கலைக்களஞ்சியம்/அடையாறு நூல்நிலையம்
அடையாறு நூல்நிலையம் சென்னைக்கு அருகிலுள்ள அடையாற்றில் பிரம்மஞான சங்கத்தை நிறுவிய கர்னல் ஆல்காட் என்பவரால் அச்சங்கத்தில் சமஸ்கிருத இலக்கியத்தையும் இந்திய ஆன்மப் பண்பாட்டையும் வளர்ப்பதற்காக 1885-ல் நிறுவப்பட்டதாகும். துவக்கத்தில் இதில் இருநூறு நூல்களே இருந்தன. இப்போது 76,713 நூல்கள் உள்ளன. இவற்றுள் கையெழுத்துப் பிரதிகள் 16,355. உலகத்திலுள்ள பெரிய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதி நூல்நிலையங்களுள் இது ஒன்று. ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலுள்ள பிரதிகளும் ஏராளமாக இருக்கின்றன. சீனப் பிரதி ஒன்று கறுப்புக் கடுதாசியில் பொன் எழுத்தால் எழுதியது, 33 அடி நீளம் உள்ளது. இந்தியாவில் காணப்படும் மிகப் பழைய குர்ஆன்களுள் ஒன்றும் இங்கு இருக்கிறது. சகல துறை நூல்களும் உள்ளன. இந்நூல் நிலையம் பிரம்ம வித்தியா என்ற ஆராய்ச்சி இதழ் ஒன்று நடத்தி வருகிறது. பல நூல்களும் வெளியிட்டு வருகிறது. இந்நூல்நிலையத்தின் நலனை உலக முழுவதும் பயன்படுத்துமாறு செய்வதற்காக அடையாறு நூல்நிலையச் சங்கம் என்பது 1936-ல் நிறுவப் பெற்று நடந்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் உலகத்தின் பல பாகங்களிலிருந்து வந்து பயன்பெற்றுப் போகிறார்கள்.