கலைக்களஞ்சியம்/அசுட்டோஷ் முக்கர்ஜி
அசுட்டோஷ் முக்கர்ஜி (1864-1925): இவர் 1864 ஜூன் 29-ல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் தந்தையார் கங்கா பிரசாத் முக்கஜி. இவர் சிறுவயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வமுடையவராய்த்
தேர்ச்சி பெற்று வந்தார். 1885-ல் கணிதத்தில் எம்.ஏ. பட்டமும் 1888-ல் சட்டத்தில் உயர்தரப் பட்டமும் பெற்றார் .1904-ல் இவர் கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்றார். 1923 வரையில் இவர் மிகுந்த திறமையோடும் புகழோடும் இப்பதவியை வகித்து வந்தார். 1920-ல் சில மாதங்கள் இவர் தலைமை நீதிபதியாகவும் அலுவல் பார்த்தார். இவர் வங்கான லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும், டெல்லி கவுன்சிலிலும் கல்கத்தாக் கார்ப்பொரேஷனிலும் அங்கத்தினராயிருந்தார்.
இவர் 1906லிருந்து 1916 வரையில் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரா யிருந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தை மிகச் சிறந்த ஒரு கல்வி நிலையமாகச் செய்த பெருமை இவரையே சாரும்.
இவர் நம்நாட்டுப் பண்டைய வழக்கங்களைக் கைவிடாமல் மேற்கொண்டு ஒழுகினார். பெற்றேர் மனம் வருந்தாமலிருக்கவேண்டு மென்று கடல்கடந்து மேல்நாடுகளுக்கு மேற்படிப்பை முன்னிட்டுச் செல்லவில்லை. ஆயினும் இவர் பிற்போக்கான கொள்கை உடையவரல்லர். இவர் விதவையாகிவிட்ட தம் மகள் கமலாவிற்கு மறுமணம் செய்துவைத்தார். இவர் மகனை மேற்படிப்பிற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பினார். 1921-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தின் ஒருபகுதியாக மாணவர்களைப் பள்ளிகளிலிருந்து நீங்குமாறு கூறியதை இவர் எதிர்த்தார். கமலா சொற்பொழிவு நிதி என்று இவர் தம் மகள் பெயரால் ஒரு நிதி ஏற்படுத்தி, ஆண்டுதோறும் அறிஞர் ஒருவரைக்கொண்டு சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். சியாம பிரசாத் முக்கர்ஜி இவர் புதல்வராவர். இவர் 1925 மே25-ல் இறந்தார் .