கலைக்களஞ்சியம்/அக்கரோட்டு
அக்கரோட்டு (Walnut) அழகிற் சிறந்தவையும் பெரும் பயன் தருபவையுமான உத்தம மரங்களிலே ஒன்று. இது நேர்த்தியான மரச் சாமான் செய்வதற்கு மகாகனி, ஓக் மரங்களுக்குச் சமமானது. சிலவகை அக்கரேட்டு மரங்களைத் தகடுபோல அறுத்து உயர்ந்த மரச்சாமான்களின் மேல் ஓட்டு வேலை (Vencer) செய்வதுண்டு. இதன் கனி மிகச் சிறந்த கொட்டைகளில் ஒன்று. அதிலுள்ள பருப்பு சுவை மிகுந்தது. உணவுப் பொருள் நிறைந்தது. இந்தச் சாதி மரங்கள் ஆசியாவின் தெற்கிலும், கிழக்கிலும், தென்கிழக்கு ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும் வளர்கின்றன. 17 இனங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றின் பருப்பே நாம் உண்ணத் தகுந்தது. மற்றவற்றின் பருப்பு, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகும். அக்கரோட்டில் கறுப்பு, வெள்ளை அல்லது வெண்ணை, பாரசீகம் என்னும் மூன்று வகைகள் முக்கியமானவை. இந்ததச் சாதி மரங்களெல்லாம் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு போகப்பட்டவை. இப்போது அங்கு ஏராளமாகப் பயிர் செய்யப்படுகின்றன.
இந்த மரங்கள் சிலநூற்றாண்டுகள் உயிருடனிருக்கும். பெரிய மரங்கள் 100-150 அடி உயரமும், மார்பு உயரத்தில் 6 அடிச் சுற்றும் உள்ளவை. இவை மிகவும் கம்பீரமாகத் தோன்றும். அதனால் பூங்காக்களிலும் சாலைகளிலும் இவற்றை வைத்து வளர்ப்பதுண்டு. இலைகள் 1-2 அடி நீளம். இறகுபோன்ற ஒற்றைக் கூட்டிலைகள். நறுமணமுள்ளவை, மருந்துக்குப் பயன்படும். பூக்கள் சிறியவை. இம் மரத்தின் சாற்றிலிருந்து சர்க்கரை எடுக்கப்படுகிறது.
குடும்பம்; ஜூக்லண்டேசி (Juglandaceae). இனம்: ஜூக்லன்ஸ் ரீஜியா (]uglans regia) முதலானவை.