உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பன் சுயசரிதம்/012-012

விக்கிமூலம் இலிருந்து

12. கம்பன் என் பகைவன்


“வாருங்கள் வாருங்கள்
     வணக்கம் யாம்செய்கின்றோம்,
பாரிடத்தல் எங்களையே
     பார்ப்பதற்காய் வந்ததற்கு
பாராட்டுகின்றோம் யாம்
     பக்கத் திருந்திடுவீர்
பேரவாவோடு உம்வரவை
     பேணிஎதிர் பார்த்திருந்தோம்
நாலாறு நாட்பொழுதாய்
     நாங்கள்எல் லாருந்தான்.
காலையில்தான் வீட்டுள்ளே
     கடும்பகலில் ஆபிசில்
மாலையிலே இங்குவந்து
     மகிழ்வோடு தானிருந்து
வேலைதரும் தளர்வை
     விரட்டி விடலாகாதோ?”
என்றெனையே வரவேற்றார்
     என்றனது அன்பர் சிலர்
அன்றொரு நாள் மாலையிலே

     ஆற்றங் கரையருகே.

பொன்னி யெனுந்தெய்வப்
     புனலாலே வளம்பெருக்கும்
கன்னியவள் காவிரியின்
     காதல் மடிதவழ்ந்து
தெள்ளத் தெளிந்தோடி
     தென்றல் இசை பரப்பி
உள்ளத்தில் உவகையினை
     ஊட்டுகின்ற ஓரிடத்து
ஓங்குகின்ற மரத்துடே
     உதிக்கின்ற நிலவொளியில்
பூங்குலைகள் தூங்குகின்ற
     பொழிலடுத்து மணற்பரப்பில்
வீற்றிருந்தார் அன்பர்
     விரைந்தங்கு சென்றேன் யான்
போற்றி அவர் உரைத்த
     பொன்னுரைக்குத் தலைவணங்கி
அன்பர்களே! அறிஞர்களே!
     அஞ்சாறு நாட்கணக்கில்
இன்பம் நுகர்வதற்கும்
     இனிதான கூட்டுறவை
நாடிவர மனமிருந்தும்
     நற்பொழுது வாய்க்கவிலை
வீட்டிருந்து செயவேண்டும்
     வேலைஇருந்தது காண்
என்று தெரிவித்து
     எங்கெங்கோ சிந்தனையைச்
சென்றுவர விட்டு
     சேர்ந்தேன் அவர்பக்கல்
காரியந்தான் என்னவென்று

     கணக்கிடவே நானறிவேன்

பாரிடத்தில் பங்குனியில்
     பகருகின்ற அத்தத்தில்
காரைக்குடியினிலே
     கம்பனுக்குத் திருநாள்
சீராகச் செய்கின்ற
     செட்டிநாட் டன்பருடன்
சேர விரைந்திடுவீர்
     சென்றங்கு தானிருப்பீர்
வேறுள்ள வேலையெலாம்
     விட்டிடுவீர் இப்போது,
என்றெமக்குத் தெரியாதா?
     இத்தனை நாள் பழகியுந்தான்
என்று ஒரு நண்பர்
     எவ்வத் தொடுபேச,
வருஷந்தோ றுந்திருநாள்
     வகையாய் நடத்துகின்றார்
விருந்தருத்தி மக்களுக்கு
     வித்தார மாய்ப்புகட்ட
இந்தத் திருநாளில்
     ஏற்ற முறுமுறையில்
வந்தனையைக் கம்பனுக்கு
     வண்ணமுறச் செய்வதற்கு
என்னதிட்ட் மிட்டுள்ளான்
     எழிலார் கணேசனுந்தான்
என்றுமிக்க ஆவலுடன்
     எனைக்கேட்டார் மற்றொருவர்.
“கம்பன் திருநாளில்
     கவிதை அரங்குண்டு
கம்பன்என் தந்தையென்பர்,

     கவிஞன்என் காதலனாம்,

கம்பன்என் ஆசானே,
 கம்பன்என் தோழனுந்தான்,
கம்பன்என் தெய்வமையா!
 காண்கின்றோம் இவ்விதமே
என்றுபலர் பாமாலை
 இயற்றிப் புனைகின்றார்
நன்றாயி ருக்குமென்று
 நான்வேறேசொல்லனுமோ”
என்றுஒரு பெருமிதத்தோடு
 எலலோரும் திருநாட்கு
என்னோடே வருக என்று
 எக்களிப்போடே அழைத்தேன்.

இவ்வுரையைக் கேட்டொருவர்
 எழுந்தார் சினத்தோடே
தெவ்வரைப்போ லேவெகுண்டு
 தெறலோடு எனைப்பார்த்து
என்னையா சொன்னீர்?
 யாரிடத்தே பேசுகின்றீர்
கன்னித் தமிழ்மொழியில்
 காவியத்தைத் தானெழுத
கதைவேறே கம்பனுக்கு
 கையில் கிடைக்கலையோ?
பதைக்கின்றோம் எண்ணுகையில்,.
 பழிபூண நாணுகின்றோம்
சித்திரத்தில் திட்டநல்ல
 சிலப்பதிகா ரம்இருக்க
உத்தார மாய்ப்பேச
 உயர்சங்கத் தமிழிருக்க
எவனோ எழுதிவைத்தான்

 ஏட்டில் ஒரு கதையை

புவனம் முழுவதுமே
     போற்றிப் புகழ்கிறது
வடநாட்டு வான்மீகி
     வன்மமொடு திராவிடரை
திடமாக இழிவுசெயத்
     தீட்டிவைத்த அக்கதையை
இந்தப் பயல்கம்பன்
     ஏனோ தமிழருக்காய்
சொந்தக் கதையாக்கி
     சொகுசாய் உரைத்திட்டான்.
ராமபிரா னவனாம்
     ராவணனை வென்றவனாம்
நேம மொடுவாழும்
     நீர்மை தெரிந்தவனாம்
என்றெல்லாம் ஆரியனை
     ஏத்திப் பணிந்துநின்று
குன்றனையை வலிபடைத்த
     கோலமுறு வாலியுைம்
தென்னாட்டு வீரனவன்
     தெருளுடைய ராவணனாம
மன்னனையும் மக்களையும்
     மதியாது இழித்துரைத்து
தமிழரெனும் நம்மையெலாம்
     தலைதூக்க ஒட்டாமல்
அமிதிவைத்த வன்என்று
     அறியீரோ நீரெல்லாம்?
கொங்கையோடு அல்குலையும்
     கூசாமல் தான்விளக்கி
மங்கையவர் மாண்பையெலாம்

     மண்ணாக்கி மயலாக்கி,

கலையென்றும் ரசமென்றும்
     கவிதைச் சுவையென்றும்
தலைமேலே தூக்கிவைக்கும்
     தாசரெலாம் நீர்தாமே?
கம்பரச மென்பதெலாம்
     காமரச மல்லாது
இம்பர் உலகத்தில்
     எதற்கும் பயனுண்டோ,
இப்படிப் பட்டவனை
     என்பகைவன் என்றுசொலி
தப்ப வழியின்றி
     தகிக்கின்ற தீயிட்டு
தன்மானத் தொடுநாமும்
     தலைநிமிர்ந்து தான்நடக்க
என்உள்ளம் விரைகிறது
     எத்தனையோ நாளாய்த்தான்
என்றுகடுங் கோபமுடன்
     என்மேலே தான்பாய்ந்தார்
நன்றாக இருந்ததொரு

     நண்பர் ஒருதோழர்.


மற்றொரு நண்பரோ,

தோழர் உரைத்த தெலாம்
     தொடர்ந்து நீர் கேட்டுவிட்டீ
ஆழ்ந்தகருத் தொடுநானும்
     அக்காவி யம்படித்தேன்
கவிதைச் சுவையறியும்
     காதுடையேன் ஆனாலும்
புவிதனிலே இக்கதையைப்

     போற்ற முடியஇலை

வெள்ளைக் கலையுடுத்து
     வீணை கரத்தேந்தி
வெள்ளை அரி யாசனத்தில்
     வீற்றிருக்கும் கலை மகட்கு
பொன்னாலும் பொருளாலும்
     பொற்கோயில் அமையாது
எண்ணத்தால் சிறந்தோங்கும்
     எழிலார் கலைக்கோயில்
கட்டும் ஒரு பணியில்
     கருத்துண்டயோன் கம்பன் என்றால்
இட்டமொடு சிறந்த
     எத்தனையோ கதையிலையோ?
ஆதிசிவன் பெற்றெடுத்து
     அகத்தியனு மேவளர்த்து
ஓதிப் பெருமை கொள
     உயர்ந்தாள் தமிழணங்கு.
தமிழோடு சைவமுந்தான்
     தழைத்து வளர்ந்தஇந்த
தமிழ்நாட்டில் கம்பனுக்கு
     தக்க கதை கிடைக்கலையோ?
பிறவாத யாக்கையுடைப்
     பெரியோன் சிவனிருக்க
இறவாத புகழை யெலாம்
     இராமனுக்கோ ஏற்றுவது?
அறுபத்து மூவருடை
     அழியாப் பெருமையொடு
அறுபத்து நான்காய்
     அமைந்த விளையாடலுமே
ஏற்றமுறும் வகையில்

     எங்கள்சிவ னருளைப்

போற்றுமொரு காவியத்தைப்
     புவிக்களிக்கக் கூடாதோ?
வீர புருஷனென
     விளக்கியந்த ராமனையே
பாரறிய வான்மீகி
     படைத்திருந்தும் காவியத்தில்,
மூவர்க்கும் மேலான
     முதலவன் இவனென்றும்
நாவாலே ராமனென
     நாளுந் துதிசெய்தால்
நாடுகின்ற பொருள்போகம்
     ஞானமொடு புகழும்
வீடுதேடி வருமென்று
     விரித்துவிட்டான் கம்பனுமே.
இப்படியெல்லாம் சொல்லி
     இந்தத் தமிழகத்தில்
தப்பிதமாய்ப் பிரச்சாரம்
     தமிழ் மொழியில் செய்ததனால்
சிவனடியே மறவாத
     சிந்தையொடு வாழ்வதற்கு
இவனாலே எவ்வளவோ
     ஏதம் விளைந்துளது
இதனாலே கம்பனையே
     என்பகைவன் என்றுசொல
கதத்தோடு என்னுடைய

     கடன்என்றே குறிக்கின்றேன்
(என்று ஒரு போடு போட்டார். போட்டவர் அழுத்தமான சைவர். சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று எண்ணுகின்றவர், பேசுகின்றவர். இவருக்குப் பதில் சொல்லவோ நான் துணியவில்லை. அதற்குள் ஆரம்பித்தார் மற்றொருவர்)

நண்பர் இருவருமே
    நயமாகச் சொன்னதெலாம்
எண்ணுதற்கு உரியவையே
    என்றாலும், என்னுடைய
எதிர்ப்பெல்லாம் கம்பனுக்கு
    இதனாலே தானில்லை
முதிர்ச்சி யொடுஅறிவு
    முற்றும் உடையவர்கள்
கவியென்றும் கம்பனென்றும்
    காலங் கழிப்பதற்கு
புவியிலின்று நேரமில்லை
    புகல்கின்றேன், புகல்கின்றேன்
நாட்டின் நிலைதெரிந்து
    நடக்கத் தெரியாமல்
பாட்டென்றும் கூத்தென்றும்
    பணவிரயம் செய்கின்ற
கூட்டமதைப் பார்த்து
    கூறுகின்றேன் ஒருவார்த்தை.
ஆட்டமொடு கவிதை
    அரும்பசியைத் தீர்க்காது
போர்வந்து போயிற்று
    புதிதாய்ச் சுதந்திரமும்
ஊர்தேடி வந்துநமை
    உயரத்தில் வைத்தளது.
என்றாலும் நாட்டினிலே
    எல்லா இடத்தினிலும்
குன்றாத பஞ்சந்தான்
    கூத்திட்டு நிற்கிறது.
அரிசிக்குப் பங்கீடு

    அரைவீசைச் சர்க்கரைதான்

குறிக்கின்ற பொருட்கெல்லாம்
     கொள்ளை விலையேதான்
உடுக்க உடையின்றி
     உண்பதற்கு உணவின்றி
படுப்பதற்கு பாயின்றி
     பரிவின்றி வலியின்றி
பஞ்சமொடு பசியால்
     பரிதவிக்கின்றார் மக்கள்.
நெஞ்சிரக்க மில்லாது
     நினையாது எண்ணாது
கலையென்றும் கவியென்றும்
     கதைபேசித் திரிகின்றீர்
சிலைஒன்று கம்பனுக்குச்
 செயவேண்டும் என்கின்றீர்.
உம்மைப் போலுள்ளவர்கள்
     உதவார்கள் இந்நாளில்.
நம்மையெல்லாம் காப்பதற்கு
     நண்பர் பலர்வேண்டும்
கம்பனோடு நீரும்தான்
     கடும்பகைவன் இனத்திற்கு
நம்பாதீர் இவரையென

     நாவலித்துக் கூறுகின்றேன்.
(என்று ஆர்ப்பாட்டமே செய்துவிட்டார் இந்த நண்பர். மூன்று பேர் கம்பனை என் பகைவன் எம் பகைவன் என்று சொல்லி அவர்கள் கருத்தையெல்லாம் அறுதியிட்டுக் கூறிவிட்டார்கள். உண்மைதானே. கம்பன் இவர்களுக்குப் பகைவன்தான். இவர்கள் மூன்று பேருக்கு மட்டுந்தானா பகைவன்? இல்லை இன்னும் எத்தனையோ பேர்களுக்கு அவன் பகைவன். ஆம் பகைவன்தான்.)

பாட்டும் உரையும்
    பயில்கின்ற பண்பறியா
ஒட்டைச் செவிபடைத்த
    ஊமையருக் குப்பகைவன்
உள்ளத்தில் எழுகின்ற
    உணர்ச்சிக்கு உருவத்தை
அளிக்கின்ற ஆற்றலினை
    அறியாதார்க் குப்பகைவன்
துன்பம் துடைக்கவல்ல
    தூய கவிதையினை
இன்ப மொடுபாட
    இயலாதார்க் குப்பகைவன்
எங்கும் நிறைந்துள்ள
    எழிலார் இறையருளின்
பொங்குகின்ற பூரணத்தைப்
    போற்றாதார்க் குப்பகைவன்
கண்ணுதல்போல் சடைவிரித்து
    கடலலைமேல் கதிரவனும்
பண்ணிசையோ டாடுவதைப்
    பார்த்தறியார்க் குப்பகைவன்
அந்திதரு சித்திரத்தின்
    அழகினிலே தான்மயங்கி
வந்தித்துப் போற்றி
    வாழ்த்தாதார்க் குப்பகைவன்
கலலினிலும் செம்பினிலும்
    கடவுளையே காட்டுகின்ற
பல்திறத்துச் சிற்பிகளின்
    பண்பறியார்க் குப்பகைவன்
கற்றதனால்ஆயபயன்
    கடவுளையே தொழுதலென

முற்றும் உணராத
    மூடர்களுக் குப்பகைவன்
தனக்குவமை இல்லாதான்
    தாளில்ப் பணியாது
மனத்துக்கண் மாசுடைய
    மாக்களுக்கெல் லாம்பகைவன்
அரன்அதிகன் உலகளந்த
    அரிஅதிகன் என்றுரைத்து
பரகதிக்குச் சொல்லமொரு
    பரிசில்லார்க் குப்பகைவன்
சத்தியத்தொடு அஹிம்சை
    சமயத்தில் சமரசமே
நித்தியமும் வாழ்வினிலே
    நிறுத்தாதார்க் குப்பகைவன்
அஞ்சாது திருடாது
    அருள்நெறியில் தான்நின்று
எஞ்சாது பணிபுரியும்
    ஏற்றமிலார்க் குப்பகைவன்
வாய்மையொடு மரபை
    வையத்தில் காப்பதற்கு
துயஉயிரை விடத்
    துணிவில்லார்க் குப்பகைவன்
கள்ளத்தால் பிறர்மனையைக்
    கொள்ளத்தான் குறிக்கொண்டு
உள்ளத்தால் உன்னுகின்ற
    உலுத்தர்களுக் குப்பகைவன்
வாழ்வாங்கு வையகத்தில்
    வாழத் தெரியாமல்
பாழும் நெறிகளிலே

    பட்டலைவார்க் குப்பகைவன்

எல்லாப் பெருஞ்செல்வம்
    எல்லோரும் எய்துதற்கு
வல்லான் உரைத்ததனை
    வகுத்தறியார்க் குப்பகைவன்
அறிவின்மைக் குப்பகைவன்
    அன்பின்மைக் குப்பகைவன்
வறியவர்க்கு வழங்குமொரு
    வண்மையிலார்க் குப்பகைவன்
தமிழறியார்க் குப்பகைவன்
    தகவில்லார்க் குப்பகைவன்
அமுதினையே மாந்த
    அறியா தார்க்குப் பகைவன்
வெண்மைக் குப்பகைவன்
    வெறியருக் குப்பகைவன்
ஒண்மை அறிவில்லா
    ஒன்னார்க் குப்பகைவன்

பகைவன் பகைவன்எனப்
    பல்லோரும் சொன்னாலும்
பகைவனுக்கும் அருளுமொரு
    பண்புடையோம் ஆனதினால்
கம்பன் திருநாளில்
    கவிஞனவன் வாழ்கஎனப்
பம்பும் உணர்ச்சியுடன்
    பல்லாண்டு கூறிடுவோம்.

கம்பன் வாழ்க!
    வாழ்க வாழ்க!
கம்பன்புகழ் வாழ்க!
    வாழ்க! வாழ்க!
கன்னித்தமிழ் வாழ்க!

    வாழ்க! வாழ்க!

அமரர் கலைமணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் கொன்னார். முற்றிலும் உண்மை.

தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும்.

குற்றலமுனிவர் ரசிகமணி டி.கே. சி. யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப்படைப்புகளும் கலைப்படைப்புகளும் தமிழுக்கும் கலையுலகுக்கும் கிடைத்த ஆரிய பொக்கிஷங்கள்.

ஆசிரியரது பிற நூல்கள்—————————————————

  1. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்து பாகங்கள்)
  2. வேங்கடத்துக்கு அப்பால்
  3. இந்தியக் கலைச்செல்வம் (வானொலிக் கட்டுரைகள்)
  4. கலைஞன் கண்ட கடவுள்
  5. கல்லும் சொல்லாதோ கவி
  6. அமர காதலர்
  7. தென்றல் தந்த கவிதை
  8. தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பண்பாடும்
  9. பிள்ளையார்யட்டிப் பிள்ளையார்
  10. தமிழறிஞர் வெள்ளகால் கப்பிரமணியமுதலியார்
  11. ரசிகமணி டி. கே. சி.
  12. மதுரை மீனாட்சி
  13. இந்திய கலைச்செல்வம்
"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பன்_சுயசரிதம்/012-012&oldid=1346780" இலிருந்து மீள்விக்கப்பட்டது