கம்பன் சுயசரிதம்/006-012

விக்கிமூலம் இலிருந்து



6. கம்பன் கவிச்சித்திரம் வர்ணனை

ந்தனமும், சண்பகமும், தேமாவும், தீம்பலமும், ஆசினியும், அசோகமும், கோங்கும், வேங்கையும், கரவையும் விரிந்து நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளமொடு மனம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொரு பினி அவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொரு முகை சிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாட தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிவது நடுவன் ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்து பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத்தன் தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டார் என்பது ஒரு வர்ணனை. இதே கதியில் ஒரு பொழிலிடத்தே தலைவி ஒருத்தியும், தலைவன் ஒருவனும் கொடுப்பாரும், அடுப்பாரும் இன்றி ஊழ்வினை வயத்தால் எதிர்ப்பட்டு காதல் வயப்படுவதை மேலும், மேலும் வர்ணிக்கிறார் நல்லிசைப் புலவர் நக்கீரர் தமது இறையனார் அகப்பொருள் உரையில்.

இதைப் போன்ற ஒரு காட்சியைத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் வர்ணிக்க முற்படுகின்றார். தனக்கே உரிய ஒரு அற்புத முறையில் மாலைப்பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகிறது. மாடங்களில் அமைந்த மணிப்பூங்கொடிகள் அசைந்து ஆடுகின்றன. அரச வீதியில் இரு மருங்கும் வரிசையுள் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்து வீணை ஒலி வாயில் வழியே தவழ்ந்து வருகின்றது. முத்துப்போல் பூத்து, மரகதம் போல் காய்த்து, பவளம் போல் பழுத்து இலங்கும் கமுக மரத்தில் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் இருந்து பாடி ஆடுகின்றனர். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்து பாவையர் விளையாடுகின்றனர். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல களி நடனம் புரிகின்றனர். இத்தகைய இன்பம் நிறைந்த அந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்ல, தம்பி பின்வர மஞ்செனத் திரண்ட கோல மேனியும், கஞ்ச மொத்தலர்ந்த கண் வாய்ந்த இராமன் செல்கின்றான்.

அப்பெரு வீதியிலே அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாகிய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகிறாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையொடு ஆடக்கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன், மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர்நோக்குகின்றாள். இருவர் கண் நோக்கும் இசைகின்றது. பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணிப்புற்ற இராமன் காதலை மனத்தில் கரந்து வீதியின் வழியே சென்று மறைகின்றான். இது கம்பனது வர்ணனை.

இந்த வர்ணனையில் இயற்கை எழிலுற வர்ணிக்கப்படுகிறது. அதற்குமேல் காதலர் உள்ளம் ஒன்றோடொன்று கலந்து உறவாடும் நிலையும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. கம்பனது காவியத்தில் பலபல அம்சங்கள் நம் உள்ளம் கவர்கின்றது. அதன் கதை அமைப்பு காவியக் கட்டுக் கோப்பு, பாத்திர சிருஷ்டி, நாடக பாவம், உவமை அழகு முதலியவை நிரம்பிய காவியம் அது எப்படி எந்தெந்த கோணத்திலிருந்து ஆராய்ந்தாலும் கம்ப இராமாயணத்தில் சிறந்த அம்சம் கவிதை. அந்தக் கவிதை மூலம்தான் எவ்வளவு அழகு அழகான கற்பனைகள், வர்ணனைகள் எத்தனை எத்தனை அற்புத சித்திரங்கள். கம்பன் இயற்கையைத் தான் சிறப்பாக வர்ணிக்கிறான் என்றில்லை. ஒரு ஆடவனையோ இல்லை ஒரு பெண்ணையோ வர்ணித்தாலும் சரி, ஒரு காதல் காட்சியை, ஒரு சோக பாவத்தை, ஒரு போர்க்களக்காட்சியை, ஓர் அவலநிலையை, எதை வர்ணித்தாலும் அதில் அவனது தனித்தன்மை விளங்கும்படி செய்யும் பேராற்றல் பெற்றவனாக இருக்கிறான். அதனால்தானே கல்வியில் பெரியவன் கம்பன், கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்றெல்லாம் பாராட்டப்பட்டு வந்திருக்கிறான். இன்று எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில நிமிடங்களில் கம்பனது வர்ணனை அழகு முழுவதையும் சொல்லிவிட முடியாது தான் என்றாலும், அவன் வர்ணனைகள் வெறும் இயற்கை வர்ணனைகளாக மட்டும் அமையாமல் மனித உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சிகளையும், கலந்து விளங்கும் ஒரு அற்புதப் படைப்பாக எப்படி இருக்கின்றன என்பதற்கு மட்டும் ஒன்றிரண்டு சான்று தர விரைகின்றேன்.

காவியங்களில் சூரிய உதயம், சூரியஸ்தமனம், சந்திரோதயம் முதலிய சிறப்பான வர்ணனைகளாக அமைவதுண்டு. தங்கம் உருக்கி தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமாக இலங்கும் பாரதியின் சூரியோதயம் நம் நெஞ்சை விட்டு அகலாத சித்திரம் அன்றோ. அதைப் போலவே கம்பனும் வானரங்கில் நடம் புரியும் கண்ணுதல் வானவன் கனகச்சடை விரித்தால் என விரிந்து கதிர்களால் காலைச் சூரியன் ஒளிவீசி வெளிவருவதை வர்ணிக்கிறான். அதுபோலவே அவனது காவியத்தில் அந்திதரு சித்திரமும், அழகோவியமாகவே அமைந்துவிடுகின்றது என்றாலும் அவனுடைய சந்திரோதய வர்ணனை ஒன்று மிகவும் சிறப்பாக இருக்கிறது.

ராமன், லக்ஷ்மணன், சீதை மூவரும் அயோத்தியை விட்டுக் காடு நோக்கிச் செல்கிறார்கள். மூவரும் காட்டிற்குள் நுழைந்து போகிறபோது, வழி மறிப்பதுபோல இருள் தொடர்கிறது. அவர்களோடு தோழமை பூண்ட இருள் அப்படித் தடுக்கும்போது, தேவர்கள் சும்மா இருப்பார்களா? அந்த இருளைத் துரத்த ஒரு கை விளக்கு எடுத்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி வானவர்கள் ஏந்தி வந்த விளக்குப் போலவே சந்திரன் உதயமாகிறான் என்று பாடுகிறான்.

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை
அரக்ணப் பொருந்தி, அன்னார்
செய்வினைக்கு உதவும் நட்பால்
செல்பவர் தடுப்ப தேய்க்கும்
மை விளக்கியதே அன்ன
வயங்கு இருள் துரத்த வானம்
கை விளக்கு எடுத்த தென்ன
வந்தது கடவுள் திங்கள்

என்பது கம்பன் வர்ணனை. இது வெறும் வர்ணனையாக மட்டும் இருக்கவில்லை. ராமாவதார ரகஸ்யத்தையே வெளிப்படுத்தும் வகையில் அல்லவா வர்ணனை வடிவெடுக்கிறது. புரந்தரனார் செய்த பெருந்தவந்தானே பரந்தாமனை ராமனாக அவதாரம் செய்யும்படி செய்திருக்கிறது. அந்த உண்மையையே மனித உள்ளத்தோடு விளக்கும் வகையில் வர்ணிக்கிறான் கம்பன்.

இன்னும் பெண்ணின் பெருமையை எப்படி எப்படி எல்லாமோ வர்ணனை செய்து இருக்கிறார்கள் கவிஞர்கள். மலையிடைப் பிறவா மணி, அலையிடப் பிறவா அமுது என்றெல்லாம் சிலப்பதிகார காப்பிய நாயகியை இளங்கோ வர்ணிக்கிறார். ஆனால் கவிச்சக்கரவர்த்தி சிறையிலிருந்த செல்வியாம் சீதை வர்ணனை விண்நோக்கி உயருகிறது. அசோகவனத்தில் சிறை இருந்த சீதையைச் சென்று காண்கிறான் அனுமன். அவள் காதலுக்கு இரங்கி நிற்பதையும் பார்க்கிறான். அவனைத் துரும்பென மதித்து சீதை பேசும் பேச்சையும் கேட்கிறான். அத்தனையும் பார்த்துவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பி, ராமனிடம் அச்சிறை இருந்தாளின் ஏற்றத்தைக் கூறுகிறான். எத்தனை எத்தனை விதமாகவோ சோகத்தில் மூழ்கி இருக்கும் நங்கையாய் சீதையின் கற்பொழுக்கத்தால் தேவ மகளிர் எல்லாம் உயரிய நிலையை அடைந்து விடுகிறார்கள். இதுவரை சிவபிரானின் திருமேனியில் இடது பக்கத்தில் மாத்திரம் இடம்பிடித்திருந்த பார்வதியே சிவபெருமானது தலைமேலேயே ஏறி உட்கார்ந்து கொள்கிறாள். தாமரை மலரில் இருந்த லக்ஷ்மி தேவியும் திருமார்பின் மார்பில் இருந்தவள் இப்போது திருமாலின் ஆயிரக்கணக்கான முடிகளுக்கும் மேலாக ஒரே வியாபகமாக வீற்றிருக்கிறாள். அவ்வளவு உயர்வு வந்துவிட்டது பெண்மைக்கு என்று முழங்குகிறான்.

சோகத்தால் ஆயநங்கை
கற்பினால் தொழுதற்கொத்த
மாகத்தார் தேவிமாரும்
வான்சிறப்பு உற்றார், மற்றைப்
பாகத்தாள் இப்போது ஈசன்
மகுடத்தாள் பதுமத்தாளும்
ஆகத்தாள் அல்லள், மாயன்
ஆயிரம் மெளலி மேலாள்

என்பது கம்பனது வருணனை. ஆம் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்னும்படியாக அல்லவா அமைந்திருக்கிறது இந்தக் கற்பனையும் வருணனையும்.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/006-012&oldid=1346421" இலிருந்து மீள்விக்கப்பட்டது