கம்பன் சுயசரிதம்/011-012

விக்கிமூலம் இலிருந்து



11. கம்பன் – ஒரு கடல்

காரைக் குடி யதனில்
     கம்பன் கவி அரங்கில்
பேராவ லுடன் கூடி
     இருக்கின்ற பெரியோரே!
கவி அரங்கில் பங்குபெறும்
     கவி வாணர் பெருமக்காள்!
கவி அரங்கின் தலைமையினை
     கவின் பெறவே தாங்குகின்ற
தெய்வசிகா மணி அருணை
     தேசிகனே! அன்புள்ள
தாய்மாரே! தம்பியரே!
     தமிழறியும் சபையோரே!

உழைப்பதுவின் லக்ஷியமே
     உன்னதத்தின் குறிக்கோளே
கழகச் செயலாளா!
     கணேசப் பெருமானே!
உமக்கெல்லாம் உள்ளார்ந்த
     அன்பு வணக்கங்கள்.

இயற்கையினில் பத்து வகை
     எல்லோரும் பாடிடுவர்
செயற்கை அழகில்லாமல்
     செப்பிடுவீர் கடல் அழகை
என்றெழுதி யிட் டழைத்து

     என்னை இங்கே நிறுத்தியுளார்.


அன்னதனை,

நன்றுரைக்கும் வாய்ப்பினையோ
     நானறியேன் என்றாலும்
அரங்கின்றி வட்டாடும்
     ஆற்றல் மிகவுண்டு
கறங்காய்ச் சுழலுதற்கும்

     காதல் பெரிதுண்டு.


ஆதலினால்

செயலாளர் அன்பினுக்கும்
     செம்மனத்தோர் தண்ணளிக்கும்
வயமாகத் தலைவணங்கி
     வழுத்துவேன் சிலவார்த்தை.
கம்பனது காவியத்தில்
     காணுகின்ற கடலழகு
பம்பிப் பரந்துளதைப்

     பாரறியும் நீரறிவீர்.


ஆதலால்,

அன்னதனை விரித்துமது
     அவகாசம் கவராது
என்றனது வாழ்க்கையிலே

     எனக்கும் கடலுக்கும்

நேர்ந்த உறவதுதான்
     நிமிர்ந்து வளர்ந்தவிதம்
சீராக ஒரு சிறிது
     சொல்வேன் செவி சாய்ப்பீர்.

சின்னஞ் சிறுவயதில்
     சிறுதிவலை மழைகண்டால்
வன்னச் சிறுதாளால்
     வாகாய் நடந்துவந்து
தெருவீதி தனிலோடி
     தெள்ளேணம் கொட்டி
ஒரு சிறிதும் கூசாமல்
     உல்லாச மனத்துடனே
ஓடுகின்ற தண்ணீரில
     உள்ளிறங்கி, உடல் நனைந்து
பாடுகின்ற சிற்றோடைப்
     பண்ணுக்குத் தாளமிட்டு
வாடுகின்ற பயிர்வளர்க்கும்
     வளங்குறையா மழையினிலே
ஆடுகின்ற அனுபவத்தை

     அந்நாளில் பெற்றவன்நான்


இம்மட்டோ,

காகிதத்தில் கப்பல் செய்து
     கற்களெனும் சரக்கேற்றி,
சாகரத்தின் மீதுவிடும்
     சாதுரியம் காட்டிடுவேன்.,
கூரை தனிலிருந்து
     குதித்துவிழும் தண்ணீரில
ஆராத முத்தொளிரும்

     அணியழகில் மெய்மறப்பேன்.

அன்னை தடுத்தாலும்
     அண்ணன் அடித்தாலும்
பின்னைச் செயலறியேன்
     பிள்ளைப் பிராயத்தில்.

பள்ளிக்குச் செல்லும்
     பருவம் அடைந்ததன்பின்
தெள்ளத் தெளிந்துள்ள
     தெண்ணீர்க் கயங்கண்டால்
உள்ளம் பறிகொடுத்து
     உற்று உற்று நோக்கிடுவேன்
பள்ளத்தில் பாய்கின்ற
     பனிநீரின் ஓடையிலே
கல்வியொடு கவிதை
     கணக்கில்லா சாத்திரத்தை
பல்விதமாய்க் கண்டு
     படித்து மகிழ்ந்திடுவேன்.
சுழித்தோடிக் குமிழியிடும்
     சுழன்று சுழன்று நிலம்
குழித்தோடிக் குதித்து வரும்
     குவலயத்தில் எம்பொருநை.
வற்றாத நீர் நிறைந்து
     வசியோடு வளம்பெருக்கி
கற்றாவின் மடிபோல
     கலன் நிறைத்துப் பசியகற்றும்
எத்தனைநாள் அவள் மடியில்
     இனிதாய்க் கிடந்துறங்கி
நித்தம் அவளோடு
     நீந்திப் புனலாடி
சித்தம் மயங்கிச்

     சிந்தை பறிகொடுத்து

புத்தம் புதிய சுவை
      புதுமலரின் வாசமுமே
பெற்றதெல்லாம் சொன்னால்
      பேதலிக்கும் உங்கள் உளம்
கற்றுத் தெளிவதுவோ
      கன்னி தருவதெல்லாம்.

இன்னும் வயதேறி
      இங்கிதம் அறிந்தபினர்
மன்னும் பொதியை இடை
      வழிந்தோங்கும் வடஅருவி
கண்டேன் களித்தேன்
      காணறிய காட்சியென்று
மண்டுபெருங் காதலுடன்
      மாந்தி உடல் தடித்தேன்.
குற்றால மலையிருந்து
      குதித்துக் குதித்து வரும்
சிற்றாற்றங் கரையினிலே
      சிறியேன் சிலநேரம்
நின்றேன் நினைப்பொழந்தேன்

      நீள்உலகின் துயர் மறந்தேன்.


அத்தோடு,

தென்றல் சிலுசிலுப்பில்
      தெய்வ ஒளி கண்டேன்.
பித்தம் தெளியவைத்து
      பிணிஅகல வினைசெய்து
நித்தம் குளித்திடவும்
      நேராகத் தானழைத்து
உடல் குளிரச் செய்வதடன்

      உயிர் தழைக்க ஊட்டுவதை

வட அருவி ஆடிடுவோர்
     வாகாய் உணர்ந்திடுவர்.,
நேற்றுவரை தரையினிலே
     நேராய் நடந்தநதி
இற்றைக்கு எழுந்திருந்து
     எக்களிப் போடாடுவதும்,
விண்கிழித்து ஒழுகுகின்ற
     வண்ணமலர்த் தாரையினில்
வானவில்லின் ஜாலமெல்லாம்
     வகைவகையாய்த் தோற்றுவதும்
உள்புகுந்து அருவியிலே
     உல்லாசமாய் ஆடி
விள்ளற்கரிய தொரு

     வித்தகங்கள் பேசுவதும்


இன்னும் இது போன்று

எத்தனை அனுபவந்தான்
     எம்மான் அருளாலே
நித்தம் நான் பெற்றேன்
     நிமலன் அடிபணிந்தேன்.

மழையோடும் அருவியோடும்
     மாட்சிபெறும் ஆற்றோடும்
இழைந்து பலகாலம்
     இனிதாய்க் கழித்ததின்பின்
அன்றொருநாள்க் காலையிலே
     அலைவாய்க் கரைசேர்ந்து
நின்றேன் நிமிர்ந்தேன்
     நீலப் பெருங்கடலைக்கண்ணுற்றேன்
ஓஎன்ற ஓசையிலே

     உள்ளம் சிலிர்த்ததுகாண்

நாமென்றும் நமதென்றும்
     நாடுகின்ற பொருள்போகம்
விரிந்து பறந்திருக்கும்
     வியன் கடலைக் கண்டதுமே
கரிந்த வினையதுபோல்
     கழன்றோடிப் போயினவே.
எல்லை அறியாது
     இரவெல்லாம் உறங்காது
அல்லும் பகலுமெல்லாம்
     அலுக்காது தான் புரண்டு
அணியணியாய் அலைவீசி
     அழகாய்த் திரண்டுருண்டு
தணியாத வேட்கையுடன்
     தக்க இசைபாடி
முத்தோடு பவளமதை
     முன்னிக் கடலொதுக்கி
தத்தை மொழியார்க்கு
     தனித்த கலனாக்கி,
வண்ணக் கடல் தழுவி,
     வானவளை யந்தொட்டு
விண்ணினையே வியப்பாக்கும்
     விந்தைகளும் எத்தனைதான்.
ஆதியோடு அந்தம்
     அற்ற கடல்பரப்பு
ஆதி பரம்பொருளின்
     அழகான காட்சியன்றோ?
காலைக் கதிரவனும்
     கண்விழித்து ஓடிவந்து
கீழைக் கடலிலிருந்து

     கிளம்பி வருகையிலே

எண்ரிய ஜோதியோடு
     எங்கும் எழில்பரப்ப
கண்ணுதலோன் நடனமிடும்

     காட்சியன்றோ நினைவுவரும்


இம்மட்டோ

கடல் அலைமேல் இரவினிலே
     கவிபாடும் முழுமதியம்.
மடல் அவிழ்ந்த மலர்போல

     மனதிற்குச் சாந்திதரும்.


இப்படித்தான்

கல்லெனக்கு கவிசொல்லும்
     கடலெனக்கு காவியமாம்.
புல்லெனக்குப் புத்தகமே
     புனல் எனக்கு வாழ்வு தரும்.
இதுவரை நான் சொன்னதெலாம்
     எனக்கென்றே வாய்த்ததொரு
புதிய அனுபவமென்று

     புகல்வதற்கு நான் துணியேன்.


என்றாலும்,

இத்தகைய அனுபவம் என்
     இலக்கிய நல்வாழ்வினிலும்
சித்தித்த தென்பதனை
     சிறியேன் உணர்கின்றேன்.
கவியென்றால் இன்னதென்று
     காணஅறியாது
தவிக்கின்ற நாளிலெனைத்
     தடுத்து ஆட்கொண்டவனும்,
உள்ளத்தில் எழுகின்ற

     உணர்ச்சியினை உருவாக்கி

தெள்ளத் தெளிந்த தமிழ்
     தேன்பாகில் ஊறவைத்து
இன்பச் சுவைஉணரும்
     இனிதான வாய்ப்புணர்த்தி
இன்னிசையில் பாடியவன்
     எங்களவன் பாரதிதான்.
அன்னவன்றன் பாட்டினிலே
     அறியாப் பருவமதில்
கன்னல் சுவை அறியும்

     கனிவை நான் பெற்றிருந்தேன்.


அத்தோடு

குயில்வந்து கொம்பிருந்து
     கொஞ்சி இசைப்பதையும்,
மயிலாடி நடம்புரிந்து
     மனம்மகிழ வைப்பதையும்,
தேனோடு தினைமாவும்
     தித்திக்கும் முக்கனியும்
காணக் குழலிசையும்
     கனிவண்டின் ரீங்காரம்
எல்லாம் கலந்ததொரு
     இனிய கலவையைப் போல்
சொல்லாலும் இசையாலும்
     சொக்கவைப்பான் பாரதியே.
பாப்பாவின் பாட்டினிலே
     பறிகொடுத்த நெஞ்சுடனே
சாப்பாட்டை யும் மறக்கும்
     சாதனையைப் பெற்றவன்நான்.
பாரதியின் பாட்டைவிட
     பண்ணோசை மிக்கொலிக்கும்
தாரகையே எங்கள் தமிழ்
     தேசிய விநாயகனாம்.

மலர் மலராய் உருவாக்கி
     மாலையெனவே தொடுத்து
சீலர்களாம் சிறுவர்.
     செல்வத் தமிழருக்காய்
இன்றும் உதவுமொரு
     இனிய கவிஞனவன்,
பன்னற் கரியதொரு
     பண்பாடு பெற்றவனாம்.

இவ்விருவர் கவிதைகளும்
     இனிய மழைத் தாரையென
செவ்வியுடை இளமனது
     செழித்து வளர்வதற்கு
உற்றதொரு தாரகமாய்
     உதவியது அந்நாளில்
கற்ற கவிதையெல்லாம்
     கனிந்த கனியலவோ?

கவிதை இது என்று
     கண்டறிந்த பின்னருமே
புவியிலுளோர் போற்றும்
     புலவர் பலர் கண்டேன்.
சங்க இலக்கியங்கள்
     சார்ந்த பெருங்காப்பியங்கள்
தங்கம் போல் மாற்றுயர்ந்த

     தனித் தமிழே யானாலும்


அன்னவற்றில்,

அழகான இன்னிசையை
     அற்புதமாம் ஆற்றொழுக்கை
பழக்கமிலாச் சொற்களிலே

     பார்த்தறிய வகையில்லை

வள்ளுவப் பெருந்தகையார்
      வாழும் வகையுரைப்பார்
தெள்ளுதமிழ் இன்பமங்கு
      தெரிந்திடவோ தெம்பு இல்லை
மக்களது நாகரிகம்
      மன்னரது பண்பாடு
ஒக்க உரைக்கின்ற
      உன்னதமாம் நூல்க ளெலாம்
என்னறிவை வளர்த்தாலும்
      என்னிதய தாபமது
இன்னும் தணியவிவை
      ஏங்கி நின்றேன் கவியினுக்கே
அவ்வைக் கிழவி தரும்
      அழகான பாக்களிலே
கவ்வை தனை யகற்றும்
      கவிதைச் சுகமறிந்தேன்
மூவேந்தர் புகழுரைக்கும்
      மூன்று தொள் ளாயிரத்தில்
நாவேந்தர் சொல்நயத்தை
      நன்றாய் அனுபவித்தேன்
கலிங்கத்துப் போரினிலே
      கருணாக ரன் புகழ்தான்
ஒலிக்கும் பனுவலெனும்
      உன்னதமாம் பரணிதனில்
சயங்கொண்ட கவிஞனவன்
      சாற்றும் கவிகளிலே
நயங்கண்டு நின்றேன் யான்
      நல்ல தமிழ் அறிந்தேன்
நந்திக் கலம்பகத்தின்

      நலமார்ந்த கற்பனையில்

புந்தியொடு உளமுருக்கும்
      புகழ்க்கவிதை வளம்நிறைந்து
வற்றாத முக்கூடல்
      வகையான பள்ளோடு
குற்றாலக் குறவஞ்சி
      கூறாத இன்பமுண்டோ?

இன்னும் இதுபோன்று
      எத்தனையோ இலக்கியங்கள்
என் கவிதைக் காதலினை
      இனிதாய் வளர்த்ததுகாண்.

சிற்றாறு என்றாலும்
      சிந்தை மகிழ்வித்து
பெற்ற முடைச் சிறியர்
      பெரிய மனம் போல
ஆற்றொழுக்கின் கதியினிலே
      அணிசிறந்த இசைபேசி,
காற்றில் மிதக்குமொரு
      கவிதை உலாவருமே.
சலசலக்கும் சிற்றோடை
      சாந்தி தருவதையும்
பலபலவாம் வண்ணமதை
      பனிநீர் அருவியிலே
கண்டு களிக்கின்ற
      கவிதைச் சுகமெல்லாம்
பண்டறியா விட்டாலும்

      பார்க்கத் திறனுண்டு.

இப்படியே,

எண்ணற்ற கவிதைகளை
      இனிதாகத் தான்மாந்தி
நண்ணுகின்ற நதியழகும்
      நாடுகின்ற அருவிதரும்
இன்ப உணர்வை யெல்லாம்
      எளிதாய் நான் பெற்றபின்தான்
கம்பனது காவியமாம்
      கரையருகே வந்துநின்றேன்.
காவியப் பெருங்கடலைக்
      கண்ணுற்ற போழ்தினிலே
ஓவியமாய் உணர்விழந்து
      உன்மத்த மெய்திவிட்டேன்.
எவ்வளவு பரந்த கடல்
      எவ்வளவு விரிந்த நிலை
இக்கடலின் எல்லையினை
      எப்படி நாம் கண்டுகொள?
அகலமதை அளந்தாலும்
      ஆழம தை அறிய
சகல கலா வல்லவனும்
      சாதித்தல் கூடிடுமோ?

அலைமேல் அலைவந்து
      அழகான முத்தையள்ளி
மலையாய்க் குவிப்பதுபோல்
      மன்னன் கவி சொல்வான்.
விண்ணில் ஒளிருகின்ற
      மீனித்தைப் போலெல்லாம்
கண்ணிற் கினிய பல

      காட்சிகளைத் தந்திடுவான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/011-012&oldid=1346777" இலிருந்து மீள்விக்கப்பட்டது