கம்பன் சுயசரிதம்/009-012

விக்கிமூலம் இலிருந்து

9. கம்பன் காவிய மாளிகை

தாஜ்மஹால் தலைதுாக்கி நிற்கிறது நமது நாட்டிலே. அதைக் கட்டி முடிக்க வேலை செய்தவர்கள் இருபதினாயிரம் பேர். பிளான் தயாரித்தவர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்கள், கொத்தனார்கள் எல்லாருக்குமே கட்டிட நிர்மாணத்தில் பங்கு உண்டு. இப்படி ஒரு கட்டிடம் கட்டலாம் என்று முதல் முதல் திட்டம் வகுத்தவர் (Designer) முகமது இசாகிபண்டி. இவர் துருக்கி தேசத்தவர். இவருடன் துணையாக வர்ண வேலை செய்ய அங்கிருந்தே வந்தவர் சத்தார்கான். சமர்க்கண்டிலிருந்து வந்த முகம்மது ஹரீப்தான் தலைமை டிராப்ட்ஸ்மன். முகம்மது ஹனீப்தான் தலைமைக் கொத்தனார்.

மஹால் கட்ட வெள்ளைச் சலவைக்கல் ஜெய்ப்பூரிலிருந்து வந்தது. பேத்பூர் சிக்ரியிலிருந்து லக்ஷத்துப் பதினாயிரம் வண்டி சிவப்புக்கல் வேறு வந்திருக்கிறது. ஒரு சதுர கெஜம் நாற்பது ரூபாய் விலையுள்ள மஞ்சள் சலவைக்கல் வந்தது நர்மதை நதிக்கரையிலிருந்து. தூய வெள்ளைப் பளிங்கு கற்கள் சைனாவிலிருந்து வந்தன. அதன் விலையெல்லாம் கொஞ்சமாய் ஒரு சதுர கெஜத்திற்கு ஐந்நூற்று எழுபது ரூபாய் மட்டுந்தான். பல சொல்வானேன் இலங்கையிலிருந்து வந்த Lapiz lazuli என்ற பல வர்ண விஸ்தாரம் உடைய கல்லின் விலை மட்டும் ஒரு சதுர கஜத்திற்கு ஆயிரத்து நூற்றி ஐம்பத்தாறு ரூபாய் என்றால் கேட்கவா வேண்டும்.

கட்டிடம் கட்டி முடிய இருபத்திரண்டு வருஷம் ஆகியிருக்கிறது. கட்டிடம் கட்ட மொத்தச் செலவு (மூர்ச்சை போட்டு விழுந்து விடாதீர்கள் ஐயா) எல்லாம் மூன்றரைக் கோடி ரூபாய் மட்டுந்தான். இப்படி ஒரு கட்டிடம் நமது நாட்டில் இருக்கிறதென்றால் அது நமக்குப் பெருமை தானே. பெருமை, இத்தனை பணத்தையும் இத்தனை நாளையும் செலவழித்துக் கட்டியதனால் அல்ல. இவ்வளவு அருமையான சலவைக்கல் கனவை (Dream in marble) நனவாக்கி வைத்துவிட்டானே, சிருஷ்டித்து விட்டானே இந்த ஷாஜஹான் சக்கரவர்த்தி என்பதில்தான். தன் காதலியின் ஒரு நினைவு மலராக ஏன் உலகம் உள்ளளவும், உயர்ந்த, உத்தம, லக்ஷ்ய, காதலின் சின்னமாக அல்லவா அம்மாளிகை தலை தூக்கி நிற்கிறது. வல்லவனாக்கிய சித்திரம்தான் அது. வண்மைக் கவிஞன் கனவும் அதுவேதான் என்று அதிசயித்து விடுகிறார்கள். பார்த்தவர்கள் பரவசமே அடைந்துவிடுகிறார்கள் என்று சொன்னாலும் அது பொய்யில்லையே.

இதே உணர்ச்சிதான் கம்பனது காவியமாகிய இராமாயணத்தைப் பார்க்கின்றபோது ரசிகருக்கும் உண்டாகின்றது. கம்பன் தனது காவிய மாளிகையை எவ்வளவு ரசனைச் சுவையுடனும் அழகுணர்ச்சியுடனும் கட்டி முடித்திருக்கிறான். இப்படி ஒரு மாளிகையை அற்புதமாக சிருஷ்டிக்க அவன் என்ன பொருள்களை எங்கிருந்தெல்லாம் சேகரித்தான். இல்லை ஒரு பெரிய மாய வித்தைக்காரனைப் போல இப்போது இங்கே ஒரு அலங்கார மாளிகை தோன்றட்டும் என்று சொல்லிக் கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளே செய்து விட்டானா? இல்லை இவனென்ன தெய்வ தச்சனா? தெய்வீக அழகுடைய கட்டிடங்களையெல்லாம் கணப்பொழுதில் கட்டி முடித்துக் காட்டுவதற்கு என்றெல்லாம் எண்ணுகிறோம். அதிசயிக்கிறோம். முக்கின் மேலேயே விரலை வைக்கிறோம்.

ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரிடம் காவியம் (Epic) என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார். காவியம் என்றால் ஹோமர் எழுதிய இலியட் என்னும் காவியத்தைப் போல எழுதப்பட்டதெல்லாம் காவியமே என்று லேசாகப் பதில் சொல்லிவிட்டார் அவர். (Epic in a poem written in imitation of Homer's Iliad) வேறு என்ன சொல்ல? இதே போலத்தான் நம்மவர்களுக்கு நம் காவியத்தை விளக்க வேண்டிருக்கிறது. கம்பனது இராமாயணம் போல் எழுதப்பட்ட ஒரு காவியமே காவியம், என்று சொல்வதைத் தவிர, காவியத்திற்கு வேறு இலக்கணம் கூற இயலவில்லை.

காவியத்திலே ஒரு வீர புருஷனுடைய கதை சொல்லப்படும். அவன்தன் வாழ்வும் தாழ்வும் விரிவாகவே விளக்கப்படும். மனிதனாகப் பிறந்தவன் எப்படி வீரனாக வளர்ந்தான். எப்படி லக்ஷ்ய புருஷனாக தெய்வீக சௌந்தர்யம் உடையவனாக வாழ்ந்தான் என்பதெல்லாம் தான் கூறப்படும். பின்னும் தேவரும் தொழும் தேவனாக அவன் எப்படி உருவானான் என்றெல்லாம் நம்மால் காவியத்திலிருந்துதான் அறிய சாத்தியப்படும். சாதாரணக் கதையிலிருந்தல்ல. காவியகதிக்கும் கதைப் போக்கிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கதாசிரியன் நடக்கிற இடத்திலே காவிய கர்த்தா பறப்பான். அவன் குளறுகிற இடத்திலே இவன் தெய்வமாக் கவிதை செய்வான். அவன் கதை சொல்லுவான். இவன் காவியம் இயற்றுவான். அவ்வளவுதான். Where narrative walks epic flies Narrate stammers while epic talks with tongue of men and angels.

இராமகதையை உலகுக்குத் தந்தருளிய பெரியார் வான்மீக முனிவர். இராமகதை மக்கள் வாழ்வைப் பண்படுத்த ஒரு நல்ல சாதனம் என்று கண்டவர் அவர் கதையையும் நன்றாக அமைத்துக் கொடுத்துவிட்டார். இத்தகைய நல்ல அஸ்திவாரத்தின் மேல்தான் தன் காவிய மாளிகையைக் கட்ட ஆரம்பித்திருக்கிறான் கம்பன். அஸ்திவாரம்தான் அவருடைய அஸ்திவாரமே தவிர, மேல் கட்டுக் கோப்பெல்லாம் இவனுடைய் சொந்தமே. வான்மீகரது கதையில் எங்கெல்லாம் அழகுணர்ச்சி குன்றுகிறதோ அங்கெல்லாம் கம்பனது அழகுணர்ச்சி கொட்டும். எங்கெல்லாம் தமிழர்களது பண்பாடு, நாகரிகம், பண்பு பாதிக்கப்படும் என்று கருதினானோ அங்கெல்லாம் புதிய முறையிலே கட்டிடம் திருத்தி அமைக்கப்படும். கம்பன் கதையிலுள்ள சம்பவங்களைச் சித்தரிக்க முயன்றாலும் சரி, பாத்திரங்களில் உள்ள உணர்ச்சிகளையோ மனோ விகாரங்களையோ வெளியிட விரும்பினாலும் சரி, கவிதா கருத்துக்கள் நான் முந்தி நீ முந்தி என வந்து விழுந்து பணி செய்யும். கம்பனது அழகுணர்ச்சியும் கற்பனா சக்தியும் இசை ஞானமும் கடைசி வரை அவனுக்கு துணை நின்று காவிய மாளிகையை உருவாக்க உதவுகின்றன.

இப்படி நல்லதொரு அஸ்திவாரத்திலே எழுப்பப்பட்ட அழகிய காவிய மாளிகையை முதலில் கொஞ்ச தூரத்திலிருந்தே பார்க்கலாம். இந்த மாளிகையை அப்படி நின்று பார்த்தவர்களுக்கு எழுகின்ற முதல் உணர்ச்சி அதன் காம்பீர்யம்தான். இமயமலை எவ்வளவு கம்பீரமாக வான்நோக்கி வளர்ந்திருக்கின்றதோ அவ்வளவு கம்பீரத்துடன் கம்பனது காவிய மாளிகையும் காட்சி அளிக்கிறது. கம்பனுடைய காவியத்தைப் படிக்கும்போது மாமல்லபுரத்துப் பிரம்மாண்டமான கற்கோயில்களைப் பார்க்கும்போதும் சிரவனபெலகோலாவிலுள்ள கோமாடேஸ்வரனுடைய அத்தாப் பெரிய சிலையைப் பார்க்கும்போதும் உண்டாகும் உணர்ச்சிதான் உண்டாகிறது.

மேல்நாட்டு இலக்கியங்களை, காவியங்களை அந்த அந்த பாஷைகளின் மூலமாகவே அறிந்து அனுபவித்த ஸ்வர்கீய வ.வே.சு அய்யர் அவர்கள் “ஒரு பெருங் காப்பியம் அநேக அவயவங்கள் சேர்ந்ததாய் இருப்பினும் ஒரு ஜீவ பிராணியைப் போல ஒரு தனிப்பிண்டமாக இருத்தல் வேண்டும். தலை இடை கடை என்ற பாகுபாடும் அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஏகம் என்ற உணர்ச்சியும் அக்காவியத்தில் தோன்ற வேண்டும். ஒவ்வொரு அவயவமும் தான் தனக்கு முன்னேயுள்ள அவயவத்தோடும் பிணைக்கப்பட்ட ஒன்று என்கிற உணர்ச்சியை வளர்க்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இந்த இலக்கணத்தை வைத்துக் கொண்டு கம்பன் காவிய நிர்மாணத்தை ரசனையை நோக்கினால் அவன் காவியம் உன்னத இலக்கியமாகவே நிற்கும்.

கம்பனது காவியத்திலே பிரதான சம்பவம ராவண வதம. பாலகாண்டம் காவிய சம்பந்தத்தோடு அவயவசம்பந்தம் இல்லாது சற்று ஒதுங்கியே நிற்கிறது. காவிய மாளிகையின் முன்வாசல் பூஞ்சோலைதான் அது. இராமன் சீதா லக்ஷ்மண ஸமேதனாய் காட்டுக்குப் புறப்படுவதிலேதான் ராவண வதத்திற்கு விதை விதைக்கப்படுகிறது. அயோத்தியா காண்டத்தைத் தொடங்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காப்பு பாட்டிலேயே இதைக் காட்டுகிறான்.

வான் நின்று இழிந்த வரம்பு இகந்த
மாபூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வு போல்
உள்ளும் புறத்தும் உளன் என்ப
கோனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் காத்த கழல் வேந்தே.

என்று பாட்டு இமையவர் இடுக்கண் தீர இராவணவதம் நடந்தாக வேண்டும். இராவண வதம் நடக்க இராமன் காடு வந்து சேர வேண்டும். இராமனைக் காட்டிற்கு அனுப்ப கூனியாகிய மந்தரை சூழ்ச்சி செய்யவும் சிற்றன்னையாகிய கைகேயி வினை சூழவும் வேண்டும். ஆகவே எங்கே பற்ற வைத்த தீ எங்கு சென்று மூளுகிறது என்று நமக்குத் தெரிகிறது. இப்போது இராமன் முடி சூடுவதைத் தடுக்க முனையும் கூனி காவிய அரங்கத்திலே தோன்றுவதைக் கூட கம்பன்

இன்னல் செய் இராவணன்
      இழைத்த தீமை போல்
துன்னரும் கொடு மனக்
      கூனி தோன்றினாள்.

என்றுதான் கூறுகின்றான். இலக்குவன் சூர்ப்பன்கையின் மூக்கை அறுத்து மானபங்கம் செய்தான்.

உயிர் மூக்கினை நீக்கிய முறையை
மலைது மித்தென இராவணன்
     மணியுடை மகுடத்
தலைதுமித்தற்கு
     நாள் கொண்டது ஒத்ததாகவே

படுகிறது அவனுக்கு. ஏன் கடைசியிலே இராவணன் இராமன் அம்பால் அடியுண்டு உயிரற்று வீழ்ந்து கிடக்கிறபோது அவன் மனைவியாகிய மண்டோதரி அழுது புலம்பினாலும்

காந்தையருக்கு அணியனைய
     ஜானகியார் பேரழகும்
         அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார்
    காதலும் அச்சூர்ப்பனகை
           இழந்த மூக்கும்
வேந்தர் பிரான் தயரதனார்
     பணியினால் வெங்காளில்
          விரதம் பூண்டு
போந்ததுவும் கடைமுறையே
     புரந்தானார் பெருந்தவமாய்
          போயிற்று அம்மா

என்று தானே புலம்ப வருகிறது கம்பனுக்கு. காவிய இலக்கணத்திற்குக் கொஞ்சமும் மாறுபடா வகையில் எழுந்த இலக்கியமே கம்பனுடைய இராமகாதை. இக்காவியம் என்னும்படி காவியத்தில் பல அவயவங்களையும் பிரதான சம்பவமாகிய ராவண வதத்தோடு இணைத்து இணைத்து மொத்தத்தில் பார்க்கும்போது ஏகம் என்ற உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றான் அவன்.

இன்னும் ஓர் அதிசயம். நாம் வாழும் உலகில் இன்னும் எத்தனை எத்தனையோ கோளங்கள் எல்லாம் இப்பேரண்டத்தில் சூரியனைச் சுற்றிச் சுற்றி ஓடுவதையே பார்க்கிறோம். அண்டங்கள் எல்லாம் உய்ய அருளும் ஆதவனை நடுநாயகமாக வைத்து அவனைச் சுற்றி ஓடுவதிலேதானே இறைவனது திருவிளையாடல்களை நாம் அறிகிறோம். எல்லா உலகும் ஒரே தலைவனிடத்திலிருந்து தோன்றுவதும் அவனிடத்திலே சென்று ஒன்றுவதும் தான் இயல்பு என்னும் பெரிய தத்துவத்தையல்லவா விளக்குகிறது, இச்சூரிய மண்டல விவகாரம் (Solar System). இது போலவே ராமனை நடுநாயகமாக வைத்து காவியத்தில் வரும் மற்ற பாத்திரங்கள் எல்லாம் நடமாடுகின்றன. பெற்ற தந்தையும் தாயும் உடன் பிறந்த சோதரரும் கட்டிய மனைவியும் அவனிடத்தில் இடையறா அன்பு பூண்டு அவனை விட்டு அகலாது அன்பு பூண்டிருந்தல் இயல்பே. ஆனால் கங்கைக் கரையில் இருக்கும் வேடுவர் தலைவனும் கிஷ்கிந்தை நகரிலே வசிக்கும் வானர வீரனாகிய சுக்ரீவனும் ஏன் அரக்கர் கோனாய் விளங்கிய விபீஷணனுமே இராமனால் ஆகர்ஷிக்கப்படுகிறார்களே. அவனோடு அண்டி அவனுடன் சகோதர உறவு கொண்டாடி உலக சகோதரத்துவத்திற்கே அடிகோலுகிறார்களே. காவிய நாயகனோடு நாயகர்களாக ஒன்றிச் சேர்ந்து காவியத்தில் பிரதான அங்கம் பெற்று விடுகிறார்கள். இதெல்லாம் என்னவென்றால் எல்லாம் கம்பனுடைய காவியரசனைத் திறம்தான் என்று பதில் சொல்லத் தோன்றுகிறது. எத்தனை எத்தனையோ துக்கடாப் பேர் வழிகளை, சம்பவங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய கம்பீரமான காவியமாளிகையையே அல்லவா உருவாக்கிவிடுகிறான். அவன் கொஞ்சம் நுழையலாம். கம்பீரமாக எழுந்து நிற்கும் இக்காவியமாளிகையிலேதான் என்னென்ன அதிசயங்கள் எவ்வளவு எவ்வளவு விஸ்தாரமான மண்டபங்கள் - அறைகள் விதானத்திலும் சுவரிலும் செய்திருக்கும் நகாஸ் வேலைகள்தான் எவ்வளவு அழகையும் சோபையையும் கொடுக்கின்றன. பெரும்பெரும் கற்பாறைகளை அப்படி அப்படியே பேர்த்தெடுத்து அதையும் அப்படி அப்படியே வைத்துக்கட்டிய வான்மீகரது கதாமாளிகை எங்கே, அந்த மாளிகையின் அஸ்திவாரத்தின் மேலே பழைய மாளிகையைத் தட்டி நொறுக்கி விட்டு சிற்றுளியின் நயமெல்லாம் தெரியும்படி வல்லவன் ஆக்கிய சிற்பம் போல் அழகுணர்ச்சியெல்லாம் நிறைந்து நிற்கும் கம்பன் காவிய மாளிகை எங்கே? (By the ide of the valmigi massive, if at time gorgeons fise, Kamban construction stands like. Pleasure done of classical beauty and finished perfection). இந்தக் கம்பீரமான காவிய நிர்மாணத்திலே சில்லறை அலங்காரங்களையும் கம்பன் மறந்துவிடவில்லை. (He conceived like a tika and finished like a jeweller) சுருங்கச் சொன்னால் கம்பனுடைய காவியம் பல்லவ சிற்பிகளின் பெரிய வீச்சையும் சாளுக்கிய சிற்பிகளின் சிற்றுளி வேலையையும், மொகலாயர்காலத்துச் சின்னஞ் சிறு சித்திரம் வரைபவர்களின் கலை நயத்தையும் ஒருங்கே ஞாபகத்துக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது.

இனி இக்காவியமாளிகைக்குள்ளேயே நுழைந்து பார்த்தால் வேறு ஒரு காவியத்திலும் இத்துணை வேறுபட்ட அருங்குணங்கள் இந்த அளவுக்கு அகப்படாது என்றுதான் தோன்றுகிறது. கம்பனே,

அழகெல்லாம் ஒருங்கே கண்டால்
     யாவரே ஆற்றவல்லார்

என்று அவனுடைய சிருஷ்டியான சீதைக்குக் கொடுக்கும் வர்ணனை அவனுடைய காவியத்துக்கும் பெரிதும் பொருந்தும் என்கிறார் வ.வே.சு. ஐயர்.

காவிய மாளிகையின் கவிதா மண்டபத்தின் அழகையே அனுபவிப்பதா. சித்திரச் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களையே கண்கொள்ளாமல் பார்த்துக் கொண்டே நிற்பதா அல்லது நாடக அரங்கத்திலே வரும் நடிகர்களின் நடிப்பிலே மயங்குவதா என்று தான் தெரியவில்லை. எப்பக்கம் திரும்பினாலும் மாளிகையின் அழகுகள் நம்மை அப்படி அப்படியே வசீகரித்து விடுகின்றன. மாளிகை எப்படி இருக்கிறது என்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அதற்கும் கம்பனது உதவியைத்தான் நாம் நாட வேண்டியிருக்கிறது. லங்கா நகரத்திலுள்ள மாளிகைகளை வர்ணிக்கும் கம்பன்

பொன் கொண்டு இழைத்த
     மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
     வெயிலைக் கொடு சமைத்த

என் கொண்டு இயற்றிய
     எனத் தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு
     மதி முட்டுவனமாடம்

என்று பாடுகிறான். பொன், மணி, மின், வெயில் இவைகளால் ஆக்கப்பட்ட மாளிகைகள்தான் லங்கா நகரத்தில் உள்ள மாளிகைகள். ஆனால் இவைகளையெல்லாம் விட இன்னும் பிரகாசமான பொருளாலும் இம்மாளிகைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி அதிபிரகாசமான பொருள் என்ன என்பதை பௌதிக சாஸ்திரம் இன்னும் கண்டுபிடித்தாகவில்லையே என்று எண்ணிக்கொண்டேதான், “என் கொண்டியற்றிய எனத் தெரிகிலாத” என்று கம்பன் தன் வர்ணனைக்கு முத்தாய்ப்பு வைக்கிறான்.

இதுபோலத்தான் கம்பன் தனது காவிய மாளிகையை கவிதா மேதைமையினாலும் சிற்பியின் திறமையினாலும் நாடகப் பண்பினாலும், கட்டி முடித்திருக்கிறான் என்று மட்டும் கூறிவிட்டால் அது அவனது காவிய மாளிகையைக் கட்டுவதில் கையாண்ட முறைகளை முற்றிலும் விளக்கியதாகாது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, ஒரு தெய்வீக அமானுஷ்யமான சக்தி ஒன்று கம்பனிடம் இருந்திருக்கிறது. அந்த சக்தியின் துணைகொண்டே இந்தக் காவிய நிர்மாணம் செய்திருக்கின்றான். கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்புடன் அம்மாளிகையும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது நம்முன்னே. ஆனால் அந்த சக்திதான் என்ன என்று சொல்ல முடியவில்லை. என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத என கம்பன் சொன்ன படியே நானும் கையைத்தான் விரிக்க வேண்டியிருக்கிறது.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/009-012&oldid=1346769" இலிருந்து மீள்விக்கப்பட்டது