கம்பன் சுயசரிதம்/007-012
7. மலைக்குலமயில்
காவியம் ஆனாலும் சரி, நாடகமானாலும் சரி, சிறுகதை என்றாலும் பெரிய நாவல் என்றாலும் அவையெல்லாம் பல பல பாத்திரங்களைக் கொண்டே நடைபெற வேண்டியிருக்கும். கதையை உருவாக்கும் முக்கிய பாத்திரங்களை காவிய நாயகன் காவிய நாயகி என்பர். இவர்களை சுற்றிப் பலபல சம்பவங்களைச் சித்தரிக்க உதவுபவர்களே சிறிய பாத்திரங்கள். சாதாரணமாகக் கதையோ காப்பியமோ எழுதுபவர்கள் தங்கள் திறமையை எல்லாம் காவிய நாயகன் அல்லது காவிய நாயகியை உருவாக்குவதிலேதான் காட்டுவர். மற்ற பாத்திரங்களை ஏதோ அவசரக் கோலம் அள்ளித் தெளி என்பது போல கொஞ்சம் முன்னும் பின்னுமாகத்தான் உருவாக்கியிருப்பர். ஆனால் கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற மகாகவிகளோ பிரதான பாத்திரங்களை உருவாக்குவதற்கு எத்தனை அக்கறை காட்டுகிறார்களோ அத்தனை அக்கறையையும் உப பாத்திரங்கள் உருவாக்குவதிலும் காட்டுவர். அப்படி உருவாக்கப்பட்ட ஓர் அரிய பாத்திரம்தான் இராம கதையில் கிஷ்கிந்தை மன்னனான வாலியின் மனைவியாக உருவாக்கப்பட்டிருக்கும் தாரை.
தாரை என்று ஒரு பாத்திரப் படைப்பு இல்லாமலேயே காப்பியம் உருவாகியிருக்கக் கூடும். கதையின் கட்டுக்கோப்புக்கு அந்தப் பாத்திரம் அவசியமான பாத்திரமே அல்ல என்றாலும் சிறியன சிந்தியாத வாலியின் பெருங்குணத்தைச் சித்தரித்துக் காட்டுவதற்கு உதவும் ஒரு பாத்திரமாக தாரையை அமைக்கிறான் கம்பன். மேலும் பெண்ணின் பெரு நலத்தை எல்லாம் விளக்க எழுந்த ஒரு சிறந்த பாத்திரமாகவே அவள் அவனது காவியத்தில் உருப்பெறுகிறாள்.
காவிய அரங்கிலே அவளை அழைத்து வரும் போதே தாரை அமிழ்தத்தில் தோன்றிய வேயிடைத் தோளினாள் என்று மிக அழகாகவே அறிமுகப்படுத்துகிறான். சுக்ரீவன் தன் சகோதரனான வாலியைப் போருக்கு அழைக்க, அந்தச் சவாலை ஏற்றுப் போருக்கெழுந்த வாலிய இடை நின்று தடுக்கிறாள். அவனது மனைவி தாரை. ஆனால் வீரருள் வீரனான வாலியோ விடுவிடு என்றே அவளை உதறிவிட்டு முன் நடக்கிறான். அப்போதுதான் அவளை மலைக்குல மயில் என்று அருமையாக அழைக்கிறான். மேலும் தனது மனைவியை மயில் இயல், குயில் மொழி என்றே போற்றுகிறான். வானரமாகப் பிறந்தவளே ஆனாலும் வாலிக்கு அவள் மயிலின் சாயலையும் குயிலின் குரலையும் பெற்றுள்ள கோமள சுந்தரியாகவே தோன்றுகிறாள். ஆதலால் தானோ என்னவோ அமிழ்தில் தோன்றியவள் என்றே கம்பன் நமக்கு அவளை அறிமுகம் செய்து வைக்கிறான். அத்தகைய மனைவியிடம் தன் வீரப் பிரதாபத்தையெல்லாம் அளக்கிறான் வாலி. மந்தர நெடுவரை மத்தாக்கி வாசுகியாம் கயிறு கொண்டு பாற்கடலைக் கடைந்த தேவர்களும் அசுரர்களும் அழைத்து நின்ற போது தான் ஒருவனாகவே இருந்து கடல் கடைந்த தன் கரதலங்களின் வலியை எல்லாம் எடுத்து உரைக்கிறான். மேலும் தன்னை ‘எதிர்ப்பவர் பலத்தில் பாதியைத் தான் பெறும், வரத்தையும் நினைவூட்டுகிறான். ஆதலால் நீ துயர் ஒழிக மலைக்குலமயிலே என்றே பேசிவிட்டு விரைய முனைகிறான்.
ஆனால் தாரையோ அன்புள்ள மனைவியாக மட்டும் இருக்கவில்லை. அறிவு படைத்த மதி மந்திரியாகவும் அல்லவா இருந்திருக்கிறாள். ஆதலால் முன் கூட்டியே ஒற்றாடி, இதுவரை பதுங்கிக் கிடந்த சுக்ரீவன் இன்று போருக்கு எழும்பக் காரணம் என்ன? ஏதோ ஒரு நல்ல துணை அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறாள். அப்படித் துணையாக வந்திருப்பவர் சாதாரண ஆளில்லை, மிக்க ஆற்றல் படைத்த ராமனே என்பதையும் தெரிந்திருக்கிறாள். ஆதலால் ஆயவனுக்கு இன் உயிர் நட்பு அமைந்து இராமன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்திருக்கிறான் என்றும் சொல்லித் தடுக்க முனைகிறாள். ராமன் இப்படி சுக்ரீவனுக்குத் துணை வந்திருக்கிறான் என்று தாரை சொன்னதும் அந்த ராமனாம் சக்கரவர்த்தித் திருமகனைப் பற்றி முன்னர் தான் கேட்டிருந்த செய்திகளை எல்லாம் நினைக்கிறான் வாலி. தருமத்தின் தனிமை தீர்ப்பவன், அறத்தின் மூர்த்தியாக விளங்கிடும் இராமனுக்கு எத்தகைய ஒரு பெரிய அவலத்தைத் தேடி வைத்துவிட்டாள் தன் துணைவி என்று அவள் பேரிலேயே திரும்புகிறான். சொல்லுகிறான் வாலி, ஆம் வாலி சொல்வதாகக் கம்பன் கூறுகிறான்.
உழைத் வல் இருவினைக்கு
ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு
அறத்தின் ஆறெலாம்
இழைத்தவற்கு, இயல்பல
இயம்பிஎன் செய்தாய்
பிழைத்ததனை பாவி உன்
பெண்மையால் என்றான்.
அடிபாவி, உன் பெண் புத்தி உன்னை விட்டுப் போகவில்லையே. அப்படியே எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெண்ணாய் பிறந்திருப்பாய் அல்லவா, தருமத்தின் வேலியான ராமனைப் பற்றி சொல்லத் தகாதவற்றை எல்லாம் சொல்கிறாய் என்று கொதித்தே எழுகிறான். ராமன் எவ்வளவு பெரிய அரசன். அவனா இந்தப் புன் தொழில் குரங்காம் சுக்ரீவனை நாடி வந்து நட்பு கொண்டாடப் போகிறான். அத்தோடு தம்பியர் வாழ்வே தன் வாழ்வு என மதித்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே தன் தம்பிக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கும் ராமன் என் தம்பியும் நானும் போட்டுக் கொண்டிருக்கும் தாயாதிச் சண்டையில் இடைபுகுந்து என் தம்பிக்கு உதவ வருவானோ? என்று ராமனின் நேர்மையில் மிக்க நம்பிக்கை உடையவனாக இருக்கிறான்.
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயர்
இம்பரில் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்படை தொகுக்குமோ அருளின் ஆழியான்
என்றெல்லாம் தாரையை எதிர்த்துப் பேசிவிட்டு என் தம்பி சுக்ரீவனின் உயிர் குடித்து, அவன் உடன் வந்தால் யார் என்றாலும் அவர்களையும் அழித்து விரைவில் வருவேன் கலங்காதே என்று சொல்லித் தேற்றிவிட்டுப் போருக்குப் போகிறான். தாரையும் அதன்பின் உரைவிளம்ப அஞ்சி ஒதுங்கிக் கொள்கிறாள் என்று கம்பன் அவள் அரங்கத்தில் தோன்றும் முதல்காட்சியை முடித்துக் கொள்கிறான்.
வாலிக்கும் சுக்ரீவனுக்கும் போர் நடக்கிறது. இருவரும் போர் எதிரும்போது யார் வாலி யார் சுக்ரீவன் என்று வேற்றுமை அறிய இயலாது போய்விடுகிறது ராமனுக்கு. ஆதலால் திட்டமிட்டபடி வாலி மீது அம்பு எய்ய இயலவில்லை, அவனுக்கு. அதனால் சுக்ரீவன் போரில் நலிந்து திரும்புகிறான். அவனை கொடிப் பூ மாலை ஒன்று அணிந்து திரும்பவும் போருக்குச் செல்லச் சொல்கிறான் ராமன். அப்படியே செல்கிறான் சுக்ரீவன். அச்சமயத்தில் மறைந்து நின்ற ராமன் வாலி மீது அம்பெய்து அவனை வீழ்த்துகிறான். அதன்பின் வாலியும் மண்மீது விழுந்து விடுகிறான். மறைவிடத்தை விட்டு வெளிவந்த ராமனைக் கண்டு வாலி பேசும் பேச்சுக்கள் எல்லாம் ராமன் புகழைக் குறைக்கின்றன. அதை எல்லாம் விளக்கில் பெருகும். கடைசியில் ராமன் தன் சுய உருவை வாலிக்குக் காட்ட
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய்ப்பொருள் வில்லும் தாங்கி
கால்தரை தோய நின்று
கட்புலனுக்கு உற்றது அம்மா
என்று நிறைந்த மனத்தோடு வாலி முத்தி எய்துகிறான். அதுவரை போர்க்களத்துக்கு வராத தாரை அதன்பின் தான் வருகிறாள். வாலியின் ஆற்றலையும் அவனது சிவ பத்தியையும் நினைந்து நினைந்து புலம்புகிறாள். தனக்கு ஆர்பாகனை ஆசைதோறும் உற்று வணங்காநாள் மலர்தூவி வணங்கும் அவனது தெய்வ பக்தி எல்லாம் இனி என்ன ஆவது என்றே புலம்புகிறாள். இடையிடையே தான் தடுத்தும் கேளாமல் போர்க்களம் புகுந்த வாலிக்காக மிகவும் வருந்துகிறாள் என்றாலும், ராமனைப் பற்றிக் குறைவாகவே பேசக் காணோம். அது அவள்தன் சிறந்த பண்பையே குறிக்கிறது. இத்துடன் இரண்டாவது காட்சி முடிகிறது.
இதன்பின் நாம் தாரையை மூன்றாவது தடவையாகவும் சந்திக்கிறோம். சுக்ரீவபட்டாபிஷேகம் நடத்தி பின் கார்காலம் வந்துவிட்டதால் சீதையைத் தேடுவதை கார்காலம் கழியும் மட்டும் ஒத்தி வைக்கிறார்கள். சுக்ரீவன் கிஷ்கிந்தையில் அரண்மனையில் வசிக்கிறான். உல்லாசமான கேளிக்கைகளில் திளைக்கிறான். கார்காலம் கழிந்து விடுகிறது. சுக்ரீவன் வந்து ராமனைப் பார்க்கவில்லை. இராமனோ அவனைச் செய் நன்றி கொன்றவனாகவே கருதுகிறான். லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனை அழைத்துவரச் செல்கிறான். லக்ஷ்மணனுக்கும் ஒரே கோபம். அப்படி கோபித்த நிலையில்தான் கிஷ்கிந்தை அரண்மனையில் நுழைகிறான். வானவர்கள் எல்லாம் நடுங்குகின்றனர். அமைச்சனான அனுமன் நினைக்கிறான். இலக்குவனது கோபம் தணிப்பதற்கு தாரை ஒருத்தியால்தான் முடியும் என்று. ஆதலால் அவளையே இலக்குவனை வரவேற்க அனுப்புகிறான். வான மகளிர் புடை ஆட தாரை வருகிறாள். அத்தனை பெண்களையும் ஒருங்கே கண்ட லக்ஷ்மணன் நாணுகிறான். மாமியர் குழுவில் வந்த மைந்தன் என நிற்கிறான். ஆனால் தாலியிழந்து மற்ற நகைகளும் அணியாது உடலை எல்லாம் நன்றாகப் போர்த்திக் கொண்டு கைம்மைக் கோலத்தோடு வந்து நிற்கும் தாரையைக் கண்டவுடனே லக்ஷ்மணனுக்கு சித்ர கூடத்தில் கைம்மைக் கோலத்தில் வந்த தன் தாய்மார் நினைவு வருகிறது. ஆதலால் அவர்களை நினைந்து அப்படியே கண்ணிர் சிந்துகிறான். அதன்பின் தாரை தன் கணவனின் சகோதரன் சுக்ரீவன் இழைத்த பிழைக்காக வருந்திப் பேசுகிறாள். அதற்காக ராம லக்ஷ்மணர்களின் மன்னிப்பையே வேண்டுகின்றாள். இலக்குமணன் சீற்றம் தணிகிறான். அதன்பின்தான் அனுமன் வருகிறான். சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறான். கதை மேலே நடக்கிறது.
தாரையை நமக்கு அறிமுகப்படுத்துவது எல்லாம் இந்த மூன்று காட்சிகளில்தான். ஆனால் இந்தச் சிறு பாத்திர சிருஷ்டியை கம்பன் எவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறான் என்று தெரிய ஆதிகாவியம் வான்மீகர் காட்டிய தாரையையும் பார்க்க வேணும். பிலத்தினுள் வாலி மடிந்துவிட்டான் என்ற எண்ணத்தோடு சுக்ரீவன் நாடு திரும்பி மற்றைய வானரங்கள் விரும்பியபடி பட்டம் ஏற்றுக் கொண்டதுமே சுக்ரீவனது காதற் கிழத்தியாக தாரை அமைந்துவிடுகிறாள். அவள் சுக்ரீவனிடத்து இரண்டாவது மனைவியாக இருந்தனள் என்று வால்மீகத்தில் சொல்லப்படாவிட்டாலும் இரண்டு மூன்று இடங்களில் சொல்லாமல் சொல்கிறார். ராமனிடம் தனது கஷ்டங்களை எடுத்துரைக்கும் சுக்ரீவன் மாயாவியைத் துரத்திச் சென்ற வாலி பிலத்துனுட் புகுந்து வராதபோது நான் திரும்பி வந்து மக்கள் விருப்பப்படி பட்டம் ஏற்றுக் கொண்டேன். அப்போது கிஷ்கிந்தை அரசோடு ரூமை, தாரை என்னும் இருவரையும் பெற்றேன் என்கிறான் சுக்ரீவன். இதன் பின்னர் இலக்குவன் சீற்றத்தோடு வருவதைப் போல பேசும் பேச்சிலே ராமனது அருளால் அல்லவா சுக்ரீவன் சிறந்த புகழையும் சாஸ்வதமான வானரர் வரவையும் ரூமையையும் என்னையும் பெற்றுளான் என்றே கூறுகிறாள். இதையெல்லாம் விட மோசமாக இவர்களை எதிர்நோக்கி வரும் தாரையை வான்மீகர் வர்ணிக்கிறபோது கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடம் வைக்காமலே பேசி வருகிறார்.
ஸாபுஷ்கலந்தீ
மதவிஹ்வலக்ஷி
பிலெம்ம காஞ்கீருண
ஹேமஸதேகிக
ஸலக்ஷனாலக்ஷ்மண
ஸந்நிதானம்
ஜகாமதாவி
நமிதாங்கயஷ்டி
என்பதே அவரது வர்ணனை.
சுக்ரீவனது அந்தப்புரத்திலிருந்து வந்த தாரை கலவியால் உண்டான தளர்ச்சியோடு தடுமாறிக் கொண்டே வந்தாள், மதுபானத்தினால் தழுதழுத்த நோக்கினை உடையவளாக இருந்தாள். அரைநூல் வடம் இழுப்புண்டு வரும் நிலையில் படுக்கையில் கிடந்த படியே தேவதையாய் ஸம் போக சின்னங்கள் காணலாம் படி வந்தாள் என்பதே. வான்மீகர் தரும் தாரைக்கோலம். இந்தத் தாரையை அடியோடு மாற்றுகிறான் கம்பன்.
மங்கல அணியை நீக்கி
மணி அணிதுறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி
குங்குமம் சாந்தம் தெவிட்டாப்
பொங்கு வெம்முலைகள்
புகக்க் முத்தொடு மறையில் போற்றது
நங்கையைக் கண்ட வனப்பில்
நயனங்கள் பனிப்ப நின்றான்.
அத்தோடு
பார்குலாம் முழுவெண்திங்கள்
பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை
இறைமுகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல்மார்பில்
தாயரை நினைந்துணர்ந்தான்
என்றல்லவா கம்பன் கூறுகிறான். இந்த ஒரு சிறு மாற்றத்தால் தாரை என்னும் பாத்திரத்தை எவ்வளவு உயர்ந்த பாத்திரமாகச் செய்திருக்கிறான் அவன்.
இந்த மாற்றத்தினைச் சுட்டிக் காட்டிய பொழுது வடமொழிப் புலவரின் வானரம் என்னும் விலங்கினுக்கு ஒழுக்கம் என்று ஒன்று இருத்தல் இயலாது. அத்துடன் அண்ணன் மனைவியைத் தம்பி சேர்த்துக் கொள்வது வானரர்களது வழக்கமாயிருத்தல் கூடும். கணவன் இறந்த பின் மறுமணம் செய்து கொள்வது வான்மீகர் காலத்து சாஸ்திர சம்மதமாக இருத்தல் கூடும் என்றும் சொல்கின்றனர், என்றாலும் வான்மீகர் அடி ஒற்றி தாரையை வர்ணிக்காமல் கம்பனுக்கு ஏன் தாரையை ஓர் உத்தம பத்தினியாக ஆக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது? அதில்தான் தமிழ் நாட்டின் பெருமையெல்லாம் அடங்கிக் கிடக்கிறது என்று தோன்றுகிறது எனக்கு. தாடகை சூர்ப்பனகை போன்ற அரக்க மகளிர் ஆனாலும் சரி, ரூமை, தாரை போன்ற வானர மகளிர் ஆனாலும் சரி, அவர்களுமே பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்னும் வள்ளுவர் கூறும் பெண்மை நலம் தருகிற புகழையே ஏற்றவர்களாய் வாழும் நெறியையே உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று எண்ணியிருக்கிறான். இதை விளக்க இன்னும் ஒரேயொரு சிறிய உதாரணம் கொடுத்தால் போதும்.
காவியத்தோடு அவயவ சம்பந்தமில்லா கதைதான் அகலிகை, விமோசனம். கல்லாய்க் கிடைத்த அகலிகை ராமனது பாதத்துளியால் சாபம் நீங்கிப் பழைய பெண்ணுரு பெறுகிறாள். அவள் கதையைச் சொல்கிறார் விஸ்வாமித்திரர், அகலிகை என்னும் அழகிய பெண்ணை தேவேந்திரன் காதலிக்கிறான். ஆனால் கோதம முனிவர் அவளை மனைவியாய் அடைகிறார். பிறன்மனை நயவாத பேராண்மை படைத்திராத இந்திரன் அகலிகையை எப்படியும் அடைய விரைகிறான். நடுயாமத்திற்கு முன்பே கோழியைக் கூவ வைத்து கோதமனை பர்ணசாலையினின்று ஆற்றங்கரைக்கு அகற்றுகிறான். பின்னர் கோதமன் உருவிலேயே பர்ணசாலையில் புகுந்து அகலிகையைப் புணர்கிறான். திரும்பி வந்த கோதமன் நடந்ததை அறிந்து இருவரையும் சபிக்கிறார். இக்கதையை வான்மீகி சொல்லும் போது புதிதாக வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்த பின்னும் அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்பார். தேவராஜருதுசலஹ என்பது வான்மீகர் வாக்கு. இதையே திருவானைக்கால் புராணம் உடையார்
இந்திரனே நமை இருக்கின்றானோ
புந்தியின் அரும்பிய பொருவில் ஓதையார்
என்று கூறுவார். ஆனால் கம்பனோ அகலிகையை நெஞ்சினால் பிழைப்பிலாள் என்றே கூறுகிறான். புதிதாக கோதமன் உருவில் வந்த இந்திரன் புதிய ஆள் என்று பயிர்ப்பு உணர்த்தியபோது தக்கது தகாதது இன்ன இன்னது என்று உணராதே தாழ்ந்தனர் என்பான்.
புக்க அவளொடும் காமப்
பதுமணமது வின்தேறல்
ஒக்க உண்டிருந்த வோரும்
உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஒராள்
தாழ்ந்தனள் இருப்பதாழா
முக்கனான் அனைய ஆற்றல்
முனிவனும் முருகி வந்தார்
என்பதே கம்பன் பாட்டு. இப்படியே நெடுகிலும் பெண்மை நலம் பழுதுபடா வகையில் காவியம் எழுதிய கம்பன் தாரையை கைம்மைக் கோலத்தில் வந்தவளாக உருவாக்கிக் காட்டுவது வியப்பல்ல தானே.
❖❖❖