உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அடைப்பான்

விக்கிமூலம் இலிருந்து

அடைப்பான் (Anthrax) : இது மனிதன் உட்பட எல்லா விலங்குகட்கும் சாவு உண்டாக்கக்கூடிய ஒரு நோய். இது பசிலஸ் ஆந்த்ராசிஸ் என்னும் பாக்டீரியா இரத்தத்தில் புகுந்து மிகவும் விரைவில் பல்குவதால் உண்டாவதாகும். இந்த உயிரி பெரும்பாலும் தரையிலேயே இருப்பதால் இதனால் தாக்கப்படுபவை ஆடுமாடுகள், மான் முதலிய புல்மேயும் மிருகங்களே யாகும். ஒட்டகத்திற்கும் யானைக்குங்கூட இந்நோய் வருவதுண்டு. இந்த நோயால் இறந்த பிராணிகளை உண்பதால் நாய்க்கும் பூனைக்கும் இது உண்டாகும்.

கால்நடைகளுக்கு உண்டாவது : இந்நோய் வெகுவிரைவில் முற்றிவிடுவதால் ஆடுமாடுகளுக்கு இது கண்டிருக்கிறது என்று தெரிவதற்கு முன்பே அவை திடீரென்று இறந்துவிடும். இறந்தவுடன் பிணம் மிகுதியாக ஊதிவிடும்; மலக்குடல் வெளியே பிதுங்கும்; இரத்தம் கலந்த நீர் மலக்குடலிலிருந்தும் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் வெளிவரும்.

இந்த அடையாளங்களைக் கண்டால் பிராணி அடைப்பான் நோய் வந்து இறந்ததாக ஐயுறலாம். சில பிராணிகளிடம் முதலில் காணப்படும் அடையாளம் குளிர் நடுக்கமும், சுரமும், சிரமத்துடன் கூடிய மூச்சுமாகும். வயிற்றுவலி தோன்றுவதும் வழக்கம். இரத்தக்கறையுடன் மலம் இறங்கலாம். அதன்பின் விரைவில் மிருகம் தள்ளாடிக் கொண்டிருந்து இறந்து போகும். பிணத்தினின்று எடுத்த இரத்தத்தைப் பரிசோதித்த பிறகே இந்த நோய்தான் என்று நிச்சயிக்க முடியும்.

அடைப்பான் நோயால் இறந்துபோன பிராணியின் உடலைத் திறக்கக் கூடாது; அதற்குரிய காரணங்கள் இரண்டு. (1) அடைப்பான் உயிரிகளின் மீது காற்றுப் பட்டால், அவை 'ஸ்போர்' களாக மாறிவிடுகின்றன. (2) அறுப்பவர்களுடைய உடலில் ஏதேனும் காயமுண்டாயிருந்தால் அவர்களிடம் அந்நோய் தொற்றிக் கொள்ளும்.

இந்த ஸ்போர்கள் சூட்டாலும் தொற்றுநீக்கி மருந்துகளாலும் சாகா. இவை தரையிலும் உணவுப் பொருள்களிலும் இருந்துகொண்டு நோய்வரக் கூடிய நிலையிலுள்ள பிராணிகளிடம் தொற்றிக்கொள்கின்றன. தொற்றியதும் பல்கத் தொடங்குகின்றன.

இந்த நாட்டில் சில பகுதிகளில் இந்நோய் குறிப்பிட்ட காலங்களில் வழக்கமாகத் தோன்றிக் கொண்டிருக்கிறது. அப்பகுதியிலுள்ள பிராணிகளை இதற்காகச் செய்யப்பெறும் வாக்சின் குத்திப் பாதுகாக்கவேண்டும். நோய் கண்ட மிருகங்களுக்கு அடைப்பான் மாற்றுச்சீரம் கொண்டு சிகிச்சைசெய்ய வேண்டும். ஐ. எம். அ.

மக்களுக்கு உண்டாவது: அடைப்பான் நோயால் இறந்த பிராணியின் இறைச்சியை உண்பதாலும், அப்படிப்பட்ட பிணத்தை அறுக்கும்போது பசிலஸ் தொற்றிக் கொள்வதாலும் இந்த நோய் மனிதனுக்கு உண்டாகலாம். கால்நடைகளோடு பழகுவோர், மாமிச வியாபாரிகள், தோல் பதனிடும் தொழிலாளிகள், கம்பளம் தயாரிப்போர், இந்தப் பசிலஸ் சேர்ந்திருக்கும் சவர புருசு, பால், மாமிசம் முதலியவற்றை உபயோகிப்போர் இந்நோயினைப் பெறக்கூடும். இந்நோய் பசிலஸ்கள் (Malignant Pustule 90%) உடலில் புகுந்த 3-5 நாட்கள் அவயக்காலம் (Incubation period) கடந்ததும் முதலில்கடுகளவு முகப்பரு போல் உடம்பில் கிளம்பும். இரண்டாம் நாள் இதைச் சுற்றிச் சிறுசிறு அரும்புகள் உண்டாகும். இவைகள் முதலில் சிறு வெண்முத்துக்கள்போலிருந்து பின்னர்ப் பருத்துக் கறுத்துவிடும். அப்போதே பருவும் பருத்துப் புண்ணாகிவிடும். இவற்றைச் சுற்றியுள்ள பகுதி சிவந்து வீங்கிவிடுவதோடு (Malignant edema) இப்பகுதியைச் சேர்ந்த நிணநீர்க்கணுக்களும் (Lymph nodes)பருத்துவிடும். பார்ப்பதற்குப் பயங்கரமான அம்மையாயினும் வலி தோன்றாமலிருப்பது குறிப்பிடத்தக்கது. அம்மையோடு சற்றுக் காய்ச்சலும் தலைவலியும், பூட்டுக்களில் வலி முதலியனவும் உண்டாகும். நுரையீரலையோ உணவு உறுப்புக்களையோ தாக்குவது மிக ஆபத்தானது. இவ்வகையில் பாதிக்கப்பட்டோர் திடீரென்று உண்டாகும் அளவுகடந்த காய்ச்சலோடு படுத்துவிடுவர். மார்பு வலியோடு, இருமல், இரத்தம் கலந்த கபம் முதலியனவோ, வயிற்று வலியோடு வாந்தியும் இரத்தம் கலந்த பேதியுமோ ஆகும். முடிவில் மூளையும் கெட்டு, மயக்கமோ சன்னியோ கண்டு இறந்து போவர்.

மேற்சொல்லிய குறிப்புக்களால் இந்நோயினை அறிந்து கொள்ளலாம். சந்தேகமிருந்தால் சளி, மலம், இரத்தம் முதலியவற்றைப் பரீட்சை செய்தால் பசிலஸ்களையே நேரில் காணலாம்.

தடுப்புமுறை : இந்நோயினால் மடிந்த கால்நடைகளைப் புதைத்துவிடுதல், தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுதல், சில மருந்துகளின் உதவியாலோ (Dry hydro-gen sulphide) வெப்பக்காற்றின் உதவியாலோ (Duckering process) கம்பளங்களையும், சவரபுருசுகளையும் பசிலஸ்களில்லாமல் வைத்துக்கொள்ளுதல், தொழிற்சாலைகளில் கிருமி கலந்த தூசு எழும்பா வண்ணம் காற்றோட்டம் அமைத்தல் முதலியனவாம்.

சிகிச்சை : சிபசால் மருந்துவகைகள் (Sulphadia-zine) நல்ல பலனளிக்கின்றன. இவற்றை முதல் தடவை 4 மாத்திரையாகவும், பின்னர் 4 மணிக்கு ஒரு தரம் 2 வீதமும் 5 நாட்களுக்கு உட்கொள்ளவேண்டும். இவற்றைவிடப் பெனிசிலின்தான் மிக மிகச் சிறந்தது. இதை முதலில் 10 லட்சம் அலகுகளும், பின்னர் 6 மணிக்கு ஒருதரம் 2½ லட்சம் வீதமும், 7 நாட்களுக்கு ஊசிபோடவேண்டும். ஸ்ட்ரெப்டோமைசின் (Strep-tomycin) மேலும் சிறந்த பலன் தருவதாகக் கூறப்படுகிறது. ஆரியோமைசின், குளோரோமைசிடின் (Chloramycetin) முதலியன இந்தப் பசிலஸ்களை எளிதில் கொல்லக்கூடியனவே. கே. ந.