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
    மகன் பிழை அன்று, மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
    என்கொல் வெகுண்டது

என்றுதானே சமாதானம் கூறுகிறான். மனிதனாய்ப் பிறந்தவனிடத்து, சக்கரவர்த்தித் திருமகனாக வாழ்ந்தாலும், விதி தன் வலியைக் காட்டியே தீரும் என்பதில் தான் இந்த ராமனுக்கு எவ்வளவு நம்பிக்கை.

ராமன் எப்படி ஆட்சி செய்தான் என்பதை கவிஞனுக்குக் கூற வாய்ப்பு இல்லை. காவியம் பட்டாபிஷேக மகோத்ஸவத்தோடேயே நின்றுவிடுகிறது. ஆனால் கவிச் சக்கரவர்த்தி, ராமராஜ்யம் எப்படி இருந்திருக்கும் என்று நாமெல்லாம் கற்பனை பண்ண உதவியிருக்கிறான். நல்ல அறத்தை அடிப்படையாகக் கொண்டே ராஜ்யபாரம் நடந்திருக்கவேணும். ‘ஆற்ற நல் அறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை.’ அந்த ராம ராஜ்யத்தில் வறுமை இன்மையால் வண்மையே இல்லை. பலரும் கல்வி கேள்விகளில் உயர்ந்திருந்ததால், ஒள்ளிய அறிவு படைத்தோர் என்ற கூட்டமே அங்கு இல்லை என்கிறான் கவிஞன். திருடும் கள்ளர்களே இல்லாததால், காவல்காரர்களே வேண்டியிருக்கவில்லை. கொடுப்பதை ஏற்கப் பிச்சைக்காரர்களே இல்லாததால், தானம் கொடுப்பவர்களுமே இல்லை என்கிறான். இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல்

கல்லாது நிற்பார் பிறர்
இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை, அவை
வல்லர் அல்லாரும் இல்லை

எல்லோரும் எல்லாப் பெருஞ்
   செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்
   களும் இல்லை மாதோ

என்று இன்றைய சோஷலிச சமுதாயத்தையே உருவாக்கிக் காட்டுகிறான். அப்படியெல்லாம் ராமராஜ்யம் நடக்கும், நடந்திருக்க வேணும் என்றே கோடி கோட்டுகிறான். ராமனைப் போன்ற உத்தம புருஷனது ராஜ்யத்தில் இப்படி வசியும் வளனும் நிறையாது பசியும் பிணியுமா இருக்கும் என்றெல்லாம் நம்மை எண்ண வைக்கிறான்.

ராமன் புருஷ உத்தமன்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றானே அது உத்தமன் செயல்தானா? என்று ஒரு கேள்வி. ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னதான் தத்துவங்களை எல்லாம் விளக்கி, இராமனுக்குச் சப்பைக் கட்டு கட்டினாலும், வாலிவதம் அவனுக்கு ஒரு தீராத வசையே. ஆனால் நான் சொல்லுவேன் இது ஒன்றே அவனை மனிதனாகக் காட்டுகிறது. அப்பழுக்கே இல்லாத ஒரு மனிதனைக் காட்டி இருந்தால் நாம் நம்பியே இருக்க மாட்டோம். எல்லா நல்ல குணங்களும் நிறைந்த மனிதன் வழுக்கி விழுகிறபோதுதான் அடே, இவன் ஒரு மனிதன்தான் என்ற உணர்ச்சி வருகிறது. அந்த உணர்ச்சியை உருவாக்கவே இந்த வசை உள்ள காரியத்தையுமே அவன் செய்கிறான்.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொன்னவன் வள்ளுவன். அந்த வள்ளுவன் காட்டிய வழியில் நின்றவன் ராமன். அந்த ராமன் புகழைப்பாடி, பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வமாக் கவிமாட்சி தெரிக்கச் செய்தவன் கம்பன்.

அவதார மூர்த்தி - இராமன்

வாலியால் துரத்தப்பட்ட அவன் தம்பி சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களோடு கிஷ்கிந்தையை அடுத்த ஒரு மலையிலே ஒளிந்து வாழ்கிறான் இந்த மலைப்பக்கமே வருகின்றனர் ராமனும் இலக்குவனும், இருவரையும் எதிர்சென்று கண்டு அளவளாவி, அவர்களது நட்பை சுக்ரீவன் பெறவைத்தால், வாலியை வெல்லலாம் என நினைக்கிறான் அனுமன். அவர்களை அழைத்துக்கொண்டு சுக்ரீவன் இருக்கும் இடம் வருகிறான். தூரத்தே வருகின்ற ராம லக்குமணர்களைச் சுக்ரீவன் பார்க்கிறான். ஏதோ அவர்கள் தவக்கோலம் பூண்டிருந்தாலும் அவர்கள் முகத்தில் அழகு சுடர்விடுகிறதைக் காண்கிறான். இதைச் சொல்கிறான் கம்பன்.

கண்டனன் என்ப மன்னோ
   கதிரவன் சிறுவன், காமர்
குண்டலம் துறந்த கோல
   வதனமும், குளிர்க்கும் கண்ணும்
புண்டரி கங்கள் பூத்துப்
   புயல்தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த
   மரகதக் கிரி அனானை

தூரத்திலே வருகிறபோது சுக்ரீவன் காணுவது மரகத மலை என வளர்ந்த தோள்களையுடைய அழகர் இருவரை. இந்த மதனன் அஞ்சுறு வடிவினர், இன்னும் கொஞ்சம் நெருங்கியே வருகிறார்கள். அவர்களை அப்போதுதான் கூர்ந்து நோக்குகிறான். இவர்கள் ஏதோ அழகு நிறைந்த புருஷர்கள் மாத்திரம் இல்லை. நல்ல வலியுடைய வீரர்களாக அல்லவா தெரிகிறது. ஏதோ இந்த உலகம் தவம் செய்து பெற்ற வீரர்களே இவர்கள் என்று அறிகிறான். இதையும் சொல்கிறான் கம்பன்.

நோக்கினான், நெடிது நின்றான்
நொடிவு அருங்கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
குவிந்து இருபடிவம் ஆகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
வீரராய் விளைந்தது என்பான்

அழகைக் கண்டவர்கள், வீரர்களாக காட்சி தருகிறார்கள். ஊன்றி நோக்கும்போது இன்னும் கொஞ்சம் பக்கத்திலேயே வந்துவிடுகிறார்கள் அவர்கள். ஆர அமர அவர்களது வடிவினைக் கண்டு நோக்கியபோது விஷயம் விளங்குகின்றது சுக்ரீவனுக்கு. இவர்கள் ஏதோ சாதாரண மனிதர்கள் அல்ல. மனித உருவில் வந்திருக்கும் தேவரும் தொழும் தேவரே. ஆம் இவர்கள் அவதார புருஷர்களாகவே அவதரித்திருக்கிறார்கள் என்று தேறுகிறான். இதனையும் விளக்கமாகவே கூறுகிறான்.

தேறினன், அமரர்க்கு எல்லாம்
   தேவர் ஆம் தேவர் என்றே
மாறி இப்பிறப்பில் வந்தார்
   மானுடர் ஆகி மன்னோ
ஆறு கொள் சடிலத் தானும்
   அயனும், என்ற இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம்
   மானுடம் வென்றது அன்றே!

என்று சுக்ரீவன் உணர்கிறான். உண்மைதானே! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, மனிதர் எல்லாம் வானுறையும் தேவர்களாக விரும்பும் நேரத்தில் வானுலகில், உள்ள தேவர்கள், மனிதர்களாக அவதாரம் செய்யவேண்டும் என்றால், இந்த மானுடப் பிறவியில் ஏதோ விசேஷம் இருக்கத்தானே வேண்டும். ஆதலால் தான் கம்பன் சொல்கிறான், அயன் அரன் என்ற தேவர் கூட்டத்தையே மானுடம் வென்றுவிடுகிறது என்று. இது மனிதனின் வெற்றியோ இல்லையோ? ராமன் ஓர் அவதார மூர்த்தி என்பதே கம்பனது எண்ணமாக இருந்திருக்கிறது. சுக்ரீவன் கூற்றாகக் கூறும் இந்த மூன்று பாடல்களின் மூலம் கம்பன் ராமனை எப்படிக் காண்கின்றான் என்ற உண்மையே தெற்றென விளங்கிவிடுகிறது. ராம கதை நாட்டில் வளர்ந்த விதமுமே, தெரிகிறது. நல்ல அழகனாக, சக்ரவர்த்தித் திருமகனாகப் பிறந்த ராமன் வான்மீகரது காவியத்திலே வீரனாக வளர்கிறான். கம்பனது ராமவதாரத்திலே ஓர் அவதார புருஷனாக உருக் கொள்கிறான். பின்னர் துளசிதாஸரது ராம சரித்திர மானசிலே அவதார மூர்த்தியாகவே ஆகிவிடுகிறான். எல்லோரும் வணங்கும் தெய்வமாகவே அவன் கருதப்படுகிறான்.

மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களிலே, ராமாவதாரம் மிகச் சிறப்புடையது. தச அவதார தத்துவமே, உலகத்தின் பரிணாமத்தை விளக்க எழுந்ததுதானே. இறைவனும் உலகத்தோடேயே வளர்கிறான். முதன்முதல் நீரில் மாத்திரமே வாழக்கூடிய மீனாக அவதரிக்கிறான். பின்னர் நீரிலும் நிலத்திலும் வசிக்கக்கூடிய ஆமையாக, அதன்பின் நிலத்தினை உழுகின்ற வராகமாக உரு எடுக்கிறான். அதன்பின்னர் பாதி மிருகமும், பாதி மனிதனும் ஆன உருவில், அதன்பின் வளர்ச்சியுறாத மனித உருவிலும் தோன்றுகிறான். இப்படியெல்லாம் மீனாக, கூர்மம் ஆக, வராகமாக, நரசிங்கமாக, வாமனன் ஆக அவதரித்தவனே, நல்ல பூர்ணத்துவம் வாய்ந்த மனிதனாக, ஆம் ராமனாகவே அவதரிக்கிறான். மற்ற அவதாரங்களில் எல்லாம் காணாத நிறைவை ராமாவதாரத்திலே பெறுகிறான். இப்படித்தான் ராமனது அவதார மகிமை பேசப்படுகின்றது பக்தர்களால், பரம பாகவதர்களால்.

ராமன் அவதார மூர்த்தி என்பதைக் கம்பனும் உணர்ந்திருக்கிறான். அதை எத்தனையோ இடங்களில் எப்படி எப்படி எல்லாமோ சொல்லிச் சொல்லி மகிழ்கிறான். ஜனகனது பேரவையில் வீற்றிருக்கின்ற ராமனை ஜனகனுக்கு விஸ்வாமித்திரன் அறிமுகம் செய்து வைக்கிறான். அவனது குலமுறையையே கிளத்துகிறான்.

விரிந்திடு தீவினை செய்த
   வெவ்விய தீவினையாலும்
அருங்கடைஇல் மறைஅறைந்த
   அறம் செய்த அறத்தாலுமே

பிறந்தவன் ராமன் என்பதே கம்பன் எண்ணம். அதையே கூறுகிறான் விஸ்வாமித்திரன். ஏன்?

கோனும் சிறிய கோத்தாயும்
   கொடுமை இழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
   இடுக்கண் காத்த கழல்வேந்தாம்
ராமனே, வானின்று இழிந்து வரம்பு இகந்த
   மாபூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும்போல்
    உள்ளும் புறத்தும் உள்ள

இறைவன் என்றே கடவுள் வணக்கம் கூறுவான் கம்பன். இன்னும் தண்டக ஆரண்யத்திலே ராமனால் தோள் துணிக்கப்பட்டு மண்ணில் வீழ்ந்து சாப விமோசனம் பெற்ற விராதன் துதியைத் தான் படித்துப் பார்ப்போமே.

பனிநின்ற பெரும் பிறவிக்
    கடல்கடக்கும் புணையற்றி
நனிநின்ற சமயத்தோர்
    எல்லோரும் நன்று என்ன
தனிநின்ற தத்துவத்தின்
    தகைமூர்த்தி நீஆகில்
இனிநின்ற முதல்தேவர்
   என்கொண்டு என்செய்வாரே

என்றுதானே பாடுகின்றான். சரபங்கன் பரத்துவாசன் முதலியவர்கள் அனுபவம் எல்லாம் இப்படித்தானே இருக்கிறது. இப்படியே விபீஷணன், ஏன்? வாலி, ராம நாமத்தையே மந்திரமாக மதிக்கிறான்.

இந்த அவதார ரகசியத்தை எல்லோரையும் விட மிகவும் நன்றாக அறிந்திருந்தவன் கம்பனே. ராம காதையில், தன்னுடைய கருத்துகளை எல்லாம் வெளியிட ஒரு நல்ல பாத்திரத்தையே தேடி வைத்துக் கொள்கிறான். அந்தப் பாத்திரமே அனுமன். அவன் வாயிலாக முடிந்த முடிபாக, கம்பன் சொல்வதையே கேட்கலாம்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர்
   மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த
   காரணன் கைவில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும்
   கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும், மலரும், வெள்ளிப்
   பொறுப்பும் விட்டு அயோத்திவந்தான்

என்று சொன்னதோடு திருப்தி அடையாமல்,

அறம்தனை நிறுத்தி, வேதம்
   அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம்தெரிந்து, உலகம் பூணச்
   செந்நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உகநூறி, தக்கோர்
   இடர்துடைத்து ஏக, ஈண்டு
பிறந்தனன், தன் பொற்பாதம்
   ஏத்துவார் பிறப்பு அறுப்பான்

என்று முடிக்கிறான்.

ராமாவதாரம் என்னும் கம்பனது காவியமே நல்ல சரணாகதி சாஸ்திரம் தானே. அதைத் தானே அனுமன் மூலமாகக் கூறுகிறான் கம்பன்.

மறை திறம் பாத வாய்மை
   மன்னர்க்கு முன்னம் சொல்லும்
துறை திறம்பாமல்
   காக்கத் தோன்றினான்

ராமன் என்பது தானே நாம் அறிந்தது. அவன் ஓர் அவதார மூர்த்தி என்பதை

மேல் ஒரு பொருளும் இல்லா
    மெய்ப்பொருள் வில்லுந் தாங்கி
கால் தரை தோய நின்று
    கட்புலனுக்கு உற்ற தம்மா

என்று வாலி கூறுவது யாருடைய கூற்று என்று நினைக்கிறீர்கள்? அதுவும் கவிச்சக்கரவர்த்தி கம்பனது கூற்றுத்தானே. கம்பனுக்கு முன்னாலேயே இந்த எண்ணத்தை உருவாக்கியவர்கள் உண்டு. வால்மீகி உருவாக்கிய உத்தம புருஷன் - காளிதாஸனது வருணனைகளிலும், ரஸிகர்களது ரஸானுபவங்களிலும், ஆழ்வார்களது பக்தி அனுபவங்களிலும் வளர்ந்து, கம்பனது காவியத்தில் அவதார புருஷனாக, அவதார மூர்த்தியாகவே ஆகிவிடுகிறான். இவனே பின்னர், பக்த தியாகராஜரது கீர்த்தனைகளினாலே தென்னாட்டிலே நிலைபெற்று நின்றுவிடுகிறான். அந்த அவதார மூர்த்தியை அறிமுகப்படுத்துவதிலே கம்பன் பெருமிதம் கொள்கிறான். அதைச் சொல்வதிலே நான் புளகாங்கிதமே அடைகிறேன்.

ஏரி காத்த பெருமான் - இராமன்

கவிச் சக்ரவர்த்தி கம்பன் தமிழ்நாட்டில் பல தலங்களுக்குச் சென்றிருக்கிறான். தொண்டை நாட்டில், உள்ள அந்தப் பிரபலமான கச்சிக்கே சென்றிருக்கிறான். அங்குள்ள ஏகம்பனையே வணங்கியிருக்கிறான். கம்பன் ஏதோ கம்பங்கொல்லையைக் காத்ததினாலாவது இல்லை கம்பை ஊன்றி நடந்ததினாலாவது தான் கம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவது அறியாமையே. தேரழுந்தூரில் வழி வழியாகச் சைவப் பெருங்குடியில் வந்த கம்பனது முன்னோர்களுக்கு கச்சி ஏகம்பனே வழிபடு தெய்வமாக இருந்திருக்கிறான். ஆதலால் ஏகம்பன் பெயரையே அவன் தந்தை அவனுக்குச் சூட்டியிருக்கிறார். அதனால்தான் கம்பன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. தக்க புகழையுமே பெற்றிருக்கிறது. இந்தக் கம்பன், தொண்டை நாடு சென்று கச்சி ஏகம்பனைக் கண்டு தொழுதுவிட்டு, தன் சொந்த ஊராகிய தேரழுந்தூருக்குத் திரும்பி வருகிறான். வருகிற வழியில் ஒரு ஊர். அந்த ஊரில் கோயில் கொண்டிருப்பவர் கோதண்டராமர் என்று அறிந்தபோது கோயிலுள் சென்று தன்னை ஆட்கொண்ட பெருமானான ராமனை வணங்கித் துதிக்க நினைத்திருக்கிறான். அவசரமாக ஊர் திரும்புகின்ற பயணம். ஆதலால், கடைகளில் நுழைந்து ஆராதனைக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளவோ நேரமில்லை. ஆதலால் கையை வீசியே நடக்கிறான்; கோயிலுள் நுழைகின்றான்; நேரே கர்ப்பக் கிரஹத்திற்கே வந்து விடுகிறான். அங்கு சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கும் கோதண்டராமனை, அவன் ஆராதித்த கருணாகரனை எல்லாம் கண்குளிரக் காணுகின்றான். அல்லையாண்டு அமைந்த மேனி அழகனை, அந்த அழகனது அழகை எல்லாம் எத்தனையோ பாடல்களில் ராமகதை முழுவதும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவன் ஆயிற்றே. என்றாலும் செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும் சந்தார் தடந்தாளோடும் தாழ் தடக்கைகளோடும் வில்லேந்தி நிற்கும் அந்த ராமனைக் கண்டபொழுது, தான் சொல்ல வேண்டுவது இன்னும் எவ்வளவோ இருக்கிறதுபோல இருக்கிறதே என்ற எண்ணம். இப்படித் தன் எண்ணங்களை அலைபாய விட்டு அப்படியே மெய்மறந்து நின்றிருக்கிறான். மேலே கிடந்த உத்தரீயத்தை எடுத்துப் பவ்வியமாக அரையில் கட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை. மூர்த்தியைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. இந்த நிலையில் நிற்கும் கம்பனைப் பக்கத்திலே நின்று கொண்டிருந்த பரம பாகவதர் ஒருவர் பாாக்கிறார். அவருக்கோ இவன் பேரில் ஒரே கோபம் ‘இப்படியும் இருக்குமா ஒரு பிரகிருதி? சந்நிதி முன் வந்தும் வணங்காமல் நிற்கிறானே அப்படி இவன் என்ன வணங்கா முடியனா?’ என்றெல்லாம் எண்ணுகிறார். அவருக்கு இருந்த ஆத்திரத்தில் கம்பன் விலாவிலேயே ஒரு குத்துக் குத்தி ‘என்ன ஐயா? ஆராதனைக்கு உரிய பொருள்கள் ஒன்றும் கொண்டுவரவில்லை என்றால், சந்நிதியில் மூர்த்தியைக் கைகூப்பித் தொழவுமா தெரியாது’ என்று கேட்கிறான், அப்போதுதான் விழித்துக்கொண்ட கம்பன், அப்பரம பாகவதருக்குப் பதில் சொல்கிறான். கவிச்சக்ரவர்த்தி, அல்லவா! பதில் பாட்டாகவே வருகிறது. பாட்டு இதுதான்

‘நாராயணாய நம’ என்று
    விண்ணோடு
பாராளும் பாதம் பணிந்து
    ஏத்துமாறு அறியேன்
காராளும் மேனிக்
    கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என்
    அறியாமை ஒன்றுமே

என்ற பாடலை பரம பாகவதருடன் சேர்ந்து நாமும் கேட்கிறோம். கோயிலை அறிந்தாலும் கும்பிடத் தெரியாத தன் அறியாமையை எவ்வளவு எளிமையோடு சொல்கிறான். அதைவிட அவன் ஆராதனைக்குக் கொண்டு வந்த பொருள் தன் அறியாமையே என்று சொல்கிறபோது எத்தகைய விளக்கம் பெறுகிறோம். உண்மைதானே! இறைவனையும் பெரியவர்களையும் காணும்போது நாம் கொண்டுபோக வேண்டுவதும், நம்மிடம் நிறைய இருப்பதும், அவர்களிடம் கொஞ்சமும் இல்லாததுமான பொருளைத்தானே கொண்டு போய் காணிக்கையாக வைத்து ஆராதிக்க வேண்டும். நம்மிடம் நிறைய இருப்பது அறியாமை, இறைவனிடத்துக் கொஞ்சம்கூட இல்லாதிருப்பதும் அறியாமை. ஆதலால் நமது அறியாமையையே ஆராதனைப் பொருளாகக் கொண்டு கொட்ட வேண்டியதுதானே. அதைத்தானே செய்கிறான் கம்பன். நம்மையும் செய்யும்படி வற்புறுத்துகிறான். இப்படி கம்பன் ஆராதித்த கோதண்டராமனை அந்த ராமன் ஆராதித்த கருணாகரனைக் காண, கம்பன் சென்ற ஊருக்கே நாமும் செல்ல வேண்டாமா, அந்த ஊர்தான் மதுராந்தகம்.

மதுராந்தகம் செங்கல்பட்டு ஜில்லாவிலே உள்ள தாலுகாவின் தலைநகரம். நிரம்பச் சிறிய ஊரும் அல்ல. நிரம்பப் பெரிய ஊரும் அல்ல. சென்னைக்குத் தெற்கே ஐம்பது மைல் தூரத்திலே இருக்கிறது இந்த ஊர். ரயிலிலும், பஸ்ஸிலும் ஏன் நல்ல காரிலுமே செல்லலாம். வடக்கே இருந்து வந்தாலும், தெற்கே இருந்து வந்தாலும், இந்த ஊருக்கு மேற்கே உயர்ந்த கரையோடு கூடிய பெரிய ஏரி நம் கண் முன் வரும். அந்த ஏரியின் மறுகாலே, கல்லாறு என்ற பெயரோடு ஒரு பெரிய நதியாக ஓடுகிறது என்றால் கேட்பானேன். இந்த ஏரி, தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. கரையின் நீளம் 12,960 அடி. அதன் நீர்ப்பிடி விஸ்தீரணம் பதின்மூன்று சதுரமைல் ஏரி நீர் நிறைந்தால் நூறு அடிக்கு மேல் ஆழம். ஏரிக்கு ஐந்து மதகுகள். அந்த மதகுகள் வழியாகப் பாய்ந்து பெருகும் தண்ணீர், வளர்பிறை, அருங்குணம், முள்ளி, முள்னத்திக்குப்பம், மதுராந்தகம் முதலிய ஊர்களில் உள்ள 2,702 ஏக்கர் நிலங்களில் மூன்று போகம் நெல் விளையும் நன்செய்களுக்குப் பயன்படுகிறது. இந்த ஏரியின் தண்ணீர் வழிந்தோட அமைந்திருக்கும் கலிங்கல் நூற்று ஐம்பது அடி நீளம் என்றால் ஏரியைக் கொஞ்சம் கற்பனை பண்ணி மானசீகமாகவே பார்த்துக் கொள்ளலாம்தானே. இந்தத் தலத்தில் நாம் முதல் முதல் காண வேண்டுவது, கோதண்டராமன் கோயிலையல்ல, இந்த ஏரியில் உள்ள இந்தக் கலிங்கலைத்தான். ஆம். இந்தக் கலிங்கலில் தானே கோயிலுள் சிலை உருவில் நிற்கும் ராமனும் இலக்குமணனும் சோதிவடிவிலே காட்சிகொடுத்திருக்கிறார்கள் வெள்ளைக்காரக் கலெக்டர் துரை கர்னல் பிளேஸுக்கு. இந்த ராமன் காரியமே இப்படித்தானே. நாளும் ராம நாமத்தையே ஸ்மரணம் செய்து கொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தரிசனம் தரமாட்டான். ஆனால் அவனைப் பற்றிக் கொஞ்சமும் நினைக்காதவர்களைத் தேடிப்பிடிக்க ஓடுவான். ராமதாஸின் சரித்திரம் தான் தெரியுமே. அல்லும் பகலும் அனைவரும் துதித்து, பத்ராசலத்தில் கோயில் எடுப்பித்த அந்த கோபண்ணாவின் கனவில் கூடத் தோன்றாத அவன் ஹைதராபாத்தில் உள்ள பாதுஷாவின் பள்ளியறைக்கு விரைந்திருக்கிறான். அவனுக்குத் தரிசன்ம் தந்திருக்கிறான். மொகராக்களாகவே அவன் முன் கொட்டி இருக்கிறான் என்றால் கேட்பானேன். ஆனால் இந்தக் கலெக்டர் பிளேஸுக்குத் தரிசனம் தந்தது மிக்க ரசமான கதை.

மதுராந்தகத்து ஏரி பெரிய ஏரிதான், என்றாலும் இந்த ஏரிக்கு ஒரு சாபமோ என்னவோ, வருஷா வருஷம் கரை உடைத்துக் கொள்வது தவறுவது இல்லை. எண்ணற்ற பொருள் செலவில் ஏரிக்கரையைப் பழுது பார்ப்பார்கள் இந்த மராமத்து இலாகா அதிகாரிகள். என்றாலும் நல்ல ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்து ஏரி நிறைந்துவிட்டால் ஒரே கவலைதான். எங்கேயோ ஒரு இடத்தில் பிய்த்துக்கொண்டு கரை உடையும் தண்ணிரெல்லாம் வெளியே ஓடும்; ஒடும் வழியில் உள்ள பயிர்களை அழிக்கும்; மாடு மனையை மக்களை எல்லாம் வாரிக்கொண்டே போய்விடும். ஏரியில் உள்ள தண்ணீர் எல்லாம் இப்படி வடிந்துவிட்டால் பயிர் விளைவதேது? நிலவரி வசூலாவது ஏது? இதனால் எல்லாம் சர்க்காருக்கு ஒரே நஷ்டம், கலெக்டர்களுக்கோ ஓயாத தலைவலி.

1795 - 1798 வருஷங்களில் செங்கல்பட்டு ஜாகீரில் கலெக்டராக இருந்தவர் கர்னல் லயனல் பிளேஸ் என்ற ஆங்கிலத் துரை. இவருக்கு இந்த மதுராந்தகம் பெரிய ஏரி கதை தெரியும். அவர் கலெக்டராக வந்த அந்த வருஷத்திலே (1795 இல்) ஏரி உடைப்பு எடுத்து அதனால் மக்களுடன் சர்க்கார் அடைந்த நஷ்டங்களைப் பற்றியெல்லாம் விவரங்கள், குறிப்புகளை எல்லாம் படித்திருக்கிறார். ஆதலால் 1798 இல், இந்த ஏரிக்கரையைப் பலப்படுத்த விசேஷ சிரத்தை எடுத்திருக்கிறார். மழைக்காலம் முழுவதும் இங்கேயே மராமத்து இலாகா அதிகாரிகளுடன் முகாம் செய்வது என்று திட்டமிட்டுக் கொள்கிறார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவே முனைந்திருக்கிறார். அப்படி முகாம் பண்ணிய போது, ஏரியை, நகரை எல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தவர் கோதண்டராமசாமி கோயில் வாயிலுக்கும் வந்திருக்கிறார். கோயில், கோயில் கோபுரம் எல்லாவற்றையும் கண்டு அதிசயித்து நின்ற துரைமகனை, அர்ச்சகர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கோயிலுக்குள் வந்து மற்ற அழகுகளையும் காண அழைத்திருக்கின்றனர். அவரும் காலில் உள்ள பாதரட்சைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்து வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு ஓரிடத்தில் கற்கள் பல குவித்து வைத்திருப்பதைப் பார்த்து இவை ஏன் இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டிருக்கிறார். அங்குள்ளவர்கள் ‘இங்கு கோயில் கொண்டிருப்பவர் சக்ரவர்த்தித் திருமகனான ராமன். அவருடைய தர்மபத்தினி ஜானகிக்கு என்று ஒரு தனிக் கோயில் இல்லை. அந்தத் தலைவிக்கு ஒரு கோயில் கட்டலாம் என்றே கல் எல்லாம் சேகரித்தோம். ஆனால் கட்டி முடியவில்லை. வருஷா வருஷம், விளைச்சல் இல்லாத காரணத்தால் மக்களிடமும் போதிய பணம் வசூலிக்க முடியவில்லை. கோயில் கஜானாவிலுமே பணம் இல்லை. அதனால்தான் எடுத்த காரியம் தடைபட்டுக் கிடக்கிறது’ என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட கலெக்டரோ கொஞ்சம் ஏளனமாகவே, ‘என்ன ஐயா உங்கள் சாமிக்கு இந்த ஏரி உடையாமல் பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை. இவருக்கு ஒரு கோயில், இவர் மனைவிக்கு ஒரு கோயில். இது எல்லாம் வீண் பண விரயந்தானே’ என்று பேசி இருக்கிறார். இதைக்கேட்ட அர்ச்சகர்கள் துடிதுடித்து, ‘துரைவாள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. எங்கள் இராமன் இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். அவனை உள்ளன்போடு ஆராதிப்பவர்களுக்கு எல்லாம், அவர்கள் வேண்டுவதை எல்லாம் முட்டின்றி அருளுவான்’ என்றெல்லாம் சொல்கிறார்கள் எண்ணம் எல்லாம். ஏரிக்கரையில் இருந்த கலெக்டரும் இதைக் கேட்டு, ‘சரி உங்களுக்கும் உங்கள் இராமனுக்குமே ஒரு சவால், நான் உள்ளன்போடு உங்கள் ராமனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த வருஷத்து மழையில் இந்த ஏரிக்கரை உடையாமல் இருந்தால் நானே இந்த ராமன் மனைவி ஜானகிக்கு கோயில் கட்டித் தருகிறேன். பார்ப்போம் இதை’ என்று சொல்லிவிட்டு முசாபரி பங்களாவிற்குத் திரும்பி விடுகிறார்.

அன்றிரவே நல்ல மழை. மறுநாள் காடு மேடு எல்லாம் நீர் வழிந்து ஓடுகிறது. ஏரியில் தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டே இருக்கிறது. கலெக்டர் கோதண்டராமனை மட்டும் நம்பி சும்மா இருந்துவிடவில்லை. மராமத்து இலாகா அதிகாரிகள் அத்தனை பேரையும் ஏரிக்கரையில் பல இடங்களில் காவல் போட்டு, கரை எங்கே உடைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறதோ அந்த பாகத்தையெல்லாம் பலப்படுத்த முஸ்தீபுகள் செய்கிறார். பகல் முழுவதும் மழை பெய்கிறது. இரவும் நிற்கக் காணோம். கலெக்டருக்கு ஒரே கவலை இரண்டாம் நாளும் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் சோர்வு இல்லாமல் கரையைக் காவல் காப்பார்களா என்று. ஆதலால் அவர்களைச் சடுதி பார்க்க, இரவு பத்து மணிக்கு, கலெக்டர் புறப்படுகிறார், குடை ஒன்றை எடுத்துக்கொண்டு. தாசில்தார், டபேதார், மற்றும் ஊர்க்காரர் சிலரும் பின்னாலேயே வருகிறார்கள். எல்லோருமே ஏரிக்கரை மீது நடக்கிறார்கள் கொட்டுகிற மழையிலே கலங்கல் பக்கம் வந்ததும் துரை தன் கையில் உள்ள குடையையும் தொப்பியையும் தூர எறிந்துவிட்டு, மண்டியிட்டு, கூப்பிய கையராய்த் தொழுதுகொண்டு இருக்கிறார். பக்கத்தில் உள்ளவர்கள் துரை வழுக்கி விழுந்துவிட்டார் போலும் என்று எண்ணி அவரைத் தூக்கிவிட முனைகிறார்கள். அவரோ ‘அடே! முட்டாள்களே, அதோ பாருங்கள், அதோ பாருங்கள். கலிங்கல்களின் இரு பக்கத்திலும் தேஜோமயமாக இரண்டு வீரர்கள் அல்லவா நின்று காவல் புரிகிறார்கள். அவர்கள் வில்லேந்தி நிற்கின்ற அழகுதான் என்ன? முகத்தில்தான் எத்தனை மந்தஹாசம்’ என்று கூவவே ஆரம்பித்து விடுகிறார். பக்கத்தில் நிற்கும் பக்தர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கலெக்டருக்குக் கிடைத்த கோதண்டராமன் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கலெக்டரும் மக்களும் ஊர் திரும்புகிறார்கள். அன்று ஏரிக்கரை உடையவில்லை. ஏன் அந்த வருஷமே உடையவில்லை. கலெக்டரும் தான் சொன்ன சொல்லை நிறைவேற்ற மறக்கவில்லை. ஜானகிக்கு ஒரு கோயிலை அவருடைய மேற்பார்வையிலேயே கட்டி முடித்துக் கொடுத்து விட்டுத்தான் தன் தாய்நாட்டிற்குக் கப்பல் ஏறி இருக்கிறார். ‘இந்தத் தருமம், கும்பினி ஜாகீர் கலெக்டர் கர்னல் லயனல் பிளேஸ் துரை அவர்களது’ என்று கோயில் மண்டபத்திலே கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள். இதை இன்று அங்கு செல்பவர்கள் காணலாம். கலெக்டர் வேண்டுகோளுக்கு இணங்கி ஏரி காத்த இந்த இராமனையே ஏரி காத்த பெருமாள் என்று இன்றும் அழைக்கிறார்கள் மக்கள்.

இத்தனை விஷயங்களும் தெரிந்தபின் இனி நாமும் கோயிலுள் செல்லலாம். கம்பன் கண்ட கோதண்டராமனை ஏரிகாத்த பெருமாளைக் கண்டு வணங்கலாம். கோயிலுக்கு முன்னாலே பெரிய திருக்குளம். குளக்கரையில் எல்லாம் நல்ல தென்னஞ் சோலைகள். இச்சோலைகளுக்கும் ஏரிக்கரைக்கும் இடையிலே கோயில். இந்தக் கோயிலிலே மூலவர் கோதண்டராமன். உற்சவமூர்த்தி இருவர். ஒருவன் கருணாகரன், மற்றொருவன் கோதண்டராமன். இவர்களிடையே ஒரு பெரிய வேற்றுமை. கோதண்டராமனோ ஏகபத்தினி விரதன். கருணாகரனோ இரண்டு பெண்டாட்டிக்காரன். ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாக அவன் நிற்கிறான். ஆனால் இந்தக் கருணாகரனே ராமன் வணங்கிய நாராயணமூர்த்தி என்கிறார்கள். கோதண்டராமன் கோயிலுக்கு வலப்பக்கத்திலே ஜனகவல்லித் தாயாரின் கோயில். இதைத்தான் கலெக்டர் லயனல் பிளேஸ் கட்டியிருக்கிறார். இத்தலம் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உகந்த ஸ்தலம். இங்குதான் ராமானுஜருக்கு பெரியநம்பி, பஞ்ச சம்ஸ்காரம் என்னும் வைஷ்ணவ தீக்ஷை செய்து வைத்திருக்கிறார். அதனால் இது திவ்யம் விளைந்த திருப்பதி என்று கொண்டாடப்படுகிறது. கோயிலின் வட பக்கத்தில் பெரிய நம்பி, ராமானுஜருக்கு எல்லாம் சந்நிதி இருக்கிறது. இருவருக்கும் இடையில் சமீப காலத்தில் திருப்பணி செய்யும்போது பூமியில் இருந்து கிடைத்த நவநீதக் கண்ணன், திருவிலச்சினைக்குரிய சங்கு சக்கரங்கள், பூஜாபாத்திரங்கள், தாமிரத் தட்டு எல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றது. ராமானுஜருக்குத் தீக்ஷை நடந்த இடம் மகிழ மரத்தடியில். அந்த மகிழ மரமும், ஸ்தலப் பெயரான வகுளாரண்யம் என்பதை நிலைநிறுத்த அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. இந்த மகிழடியையே ஸ்ரீவைகுண்ட வர்த்தனம் என்று அழைக்கிறார்கள். கம்பன் கண்ட கருணாகரனை, கோதண்டராமனை இளைய பெருமாளுடன் நிற்பவனைத் தரிசித்துவிட்டு வருவதுடன் பெரியநம்பி, இராமானுஜர், மகிழடி எல்லோரையுமே சேவைசெய்து திரும்பலாம்.

காவேரி தீர ரஸிகன் - இராமன்

நல்ல பங்குனி சித்திரை மாதம். மாலைவேளையில் வீட்டில் இருக்க முடியவில்லை. ஆதலால் காவிரிக் கரைக்குச் சென்று அங்கு ஆற்று மணல் பரப்பிலே அமர்ந்திருந்தேன். ஒருநாள். உடன் வந்திருந்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். ஆம், காலை வேளையிலே உலாவப் புறப்பட்டாலும் அந்திவேளையிலே வீட்டில் அமர்ந்திருந்தாலும், நீண்ட பயணத்தை ரயிலில் துவங்கினாலும் என்னுடன் வருபவன் கம்பன்தான். நிரம்பச் சொல்வானேன். இரவு பத்து மணிக்கு உறக்கங்கொள்ளாமல் உருண்டு பிறழும்போது என்னைக் கட்டி அணைப்பவன் கம்பனே. அதாவது, இந்த வேளையில் எல்லாம் ஒன்று நான் கம்பன் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன்; இல்லை கம்பராமாயணப் புத்தகம் என்னுடன் வந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். அதேபோல அன்றும் நான் கம்பராமாயணப் புத்தகத்தை உடன் எடுத்துச் சென்றிருந்தேன். ஏதோ தனிமையில் இருந்து படிக்கலாம் என்றுதான்.

ஆனால் அங்கு அப்போது மூன்று நண்பர்கள் வந்தார்கள். ஒருவர் பகுத்தறிவுத் தோழர், மற்றொருவர் சிவபக்தர், மூன்றாவது நபர் செஞ்சட்டை வீரர். மூவரும் எனக்கு மிகவும் நன்றாக அறிமுகமானவர்களே, வந்தார்கள். வந்தவர்களை வரவேற்றேன். வணக்கம் செலுத்தி பக்கலில் அமர்ந்தார்கள். கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்தார்கள். அவ்வளவுதான். மூன்று பேருக்குமே என்பேரில் கோபம் ஏற்பட்டது. ‘கன்னித் தமிழ்மொழியில் காவியத்தைத் தானெழுத கதை வேறே கம்பனுக்குக் கையில் கிடைக்கலையோ, வடநாட்டு வான்மீகி வன்மமொடு திராவிடரைத் திடமாக இழிவு செயத் தீட்டி வைத்த அக்கதையை, இந்தப் பயல் கம்பன் ஏனோ தமிழருக்காய் சொந்தக் கதையாக்கி சொகுசாய் உரைத்திட்டான். இதைப் படித்துக் கொண்டிருக்கிறீர் நீர்’ என்று என்மேலே பாய்ந்தார் பகுத்தறிவாளர். சிவபக்தரும், ‘எல்லாம் சரிதான், தமிழும் சைவமும் தழைத்து வளர்ந்த இந்தத் தமிழ்நாட்டில் தக்க கதை கம்பனுக்கு வேறு கிடைக்கலையோ, பிறவாத யாக்கை உடைப்பெரியோன் சிவனிருக்க, இறவாப் புகழை எல்லாம் இராமனுக்கே ஏற்றினனா’ என்று அங்கலாய்த்தார். மூன்றாவது நபரும் சளைக்கவில்லை. ‘உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் தவிக்கும் வேளையில் கலை என்று கதைபேசித் திரிகின்றீர்; கவியென்றும் கம்பனென்றும் காலம் கழிப்பதற்குப் புவியில் இன்று நேரமில்லை புகல்கின்றேன் புகல்கின்றேன்’ என்று ஆவேசத்தோடு ஆடியே தீர்த்துவிட்டார். இந்த மூவருக்கும் அன்று நான் விடை சொல்லியிருக்கக்கூடும். ஆனால் வீண்வாதத்தை வளர்க்க விரும்பவில்லை. சரிதான் நீங்கள் சொல்வது என்று சிரித்து மழுப்பிவிட்டு அன்றிரவு வீடு திரும்பிவிட்டேன்.

ஆனால் வீடு திரும்பியபின், அதன்பின் பலநாளாக இந்த வாதங்கள் என் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டே இருந்தன. உண்மைதானே. கங்கைக் கரையிலே பிறந்த ராமகதை, காவேரி தீரத்தில் வந்து நிலைத்திருப்பானேன். வடநாட்டு ராமன் தென்னாட்டுத் தமிழர் இதயத்திலே இடம்பெறுவானேன். மனிதனாகப் பிறந்து மனிதனாகவே வாழ்ந்த அந்தச் சக்கரவர்த்தித் திருமகனை இங்குள்ளார் தெய்வமாக்கி, சிலை செய்து கும்பிட்டு வணங்குவானேன். இந்த அற்புதம் எல்லாம் நிகழ்வதற்கு மூலகாரணன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்தானே. காவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, கலைமகள் அருளால் கருவிலேயே திருவினைப் பெற்ற கம்பன், ராமகதையை, ஆம், அந்த வான்மீகர் சொன்ன கதையைத் தான் கேட்டிருக்கிறான். அவர் உருவாக்கிய ராமனை அன்றைய சோழ மன்னர்களோடு ஒப்பிட்டு நோக்கியிருக்கிறான். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழந்தமிழ்ப் பண்பிற்கேற்ப வடநாட்டு ராமனைத் தென்னாட்டு வீரனாக மாற்றியிருக்கிறான், அவ்வளவுதான். விடிந்தால், பொழுது போனால், ஒருவருக்கொருவர் ஏசலும், பூசலுமாக வாழ்ந்த மன்னர் மத்தியிலே வளர்ந்தவன் உள்ளத்தில், சொன்ன வாக்கை நிறைவேற்றுவதற்காகத் தன் அருமந்த மைந்தனையே காட்டிற்கு அனுப்புகிற தந்தை, தாய் உரைசெய தந்தை ஏவ ஒரு சாம்ராஜ்யத்தையே துறந்து காட்டிற்குப் புறப்படும் ஒரு மகன், காடு சென்ற தமையன் நாடு திரும்பும் வரை தவக்கோலம் தாங்கி வாழும் ஒரு தம்பி, காடு சென்ற இடத்திலும், வேடன் ஒருவனையும், குரங்கு ஒன்றையும், அரக்கன் ஒருவனையுமே தன் உடன் பிறந்தானாகச் சேர்த்துக்கொள்ளும் ஒரு வீர புருஷன், எல்லோரும் இடம்பெற்றது வியப்பில்லைதானே.

இன்னும், ஐந்து மனைவியரை அடுக்கடுக்காய் மணந்த அரசர்கள் பரம்பரையை அறிந்த கம்பன், ‘ஏகும் நல்வழி அவ்வழி என்மனம்’ என்ற உறுதிப்பாட்டில், நிலைத்து, இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று செவ்விய வரம்பில் நின்று, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்த அந்த ராமன் பேரிலேயே காதல் கொண்டிருக்கிறான். தன்னுடைய கற்பின் வலி எத்தகையது என்று தெரிந்திருந்தும் அதனால், தானே சிறை மீள்வது தன் நாயகன் வில்லின் ஆற்றற்கு மாசு தருவதாகும் என்று கருதி, அசோகவனத்தில் சிறையிருந்த செல்வி தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டல்லவோ என்று கம்பன் நினைத்திருந்தால் அது தவறில்லை தானே. ஆகவேதான் கம்பன் ராமகாவியம் எழுத முனைந்தான்; வெண்ணெய் அண்ணல் வேண்டும் ஆதரவு தந்தான்; காவியம் உருவாயிற்று, காவிய நாயகனும் உருவானான் இந்தக் காவிரிக் கரையிலே,

நாரதர் விரும்பியபடி ராமாயணம் பாடப் புறப்பட்டிருக்கிறார் வான்மீகி, அதையே பாடினான் காளிதாசன் ரகுவம்சத்தில். அந்த ராமனையே துதித்திருக்கிறார்கள் குலசேகரர் போன்ற ஆழ்வார்கள். இவர்களது அடிச்சுவட்டையே பின்பற்றியிருக்கிறான் கம்பன்.

இதனால்தான் காசில் கொற்றத்து ‘ராமன் திருக்கதை, ராமாவதாரப் பேர்த்தொடை நிரம்பிய தோமறு மாக்கதை’யாகத் தமிழ்நாட்டில் நிலைத்துவிட்டது. கதை நிலைத்து காவியம் எழுந்ததின் காரணமாகவே, காவிய நாயகன் வழிபாடும் ஆரம்பித்திருக்கிறது. ரகுராமன், சீதாராமன், கோதண்டராமன், வேங்கடராமன், கல்யாணராமன், சந்தானராமன், வல்வில் ராமன் என்னும் எண்ணற்ற திருப்பெயரால் அந்தக் காவிய புருஷன் அழைக்கப்பட்டிருக்கிறான், என்றால் அதற்கு இந்தக் காவிரிக்கரையில் உள்ள கோயில்களில் உருவாக்கி வைத்திருக்கும் சிற்ப உருவங்களும், அச்சிற்ப உருவங்களை வடித்த சிற்பிகளின் கற்பனையுமே காரணம். தஞ்சை ஜில்லாவில் காவிரி தீரத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு விஷ்ணுகோயிலிலும் ராமனுக்குத் தனி சன்னதி உண்டு. சில இடங்களில் சிலா ரூபமாகவும் பல இடங்களில் செப்பு விக்கிரகமாகவும், சீதா லக்ஷ்மண அனுமத் சமேதனாய் ராமன் நின்று கொண்டிருக்கிறான். தஞ்சை ஜில்லாவில் வடுவூர் ராமனும், தில்லை விளாகம் ராமனும் பிரசித்தமானவர்கள். தில்லை விளாகம் ராமன் அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சர்வாலங்கார பூஜிதனாக லக்ஷ்மணனுடனும் சீதையுடனும், அனுமனுடனும் நின்று கொண்டிருக்கிறான். மாயூரம் திருவாரூர் பாதையில் உள்ள முடிகொண்டான் என்ற பெரிய ஊரில் உள்ள ஒரு சிறிய கோயிலிலும் ராமன் சீதா லக்ஷ்மணரோடு நின்று கொண்டிருக்கிறான்.

இவனையும் கண்டு தரிசித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தெற்கே போய் மேற்கே திரும்பினால் நன்னிலத்துக்கு வந்து சேரலாம். இந்த நன்னிலத்துக்கும் வடமேற்கே நாலு மைல் தொலைவில் அடம்பர் என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. அந்த ஊர் பாடல் பெற்றது. பாடல் என்றால் ஏதோ சம்பந்தரோ அல்லது அப்பரோ, இல்லை திருமங்கை ஆழ்வார் தாமோ பாடியது அல்ல. அந்த ஊரில் வழங்கும் பாடல் இதுதான்.

ஆயிரம் வேலி அதம்பார்
ஆனை கட்டும் தாள்
வானைமுட்டும் போர் – அதில்
ஆறுகொண்டது பாதி

துறுகொண்டது பாதி – அதனால்
கொட்டாங்கச்சியிலே நெல்லு
கொடுங்கையிலே வைக்கோல்.

இந்தப் பாட்டைப் படித்துவிட்டால் ஊர் நிலைமை தெரிந்துவிடும். எங்கு பார்த்தாலும் ஒரே குட்டிச்சுவர்தான். கல்யாண ரங்கநாதர் கோயில் எங்கிருக்கிறது என்றால், ஒரு கள்ளிக்கோட்டை ஓடு போட்ட ஒரு கொட்டகையைக் காட்டுவார்கள். அர்ச்சகருக்காகக் காத்திருந்து சாவி பெற்று கதவைத் திறந்து கோயிலுக்குள் நுழைந்தால் அங்கு ஒரு கோதண்டராமன் எதிரே நிற்பான். பக்கலிலே லக்ஷ்மணனும் சீதையும் நிற்பார்கள். நான் பார்த்த ராமன் சிலைகளுக்குள்ளே சிறந்தது இதுதான். அதனால்தான் அந்த ராமனையே அட்டைப் படமாகப் பார்க்கிறீர்கள். “அந்தமில் அழகன்”, “அல்லையாண்டமைந்த மேனி அழகன்”, “ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான்” என்றெல்லாம் பாடுகிறானே கம்பன் அதெல்லாம் இந்த அழகனைக் கண்டபின் தானோ என்னவோ. ராமனை உருவாக்கும் சிற்பிகள் அவன் கையில் கோதண்டத்தையும் அம்பையும் வைக்கமாட்டார்கள். வைக்க மறந்து போய்விடுகிறார்கள் என்றில்லை; வில்லை ஏந்திய கையைக் காட்டிவிட்டு பார்ப்பவர்கள் வில்லைக் கற்பனைப் பண்ணிக் கொள்ளட்டுமே என்று விட்டுவிடுவார்கள் அவ்வளவுதான். ஆனால் இன்றைய ரஸிகர்கள் இருக்கிறார்களே அவர்கள் அந்த வில்லேந்திய கரத்தில் வில் வைக்கத் தவறுவதில்லை. வில்லை எவ்வளவு கேவலமாக வைப்பார்கள் என்பதை முடிகொண்டான் ராமன் கையில் வைத்திருக்கும், அதாவது இவர்கள் திணித்திருக்கும் வில்லும் அம்புமே சான்று பகரும். தில்லைவிளாகத்தில் வில் பரவாயில்லை என்றாலும் அம்பை இப்படி போலீஸ்காரனைப் போல் ராமன் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று சொல்லத்தோன்றும். அடம்பர் ராமரின் கையில் உள்ள அம்பு உரிய அளவுக்கு அதிகமே என்றாலும் அவர் கையில் தாங்கியிருக்கும் கோதண்டம் நல்ல அழகுடன் அமைந்திருக்கிறது. அதில் கட்டியிருக்கும் மணி ஒலிக்கும்போது - ஏன் ஒலிக்காத போதுமே அந்தக் ‘கருமணியின் நெடிய சிலை கண, கண, கண என்றே கம்பனுடன் சேர்ந்து பாடும்.’

இந்த அற்புதமான சிற்ப வடிவங்களுக்கெல்லாம் காலத்தால் முற்பட்டது என்று நான் கருதுவது திருச்சேறையில் உள்ள ராமன் சீதை சிலைகளைத்தான். திருச்சேறை கும்பகோணத்திற்குக் கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள ஊர். அங்கு சாரநாதர் கோயிலில் வைத்திருக்கும் ராமனும் சீதையும் அழகுத் திருவுருவங்கள். செந்தாமரைக் கண்ணோடும், செங்கனி வாயினோடும், சந்தார் தடம்தோளொடும், தாழ் தடக்கைகளோடும், அம்தார் அகலத்தொடும் இருக்கும் வீரன் அவன். சிற்ப வடிவங்களுக்கு அழகு தரும் அந்தத் திரிபங்க நிலை அளவுக்கு மேற்படாமல் அற்புதமாக அமைந்திருக்கிறது. பக்கத்தில் நிற்கும் இராமானுஜன், இராமன் சீதையை உருவாக்கிய சிற்பியின் சிருஷ்டி அல்ல. இதைச் சொல்ல வெள்ளெழுத்து வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக சீதை நிற்கின்ற ஒயில், அவள் உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் அணியெல்லாம் அழகுக்கு அழகு செய்கின்றன. அன்று சீதையைப் பஞ்சவடியில் ராமன், பக்கலில் கண்டபோது சூர்ப்பனகை சொன்னாளே


கண்பிற பொருளில்ச் செல்லா
    கருத்தெனின் அஃதே; கண்ட
பெண்பிறந்தேனுக் கென்னில்
    என்படும் பிறருக்கு

என்று, அதையே சொல்ல வேண்டியிருக்கிறது நாமும் இன்று. மேலும் அங்குள்ள ராம லக்ஷ்மணர் கையிலிருந்து வில்லையும் (ஆம் புதிதாக வைக்கப்பட்டவைகளைத்தான்) நீக்கிவிட்டுப் பார்த்தால்தான் அந்தச் சிலைகளின் முழு அழகும் தெரியும். இந்த ராமனை எல்லாம் பாாக்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் உள்ளத்தில் நான் தூண்டியிருந்தால் என் முயற்சியில் வெற்றி பெற்றவனாவேன்.

இன்னும் எத்தனையோ ராமர்களைக் கண்டிருக்கிறேன், இந்தக் காவிரிக்கரையில். கடைசியில் பெறுதற்கரிய பெரும் பேறு பெற அந்த ஒப்பிலிஅப்பன் சந்நதிக்கே வந்தேன். அர்ச்சகரை அர்ச்சனை ஒன்று செய்யச் சொன்னேன். பெருமாளின் கல்யாண குணங்களை எல்லாம் அடுக்கடுக்காய்ச் சொல்லிக் கொண்டு வந்தவர், ‘காவிரி தீர ரஸிகாய நமா ஓம்’ என்றும் அர்ச்சித்தார். என்ன அழகான பட்டம். கங்கைக் கரையில் பிறந்து காவிரி தீரத்தைத் தேடிவந்த இந்தக் காவிய நாயகனை காவிரி தீர ரஸிகன் என்று அழைக்காமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது. ஆம். இந்தக் காவிரி தீர ரஸிகனை உருவாக்கியவன் அந்தக் காவிரி தீர ரஸிகமணியான கம்பன்தானே. மேலும் காவிரிதீர ரஸிகமணியை நினைக்கும் போது அந்தப் பொதியை முனிவர் அமரர் ரஸிகமணியுமே நம் கண்முன் வந்து விடுகிறாரே. ஆம், ராமனுக்கு, கம்பனுக்கு, ரஸிகமணிக்கு எல்லாம் நமது வணக்கம் உரியதுதானே.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/004-012&oldid=1346370" இலிருந்து மீள்விக்கப்பட்டது