உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் சுயசரிதம்/010-012

விக்கிமூலம் இலிருந்து



10. கம்பன் ஒரு சிறந்த
சினிமா டைரக்டர்


ன்றைய உலகம் சினிமா உலகம். சினிமாவிலே வருகின்ற காட்சி ஜோடனைகள், பாத்திரங்கள், அவர்கள் நடை, உடை பாவனைகள் அவர்களது உணர்ச்சி மிகுந்த நடிப்பு, மெருகேற்றும் பாடல்கள் எல்லாம் மக்கள் உள்ளத்தில் அழுத்தமாகப்படுகின்றன. நீங்கா நினைவாய் நிலைத்து விடுகின்றன. ஆதலால் இந்த சினிமா ஓர் அற்புதமான கலை என்று போற்றப்படுகிறது.

இந்தக் கலை இந்திய மண்ணில் தோன்றி எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. ஆதலால் இந்திய சினிமாவில் பொன்விழா இவ்வாண்டு நடைபெறுகிறது என்கிறார்கள். எனக்கு ஓர் ஐயம். இந்த அருங்கலை நமது தமிழ் மண்ணில் அடி எடுத்து வைத்து ஐம்பது வருஷங்கள் தானா ஆகிறது. இக்கலைக்கு அடிப்படை நாடகங்கள் தாமே. அந்த நாடகங்கள் தான் தமிழ்க் கலை உலகில் நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கின்றன. இயல் இசை நாடகம் என்று நமது தமிழ் இலக்கியங்கள் அன்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயே சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று போற்றப்பட்டிருக்கிறதே.

இது எல்லாம் சரிதான். நாடகத்திற்கும் சினிமாவிற்கும் செய்முறைகளில் கையாளும் உத்திகளில் (Technique) எவ்வளவோ வேறுபாடு உண்டோ? உதாரணமாக ஒரு காவிய நாயகன் உள்ளத்தில் பழைய நினைவுகள் எழுகிறது என்றால் எழுத்தில் அதைச் சொல்லிவிடலாம். அரங்க மேடையில் அந்த நினைவுகளை கண்ணுக்குத் தோன்றும் வகையில் காட்ட முடியாதே. சினிமாவில் என்றால் திரைச்சீலையில் கதாநாயகன் தலையை மட்டும் பெரிதாகக் காட்டி அவன் மண்டையில் ஓடும் எண்ணங்களை எல்லாம் காட்சி வடிவில் காட்டி காண்பவர்களுக்கு விளக்கி விடுதல் கூடுமே. இப்படி Play back பண்ணுவது எல்லாம் சினிமாவில் கையாளும் உத்தியாக அமைவது காரணமாக எந்த விஷயத்தையும் எவ்வித கோணத்திலும் காட்டி மக்களை மகிழ்விக்க முடியுமே. இன்னும் பல காட்சிகளை எட்ட இருந்தும் காட்டலாம். அருகில் நெருங்கி முக பாவங்களை உணரும் வகையிலும் காட்டலாம். இவைகளைத் தானே Long distance short, close up என்றெல்லாம் சினிமாக் கலைஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இது எல்லாம் நாடகத்தில் சாத்தியமாக இராதே என்பர் சிலர்.

ஆனால் இத்தனையையும் இதற்கு மேல் உள்ளதையும் காவியங்களில் காட்ட முடியும் என்கிறேன் நான். இது தமிழ் நாடகக் காட்சிகள் எல்லாவற்றிலும் காண முடிகிறதோ இல்லையோ கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய ராமாயணத்தில் அவன் திறமையாகக் காட்டியிருக்கிறான். அந்தக் காட்சி அண்மைக் காட்சி என்னும் Long distance shot, close up என்னும் சினிமாக் கலையின் திறனுள்ள செயல்முறையை அவன் எவ்வாறு காட்ட முயன்று வெற்றி பெற்றிருக்கிறான் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொன்னால் போதும். கிஷ்கிந்தையில் ருஷ்ய முகபர்வதத்தில் வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் மறைந்திருந்து வாழ்கிறான். அங்கு துணைவியாம் சீதையை இழந்த ராமனும் அவன் தம்பி இலக்குவனும் வருகிறார்கள். இவர்களை அனுமான் சந்தித்து அளவளாவ அவர்களைத் தன் தலைவனான சுக்ரீவனிடம் அழைத்து வருகிறான். இவர்கள் தூரத்தே வருவதைக் காண்கிறான் சுக்ரீவன். தூரத்திலே வருகிற போது யாரோ இரண்டு அழகர்கள் வருகிறார்கள் என்று தான் தோன்றுகிறது. சுக்ரீவனுக்கு இரண்டு மரகத மலைகள், அம்மலைகள் மேல் சந்திர உதயம் தோன்றியது போல இரண்டு சௌந்தர்யமான முகங்கள் என்றே உணர்கிறான். இதனைப் பாடுகிறான் கம்பன் Long distance shot ஆக.

கண்டனன் என்ப மன்னோ
     கதிர்வன் இருவர் காமக்
குண்டலம் துறந்து கோலவதனமும்
     குளிர்க்கும் கண்ணும்
புண்டரீகங்கள் பூத்துப்
     புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த
     மரகதக் கிரியனுக்கே

ராமனும் இலக்குவனும் நெருங்கி வருகிறார்கள். சுக்ரீவன் அவர்களை கொஞ்சம் நெருக்கத்திலேயே பார்க்கிறான். அவர்கள் கைகளில் வில்லேந்தியிருக்கிறார்கள். பரந்த மார்பும் உயர்ந்த தோள்களும் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆம் இவர்கள் வெறும் அழகர்கள் மாத்திரம் அல்ல சிறந்த வீரர்களும் கூட என்பதை நோக்கிலேயே தெரிந்து கொள்கிறான் சுக்ரீவன். ஆம் இது ஒரு Closeup காட்சி.

நோக்கினான் நெடித நின்றான்
     நொடி வரும் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
     அன்று தொட்டு இன்று காறும்

பாக்கியம் புரிந்த எல்லாம்
     குவிந்து இருபடிவம் ஆகி
மேக்குயர் தடந்தோள் பெற்று
     வீரராய் விளைவு என்பான்

என்பது கம்பன் பாடல்.

இந்த Close up காட்சியோடு சுக்ரீவன் திருப்தி அடையவில்லை. இவர்கள் யாராயிருத்தல் கூடும் என்று அவர்களை ஊடுருவி நோக்கியே அவர்களுடைய அவதாரத்து உண்மையையும் ரகசியத்தையுமே உணர்ந்து கொள்கிறான். இது ஒரு Xray படம் எடுத்தது போலவே அமைந்துவிடுகிறது. தேவர்கள் குழுவில் ஒரு பிரம்மா ஒரு இந்திரன், ஒரு சிவன் என்றெல்லாம் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மூல மூர்த்தியாம் பரம்பொருள் தெய்வமாக இருப்பதில் திருப்தி அடையாமல் மண்ணுலகில் மனிதனாக அவதரித்து மக்களைப் போல் மானுடனாகவே வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களை அனுபவிக்க விழைகிறார்கள். ஆம் தேவர் உலகையும் இந்த மானுடம் வென்று விடுகிறது என்பதனை ஆய்ந்து தெளிந்து விடுகிறான் சுக்ரீவன். சுக்ரீவன் தெளிந்தானோ இல்லையோ கம்பனுக்குத் தெளிவு ஏற்பட்டு விடுகிறது. அதை அவன் பாடுகிறான்.

தேறினன் அமரர்க்கெல்லாம்
     தேவராய் தேவர் என்றே
மாறி இப்பிறப்பில் வந்தார்
     மானுடராகி மண்ணோ
ஆறுகொள் சடிலத்தானும்
     அயனும் என்று இவர்களாதி
வேறு குழுவை எல்லாம்
     மானுடம் வென்ற தன்றோ.

என்று முத்தாய்ப்பே வைக்கிறான்.

சரி Long distance shot, close up சினிமா டெக்னிக்கிற்கு உதாரணம் கொடுத்துவிட்டீர், பழைய எண்ணங்களில் உள்ளத்தில் ஓடுவதைக் காட்ட சினிமாக்காரர்கள் கையாளும் தொழில் திறமையை உத்தியை உமது கம்பன் எப்படிக் காட்டுகிறான் என்று தானே கேட்கிறீர்கள். அதற்கும் ஒரு சான்று தருகிறேன்.

இலங்கையில் ராமன் ராவணனுடன் போர் ஏற்று நிற்கிறான். போரிலே ராமனது கையே மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையிலும் சீதையை எப்படியும் அடைந்துவிட வேண்டும் என்ற ஆவல் மட்டும் இராவணன் உள்ளத்தில் அடங்காத ஆவலாக ஊற்றம்பெறுகிறது. இதற்கு என்ன என்ன தந்திரங்கள் எல்லாம் கையாளலாம் என்று பார்க்கின்றான் இராவணன். தன் அருமைத் தம்பியாகிய கும்பகருணனை ராமனுடன் போர் செய்யும்படி அனுப்பிவிட்டு, ஒரு மாயாஜால சிருஷ்டி பண்ணி அவனை இழுத்துக் கொண்டு சீதையிருக்கும் சோக வனத்திற்கு வருகிறான், அந்த மாயாஜாலனோ சீதையை அணுகி, ராமனை விட்டுத் திரிலோக அதிபதியான ராவணனையே காதலனாக ஏற்று அவனது காதற் கிழத்தியாக வாழ்வதே சிறப்பு என்று கூறி அவள் மனதைக் கலைக்க முனைகிறான். எதற்கும் கலங்காத சீதை, எந்தை இவ்வாறு கூறான் என்று மாயாஜாலனையும் அவன் கூறியதையும் வெறுத்து ஒதுக்கி விடுகிறான். இந்த நிலையில் போர்க்களத்துத் தூதுவன் ஒருவன் ஓடிவந்து இராமனுடன் ஏற்று நின்ற போரில் கும்பகர்ணன் வீழ்ந்துவிட்டான். மாண்டு மடிந்துவிட்டான் என்று ராவணனிடம் சொல்கிறான். இந்தச் செய்தியைக் கேட்ட ராவணன் அப்படியே மயங்கி விழுந்துவிடுகிறான். இதே செய்தி சீதையின் காதில் விழுகிறது. அச்செய்தி அவளுக்கு எத்தகையதொரு மாற்றத்தைக் கொடுக்கிறது என்பதை கம்பர் சொல்கிறார். காவியத்தில் கும்பகர்ணனை நேரில் சீதை பார்த்திராவிட்டாலும் அவனுடைய ஆகிருதியைப் பற்றி திரிசடை முதலியோர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆற்றிலே அவன் குளிக்கும்போது கால் தேய்க்கக் கல்லாக இருப்பது மகாமேரு மலை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள் அவர்கள்.

கல்லன்றோ நீராடும் காலத்து
     கால் தேய்க்க
மல்லேந்து தோளர்க்கு
     வடமேரு

என்பதல்லவா வர்ணனை. இந்தப் பெரிய அரக்கனுடன் அல்லவா ஆறடி உயரமே உடைய ராமன் போர் ஏற்று நிற்கிறான். அந்தக் காட்சி அவள் கண்முன் தோன்றுகிறது. அந்தப் போரில் ராமன் வெற்றி பெறுவது எங்ஙனம் என்று ஒரு துணுக்கமே அடைகிறாள், அஞ்சுகிறாள். அந்தச் சமயத்தில் அந்த அரக்க வீரனைத் தன் நாயகனான ராமனது அம்பு வீழ்த்தி விடுகிறது. அவனும் மாண்டு மடிந்து விடுகிறான் என்ற செய்தி வருகிறது. இந்தச் செய்தி அவளது செவியை எவ்வளவு குளிர்வித்திருக்கும். செவியை மாத்திரந்தானா குளிர்விக்கும் உள்ளத்தையே பூரிக்க வைத்துவிடாதா? சரி தனக்கு இனி விடுதலை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? அந்த மகிழ்ச்சியில் அவள் உடல் ஒரு சுற்றுப் பெருத்துவிடாதா என்ன என்றெல்லாம் நாம் எண்ணத்தானே செய்கிறோம். அத்தனை எண்ணமும் கம்பனது உள்ளத்திலும் எழுந்திருக்கிறது. பாடுகிறார்.

கண்டாள் கருணனை
      கண் கடந்த தோளானைக்
கொண்டாள் ஒரு துணுக்கம்
     அன்னவனைக் கொன்றவனாம்

தண்டாத வாழினி
     துடித்த துனிவார்த
உண்டாள் உடல் தடித்தாள்
     வேறொருத்தி ஒக்கின்றாள்

என்றல்லவா பாட வந்திருக்கிறது. அவளுக்கு கண்டாள் கருணனை என்றும், அவன் கடவுள் தாளிணை என்றும் பாட முடிந்திருக்கிறாரே அவனால், அதில் எண்ணங்கள் அவள் மூளையில் Overlap பண்ணும் காட்சியை அல்லவா காட்டிவிடுகிறான். பழைய நிகழ்ச்சிகள் அவள் எண்ணத்தில் எப்படி தோன்றுகின்றன. தோன்றுவதை காவியத்தில் எப்படிக் காட்ட முடியும் என்பதையும் அல்லவா பாடியிருக்கிறான்.

இப்படியே கம்பன் காவியத்தில் பல காட்சிகளைக் காட்டலாம். அதன் மூலம் அவன் சினிமா உத்திகளில் எவ்வளவு தேர்ந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் நாம். ஆம் கம்பன் ஒரு தேர்ந்த டைரக்டரே என்று ஒரு சபாஷ் போடலாம்.

இப்படி என்றால் சினிமாக்கலை தமிழ்நாட்டிற்கு வந்து ஐம்பது வருஷங்கள் தானா ஆயிற்று ஆயிரம் வருஷங்கள், ஆகவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது எனக்கு சரி பொன்விழா மகிழ்ச்சி அல்ல வைரவிழா நடத்தலாம். இல்லை ஒரு பன்னூற்றாண்டு விழாவே கொண்டாடலாம் நாம்.

❖❖❖

"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/010-012&oldid=1346772" இலிருந்து மீள்விக்கப்பட்டது